“….கேரளா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம். ..”[ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாத். புன்னப்புரா வயலார் போராட்டம் பற்றி]
புன்னப்புரா வயலார் போராட்டம், இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதி மட்டுமின்றி, கேரள வரலாறு மற்றும் இந்திய கம்யூனிச கட்சியின் வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க போராட்டமாகும். அதிகார வர்க்கத்திற்கு எதிராக, உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய இப்போராட்டம், அன்றைய திவானின் கொடுங்கோலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த போராட்டமாகும்.
போராட்டத்தின் பின்னணி:
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக
இந்திய நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்த கால கட்டம் அது. ஒரு புறம் நிஜாம் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து தெலுங்கானாவில் நடைப்பெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டம். மறுபுறம், மேற்கு வங்கத்தில் தெபாகா போராட்டம், நாடு தழுவிய அளவில் நடைபெற்ற தபால் தந்தி ஊழியர்களின் போராட்டம், இந்தியகப்பல் படை தலைவர்களை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரிய போராட்டம், ஆர்.ஐ.என் கலவரம் என ஆங்காங்கே வெடித்த போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஸ்தம்பிக்க வைத்த போராட்டங்கள் விடுதலைப் போரில் நீங்கா இடம் பெற்றவை ஆகும்.
புன்னப்புரா-வயலார் போராட்டம் 1938இல் நடந்த கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் நடத்திய போரின் தொடர்ச்சியே என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாதி, மதம் ஆகியவற்றை கடந்து, முப்பதுகளில் வலுவான, போர்க்குணம் மிக்க தொழிற்சங்கம் ஆலப்புழையில் துவக்கப்பட்டது. அச்சமயம், சமூக சீர்திருத்த இயக்கங்களும் வலுப்பெற்ற காலம் ஆகும். குறிப்பாக, கோவில் நுழைவுப் போராட்டம் போன்றவற்றில், தொழிலாளர்களின் பங்கேற்பு குறிப்பிடும்படி இருந்தது.
சேர்தலா தாலுக்காவில், வறுமை தலை விரித்தாடியது. திருவிதாங்கூரின் சில பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் அரசின் வசம் இருந்தது. குத்தகை விவசாயிகள் நேரடியாக அரசோடு தீர்வை தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், செர்தலவைப் பொறுத்தவரை, கொச்சி ராஜா , திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு நன்கொடையாக கொடுத்த பகுதியாகும். எனவே, நிலப்பிரபுத்துவ பிடிமானம் வலுவாக இருந்த இடம். குத்தகை விவசாயிகளை, தங்கள் சொத்து என நிலப்பிரபுக்கள் கருதினார்கள்.
அடிப்படையான குறைந்தபட்ச கூலி கிடையாது. வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படவில்லை. விவசாயக் கூலிகளுக்கு திருமணம் ஆகும் பொழுது, அப்பெண்கள் முதல் இரவை நிலப்பிரபுக்களுடன் கழிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பழைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் சீர்கேடுகளில் நிலப்பிரபுக்கள் ஊறிப் போயிருந்தனர். ஆனால், குத்தகை விவசாயிகளின் பார்வையில் மாற்றம் இருந்தது. சமூக சீர்திருத்த இயக்கங்கள், விவசாயிகள், வி.கூலிகள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. தொழிற் சங்க வளர்ச்சியும் உழைக்கும் மக்களை போர்க்குணம் மிக்கவர்களாக மாற்றி இருந்தது, இதனால், அவர்கள் நிலபிரபுத்துவ கொடுமைகளை எதிர்த்து வலுவாக குரல் எழுப்பத் தொடங்கினர்.
புன்னப்புராவில், ஒரு சில நிலச் சுவான்தார்களின் குடும்பங்களை தவிர்த்து, நிலம் பெரும்பாலும், சர்ச் வசம் இருந்தது. சர்ச் மிகப்பெரிய நில உடைமையாளர் என்றால் மிகையாகாது. நிலம் தவிர, அவர்கள் வசம் மீன் பிடிக்கும் படகுகள் இருந்தன. தொழிலாளிகள் தாங்கள் பிடிக்கும் மீன்களில், பாதியை, படகு உரிமையாளர்களிடம், அவர்கள் சொல்லும் விலைக்கு தர வேண்டும் என்ற நிலை. உணவு பொருட்களின் கடும் விலை உயர்வை எதிர்த்து, விவசாய கூலித் தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இப்படி திரள்வது நிலபிரபுக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 15.10.1946 அன்று, ராணுவ வீரர்கள் பொன்னாவெளி என்ற பகுதியில் பெரும் எண்ணிக்கையில் முகாமிட்டனர். அப்பொழுது.டி.எஸ்.பியாக இருந்த, வைத்யநாத ஐயர் என்பவர் நிலப்பிரபுக்கள் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றார். 600 ரௌடிகள் வரவழைக்கப்பட்டனர். உழைக்கும் மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
நிலபிரபுக்கள், காவல்துறையினர், ரௌடிகள், ராணுவம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து கொடூரமான முறையில் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அக்டோபர் 22அன்று பொது வேலை நிறுத்தம் என்று திட்டமிடப்பட்டது. போலீஸ் அதை ஒடுக்க முயன்றது. தொழிலாளர்கள் எதிர்த்தனர். அம்பலபுழயிலும், செர்தலாவிலும் நிலைமை மோசமாகியது. திருவிதாங்கூர் மாகாணம் முழுவதிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திவானின் ராணுவம் தாக்கியதில், புன்னப்புராவில், 200 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர்.
வயலாரில்,150 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். புன்னப்புரா-வயலார் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று பதிவாகி உள்ளது. அக்டோபர் 27ம் தேதி அன்று, திருவிதாங்கூர் ராணுவம் வயலாரை சுற்றி வளைத்தது. திருவிதாங்கூரின் கப்பல் படையும் ராணுவத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது. வயலார் மூன்றுபுறம் நீரால் சூழப்பட்டதாகும். அந்த மூன்று புறங்களும் அடைக்கப்பட்டவுடன், ராணுவம் உள்ளே புகுந்து மக்களை கொன்று குவித்தது. கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
கம்யூனிசம் பரவக்கூடாது என்றும், தொழிற்சங்க இயக்கம் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், தீவிரமாக செயல்பட்ட திவான். சி.பி.ராமசாமி ஐயர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை கொன்று குவிக்க ஆணையிட்டார். ஆலப்புழை கம்யூனிஸ்டுகளின் கோட்டை என்று கருதப்பட்டது. 25 அக்டோபர் அன்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். தடைகளைத் தாண்டி உழைக்கும் வர்க்கம் நடத்திய மாபெரும் போராட்டம் இது. கம்யூனிஸ்டுகளை இப்படி கொன்று குவித்தது,கம்யூனிச எதிர்ப்பாளர்களை கூட திவானுக்கு எதிராக திருப்பியது. திருவிதாங்கூர் தனி மாகாணம் என அன்றைய மகாராஜா சித்திரை திருநாள் அறிவித்தார். ஆனால், அது அப்படியே கைவிடப்பட்டது. புன்னபுரா- வயலார் போராட்டம் கேரள உழைக்கும் மக்கள் போராட்டங்களில் தனி இடத்தை பெற்றது. அந்த தியாகிகளின் நாமத்தை போற்றுவோம்.
Leave a Reply