– ஜி.செல்வா
“ …ஆட்சி அதிகாரத்தை முழுமையாக, ஏற்று நடத்த எந்தக் கட்சியாவது தயாராக இருக்கிறதா ’’
“இருக்கிறது” என்ற குரல் ஒலிக்கிறது.
எங்கே?யார் பேசியது? பதில் சொன்னதுயார்?
1917 ஜுன் மாதத்தில் மென்ஷ்விக் கட்சித் தலைவரும் தற்காலிக அரசங்கத்தில் அமைச்சர் சோவியத்துகளின் முதல் காங்கிரசில் சவால் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாமேதை புரட்சியாளர் லெனின் “ போல்ஸ்விக் கட்சி ஒவ்வொரு நிமிடமும் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது ’’ என பிரகடனம் செய்தார்.
1917 மார்ச் மாதம் நடைப்பெற்ற புரட்சியில் கொடுங்கோலன் ஜார் புரட்சி அலையில் அடித்துவிரட்டப்பட்டான்.
எரிந்து போன சுருட்டின்
கடைசிப் பகுதியைக்
கடித்துத் துப்புவதைப் போல
நாங்கள் அரச மரபைக்
காறித்துப்பினோம்
என மயோகோவ்ஸ்கி இப்புரட்சி குறித்து கவிதை பாடினான்.
ரஷ்ய தேசம் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி வீறுகொண்டு சென்றிருந்த காலக்கட்டம், அப்போது லெனின் எழுதிய பல்வேறு எழுத்துகளில் மிக முக்கியமானதில் ஒன்று, “போல்ஸ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா’’. இந்நூலின் சராம்சத்தை ரஷ்ய புரட்சி வரலாற்றின் வழியே இக்கட்டுரை அறியமுற்படுகிறது.
போல்ஸ்விக்குகள் யார்?
கட்சி திட்டம், கட்சி உறுப்பினர்களின் தகுதிகள், கட்சி பத்திரிக்கைக்கான ஆசிரியர் குழுவை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை விவாத பொருளாக கொண்டு ரஷ்ய சமுகஜனநாயக தொழிற்கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் 1903 ஆண்டு நடைப்பெற்றது.
“ கட்சியை அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட படைப்பகுதியாக’’ கருதினார் லெனின். இதற்கு மாறாக மார்டாவ்“ கட்சியை அமைப்பு ரீதியாக ஒழுங்கற்ற முறையிலிருக்கும்’’ஒரு பொருளாக கருதினர். அதாவது கட்சி உறுப்பினர் தானாகவே கட்சியில் இணைந்து கொள்வதால், கட்சியின் கட்டுபாட்டிற்கு உட்பட்டு செயல்பட வேண்டியதில்லை என்பது மார்டாவ் கருத்து. ஆனால் லெனின், கட்சியின் வெகுஜன ஸ்தாபனங்களில் செயல்பட்டு, கட்சிக்குள் உறுப்பினராக சேர்க்கப்படவேண்டும். கட்சியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு செயல்படவேண்டும்’’ என்றார்.
இதுபோன்ற கருத்துகளில் கட்சி காங்கிரசில் பெரும்பான்மையினர் லெனினை ஆதரித்தனர், பின்பற்றினர். அவர்கள் போல்ஸ்விக்குகள் (பெரும்பான்மை என்ற அர்த்தத்தில்) என அழைக்கப்பட்டனர். லெனினது கருத்துக்கு மாற்று கருத்தினை கொண்டவர்கள் கட்சி காங்கிரசில் குறைவான வாக்குகளை பெற்றனர். அதாவது சிறுபான்மையினராக இருந்தனர். அவர்கள் மென்ஸ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்.
1917 ஏப்ரலில் நடைப்பெற்ற 7வது காங்கிரசில் “ ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி (போல்ஸ்விக்குகள்)’’ என பெயர் மாற்றப்பட்டது. 1918 மார்ச் முதல் ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சி (போல்ஸ்விக்) எனவும் 1925 முதல் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஸ்விக்) என கட்சி பெயர் அழைக்கப்பட்டது.
“ போல்ஸ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா?’’ என்ற நூலை எதற்காக எழுதினார் லெனின்.
1917 மார்சில் நடைப்பெற்ற புரட்சியில் கெரன்ஸ்கி என்பவன் தலைமையிலான அரசுஅதிகாரத்திற்கு வந்தது. இதில் மென்ஸ்விக்குகள், சோசலிஸ்ட் புரட்சிகாரர்கள், உள்ளிட்டோர் ஆட்சி அதிகாரத்தில் பங்குகொண்டனர். இந்த தற்காலிக அரசை, ’’நிலச்சுவாந்தார்கள், முதலாளிகள் ஆகியோரின் அரசாங்க அமைப்பு’’ என லெனின் வரையறுத்தார்.இந்த அரசாங்க அமைப்பையும் அதில் பங்கெடுத்துள்ள மென்ஸ்விக்குகள் உள்ளிட்டோர் கடைபிடித்த சமரசங்களையும்,ஏகாதிபத்திய முதல் உலக போர் கொடுத்த நெருக்கடிகளையும் எந்தளவுக்கு உயிருக்கே ஆபத்தானது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இது கட்சி செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலைகளில் ஒன்று என ஏப்ரல் (1917) மாதத்தில் நடைபெற்ற மாநாடு தீர்மானித்தது.
பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் தடைகளை போல்ஸ்விக்குகள்“ தத்துவத்தாலும், நடைமுறையினாலும் ’’ தகர்த்துக் கொண்டே சென்றனர். அப்போது போல்ஸ்விக்களுக்கு எதிரான ஒரு வாதத்தை மென்ஸ்விக்குகள், சோசலிஸ்ட் புரட்சிவாதிகள், காடேட்டுகள் ஆகியோர் முன்வைத்தனர். அது ’’போல்ஸ்விக்குகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட்டாலும் தொடர்ந்து ஆட்சியை, அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது’’ என்பதே.
லெனின், இந்த கருத்துகளை எதிர்க்கொண்டு அரசு,ஆட்சியதிகாரம் குறித்த பட்டாளி வர்க்க கருத்தோட்டத்தை, தத்துவத்தை வளர்த்தெடுத்தார் லெனின். அக்கருத்துகளை உள்ளடக்கிய நூல்தான் “ போல்ஸ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா’’ இந்நூலை 1917 செப்டம்பர் மாதம் இறுதியில் எழுத ஆரம்பித்து அக்டோபர் 1ந்தேதி முடித்தார்.
நூலின் சராம்சம் என்ன?
“ புது வாழ்வு’’ என்ற பத்திரிகை போல்ஸ்விக்குகளுக்கு எதிராக ஆறு வாதங்களை முன்வைத்தது .
புதுவாழ்வு பத்திரிகை முன்வைத்த கருத்துகள்:
- பாட்டாளி வர்க்கம் “ இதர வர்க்கங்களிடமிருந்து தனிமைப்பட்டு இருக்கிறது.
- ஜனநாயகத்தின் உயிர்ப்புள்ள சக்திகளிடமிருந்து தனிமைப்பட்டு இருக்கிறது.’’
- நிர்வாக முறையில் அரசாங்க இயந்திரத்தை ஏற்றுக்கொண்டு நிர்வகிக்க முடியாது.
- அரசங்க இயந்திரத்தை “ இயக்கி செல்லவும் முடியாது’’
- நிலைமை மிகவும் சிக்கலானது.
- பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மட்டுமல்ல புரட்சி முழுவதையுமே முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லும் படியாக எதிர்சக்திகளின் நெருக்குதல் பூராவையும் எதிர்த்து நிற்கவும் முடியாது.
இந்த வாதங்களுக்கு லெனின் அளித்த பதில்கள் மூலமாக, எப்படி போல்ஸ்விக் கட்சியை, புரட்சிக்கான கட்சியை புரட்சிக்குப்பின் எப்படி செயல்படவேண்டும் என்ற இலக்கைநோக்கி, கட்சி அணிகளை பயிற்றுவித்தார் என்பதை அறிய முடியும். அரசியல் நிகழ்வுகளை மார்க்சிய தத்துவ சாரத்தின் துணையோடு பாட்டாளி வர்க்க கருத்தோட்டத்தை மிக கச்சிதமாக இலக்கியநயத்தோடு லெனின் எழுதிய எழுத்துக்கள் உலகப்பட்டாளி வர்க்க இயக்கங்களுக்கு ஒரு பாடம்.
இதர வர்க்கங்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளதா?
இந்த கேள்விக்கு விடையளிக்கும் முன், பூர்ஷ்வாக்களுக்கு எதிரான புரட்சியை பாட்டாளி வர்க்கம் நடத்தும்போது, இதர வர்க்கங்களிடமிருந்து தனிமைப்பட்டிருக்கிறது என்று சொல்வதின் பொருள் என்ன? எனகேள்வியை எழுப்புகிறார் லெனின்.
இதர வர்க்கம் என்பது விவசாயிகள்தான். விவசாயி மக்களிடமிருந்துதான் தனிமைப்பட்டுள்ளார்கள் என்று நேரடியாகவும், தெளிவாகவும், திட்டவட்டமாகவும் சொல்லமுடியாது. ஏனெனில் பூர்ஷ்வா வர்க்கத்துடன் கூட்டணி அமைக்ககூடாது என விவசாயிகள் உள்ளடக்கிய தொகுதிகள் (குரியார்க்கள்) வாக்களித்ததை எடுத்துகாட்டி விவசாயிகள் பெரும்பான்மையினர் போல்ஸ்விக்குகளுக்கு ஆதரவாக இருப்பதை சுட்டிகாட்டுகிறார்.
“சமாதானம், உணவு, நிலம் அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்ற முழக்கங்களுடன் புரட்சி அரசு எழுந்தது. அதன் பின்னணி என்ன?அக்காலகட்டத்தில் ரஷ்ய மக்கள் மூன்று முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. தேசிய இனப்பிரச்சனை, நிலப்பிரச்சனை, சமாதானப் பிரச்சனை. இப்பிரச்சனைகளில் ஜார் மன்னனின் ஆட்சியும் பின்பு பொறுப்பேற்ற தற்காலிக அரசும் எடுத்த நிலைப்பாடுகளிலிருந்து பாட்டாளிவர்க்க அரசின் மனநிலை மாறுபட்டதென்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருந்தது; அந்த அரசுகளால் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தனர். ஆகவே அதற்கு முடிவுகட்டும் வகையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினால் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவேண்டும் என்பதை லெனின் வலியுறுத்தினார். விவசாயிகள் மீதான நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு முடிவுகட்டப்படும்; தேசிய இனங்களுக்கு முழுமையான சுந்தந்திரம் வழங்கப்படும்; போரில் ஈடுபட்டுள்ள அனைத்து நாட்டினருடன் சமாதானம் பேணப்படும். மேலே குறிப்பிட்டவை இவைகளை அறிவிக்கும் முழக்கங்கள்தான். அந்த அறிவிப்பு பாட்டாளி வர்க்கம் இதர வர்க்கங்களோடு இணைந்திருந்ததைக் குறிப்பிடுகிறதே தவிர தனிமைப்பட்டிருக்கவில்லை என லெனின் தெளிவுபடுத்தினார். .
பிரெஞ்காரர்களும் கீரிக் மொழியும்
“ உயிர்ப்புள்ள சக்திகளிடமிருந்து பாட்டாளி வர்க்கம் தனிமைப்பட்டுள்ளது’’ என்ற வாதத்தின் வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொள்வது கடினம் என்பதால், இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பிரெஞ்ச்காரர்கள் சொல்வதுபோல அது“கீரிக்மொழி”யாக இருக்கலாம் என எள்ளல்தன்மையோடு பதிலளிக்கிறார்.
பிரெஞ்சு மொழி, காலச்சாரத்தின் மீது ரஷ்ய மக்களுக்கு மோகம் உண்டு. எனவேதான் லெனின் இந்த உதாரணத்தை இங்கு சுட்டிகாட்டுகிறார்.
தகர்க்கவேண்டிய அரசு இயந்திரம்:
“ நிர்வாக முறையிலே அரசாங்க இயந்திரத்தை ஏற்றுக்கொண்டு பாட்டாளி வர்க்கத்தால் செல்ல முடியாது’’ என்ற கருத்து பொதுவாக, நிர்வாக ரீதியான விசயமாக முன்வைக்கப்பட்டது போல் தோன்றினாலும், புரட்சிக்குப்பிறகு எதிர்க்கொள்ளபோகும் மிகமுக்கியமான கடமைகளில் ஒன்று என்பதால் லெனின் இக்கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறார். இப்பதில்களினுடாக அரசு அரசாங்க இயந்திரம் குறித்த மார்க்சிய பார்வையை கருத்தோட்டங்களை எடுத்து இயம்புகிறார்.
“ நிரந்தரமான ராணுவம், போலீஸ் படை, அதிகார வர்க்கம்’’ ஆகியவற்றையே அரசாங்க இயந்திரம் என்கிறோம். இந்த இயந்திரத்தை அப்படியே வைத்துக்கொண்டு புரட்சிகர அரசு இயங்க முடியாது என பேராசன் மார்க்ஸ் ‘ பாரீஸ் கம்யூன்’ அனுபவத்திலிருந்து சுட்டிகாட்டிய பாதையை விளக்குகிறார் லெனின்.
ஆகவே அது மிக முக்கியமான கடமைதான், பாட்டாளி வர்க்கப் புரட்சியை எதிர் கொள்பவர்கள் இந்த கடமையை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள கஷ்டங்களை சுட்டிகாட்டி விலகினால் நமக்கும் பூர்ஷ்வா வர்க்க தொண்டர்களுக்கும் வித்தியாசம் இல்லை. கடமையை நிறைவேற்ற முன்பைவிட மேலான வழிமுறைகளை கவனத்துடன் காரியப்படுத்த ஆய்ந்தறிய வேண்டும் என போல்ஷ்விக்குகளுக்கு சொல்கிறார் லெனின்.
1871ம் வருடம் பாரிஸ் நகரப் பாட்டாளி வர்க்கம் நடத்திய புரட்சியை பூர்ஷ்வா வர்க்கம் மிக குறைந்த நாளில் ரத்தவெள்ளத்தில் மிருகத்தனமாக தாக்கி அழித்தது. இந்த புரட்சியின் தவறுகளை சுட்டிகாண்பித்தபோதும் மார்க்ஸ் “ 19ம் நூற்றாண்டின் மகத்தான பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மிக சரியான எடுத்துகாட்டாக விளங்குகிறது பாரிஸ் கம்யூன்’’ என்றார். இந்த வரலாற்று அனுபவங்களிலிருந்து மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மென்ஸ்விக்குகள் எந்தவிதமான அனுபவத்தையும் பெறவில்லை என சாடுகிறார் லெனின்.
மார்க்ஸின் போதனைகளிலிருந்து, தற்போதைய அனுபவங்களிலிருந்தும் தான் எழுதிகொண்டிருக்கும் புத்தகத்தை லெனின் இங்கு கூறிப்பிடுகிறார். லெனினிசத்தின் மிக அடிப்படை நூலாக இன்றும் விளங்ககூடிய “ அரசும் புரட்சியும்’’ .என்ற நூல் ஆனால் லெனின் இப்புத்தகத்தை புரட்சிக்குப் பிறகுதான் வெளியிட்டார். அந்த நூலின் முன்னுரையிலேயே ‘ புரட்சியைப் பற்றி எழுதுவதைக்காட்டிலும் புரட்சியில் பங்கெடுப்பது இனிமையும் பயனும் உள்ள அனுபவமாக இருக்கும்’’ என கூறிப்பிட்டுள்ளார்.
முதலாளிகளுக்கு பழகிப்படிந்து போன அடக்குமுறைக்குரிய, தடுக்கமுடியாத அம்சங்களை கொண்ட அரசாங்க இயந்திரத்தை தகர்த்து எறிந்துவிட்டு, பாட்டாளி வர்க்கம் தனக்கே சொந்தமான புதிய அரசாங்க இயந்திரத்தை அமைத்துக்கொள்ளும்.“ தொழிலாளர்கள்- போர்வீரர்கள்-விவசாயிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சோவியத்துக்கள் தான் அந்த புதிய அரசு இயந்திரம்.இப்புதிய அரசு இயந்திரம் எப்படி முதலாளிகளின் அரசு இயந்திரத்திலிருந்து வேறுபட்டு இருக்கிறது என லெனின் விளக்கி சொல்லிக் கொண்டிருப்பதை, படிக்கும்போது புரட்சியை நோக்கி மிகஉறுதியாக ரஷ்ய மக்கள் நகர்த்திருப்பார்கள் என்பதை நம்மால் இயல்பாக யூகிக்க முடிகிறது.
இந்த சோவியத்துகள் திடீரென முளைத்தது அல்ல. தோல்வியில் முடிந்த 1905 புரட்சியிலையே கருக் கொண்டது. தோல்வியில் முடிந்தாலும் அளவற்று வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டது “ ரஷ்ய மக்களுக்கு இது ஒரு ‘முழு ஒத்திகை’யாக இருந்தது. இது இல்லாதிருப்பின் 1917ல் புரட்சியின் வெற்றி சாத்தியமாகியிருக்காது’’ என லெனின் கூறுகிறார்.
தகர்க்ககூடாத நிர்வாக இயந்திரம்:
அரசாங்க இயந்திரம் என்பது ராணுவம், போலீஸ், அதிகார வர்க்கம் மட்டுமல்ல பிராமாண்ட அளவில் கணக்குகளை குறிக்கும் வேலையை, பதிவுவேலைகளை செய்து வரும் வங்கிகள், சிண்டிகேட்டுகள்(வணிகமுறை கூட்டு) போன்றவற்றை உள்ளடக்கியது என்கிறார் லெனின். புரட்சிக்கு பிறகு இதை என்ன செய்வது? என்ற கேள்வியை எழுப்பி இதை தகர்க்க கூடாது. இதை முதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து பிடுங்கிகொள்ளவேண்டும். முதலாளிகள் செல்வாக்கு செலுத்துவதற்காக உள்ள வழிவகைகளைக் கத்தரித்துவிட வேண்டும்,வெட்டி தள்ளவேண்டும், துண்டித்தெரியவேண்டும். அவற்றை பாட்டாளி வர்க்க சோவியத்துகளுக்கு கீழ் கொண்டு வர வேண்டும்.
முதலாளித்துவம் எற்கனவே செய்து முடித்துள்ள சாதனங்களை பயன்படுத்தி கொள்வதன்வாயிலாகத்தான் பாட்டாளி வர்க்கம் தனது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிறார் லெனின். முதலாளித்துவம் உருவாக்கி வைத்துள்ள வங்கிகள், சிண்டிகேட்டுகள், தபால் துறை, அலுவலக ஊழியர்களின் அமைப்புகள் போன்ற கருவிகள். மற்றும் பெரிய வங்கிகள் இல்லாமல் சோசலிசம் என்பது அசாத்தியம் என கூறிப்பிடுகிறார். (இது லெனினது காலத்தில் இருந்த அதிகாரவர்க்கம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று இது மிக விரிவாக வளர்ந்துள்ளது).
அதுபோல, புரட்சிக்குப்பிறகு முதலாளிகளின் சொத்தை பறிமுதல் செய்வது ‘ முக்கிய அம்சமாக ’ இருக்காது, மாறாக முக்கிய அம்சமாக இருக்கபோவது முதலாளிகள் அவர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் போன்றவர்கள் மீதான “ தொழிலாளர் கட்டுப்பாடுதான்’’. பறிமுதல் செய்வதால் மட்டும் எல்லாம் முடிந்துவிடாது. அதில் ஸ்தாபன அமைப்பு மற்றும், முறையான கணக்கு வைக்கிற அம்சம் எதுவும்இல்லை. ஏனவே பறிமுதல் செய்வதற்குப் பதில் “ நியாயமான வரி ’’ விதிக்கலாம். யாரும் சொத்து மதிப்பிடிலிருந்து தப்பிக்கவோ, உண்மையை மறைக்கவோ, சட்டத்தை மீறவோ முற்றிலும் சாத்தியமாகதபடி செய்யவேண்டும். அவ்வாறு நடப்பதற்கு, தடுப்பதற்கு தொழிலாளர் கட்டுப்பாடு ஒன்றினால்தான் முடியும் என்கிறார் ’’ லெனின்.
அதுபோல ஜெர்மனி நாட்டு முதலாளித்துவம், “ அரசாங்க கட்டுபாட்டின் கீழ் உள்ள சங்கங்களை கட்டாய முறையில் ட்ரஸ்டுமயமாக்கிய’’ முறையை அமல்படுத்தலாம். இவ்வாரெல்லாம் செய்வதன் மூலமாக பட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு “ அரசாங்க இயந்திரத்தை’ மிக நவீனமாகவும், சர்வவல்லமையுடயதாய், வர்க்க தன்மையற்றதாய் இருக்கும் என லெனின் சுட்டிகாண்பிக்கிறார்.
புரட்சிகரமான ஜனநாயகம்:
பாட்டாளி வர்க்கம் அரசாங்க இயந்திரத்தை இயக்கிச் செல்ல’’ இயலாது என்ற வாதத்திற்கு பதிலளிப்பதன் ஊடே மார்க்சியத்தின் சில உயிர்ப்புள்ள சக்திகள் குறித்து பேசுகிறார் லெனின்.
ஜனநாயகம் குறித்து போல்ஸ்விக்குகளின் பார்வை என்ன? அரசாங்க இயந்திரத்தை புரட்சிக்குப் பின் நிர்வகிக்க உழைக்கும் மக்களை எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும்? இவ்விசயத்தில் முதலாளித்துவத்திலிருந்து எவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்? போன்றவைகள் குறித்து லெனின் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். ஒரு வர்க்க கட்சியின் செயல்பாடுகள் கண்ணோட்டங்கள் ஒவ்வொரு விசயங்களிலும் எவ்வாறு இருக்க nவ்ணடும் என்பதை லெனின் நமக்கு கற்றுக்கொடுகிறார்.
தானிய ஏகபோக உரிமை, உணவு பங்கிட்டு முறை, கட்டாய உழைப்பு முறை, வேலை செய்யாதவருக்கு உணவில்லை போன்றவைகளை முதலாளித்துவ அரசு உருவாக்கி அமலாக்கிவருகிறது. இந்த விதிகளை சோவியத்துகள் ஆட்சிக்கு வரும்போது அதன் எதிர்மறை அம்சங்களை நீக்கிவிட்டு அமலாக்க முடியும், அமலாக்க வேண்டும். இதை முதலாளிகள் அமலாக்குதற்கும், பாட்டாளி வர்க்க அரசு அமலாக்கபோவதற்கும் உள்ள வித்தியசங்களை லெனின் கூறிப்பிடுகிறார்.
உதாரணத்திற்கு, ‘ வேலைசீட்டு’ என்பது மக்கள் மந்தையை குறிக்கும் ஒரு முத்திரை சீட்டாக, கடைநிலை பகுதியினரை காட்டும் அடையாளமாக, கூலி அடிமைமுறையின் அத்தாட்சி பத்திரமாக இனிமேல் இருக்காது. புதிய சமுகத்தில் ‘கூலிக்காரர்கள்’’ என யாருமிருக்கமாட்டார்கள். ஆனால்’’ வேலை செய்யாதவர்கள்’’ என யாருமில்லை என்பதைகாட்டும் அத்தாட்சி சீட்டாக இருக்கும்’’ என்கிறார் லெனின்.
“ அதுபோல பயிற்சிபெறாத தொழிலாளியும், சமையல்தொழிலில் ஈடுபடும் பெண்களும் உடனடியாக அரசாங்க நிர்வாகவேலையை மேற்கொள்ள முடியாது’’ என்பது நமக்குத் தெரியும். ஆனால் பணக்காரர்கள், பணக்கார குடுபங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவர்களால் தான் அரசாங்கத்தை நிர்வகிக்க, நிர்வாகத்தின் வேலைகளை பார்க்க திறனுள்ளவர்கள் என்கிற மூடநம்பிக்கையை உடனடியாக கைவிடவேண்டும். வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களும், போர்வீரர்களும் அரசாங்க நிர்வாக வேலைக்குப் பயிற்சி பெற வேண்டும். அதை உடனே தொடங்க வேண்டும். அதாவது, எல்லா உழைக்கும் மக்களையும், ஏழை மக்களையும் இந்த வேலைக்காகப் பயிற்றுவிப்பதை உடனே தொடங்க வேண்டும் என நிர்பந்திக்கிறார் லெனின்.
ஒவ்வொரு விசயத்திலும் வர்க்கப் பார்வையை மிகக்கறாராக நிருவுவதில் லெனினிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக உள்ளது.
மக்களுக்கு ஜனநாயக முறையை போதிப்பவர்களுக்கும், போல்ஸ்விக்குகளுக்கு உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்திகிறார் லெனின். போரினால் உருவான, கண்டு கேட்டறியாத துன்பங்களையும், துயரங்களையும் தணிப்பதற்கு, அதே சமயத்தில் போரால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பயங்கரமான புண்களை ஆற்றுவதற்கு “ புரட்சிகரமான ஜனநாயகம்’’ தேவை அதை ஏழைமக்களுக்கு குடியிருப்புகளை பகிர்ந்து கொடுப்பது என்ற உதாரணத்தின் மூலம் விளக்குகிறார்.
இதை எப்படி செய்வது, “முதலாளித்துவ பள்ளியில் நாம் படிக்கச் சென்றது வெட்டியாக அல்ல’’ என்கிறார் லெனின்.
மோசமான ரொட்டியும் வர்க்கப் போராட்டமும்:
“ நிலைமை சிக்கலானது ’’ என்கிற வாதத்தை எதிர்கொள்ளும்போது லெனின் “ மிகவும் சிக்கலான நிலைமையில்லாது போனால் புரட்சியே இருக்காது. ஓநாய்களுக்கு பயந்தவர்கள் காட்டிற்குள் செல்லக்கூடாது’’. என்கிறார்.
இதனை அவர் சொந்த அனுபவத்திலிருந்தே விளக்குகிறார். ஒரு தலைவராக லெனின் எப்படி விசயங்களை உழைக்கும் மக்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார் என்பதற்கு இதுவொரு உதாரணம்.
1917 ஜூலை மாதம் தற்காலிக அரசாங்கம் அதிகாரத்திலிருகிறது. பெத்ரோகிராத் தலைநகரில் லெனின் தலைமறைவாக இருக்கிறார். அந்த நகரம் சோவியத்துகளின் செல்வாக்கின் கீழ் இருந்தது. ஒரு நாள் மதிய உணவுக்காக ஒரு தொழிலாளியின் வீட்டிற்குச் செல்கிறார். அந்த வீட்டுப் பெண் மேஜையின் மீது ரொட்டியை வைத்தவுடன் , அங்கிருந்த தொழிலாளி “ரொட்டி எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆட்சியிலுள்ள அதிகாரவர்க்கம் நல்ல ரொட்டியைத் தருவார்கள் என்கிற நினைப்பே இல்லாமல் இருந்தோம். இப்போது இந்த நகரில் தொழிலாளர்கள் வலுவான சக்தியாக மாறியிருப்பதால், மோசமான ரொட்டியைக் கொடுக்கத் துணியமாட்டார்கள்” என்கிறார்.
இதனை ஒரு சாதாரண உரையாடலாக லெனின் எடுத்துக்கொள்ளவில்லை. “இல்லாமையை அறியாத நான் ரொட்டிபற்றி யாதொரு சிந்தனையும் கொண்டதில்லை. ரொட்டி தானாகவே கிடைத்துக் கொண்டிருப்பது எழுத்தாளன் செய்யும் வேலையின் உபவிளைவு என இருந்தேன். ரொட்டிக்காக நடக்கும் வர்க்கப்போராட்டம் என்ற விசயத்தை மிகச் சிக்கலான விசயத்தை அரசியல் பகுப்பாராய்ச்சி மூலமாகச் சிந்தனை அணுகுகிறது… ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியான இந்தத் தொழிலாளி எளிமையுடன், நேர்மையுடன் ஆச்சரியத்தக்க தெளிவான பார்வையுடன், விசயத்தை நேராக எதிர்கொண்டும் சமாளிக்கிறார். நம் போன்ற அறிவுஜிவிகளுக்கும் ஜனத்திரலுக்கும் வெகுதூரம். பூமிக்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்’’
புரட்சியின் போது நிலைமை எவ்வளவு துன்பகரமாக உள்ளது என அறிவுஜிவி சிந்திக்கிறான் உணர்கிறான். ஆனால் தொழிலாளியோ “ கொஞ்சம் நெருக்கி கசக்கினால்’’ அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள துணிய மாட்டார்கள். மறுபடியும் நெருங்கி கசக்குவோம், அவர்களை ஒரேடியாக தூக்கியெறிந்து விடுவோம் என்று சிந்திக்கிறான். இங்கு அவர்கள் என்பது “ ஆட்சியிலுள்ள முதலாளி வர்க்கம்.”
புரட்சியும், எதிர்புரட்சி சக்திகளும்
“புரட்சி வெற்றிபெற்றாலும், எதிர்புரட்சிகர சக்திகளின் நெருக்குதலை பாட்டாளி வர்க்கத்தால் எதிர் கொள்ள முடியாது அது புரட்சி முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லும் படியாக இருக்கும்” என்ற வாதத்தை லெனின் எதிர்கொண்டு பேசியதை பாருங்கள். எவ்வளவு தீர்க்கமான பார்வை.
லெனின் சொல்கிறார், “கணவான்களே எங்களைப் பயமுறுத்திப் பார்க்காதீர்கள்; அதில் வெற்றிபெற மாட்டீர்கள்’’ இதற்க்கு உதாரணமாக கர்னிலோவ் கலகத்தை சுட்டி காண்பிக்கிறார். தற்காலிக அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போது, போல்ஸ்விக் கட்சியை சிதைத்து விட்டு, சோவியத்துகளை விரட்டியடித்து மீண்டும் ராணுவ ஆட்சியை, முடியாட்சியை நிறுவ, ஜாரின் தளபதி கர்னிலோவ் தலைமை தாங்கி கலகத்தை தொடங்கினான்.இந்த சதித்திட்டத்திற்கு தற்காலிக அரசாங்கத்தின் தலைவன் கெரன்ஸ்கி துணைபுரிந்தான்.கர்னிலோவ் கலகத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்திற்கு போல்ஸ்விக்கு கட்சி தலைமை தாங்கியது. ஒருபுறம் தற்காலிக அரசாங்கத்தின் கேடுகெட்ட போக்குகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திக் கொண்டே கர்னிலோவ் படையினரை களத்தில் விரட்டியடித்தனர். “ அக்காலத்தில் கர்னிலோவ் அல்லது லெனின் என்ற பட்டியல் மக்கள் முன்பாக வைக்கப்பட்டது. மக்கள் இயற்கையாக லெனினைத் தேர்ந்தெடுத்தார்கள்‘‘ என கேடெட் கட்சியின் தலைவர் மலியுகோவ் கூறினார்.
‘ எதிர்ப்புச் சக்திகள்‘‘ என்பது வெறும் சொற்தொடர்தான். அதனுடைய வர்க்கப் பெயர் “ பூர்ஷ்வா வர்க்கம் என்றார் லெனின்.
எதிர்ப்பை கண்ட யார்அஞ்சுகிறானோ, இந்த எதிர்ப்பை முறிதெரிய முடியும் என்பதை யார் நம்பவில்லையோ “ முதலாளிகளின் எதிர்ப்பைப்பற்றி அஞ்சுங்கள், அதனைச் சாமாளிக்க உங்களால் இயலாது’’ என்று யார் மக்களை எச்சரிக்கிறனோ, அவன் அதன் மூலம் மீண்டும் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்கிறான் இது வெட்ட வெளிச்சமான உண்மை.
பாட்டாளி வர்க்க அரசங்கம் பணக்காரர்களுக்கு கை கட்டி சேவகம் பார்க்காமல் பசியில் வாடும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை பத்திர்கையின் வாயிலாக அல்லாமல் கண்கூடாகப் பார்த்தரியும்போது, ஏழைகள் பார்த்து உணரும் போது முதலாளிகளோ அவர்களது எந்த சக்திகளும் கோடிகோடியாகப் பணத்தைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருக்கும் உலக மூலதனத்தின் எந்த சக்திகளும் மக்கள் புரட்சியைத் தோற்கடித்து அழித்துவிட முடியாது. இதற்குமாறாக உலகமெங்கும் மக்கள் புரட்சிதான் வெற்றிகொள்ளும்’’ என நம்பிக்கையோடு வாதிட்டுள்ளார் லெனின்.
இப்படியாய் தன்காலத்தில் புரட்சிக்கு எதிராக முன் வைக்கப்பட்ட கருத்துக்களை லெனின் எதிர்கொண்டதன் வாயிலாக இரண்டு விசயங்களை செய்தார். ஒன்று எதிர் வர்க்கதினரின் வாதங்களுக்கு பதில் அளித்ததோடு போல்ஸ்விக் கட்சி ஊழியர்களையும் பயிற்றுவித்தார். இரண்டவதாக உலக பாட்டாளி வர்க்கம் புரட்சியை எதிர்கொள்ளும் போது செய்யவேண்டிய பணிகளை சொல்லி கொடுத்துள்ளார்.
நிறைவாக:
லட்சியத்தை தெளிவாகத் தீர்மானிப்பதும் அதை ஆழமாகப் புரிந்துகொள்வதும் அந்த லட்சியப்பதையை வரையறுப்பதும், ஒவ்வொரு புரட்சியாளனின் கடமை’’ லெனின் இதை எவ்வாறு செய்தார் என்பதை உணர்வதற்கு, பயில்வதற்கு “ போல்ஸ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா?’’ என்ற சிறு பிரசுரம் உதவிகரமாக இருக்கும்.
“ பிரிட்டிஷ், அமெரிக்கா தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்சும், எங்கெல்சும் கூறிய ஆலோசனைகளை அப்படியே இலகுவாகவும் நேரடியாகவும் ரஷ்ய நிலைமைகளில் உபபோகிக்கலாம் என்று எண்ணுவது மார்க்சியத்தை, அதன் ஆராய்ச்சு முடிவுகளை அறிந்து கொள்வதற்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தொழிலாளர் இயக்கங்களின் திடமான வரலாற்று ரீதியான தனிச்சிறப்புகளை ஆராய்வதற்கோ உபயோகிப்பது அல்ல; மறாக அறிவுஜிவிகளைப் போல ஏதோ சில்லரை குழுப் பிரச்சனைகளின் கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்காக உபயோகப்பதாகும்’’. என லெனின் சொன்னதே லெனினது எழுத்துக்களுக்கும் பொருந்துவதாகும்.
இந்தியாவில் “ மக்கள் ஜனநாயகப் புரட்சியை’’ நோக்கி சிபிஐ(எம்) கட்சி நடைபோடுகிறது. தினசரி எதிர்வரும் அரசியல் நிகழ்வுகளை மார்சிய சித்தாந்த ரீதியாக பகுத்தாய்ந்து, அனைத்து நடைமுறை வேலைகளும் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற இலக்கைநோக்கியே பயணப்படவேண்டுமென கட்சி சொல்கிறது. அதுபோல் ஒவ்வொரு நிகழ்வையும் வர்க்கப் பார்வையில் பார்ப்பது. உறுதியான போல்ஸ்விக் கட்சியை அதாவது புரட்சியை நடைமுறைப்படுத்தும் கட்சியை கட்டுவதற்கு, லெனினது எழுத்துக்கள் அவரது வாழ்க்கை நமக்கு உதவிகரமாக இருக்கும்.
உதவிய நூல்கள்:
- போல்ஸ்விக்குகள் நிடித்து அரசாள முடியுமா – லெனின்.
- சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஸ்விக்) கட்சியின் வரலாறு, சவுத் விஷன் பதிப்பகம்.
- லெனினும் ரஷ்யப் புரட்சியும், அலைகள் பதிப்பகம்.
- ரஷ்யப் புரட்சி வி.பி.சிந்தன், – பாரதி புத்தகாலயம்.
Leave a Reply