ஸ்தாபன ப்ளீனம் சிறப்புக் கட்டுரை:
தமிழில்: அன்வர் உசேன்
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்தை வலுப்படுத்துவதன் மீதான கவனம், அனைத்து காலகட்டங்களிலும் அந்தப் புரட்சிகர கட்சிக்கு இருக்க வேண்டும். கட்சியின் முக்கியமான அரசியல் கடமைகள் மற்றும் திசைவழிதான் கட்சியின் ஸ்தாபன அமைப்பு முறை என்ன என்பதையும் அதன் முன்னுரிமைகள் எவை என்பதையும் தீர்மானிக்கின்றன. இக்கடமைகளும். அரசியல் திசைவழியும் திட்டவட்டமான காலத்தில் நிலவும் திட்டவட்டமான சூழல்களைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இவை அரசியல் நடைமுறை உத்தியில் உள்ளடங்கும்.
தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன கோட்பாடுகள் மற்றும் முறைகளை இம்மியளவும் பிசகாமல் பற்றி நிற்கும் அதே நேரத்தில் தற்கால கடமைகளை நிறைவேற்றிட தனது ஊழியர்கள் அனைவரையும் செயலாற்ற வைக்கும் திறனைப் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தத்தில். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனம் உயிரோட்டமான இயங்குசக்தி உடையதாக இருக்க வேண்டும்.
“திட்டவட்டமான சூழல்கள் பற்றி திட்டவட்டமான ஆய்வு செய்வதுதான் இயக்கவியலின் உயிர்நாடி” எனும் லெனினிய கருத்தாக்கத்தை நாம் பல ஆண்டுகளாக திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறோம். இது பல அம்சங்களைக் கொண்டதாகும். முதலில் திட்டவட்டமான சூழல் எது என்பதை சரியாக இனங்காண வேண்டும். அதன் அடிப்படையில் அந்த சூழல் வர்க்கப்போராட்டத்தின் மீதும் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பது குறித்து முறையான மதிப்பீடு செய்ய வேண்டும். மார்க்சியத்தை அறிவியல் பூர்வமாகப் பொருத்துவதன் மூலம்தான் திட்டவட்டமான சூழல்கள் பற்றி திட்டவட்டமான ஆய்வு சரியான முறையில் செய்ய இயலும் என்பதைக் கூறத்தேவையில்லை.
திட்டவட்டமான சூழல் குறித்து ஆய்வு அதன் அடிப்படையில் சரியான மதிப்பீடு இரண்டுமே ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத அம்சங்கள் ஆகும். திட்டவட்டமான சூழல் குறித்த மதிப்பீட்டில் தவறுகள் இருக்குமானால் இயற்கையிலேயே அதனைத் தொடர்ந்து செய்யப்படும் ஆய்வும், முடிவுகளும் தவறாகவே அமையும்.
மேலும் திட்டவட்டமான சூழல் குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து செய்யப்படும் ஆய்வு என்பது அறிவியல் பூர்வமான புறநிலை ஆய்வாக வேண்டும். அதாவது (புறச்சூழலின் உண்மைகளை முழுவதுமாக பிரதிபலிக்காத அல்லது தவறாக பிரதிபலிக்கும்) அகநிலை கருத்துக்களின் தாக்கம் அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களின் தாக்கம் இன்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும். எனவே “திட்டவட்டமான சூழல் பற்றி திட்டவட்டமான ஆய்வு” எனும் லெனினிய கருத்தாக்கத்தை அமுலாக்கிட ஒரு கறார் தன்மையுடைய அறிவியல் பூர்வமான மார்க்சிய ஆய்வுமுறை பின்பற்றப்பட வேண்டும்.
20ம் நூற்றாண்டின் வெற்றிகரமான சோசலிசப் புரட்சிகளின் வரலாறு ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வெளிப்படுத்துகிறது. அது என்னவெனில் இப்புரட்சிகளை வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் “அகநிலை வாதத்திற்கு” எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தன என்பதுதான்! கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் தொடர்ந்து கொண்டுள்ள போராட்டம் இது! அது மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் உள்ளுணர்விலும் தொடரும் போராட்டமாக இது உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்-ஸ்தாபன செயல் வல்லமையை தீர்மானிக்கும் ஒரு காரணியாகவும் “அகநிலை வாதத்திற்கு” எதிரான போராட்டம் திகழ்கிறது.
திட்டவட்டமான சூழல் பற்றி தவறான மதிப்பீடு செய்தால், அது தவறான அரசியல் நிலைபாட்டிற்கும் அதனைத் தொடர்ந்து தவறான உத்திக்கும் இட்டுச்செல்லும். அரசியல் நடைமுறை உத்தியை அறிவியல் அடிப்படையில் சரியாக உருவாக்கினாலும் அதன் அமலாக்கம் என்பது கட்சி ஸ்தாபனத்தின் வலுவைப்பொறுத்தே சாத்தியமாகும். ஒரு முறை ஸ்டாலின் அவர்கள் அற்புதமாக கூறியபடி “அரசியல் நிலைப்பாடு 100% சரியாக இருக்கலாம். ஆனால் இந்த சரியான அரசியல் நிலைபாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்த ஸ்தாபனம் இல்லையெனில் அந்த 100% சரியான நிலைபாட்டுக்கு எந்த அர்த்தமும் இல்லை.”
மக்களின் அரசியல் உணர்வை வளர்ப்பதற்கும் அவர்களைப் புரட்சிகர எழுச்சிக்குத் தயார்படுத்துவதற்கும் தேவையான கட்சி பணிகளை நடைமுறைப்படுத்துவதில் கட்சி ஸ்தாபனம் மிக முக்கிய பங்கை ஆற்றுகிறது. கட்சி ஸ்தாபனத்தின் பல்வேறு அம்சங்களில் அகநிலைவாதப் போக்கை எதிர்த்த இடைவிடாத போராட்டம் என்பது ஒரு மிக முக்கியமான பணி ஆகும். திட்டவட்டமான சூழலை மதிப்பீடு செய்வது மற்றும் அதனை ஆய்வு செய்வது ஆகிய இரண்டிலுமே அகநிலைவாதப் போக்கை எதிர்த்த போராட்டம் முக்கியமானதாகும். இதன் அடிப்படையில்தான் வர்க்கப் போராட்டத்தைக் கூர்மையாக்கிட மேலும் மேலும் மக்களைத் திரட்டுவது சாத்தியமாகும்.
தொகுத்துக் கூறுவதானால் திட்டவட்டமான சூழல் பற்றிய சரியான புரிதலுக்கு, வர்க்கப் போராட்டத்தை முன்னுக்கு கொண்டு செல்வதற்கான சரியான அரசியல் உத்தியை உருவாக்குவதற்கு, நமது குறிக்கோள்களை வெல்வதற்குத் தேவையான சரியான கட்சி ஸ்தாபன முறைகளுக்கு அகநிலைவாதப் போக்கை எதிர்த்த போராட்டம் தேவை. எந்த ஒரு மட்டத்திலும் அகநிலைவாதம் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஆபத்து உண்டு.
அகநிலைவாதம் – ஒரு பொருத்தமற்ற ஆய்வுமுறை
சீன புரட்சியின் பொழுது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு பள்ளியைத் தொடங்கிவைத்து மாவோ கூறினார்:
“அகநிலைவாதம் ஒரு பொருத்தமற்ற கற்றல் ஆய்வுமுறை. இது மார்க்சிய- லெனினியத்திற்கு எதிரானது. கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பொருத்தமற்றது. நமக்குத் தேவை மார்க்சிய- லெனினிய கற்றல் ஆய்வுமுறை. கற்றல் ஆய்வுமுறை என்பதன் பொருள் பள்ளிகளில் கற்பது மட்டுமல்ல; கட்சியில் கற்பதும் தான். இது கட்சியின் உயர் குழுக்களில் உள்ள தோழர்களின் சிந்தனை முறை பற்றிய பிரச்சனை; அவர்கள் மட்டுமல்ல கட்சியின் அனைத்து ஊழியர்களும் அனைத்து உறுப்பினர்களும் எவ்வாறு சிந்திக்கின்றனர் எவ்வாறு ஆய்வு மேற்கொள்கின்றனர் என்பது பற்றிய பிரச்சனை; மேலும் இது மார்க்சிய- லெனினியம் குறித்த நமது அணுகுமுறை பற்றிய பிரச்சனை; தமது பணிகள் குறித்த கட்சி உறுப்பினர்களின் அணுகுமுறை குறித்த பிரச்சனை; எனவே மார்க்சிய- லெனினிய கற்றல் ஆய்வுமுறை என்பது அசாதாரணமான முதன்மை முக்கியத்துவம் பெற்ற பிரச்சனை ஆகும்.”
மாவோ மேலும் கூறுகிறார்:
“கட்சிப்பள்ளியில் உள்ள நமது தோழர்கள் மார்க்சிய சித்தாந்தத்தை உயிரற்ற வறட்டுச்சூத்திரமாகக் கருதக்கூடாது. மார்க்சிய சித்தாந்தத்தில் நாம் நிபுணத்துவம் பெற வேண்டும். அதனை நடைமுறையில் பொருத்த வேண்டும். அதாவது மார்க்சிய சித்தாந்தத்தை நடைமுறையில் பொருத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அதில் நாம் நிபுணத்துவம் பெற வேண்டும்.
மார்க்சிய- லெனினிய அணுகுமுறையை ஓரிரு நடைமுறை பிரச்சனைகளில் பொருத்தித் தெளிவு பெற முடிந்தால் ஓரளவு சாதனை செய்துவிட்டதாக நீங்கள் பாராட்டப்பட வேண்டும். நீங்கள் மேலும் மேலும் கூடுதலான பிரச்சனைகளில் இதன் மூலம் ஆழமாகத் தெளிவு பெற்றால் உங்கள் சாதனை மேன்மேலும் அதிகரிக்கும்.”
நமது கட்சிப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிறந்தவர்கள் அல்லது இல்லை என்பதை வகைப்படுத்துவதில் ஒரு விதியை உருவாக்கவேண்டும். மார்க்சிய- லெனினியத்தைக் கற்ற பிறகு அவர்கள் சீனப் பிரச்சனைகளை எவ்வாறு ஆய்வு செய்கின்றனர்; பிரச்சனைகளை அவர்கள் தெளிவாக ஆய்வு செய்கின்றனரா இல்லையா; அல்லது பிரச்சனைகளை ஆய்வு செய்யவே இல்லையா என்பதன் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்த வேண்டும்.”(மாவோ தேர்வு நூல் 3 பக். 36-38)
லெனின் அவர்களின் கோட்பாடுகளின் அடிப்படையில், மாவோ மேற்கண்ட பிரச்சனைகளை விளக்குகிறார். லெனினின் தத்துவார்த்த ஆய்வுகள் அடிப்படையில் மட்டுமல்ல; எந்த ஒரு திட்டவட்டமான சூழல் குறித்தும் எப்படி சரியான முடிவுகளுக்கு வருவது என்ற லெனினின் ஆய்வு முறையையும் மாவோ அடிப்படையாகக் கொள்கிறார். திட்டவட்டமான சூழல் குறித்த ஆய்வு என்பது தொழிலாளிவர்க்க இயக்கத்தில் உருவாகும் அனைத்து திரிபுகளையும் எதிர்த்து வெற்றிகரமாகப் போராட மிகவும் தேவையாகும்.
இமானுவேல் காண்ட் எனும் தத்துவ அறிஞரின் கோட்பாடுகளைத் தனது “ஹெகலின் தர்க்க அறிவியல் குறித்த மதிப்பீடு” எனும் அற்புதமான படைப்பில் விவாதிக்கும் பொழுது லெனின் அவர்கள், அகநிலைவாதத்திற்கு எதிரான அதாவது “அனுபவ விவரங்களின் ஒரு பக்கத்தை மட்டுமே” எடுத்துக்கொள்வதற்கு எதிரான போராட்டத்தின் தேவை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“நியாயமான அனுபவத்தை அதன் ஒட்டுமொத்தத் தன்மையுடன் அனைத்து கோணங்களிலிருந்தும் எடுத்துக்கொள்ளாமல் தனது அனுமானம் அல்லது புனைவுகளுக்குப் பயன்படும் விதத்தில் மட்டுமே அதனைப் பொருத்துவது; திட்டவட்டமான அனுபவத்தை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அனுமானங்களுக்கு உட்படுத்துவது; கோட்பாட்டின் அடித்தளத்தை நீர்த்துபோகச் செய்வது; அவ்வாறு நீர்த்துப்போன கோட்பாட்டிற்கு உகந்த வகையில் மட்டுமே (கருத்துகளை) வெளிப்படுத்துவது”(லெனின் திரட்டு நூல் தொகுதி 38/ தத்துவார்த்த குறிப்புகள் பக். 210) இத்தகைய போக்குகள் நிராகரிக்கப்படவேண்டும்.
இந்திய சூழல்களை சரியாக மதிப்பாய்வு செய்தல்:
மார்க்சிய-லெனினியத்தை அறிவியல் பூர்வமாக திட்டவட்டமான இந்திய சூழல்களுக்கு பொருத்தியதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) உதயமாகிட அடித்தளத்தை உருவாக்கியது. 20வது கட்சி காங்கிரசின் “சில சித்தாந்த பிரச்சனைகள் குறித்த தீர்மானம்” குறிப்பிடுகிறது:
“ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைத் திருத்தல்வாத திரிபு ஆட்டிப்படைத்தது. இந்தத் திருத்தல்வாதம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் இந்திய மக்களின் (சுரண்டலிலிருந்து) விடுதலையையும் தடம்புரளச் செய்துவிடும் ஆபத்து கடுமையாக இருந்தது. இந்தத் திரிபை எதிர்த்து நடத்தப்பட்ட உக்கிரமான போராட்டத்தின் அடித்தளத்தில்தான் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது. ஒரு கடுமையான உட்கட்சி சித்தாந்தப் போரட்டத்திற்குப் பிறகு திருத்தல்வாதத்திலிருந்து தீர்மானகரமான முறிப்பை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்படுத்தியது.
“இந்திய புரட்சியின் இலக்கு மற்றும் நடைமுறை உத்தி என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த உட்கட்சி சித்தாந்தப் போரட்டத்தின் மையக்கருவாக இருந்தது. மேலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் கலவை என்ன என்பதும் அவற்றின் பாத்திரம் என்ன என்பது பற்றிய மதிப்பாய்வும் இந்த உள்கட்சிப் போராட்டத்தின் மையமாக இருந்தது. இப்போராட்டத்தின் விளைவாக மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர தத்துவக்கோட்பாடுகளை உயர்த்திப்பிடிக்கவும், இந்தியாவின் திட்டவட்டமான சூழலுக்கு ஏற்ப அக்கோட்பாடுகளைப் பொருத்திடும் உறுதியுடனும் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது.
“இதன் பிறகு விரைவிலேயே இடதுசாரி அதிதீவிர திரிபையும் கட்சி எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்தத் திரிபு கம்யூனிஸ்ட் இயக்கத்தை தடம் புரளச்செய்யும் ஆபத்தை மீண்டும் உருவாக்கியது. இடதுசாரி அதிதீவிரவாத்த்திற்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்துடன் கொலைவெறித் தாக்குதல்களையும் இணைத்து சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்போராட்டத்தில் நமது பல ஊழியர்கள் இன்னுயிரை ஈந்து தியாகிகள் ஆயினர்.
“இந்தத் திரிபுகளுக்கு எதிரான போராட்டங்களில் கிடைத்த வெற்றியும் இந்திய மக்களின் வீரம் செறிந்த தீவிரமான போராட்டங்களின் பாரம்பர்யத்தின் சொந்தமும் மார்க்சிஸ்ட் கட்சியை மிகப்பெரிய இடதுசாரி சக்தியாகவும், கம்யூனிஸ்ட் கட்சியாகவும் உருவாக்கியுள்ளது. இந்த சித்தாந்த போராட்டங்கள் நமது கட்சியின் மார்க்சிய- லெனினிய நிலைபாடுகள்தான் சரியானவை என்பதை ஆணித்தரமாக நிலை நாட்டியுள்ளன.
“ மார்க்சிய – லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தையும், தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தையும் உயர்த்திப்பிடிக்க மார்க்சிஸ்ட் கட்சி சித்தாந்த திரிபுகளுக்கு எதிராக உறுதியான தீவிரமான போராட்டத்தை நடத்தியது. உள்நாட்டிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் சித்தாந்த திரிபுகள் வெளிப்பட்டனவோ அப்பொழுதெல்லாம் கட்சி சித்தாந்த போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. உலக அரங்கில் கம்யூனிஸ்ட் ஜாம்பவான்களாக திகழ்ந்த சோவியத் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் நமது கட்சி (சித்தாந்தரீதியாக) போரிட்டது.
“இந்த சித்தாந்த போராட்டங்கள்தான் நமது கட்சியை மிக வலுவான சக்திவாய்ந்த இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கமாக உருவாகிட எஃகு போன்ற உறுதியை அளித்தது. அது மட்டுமல்லாது இந்த சித்தாந்த போராட்டங்கள்தான் இந்திய தேசிய அரசியலின் திசைவழியின் மீது செல்வாக்கு மற்றும் ஆளுமையை செலுத்திடும் திறனை நமது கட்சிக்கு அளித்தது.. (கோழிக்கோடு தீர்மானம் பத்தி 1.5-1.8).
இந்தியப் புரட்சியின் கட்டம்; சுதந்தரத்திற்கு பிந்தைய ஆளும் வர்க்கங்களின் பாத்திரம்; அவற்றுக்கு எதிர்நிலையில் இருந்த ஆளும் வர்க்கங்களின் கலவை; தன்மை ஆகியவை குறித்து தேசத்தில் அன்று நிலவிய திட்டவட்டமான சூழல்களின் ஆய்வுக்கு மாறாக முன்கூட்டியே உருவாக்கப்பட்ட அனுமானங்களையும் புனைவுக்கோள்களையும் பற்றி நின்றதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திரிபுகள் உருவாகிட (ஏனைய காரணிகள் இருந்தாலும்) முக்கிய காரணமாக இருந்தது.
ரஷ்ய அனுபவத்திலிருந்து கற்றல்
ரஷ்யப் புரட்சியின் பொழுது (அகநிலைவாத) இந்தப் போக்குகளை லெனின் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “தொழிலாளிவர்க்க இயக்கத்தில் நிலவும் பல்வேறு போக்குகளின் வலிமை குறித்த புறநிலை உண்மை தரவுகள்(தகவல்கள்)” எனும் தனது படைப்பில் பிளக்னவ் மற்றும் டிராட்ஸ்கியின் அகநிலைவாதக் கருத்துகளுக்கு எதிராக வாதிடும் பொழுது லெனின் கூறுகிறார்: “ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள்(பிளக்னவ் மற்றும் டிராட்ஸ்கி) தங்களது கருத்துக்களை, சூழ்நிலை பற்றிய தமது மதிப்பீடுகளை மற்றும் தமது திட்டங்களை தொழிளாளர்களின் விருப்பம் எனவும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தேவை எனவும் முன்வைக்க முயல்கின்றனர்.” (லெனின் நூல் திரட்டு 20 பக்: 382)
புரட்சியின் கட்டங்கள் பற்றிய கோட்பாடுகள் என்பதே லெனின் அவர்கள் திட்டவட்டமான சூழலை, புறநிலை உண்மையோடு பகுப்பாய்வு செய்ததால்தான் உருவானது. “உத்திகள் பற்றிய கடிதம்” எனும் ஆவணத்தில் ரஷ்ய புரட்சி இயக்கத்தில் இருந்த வர்க்கத் திரிபுகளை எதிர்த்துப் போராடும் பொழுது லெனின் கூறுகிறார்: “முதலாளித்துவ ஜனநாயக புரட்சி இன்னும் முழுமை அடையவில்லை. விவசாயிகள் இயக்கம் தன் இறுதி கட்டத்திற்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியைத் தவிர்த்துவிட்டு நேரடியாக சோசலிஸ்ட் புரட்சியை அடைய விரும்புவதன் மூலம் நாம் அகநிலைவாதத்தினுள் விழும் ஆபத்து இல்லையா?” என வினவுகிறார் . (லெனின் நூல் திரட்டு பாகம் 24 பக்: 48).
திட்டவட்டமான சூழல்கள் குறித்து சரியான மதிப்பாய்வு செய்திடும் நமது முயற்சிகள் லெனின் கூற்றுகளோடு பொருந்துகின்றதா என்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம். அகநிலைவாதத்தை எதிர்த்த போராட்டம் என்பது இடைவெளியின்றி தொடரும் போராட்டம் ஆகும். புறச்சூழலை பொருத்தமாகப் பகுப்பாய்வு செய்வதற்கு பதிலாக, முன்கூட்டியே உருவாக்கப்பட்ட நமது அகநிலை தத்துவார்த்த கட்டுமானங்களுக்குள் அந்த சூழலைத் திணிப்பது எனும் நிகழ்வு சில சமயங்களில் நடந்துள்ளது. இது தவறான முடிவுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது.
இதற்கு, பல உதாரணங்கள் உள்ளன. 2008ம் ஆண்டு மற்றும் 2009ம் ஆண்டில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தப் பிரச்சனை மற்றும் பின்னர் நாம் உருவாக்கிய தேர்தல் உத்தி குறித்த நமது கட்சியின் அனுபவத்தை ஒரு உதாரணமாகப் பரிசீலனை செய்வோம். 20வது கட்சி காங்கிரசின் அரசியல்-ஸ்தாபன அறிக்கை கூறுகிறது:
“ (UPA) அரசாங்கம் அணுசக்தி முகமையுடன் 2007 அக்டோபர்-நவம்பரில் பேச்சுவார்த்தைக்கு சென்ற பொழுதே ஆதரவை திரும்பப்பெறுவது எனும் முடிவை அமுலாக்கியிருக்க வேண்டும். ஒப்பந்தத்தைத் தடுப்பதற்கு வாய்ப்பு இருந்தது எனில் அது அந்த சமயத்தில்தான் இருந்தது. அப்பொழுது ஆதரவை திரும்பப்பெறாதது என்பது தவறு! இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்தும், அமெரிக்காவுடன் கேந்திரமான உறவுக்கும் பிரதமரும் காங்கிரஸ் தலைமையும் உறுதியாக இருந்ததன் பின்னணியில் அவர்கள் அணு ஒப்பந்தத்தை இழப்பதைவிட இடதுசாரிகளுடன் முறித்துக் கொள்வதைத் தேர்வு செய்தனர். இது குறித்த ஆளும் வர்க்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திறனையும், தீர்மானத்தையும் அரசியல் தலைமைகுழுவும் மத்தியக்குழுவும் குறைத்து மதிப்பிட்டன.”
“நாம் நமது வலுவையும் (அரசியல்) நிகழ்வுகள் மீது நாம் செலுத்தும் நமது செல்வாக்கு குறித்தும் மிகைப்படுத்தி மதிப்பிட்டோம். அணுசக்தி முகமையுடன் பேச்சு வார்த்தைக்கு அனுமதித்துவிட்டு பின்னர் அந்த ஒப்ப்ந்தத்தை நடைமுறைபடுத்துவதில் முன் செல்லாமல் காங்கிரஸ் நிற்கும் என நாம் புரிந்து கொண்டது தவறு!(கோழிக்கோடு தீர்மானம்)
அதே போல தேர்தல்கள் குறித்து அரசியல்-ஸ்தாபன தீர்மானம் கூறுகிறது:
“பரிசீலனை இரண்டு அம்சங்களைக் கூர்மையாக சுட்டிக்காட்டுகிறது. முதல் அம்சம் என்னவெனில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் மூன்று அல்லது நான்கு மாநிலங்களில் உருவான அணிசேர்க்கை என்பது தேசிய அளவிலான ஒரு தேர்தல் மாற்றை முன்நிறுத்துவதற்கு ஒரு அடிப்படையாக இருக்க முடியாது. இரண்டாவதாக நாம் ஒரு “மாற்று மதச்சார்பின்மை அரசாங்கம்” அமைப்பதற்கான முழக்கத்தை முன்வைத்திருக்கக்கூடாது. அதற்கு பதிலாக காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத மாற்றை வலுப்படுத்த வேண்டும் எனும் முழக்கத்துடன் நின்றிருக்க வேண்டும்.” (கோழிக்கோடு தீர்மானம்)
இன்னொரு உதாரணத்தையும் எடுத்துக்கொள்வோம். மேற்கு வங்கத்தில் நானோ கார் திட்டத்திற்கு சிங்கூரிலும், இரசாயன ஆலைகள் அமைத்திட நந்திகிராமத்திலும் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமான நிகழ்வுகளை சரியாகக் கையாளவில்லை எனவும் தவறுகள் நடந்தன என்பதையும் கட்சியின் மத்தியக் குழுவும் கட்சி காங்கிரசும் சுயவிமர்சனத்துடன் ஏற்றுக்கொண்டன. மேற்கு வங்கத்தில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை முதல் முறை அல்ல, அதேபோல் இது இறுதியானதும் அல்ல. அப்படியானால் என்ன பிரச்சனை ?
சிங்கூரில் நிலம் கையகப்டுத்துவதற்கு முன்பு மார்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் வழக்கமாக செய்கின்ற நுட்பமான மற்றும் முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை. நில உரிமையாளர்கள் அனைவருடனும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்களையும் விவாதிப்பது; அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற இழப்பீடு மற்றும் நிலம் இழப்பவர்களின் மறுநிர்மாணம் ஆகியன எதுவும் முழுமையாக விவாதிக்கப்படவில்லை. சிங்கூரில் இத்தகைய செயல்முறைகள் செய்யாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் நாம் பெற்ற மிகப்பெரிய வெற்றி ஆகும். 294 தொகுதிகளில் நாம் 235ல் வென்றோம். இடது முன்னணி 50.18% வாக்குகளை பெற்றிருந்தது.
மேற்கு வங்கத்தில் விரைவான தொழில்மயம் என்பதை இத்தேர்தலில் ஒரு மிக முக்கியமான பிரச்சனையாக இடது முன்னணி முன்வைத்தது. இத்தேர்தலில் நாம் பெற்ற மிகப்பெரிய வெற்றி என்பது தொழில்மயம் குறித்து நாம் முன்வைத்த திட்டத்தை மக்கள் அங்கீகரித்துவிட்டனர் எனும் முடிவுக்கு இட்டுச் சென்றது, அந்த அனுமானத்தில் இடது முன்னணி நிலம் கையகப்படுத்தும் செயல்களில் முன் சென்றது.
எனினும் லெனின் கூறியது போல பிரச்சனையின் ஒரு பக்கத்தை மட்டுமே நாம் பார்த்தோம். இன்னொரு பக்கத்தின் உண்மை என்னவெனில் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்பொழுது நமது கட்சியின் வாக்கு சதவீதம் 38.57%லிருந்து 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 37.13%ஆக குறைந்தது. நான்கில் மூன்று பங்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு சதவீதத்தில் சிறு வீழ்ச்சி இருந்தது. இது முறையாக உள்வாங்கப்பட்டிருக்குமானால் சிங்கூரில் நிலம் எடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய ஆய்வு மற்றும் சம்பந்தப்பட்ட மக்களுடன் விவாதிப்பது குறித்த முக்கியத்துவம் உணரப்பட்டிருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக இந்த அம்சம் கவனிக்கப்படவில்லை. புறச்சூழல் உண்மை அதன் ஒட்டுமொத்தத் தன்மையுடன் கவனிக்கப்படவில்லை. கூடுதலாக வேறு சில தவறுகளும் ஏற்பட்டன. இதனால் நாம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டது அதிகமானது.
மேலும் வேறு சில தேசிய மற்றும் மாநில பிரச்சனைகளும் மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது முன்னணியையும் கூடுதலாகத் தனிமைப்படுத்தின. மதவெறி மற்றும் அடிப்படைவாத சக்திகளிலிருந்து மாவோயிஸ்டுகள் வரை கோட்பாடற்ற கும்பலாக ஒன்று சேர்ந்ததும், அதன் ஒரு பகுதியாக 2009 மற்றும் 2011 தேர்தல்களில் வன்முறை அரசியல் மேலோங்கியதும் கட்சிக்கு மிகப்பெரிய தேர்தல் பின்னடைவை ஏற்படுத்தியது. 2006ல் இடது முன்னணிக்கும் இடது முன்னணியின் அனைத்து எதிர்ப்பாளர்களுக்கும் வாக்கு ஆதரவு என்பது கிட்டத்தட்ட சமமாக இருந்த சூழலில் நம்நாட்டில் நிலவும் தேர்தல் நடைமுறை காரணமாக நாம் அதிக அளவிற்கான தொகுதிகளை இழந்தோம்.
மத்தியக்குழுவிலும் அகில இந்திய மாநாட்டிலும் சுயவிமர்சனத்துடன் குறிப்பிட்டது போல நிலப்பிரச்சனையை கையாண்டதில் ஏற்பட்ட தவறுகள் மட்டுமின்றி “உண்மை நிலையின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வதற்கு பதிலாக ஒரே ஒரு அம்சத்தை மட்டும் பரிசீலனை செய்தது என்பது” பின்னர் தவறான நடைமுறைகளுக்கும் தவறான முடிவுகளுக்கும் இட்டுச்சென்றது.
அனுமானம் மற்றும் புனைவுகளுடன் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அகநிலை முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல் புறச்சூழல் உண்மை குறித்து பொருத்தமான மதிப்பீடு உருவாக்குவது என்பது கட்சி ஸ்தாபனத்தின் செயல் திறனை வடிவமைப்பதில் மிக முக்கியக் கூறு ஆகும். இன்றைய கடமைகளை நிறைவேற்றிட இந்த செயல்திறன் மிக அவசியம்!
சீன அனுபவம் பற்றிய சில உதாரணங்கள்
சீனப்புரட்சியின் அனுபவம் (ரஷ்யப்புரட்சியிலிருந்து) காலம் மற்றும் சூழமைவிலிருந்து மாறுபட்டிருந்தாலும் விலை மதிப்பற்ற படிப்பினைகளைத் தருகிறது. மாவோ அவர்களின் “நடைமுறை குறித்து” எனும் உரையை வெளியிட்ட பொழுது மக்கள் வெளியீட்டகத்தின் (People’s Publishing House) ஆசிரியர் குழு கீழ்க்கண்டவற்றை குறிப்பிட்டது:
“நமது கட்சியில் வறட்டுச் சூத்திரவாதிகள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் நீண்ட காலத்திற்கு சீனப் புரட்சியின் அனுபவத்தை நிராகரித்தவண்ணம் இருந்தனர். மார்க்சியம் என்பது வறட்டு சூத்திரம் அல்ல, அது நடைமுறைக்கு வழிகாட்டி எனும் உண்மையை மறுத்து வந்தனர். மார்க்சிய ஆவணங்களிலிருந்து சில வார்த்தைகளையும் சில சொற்றொடர்களையும் அவற்றின் சூழலிலிருந்து பிரித்தெடுத்து அவற்றை வாய்ஜாலமாகவும் எழுத்துகளிலும் ஆடம்பரப்படுத்தி மக்களிடம் தமது மேதாவிலாசத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்தனர்.
மறுபக்கத்தில் தமது அனுபவம் மட்டுமே உண்மை, மற்றவர்களின் அனுபவத்தையோ அல்லது புரட்சி இயக்கத்தின் பொதுவான அனுபவத்தையோ கவனிக்க வேண்டியதில்லை என்று எண்ணிய கணிசமான “அனுபவவாதிகளும்” இருந்தனர். இவர்கள் நீண்டகாலத்திற்கு தமக்கு கிடைத்த சொற்ப அனுபவத்துடன் நின்று கொண்டனர். புரட்சிகர நடைமுறைக்கு மார்க்சிய தத்துவக் கோட்பாடுகளின் வழிகாட்டுதல் அவசியம் என்பதை உணரவில்லை. புரட்சியின் ஒட்டுமொத்தத் தன்மையையும் அவர்கள் கவனிக்கவில்லை. கடுமையாக உழைத்தாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டனர்.
இந்த இரண்டுவகை தோழர்களின் தவறான கருத்துகள், குறிப்பாக வறட்டுச் சூத்திரவாதிகளின் தவறுகள் 1931-34 காலகட்டத்தில் சீனப்புரட்சிக்கு ஏராளமான நட்டத்தை உண்டாக்கியது. அப்படியிருந்தும் வறட்டுச் சூத்திரவாதிகள் தம்மை மார்க்சிஸ்டுகள் என்று கூறிக்கொண்டு ஏராளமான தோழர்களைக் குழப்பிவந்தனர்.
வறட்டுச் சூத்திரவாதிகள் மற்றும் அனுபவவாதிகள் ஆகிய இரு பகுதியினரின் அகநிலைவாதத் தவறுகளை, குறிப்பாக வறட்டுச் சூத்திரவாதிகளின் அகநிலைவாதத் தவறுகளை தோலுரித்துக் காட்டவே “நடைமுறை குறித்து” எனும் ஆவணம் எழுதப்பட்டது.
இந்த ஆவணம் பகுப்பாய்வு அறிவிற்கான மார்க்சிய கோட்பாடுகளின் கோணத்திலிருந்து எழுதப்பட்டதாகும். “நடைமுறை குறித்து” என இதற்கு ஏன் பெயரிடப்படது எனில் வறட்டுச் சூத்திரவாதிகள் நடைமுறை பணிகளின் முக்கியத்துவத்தை உணர மறுக்கின்றனர். எனவே அவர்களின் தவறுகளைத் தோலுரித்துக்காட்டுவதற்காகவே “நடைமுறை குறித்து” எனும் பெயர் இடப்பட்டது.”
அகநிலைவாதத் தவறுகளுக்குப் பலியாவதை தடுக்க கட்சித் தோழர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மாவோ விளக்குகிறார்:
“ஒரு மனிதன் தனது பணியில் வெற்றி பெற வேண்டும் எனில், தான் எதிர்பார்த்த முடிவுகளை அடைய வேண்டும் எனில், அவர் தனது சிந்தனைகளைப் புற உலகின் விதிகளோடு ஒத்திசைவுக்குக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு அவரது சிந்தனைகளும் புற உலகின் விதிகளும் ஒத்திசையவில்லை எனில் அவர் தனது நடைமுறையில் தோல்வி அடைவார். தோல்விக்குப் பிறகு அவர் படிப்பினைகளைப் பெறுகிறார். பிறகு, தனது சிந்தனைகளைப் புற உலகின் விதிகளோடு ஒத்திசைவுக்கு கொண்டுவருகிறார். தோல்வியை வெற்றியாக மாற்றுகிறார். இதுவே “தோல்விதான் வெற்றிக்கு தாய்” எனவும் “விழுதல் அறிவில் எழுதல்” என்றும் கூறப்படுகிறது.” (மாவோ தேர்வு நூல்கள் தொகுதி 1 பக். 297-297)
இன்னொரு முக்கிய கருத்தையும் மாவோ முன்வைக்கிறார். கட்சியின் கடமைகளை அமுல்படுத்தும் பொழுது தோழர்கள் தவறுகளை செய்யலாம். தவறுகளை செய்வது தவறல்ல. ஆனால் தவறுகளிலிருந்து படிப்பினைகள் பெறாமல் இருப்பது தவறு. அந்தத் தவறு ஏன் ஏற்பட்டது எனப் புரிந்துகொள்ளாமல் இருப்பது தவறு; அத்தகைய தவறு மீண்டும் ஏற்படாமல் இருக்க உத்தரவாதம் செய்யாமல் இருந்தால் அது தவறு; இறுதியாக தவறை சரி செய்யாமல் இருப்பதும் தவறான புரிதலுடன் நீடிப்பதும் தவறு.
ஸ்டாலின் ஒருமுறை புகழ்பெற்ற கூற்றை முன்வைத்தார்; “எவர் ஒருவர் பணியே செய்யாமல் முடங்கியுள்ளாரோ அவர்தான் தவறுகளே செய்ய மாட்டார்.” தமது பணியை செய்யும்பொழுது கம்யூனிஸ்டுகள் தவறுகளை செய்ய நேரிடலாம். ஆனால் முக்கியமானது என்னவெனில் அந்தத் தவறை சரி செய்துகொள்வதும் அதே தவறு மீண்டும் நிகழாமல் இருப்பதை உத்தரவாதம் செய்வதும்தான்!
ஒவ்வொரு தோழரும் தனக்கு இடப்பட்ட கடமையை செய்வதற்கு முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இது தெளிவாக்குகிறது. மாவோ மேலும் கூறுகிறார்; ”என்னால் செய்ய இயலுமா எனத்தெரியவில்லை” இப்படி கூறப்படுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஏன் இந்தத் தயக்கம்? கொடுக்கப்பட்ட பணியின் உள்ளடக்கம் அல்லது அப்பணியின் சூழல் ஆகியன குறித்து அத்தோழருக்கு சரியான புரிதல் இல்லை, அல்லது அப்பணி குறித்து அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை அல்லது அப்பணி குறித்த புறச் சூழலின் விதிகள் அவருக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன.
அப்பணி குறித்த விளக்கமான ஆய்விற்குப் பிறகு அத்தோழருக்கு நம்பிக்கை வரலாம். அப்பொழுது அவர் அப்பணியை முழுவிருப்பத்துடன் செய்ய வாய்ப்பு உண்டு. அவர் அப்பணியில் சிறிது நேரம் செலவழித்து அனுபவம் பெற்றால்; பிரச்சனைகளை திறந்த மனதுடன் ஆய்வு செய்பவராக இருந்தால், பிரச்சனையை அகநிலை அணுகுமுறையுடனும் பிரச்சனையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்ப்பவராகவும் இல்லாதிருந்தால் அப்பணியை எப்படிச் செய்வது எனும் முடிவிற்கு அவரால் வரமுடியும். அப்பொழுது அவர் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் பணியைச் செய்ய முடியும்.
அகநிலை கருத்துகளை உடையவர்கள்தான் – பிரச்சனைகளின் ஒரு பக்கத்தை மட்டுமே கவனிப்பவர்கள்தான் – பிரச்சனைகளை மேலோட்டமாக பார்ப்பவர்கள் மட்டும்தான் – ஒரு பிரச்சனையை பற்றி கேள்விப்பட்டவுடன் ஆணைகளைப் பிறப்பிப்பர். பிரச்சனையின் ஒட்டுமொத்த தன்மையை (பிரச்சனையின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை எப்படி பரிணமித்தது என்பதை) ஆய்வு செய்யாதவர்கள்தான் அவசரகோலத்தில் செயல்படுவர்.
பிரச்சனைகளின் மையக்கரு வரையில் (பிரச்சனையின் தன்மை மற்றும் பிரச்சனையின் பல அம்சங்களிடையே உள்ள இணைப்பு) தமது ஆய்வை ஊடுருவி செய்யாதவர்கள்தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படுவர். அத்தகையவர்கள் சறுக்கி கிழே விழுவது நிச்சயம்!” (மாவோ தேர்வு நூல்கள் தொகுதி 1 பக். 302)
திட்டவட்டமான சூழ்நிலை குறித்து பொருத்தமான ஆய்வு செய்வது என்பது ஒவ்வொரு தோழரும் அவரவர் பெறமுடிகின்ற செயல்திறன்களைப் பொறுத்துதான் அமையும் என்பதை மேற்கண்ட கூற்றுகள் தெளிவாக்குகின்றன. இந்த செயல்திறன்களைப் பெறவேண்டுமானால் ஒவ்வொரு தோழரும் சுயகல்வியை பெற வேண்டும். சுயகல்வி என்பது கட்சியில் நடத்தப்படும் வகுப்புகளுக்கும் அப்பாற்பட்டு கூடுதலாக எடுக்க வேண்டிய முயற்சிகள் ஆகும். சுயகல்வி பெறுவது. என்பது ஒரு தோழரின் வாழ்நாள் முழுதும் தொடர வேண்டிய முக்கிய முயற்சியாகும். இது இல்லாமல் தற்காலத்தில் நம்முன் உள்ள கடமைகளைத் திறமையாக நிறைவேற்ற இயலாது.
மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
லியோ ஷோச்சி அவர்கள் “கட்சியின் அமைப்பு விதிகள் மாற்றம்” எனும் தனது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“மக்கள் தங்கள் வரலாறைத் தாங்களே உருவாக்குகிறார்கள். மக்களின் விடுதலை என்பது அவர்களின் சொந்த உணர்வு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். மக்கள் தமது முன்னணிப் படையைத் தேர்வு செய்கின்றனர். அந்த முன்னணிப் படையின் தலைமையின் கீழ் அணிதிரண்டு தமது விடுதலைக்காக போரிடுகின்றனர். இதன் அடிப்படையில்தான் போராட்டத்தின் பலன்களை அவர்கள் வெல்லவும் அவற்றை செழுமையாக்கிக்கொள்ளவும்; தக்கவைத்துக் கொள்ளவும் உணர்வுபூர்வமான முயற்சிகளை செய்கின்றனர்.
மக்களின் விரோதிகளை மக்களேதான் தூக்கியெறிய வேண்டும். வேறு எந்த வகையிலும் இதனை செய்ய இயலாது. மக்களின் சொந்த ஆழமான உணர்வும் அவர்களின் அணிதிரட்டலும் இல்லாமல், முன்னணிப் படையால் மட்டுமே அவர்களது விடுதலையை வென்றெடுக்கவோ அல்லது முன்னேற்றம் காணவோ அல்லது எதை ஒன்றையும் சாதிக்கவோ இயலாது. வாடகை அல்லது வட்டி குறைப்பு அல்லது கூட்டுறவு அமைப்புகள் உருவாக்குவது போன்ற அன்றாட வாழ்வில் உள்ள சாதாரண உடனடி பிரச்சனைகள் கூட மக்கள் தாங்களாகவே சுய உணர்வுடன் மற்றும் சுயவிருப்பத்துடன் முன்வந்து அணிதிரண்டு போரிடுவதன் மூலமே சாத்தியம். இவற்றை பெற மற்றவர்கள் ஏற்பாடு செய்வதோ, அல்லது இத்தகைய உரிமைகளை அவர்கள் மீது பொழிவதோ எவ்வகையிலும் பயன்தராது.”
“கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் என்பது மக்களின் இலட்சியம். நமது திட்டமும் கொள்கைகளும் எவ்வளவு சரியாக இருந்தாலும் மக்களின் நேரடி ஆதரவும் தளராத போராட்டமும் இல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. எனவே அனைத்தும் மக்களின் அரசியல் உணர்வு மற்றும் போராடுவதில் அவர்களின் சுயவிருப்பம் ஆகியவற்றின் மீது சார்ந்திருக்கவில்லை எனில், மக்களால் அவை தீர்மானிக்கப்படவில்லை எனில் நாம் எதனையுமே சாதிக்க இயலாது. நமது முயற்சிகள் எவ்விதப் பலனையும் தராது. மக்களின் அரசியல் உணர்வின் மீதும், போராடுவதற்கு உள்ள விருப்பத்தின் மீதும் நாம் சார்ந்திருந்து கட்சியின் சரியான தலைமையின் கீழ் போராடினால் நிச்சயமாக நாம் இறுதி வெற்றி அடைய முடியும்.
எனவே மக்கள் முழுமையாக எழுச்சி அடையாத பொழுது அவர்களின் உணர்வை வளர்த்தெடுப்பதுதான் மக்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்டுகளின் முக்கிய கடமை ஆகும். கம்யூனிஸ்டுகள் எத்தகைய பணிசெய்தாலும் பொருத்தமான மற்றும் வலுவான வகையில் மக்களின் அரசியல் உணர்வை உருவாக்குவது அவசியம். இதுதான் நமது பணியின் முதல் படி. எவ்வளவு கடினமாக இருந்தாலும் எவ்வளவு கால அவகாசம் ஆனாலும் இந்தப் பணியை செய்தே ஆக வேண்டும். முதல் படியைக் கடந்த பின்னர்தான் இரண்டவது படியை நாம் தொட இயலும்.( லியோ ஷோச்சி தேர்வு நூல்கள் தொகுதி 1 பக். 347)
மக்களிடமிருந்து கற்பதற்கு பதிலாக நம்மை நாமே புத்திசாலிகள் என எண்ணிக்கொண்டு நமது கற்பனையிலிருந்து சில திட்டங்களை உருவாக்கியோ அல்லது அயல்நாட்டு அனுபவத்தை எந்திரகதியாக பொருத்துவதன் மூலம் ஒரு திட்டத்தை உருவாக்கியோ அதன் அடிப்படையில் மக்களின் உணர்வை வளர்க்க முற்பட்டல் அத்தகைய முயற்சி நிச்சயமாக தோல்வியில்தான் முடியும்.
மக்களிடமிருந்து கற்றுக்கொண்டே இருப்பதற்கு ஒரு நொடிகூட அவர்களிடமிருந்து நாம் தள்ளி நிற்கக்கூடாது. அவர்களிடமிருந்து நாம் தனிமைப்பட்டால் நமது அறிவு அல்லது சிந்தனை மிகக்குறுகிய ஒன்றாக ஆகிவிடும். மேலும் நாம் போதுமான தகவல்கள் உடையவர்களாகவோ அல்லது திறமையானவர்களாகவோ அல்லது மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை பெற்றவர்களாகவோ இருக்க இயலாது.“ ( லியோ ஷோச்சி தேர்வு நூல்கள் தொகுதி 1 பக். 349)
நடைமுறை பணியை நெறிப்படுத்துவோம்
அகநிலைவாதம் ஸ்தாபன முடிவுகளில் பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு தனிப்பட்ட ஊழியரின் பலம் பலவீனம் குறித்த பொருத்தமற்ற மதிப்பீடு, அவருக்குத் தவறான பணிகளை அளிப்பதில் முடியலாம். முறையான மதிப்பீடுகள் இல்லாத நிலையில் அகநிலை அடிப்டையிலான மதிப்பீடு வலுவான விருப்பு வெறுப்புளை உண்டாக்கலாம். இது ஊழியரைப்பற்றி பொருத்தமான மதிப்பீடு செய்வதை பாதிக்கும். இதன் காரணமாகக் கட்சி ஸ்தாபனத்திற்கு ஆபத்தான விளைவுகள் ஏற்படும். ஸ்டாலின் என்ன கூறினார் என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. அவர் கூறினார். “ஒரு சிறந்த ஸ்தாபன அமைப்பாளரின் திறமை என்பது பொருத்தமான தோழருக்கு பொருத்தமான பணியை அளிப்பதில் உள்ளது.” அகநிலைவாதம் இது ஏற்படாமல் தடுக்கிறது. இதன் விளைவாகப் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் நமது சொந்த அனுபவத்திலிருந்து, தேர்தல் முடிவுகள் குறித்து கீழிலிருந்து வந்த விவரங்கள் எப்படி அகநிலை அடிப்படையில் மிகைப்படுத்தப்ட்ட மதிப்பீட்டிற்கு இட்டுச்சென்றது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். நமது வலுவான மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா உட்பட பல மாநிலங்களில் இது நடந்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு பூத் கமிட்டிகளின் கூற்றுகளின் அடிப்படையில் கட்சி மையத்திற்கு நமது தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து மதிப்பீடுகள் அனுப்பப்பட்டன. ஆனால், பின்னர் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டபோது நமது மதிப்பீடுகள் பெருமளவு தவறாக இருந்தன.
இது அகநிலை அடிப்படையிலான மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும். அல்லது “தலைமை எதனை கேட்க விரும்புகிறதோ” அதனை முன்வைத்ததாக இருக்க வேண்டும். இது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். கீழிருந்து வந்த விவரங்கள் அடிப்படையில் நமது மதிப்பீடு அகநிலை அடிப்படையில் தவறாகத் தீர்மானிக்கப்பட்டது என்பது தெளிவு. கீழுள்ள அணிகளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு பலவீனம் அடைந்துவிட்டது. இதனாலேயே அவர்கள் தரும் விவரங்கள் தவறாக உள்ளன என்பது உணரப்படவில்லை. கீழிருந்து வந்த விவரங்கள் நமது ஆதரவாளர்கள் என நாம் எண்ணியவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம். நாம் அவர்களை நம்பியும் இருக்கலாம். ஆனால் அவர்கள் நம்மைவிட்டுத் தள்ளிச் சென்றிருக்கலாம். அதைக் கூட அறிந்துகொள்ளும் இடத்தில் நாம் இல்லாமல்போயிருக்கலாம். இப்படி பல காரணங்கள் இணைந்து இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருந்திருக்கலாம்.
அகநிலைவாதத் தவறுகள் ஸ்தாபன பணிகளில் பல கடுமையான சிதைவுகளுக்கு இட்டுச்செல்லும். தோழமைபூர்வமான நடத்தை குறைவது, தனிநபர் போக்கு, யார் பெரியவர் எனும் போட்டி போன்ற சிதைவுகள் ஏற்படலாம். அத்தகைய வெளிப்பாடுகள் திட்டவட்டமான சூழலைத் தவறாக மதிப்பிடுவதற்கு இட்டுச்செல்கிறது. மேலும் மக்களுடன் நமக்கு உள்ள பிணைப்பையும் பலவீனப்படுத்துகிறது.
இத்தகைய சூழலில் கட்சியினுள் அகநிலைவாதத்தை ஒடுக்கும் அவசரத் தேவை உள்ளது. திட்டவட்டமான புறச்சூழலில் உருவாகிவரும் மாற்றங்களை சரியான முறையில் மதிப்பீடு செய்திட அகநிலைவாதத்தை ஒதுக்க வேண்டிய தேவை உள்ளது. திட்டவட்டமான சூழல்கள் குறித்து ஒரு சரியான மார்க்சிய-லெனினிய ஆய்வை உருவாக்கிட அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடு தேவைப்படுகிறது. அதற்கு அகநிலைவாதத்தை எதிர்த்து போராடி அதனை அகற்ற வேண்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சரியான ஸ்தாபன முறைகளையும் நடவடிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
கட்சி உருவாக்கியுள்ள அரசியல் உத்தியின் அமலாக்கம் என்பது அகநிலைவாதத்தை அகற்றுவதிலும் சரியான ஸ்தாபன முறைகளை நடைமுறை படுத்துவதிலும்தான் வலுவாக சார்ந்துள்ளது. இதில் ஏற்படும் எந்த ஒரு தவறும் அரசியல் நிலைபாட்டிலும் உத்தியிலும் தவறுகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கட்சி வலது திருத்தல்வாதத்திலோ அல்லது இடது தீவிரவாதத்திலோ சிக்கிவிடும் ஆபத்து உள்ளது.
இந்தியப் புரட்சியின் மக்கள் ஜனநாயகக் கட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து அதன் மூலம் சோசலிசத்திற்கான போராட்டத்தின் வெற்றிக்காக நாம் செயலாற்றுகிறோம். இந்த முயற்சிகளின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக தற்கால வளர்ச்சிப் போக்குகளை மார்க்சிய- லெனினிய ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.
வர்க்க சக்திகளின் சமன்பாட்டை நமக்கு சாதமாக மாற்றிட அனைத்து மட்டங்களிலும் அகநிலைவாதத்தை எதிர்த்துப் போராடுவது முக்கியமாகவும், அவசியமான ஒன்றாகவும் உள்ளது. நமது தேசத்தில் புரட்சிகர இலக்கை வெல்வதற்கு ஏதுவாக நமது தற்கால போராட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியம். இதற்கு அகநிலைவாதத்தை எதிர்த்து போராடுவது தவிர்க்க இயலாத மிக அவசிய ஒன்றாகும்.
மார்க்சிஸ்ட் கட்சி முறையாக விவாதித்த பிறகு 21வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நடைமுறை உத்தியை நிறைவேற்றியுள்ளது. எனினும் ஸ்தாபன பிளீனத்தில் நாம் எடுக்க உள்ள முடிவுகள்தான் இந்த அரசியல் உத்தியை செம்மையாக செயல்படுத்தும் நமது திறன்களைத் தீர்மானிக்கப்போகிறது. கட்சிக்கு மக்களுடன் உள்ள இணைப்பை வலுவாக்குவதற்கான செயல்திறன்கள் உருவாவது, சரியான ஸ்தாபன முடிவுகளை எடுப்பதைத்தான் வலுவாகச் சார்ந்துள்ளது. நம் முன் உள்ள கடமை இதுதான்!
திட்டவட்டமான சூழல்களின் சரியாக மதிப்பீடு, திட்டவட்டமான ஆய்வுக்கான அறிவியல் பூர்வமான அடித்தளம், இந்திய மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பை வலுவாக்கிட தேவையான சரியான ஸ்தாபன முறைகள் மற்றும் முடிவுகள் ஆகிய மூன்று தளங்களிலும் பல்வேறு வழிமுறைகளில் வெளிப்படும் அகநிலைவாதத்தை எதிர்த்துப் போராடுவது இன்றைய அவசர கடமை ஆகும். இந்த முக்கிய கடமையை கட்சி முழுமையும் செயல்படுத்திட உறுதியேற்போம்.
(மார்க்சிஸ்ட், ஆங்கில இதழின் ஜூலை – செப்டம்பர் 2015)