“மக்கள் ஜனநாயக முன்னணி” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பேசுகிறது. “இடது ஜனநாயக முன்னணி” பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது அரசியல் தீர்மானம் பேசுகிறது. கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்?
கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னணிகள் எப்படிப்பட்டவை என்பது மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்திலும், அரசியல் தீர்மானத்திலும் விளக்கப்பட்டுள்ளது.
கட்சி திட்டத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி என்பது பல வர்க்கங்களை உள்ளடக்கியதாகவும், அந்த வர்க்கப் பிரிவுகளை எவ்வாறு திரட்ட வேண்டுமென்றும் விளக்கப்பட்டுள்ளது. தொழிலாளி – விவசாயி வர்க்கக் கூட்டு இந்த முன்னணியின் முக்கிய அங்கம். அந்த வர்க்கங்களோடு திரட்ட வேண்டிய இதர மக்கள் பிரிவுகள் குறித்தும் விளக்கப்படுகிறது.
இடது ஜனநாயக முன்னணி அமைக்கும் பணியும் இந்த வர்க்கங்களைத் திரட்டும் நோக்குடன்தான். இந்த முன்னணி, இன்று காங்கிரஸ், பாஜக தலைமை தாங்கும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க அணிசேர்க்கையினை பின்னுக்குத்தள்ளி, முதன்மை இடத்திற்கு முன்னேறிடும். இந்த நிகழ்வுப் போக்கு மக்கள் ஜனநாயக அணி உருப்பெறுவதற்கும், ஒரு கட்டத்தில், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ இந்திய அரசை வீழ்த்தி, மக்கள் ஜனநாயக அரசு என்ற உழைக்கும் வர்க்க அரசு அமைவதற்கும் உதவிடும்.
எனவே,கம்யூனிஸ்ட்கள் உழைக்கும் வர்க்கங்களை அடிப்படையான சமூக மாற்றத்திற்காகத் திரட்டுகிற முயற்சிகளை இடையறாமல் மேற்கொள்கின்றனர். இதற்காக,தொழிலாளிகள்,விவசாயிகள் உள்ளிட்ட மக்கள் பிரிவினரோடு அவர்கள் இடையறாத தொடர்பையும்,பிணைப்பையும் ஏற்படுத்தி கொள்கின்றனர்.
வர்க்கங்களின் வாழ்க்கை நிலைமைகளைக் கணக்கில் கொண்டு,வர்க்க சக்திகள் ஒன்றுபட்டு சந்திக்கக்கூடிய ஒரு புள்ளியை கம்யூனிஸ்ட்கள் தேர்வு செய்கின்றனர்.அதாவது, வேறுபட்ட வர்க்கப் பிரிவினர் ஒன்று திரளக்கூடிய கோரிக்கை அல்லது கோஷம் அல்லது வேலைத் திட்டம் அடிப்படையில் ஒற்றுமையை கம்யூனிஸ்ட்கள் உருவாக்குகின்றனர்.
ஊதிய உயர்வு,வேலை நிலைமைகளில் முன்னேற்றம்,அரசாங்க கொள்கை எதிர்ப்பு,போன்ற ஒன்று அல்லது பல கோரிக்கைகளை மையமாகக் கொண்ட குறுகிய கால கூட்டு இயக்கமாக அவை அமையலாம்.ஆனால்,அவற்றை மையமாக வைத்து தொடர்ந்து செயல்டுகிறபோதும், தொடர்ந்து போராடுகிறபோதும்,குறிப்பிட்ட செயல்திட்டம் உருவாகி ஒற்றுமை வலுப்பட்டு நிரந்தரமாகிறது.அந்த நிலைதான் வெறும் கூட்டு இயக்கமாக இருந்த நிலை மாறி,முன்னணி ஆக அது மலருகிற சூழல் ஏற்படுகிறது.
ஒரு கூட்டு முயற்சி முன்னணியாக உருவெடுக்க வேண்டுமென்றால் வர்க்கங்களின் ஒன்றுபட்ட கூட்டான போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடைபெற வேண்டும். அவை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் போராட்டமாக இருக்கக் கூடாது. வர்க்கங்களின் பங்கேற்போடு அவை நிகழ வேண்டும்.
பெரும்பாலான உழைக்கும் மக்கள் பிரிவினர் ஆளும் வர்க்க செல்வாக்கில் உள்ளனர் என்பது தெரிந்த விஷயம்தான்.அந்த செல்வாக்கிலிருந்து விடுபடுவதற்கு குறிப்பிட்ட கோரிக்கை கோஷம் அடிப்படையிலான ஒன்றுபட்ட செயல்பாடும்,திட்டமும் தேவை,
தொடர் செயல்பாடு மற்றும் போராட்டங்களினால்,முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கங்கள் திரும்பிடுவார்கள். நிரந்தரமாக அவர்கள் அந்த செல்வக்கிலிருந்து விடுபட்டு முதலாளித்துவ ஆளும் வர்க்க எதிர்ப்பு நிலையை உறுதியாக மேற்கொள்கிற போதும்,மாற்றுக் கொள்கையின் கீழ் அணி திரளுகிறபோதும் இடதுசாரி ஜனநாயக அணி உருவாகி,பலம்பெறுகிற நிகழ்வுபோக்கு வேகப்படும்.
இந்த நிகழ்வு நீள்கிறபோது,முதலளித்துவத்திற்கு எதிராக திரண்டிருக்கும் வர்க்கங்கள் வெறும் மாற்றுக் கொள்கைகளை முழங்குபவர்களாக மட்டுமின்றி,முதலாளித்துவத்தை வீழ்த்தி,அதிகாரத்தைக் தாங்கள் கையில் எடுத்துக் கொள்கிற உணர்வு மட்டத்திற்கு உயருகின்றனர்.இந்த நிலையில்தான், மக்கள் ஜனநாயக அணி உருவெடுக்கிறது. தொழிலாளி வர்க்கத் தலைமையிலான புரட்சி மாற்றம் நிகழ்ந்து, உழைக்கும் வர்க்கங்களின் கையில் அதிகாரம் மாறுகிறது.
படிப்படியாக பரிணமிக்கும் இந்த நிலையை கம்யூனிஸ்ட்கள் திட்டமிட்டு உருவாக்கிட வேண்டும். வெவ்வேறு சூழலில், பல உத்திகளைக் கையாண்டு கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கங்களை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. பரந்த அளவில் மக்கள் திரட்டப்படுகிற பல தற்காலிகமான மேடைகளையும்,கூட்டு முயற்சிகளையும் மேற்கொள்வதும்,விரிந்த ஒற்றுமையையும் ஏற்படுத்தி “முன்னணி” முகிழ்த்திட கம்யூனிஸ்ட்கள் இடையறாது முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.
இது ஐக்கிய முன்னணி எனப்படும் கோட்பாடாகும்.ஐக்கிய முன்னணி என்ற கருத்தாக்கம் லெனின் காலத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட் நான்காவது மாநாட்டில் உருவாக்கப்பட்டது.
அதில் இவ்வாறு விளக்கபடுகிறது:
“ஒன்றுபட்ட முன்னணி உத்தி என்பது கம்யூனிஸ்ட்கள் மேற்கொள்ளும் ஒரு முன்முயற்சி.இதில்,வேறு கட்சிகள்,குழுக்களில் உள்ளவர்கள்,மற்றும் எதிலும் சேராத, அனைத்து தொழிலாளர்களிடமும் இணைந்து செயல்பட கம்யூனிஸ்ட்கள் திட்டமிடுவார்கள்.தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நலன்களை காத்திட முதலளித்துவதிர்கு எதிராக ஒரு ஒன்றுபட்ட பொதுவான போராட்டத்தை நடத்திட ஒன்றுபடுத்துவார்கள்.”
கம்யூனிஸ்டுகள் புரட்சி இலட்சியத்திற்காக செயல்படுகிறவர்கள்.புரட்சி இலட்சியம் கொண்டோர் இதர புரட்சிகர உணர்வு இல்லாதவர்களை ஈர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபடுகிறபோது “முன்னணி’உருவாகி, அவர்களும் புரட்சிக்கு தயாராகிவிடுவார்கள்.
Leave a Reply