“எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால், எங்கள் விடுதலைக்காக, அமெரிக்காவிடமோ அல்லது வேறு யாரிடமோ சரணடைய மாட்டோம். பிரெஞ்சுக்காரர்களை விட அமெரிக்கர்கள் வலிமையானவர்கள் என்று தெரியும். ஆனால், அவர்கள் எங்களை நன்கு அறிந்தவர்கள் அல்லர். அதனால், விடுதலை பெற இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எங்கள் தோழர்கள் வீரத்துடன் போராடி வெற்றி பெறுவார்கள்.” என்று சொல்லிவிட்டு தன் வலது கையை உயர்த்தி “உங்களது அணு ஆயுதங்களால் எங்களை சரணடையச் செய்ய முடியாது . விடுதலை நிச்சயம்…” என்று தன்னைச் சந்திக்க வந்த பிரெஞ்சு நிருபரிடம் தெரிவித்தார் ஹோ-சி-மின். அவர் தெரிவித்தபோது வியத்நாம் விடுதலைக்கான போராட்டம் 20 ஆண்டுகளைக் கடந்திருந்தது.
வியத்நாம் ஒரு சிறிய நாடு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு காலனியானது. அவர்கள் வியத்நாமை பல கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பிரெஞ்சு அரசு கட்டமைப்பு வசதிகளை செய்துவிட்டு, அதற்காக, கடும் வரிச்சுமையை ஏற்றியது. இத்தகைய பிரெஞ்சு காலனியாதிக்கம் 87 ஆண்டுகள் [1858-1945] தொடர்ந்தது.
1925ல் புரட்சிகர இளைஞர் அணி என்பதை ஹோ- சி -மின் துவக்கினார். பின்னர் 1930 அது வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. ஐம்பதுகளிலேயே , அமெரிக்கா வியத்நாம் நாட்டில் மூக்கை நுழைத்து பிரச்சினைகளை எழுப்பியது. கம்யூனிசம் பரவாமல் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக, தனது ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது. டிசம்பர் 1965ல் வியத்நாமுக்கு 1,83,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் அனுப்பப் பட்டனர். வடக்கு, தெற்கு வியத்நாமுக்கு இடையே பிரச்சினைகள் இருந்த போதிலும், கம்யூனிஸ்ட் ஆட்சியில் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு செயல் பட ஆரம்பித்தன. வியத்நாம் ஜனநாயக குடியரசின் அடித்தளத்தை அமைத்த பெருமை ஹோ -சி-மின்னைச் சாரும். உலகின்’ சட்டாம்பிள்ளை ‘என்று பெருமை அடித்துக் கொண்ட , ஏகாதிபத்திய நாடுகளின் தலைவன் எனக் கருதப்படும் அமெரிக்காவிற்கு பாடம் புகட்டும் வீரத்தை வெளிப்படுத்தியது சின்னஞ்சிறு வியத்நாம் .
இன்றைய வியத்நாம்:
பொருளாதார, அரசியல் தளங்களில், பல பிரச்சினைகளை எதிர் கொண்ட வியத்நாம் இன்று தலை நிமிர்ந்து நடை போடுகிறது. மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. புரட்சி நடைபெற்று, உண்மையாகவே, மக்களின் நலன்களை மனதில் கொண்டு ஒரு அரசு செயல்படுமேயானால், எதையும் சாதிக்க இயலும், என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக வியத்நாம் விளங்குகிறது. ஐ.நா. மனித வள அறிக்கையும், யூனிசெப்பின் ஆய்வு அறிக்கைகளும் வியத்நாமின் சாதனைகள் சுட்டிக்காட்டி உள்ளன.
வறுமை ஒழிப்பு: பசி, மற்றும் கடும் வறுமையை ஒழிப்பதில் வியத்நாம் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஏராளம். 1990ல்வறுமை 58 சதவீதமாக இருந்த்து. இது 2008ல் 14.5 சதம் என குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 75 சதம் குறைப்பு. உணவின்றி தவிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. உணவு வறுமை [food poverty] 1993ல் 24.9 சதம் என்றிருந்த நிலை மாறி 2008ல் 6.9சதமாக குறைந்து விட்டது.
வறுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் ஐ.நா. அறிக்கைகள் அங்கு அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அந்த அரசும் அதை முற்றிலுமாக உணர்ந்துள்ளது. தொழில்மயம் காரணமாக, நகரங்களை நோக்கி குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரு விவசாயம் சார்ந்த நாடான, வியத்நாம் தற்பொழது, நகர்புற வறுமை என்கிற பிரச்சினையை சந்தித்து வருகிறது. வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானத்தை பொருத்தது மட்டுமல்ல என புரிந்து கொண்டுள்ள அரசு, பல புதிய கோணங்களிலிருந்து பிரச்சினையை அணுகி வருகிறது.
அனைவருக்கும் ஆரம்ப கல்வி:
ஆரம்பம் முதல், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த போதிலும், அனைவருக்கும் கல்வி என்ற கனவு 2009ல் தான் நனவாகி உள்ளது. ஆரம்பப்பள்ளிகளில், சேர்க்கை97 சதம். 90 சதம் பேர் இடைநில்லாமல் அடுத்த கட்ட கல்வியை தொடர்கின்றனர். நாட்டின் பல பகுதிகளிடையே குறிப்பிடும் படியான வேறுபாடுகள் இல்லை. அதே போல, கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கிடையே வேறுபாடுகள் இல்லை. குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில், பாலின வேறுபாடு இல்லை. கல்விக்கூடங்களில், மாணவிகள் எண்ணிக்கை சரிபாதியாக உள்ளது.
மக்கள் ஆரோக்கியம்: வியத்நாம் கம்யுனிஸ்ட் கட்சி மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆரம்பம் முதல் முன்னுரிமை கொடுத்துள்ளது. மருத்துவத்துறை சீர்திருத்தங்கள், பொது துரையின் பங்கை முன்னிறுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தும் மருத்துவ மனைகள் மிகச் சிறந்த வசதிகளைக் கொண்டவையாக உள்ளன. கம்யுனிட்டி ஹெல்த் கிளினிக்குகள் [நமது ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போன்றவை] மிக நவீன வசதிகள் உள்ளவை.
குழந்தை இறப்பு விகிதமும், பிரசவத்தில் மகளிர் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 1990-2006வரையிலான காலகட்டத்தில்,
குழந்தைகள் இறப்பு விகிதம்பாதியாக குறைந்துள்ளது.1990 ல் 44.4 [பிறக்கும் 1000 குழந்தைகளில் ] என்று இருந்த நிலை மாறி, 2009ல் 16 என குறைந்து விட்டது. இதே போல, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமும் 58 [1000 குழந்தைகள் ] என்பதிலிருந்து 2009 ல் 24.4 என்று குறைந்துள்ளது.குறைந்த எடை உள்ள குழந்தைகள் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. மொத்த குழந்தைகளில்18.9% [ 2009 ] குறைவான எடை உள்ளவர்கள்.
தாயின் ஆரோக்கியம்:பிரசவத்தின் பொழுது, இறக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை1990 ஒரு லட்சத்திற்கு 233 என்று இருந்தது. இது 2009 ல் 69 என குறைக்கப்பட்டுள்ளது. தாய் சேய் நலன் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கருவுற்ற காலத்திலிருந்து தொடங்கி, மகப்பேறு முடிந்த பின்பும் கவனிப்பு தொடர்கிறது, குடும்பக் கட்டுப்பாடு, நவீன கருத்தடை சாதனைகளை பயன்படுத்துதல் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உள்ளது.
பெண்களின் – குறிப்பாக, தாய்மார்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதே போன்று, ஏழைகளுக்கும், இதர வசதியற்றவர்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் நோய், மலேரியா மற்றும் இதர ஆபத்தான நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வயதினருக்குமான புள்ளிவிவரங்களை நோக்கும் பொழுது, ஹெச்.ஐ.வி யால்பாதிக்கப்பட்டவர்கள் 0.28 சதம் மட்டுமே எனத் தெரிகிறது. அதே போல, மலேரியாவை கட்டுப்படுத்துவதில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். தவிர, ஹெச்1 என்1, ஹெச் 5 என்1, எஸ். ஏ ஆர் ஆகிய நோய்களை தடுப்பதில் குறிப்பிடும் படியான முன்னேற்றம் உள்ளது.
இந்த அளவுக்கு, மருத்துவ, சுகாதாரத் துறையில் சாதித்திருக்க காரணம் , அவை பொது துறையில் இருப்பது என்பதில் ஐயமில்லை. தனியாரிடம் விடப்பட்டிருந்தால் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே இவை கிடைத்திருக்கும். மேலும் 75சதம் மக்களுக்கு முழு சுகாதார வசதி கிட்டுகிறது. [இந்தியாவில் 35சதம்]
சுற்றுசூழல் மற்றும் நீடித்த வளர்ச்சி:
உலகமே இன்று பருவ நிலை மாற்றத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ள சூழலில், வியத்நாம் அரசு இதற்கு முன்னுரிமை அளித்துள்ளதென அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.1990 ல் 27.8 சதம் என்று இருந்த காடுகளின் பரப்பளவு 2010ல் 40 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று, கிராமப்புற நகர்ப்புற வேறுபாடுகள் இருப்பினும், 83சதம் கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. [1990 ல் 30சதமாக இருந்தது ]
பூகோள ரீதியாக, வியத்நாம் இயற்கை சீற்றங்களுக்கு அடிக்கடி ஆளாவதுண்டு. குறிப்பாக, புயல், கடும் வறட்சி, நிலச்சரிவு , காடுகள் பற்றி எரிதல் போன்றவை கடும் சேதத்தை விளைவிப்பவை. இவற்றைக் கட்டுப்படுத்தவும், எதிர்கொள்ளவும், சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்கள் நிலை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 20ம் தேதி மகர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்புகளில், பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதுடன், வியத்நாம் தேசிய பாராளுமன்றத்தில் மகளிரின் பிரதிநிதித்துவம் அதிகம் என்பதுடன் தேசீய அசெம்பிளி துணை தலைவர்களில் 25.8 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் பங்கேற்பு பல பணக்கார முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடும்படியாக உள்ளது.
கல்வி, மருத்துவம் சுகாதாரம், சுற்றுசூழல் என பல துறைகளில் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, வியத்நாம் முன்னேறி உள்ளதென மனித வள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 1986ல் வியத்நாம் ஒரு அரசியல், பொருளாதார மீட்சி பிரச்சாரத்தை ‘டோய்,மோய்’ [DOI MOI] துவக்கியது. 2001ல் வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பத்தாண்டு பொருளாதார திட்டத்தை கொண்டு வந்தது. பொது துறை முன்னணி பங்கு வகிக்கும் என்றும், சில துறைகளில் தனியார் பிசினஸ் அனுமதிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. கடந்த இருபதாண்டுகால, அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. சமூக பொருளாதார வளர்ச்சி திட்டம் [SEDI2011-2020] என்பதன் மூலம் பெரும்பாலும் வேளாண் சார்ந்த பொருளாதாரத்தை, தொழில் வளர்ச்சி அடைந்த பொருளாதாரமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐ.நா. அறிக்கை இன்னும் ஐனதாண்டுகளில் நவீன பொருளாதார அடிப்படையில் செயல்படும் நாடாக மாறிவிடும் என கணித்துள்ளது. ஏற்கனவே, நடுத்தர வருவாய் நாடுகளின் பட்டியலில் வியத்நாம் சேர்ந்து விட்டது. வியத்நாமின் மனித வள வளர்ச்சி கடந்த இருபதாண்டுகளில் 41சதம் அதிகரித்துள்ளது. 2012ல் நாடுகளின் வளர்ச்சி பட்டியலில் வியத்நாம் 127/187 என்ற நிலையில் உள்ளது. மேலும், வளர்ச்சிக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மிகவும் குறுகிய காலத்தில், மனித வள குறியீடுகளின் அடிப்படையில் நோக்குகையில், வியத்நாம் சாதனை படைத்துள்ளது. பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும், புரட்சி நடை பெற்று, மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, சோஷலிச சமுதாயத்தை படைக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் கடும் தாக்குதல்களை சந்தித்து, இன்று முன்னேறிக் கொண்டிருக்கும் வியத்நாமின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஹோ சி மின்னின் சிந்தனைகளை நினைவு கூர்வோம்!!
ஆதாரம் : யுனிசெப் அமைப்பில் 2012 ஆம் ஆண்டு அறிக்கை.
Leave a Reply