– தந்தை பெரியார்
(சோவிய ரஷ்யா சென்று திரும்பிய தந்தை பெரியார், ‘சுயமரியாதை சமதர்ம கட்சி’ ஏற்படுத்தும் அளவு ஈர்க்கப்பட்டார். அவர் எழுதிய ‘ருசியாவின் வெற்றி…’-யின் சில பகுதிகளை இங்கே தருகிறோம்)
ருசியாவின் சமதர்மக் கொள்கை ஒரு போதும் நடைமுறையில் சாத்தியமாகானாது என்று புகன்ற ராஜதந்திரிகளும், ருசியாவில் தனியுடமை ஒழிந்து பொதுவுடமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சியும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்கரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்று தவறென்று தானே ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரசியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரசிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலகமெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங்காலத்திலே சமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பாழுது ரசியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக்கொண்டிருக்கிறதென்றே கூற வேண்டும்…
பஞ்சத்தாலும் பொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிமைமையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரசியா உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத் திட்டமொன்றைத் தயாரித்து ஐந்து ஆண்டுகளுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்து விட வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தனர்…
தங்கள் ஆட்சி முறையைப்பற்றி பெருமை பேசிக்கொண்ட ஐரேப்பாவும் , அமெரிக்காவும் உலக வர்த்தகத்தில் ரசியாவை எதிர்த்து போராட முடியவில்லை. உலகத்து மார்க்கெட்டிலெல்லாம் ரசியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி தானங்களையயல்லாம் திடுகிடுக்கும் படி செய்து விட்டது…
உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன ? கோடிக்கணக்கான மக்கள் தினசரி 8 மணி நேரம், 10 மணிநேரம் வேலை செய்து வருகின்றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக் கொண்டு வருகின்றார்கள்…
உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்து வரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலேயே இன்று காணத்திடைக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத்திண்டாட்டம் உண்டாயிராதென்பதே பொது உடைமை இயக்கத்தினரின் எண்ணம்.
ரசியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சிலபாகம் சர்க்கார் பண்ணைகள், சிலபாகம் குடியானவர்கள் கூட்டுறவாக பயிரிடும் பண்ணைகள், மற்றொரு பாகம் தனிவிவசாயிகள் தனியாக பயிரிடும் நிலம் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இயந்திர கலப்பைகளை உபயோகித்தால்தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு நிலங்களாக இருந்தால் இயந்திரக்கலப்பையால் உழ முடியாது. எனவே தான் சர்க்கார் பொருளாதாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனங்களும் பொதுவாக இருக்க வேண்டுமென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள்.
பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும் பொழுது இந்தியா வாளா விருக்குமேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடியயன்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடும் மென்பது நிட்சயம்.
சில மாதங்களுக்கு முன் ரசியா தோழர் ஒருவர் கவி. ரவிந்திநாத் தாகூருக்கு நிருபம் ஒன்ற எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடைய காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எவைகள் ? என்று வினாவியிருந்தார்.
அதற்கு கவி தாகூர் ” தங்கள் நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லா பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பது தான் உங்கள் ரசிய நாட்டின் வெற்றிக்கு காரணம், சமுதாய விசயங்களில் முயற்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திகு முட்டுக்கட்டையாய் இருகிறது” என்று பதில் எழுதியிருந்தார்.
குடி அரசு
23.07.1933
Leave a Reply