(மாவோ எழுதிய ‘சீன சமூகத்தில் வர்க்கங்களின் பகுப்பாய்வு ‘ என்ற கட்டுரையின் சாரம் - https://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1_1.htm )
புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். சீனாவில் முந்தைய அனைத்துப் புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் நம்மை ஒன்றிணைத்துக் கொள்ளத் தவறியதே ஆகும்.
(சீனாவில் அப்போதைய ஆளும் வர்க்கங்களாக நிலக்கிழார் வர்க்கமும், தரகு முதலாளி வர்க்கமும் இருந்தனர். அவை சர்வதேச முதலாளி வர்க்கத்தின் ஒட்டு உறுப்புகளாக இருந்தன. அதன் காரணமாக சீன உற்பத்தி உறவுகள் மிகவும் பின்தங்கியனவாகவும், பிற்போக்குத்தனமாகவும் அமைந்தன.)
நடுத்தர முதலாளிவர்க்கம் – (இந்தப் பிரிவில் தலையானது தேசிய முதலாளி வர்க்கம்) புரட்சியின் பொருட்டு ஊசலாடும் மனப்பான்மையைக் கொண்டது ஆகும். அவர்கள் போர்க் கிழார்களின் (War Lords) ஒடுக்குமுறை மற்றும் அன்னிய மூலதனத்தின் இடர்பாடுகளின் கீழ் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, புரட்சியின் தேவையை உணர்ந்து ஏகாதிபத்தியத்திற்கும், போர்க் கிழார்களுக்கும் எதிராக புரட்சிகர இயக்கத்திற்கு ஆதரவளிப்பார்கள். ஆனால், சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் ஆதரவையும், உள்நாட்டு பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகரமான பங்கேற்பையும் கொண்ட புரட்சியானது – தங்களது வர்க்கம், பெரு முதலாளிகள் நிலையினை அடைவதற்கான நம்பிக்கையினை அச்சுருத்தும் போது அவர்கள் புரட்சி குறித்து அய்யம் கொள்கிறார்கள்.
குட்டி முதலாளி வர்க்கம்:
குட்டி முதலாளி வர்க்கத்தின் – அனைத்துப் படி நிலையினரும் ஒரே மாதிரியான குட்டி முதலாளிய தகுதியைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மூன்று வெவ்வேறு பிரிவுகளாக அமைகின்றனர். முதல் பிரிவானது உடலுழைப்பு அல்லது மூளை உழைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துவதைக் காட்டிலும் அதிகம் சம்பாதித்து பணத்தையோ அல்லது தானியத்தையோ குறிப்பிட்ட அளவு மிகுதியாக உடையவர்களைக் கொண்டதாகும்… பெரும் திறளாக செல்வம் குவிப்பதைப் பற்றி மாயைகள் எதையும் கொண்டிருக்கவில்லை. அதே சமயம் அவர்கள் எப்போதும் நடுத்தர (தேசிய) முதலாளிகள் நிலையை அடைய ஆசைப்படுகிறார்கள். இவ்வகைப்பட்டோர் அரசாங்க அதிகாரிகளைக் கண்டு அச்சப்படுகிறதோடு, புரட்சி குறித்தும் சிறிது அச்சப்படுகிற பயந்தாங்கொள்ளிகள் ஆவர்…
இரண்டாவது பிரிவு பொருளாதார நீதியாக தர்சார்பு உடையவர்களை முதன்மையாகப் பெற்றுள்ளது. இவர்கள் முதல் பிரிவினருடன் முற்றிலும் மாறுபட்டவர்கள்; இவர்களும் கூட பணக்காரர்களாக மாற விரும்புகின்றனர்… போர்க் கிழார்களுக்கும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரான இயக்கம் வெற்றிகொள்ள இயலுமா? என வெறுமனே சந்தேகிக்கிறார்கள்; இதில் சேரத் தயங்குகிறார்கள்; நடுநிலை எடுக்க விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் புரட்சியை எதிர்ப்பதில்லை. இந்தப் பிரிவு குட்டி முதலாளிய வர்க்கத்தின் சரிபாதியைப் பிரதிபலிக்கக் கூடிய பெரும் எண்ணிக்கையினரைக் கொண்ட்தாகும்.
மூன்றாவது பிரிவு, சரிந்துகொண்டிருக்கும் வாழ்க்கைத் தரம் உடையவர்களைக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரிவில் உண்மையில் வசதியான நிலையில் உள்ள பல குடும்பங்கள், இச்சிக்கலான சூழ் நிலைமைகளில் படிப்படியான மாறுதலுக்கு உள்ளாகி ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து சரிந்து வெறுமனே ஒருவர் தன்னைப் பராமரித்துக் கொள்வதே கடினம் என்றாகிறது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தங்கள் கணக்குகளைத் தீர்க்கும்பொழுது “என்ன? மற்றொரு பற்றாக்குறையா!” என கூக்குரலிட்டு அதிர்ச்சியடைகிறார்கள்… “எதிர்காலத்தை எண்ணி திகைப்படைந்து கிடக்கிரார்கள்”… இத்தகையோர் புரட்சிகர இயக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்; குட்டி முதலாளிய வர்க்கத்தில் இடதுசாரிப் பிரிவினரான இவர்கள் சிறு வீதத் தொகையினராயின்றி, பெரும் திரளாய் உருக்கொள்கின்றனர்.
சாதாரண சமயங்களில் புரட்சி குறித்து இம்மூன்று குட்டி முதலாளியப் பிரிவுகளின் மனப்பான்மையும் மாறுபடுகிறது.
ஆனால் போர்க் காலங்களில், அதாவது புரட்சிப் பேரலை மேலோங்கி இருக்கும்போதும் வெற்றியின், வெற்றியின் உதயம் கண்ணில் தெரிகிறபோதும், குட்டி முதலாளிய வர்க்கத்தின் இட்துசாரிப் பிரிவு மற்றுமன்றி நடுத்தரப் பிரிவும், வலதுசாரிப் பிரிவும் கூட… புரட்சியில் இணைவதுடன், புரட்சி நெடுகிலும் செல்லவேண்டியிருப்பர்.
அரைப் பாட்டாளி வர்க்கம்: அரைப்பாட்டாளிவர்க்கம் என்றழைக்கப்படுவது ஐந்து வகையினங்களைக் கொண்டிருக்கிறது. 1) அறுதிப் பெரும்பான்மையான அரை-சொந்த நில உழவர்கள், 2) ஏழை உழவர்கள், 3) சிறிய கைவினைஞர்கள், 4)கடை உதவியாளர்கள் 5) சிறுவணிகர்கள்…
அரை சொந்த நில உழவர்கள், ஏழை உழவர்கள் ஆகிய இரு பிரிவினரும் … அவர்களின் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப மேல், நடுத்தர மற்றும் கீழ்மட்டம் என மேலும் மூன்று சிறிய வகையினங்களாகப் பிரிக்கப்படுகின்றனர்… அரை-சொந்த நில உழவர்கள், சொந்த நில உழவர்களை விட அதிகமும், ஏழை விவசாயிகளை விட குறைவாகவும் புரட்சிகரமானவர்கள்.
ஏழை உழவர்கள் எனப்படுவோர் நிலக்கிழார்களிடம் குத்தகை விவசாயிகளாக இருந்து சுரண்டப்படுகின்றனர். இவர்கள் தங்களின் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மேலும் இரண்டு வகையினங்களாக பிரிக்கப்படுகின்றனர். உழவர்களிலேயே மிகவும் வறிய நிலையில் உள்ள (இரண்டாவது வகையினர்) புரட்சிகரப் பிரச்சாரத்தை உயர்வாக ஏற்றுக் கொள்கின்றனர்.
சிறிய கைவினைஞர்கள் …. பொருளாதார நிலையில் ஓரளவு ஏழை உழவர்களைப் போலவே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைச் செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலுள்ள இடைவெளி மற்றும் பலமான குடும்பச் சுமையின் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டத்தின் அபாயத்தையும், ஏழ்மையின் நிரந்தர வேதனையையும் உணர்கிறார்கள்.
கடை உதவியாளர்கள் … இவர்களுடன் நெருக்கமாகப் பேச நீங்கள் எதிர்பாராத வாய்ப்பைப் பெற்ரால் தங்களின் எல்லையற்ற துன்பங்களைக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் ஏழை உழவர்களை ஒத்தே இருக்கிறார்கள்… புரட்சிகரப் பிரச்சாரத்தை உயர்வாய் ஏற்றுக் கொள்வார்கள். நிலவும் உறவு நிலைமைகளை மாற்றிட ஏழை உளவர்களைப் போலவே இவர்களுக்கும் புரட்சி தேவையாகிறது.
பாட்டாளி வர்க்கம்: (சீனத்தில் அப்போது மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தொழில்துறைப் பாட்டாளிகள் இருந்தார்கள்) புரட்சியில் தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையை நாம் காண முடியும். ஆலைத் தொழிலாளர்கள் இந்த நிலையைப் பெருவதற்கு முதற்காரணம்… அவர்களின் ஒன்றுகுவிப்பேயாகும். வேறெந்தப் பிரிவு மக்களும் இந்தளவு ஒன்றுகுவிந்திருப்பதில்லை.
இரண்டாவது காரணம் அவர்களின் அவர்களின் அடிமட்டப் பொருளாதார நிலையாகும். இவர்கள் அனைத்து வித உற்பத்திச் சாதனங்களிடமிருந்தும் விலக்கப்பட்டுவிட்டவர்கள்… முதலாளிகள், போர்க் கிழார்கள், ஏகாதிபத்தியவாதிகள் போன்றவர்களால் மிகவும் ஈவிரக்கமின்றி நட்த்துதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
நகர்ப்புறங்களிலுள்ள கூலிகளும் கூட கவனத்தைப் பெறும் சக்திகளாவர்… (ரிக்சா ஓட்டுனர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், குப்பை வண்டி ஓட்டுனர்கள்) இவர்கள் பொருளாதார நிலையில் ஆலைத் தொழிலாளர்களைப் போன்ரே இருக்கிறார்கள், ஆனால் குறைந்த அளவில்தான் ஒன்றுகுவிக்கப்பட்டுள்ளனர்.
தொகுத்துப் பார்க்குமிடத்து நமது எதிரிகள் … அவர்களுடன் இணைந்துள்ள அறிவித்துறையினரில் பிற்போக்குப் பிரிவினர் போன்றோர் அனைவரும் ஏகாதிபத்தியத்துடன் அணிவகுப்பதைக் காண முடியும். நமது புரட்சியில் தலைமை சக்தி ஆலைப் பாட்டாளிவர்க்கமே ஆகும். ஒட்டுமொத்த அரைப் பாட்டாளிவர்க்கமும், குட்டி முதலாளிய வர்க்கமும் நமது நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். ஊசலாடும் நடுத்தர வர்க்க முதலாளிகளைப் பொருத்தவரை இவர்களில் வலதுசாரிப் பிரிவு நமது எதிரிகளாக மாறக் கூடும், இவர்களின் இடதுசாரிப் பிரிவு நமது நண்பர்களாக மாறக் கூடும். ஆனால் நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கையோடு இருப்பதுடன், நமது அணிகளுக்குள் குழப்பத்தை உருவாக்க அனுமதிக்கக் கூடாது.