இடது ஜனநாயக அணிக்கான பொருத்தப் பாடு இன்றைக்கும் இருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய அம்சம். மார்க்சிஸ்ட் கட்சி உருவானதிலிருந்து, தொடர்ந்த மாநாடுகளில் காங்கிரசின் ஒரு கட்சி ஏகபோகத்தை எதிர்த்து, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்ற அறைகூவலை விடுத்துக் கொண்டே இருந்தது. 9வது மாநாட்டுத் தீர்மானம், ”அரசியல் தத்துவார்த்த நெருக்குதல்களினால், வழக்கமான இடதுசாரி ஜனநாயகக் கட்சிகளும், குழுக்களும் 1959ம் ஆண்டிலிருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு ஜனநாயக முன்னணிகளில் இருந்து விலக ஆரம்பித்தன. 1969ல் வலது கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசுடன் இணைந்து நின்றது என்றால், சோஷலிஸ்ட் கட்சியோ மகா கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து இடதுசாரி ஒற்றுமையினை உருக்குலைக்கும் பணியினைப் பூர்த்தி செய்தது” என சுட்டிக் காட்டுகிறது. எனவே, 1970களின் துவக்கத்திலிருந்தே இடதுசாரி கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் பணிக்கும் கட்சி முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட பொருளாதார திட்டம் இடதுசாரிகளிடமே இருந்தது. அவசர கால நிலையின் போது இடதுசாரி சக்திகளை ஒன்று படுத்துவதும், ஜனநாயகத்துக்கான சக்திகளைப் பரந்த அளவிலே திரட்டுவதும் இரண்டுமே முன்னுக்கு வந்த கடமைகளாக இருந்தன.
1978 ஜலந்தர் மாநாட்டின் அரசியல் தீர்மானம், அரசியல் நிலைமை சாதகமாக இருந்த போதிலும், வர்க்க சக்திகளின் பலாபலன்கள் பலவீனமாக இருப்பதைக் கட்சி மறக்கக் கூடாது. 1971ஆம் ஆண்டைப் போலவே சமீபத்திய தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா ஆகிய இரண்டு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ குழுக்களைச் சுற்றியே தான் மக்கள் பிரிந்து நின்றார்கள். நமது பல்வேறு போராட்டங்களும், நடவடிக்கைகளும் கட்சியின் செல்வாக்கையும், அரசியல் அந்தஸ்தையும் அதிகரித்துள்ளன. ஆனால், வர்க்க சக்திகளின் பலாபலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இது போதாது. போராட்டங்களின் போக்கிலே, இந்த வர்க்கங்களின் பலாபலத்தை மாற்றுவதில் நமது வெற்றியைப் பொறுத்தே மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நமது போராட்டமே இருக்கிறது என்று பரிசீலிக்கிறது.
அதாவது, முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் உள்ள வெகுஜனப் பகுதி, அக்கட்சிகளை விட்டு மாற்றுத் தலைமையின் பின் அணி திரளவில்லை. எனவே அச்சக்திகளை எதிர்த்து, ஒரே மாற்றாக உள்ள இடதுசாரி ஜனநாயக சக்திகளின் அணியை உருவாக்க வேண்டும். மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வர்க்க சக்திகளின் சேர்க்கை நாம் தலைமை தாங்கி நடத்தும் அணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டது. கேரளாவில் நமது அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் இடையே வர்க்க சக்திகளின் சேர்மானம் இருந்தது. மற்ற மாநிலங்களில் நிலைமை இவ்வாறாக இருக்கவில்லை. இது குணரீதியான வேறுபாடாகும். இந்தியாவெங்கும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த அறைகூவல் 10வது மாநாட்டில் அளிக்கப் பட்டது.
அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அன்று காங்கிரஸ் – ஜனதாவின் பின் தேசிய அளவில் வெகுமக்கள் பிரிந்து நின்றார்கள் என்றால், இன்று காங்கிரஸ்-பா.ஜ.க. மற்றும் மாநில முதலாளித்துவ கட்சிகளின் பின் பிரிந்து நிற்கின்றனர். 90களிலிருந்து ஏகாதிபத்தியத்தின் தற்கால முகமான நவீன தாராளமயக் கொள்கைகள் தம் பங்குக்கு மக்களின் வாழ்நிலையை சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில், இவற்றை எதிர்த்த நமது போராட்டங்கள் அதிகரித்தாலும் கூட, வர்க்க சேர்க்கையில் நமக்கு சாதகமாக இன்னும் மாற்றம் ஏற்படாத சூழல் தொடர்கிறது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளில் பலம் சரிந்துள்ளது. அன்றைக்கு குணரீதியாக மாறுபட்ட நிலை இருந்த மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவைத் தாண்டி, ஓர் நீண்ட இடைவெளியில் வேறு எங்கும் இடது ஜனநாயக அணி உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப் படவில்லை. எனவே, அன்றைய காலத்தை விட, மேற்கூறிய நிலைமைகள், இடது ஜனநாயக அணியை உருவாக்குவதை சிக்கலாக்கி இருக்கின்றன. அதே சமயம் அதன் தேவையை அதிகப்படுத்தியும், அவசரப்படுத்தியும் உள்ளன என்பதே உண்மை.
Leave a Reply