(தமிழில்: ரமேஷ்)
புதுதில்லி DISCOMS பற்றிய சிஏஜியின் வரைவு தணிக்கை அறிக்கை அந்த மின்சாரக் கம்பெனி வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 8000 கோடியை சுருட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. ஒரிசாவில் மின்சார கட்டுப்பாட்டு ஆணையம் அனில் அம்பானியின் மூன்று ரிலையன்ஸ் மின்சார வினியோக நிறுவனங்களின் லைசென்சை ரத்து செய்த சில காலத்திற்குள் இது வெளிவந்துள்ளது. ஒரிசா மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையம் 2015 மார்ச்சில்தான் ரிலையன்ஸ் நிறுவனங்களின் லைசென்சை ரத்து செய்தது. காரணம் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து அது கொடுத்த உத்தரவுகளை மீறியதுமல்லாமல், எந்த வகையிலும் சரியாகப் பயனளிக்கவுமில்லை. 2003ல் அமல்படுத்தப்பட்ட மின்துறை சீர்திருத்தச் சட்டம் இவ்வாறாக ஒரு சுற்றுச் சுற்றி வந்து விட்டது. அந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமே அத்துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதுதான். மின் வினியோகத்தை தனியாரிடம் வழங்கச் செய்த இரண்டு முயற்சிகளும் இப்போது தோல்வியடைந்து விட்டன. ஒன்று தில்லி, இரண்டாவது ஒரிசா. ஒரிசா ஏற்கனவே அந்தத் தனியார் கம்பெனிகளுக்கு மூடுவிழா நடத்தி விட்டு மீண்டும் அரசுத் துறையிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து விட்டது. தில்லியிலும் அதுதான் மீதமுள்ள பணி.
மின்துறை தனியார்மயம்
பொதுக்கட்டுமானத்தை தனியார்மயப்படுத்தும் பெரிய அஜெண்டாவின் ஒரு பகுதியாக 90களில் உலக வங்கி மின் துறையைத் தனியார்மயப்படுத்துவதற்கான பிரச்சாரத்தில் இறங்கியது. அதற்கு உலகவங்கி பிரிட்டனில் தொலைபேசி, மின் துறை, ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து சங்கங்களை உடைக்க விரும்பிய மார்கெரெட் தாட்சரை அது “நட்சத்திர” உதாரணமாகச் சுட்டிக் காட்டியது. ஆனால் உலக வங்கி ஒரு உண்மையை வெளிப்படையாகக் கூறவில்லை. அதாவது மார்கரட் தாட்சரின் “சீர்திருத்தங்கள்” மின் துறையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டவை அல்ல என்பதுதான் அந்த உண்மை. அந்தத் தனிச்சிறப்பு, சிலியில் ரத்த ஆறு பெருக்கெடுத்தோட கலகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய பினோசெட்டின் கொடுங்கோலாட்சிக்கே செல்லும். அந்த ஆட்சிதான் முதலில் மின் துறையை முழுக்கத் தனியாரிடம் கொடுத்தது.
மின் துறையைத் தனியாரிடம் கொடுப்பதில் இருக்கும் முக்கியப் பிரச்சனை அது அத்தியாவசியத் துறையென்பது மட்டுமின்றி, அது ஒரு ஏகபோகமான துறை என்பதுமாகும். ஏகபோகங்கள் விலைகளை கூட்டிக் குறைத்து, மிகப்பெரும் இலாபங்களை ஈட்டுவதை ஊக்குவிப்பன. இத்தகைய ஏகபோகங்களை தனியாரிடம் கொடுக்க மக்கள் எப்போதுமே தயங்குவர். தனியாரின் ஒரே நோக்கம் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வாடிக்கையாளர்களைச் சுரண்டுவதாகவே இருக்கும். இது மின் துறையிலும் நடக்காது என்று எப்படி வாதிடுவது என்பதுதான் உலக வங்கிக்கும் அதன் கோட்பாட்டாளர்களுக்கும் பெரிய பிரச்சனையாக இருந்தது.
உலகவங்கியும் அதன் கோட்பாட்டாளர்களும் இரண்டு விடைகளை இதற்குக் கொடுத்தார்கள். அதுவரை ஒன்றுக்கொன்று இணைந்தவை என்று உலக அளவில் கருதப்பட்டு வந்த மின் உற்பத்தி, மின்கடத்தல் மற்றும் வினியோகம் ஆகியவற்றை பிரிப்பது என்பது சாத்தியமானதே என்பது. இரண்டு, மின் துறை கட்டுப்பாட்டு ஆணையம் மூலமாக சந்தையைக் கட்டுப்படுத்த முடியும், ஆகவே ஏகபோகங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவது.
இங்குதான் சீர்திருத்தங்கள் என்று கூறப்படுபவை இறையியலாகத் தாழ்ந்தன. அவர்களது பார்வையைப் பொறுத்தவரை அரசு வழங்கும் அத்தியாவசிய சேவைகள் உள்ளார்ந்த நிலையிலேயே திறனற்றவை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் தனியார் துறையை அதில் நுழைத்து விட்டு, கட்டுப்பாட்டு ஆணையம் மூலமாக போட்டியை உருவாக்கிவிட வேண்டியதுதான். பிறகு சந்தையின் “கடவுள்கள்” அனைத்தும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்து விடும். இப்போது நாம் காண்பது போல், எல்லாம் நன்றாகவே உள்ளன, ஆனால் மின் துறையின் பல்வேறு பகுதிகளை “பரிசாகப்” பெற்றோருக்கு மட்டுமே அப்படி உள்ளன.
1990களில் காங்கிரஸ் அரசாங்கத்தின்கீழ்தான் மின்துறையை தனியார் துறையிடம் வழங்கும் முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த நரசிம்மராவ் தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளுடன் தனியாரை மின்னுற்பத்தி செய்ய அழைப்பு விடுக்கும் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதில் குறைந்த விலையில் நிலக்கரி வழங்குவது முதல் உறுதி செய்யப்பட்ட இலாபம், வாங்கும் விலையை அதிகரிப்பது உள்ளிட்டவையும் அடங்கும். என்ரான் தபோல் திட்டத்தின் பேரழிவுமிக்க விளைவு இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் ஏற்பட்டது. என்ரானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மகாராஷ்டிர மாநில மின் துறையை மட்டுமல்ல, மகாராஷ்டிராவையே திவாலாக்கி விடும் வகையில் அமைந்திருந்தது. நல்லவேளையாக அமெரிக்காவில் என்ரான் திவாலானதால் மகாராஷ்டிரம் தப்பித்தது. அமெரிக்காவில் அவர்கள் ஒரு பகாசுர பொன்ஸி திட்டத்தம் பல ஷெல் நிறுவனங்கள் மூலமாக நடத்தி, மின்சாரச் சந்தையில் விலை நிர்ணயம் செய்து வந்தது அங்கு அம்பலப்படுத்தப்பட்டது.
என்ரான் பொருளாதார இயலை அடிப்படையாகக் கொண்ட துவக்க கால தனியார் மின் திட்டங்களை மட்டும் என்ரான் அழிக்கவில்லை, அமெரிக்காவில் கலிஃபோர்னியாவை சோதனைக் களமாக எடுத்துக் கொண்ட அமெரிக்காவில் துளிர்த்து வந்த மின் வர்த்தகத்தையும் ஒழித்து விட்டது.
இரண்டு இடங்களில் என்ரானின் அழிவின் மூலமாக- ஒன்று மகாராஷ்டிராவில், மற்றொன்று கலிஃபோர்னியாவில்- நாம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்று கூற முடியாது. அந்த சமயத்தில் இந்தியாவில் மேல்நிலை கொள்கை முடிவெடுக்கும் பதவிகளில் முதலில் நரசிம்மராவ் அரசிலும், பின்னர் வாஜ்பாய் அரசிலும் அமர்ந்து விட்ட உலகவங்கிக் கோட்பாட்டாளர்கள் அரசிற்கு சொந்தமான மின்சாரத் துறைகளை ஒழிக்கும் தமது இலக்கைத் தொடர்ந்து செய்தனர். அவை திறனற்றவை எனவும், அரசின் நிதிநிலைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறினர். மின்சாரா ஆணையங்களை உற்பத்தி, கடத்தல் மற்றும் வழங்கல் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கும் மின்சட்டம் காங்கிரசின் முழு ஆதரவுடன் தே.ஜ.கூ அரசால் நிறைவேற்றப்பட்டது. இடதுசாரிகள் மட்டும்தான் 2003ல் பாராளுமன்றத்தில் இதை எதிர்த்தனர்.
90களில் மின்சாரத் துறைக்கு நிதியளிப்பது பெருமளவில் குறைக்கப்பட்ட காலமாகவும் இருந்தது. மாநிலங்கள் தமது உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு தனது ஆதரவைக் குறைத்தது. ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் சுமார் 40 சதத்தை அதிகரித்து வந்த இந்தியா 8வது, 9வது, 10வது ஐந்தாண்டுத் திட்டங்களில் 20 சதத்துக்கும் குறைவாகக் குறைத்தது. பட்ஜெட் ஒதுக்கீடு கூர்மையாகச் சரிந்து, பெருமளவு முதலீடு பொதுத்துறைகளிடமிருந்து பெற்ற கடன் மூலம் ஈடுகட்டப்பட்டது. மின்சாரக் கட்டணம் கூர்மையாக அதிகரித்ததுடன், மாநில மின் துறைகளின் பற்றாக்குறையும் பெருமளவுக்கு அதிகரித்தது.
தனியார் நிறுவனங்கள் மின்னுற்பத்தி ஆலைகளை அமைக்கவும், மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு அந்த மின்சாரத்தை வழங்கவும் மின் சட்டம் வழிவகுத்தது. தே.ஜ.கூ. அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐ.மு.கூ. அரசும் பல்வேறு சலுகைகளை அளித்தது. நிலக்கரித் துறைக்குத் தானே பொறுப்பேற்ற மன்மோகன்சிங் தனியார் உற்பத்தியாளர்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலக்கரிச் சுரங்கங்களை வாரி வழங்கினார். அவை குறைந்த விலைக்கு மின்சாரம் அளிக்கும் என்ற உறுதி மொழியின்கீழ் அவர் இதைச் செய்தார். ஆனால் சிஏஜியின் அறிக்கை (கோல்கேட்) பின்னால் சுட்டிக் காட்டியது போல், இந்த நிறுவனங்கள் 2ஜி அலைவரிசையைப் பெற்றுக் கொண்டு செய்த அதையே செய்தன என்பதை நாம் அறிந்து கொண்டோம்; ஒன்று அவர்கள் தமது லைசென்சை பெரும் இலாபத்துக்கு விற்று விட்டனர் அல்லது நிலக்கரியை சந்தையில் பெரும் இலாபத்துக்கு விற்றனர்.
தனியார் நிறுவனங்களுக்கு மலிவான நிதிக்கடன்
இரண்டாவது சலுகை மலிவான நிதிக்கடனை அவர்களுக்கு அளிப்பது. அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தேசிய வங்கிகள் முன்னுரிமை துறைகளுக்கு அளிக்கும் கடனை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க வகை செய்தார். என்ரான் விஷயத்தில் நாம் பார்த்ததைப் போல, தனியார் மூலதனம் போலி முதலீட்டைத்தான் கொண்டு வரும். அது கடனைப் பெறும், கருவிகளை வழங்குவோருக்கு அல்லது திருப்பி விடுவோருக்கு “அதிக விலை” கொடுக்கும், இந்தப் பணத்தை அவர்களது முதலீட்டு பங்காக
எதாவது புதுமையான கணக்கு முறை மூலமாக சுற்றுக்கு விடும். தனியார் முதலீடுகள் என்ற பெயரில் வருபவையெல்லாம் பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடன்களை மறுசுழற்சிக்கு விடுபவைதான். எனவே, தனியார் நிறுவனங்கள் தமது நிறுவனங்கள் நெருக்கடிக்குள்ளாவது குறித்துக் கவலைப்படுவதில்லை. எந்த வகையிலாவது அவர்களது பணத்தை நிறுவனங்களிடமிருந்து வெளியே எடுத்து விட்டார்களல்லவா!. கடைசியில் பையைத் தூக்கிக் கொண்டு காத்திருப்பவர்கள் பெரிய பொதுத்துறை வங்கிகள்தான்.
இப்போது, தனியார் நிறுவனங்கள் வங்கிகளுக்குக் பெருமளவில் கடன்பட்டுள்ளன. 2012ல்(25,அக்டோபர் 2012) “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் இதனை வெளியிட்டது: “கடன் சூயிஸ் மதிப்பீட்டின்படி, தனியாரின் 2,09,000 கோடி கடனுடன் 36 அனல்மின் திட்டங்கள் தற்போது பெரும் அழுத்தத்தில் (potential stress) உள்ளன. இவ்வாறு கூறுவது என்பது பெருமளவில் திரும்பிச் செலுத்த முடியாமல் உள்ளன என்பதை கடன் சூயிஸ் கூறும் முறை. அல்லது வங்கிகளின் வார்த்தைகளில் கூறுவதானால், செயல்படாச் சொத்துக்கள். 2015இல் இந்தத் தொகை வளர்ந்தே உள்ளது.
யார் இந்த நிறுவனங்கள்? இந்தியாவை உலக அளவிலான வர்த்தக இடமாக மாற்ற மோடி சமீபத்தில் சந்தித்த தொழில்துறையின் ‘தலைவர்களைப்’ போன்றவர்கள்தான் இவர்கள். இவர்கள், அம்பானிக்கள், அதானிக்கள், டாட்டாக்கள்….. . இதே ஆட்கள்தான் மன்மோகன் சிங்கின் அரசில் கோல்கேட்டில் இலாபமடைந்தவர்கள், இப்போது மோடியின் ஆதரவு பெற்றவர்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் இங்கு அவர்களை அடையாளம் காட்டுகிறது: இவ்வாறு தீவீர அழுத்தத்தை சந்திக்கும் நிறுவனங்களில் அதானி(24,100 கோடி கடனுடனான நான்கு திட்டங்கள்), லான்கோ (22,100 கோடி கடனுடன் ஐந்து திட்டங்கள்), ரிலையன்ஸ் ADAG (32,600 கோடி கடனுடன் மூன்று திட்டங்கள்), டாட்டா பவர் (14,400 கோடி கடனுடன் ஒரு திட்டம்), எஸ்ஸார் (21,900 கோடி கடனுடன் ஏழு திட்டங்கள்) ஆகியவை அடங்கும்”. இன்று நாம் இந்தப் பட்டியலுடன், செசா ஸ்டெர்லைட் (அல்லது வேதாந்தா), ஜிண்டால், ஜி.எம்.ஆர்., ஹிந்துஜாக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களும் வங்கிகளிடமிருந்து பெருமளவில் கடன் பெற்றுள்ளனர்.
உற்பத்தியில் தனியாரை ஈடுபடுத்துவதை விட வினியோகத் துறையில் சீர்திருத்தங்களைச் செய்வது மேலும் கடினமானது என்று கூறப்பட்டது. காரணங்கள் வெளிப்படை. அவை பெரும் பகுதிகளுக்கு விரிவானவை, வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டியவை, கிராமப்புறங்களுக்கும் மின்சார வினியோகம் செய்ய வேண்டியவை. ஒரிசாவையும், தில்லியையும் வினியோக சீர்திருத்தத்துக்காகத் தேர்வு செய்ததன் காரணம் அவை குறைந்த அளவில் விவசாய மின் வினியோகம் கொண்டவை. தில்லியில் மிகவும் குறைந்த அளவே விவசாயம் செய்யப்படுகிறது, ஒரிசாவில் மின்சாரத்தை கிராமப்புறத்துக்கு வழங்குவது மோசமாக உள்ளது.
1991இல் ஒரிசாவில் புயல் ஏற்பட்டவுடன் ஒரிசா மின் வினியோக சீர்திருத்தங்கல் தோல்வியடைந்தன. அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஏ.இ.எஸ். புயல் தாக்கிய இடங்களில் மீண்டும் சரி செய்யும் கடமையிலிருந்து வெளியேறி விட்டது. அது ஒரிசா மாநில மின் துறை பிரித்து வழங்கிய நான்கு மின் வினியோக நிறுவனங்களில் ஒன்றை வெற்றிகரமாக ஏலத்தில் எடுத்திருந்தது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்ற மூன்றையும் ஏலத்தில் எடுத்திருந்தது அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது- அதாவது 2015 வரை தொடர்ந்தது. இப்போது அது பொறுமையிழந்து விட்டது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இப்போது மொத்தமாக வினியோக வர்த்தகத்திலிருந்து அல்லது மின் துறையிலிருந்தே மொத்தமாக வெளியேறுகிறது என்று தெரிய வந்துள்ளது.
இவையெல்லாம் ஒரு மையமான கேள்வியை எழுப்புகின்றன. நாம் இப்போது தனியார்மயச் சாலையின் இறுதி முனையை அடைந்து விட்டோமா? மோடி அரசாங்கம் நினைத்ததைச் செய்ய முடிந்தால் இல்லை என்பதே பதில். தனியார் மின் துறையின் நோய்களைக் களைய ஒரு மந்திர மாத்திரையாக “தேர்வு செய்யும் உரிமையை” (open access) பியுஷ் கோயல் இப்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இவ்வாறு தேர்வு செய்யும் உரிமை, ஒரு வாடிக்கையாளரை எந்த ஒரு உற்பத்தியாளரிடமிருந்தும், எங்கும் மின்சாரத்தை வாங்கிக் கொள்ள அனுமதிக்கிறது. தேர்வு செய்யும் இந்த உரிமையென்பது வெறும் கட்டுக்கதையே. மின்சாரம் எந்தச் சந்தை விதியையும் கடைப்பிடிப்பதில்லை, அது இயற்பியல் விதிகளின் அடிப்படையிலேயே பாய்கிறது. டாட்டக்களிடமிருந்து மின்சாரத்தை உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து வழங்க எந்த ஃபிளிப்கார்ட்டும் கிடையாது ! தேர்வு முறை விலை அதிகமான மீட்டர்களை அறிமுகப்படுத்துகிறது. அதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட மின்சாரத்தை அறிந்து கொண்டு, உங்களது கொள்முதல் என்று கூறப்படுவதுடன் ஒப்பிட முடியும். இதெல்லாம் பகாசுர கணக்கீட்டு முறையாக இருக்கும். அது இத்தகைய கணக்கீட்டு முறை மூலம் யார் உங்களுக்கு மின்சாரத்தை வழங்கியது, எப்படி உங்கள் கணக்கைத் தீர்ப்பது ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும். இந்த முறை அனைத்து நடவடிக்கைகளையும் அளவிடும் – நீங்கள் செலவழித்த மின்சாரம் எவ்வளவு, மின்சாரத்தை மின்கம்பி மூலமாகக் கொண்டு வரும் வினியோக நிறுவனம் வழங்கிய மின்சாரம் எவ்வளவு, வினியோக நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏதொ ஒரு உற்பத்தியாளரிடமிருந்து இந்த மின்சாரத்தை எவ்வாறு மடைமாற்றும் நிறுவனம் எடுத்துக் கொண்டது, பிறகு இந்த மின்சாரத்தை நீங்கள் வாங்கியதாகக் கூறப்படும் உற்பத்தியாளரிடமிருந்து நீங்கள் பெற்ற மின்சாரம் எவ்வளவு என்பதையெல்லாம் கணக்கிடும். இதில் ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு மின்சாரம் மடைமாற்றப்பட்டது என்பதைக் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் நீங்கள் பில் தொகை செலுத்த வேண்டும். இந்தில் நேரடியாக எந்தப் பலனும் இல்லையென்பதுடன், இதற்காக மிகப்பெரிய கணக்கீட்டு முறையும், மீட்டர் முறையும் தேவை என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த சுதந்திரத் தேர்வு முறை எங்காவது வெற்றி பெற்றுள்ளதா? சில நாடுகள் அந்த முறையை அமல்படுத்த முயன்றுள்ளன. அங்கெல்லாம் இது மலிவான மின்சாரத்தை வாங்க விரும்பும் மிகப்பெரிய வாடிக்கையாளர்களுக்குத்தான் உதவியாக இருந்துள்ளது. வழங்கப்படும் மின்சாரம் ஒரே அளவுதான் என்கிறபோது, பெரிய வாடிக்கையாளர்களுக்கு இலாபம் என்றால், நஷ்டம் யாருக்கு? சிறிய வாடிக்கையாளர்களுக்குத்தான் நஷ்டம் என்பது வெளிப்படையானது. இது மூலதனத்துக்கு ஆதரவாகவும், பெரும்பகுதி மக்களுக்கெதிராகவும் சமநிலையை சரிக்கும் இன்னொரு வழியேயாகும். பணக்காரனுக்கு சலுகை கொடு, ஏழையைப் பிழிந்தெடு என்ற பழைய கொள்கைதான்.
2002ல் ஒரு மின்சார யூனிட்டுக்கு விலை ரூ.1.37 லிலிருந்து 2013ல் ரூ.5.87 ஆக உயர்ந்தது ஒன்றும் விபத்தல்ல. மலிவான விலையில், ஏராளமான மின்சாரம் கிடைக்கும் என்று உறுதி கூறித்தான் மின்சார சீர்திருத்தங்கள் திணிக்கப்பட்டன. மாறாக, இவை இந்திய முதலாளிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்து, பொதுமக்களை மேலும் வறுமைக்குள்ளாக்கி, இந்திய வங்கிகளை ஆபத்துக்குள்ளாக்கி விட்டன. சுதந்திரத் தேர்வு என்பது போன்ற புதிய தவறுகளை அறிமுகப்படுத்தாமல், நாம் இப்போது பழைய முறைக்குத் திரும்பி, நமது மின் துறையை வலுப்படுத்த முனைய வேண்டும். நமக்குத் தேவை தீர்வுகள்தான், அர்த்தமற்ற கோஷங்கள் அல்ல.
Leave a Reply