டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் வருகிற இம்மாதத்தில் அவரது அனைத்து விதப் பங்களிப்பையும் நினைவு கூர்வது அவசியம். குறிப்பாக சங் பரிவார் அவரைத் தனதாக்கும் மலிவு அரசியல் விளையாட்டில் இறங்குவதால், அவரது கருத்துக்கள் இவர்களின் தத்துவத்திற்கு எல்லா விதங்களிலும் எதிர்நிலையில் இருப்பதை எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுதலில் தான் பா.ஜ.க. அரசாங்கம் செயல்படுகிறது என்பதில் ஐயமில்லை என்பது மட்டுமல்ல, அதை அவர்கள் மறுப்பதுமில்லை. கடந்த கால அளவுக்கு அவர்களுக்கு முகமூடிகள் கூடத் தேவையற்ற நிலையை, மோடி அரசுக்குக் கிடைத்த பெரும்பான்மை உருவாக்கியிருக்கிறது. மறைக்கப் பட்ட நிகழ்ச்சி நிரல்கள் (Hidden Agenda) வெளிச்சம் பெற்றிருக்கின்றன.
இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை நோக்கமான இந்து ராஜ்யம் முக்கியத்துவம் பெறுகிறது. அதைப் பெறுகிற தத்துவார்த்த வழியாகவே இந்துத்வம் முன் வைக்கப் படுகிறது. இந்துத்வ ராஜ்யம் இந்துக்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து விடும் என்ற தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப் படுகிறது. இதை உடைக்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. சுதந்திர இந்தியா இந்து ராஜ்யமாக இருக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து நிராகரிக்கப்பட்டே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் அரசியல் சாசனம் பிறந்தது. ஆனால் இன்று இந்திய அரசியலில் வலது திருப்பம் ஏற்பட்ட தன்மையில், இந்துத்வம் மறுபடி முன்னுக்கு வருகிறது. பல்வேறு தளங்களில் பெண்கள் இதற்கு ஆதரவாகத் திரட்டப் படும் நிலையில், இந்துத்வ ராஜ்யத்தில் பெண்களின் இடம் எது என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
பண்பாட்டின் அளவுகோல்:
1949ல் அரசியல் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசரில், இந்திய அரசியல் சட்டத்தில் பாரதீய அம்சங்களே இல்லை, உலகமே போற்றும் மனுஸ்மிருதி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்று தலையங்கம் எழுதப்பட்டது. நால்வருண அமைப்பே நமது கலாச்சாரத்தின் மையப்புள்ளி என்று கோல்வால்கர் எழுதினார். தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டைக் கடுமையாகவும், வெளிப்படையாகவும் எதிர்த்தார். சாவர்க்கர், வருணங்களையும், சாதிகளையும் புகழ்ந்தார், வேதங்களுக்கு அடுத்ததாக மனுநீதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவ பிரசாரகர் தீன்தயாள் உபாத்யாயா, அவரவர் குலத்துக்கேற்ற தொழில் செய்வதை நியாயப்படுத்திப் பேசினார். எனவே, சாதி கட்டமைப்பை, உயர் சாதி மேலாதிக்கத்தை, அத்துடன் இணைந்து வருகிற தீண்டாமையை, ஆணாதிக்கத்தை, உழைப்பாளி மக்கள் மீதான பாகுபாட்டையே இந்தியப் பண்பாடாக இவர்கள் முன் வைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இது தான் இந்துத்வ ராஜ்யத்தின் பண்பாடாக இருக்கும்.
இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மனு பெண்களைப் பற்றி சொல்லும் கருத்துக்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இங்கு வருகிறது. மனு, அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள், அந்தந்த சாதிக்குள் சூத்திரர் அந்தஸ்து பெற்றவர்கள் என்று கூறுகிறார். அதாவது, அவர்கள் வீட்டில் உழைக்க வேண்டும். உடமை இருக்கக் கூடாது, கல்வி கூடாது, ஆயுதங்கள் வைக்க உரிமையில்லை என்பது தான் இதன் பொருள். பெண்களின் பேரில் சொத்துக்கள் இல்லாத நிலைக்கும் இக்கருத்தியலுக்கும் தொடர்பு உண்டு. பிறந்த உடன் தந்தைக்கு அடிமை, திருமணமானவுடன் கணவனுக்கு அடிமை, குழந்தை பெற்ற பிறகு மகனுக்கு அடிமை என்று சொல்லுகிற மனு தர்மம், இதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை, எனவே ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. மேலும், “கணவன் நற்பண்புகள் அற்றவனாயினும், வேறிடத்தில் இன்பம் தேடுபவனாயும் இருந்தாலும் கூட, அவனையே மனைவி தெய்வமாய் தொழ வேண்டும்” என்று மனு கோட்பாடு கூறுகிறது. இந்தப் பெண்ணடிமைத்தன கோட்பாடு, இன்றைக்கும் வெவ்வேறு வடிவங்களில் இந்துத்வ சக்திகளால் முன்னிறுத்தப் படுகிறது.
அம்பேத்கரின் ராஜினாமா:
1955ல் இந்து கோட்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப் பட்டது. மசோதாவுக்கான இறுதி வடிவத்தைத் தயாரித்தது அம்பேத்கர் அவர்கள் தலைமையிலான குழுவாகும். 1951 துவங்கி 4 ஆண்டுகள் வரை அதை நிறைவேற்ற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்களில் பிரதானமானவர்கள் பிஜேபியின் முன்னோடிகளும், இஸ்லாமிய பழமைவாதிகளும் தான். இவர்கள் காங்கிரசுக்குள்ளிருந்தும், இந்து மகா சபை போன்ற அமைப்புகளின் சார்பிலும் விவாகரத்து, சொத்து, வாரிசு, பல தார மணம் தடுப்பு போன்ற அம்சங்களில் பெண்களுக்கு உரிமை என்பது குறித்த கடும் பிற்போக்கு வாதங்களை முன் வைத்தார்கள். சொத்து கிடைத்தால் பெண்கள் கெட்டழிந்து விடுவார்கள் என்றும், ஆண் வாரிசு தான் கொள்ளி வைக்க முடியும், எனவே அதற்காகப் பலதார மணம் தேவை என்றும் வாதிக்கப் பட்டது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த கோட்பாட்டை சீரழிக்கக்கூடாது என்று நியாயம் கற்பிக்கப் பட்டது. சொத்தில் சம உரிமை என்பது இந்து கூட்டுக் குடும்பத்தை சிதைக்கும், அதன் மூலம், இந்து சமூகத்தின் அடித்தளத்தையே நொறுக்கும் என்று பதறினார்கள். குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் ஒரு படி மேலே போய், ஒரு தார மணத்தை மக்களின் விருப்பத்துக்கு விரோதமாக அவர்கள் மீது திணிப்பது ஜனநாயக விரோதமானது என்று ’புதிய’ பரிமாணத்தை அளித்தார். இந்து மகா சபை சார்பில் பேசிய சியாமா பிரசாத் முகர்ஜி (பின்னாளில் ஜனசங் கட்சியின் ஸ்தாபகர்), விருப்பப் பட்டவர்கள் மட்டும் இச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளட்டும் என்றார். இவை அனைத்தும் அவை குறிப்புகளில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இதற்கிடையே, குடியரசு தலைவர் இதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் என்ற சூழலும் ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இந்துத்வவாதிகளை மனுவாதிகள் என்று அழைப்பதில் என்ன தவறு? இவர்கள் அம்பேத்கரைத் தங்களுடன் அடையாளப் படுத்திக் கொள்வதை விட அம்பேத்கருக்கு இழைக்கப் படும் துரோகம் வேறு என்ன இருக்க முடியும்?
பெண் சுயேச்சையான மனிதப் பிறவி இல்லையாம் !
பிஜேபி ஆட்சி நடத்திய மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் பல பிற்போக்கு அம்சங்கள் இணைக்கப் பட்டன. உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரபிரதேசத்தில், பெண்ணுரிமை கோருவது தான் குடும்பங்கள் பிளவுபட காரணமாய் அமைகின்றது என்ற விமர்சனம், பாடப்புத்தத்தில் இடம் பெற்றிருந்தது. குடும்பம் ஆணாதிக்கக் கட்டமைப்பாய் இருப்பதும், ஜனநாயகத்துக்கு இடமில்லாத நிலையும் தான் பிரச்னைகளுக்குக் காரணம் என்பது வசதியாக மறைக்கப் பட்டு விட்டது. சத்தீஸ்கரில் தற்போது 10ம் வகுப்புக்கான சமூக விஞ்ஞான பாடத்தில் பெண்கள் வேலைக்கு வருவதால் தான் வேலையில்லா திண்டாட்டம் உருவாகிறது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது உத்தியோகம் புருஷ லட்சணம், பெண் ஒரு சுயேச்சையான மனிதப் பிறவி இல்லை என்பது தானே இதன் பொருள்? ராஜஸ்தானில் இளம் ரூப் கன்வரைக் கொன்ற சதி என்ற கொடுமையான உடன்கட்டை ஏறும் வழக்கம், விஜயராஜே சிந்தியா உள்ளிட்ட இந்துத்வவாதிகளால், இந்து மதக் கலாச்சாரம் என நியாயப் படுத்தப் பட்டது. பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகே, அதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப் பட்டது. டெல்லியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது, மாநில மகளிர் கமிஷனின் தலைவராக இருந்த பிஜேபி பிரமுகர் மிருதுளா சின்ஹா, வரதட்சணை வாங்குவதில் என்ன தவறு என்று வாதாடினார். தான் வரதட்சணையுடன் வந்ததாகவும், தனது கணவர் வீட்டில் அதனால் வசதியாக வாழ்வதாகவும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
நமது மகளையும், மருமகளையும் பாதுகாப்போம் என்று சங் பரிவாரம் முழங்கிக் கொண்டே, இன்னொரு மதத்தில் இருக்கும் மகளையும், மருமகளையும் பாலியல் கொடுமை செய்வது, பிரச்னை பெண்ணுரிமை சம்பந்தப் பட்டதே அல்ல என்று விளங்க வைக்கிறது. இந்து இளைஞர்கள், இந்துப் பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்கிக் கை விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. மோசடி பேர்வழிகளுக்கும், துரோகிகளுக்கும் எதிராகப் பெண்களைப் பாதுகாப்பது இவர்கள் நோக்கமல்ல. அப்படி ஏதாவது நடக்கும் போது, இவர்களின் தரப்பில் ஆணாதிக்கம் தான் கோலோச்சும். வகுப்புவாதமும், பெண்ணடிமைத்தனமும் இயல்பான கூட்டணி தான்.
பெண்களிடம் பாலியல் குற்றம் செய்ததாக ஆசாராம் என்ற சாமியார் சில வருடங்களுக்கு முன் கைது செய்யப் பட்டார். இதை விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், ”ஆசாராம் மீதான குற்றச்சாட்டுகள், இந்து கலாச்சாரத்தின் மீதான தாக்குதலின் ஒருபகுதி” என்று வர்ணித்தார். இந்துத்வ அணியின் முக்கிய அங்கமான சாமியார்கள் நாடாளுமன்றம், (தர்ம சன்சத்), இந்திய அரசியல் சட்டம் மாற்றப் பட்டு, இந்து கோட்பாடுகள் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப் பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதை, இத்துடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் அபாயம் புரியும்.
அச்சுறுத்தப் படும் மதச்சார்பின்மை:
இந்துத்வத்தைப் பற்றியே இங்கு பிரதானமாக பேசினாலும், எந்த மதமும் பெண்களைச் சமமாகப் பார்ப்பதில்லை என்பதே உண்மை. இசுலாமிய நாடானாலும், கிறித்துவ நாடானாலும் அங்கும் பெண்ணுரிமை பல விதங்களில் பறி போகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலிபான்களின் நடவடிக்கைகளை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். மதம் சார்ந்த அந்நாடுகளின் சட்டங்கள், பெண்களை மிகவும் பாகுபடுத்துகின்றன. சீக்கியர்களுக்குத் தனிநாடு என்று கேட்ட காலிஸ்தான்வாதிகளும் பெண்ணடிமைத்தனத்தையே தூக்கிப் பிடித்தார்கள். கிறித்துவ மதத்தை அதிகாரபூர்வமதமாக வைத்திருக்கும் அயர்லாந்தில் கருக்கலைப்பு உரிமை கிடையாது. சமீபத்தில் ஒரு பெண் பல் மருத்துவர் இதனால் இறந்தே போனார். மதச்சார்பற்ற அரசியல் சட்டம் மட்டுமே குறைந்தபட்ச பெண்ணுரிமையையாவது பாதுகாக்கும் என்பது தான் இச்சம்பவங்களிலிருந்து வெளிப்படும் அம்சம். 1990களில் பிஜேபி வலுவான அரசியல் சக்தியாக எழுந்த போது நடந்த இந்து முன்னணி மகளிர் மாநாட்டில், “மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்குத் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும். அதற்காகப் பெண்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்” என்று அறைகூவல் விடப் பட்டதானது, பெண்ணுரிமை இவர்களுக்கு எந்த அளவு கசக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
மதச்சார்பின்மை கோட்பாட்டை அம்பேத்கர் அரசியல் சாசனத்தின் முன்னுரையில் சேர்க்க மறுத்தார் என்று கூறி, மோடியும், அவரது அரசும் அந்த வார்த்தை இல்லாத 1950 அரசியல் சாசன முன்னுரையை (Preamble) மேற்கோள் காட்டிப் பேசி வருகிறார்கள். ஏன் அம்பேத்கர் சேர்க்கவில்லை? அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் “அரசியல் சாசனக் கட்டமைப்பின் உள்ளார்ந்த அம்சமாக மதச்சார்பின்மை இருக்கிறது. தனியாக அதை இணைப்பது என்பது தேவையற்றது”. மற்றபடி அவர் மதச்சார்பின்மையின் எதிர்ப்பாளராக நிச்சயம் இல்லை.
பரந்த இந்து அடையாளம்:
இந்துத்வம் ’உயர்’ சாதிய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், ‘இந்துக்கள்’ என்ற அடிப்படையில், பெண்களை வேறுபாடுகள் அற்ற ஒற்றைக் குழுவாகக் கட்டமைக்கிறது. சாதிய, வர்க்க பாகுபாடுகள் அவர்களுக்கு ஏற்புடையது என்றாலும், ஒரு அரசியல் உத்தியாக, இந்தப் பரந்த இந்து அடையாளம் முன் வைக்கப் படுகிறது. சாத்வி ரிதம்பரா, உமா பாரதி போன்ற அனல் கிளப்பும் இந்துத்வ பிரச்சாரகர்கள் ’உயர்’ சாதியினர் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.சின் சேவிகா சமிதி, பிஜேபியின் பெண்கள் அமைப்பான மகிளா மோர்ச்சா, விஸ்வ இந்து பரிஷத்தின் துர்கா வாகினி போன்ற அமைப்புகளுக்கிடையில் இந்நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதில் புரிதலுடன் கூடிய தொடர்புகள் உண்டு.
கோல்வால்கர் கூற்றுப்படி, இந்துத்வம் பிரதானமாக இந்துப் பெண்களை, வலுவான மகனைப் பெற்றுக் கொடுக்கும் தாயாக அதாவது எதிர்கால இந்து ராஜ்ய குடிமக்களின் குணங்களை வடிவமைக்கும் பயிற்சியாளராகப் பார்க்கிறது. இந்து மதத்தைக் காப்பாற்ற இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் 4 குழந்தைகளைப்பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிக அண்மைக்காலத்தில் சாக்ஷி மகராஜ் கூறியதை மறந்திருக்க முடியாது. மோடி ஆட்சி இந்துக்களின் ஒற்றுமையால் தான் கிடைத்திருக்கிறது, எனவே, மோடி ஆட்சி அடுத்தடுத்து வர வேண்டுமானால், இந்து பெண் ஒவ்வொருவரும் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என 2015 ஜனவரியில் பத்ரிநாத் சங்கராச்சாரியார் வாசு தேவானந்தா ஒரு பொது நிகழ்ச்சியில் கூறினார். அதே சமயம், சாதிய கட்டமைப்புக்கு உட்பட்டுத் தான், திருமணமும், குழந்தை பெறுதலும் என்பது எழுதப்படாத விதியாக நியாயப்படுத்தப்படுகிறது.
சுயம் எங்கே?
ஆண் மேலாதிக்கம் இந்துத்வத்தின் முக்கிய அம்சம். ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக சேர பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் சுயம் சேவக்குகளாக இருக்கும் போது, பெண்களுக்கான தனி அமைப்பான சேவிகா சமிதியின் பெயரில் கூட சுயம் இல்லை. பெண்ணுரிமை இதன் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது. சேவிகா சமிதியைப் பொறுத்த வரை, பெண்ணுரிமை பாலியல் வல்லுறவைத் தூண்டும், குடும்பத்தில் அமைதி இன்மையை விளைவிக்கும், இந்துப் பெண்கள் சமத்துவம், உரிமை இவற்றுக்குப் பின்னால் போனால், அது அவர்களை மட்டுமல்ல, இந்து ராஜ்யத்தையே அழிக்கும் என்று போதிக்கிறது. அதாவது இந்து ராஜ்யத்தையும் பெண்ணுரிமை மற்றும் சமத்துவக் கோட்பாடுகளையும் எதிரெதிர் நிலையில் தெளிவாக நிறுத்தி விடுகிறது.
பெண் விடுதலையின் பிரதிநிதியாக அல்ல:
இதனால் பெண்களை இந்துத்வம் வீட்டுடன் கட்டி வைக்கிறது என்று பொருளல்ல. குடும்பத்தில் விசுவாசமான மனைவியாகவும், தியாகம் செய்யும் தாயாகவும் இருக்கும் அதே நேரத்தில், பொது வெளியில் இந்துத்வ ராஜ்யத்தைப் பாதுகாக்கும் வீரப் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்பது தான். இந்துத்வ ராஜ்யத்தை நிர்மாணிப்பதில் பெண்களுக்கு இடம் அளிக்கப் படுகிறது. சங் பரிவார பெண்கள் அமைப்புகள் அதற்கான முறையில் இயங்குவதும் கண் முன் தெரிகிற விஷயம்தான். உதாரணமாக மதுரா பிருந்தாவன விதவைகளின் அவலத்தைக் காட்டும் வாட்டர் திரைப்படத்தை எதிர்த்து ஆக்ரோஷமாக வீதிகளில் இறங்கினார்கள். ஏன்? இந்து மதத்தின் கைம்பெண் வரையறையை அப்படம் கேள்விக்குள்ளாக்கியதால். ராமர் கோயிலுக்குக் கர சேவகர்களாகப் போனார்கள், குஜராத்தில் இசுலாமிய பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்வதை ஆதரித்தார்கள், சில இடங்களில் தூண்டினார்கள். ஏன்? இசுலாமிய பெண்கள் அங்கு பெண்களாகத் தெரியவில்லை, எதிரி இனமாக, எதிரிகளை உற்பத்தி செய்யும் ஆதாரமாக முன் வைக்கப் படுவதால்! மும்பை கலவரத்தின் போது சிவசேனை உறுப்பினர்கள் சிலர் வன்முறையில் ஈடுபடத் தயங்கினார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் கலந்து பேசி, ஆண்களின் உடைகளை மறைத்து வைத்துக் கொண்டனர்; சிலர், ஆண்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, பாவாடை கட்டி விட்டனர். வன்முறையில் ஈடுபடுவதாக உறுதி கூறிய பின்பே உடைகள் திருப்பித் தரப் பட்டன. இங்கு பெண்ணின் ‘இயல்பான’ பிம்பம் தகர்க்கப் பட்டது. ஆனால் அது மதத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற!
மற்றொரு தளத்தில் அழகிப் போட்டியை எதிர்க்கிறார்கள், பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கிறார்கள். இதனாலேயே இவர்கள் பெண்ணுரிமை பாதுகாவலர்களாகி விட முடியாது. அழகிப் போட்டிகளை இடதுசாரி பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பதற்கும், இந்துத்வ பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பதற்கும் கருத்தியல் ரீதியான வித்தியாசம் உண்டு. பொது சிவில் சட்ட விஷயத்திலும் அத்தகைய வேறுபாடு உண்டு. எனவே இந்துத்வ பெண்கள் அமைப்புகளின் செயல்பாடு, பெண் விடுதலையின் பிரதிநிதியாக அல்ல, ஆணாதிக்கக் கட்டமைப்புக்கு உட்பட்ட இயக்கமாகவே இருக்கிறது.
எனவே, எப்போதோ மனுவும், கோல்வால்கரும் சொன்னதை எதற்காக இப்போது பேச வேண்டும் என்று விட்டு விடுவதற்கில்லை. மேற்கூறிய அடிப்படையில் கல்வி முறையும், பண்பாட்டு மதிப்பீடுகளும் மாற்றி எழுதப்படுவதற்கு இன்றைக்கும் சங் பரிவாரம் முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. “உன் தாய் திருநாட்டுக்காக, எதிரிகளின் (முஸ்லீம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்டுகள்) பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்யும் துணிச்சல் உனக்கு இருக்க வேண்டும்”என்று எழுதிய சாவர்க்கருக்கு பிஜேபி அரசால் நாடாளுமன்ற மத்திய அரங்கில் சிலை திறக்கப்பட்டிருக்கிறது.
தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற முழக்கங்களுக்குள் சமத்துவ இந்தியா என்ற கோட்பாடு குழி தோண்டி புதைக்கப் படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. அடிப்படைவாதிகள் வளர்கிறார்கள் என்றால் அவர்கள் வலுவாய் இருக்கிறார்கள் என்று பொருள் அல்ல, அவர்களை எதிர்க்கும் புரட்சிகர சக்திகள் வலுவாய் இல்லை என்பதே பொருள். நீலச்சாயம் வெளுத்து நரியின் வேஷம் கலையும் என்பது போல, சங் பரிவாரம் மற்றும் பா.ஜ.க.வின் அரிதாரம் கலைக்கப்பட்டு, அவர்களின் உண்மை சொரூபம் அம்பலப்படும். சேதாரங்கள் அதிகமாவதற்குள் அதை வேகப்படுத்தி செய்து முடிக்கும் கடமை நமக்கும், இதர முற்போக்கு ஜனநாயக இயக்கங்களுக்கும் உண்டு.
Leave a Reply