கேள்வி: அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது?
பதில்: இந்த விவாதம் மிக மிக அவசியம் என கருதுகிறேன். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை வாசித்தீர்களானால் அதில் சாதி, பாலினம், மதம் உட்பட பல விதமான ஒடுக்குமுறைகள் தடுக்கப்பட்டுள்ளன. கருத்தளவில் இவை தடை செய்யப்பட்டுள்ளபோதிலும், சுதந்திர இந்தியாவில் கடந்த 68 ஆண்டுகளின் நடைமுறைகளை கவனித்தால், இந்த ஒடுக்குமுறைகள் அமைப்பாக்கப் பட்டிருப்பதையும், திட்டமிட்ட வழிமுறைகளில் தொடர்ந்து நடத்தப்படுவதையும் காணலாம். நவீனமானதென்று சொல்லப்படும் முதலாளித்துவ நடவடிக்கைகள், இந்த சாதிய அடிப்படைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதன் மூலம் தலித் மக்களிடமிருந்து அதிகமான உபரி உழைப்பை உறிஞ்சுகின்றன. அதிலும் குறிப்பாக, தலித் பெண்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
எனவே, அடுத்தடுத்து வந்த அரசுகளின் தோல்வியை உணர்ந்து நம் அரசமைப்புச் சட்டத்தினை அமலாக்கும் விதத்தில் சிறப்பு அமர்வு கோருகிறோம்.
இந்திய சாதி அமைப்பு இன்னும் ஏன் தொடர்கிறது? சிலர் இதுவொரு நிலப்பிரபுத்துவ தொடர்ச்சி, நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பார்கள். அப்படியல்ல; நாம் இந்திய முதலாளித்துவம் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது அத்துடன் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளை வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; தலித் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கு, அது சாதியை தன்னுடைய கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது.
தலித் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்கிற கட்சிகளும் கூட அவர்களை பல சமயங்களில் தேர்தலில் வாக்கு வாங்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தலித் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதில் உறுதிப்பாடு இல்லை. உதாரணத்திற்கு உத்திரபிரதேசத்தில் நடப்பதைப் பார்ப்போம். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் சில குணாம்ச மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்த்தோம். தலித் மக்களிடையே சுய மரியாதை உணர்வு அதிகரித்துள்ளது உண்மை. ஆனால் அரசின் செயல்பாடுகளை கவனிக்கிறபோது, ஏற்கனவே தலித் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த பல சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டனர். தேர்தல் தேவைகளுக்காக, சாதி அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் சில கட்சிகளுடன் கைகோர்த்தனர். நாம் ஒரு விசயத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் அரசியலின் வழியாக மட்டும் ஒருபோதும் சாதி அமைப்பை வீழ்த்திவிட முடியாது.
கேள்வி: தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறது?
பதில்: அம்பேத்கர் இருந்தபோது சுதந்திர இந்தியாவில் சாதி அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற விவாதம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது அவர் இட ஒதுக்கீடு அதுவொரு குறிப்பிட்ட கால அளவு நீடிக்க வேண்டுமென்று நம்பினார் . ஆனால், துரதிஷ்டவசமாக, சுதந்திர இந்தியாவின் கனவு இன்றுவரை நிஜமாகவில்லை. உண்மையில், நிலவிவரும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மேலும் வலுவாகின்றன. தலித்/பழங்குடியினர் மிகவும் அடிமட்டத்தில் உள்ளனர். ஏழை முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை முன்பைவிட அதிகரித்துள்ளது. இவற்றின் காரணமாக இட ஒதுக்கீடு தொடர வேண்டியது அவசியம்.
புதிய தாராளவாத இந்தியாவில் வேலை எங்கே இருக்கிறது? வேலைவாய்ப்புக்களே இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்புக்கு தடையே விதிக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்வேன்… உதாரணமாக, தலித்/பழங்குடி மக்களின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்திலேயே அந்த மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அரசிடமிருந்த பல கனிம வள நிறுவனங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுவருகின்றன. அரசுப் பணிக்கு ஆள் எடுப்பதற்கு தடை நிலவுகிறது.
தனியார் துறைகளுக்கு ஏராளமான நலன்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கு நிலம் உள்ளிட்ட வசதிகளைப் பெறுகின்றனர். வரி செலுத்த அவசியமில்லாத ஆண்டுகள் உட்பட சலுகைகள் பெறுகின்றனர். இப்படி அரசின் சலுகைகளை அனுபவிக்கும் தனியார் துறையினருக்கு அரசமைப்புச் சட்டம் பொருந்தவேண்டும். எனவேதான், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
அதே சமயம், உயர் சாதியென அழைக்கப்படுவோரில் ஒரு பகுதி இட ஒதுக்கீடு கொடு என்று கோரி போராடுகிறார்களே?
இந்த முதலாளித்துவ சமூகத்தில் உயர் சாதியென அழைத்துக் கொள்வோரிலும் ஏழைகளும், இளைஞர்களும் கூட வேலையில்லாமல் தவிக்கிறார்கள். வேலைவாய்ப்புகள் குறையும்போது, வேலை பெற்றிடவும், மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றிடவும் பெரும் பணம் கொடுக்கவேண்டி நேர்கிறது. மிகப்பெரிய லஞ்சம் கொடுத்து வேலையோ, மருத்துவக் கல்லூரி சீட்டோ பெற முடியாதபோது ஒரு தலித்/பழங்குடி இளைஞருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தால் – இந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
சமூக நிலைமைகளை, அநீதியின் அடிப்படையில் மாற்றியமைத்துள்ள முதலாளித்துவம் அத்தோடு நில்லாமல், பாதிக்கப்பட்ட பகுதியினரே தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் வழி செய்கிறது.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கும்போது, நாம் தலித் அல்லாத இளைஞர்களின் பிரச்சனைகளையும் இணைத்துக் கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். உயர் சாதியின் ஏழைகளையும் கவனிக்க வேண்டும். இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் 1950 ஆம் ஆண்டுகளிலேயே கேரளத்திலிருந்து இப்பிரச்சனையை எழுப்பினார். அது ஏற்கப்படவில்லை, அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு வழியில்லை என்றனர். தலித்/பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியில் பிறந்து, ஏழ்மையில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் முறையை நாம் கண்டறிய வேண்டும்.
கேள்வி: இடதுசாரிகள் முன்வைக்கும் இடது ஜனநாயக முன்னணியில் பெண்களுக்கான பங்கு என்னவாக இருக்கும்?
பதில்: இது ஒரு மிக முக்கியமான கேள்வி. நாம் இடது ஜனநாயக சக்திகளைப் பற்றி பேசும்போது, அந்த சக்திகள் யாரென்று அறிந்துகொள்ள வேண்டும். இன்று உள்ள சமூக அமைப்போடும் அதன் படிநிலைகளோடும் முரண்படுகிற சக்திகளைத்தான் நாம் அவ்வாறு அடையாளப்படுத்துகிறோம்.
இன்றைய பெண்கள் சாதி, வர்க்க அடிப்படைகளைத் தாண்டி, சமூக அமைப்புமுறையை மாற்றியமைக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளார்கள். எனவே, பிரச்சனைகளை பாலினக் கண்ணோட்டத்தோடு பார்க்கவும், அணுகவும் பழகிக் கொண்டால் நம்மால் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பெண்களை சுயமரியாதைக்கும், சமூகப் பாதுகாப்புக்கும் சம வாய்ப்புகளுக்குமான போராட்டங்களில் ஈர்க்க முடியும். கண்டிப்பாக அது இடது ஜனநாயக முன்னணிக்கு வலிமையைக் கூட்டிடும்.
இன்னொருபுறம், பெண்கள் ஒன்றும் தனிப்பட்ட சமூகம் அல்ல; அவர்கள், பல வர்க்கங்களிலும், சாதிகளிலும் வாழ்கின்றனர். சமூகக் கட்டமைப்பின் மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களும், முதலாளித்துவத்தால் அடிமட்டத்திலேயே இருத்தி வைக்கப்பட்டிருப்பவர்களுமான தலித்/பழங்குடிப் பெண்கள் மற்றும் ஏழைப் பெண்கள் – இடது ஜனநாயக மேடையின் மிகவும் வலிமையான சக்தியாகத் திகழ்வார்கள். அவர்களுக்கு இன்றைய நடைமுறையை மாற்றுவதில் இன்னும் அதிகமான விருப்பம் உள்ளது. அத்துடன் மற்ற பிரிவுகளை சேர்ந்த சுரண்டப்படும் உழைக்கும் பெண்களும் உள்ளனர்.
வளர்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவிலும் கூட, அங்கிருந்து வெளிவரும் தகவல்களைப் பார்க்கும்போது அங்குள்ள நடுத்தர வர்க்கப் பெண்களில், மூன்றில் ஒருபங்கு பேர் சமவேலைக்கு சம ஊதியம் பெறுவதில்லை. பாலினப் பாகுபாடைப் பயன்படுத்தி பெண்களிடமிருந்து அதிக உழைப்பை உறிஞ்சிப் பெறவே உலகம் முழுவதும் முதலாளித்துவம் விரும்புகிறது. எனவே, நம்முடைய கட்சி, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கையிலெடுப்பது, இடது ஜனநாயக அணி அமைப்பதற்கு மிக அவசியமான பணி என்பதை உணர்ந்து செயல்படும் என்றே நம்புகிறேன்.
Leave a Reply