தமிழகத்தில், இன்றைய சூழலில் இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
தமிழகத்தில் வேறு மாநிலங்களைப் போன்று, காங்கிரஸ்,பாஜக வலுமிக்க கட்சிகளாக இல்லை. இங்கு, திமுக,அதிமுக கட்சிகள் கணிசமான மக்களிடம் செல்வாக்கு தளத்தையும், வாக்கு வங்கியையும் வைத்துள்ளன.
எனினும், உழைக்கும் மக்களுக்கு விரோதமான நவீன தாராளமயப் பாதையில் அந்த இரண்டு கட்சிகளும் பயணிக்கின்றன. சாதி ஒடுக்குமுறைகள் நீடிப்பது பற்றி எவ்வித தலையீடும் செய்வதில்லை. பிரதேச முதலாளித்துவக் கட்சிகள் எனும் வகையில் உழைக்கும் வர்க்கங்களுக்கு விரோதமான செயல்பாடுகள் கொண்டவையாக அவை செயல்பட்டு வருகின்றன.
உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும்,பாஜகவின் வகுப்புவாதத்துடன் அவை இரண்டும் சமரசம் செய்து கொள்கின்றன.இந்நிலையில் இந்த இரு கட்சிகளின் செல்வாக்கிலிருந்து உழைக்கும் மக்களை மீட்டு மாற்றுப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். கணிசமான தொழிலாளி விவசாயப் பிரிவினரை அக்கட்சிகளின் செல்வாக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு வரவும்,அவர்களை ஒன்றுபடுத்தவும் பல மேடைகளை உருவாக்கிட வேண்டியுள்ளது
இதே போன்று வெகு மக்கள் அமைப்புக்களிலும் கூட்டு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்சங்க அளவில் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட பல்வேறு ஒத்த கருத்துடைய தொழிலாளர் அமைப்புக்கள் பொது வேலைநிறுத்தம் போன்ற இயக்கங்களை மேற்கொண்ட ன.சமீபத்தில்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட 13 அமைப்புக்களை இணைத்து கௌரவக்கொலைக்கெதிராக மதுரையிலும்,மது ஒழிப்புக்கு எதிராக இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புக்களை இணைத்து தஞ்சாவூரிலும் கூட்டு மேடை எனும் வகையில் கருத்தரங்கங்களை நடத்தியது.
இந்த முயற்சிகளோடு அரசியல் தளத்திலும் பல பரிசோதனை முயற்சிகளை தொடர வேண்டியுள்ளது.தற்போது நிலவும் அரசியல் சூழலில், நான்கு கட்சிகள் செயல்படுகிற ஒரு அரசியல் மேடையாக மக்கள் நல கூட்டு இயக்கம் விளங்குகிறது. தமிழகத்தில் மக்கள் நல கூட்டு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முக்கியப் பங்காற்றி வருகிறது.
இது போன்ற ஏராளமான முயற்சிகள் நிகழ்ந்திட வேண்டும்.
கூட்டு முயற்சிகளில் பயணப்படும் உழைக்கும் வர்க்கங்களில் ஒரு பகுதியினரை அந்த இயக்கங்களின் ஊடாக, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, நிரந்தமாக திருப்பிட வாய்ப்பும் உள்ளது. இது,எதிர்காலத்தில்,தமிழகத்தில் ஒரு மக்கள் நலன் சார்ந்த மாற்றத்தினை ஏற்படுத்தவும், இடது ஜனநாயக சக்திகள் ஒன்று திரளவும்,அந்த நிகழ்வுப் போக்கின் விளைவாக இடது ஜனநாயக அணி உருவாகிடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்த எதிர்காலப் பார்வையோடு இந்த கூட்டு இயக்கங்களில் கம்யூனிஸ்ட்கள் செயல்பட வேண்டுமென்பதுதான் இதில் மிக முக்கியமானது.
Leave a Reply