1980களில் ஜனதா கட்சி உடைந்தபோது உருவானதுதான் பாரதீய ஜனதா கட்சி. இந்தக் கட்சி உருவான கால கட்டம் எப்படி இருந்தது என்பதைச் சற்று கவனிக்க வேண்டும். 80 களில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. இதனால் ஆளும் வர்க்கங்கள் நேரு காலத்திய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிடத் தொடங்கின இதே கால கட்டத்தில் வளர்ந்த நாடுகளில், வலது சாரிகளின் எழுச்சியைக் காண முடிந்தது. அமெரிக்காவில் ரெனால்ட் ரீகன் இங்கிலாந்தில் மார்கரெட் தாட்சர் போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம். மூன்றாம் உலக நாடுகளில் மதத் தீவிரவாதம் தலை தூக்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் பாரதீய ஜனதாக் கட்சி, இந்தியாவில் ஒருவலதுசாரி, பிற்போக்குக் கட்சியாக உருவானது. அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருந்த்து. இத்தகைய அமைப்புக்கள் ஒரு குறுகலான தேசீயவாதத்தை முன் வைக்கின்றன. அத்துடன் நம் சமுதாயத்திற்குள்ளேயே ஒரு “எதிரியைக்” கண்டுபிடிக்கின்றன. அந்த “எதிரி” வேறொரு மதம், அல்லது வகுப்பாக இருக்கலாம். நம் நாடு சந்திக்கும் சிக்கல்கள் அனைத்திற்கும் இந்த எதிரி தான் காரணம் என்று அந்தக் குறிப்பிட வகுப்பினரைத் தாக்குகின்றன.
1984-ல் பாரதீய ஜனதா தேர்தலில் போட்டியிட்டபோது அதற்குக் கிடைத்த இடங்கள் நான்கு. அந்தக் காலகட்டத்தில் பாஜக தனது அடிப்படைச் சித்தாந்தங்களை மறுபரிசீலனை செய்ய முற்பட்டது. “காந்தீய சோஷலிஸ” கொள்கைகளை அடிப்படைக் கொள்கையாக பாஜக கொண்டிருப்பதை ஆர்.எஸ்.எஸ்- தொண்டர்கள் வரவேற்கவில்லை. 1980-86-ம் ஆண்டு காலத்தில் பா.ஜ.க பழங்குடி மக்கள், பட்டியல் சாதியினர் மற்றும் நகர்ப்ப்புற ஏழைகளின் பிரச்சனைகளைக் கையிலெடுக்க முனைந்தது. ஆனால், ஜனதா கட்சியுடன் செயல்பட்ட அனுபவங்கள் காரணமாகவும், ஆர்.எஸ்.எஸ் தொடர்பு காரணமாகவும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளைப் பின்பற்றும் போக்கை பாஜக கைவிட்டது.
1980-ல் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காங்கிரசுக்கு ஆதரவாகச் செய்த பிரச்சாரத்தையும், அது காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்ததையும் பா.ஜ.க. 19 86 – 89 காலத்தில் அத்வானி பா.ஜ.க. கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். இந்தக்கால கட்டத்தில் தான் “இந்துத்வ” அடிப்படையை பாஜக ஏற்றது. இக்கொள்கையைச் செயல்படுத்தும் பொறுப்பு அத்வானிக்கு அளிக்கப்பட்டது. மேலும் “அயோத்தியில் ராமர்கோவில்” என்பது கட்சியின் முக்கிய முழக்கமானது.
‘உண்மையான தேசீயம்’ என்றும், முதலாளித்துவம், கம்யூனிஸத்திற்கு மாற்றாக. ஒரு 3வது பாதையை உருவாக்குவதாகவும் பிரச்சாரம் செய்தனர். இந்த மாற்றுப் பாதையைப் பற்றிப் பேசியவர் தீன் தயாள் உபாத்யாயா ஆவார். அவருடைய கொள்கையை முன்நிறுத்தி பாஜக தொட்ட பிரச்சனைகளிலெல்லாம் கலவரம் வெடித்த்து, முஸ்லிம் வெறுப்பை உருவாக்கி இந்து ஓட்டுக்களைப் பெறலாம் என்று செயல்படத் தொடங்கினர். 1986 ஆம் ஆண்டுக்குப் பின் பல புதிய பிரச்சனைகளையும் கையிலெடுத்தனர்.
தமிழகத்தில் மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றங்களைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் இந்து சமூகத்தை அழிக்க இஸ்லாமியர்கள் திட்டமிடுவதாக பிரச்சாரம் செய்தார்கள். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை முன்வைத்து ஆதரவு திரட்டியது. இந்த முழக்கத்திற்கு ஆதரவு அதிகரித்த்தைக் கண்ட பா.ஜ.க அதனையும் தன் இலக்காக முன்வைக்கத் தொடங்கியது. காஸ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சாஸனத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்றும் கோரியது. மேலும் வங்க தேசத்திலிருந்து வரும் இந்து அகதிகளுக்கு வரவேற்பு. முஸ்லீம் அகதிகளின் மீது வெறுப்பைத் தூண்டுவது, போன்ற நடவடிக்கைகள் அதிகரித்தன. “சிறுபான்மை ஆணையம்” தேவையற்றது என்றும் கூரத் தொடங்கினர்.
மேற்கூறிய வளர்ச்சிப் போக்குகளின் காலகட்டத்தில், மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு மதச் சார்பின்மையைக் கொள்கையில் ஊசலாட்டத்தைக் கடைப்பிடித்த்துடன், ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கியது. தன் வெற்றிக்காக பிற்போக்குச் சக்திகளுடன் கைகோர்க்கவும் தொடங்கியது. இதனால் ராஜீவ்காந்தி தலைமையிலான அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். பின்னர் ஆட்சிக்குவந்த வி.பி.சிங் அரசை பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டது. அதே சமயம், வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அறிவித்தபோது தனது ஆதரவை திரும்பப் பெறவும், குழப்பத்தை மூட்டவும் முன்நின்றது.
இட ஒதுக்கீடு – இந்தியாவின் பெருமுதலாளி வர்க்கத் திடமும், நடுத்தர வர்க்கத்திடமும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் பா.ஜ.கவை தங்களுக்கான கட்சியாக எண்ணத் தொடங்கினர். அத்வானி தனது ரத யாத்திரையை முடித்துக்கொண்டு கொல்கொத்தா சென்றபோது, அவருக்கு நிர்வா குடும்பத்தார் நடத்திய பள்ளிக் குழந்தைகளை வைத்து பெரும் வரவேற்பு அளித்தனர்.
பாஜகவின் மேற்கூறிய அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தாக்கம் இருந்துகொண்டேயிருந்த்து. வெளிப்படையாகவே பா.ஜ.க தலைவர்களைத் தங்கள் கூட்டங்களுக்கு அழைப்பதும், அரசியல் விவாதங்களை நடத்துவதுமாக செயல்பட்டனர். பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆலோசனைகளைப் பெற்று அரசியல் நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறது என்று வெளிப்படையாகவே கூறினார் அத்வானி.
ஆர்.எஸ்.எஸ் – தன்னுடைய குறிக்கோளாக “இந்து ராஷ்டிரம்” அமைப்பதைக் குறிப்பிடுகிறது. இதற்காகவே பா.ஜ.க-வை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விசுவ இந்து பரிஷத்தின் வளர்ச்சியும், பா.ஜ.க.வின் மீது ஆர்.எஸ்.எஸ்யின் பிடியை இறுக வைத்துள்ளது.
அயோத்திப் பிரச்சினையைத் தொடர்ந்து அத்வானியின் ரத யாத்திரையும், நாடு முழுவதும் மதக் கலவரங்கள் வெடித்தற்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ் என்று இக்கலவரங்களை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
கம்யூனிஸ் எதிர்ப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று கம்யூனிஸ்டுகள் வலுவாக இருக்கும் கேரணம் மே.வங்கம் ஆகிய இடங்களில் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது அவர்களுடைய குறிக்கோள். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் அணி காங்கிரஸ் ஐக்கிய முன்னணியுடன் இணைந்து, இடது முன்னணி மற்றும் மார்க்ஸிஸ்டு வேட்பாளர்களுக்கு எதிராகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைப் பயன்ழுடுத்தி- கம்யூனிஸம் காலாவதியாகிவிட்டது என்றுப் பிரசாரம் செய்து, சோஷலிஸத்தை நோக்கிச் சென்ற மக்களை வென்றெடுக்கலாம் என்பது அவர்களுடைய எதிர்பாப்பு.
“அயோத்தியில் ராமர் கோவில்” – என்ற அறைகூவலுக்கம் ஆர்.எஸ்.எஸ்-வின் இந்து பரிஷத் அமைப்புகளுக்கும் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து அத்வானியின் ரத யாத்திரை நமக்தது. இதன் வெற்றியும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சுங்க பரிவாரங்களின் முயற்சியும் சேர்ந்து 1996-ல் பாஜக – மத்தியில் ஆட்சி அமைக்க உதவியது இது 13- நாட்கள் நீடித்தது. மீண்டும் 1998-ல் பா.ஜ.க அரசு அமைத்தபோது அது 13 மாதங்கள் நீடித்தது. பின்னர் 1999-ல் வாஜ்பாய் தலைமையில் ஒரு கூட்டணி அரசு அமைந்தது. இந்த ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் அணுகுண்டை வெடித்து, பாகிஸ்தானோடு ஒரு போரையும் நடத்தியது பா.ஜ.க இந்த ஆட்சியில், அயோத்தியில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம் போன்ற நடவடிக்கைகள் நிறைவேறவில்லை. இதற்குக் காரணம் பாஜகவுக்கு அப்போது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இல்லை. கூட்டணி ஆட்சி என்பதால் நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காது என்பதேயாகும். இந்தக் காலகட்டத்தில்தான் தீபா மெஷதாவின் “வாட்டர்” படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்தப்படத்தின் கதை வசனத்தின் பிரதி (ளுஉசiயீவ) மத்திய அரசின் செய்தி – ஒலிபரப்புத் துறைக்கு அவர்களுடைய பார்வைக்காக அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரதி அன்றைய ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுதர்சனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் அந்தப்படத்திற்கு எதிர்ப்பு எழுப்பப்பட்டது. இதிலிருந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இருந்தது என்றுத் தெரிந்து கொள்ளலாம். அப்போதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் ஒரு “கலாசார போலீஸாகச் செயல்பட்டது. தீபாமெஹதாவின் “ஃபையர்” படத்திற்கும் கடுமையான எதிர்ப்பை இவர்கள் கிளப்பியது நினைவிருக்கலாம் தொடர்ந்து கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் கலவரம், முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்டது- இவ்வளவும் நடந்தேறின. இதிலும் ஆர்.எஸ்.எஸ்- மற்றும் சங்க பரிவாரங்களின் கைவரிசை உள்ளதென்பது எல்லா அறிக்கைகளிலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டுத் தேர்தலில் பா.ஜ.க அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இதன் பிறகு ஆர்.எஸ்.எஸ் தன் பிரச்சாரகர்களை. அந்தக் கட்சிக்கு அதிகமான அளவில் அனுப்பியது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க-வுக்கும் ஆர்.எஸ்.எஸ்-விற்கும் இடையேயான உறவில் ஒரு தொய்வு எற்பட்டது. குறிப்பாக, அத்வானி பாகிஸ்தானுக்குச் சென்றபோது ஜின்னாவை ஒரு “மதச்சார்பற்ற அரசியல்வாதி” என்று கூறியது ஆர்.எஸ்.எஸ்-அமைப்பிற்கு எரிச்சலூட்டியது. மேலும் பா.ஜ.க-வின் தாக்கத்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிகள் சீர்குலைவதாகவும், நுகர்வோர் கலாசாரத்திற்கு இரையாவதாகவும் அதன் தலைவர்கள் நினைத்தார்கள். இந்தச் சமயத்தில் அத்வானியின் பேச்சு அந்த இயக்கத் தலைவர்களுக்குக் கோபமூட்டியது. பாகிஸ்தானிலிருந்து அத்வானி திரும்பியபின் தனிப்பட்ட அரசியல் கட்சியைத் துவங்க வேண்டும் என்று கூடக் கூறினார்கள். ஆனால் மீண்டும் 2006-ல், ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பா.ஜ.க.வில் முக்கியப் பதவிகள் ஏற்கலாம் என்ற திருத்தத்தை அக்கட்சி கொணர்ந்தது. இதைத் தொடர்ந்து -அக்கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிக்குமிடையேயான உறவு வலுப்பட்டது.
பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பது என்பது முதல்யாருக்கு எந்தப் பதவி, மந்திரிகளுக்கு எந்தத் துறை ஒதுக்குவது என்பது வரை ஆர்.எஸ்.எஸ்.ஸோடு கலந்து கொண்டுதான் அந்தக் கட்சி முடிவு செய்கிறது. பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பது உட்பட முடிவு செய்வது அந்த இயக்கம்தான். உதாரணமாக – ஜார்கண்ட் மாநிலத்தில் கிறித்தவ அமைப்புகளை பலவீனப்படுத்துவதற்காகவே ஷிபு சொரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவோடு பா.ஜ.க. கூட்டு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்தது, இத்தனைக்கும் ஷிபு சொரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் பிரசாரத்தில் ஊழல் எதிர்ப்பை மிக முக்கிய அம்சமாக முன்வைத்தது. ஆனால் அதனை அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பொருட்படுத்தவில்லை.
அடுத்து ஆர்.எஸ்.எஸ், பிரதமருக்கான பொருத்தமான ஆள் யாரென்று ஆராயத் தொடங்கியது. முதலில் பிரமோத் மஹாஜனின் பெயர் முன்னுக்கு வந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் கொலை செய்யப்பட்டதும். அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தேர்வு செய்யப்பட்டார். மோடியின் மீது 2002- குஜராத் கலவரங்களை ஓட்டிய குற்றச்சாட்டுகள் உள்ளன. மோடி ஆர்.எஸ்.எஸ் தொண்டராகப் பணியாற்றியவர். மோடி இந்துத்துவக் கொள்கையோடு பொருளாதார சீர்திருத்தங்களை இணைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று காட்டியவர். மேலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற மோடியைப் பயன்படுத்துவது தான் சிறந்த உபாயம் என்று ஆர்.எஸ்.எஸ் நினைத்தது.
2014-ம் ஆண்டுத் தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெற்று. மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. இது ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிந்துள்ளது. சென்ற முறை பா.ஜ.க ஒரு “மைனாரிட்டி அரசு”, தோழமைக் கட்சிகளின் நிர்பந்தங்களுக்கு ஓரளவு வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் தற்போது அத்தகைய நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லை. இந்த நிலைமை பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் பெரும் துணிச்சலை அளித்துள்ளது. சங்க பரிவாரங்கள் ஆங்காங்கே கலாசாரக் காவலர்களாக செயல்படுகின்றனர். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், மக்கள் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதிலிருந்து அனைத்து விஷயங்களிலும் தலையிட்டுக் கலவரங்களை விளைவிக்கின்றனர்.
“லவ் ஜிஹாத்” (காதல்போர்)- என்ற பெயரில் இந்து இளைஞர்களும், இளம் பெண்களும் முஸ்லீம் அல்லது கிறித்துவ இளைஞர்களைக் காதலித்துத் திருமணம் செய்யக் கூடாதென்று பெரும் கலவரங்களை உருவாக்குவதும் – “கர்வாபசி” (வீடு திரும்புதல்) என்ற பெயரில் பிற சமயங்களைச் சார்ந்தவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதும் போன்ற நிகழ்ச்சிகள் வாடிக்கையாகிவிட்டன. பரிவாரங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ‘இந்துப் பெண்கள் 10 பிள்ளைகள் பெறவேண்டும், இல்லாவிடில், முஸ்லீம்களின் ஜனத்தொகை பெருகி இந்துக்கள் “மைனாரிட்டி” களாகிவிடுவார்கள்’ என்று பேசுகிறார்கள். பசுவைத் தெய்வமாக இந்துக்கள் வணங்குவதால் பசுவதையைத் தடுக்க வேண்டும் என்பதும் இவர்களுடைய பிரசாரம் சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்ட்தாக வதந்தியைக் கிளப்பிவிட்டு, ஒரு முஸ்லீமைக் கொலை செய்தனர். இப்படி ஏராளமான இடங்களில் கலவரங்களைக் கிளப்பிவிடுகின்றனர். இது சிறுபான்மையரிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவை ஏதோ ஒருசில சங்க பரிவாரங்களின் வேலை, இவற்றிற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று ஒதுக்க முடியாது. இந்தக் கலவரங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடனேயே நடக்கின்றன. இந்தப் பரிவாரங்களை ஒன்றிணைப்பது ஆர்.எஸ்.எஸ் தான் இவ்வாறு இந்து – முஸ்லீம் கலவரங்களைக் கிளப்பி அதில் பா.ஜ.கவுக்கு அரசியல் ஆதாயம் தேடுவது. இந்த வழியில் பெரும்பான்மை இந்து ஓட்டுக்களை பா.ஜ.கவுக்கு உறுதிப்படுத்துவது – அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் வழியே தாங்கள் விரும்பும் “இந்துத்துவ ராஜ்ஜியத்தை” உருவாக்குவது. இதுதான் இவர்களுடைய நோக்கம்.
மோடியின் தலைமையிலான பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவாரங்களுக்கிடையே, தெளிவான வேலைப்பிரிவினை காணப்படுகிறது. இந்திய சமுதாயத்தின் கலாசாரம் கல்வி இவற்றில் தலையிட்டு இந்துத்துவக் கொள்கைகளைப் புகுத்துவது, மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிட்டு, கலவரங்களை உண்டாக்கி மக்களிடையே பிரிவை ஏற்படுத்தி – பாஜகவின் வெற்றிக்கு வழிசெய்வது. இது ஆர்.எஸ்.எஸ்- சங்க பரிவாரங்களின் வேலை. இந்தியாவை- இந்துத்வ அடிப்படையிலான நாடாக்குவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது பாஜகவின் வேலை.
மோடி அரசு பொறுப்பேற்றதுமே, எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் தலையிடத் துவங்கிவிட்டது. 2015 செப்டம்பர் 2முதல் 4-ந் தேதிகளில் சங்க பரிவாரங்கள் அனைத்தையும் இணைத்து, ஆர்.எஸ்.எஸ் – ஒரு கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் – ராஜ்நாத்சிங் அருண்ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பிரதமர் மோடி உப்பட கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்- நாடாளுமன்றத்திற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் அப்பாற்பட்ட அமைப்பு. நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பேற்று மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தேவை இல்லாத அமைப்பு. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டது வெறும் மரியாதை நிமித்தமான செயல் அல்ல. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் கிளை என்பதை இது உறுதிப்படுத்தியது. தற்போது நடந்த இந்தக் கூட்டத்தில், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், பாதுகாப்பு கல்வி போன்ற துறைகளில் அரசின் செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டன. அமைச்சர்கள், தங்கள் துறைகளைப் பற்றி அறிக்கைகள் அளித்ததோடு, கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள். இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசையே இயக்குகிறது என்றால் அது மிகையல்ல.
பல்வேறு கலாசார மற்றும் கல்வி அமைப்புக்களில் அரசு பா.ஜ.க.வுக்கும் சங்க பரிவாரங்களுக்கும் நெருக்கமானவர்களை அல்லது இவற்றின் உறுப்பினர்களைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியுள்ளது. நாலந்தா பல்கலைக் கழகத்தின் “வேந்தர்” பதவியிலிருந்து அமர்த்தியா ஸென் விலகியபோது, தான் அப்பதவியிலிருந்துப் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதுபோல் உணர்ந்ததாகக் கூறினார். திரைப்படக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பில் பா.ஜ.கவைச் சேர்ந்த கஜேந்திர சௌஹான் என்பவரை நியமித்ததற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அந்தக் கல்லூரி மாணவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். சௌஹான் பா.ஜ.க உறுப்பினர் ஷயாம் பெனகல், குல்ஜார் போன்ற திறமைவாய்ந்த திரைப்படக் கலைஞர்களை ஒதுக்கிவிட்டு சௌஹானை நியமித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் பலரும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கழகத்தின் பல்வேறு கமிட்டிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களான சந்தோஷ் சிவன் போன்றோர் கமிட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
அடுத்து, நாட்டின் முன்னணிக் கல்விக் கூடங்களான “இந்தியத் தொழில் நட்பக் கழகம் (ஐஐடி) நிர்வாகக் கல்வி” (ஐஐஎம்) நிறுவனங்கள் – போன்ற கல்விக் கூடங்களின் தன்னாட்சியைக் குலைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை அடிக்கடி சந்தித்து, உயர் கல்வியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்களைப் பொய்யான காரணங்களைக் காட்டிப் பதவி விலகக் செய்வதும், தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு ஓர் உதாரணம் “கல்வி மற்றும் ஆசிரியப் பயிற்சியின் தேசீய மைய” (NCERT) இயக்குனராகப் பணியாற்றியவர் பர்வீன் ஸிங்க்ளேர் கடந்த ஆண்டுகளில் இவர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்காகப் பல தரப்பினரையும் சந்தித்து ஆலோசித்துப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். இவர் மீது ஏதேதோ குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பதவி விலகச் செய்தது இந்த அரசு. தற்போது இந்த மையம் தலைவர் இல்லாமலேயே உள்ளது. ஏற்கனவே குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுத்த தீஸ்டா செட்டால்வாட் என்ற பெண்மணியின் மீது வழக்குகள் போட்டு அலைக்கழிக்கிறது. இந்தப் பட்டியலில் தற்போது இந்திரா ஜெய்சிங்கும் சேர்ந்திருக்கிறார்.
மேற்கூறியவை மட்டுமின்றிப் பாடத்திட்டத்திலும் கைவைக்கிறது. பாஜக ஆர்.எஸ்.எஸ் கூட்டணி ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணக் கதைகள் இவற்றைப் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்பது இவர்களுடைய திட்டம். இதைத் தவிர வரலாற்றைப் புரட்டுவதும் இவர்களுடைய திட்டங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரீகம், ஆரிய நாகரீகம் என்றுத் திரிக்க முயற்சிக்கிறார்கள். தற்போது “இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் (ICHR) சுதர்சன்ராவ் ஆர்.எஸ்.எஸ்.ஸிக்கு நெருக்கமானவர். இவர் தெலுங்கானா காகதீயா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். இவர் சாதிப்பிரிவுகளை உயர்வாகப் பேசிச் சர்ச்சையை உருவாக்கியவர். ராமாயணம், மஹாபாரதம் இவை வரலாற்று நிகழ்ச்சிகள் என்று நிரூபிக்க வேண்டும் என்பது இவருடைய நோக்கம். வரலாற்று ஆராய்ச்சி எந்த நிலைக்குப் போகும் என்ற கேள்வி எழுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலையீடு தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்துகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தொழிற் சங்கப் போராட்டத்தில் பாரதீய மஸ்தூர் சங்கம் கலந்துகொள்ளாமல் கடைசி நேரத்தில் பின்வாங்கியது.
மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் தலையிட்டுக் கலவரங்களைத் தூண்டுவதற்குத் உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றே போதுமான உதாரணம். இதைப்பற்றிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் “மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இதுதான் கதி”- என்று மிரட்டியுள்ளார். ஆனால் இதே மனிதர் மாட்டிறைச்சி ஏற்றுமதிசெய்யும் மிகப் பெரிய நிறுவனத்தின் சொந்தக்காரர்களில் ஒருவர் என்பது பின்னர் தெரியவந்தது.
மேற்கூறிய நிகழ்ச்சிகளை நியாயப்படுத்துவது, அல்லது இவை ஏதோ ஒரு தற்செயலான, வருந்தத்தக்க நிகழ்ச்சி என்பதைப்போலவே மத்திய அமைச்சர்களும் – ஏன் பிரதமரே கூடப் பேசுகின்றனர். அவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கண்டிக்கமாட்டார்கள். மேற்கூறிய நிகழ்ச்சிகள் அவர்களுடைய அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் என்று நினைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இடையிலான கூட்டணி இந்தியாவின் பெருமைமிக்க பன்முகக் கலாசாரத்தை ஒழித்து, இந்தியாவை ஒரு ‘இந்துத்வ நாடாக’ உருவாக்க நினைக்கிறார்கள். நாட்டின் பிரதமர் இவர்களுடைய தலைவர். அவரும் இந்தப் போக்கைக் கண்டிக்கவோ நிறுத்தவோ முயற்சி செய்வார் என்று எப்படி நம்பமுடியும்?
ஆர்.எஸ்.எஸ் ஒரு சர்வாதிகாரப் போக்கு உடைய அமைப்பு. இந்த அமைப்பை உருவாக்கிய தலைவர்கள் அனைவரும் இத்தாலியின் சர்வாதிகாரி முஸோலினி, ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் இவர்களைப் பெரிதும் புகழ்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோற்றத்திற்குக் காரணமானவர் ஹெட்கேவார். அவருடைய குரு மூஞ்ஜே இவர் 1931-ல் இத்தாலி சென்று சர்வாதிகாரி முஸோலினியைச் சந்தித்தார். இதன்பிறகு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நாஸிக்கில் இந்து ராணுவப் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். 1939-ல் ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியபோது அதைப் புகழ்ந்து, ‘இந்துக்கள் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்’ என்றார் கோல்வால்கர். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். அவர் காந்தியைக் கொன்றபோது, அவன் அந்த அமைப்பின் உறுப்பினர் இல்லை” என்றார்கள். ஆனால் அவன் உறுப்பினனா, இல்லையா என்பது கூட அடுத்த கேள்விதான். ஆர்.எஸ்.எஸ்ஸின் நச்சுப் பிரசாரம் எந்த அளவுக்கு அவனைப் போன்றவர்களின் மனதில் கொடூரமான எண்ணங்களை விதைத்தது என்பது மிகவும் முக்கியம். இவர்களுடைய சித்தாந்தத்தில் சமத்துவம், சகோதரத்துவம் இவற்றிற்கு இடமில்லை. உழைக்கும் வர்க்கம் கசக்கிப் பிழியப்பட வேண்டும், சுரண்டப்பட வேண்டிய பகுதி என்பதுதான் இவர்களுடைய எண்ணம் பெண்கள் வெறும் பிள்ளைபெறும் இயந்திரங்கள் ஹிட்லர் யூதர்களைக் கொன்று ஒழித்தபிறகு கம்யூனிஸ்டுகளையும் ஒழிக்கத் திட்டமிட்டிருந்தான். ஹிட்லரின் வழிவந்த இவர்களுக்கும் கம்யூனிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டிய எதிரிகள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது ஜனநாயகம், மதச் சார்பின்மை ஆகியவற்றில் சற்றும் நம்பிக்கை இல்லாத அமைப்பாகும், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க ஒரு பிற்போக்கு வலது சாரி அமைப்பாகும். நம் நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டம் வழிநட்த்துகிறது. இந்தச் சட்டம் மதச் சார்பின்மை, ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கொள்கைகளை அடி நாதமாகக் கொண்டது. இந்தக் கோட்பாடுகள் அனைத்தையும் உடைத்தெரிந்து, இந்திய அரசியல் சாசனத்தை பழிக்க முனைகிறது. “ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க” – கூட்டணி இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் அழிந்தால், அது நாட்டு மக்களின் உரிமைகளையும் சேர்த்து அழிக்கும். சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவும், முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் காக்க, பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை எதிர்த்து வீழ்த்த வேண்டும்.