(வலிமையான ஆயுதங்கள் இருந்தபோதும் நாங்கள் அமைதியையே விரும்புகிறோம் என்று அறிவிக்கும் சோவியத் அரசின் சுவரொட்டி)
அறிமுகம்
ரஷ்ய கால அட்டவணைப்படி, 1917 அக்டோபரில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய மகத்தான ரஷ்ய புரட்சியும், அதன்வழி அமைந்த சோவியத் ஒன்றியமும், துவக்கத்திலிருந்தே ஏகாதிபத்தியங்களின் முற்றுகைகளையும் தொடர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும் எதிர்கொள்ளவேண்டி வந்தது. புரட்சிகர அரசு அமைக்கப்பட்டு ஆறுமாதம் முடியும்பொழுதே அமெரிக்கா உள்ளிட்ட 14ஏகாதிபத்திய நாடுகளின் துருப்புக்கள் ரஷ்யாவிற்குள் நுழைந்து ஆட்சிக்கவிழ்ப்பு போரை நடத்தின. புதிய ரஷ்ய அரசுக்கு ஏகாதிபத்திய நாடுகளும் அமைப்புகளும் அங்கீகாரம் வழங்க மறுத்தன. கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலம் எந்த முன்னணி முதலாளித்துவ நாடுமே ரஷ்யாவுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், புரட்சிகர ரஷ்ய அரசை கவிழ்க்க பல ரகசிய முயற்சிகளை எடுத்தது. இரண்டாம் உலகப்போரில் நாஜிப்படைகளை எதிர்த்து வீரஞ்செறிந்த போர் நிகழ்த்தி பல நூறு லட்சம் சோவியத் வீரர்கள் உயிரிழிந்த நிலையில் கூட அமெரிக்க அதிபர் ட்ரூமன், ‘ஜெர்மன் அல்லது சோவியத் இராணுவத்தினரில் யார் இறந்தாலும் நமக்கு நல்லதே’ என்று கூறிவந்தார். மேலை நாடுகள் 1930களில் கூட சோவியத் எதிர்ப்பு வெறியில், சோசலிச சோவியத் ஒன்றியத்தை அழிக்கவும் போல்ஷெவிக் புரட்சிக்கு எதிராகவும் ஹிட்லரைப் பயன்படுத்தவே முற்பட்டனர். இவற்றை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டது சோவியத் புரட்சி. 1922 இல் தான் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவானது. அப்பொழுது பெரும்பாலான அரசுகள் அது பொது உடமை பேசும் நாடு என்பதால் அதனை தீண்டத்தகாத நாடு என ஒதுக்கிவைத்தன, ராஜாங்க அங்கீகாரம் தர மறுத்தன. ஆனால், அடுத்த 25 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான நாடுகளுடன் சோவியத் ஒன்றியத்திற்கு ராஜாங்க உறவுகள் இருந்ததோடு, உலகின் இரண்டு ஆகப்பெரிய வல்லரசுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் கருதப்படும் நிலை ஏற்பட்டது.இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதி நீங்கலாக, தனது காலம் முழுவதும் ஏகாதிபத்திய தாக்குதல்களையும் சூழ்ச்சிகளையும் எப்படி பன்னாட்டு அரசியல் அரங்கில் சோவியத் புரட்சி எதிர்கொண்டு இந்த சாதனை படைத்தது என்பதை சுருக்கமாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
சோவியத் புரட்சியின் அயல் உறவு கொள்கை– லெனினின் பங்கு
நவம்பர் 1917 இல் சோவியத் அமைப்புகளின் இரண்டாவது மாநாடு நடந்த பொழுது லெனின் முன்வைத்த “அமைதி பற்றிய சாசனம்”, ஒருபுறம் பாட்டாளிவர்க்க சர்வதேசீயம், மறுபுறம் சமாதான சகவாழ்வு என்ற இரு அம்சங்களைக் கொண்ட அயல் உறவுக் கொள்கையை முன்மொழிந்தது. இது எவ்வாறு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் முதலாளிவர்க்கத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கங்களின் ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிப்பது பாட்டாளிவர்க்க சர்வதேசீயம். அதேசமயம், நாடுகளாக பிரிந்து உள்ள உலகில், முதலாளித்துவ நாடுகளுடனான அரசுக்கு – அரசு உறவுகளில் இயன்ற அளவு அமைதிசார் நிலையை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது சமாதான சக வாழ்வு எனும் அம்சம். அதே சமயம், ஏகாதிபத்தியம் தாக்குதலில் இறங்கினால் அதனை வலுவாக எதிர்ப்பதற்கும் புரட்சிகர இயக்கங்களின் வெற்றிகளை பாதுகாக்கப் போராடும் மக்களுக்கும் அந்நிய ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் மக்களுக்கும் ஆதரவு அளிப்பதற்கும் சமாதான சக வாழ்வு கோட்பாடு தடை அல்ல.
புரட்சிகர ரஷ்ய அரசின் இச்சரியான நிலைப்பாடு பெரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. ஏகாதிபத்தியம் 1918இல் எதிர்புரட்சிசக்திகளுக்கு ஆதரவாக ரஷ்யா மீது போர் தொடுத்தபோது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதை முறியடிப்பதே பிரதான பணியாகியது. எனினும் இக்காலத்தில் கூட, லெனின் கூறியது போல், அயல் உறவு கொள்கைகளும் பன்னாட்டு உறவுகளும் புரட்சி எதிர்கொண்ட முக்கிய சவால்களாக இருந்தன. அக்டோபர் புரட்சியில் தொடங்கி 1920 நவம்பர் வரையிலான மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி உள்ளிட்ட “மத்திய வல்லரசுகளுடன்” (இதில் ஜெர்மனி, பல்கேரியா, ஆஸ்ட்ரியா-ஹங்கேரி மற்றும் துருக்கி இருந்தன) அமைதி உடன்பாடு அடிப்படையில் உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. பின்லாந்து, போலந்து, மற்றும் பால்டிக் நாடுகள் விடுதலை பெற்றன. ஜார்கால ரஷ்யாவின் பெரும்பகுதி புரட்சிகர ரஷ்யாவில் இணைக்கப்பட்டது. எனினும் ஜார்கால ரஷ்யாவின் சில பகுதிகளை ஜெர்மனி எடுத்துக்கொண்டது. எதிர்புரட்சி சக்திகளுடன் மூன்றாண்டு காலம் நிகழ்ந்த போரில் 1920இல் செம்படை வெற்றி பெற்றது. ஒருபுதிய ‘சமநிலை’ ஏற்பட்டது. போல்ஷெவிக்குகள் எதிர்பார்த்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் சோசலிச புரட்சிகள் வெற்றி பெறவில்லை. அக்டோபர் புரட்சியை தொடர்ந்து அடுத்த பதினைந்து மாதங்களில் மத்திய ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகள் ஜெர்மனி, போலந்து மற்றும் ஹங்கேரியில் வெடித்தன. ஆனால் அவை அடக்கப்பட்டன. 1920 இல் இத்தாலி நாட்டில் உழைப்பாளி மக்கள் தொழிற்சாலைகளை கைப்பற்றி ஆக்கிரமித்தனர். ஆனால் அதுவும் அடக்கப்பட்டது. அதே சமயம் ரஷ்ய புரட்சியை ஏகாதிபத்தியத்தால் அழிக்க இயலவில்லை. வர்க்க எதிரிகளை முறியடித்து, பிரிட்டிஷ், பிரெஞ்ச், அமெரிக்க தலையீடுகளை ரஷ்ய செம்படை தோற்கடித்தது.
லெனின் உள்ளிட்டு போல்ஷெவிக் தலைவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக நீண்ட காலம் சோசலிச நிர்மாணத்தை ரஷ்யா தனித்தே மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது. 1921 இல் பத்தாவது கட்சி காங்கிரசில் பேசிய லெனின், “ஐரோப்பாவில் வலுவான பாட்டாளிவர்க்கப் புரட்சி நிகழும்; அதன் மூலம் நமக்கு விரைவில் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது பேதமையாகும்” என்று தெளிவுபடுத்தினார். புதியசூழலை கணக்கில் கொண்டு, 1921இல் ரஷ்ய சோசலிச குடியரசு, பெர்சியா (பிப்ரவரி 26), ஆப்கானிஸ்தான் (பிப்ரவரி 28), துருக்கி (மார்ச் 16) ஆகிய நாடுகளுடன் பரஸ்பர ராஜாங்க அங்கீகார ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டது. 1921 மார்ச் மாதம் பிரிட்டனுடன் வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது. மார்ச் 18 அன்று போலந்துடன் ரிகா ஒப்பந்தம் கையெழுத்தானது. நீண்ட காலம் ஒரு தனி நாடாகவே ஏகாதிபத்திய-முதலாளித்வ உலகில் சோவியத் அரசு தாக்குப்பிடித்தாக வேண்டும் என்ற புதிய சூழலில் பன்னாட்டு/அயல் உறவு கொள்கைகளின் வெற்றிக்கு சோசலிச பொருளாதார நிர்மாணம் மிக அவசர அவசியமாகியது. மூன்றாண்டு யுத்த காலத்தில் பொருளாதாரம் சேதம் அடைந்திருந்தது. அதை புனரமைக்க லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையை பத்தாம் காங்கிரசில் முன்மொழிந்தார். இக்கொள்கை, உள்நாட்டு, பன்னாட்டு நிலைமைகளை கணக்கில் கொண்டு, அரசு அதிகாரத்தை உறுதியாக உழைக்கும் வர்க்கத்தின் கையில் வைத்துக்கொண்டு ஒரு வரம்புக்கு உட்பட்ட அளவில் வேளாண் துறையிலும் தொழில்துறையிலும் தனியார் முதலீடுகளை அனுமதித்தது. இதன் இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், முதலாளித்துவ நாடுகளும் சோவியத் பொருளாதார நிர்மாணத்தில் பங்கெடுக்க விரும்பும் நிலை ஏற்பட்டது. வெறும் அரசியல் எதிரிகளாக சோவியத் ஒன்றியத்தை அழிக்க முயல்வதற்குப் பதிலாக குறைந்த காலத்திற்காவது தங்கள் சந்தைகளுக்கான களமாக சோசலிச ரஷ்யாவை பார்க்க அவை முனைந்தன. லெனினின் வார்த்தைகளில் கூறுவதானால், இப்புதிய கொள்கை “முதலாளிகளுக்கு சில அனுகூலங்களை அளிப்பதன் மூலம் நம்மை வெறுக்கும் அரசுகளைக்கூட நம்முடன் உறவு கொள்ளவும் வணிகம் செய்யவும் நிர்ப்பந்திக்கும்.” 1920 டிசம்பரில் அனைத்து ரஷ்ய சோவியத்து அமைப்புகளின் எட்டாவது மாநாட்டில் லெனின் தொழில்ரீதியாக முன்னேறியிருந்த முதலாளித்தவ நாடுகளிடம்இருந்து (ரயில் பெட்டிகள், மின்சார கருவிகள், போன்ற) பலவகை எந்திரங்களை ரஷ்யா பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பன்னாட்டு கொள்கைகள், உறவுகள் ஆகியவற்றிற்கும் ரஷ்யாவில் சோசலிச நிர்மாணத்தை சாதிப்பதற்கும் உள்ள உறவை யதார்த்தமாகவும் தத்துவார்த்த ஆழத்துடனும் போல்ஷெவிக் கட்சி புரிந்துகொண்டிருந்தது.
உள்நாட்டு யுத்த காலத்தில் (1918 – 1921) விவசாயிகளிடமிருந்து ரஷ்ய அரசு கட்டாய அடிப்படையில் தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது. புதிய பொருளாதார கொள்கையின் கீழ் வேளாண் உற்பத்தியில் மீட்சி காணும் நோக்குடன் வேளாண் பொருட்களுக்கான சட்ட பூர்வமான சந்தையை அரசு அனுமதித்தது. விவசாயிகளிடம் இருந்து தானியங்களை விலைக்கு வாங்கி, அவர்களுக்கு நுகர்பொருட்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்தது. சிறுவணிகத்திலும் 20 பேருக்குக் குறைவாக பணிசெய்யும் தனியார் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கியது. பெருந்தொழில், வங்கிகள், போக்குவரத்து, அந்நிய வர்த்தகம் ஆகிய கேந்திரமான துறைகள் அரசிடமே வைத்துக் கொள்ளப்பட்டன. பொருளாதாரம் அரசின் வலுவான கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.
புதிய கொள்கையின்கீழ் அந்நிய மூலதனம் அழைக்கப்பட்டது, அதனை ஈர்க்க சலுகைகளும் அளிக்கப்பட்டன. ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் தொழில்நுட்பம் பெறவேண்டிய அவசியம் உணரப்பட்டது. பன்னாட்டு வர்த்தகம் மிகவும் தேவையாக இருந்தது. 1922இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழு கூறியதுபோல், பன்னாட்டு உறவுகளில் பாட்டாளிவர்க்க அரசை இடம் பெறச்செய்யவேண்டிய பணியை புதிய பொருளாதார கொள்கை செய்தது. இதன்பகுதியாக 1921 மற்றும் 1922 இல் பிரிட்டன், ஜெர்மனி, நார்வே, ஆஸ்ட்ரியா, இத்தாலி, ஸ்வீடன், செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுடன் சோவியத் அரசு வணிக ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. இதே ஆண்டுகளில் கடுமையான வறட்சியையும் ரஷ்யா எதிர்கொள்ள நேர்ந்தது. இதிலும் ரஷ்ய அரசின் பொருத்தமான அயல் உறவு கொள்கை பிறநாடுகளின் உதவியுடன் பஞ்சத்தை சமாளிக்க ரஷ்யாவிற்கு உதவியது. இதில், ரஷ்யாவிற்கு அமெரிக்க அரசு தானியம் அனுப்பியதில் அமெரிக்க விவசாயிகளுக்கும் பயன் கிடைத்தது. பன்னாட்டு பொருளாதார உறவுகளை துண்டிப்பது என்ற நிலையை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தீர்க்கமான புரிதலுடன் நிராகரித்தது. லெனின் மீண்டும் மீண்டும் புதிய பொருளாதாரக் கொள்கையில் பன்னாட்டு பொருளாதார உறவுகளின் முக்கிய பங்கை தெளிவுபடுத்தினார். போல்ஷெவிக் கட்சி சமாதான சக வாழ்வு என்ற அயலுறவு கொள்கை கோட்பாட்டை இருவகைகளில் மிகப்பொருத்தமாக பயன்படுத்தியது. ஒன்று, ரஷ்யாவிற்கும் (பின்னர், சோவியத் ஒன்றியத்திற்கும்) எதிராக முன்னணி முதலாளித்துவ நாடுகள் ஒன்று சேர்ந்து விடாமல் தடுக்க அவர்கள் மத்தியில் இருந்த வணிகபோட்டியையும் அடிப்படை முரண்பாடுகளையும் அது பயன்படுத்தியது. இதில் வணிக ஒப்பந்தங்களும் ராஜாங்க உறவுகளும் உரிய பங்கை ஆற்றின. இரண்டாவதாக, அந்த நாடுகளிடம் இருந்தே தொழில் நுட்பம், இயந்திரங்கள், மற்றும் நிபுணர்களின் உதவிகள் ஆகியவற்றைப் பெறவும் இக் கோட்பாடு உதவியது. அதேசமயத்தில், பொருளாதாரத்தின் கடிவாளம் சோசலிச அரசிடம் இருந்தது. அந்நிய வர்த்தகம் அரசின் ஏகபோக உடமையாக இருந்தது. இதன் மூலம் இறக்குமதியை கட்டுப்படுத்த முடிந்தது. மேலும், உள்நாட்டின் பெருந்தொழில்களும் கட்டமைப்பு துறையும் நிதித்துறையும் கல்வி மற்றும் ஆரோக்கியத் துறைகளும் அரசிடமே இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே சமாதான சக வாழ்வு என்ற சோவியத் அயல் உறவு கோட்பாடு, சோசலிச வளர்ச்சி என்ற இலக்கைச் சார்ந்தே செயல்பட்டது. மறுபுறம், சோவியத் அயல் உறவு கொள்கையின் மற்றொரு தூண் பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த தேசவிடுதலை இயக்கங்களுக்கும் மக்களுக்கும் ஆதரவு, சீனம் உள்ளிட்ட அனைத்து நாட்டு பாட்டாளி வர்க்கங்களின் நலன் காப்பது, பாசிச எதிர்ப்பு இயக்கங்களுக்கும் ஜனநாயக இயக்கங்களுக்கும் பொருத்தமான வழிகளில் உதவி ஆகிய அம்சங்களும் சோவியத் அயல் உறவு கொள்கைகளின் பகுதியாகும். இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்களையும் சவால்களையும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியும் எதிர்கொண்டன. அவை தவறே செய்யவில்லை என்பது நமது வாதம் அல்ல. நிலைமைகளை மதிப்பீடு செய்வதிலும் எதிர்வினை ஆற்றுவதிலும் தவறுகளே நிகழாது என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும்? எனினும் ஐரோப்பிய புரட்சிகள் தோற்கடிக்கப்பட்ட சிக்கலான சூழலில் அக்டோபர் புரட்சிக்குப் பின் லெனின் மறைவு (ஜனவரி 1924) வரையிலான மிகவும் அபாயகர காலத்தை வெற்றிகரமாக சமாளித்து சோவியத் ஒன்றியத்தை அமைத்து முன்னேறிய போல்ஷெவிக் கட்சி மற்றும் அரசின் சாதனைகளில் அயலுறவுக் கொள்கைக்கு முக்கிய பாத்திரம் இருந்தது.
பாசிசமும் சோவியத் அயல் உறவுக் கொள்கையும்
1924 இல் தோழர் லெனின் மறைந்தார். அதன்பின் ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் சமாதான சக வாழ்வு, பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் என்ற இரு அம்ச அயல் உறவு கொள்கையை தொடர்ந்தன. இந்த கொள்கையை கட்சியின் 15ஆவது மாநாட்டில் மத்திய குழு சார்பாக முன்வைத்த அறிக்கையில் ஸ்டாலின் விளக்குகிறார்:
“முதலாளித்துவ நாடுகளுடனான நமது உறவுகள் இரண்டு எதிர்மறையான சமூக உற்பத்தி அமைப்புகளுக்கிடையே சக வாழ்வு சாத்தியம் என்ற கருத்தின் அடிப்படையிலானது. நடைமுறை இது சரியென்று நிரூபித்துள்ளது. சில சமயங்களில் கடன்களும் அவற்றை திருப்பித்தருவதும் ஒரு முட்டுக்கட்டையாக முன்வருகின்றன. இதில் எங்கள் கொள்கை தெளிவானது. இது “கொடு, வாங்கிக்கொள்” (‘கிவ் அண்ட் டேக்”) என்ற அடிப்படையிலானது. எங்கள் நாட்டில் தொழிலை வளர்க்க நீங்கள் கடன் உதவி செய்தால், யுத்தத்திற்கு ( இங்கு ஸ்டாலின் ‘யுத்தம்’ என்று கூறுவது முதல் உலகப்போரை குறிக்கும்) முன்பு (ரஷ்யா) பெற்றுள்ள கடன்களில் ஒரு பகுதியை தருவோம். நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தராவிட்டால், உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இந்த கொள்கை நமக்கு பயனளித்துள்ளது. ஜெர்மனி மட்டுமல்ல நான் குறிப்பிடுவது, பிரிட்டனும் அமெரிக்காவும் கூடத்தான். இதன் ரகசியம் என்ன? இயந்திரங்களை இறக்குமதி செய்ய ரஷ்ய சந்தை மிகப்பெரிய சந்தையாக உள்ளது. முதலாளித்துவ நாடுகளுக்கு இத்தகைய சந்தை மிக அவசியமானது.”
லெனின் வலியுறுத்தியதை ஸ்டாலின் நினைவு கூறுகிறார்: நாம் சோசலிசத்தை நிர்மாணிப்பது என்பது முதலாளித்துவ நாடுகளுக்கும் நமக்கும் யுத்தம் தவிர்க்க முடியாதது என்று கருதினாலும், அதை எவ்வளவு தூரம் ஒத்திப்போட முடியும் என்பதை பொறுத்தது. ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க புரட்சி நிகழும் நிலை அல்லது காலனி நாடுகளில் புரட்சி வெடிக்கும் நிலை ஏற்படும்வரை இதனை ஒத்திவைக்க நாம் முயலவேண்டும். எனவே முதலாளித்தவ நாடுகளுடன் அமைதிசார் உறவுகளை தக்கவைப்பது நமது புரட்சிகர கடமையாகும்.
அதேசமயம், சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாடு அடிப்படையானது என்பதையும் சோவியத் கட்சி உணர்ந்திருந்தது. எனவே, 1927 டிசம்பரில் நடைபெற்ற சோவியத் கட்சியின் 15ஆவது மாநாட்டில் கட்சியின் கடமைகள் கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டன:
- சர்வதேச புரட்சிகர இயக்கத்தைப் பொறுத்தவரையில்:
- உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ச்சிக்கு பாடுபடுவது
- முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராக தொழிலாளிகளின் ஐக்கிய முன்னணியையும் புரட்சிகர தொழிற்சங்கங்களையும் வலுப்படுத்துவது
- சோவியத் தொழிலாளிவர்க்கத்திற்கும் முதலாளித்துவ நாடுகளில் வசிக்கும் தொழிலாளிவர்க்கத்திற்கும் உள்ள நட்பை வலுப்படுத்துவது
- காலனி நாடுகள் மற்றும் சார்நிலை நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கும் சோவியத் தொழிலாளிவர்க்கத்திற்கும் உள்ள இணைப்பை வலுப்படுத்துவது
- சோவியத் அரசின் அயல் உறவு கொள்கையை பொறுத்தவரையில்:
- புதிய ஏகாதிபத்திய யுத்த முன் தயாரிப்புகளை எதிர்ப்பது
- பிரிட்டனின் தலையீடு போக்குகளை எதிர்ப்பது, சோவியத் ஒன்றியத்தின் தற்காப்பு திறனை வலுப்படுத்துவது
- முதலாளித்துவ நாடுகளுடன் அமைதி கொள்கையை பின்பற்றுவது, சமாதான உறவுகளை தக்கவைப்பது.
- அன்னிய வர்த்தகத்தை அரசு ஏகபோகமாக வைத்துக்க்கொண்டு, வலுப்படுத்தி அதன் அடிப்படையில் பிர நாடுகளுடன் சோவியத் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது
- ஆளும் ஏகாதிபத்திய வல்லரசுகளால் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் “பலவீனமானவை” “சமனற்றவை” என்று கருதப்படுகின்ற நாடுகளுடன் நட்பு நாடுவது/
இந்த நிலைப்பாடு தான் பெரும்பாலும் தொடர்ந்தது. ஆனால் 1930களில் ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான் ஆகிய நாடுகளில் பாசிச அரசுகள் ஏற்பட்டு மிகவும் சிக்கலான சர்வதேச நிலைமையை சோவியத் ஒன்றியம் எதிர்கொண்டது. மேலை ஏகாதிபத்திய நாடுகள் பாசிசத்தை எதிர்ப்பதற்குப் பதில் அதனுடன் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுவந்தனர். அவர்களில் ஒருசாரார், ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததை வரவேற்றதோடு, பாசிச ஜெர்மனியை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பயன்படுத்தவும் விழைந்தனர். 1939 இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாட்டு அறிக்கை இப் புதிய சூழலில் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கை பற்றி கூறியுள்ளதன் சாராம்சம் வருமாறு:
- நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைத்து நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். எங்கள் நலன்களுக்கெதிராக பிற நாடுகள் செயல்படாதவரையில் இந்நிலை தொடரும்.
- எங்கள் நாட்டுடன் எல்லைகள் கொண்டுள்ள அனைத்து அருகாமை நாடுகளுடனும் நாங்கள் அமைதியான, நெருக்கமான, நட்பான உறவுகளை விரும்புகிறோம். இந்த நாடுகள் சோவியத் நாட்டின் எல்லைகளை மதித்து நடக்கும் வரை இது தொடரும்.
- விடுதலைக்காகப் போராடும் நாடுகளுக்கும் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கும் எங்கள் ஆதரவு உண்டு.
- எங்களை தாக்குவதாக அச்சுறுத்துவோரின் மிரட்டல்களை கண்டு நாங்கள் பயப்படவில்லை. சோவியத் எல்லைகளை மீறி யுத்தம் துவக்க விரும்புவோருக்கு நாங்கள் ஒன்றுக்கு இரண்டு என்று பதிலடி கொடுப்போம்.
இந்த அடிப்படையில் கட்சியின் கடமைகள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டன:
- அனைத்து நாடுகளுடனும் அமைதி மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த முனைவது
- ஜாக்கிரதையாக இருந்து, யுத்தவெறியர்களின் சூழ்ச்சிகளை எதிர்கொள்ளுவது
- செஞ்சேனையையும் சோவியத் கப்பற்படையையும் வலுப்படுத்துவது
- அனைத்து நாடுகளின் உழைப்பாளி மக்கள் நாடுகளுக்கிடையே அமைதியையும் நட்பையும் விரும்புகின்றனர். அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களுடனும் வலுவான நேசத்தையும் நட்பையும் பேணுவது.
இந்த நிலைபாடுகள் மீண்டும் லெனின் – ஸ்டாலின் காலத்தில் சமாதான சக வாழ்வின் அடிப்படையிலான சோவியத் அயலுறவு கொள்கை ஒரு தெளிவான சித்தாந்த அடிப்படையில் இருந்தது என்பதை தெளிவு படுத்துகிறது. பாட்டாளிவர்க்க சர்வதேசீயத்தையும் இணைத்தே சமாதான சகவாழ்வு கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஏகாதிபத்தியம் பற்றிய எந்த பிரமைகளும் இல்லாமல் இக்கொள்கை இருந்தது. பாசிச எதிர்ப்பில் ஏகாதிபத்திய வல்லரசுகள் உறுதியாக இருக்க மாட்டார்கள் என்பதையும் சோசலிச சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பாசிச சக்திகளை பயன்படுத்த முயல்வார்கள் என்பதையும் சோவியத் அயல் உறவு கொள்கை 1930 களில் கணக்கில் கொண்டது. இயன்ற அளவிற்கு ஸ்பெயின் நாட்டில் நடந்த வீரஞ்செறிந்த பாசிச எதிர்ப்புப் போருக்கு சோவியத் கட்சி ஆதரவு நல்கியது.பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளை அழைத்தது. இந்த முயற்சிகள் பலனளிக்காத கட்டத்தில், பாசிசம் சோவியத் நாட்டை தாக்கும் என்று நன்கு உணர்ந்துதான் ஜெர்மனியுடன் 1939 இல் தற்காலிக போர் மறுப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. பின்னர், மேலை ஏகாதிபத்திய நாடுகள் பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபட்ட அணியை அமைக்க முன்வந்த பொழுது அதை ஏற்று, மகத்தான போர் நடத்தி பாசிசத்தை சோவியத் ஒன்றியம் வீழ்த்தியதில் சோவியத் அயல் உறவு கொள்கை முக்கிய பங்கு ஆற்றியது. மிக முக்கியமாக, முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று கட்டாயத்திற்கு உட்பட்ட போதும் தனது சர்வதேச புரட்சிகர கடமைகளையும் இயன்ற அளவு நிறைவேற்றியது 1950கள் வரையிலான சோவியத் நாட்டின் அயல் உறவு கொள்கையின் சிறப்பு என்று கூறலாம்.
சோவியத் அயல் உறவு கொள்கையும் திருத்தல்வாதமும்
1953 இல் ஸ்டாலின் மறைந்தார். 1956இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆம்மாநாட்டில் குருஸ்சாவ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதை அடுத்த ஆண்டுகளில் சோவியத் கட்சியின் நிலைபாட்டில் பல திருத்தல்வாதக் கூறுகள் இடம் பெற்றன என்றாலும் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கைகள் பொதுவாக தேச விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால், லெனின் மற்றும் ஸ்டாலின் ஏகாதிபத்தியம் இருக்கும்வரை போர் அபாயம் உண்டு என்று வலியுறுத்தி வந்ததற்கு மாறாக, சமாதான சகவாழ்வு என்ற கோட்பாட்டின் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை மழுங்கடிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, சோவியத் ஒன்றியம் மற்றும் மக்கள் சீனம் ஆகிய இரு பெரும் சோசலிச நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்தன. சோவியத் அயல் உறவுகொள்கையும் இந்த நிகழ்வுப் போக்குக்கு ஒரு பகுதி பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது.
1950களுக்குப் பின் வந்த ஆண்டுகளில் சோவியத் அயல் உறவு கொள்கைகளில் கூடுதலான அழுத்தம் பன்னாட்டு அமைதி காப்பதற்கு தரப்பட்டது. அணு யுத்த அபாயம் எழுந்த பின்புலத்தில், எப்படியாவது அதை தவிர்ப்பது என்ற இலக்கு முன்வந்தது. பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் என்பதற்கான அழுத்தம் குறைந்தது எனலாம். 1957 மற்றும் 1960ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச பொது உடமை இயக்க ஆவணங்களில் உலக அளவில் ஏகாதிபத்தியத்தின் வலு குறைவாக மதிப்பிடப்பட்டது, சோசலிச சக்திகளின் வலு மிகையாக மதிப்பிடப்பட்டது என்பதை நமது கட்சியின் 14 ஆவது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ‘சில தத்துவார்த்தப் பிரச்சினைகள்’ என்ற ஆவணம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த மிகை மதிப்பீடும் சோவியத் கட்சியின் நிலைபாடு மீதும் அயல் உறவு கொள்கை மீதும் செல்வாக்கு செலுத்தியிருக்கும். சமாதான சக வாழ்வு, அமைதியான சோசலிச மாற்றம், முதலாளித்துவத்துடன் அமைதியான பொருளாதாரப் போட்டி போன்ற கோட்பாடுகளை சோவியத் கட்சி 1960களில் முன்வைத்தது. இப்போக்குகள் சோவியத் அயல் உறவு கொள்கைகளில் சில ஊனங்களை ஏற்படுத்தியதாக நாம் கருத வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஏகாதிபத்திய ஆபத்தை குறைத்து மதிப்பிட்டதும் பின்னர் சோவியத் சோசலிசம் வீழ்ச்சியை சந்தித்ததற்கு ஒரு காரணம் என்றே கருதவேண்டியுள்ளது.
எனினும், 1985 இல் கோர்பச்சாவ் சோவியத் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சோவியத் ஒன்றியத்தின் தலைவராகவும் பொறுப்பு ஏற்கும்வரை கூட ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கை பெரும்பாலும் தேச விடுதலை சக்திகளுக்கு ஆதரவாக இருந்தது என்று கூற முடியும்.
குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை சகாய விலையில் வழங்க சோவியத் ஒன்றியம் முன்வந்தது. 195௦ இல் ஒரு இந்திய வர்த்தக தூதுக்குழு இங்கிலாந்து சென்று உருக்கு உற்பத்திக்கு உதவியை நாடிய பொழுது ஏழை நாடான இந்தியாவிற்கு எதற்கு உருக்கு உற்பத்தி என்று ஏளனம் செய்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். உடனடியாக பிலாய் உருக்கு ஆலையை நிர்மாணிக்க அனைத்து உதவிகளையும் அளித்தது சோவியத் ஒன்றியம். இதனை தொடர்ந்து பிரிட்டனும் ஜெர்மனியும் துர்காபூர் மற்றும் ரூர்கேலா உருக்கு ஆலைகளை அமைக்க முன்வந்தன. இப்படி வளரும் நாடுகள் மீதான ஏகாதிபத்திய நாடுகளின் கிடுக்குப்பிடிக்கு எதிராக முக்கிய பங்கு ஆற்றியது சோவித் ஒன்றியம். இந்திய நாட்டில் பொதுத்துறை மூலம் ஓரளவு சுயசார்பை வலுப்படுத்த விடுதலைக்குப்பின் இந்திய அரசு முயன்ற பொழுது பேருதவி செய்தது சோவியத் ஒன்றியம். இதேபோல் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்று வந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு உதவியது. பிரட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள் எகிப்து நாட்டுடன் சூயஸ் கால்வாய் பிரச்சினையில் போருக்குச் சென்ற பொழுது எகிப்துக்கு பக்கம் உறுதியாக நின்றது சோவியத் ஒன்றியம். ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து, இதர சோசலிச நாடுகளுடன் இணைந்து வளரும் நாடுகளுக்கு ஆதரவாக நின்றது, செயல்பட்டது. வியத்னாம், லாவோஸ், கம்பூசியா நாடுகளின் ஏகாதிபத்ய எதிர்ப்பு போருக்கு உறுதுணையாக இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச க்யூபாவை அழிக்க முற்பட்ட பொழுது க்யூபாவின் பாதுகாப்பில் பெரும் பங்கு ஆற்றியது. அங்கோலா, மொஜாம்பீக் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க விடுதலை இயக்கங்களின் வெற்றிக்கு சோவியத் உதவி முக்கியமாக இருந்தது. வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் தன்மை குறித்த மதிப்பீட்டில் சில திருத்தல்வாத தவறுகளை செய்த போதும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு முக்கிய பங்கு ஆற்றியது.
நிறைவாக
- எதிர்மறையான, சிக்கலான வரலாற்றுச்சூழலில் ரஷ்ய புரட்சி வெற்றி பெற்றது. மிகவும் பின்தங்கிய நாட்டில் நிகழ்ந்தது. இதற்கு தலைமை தாங்கி, இதை சாதித்தது மார்க்சீய லெனினீய சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்பட்ட போல்ஷெவிக் கட்சி.
- மானுட வரலாற்றில் முதன்முறையாக ஒரு நவீன சோசலிச அமைப்பை மிகப்பெரிய நிலப்பரப்பில் உருவாக்கி, அதை ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து காப்பாற்றி, அவர்களது இடைவிடா முற்றுகைகளையும் தடைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியது போல்ஷெவிக் கட்சி.
- இருநூறு – முன்னூறு ஆண்டுகள் கழித்தும் முதலாளித்துவத்தால் தீர்க்க இயலாத பிரச்சினைகளான, அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியம், உள்ளிட்ட மனித உரிமைகளை சாதித்துக் காட்டியது சோவியத் புரட்சி. காலனிகளை சுரண்டாமல், உழைப்பாளி மக்களை சுரண்டாமல், பெரும் அளவு பிற நாடுகளின் உதவியின்றி இதை சாதித்தது.
- சோவியத் ஒன்றியம் விடுதலை இயக்கங்களுக்கும் உலக அளவில் உழைப்பாளி மக்களுக்கும் கலங்கரை விளக்கமாக, பாதுகாவலனாக திகழ்ந்தது.
- சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கைகள் இச்சாதனையில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளன என்றால், அக்கொள்கைகள் பெரும்பாலான காலம் வரை மார்க்சீய லெனினீய அடிப்படையில் இருந்தன என்பதுதான் முக்கிய காரணம்.
Leave a Reply