மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு) தீர்மானம் முழுமை


கொல்கத்தா, டிசம்பர் 27-31, 2015

21வது கட்சி காங்கிரசின் முடிவின் படி நடைபெற்ற ஸ்தாபனம் குறித்த பிளீனம்:

கீழ்க்கண்டவற்றை நடத்திடத் தீர்மானிக்கிறது:

தற்போதுள்ள சவால்களை சந்திக்கும் தன்மையுடன் கட்சி ஸ்தாபன செயல்திறன்களை வலுப்படுத்தி, முறைப்படுத்துவது; இந்திய மக்கள் மத்தியில், மக்கள் ஜனநாயக அணியின் முன்னோடியான இடதுஜனநாயக அணியைக் கட்டுவதற்கு சாதகமாக வர்க்க சமன்பாட்டை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட அரசியல் நடைமுறை உத்திக்கு இசைந்தாற் போல், பிரம்மாண்டமான வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது; இதன் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவது

கீழ்க்கண்டவற்றை அடிக்கோடிட்டு காட்டுகிறது:

மேற்கூறிய புரட்சிகர கடமைகளை நிறைவேற்றி, அனைத்து சுரண்டப்படும் வர்க்கங்களையும் அணி திரட்டும் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சியாக மேலெழ அவசியமான ஸ்தாபன திறன்களைப் பெருமளவில் கண்டிப்பாக வளர்த்திட வேண்டும்.

 • ஏனெனில் முதலாளித்துவத்தின் கீழ் எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தாலும் அதிகரிக்கும் சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்க முடியாது என்பதையே உலக பொருளாதார நெருக்கடியின் யதார்த்த சூழல் காட்டுகிறது. சோஷலிசம் என்கிற அரசியல் மாற்றின் மூலமே இது சாத்தியம்
 • ஏனெனில் மக்களின் உள்ளார்ந்த திறமைகளை அவர்களை உணர செய்து, ஒரு மேம்பட்ட இந்தியாவை அதன் அடிப்படையில் உருவாக்க வல்ல மாற்றுக் கொள்கையைத் தம் வசம் வைத்திருக்கும் அரசியல் கட்சியாக நாம் இருக்கிறோம்.
 • ஏனெனில் இந்தியாவின் இளைஞர் சமூகத்துக்கு ஒரு சிறந்த எதிர்காலம் குறித்த தீர்க்கமான நோக்கை வழங்குகிற அரசியல் கட்சி நாம். அவர்களுக்குத் தரமான கல்வி, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு அளிப்பதற்காக நமது நாட்டின் வளங்களைப் பயன்படுத்தும் மாற்றுப்பாதையை முன்வைக்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.
 • ஏனெனில் வெறி பிடித்த, சகிப்புத் தன்மையற்ற பாசிஸ இந்து ராஜ்யத்தை திணிக்க முற்படும் ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க.வின் திட்டங்களை முறியடித்து, மத அடிப்படையில் மக்களைக் கூறு போடும் முயற்சிகளைக் கூர்மை படுத்துவதை எதிர்த்து, பன்முகக் கலாச்சாரம், மொழி, மதம், இனங்களைப் பின்பற்றும் மக்களின் ஒற்றுமைக்காக வாதாடுகிற, போராடுகிற நிலை மாறாத அரசியல் சக்தியாக நாம் இருக்கிறோம்.
 • ஏனெனில் அனைத்து வித அடிப்படைவாதம், பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்க்கும் கட்சியாக நாம் இருக்கிறோம். பெரும்பான்மை மதவாதமும், சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.
 • ஏனெனில், சாதிய அடிப்படையிலான தீண்டாமை, அனைத்து வித பாகுபாடுகள் மற்றும் பல வகை சமூக ஒடுக்குமுறைகளை சமரசமின்றி எதிர்க்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.
 • ஊழல் மற்றும் தார்மீக சீரழிவுகளை எதிர்த்துப் போராடும் மிக உயர்ந்த அரசியல் நெறிகளைத் தடுமாற்றமின்றி உயர்த்திப் பிடிக்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.

 

எத்தகைய திட்டவட்ட சூழலில் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் கீழ்க்கண்ட விதத்தில் கணக்கில் எடுக்கிறது:

 • சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச ஆட்சி அமைப்புகளும் சிதறுண்டு போன நிலையில், சர்வ தேச அரசியல் சக்திகளின் சேர்க்கை ஏகாதிபத்தியத்துக்கு சாதகமாக மாறிவிட்ட பாதகமான சூழ்நிலை
 • சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையில் ஏகாதிபத்திய உலகமயத்தை கெட்டிப்படுத்த நடந்து கொண்டிருக்கிற முயற்சிகள்
 • இதனுடன் இணைந்த நடவடிக்கையாக மக்களை, குறிப்பாக வளர்ந்து வரும் சுரண்டப்படும் வர்க்கங்களை அரசியலற்றதாக ஆக்குவதற்காக அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, சுற்றுச்சூழல் என்று அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப் படும் கம்யூனிச எதிர்ப்பு, பிற்போக்கு சித்தாந்த தாக்குதல்
 • பல்வேறு நாடுகளிலும் இதற்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள், ஆனாலும் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக வர்க்க ரீதியான தாக்குதலை எழுப்பி, சோஷலிச அரசியல் மாற்றை முன்னிருத்தும் நிலை எட்டாத சூழல்
 • இந்திய ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தைத் தழுவி, இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் கீழ்நிலை கூட்டாளியாக ஆக்குவதற்கு எடுக்கும் முயற்சிகள்
 • இவற்றின் காரணமாக சமூகத்தில் உருவான கட்டமைப்பு மாற்றங்களானது வேறுபட்ட வர்க்கங்களின் மீது ஏற்படுத்தும் வெவ்வேறான தாக்கங்கள்; அவற்றை எதிர்கொள்ளத் தேவையான வர்க்க போராட்டங்களைக் கூர்மைப்படுத்த நமது ஸ்தாபன செயல்முறையில் மாற்றங்கள் நிகழ வேண்டிய சூழல்
 • மத்திய அரசைக் கைப்பற்றி அரசு அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகுப்புவாத சக்திகள் இந்திய அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தைத் தகர்த்து, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியலான இந்து ராஜ்யத்தை நிறுவ எடுக்கும் முயற்சிகள்
 • கடும் நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி, இந்திய மக்கள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவதுடன், வெறி பிடித்த வகுப்புவாதம், அதிக அளவிலான சர்வாதிகாரம் கடைப்பிடிக்கப் படும் சூழல்
 • நமது வலுவான தளங்கள் மீது, குறிப்பாக மேற்கு வங்கத்தின் மீது வலதுசாரி பிற்போக்கு சக்திகள் ஒன்று சேர்ந்து நடத்தும் திட்டமிட்ட தாக்குதல்கள், அரசியல் பயங்கரவாதம், அச்சுறுத்தல் நடவடிக்கைகள்; இவற்றை முறியடித்து மீண்டெழும் வகையில் நமது ஸ்தாபனத்தை வலுப்படுத்தும் தேவை உள்ள நிலை
 • நமது ஸ்தாபன பலவீனங்களை சரி செய்ய, குறிப்பாக கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவு/தேக்கம், ஏற்றத்தாழ்வான உறுப்பினர் கலவை, தேர்தல் பலத்தில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியை சரி செய்ய வேண்டிய அவசர தேவை

1978ல் சால்கியா பிளீனம் நடந்த போது, கட்சி தனது அரசியல் செல்வாக்கில் ஏறுமுகமாக இருந்தது. ஆனால் தற்போது, அரசியல் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ள மோசமான சூழலில் இருக்கிறோம். இத்தகைய சூழலில்,

அவசரமாகத் தேவைப்படுவது:

 • மாஸ் லைனைக் கடைப்பிடித்து நமது சொந்த பலத்தையும், தலையீடு செய்யும் திறனையும் துரிதமாக அதிகரிப்பது; இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி இடது ஜனநாயக அணியைக் கட்டுவது; இதனைத் தேர்தல் அணியாக மட்டுமின்றி, பிற்போக்கான ஆளும் வர்க்கங்களைத் தனிமைப்படுத்தி, அரசியல் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய சக்திகளின் போராட்ட அணியாக உருவாக்குவது
 • ஒற்றுமை-போராட்டம் என்கிற இரட்டை கடமைகளை நிறைவேற்றும் நோக்குடன் ஐக்கிய முன்னணி உத்தியைத் திறமையாக செயல்படுத்துவது; இதன் மூலம் முதலாளித்துவ கட்சிகளது செல்வாக்கின் பின்னுள்ள சுரண்டப்படும் வர்க்கப் பகுதிகளை அணுக வகை செய்யும் விதத்தில் கூட்டு இயக்கங்களை உருவாக்குவது
 • அரசியல் சூழலில் உருவாகும் துரித மாற்றங்களை எதிர்கொள்ள, அரசியல் நடைமுறை உத்திக்கு ஏற்ற விதத்தில் நெகிழ்வான உத்தியைக் கடைப்பிடிப்பது
 • சமூக இயக்கங்கள், மக்கள் திரட்டல்கள், பிரச்னை அடிப்படையிலான இயக்கங்களுடன் கூட்டு மேடைகளை நிறுவுவது
 • இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பதை முதன்மை இடத்தில் வைத்து, அதற்குப் பொருந்துவதாகத் தேர்தல் உத்தியை உருவாக்குவது
 • கீழ்க்கண்ட அடிப்படையில் வர்க்க வெகுஜன போராட்டங்களை வலுப்படுத்துவது:
 • நிலப்பிரபு–கிராமப்புற பணக்காரர் அணி சேர்க்கைக்கு எதிராக விவசாய தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் அல்லாத இதர துறைகளில் உள்ள கிராமப்புற தொழிலாளர்கள், கை வினைஞர்கள், இதர கிராமப்புற ஏழை பிரிவினரை இணைத்த பரந்த அணியை அமைப்பது
 • முக்கிய மற்றும் கேந்திர தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்களைத் திரட்டுவது; அமைப்பு சார் மற்றும் அமைப்பு சாரா துறைகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டுவது; நமது தொழிற்சங்கங்கள், இளைஞர், பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து பகுதி(ஏரியா) வாரி அமைப்புகளை உருவாக்குவது
 • கிராமப்புற ஏழைகளை குடியிருப்பு/ஸ்தல மட்டங்களில் திரட்டுவது; தொழில்வாரி கமிட்டிகளை குடியிருப்பு/அருகமை/ஸ்தல மட்டத்தில் உருவாக்குவது
 • குடிமக்கள் மன்றம், கலாச்சார அமைப்புகள்/மேடைகள் உள்ளிட்டு மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை மற்றும் பணியுடன் தொடர்புடைய அமைப்புகளை உருவாக்கி, அவர்கள் மத்தியில் நமது பணியினை, குறிப்பாக தத்துவார்த்த பணியினை, அறிவியல் கண்ணோட்டத்தை வலுப்படுத்துவது. குடியிருப்பு சங்கங்கள், ஓய்வுபெற்றோர் சங்கங்கள், தொழில்முறை/சார்ந்த அமைப்புகளின் நமது பணியை வலுப்படுத்துவது

இக்கடமைகளை நிறைவேற்ற கீழ்க்கண்டவை தேவை:

 • கட்சி மையத்தை அவசரமாக வலுப்படுத்த வேண்டும்:
 • மையத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு, கூட்டு செயல்பாடு, தனி நபர் பொறுப்பை உறுதி செய்வது
 • மாநிலங்களில் நடக்கும் இயக்கங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்களில் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்பை அதிகரிப்பது
 • ஸ்தாபன முடிவுகளைக் கண்காணித்து, தேவையை ஒட்டித் தலையீடு செய்வது
 • வர்க்க வெகுஜன அமைப்புகளின் வேலை பரிசீலனையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய குழுவில் செய்வது
 • கட்சிக் கல்வியை நிரந்தர அடிப்படையில் கொண்டு செல்வது; அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சுய கல்விக்கு முயற்சிக்க ஊக்கப் படுத்துவது; விரைவில் உருவாக இருக்கிற சுர்ஜித் பவனில் கட்சிப் பள்ளியை நிறுவுவது,
 • பல்வேறு துறைகளை இயக்கக் கூடிய திறன் பெற்ற ஊழியர்களை அடையாளம் கண்டு அங்கே அமர்த்துவது
 • முன்னுரிமை மாநிலங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது; இந்தி பேசும் மாநிலக் குழுக்களின் தேவைகளைத் துரிதமாக பூர்த்தி செய்வது
 • நாடாளுமன்றப் பணிகளையும், வெளியே களத்தில் செய்ய வேண்டிய பணிகளையும் திறமையாக இணைப்பது
 • உலக ஏகாதிபத்தியம், அதன் முகமைகள் மற்றும் உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளின் கம்யூனிச, மார்க்சீய எதிர்ப்பு சித்தாந்த தாக்குதலை எதிர்த்துப் போரிடுவது
 • வகுப்புவாத சக்திகளின் தத்துவார்த்த தாக்குதலை எதிர்கொள்ள:
 • இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள், வரலாற்றியலாளர்கள், கலாச்சார தளத்தில் இயங்கும் பிரமுகர்கள் மற்றும் இதர பகுதி அறிவு ஜீவிகளைத் திரட்டுவது
 • மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்ய சமூக, கலாச்சார நடவடிக்கைகளை உருவாக்குவது குறித்து சிறப்பு கவனம் செலுத்துவது; ஆசிரியர் அமைப்புகள், சமூக அமைப்புகளை ஈடுபடுத்தி மழலையர் பள்ளி மற்றும் பொதுவான பள்ளிகள் மட்டத்தில் இதற்கான முன்முயற்சி எடுப்பது
 • சுரண்டப்படும் வர்க்கங்கள், தலித், ஆதிவாசி மக்கள் மத்தியில் வகுப்புவாதக் கருத்தியலின் செல்வாக்கு ஊடுருவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை வடிவமைப்பது
 • முற்போக்கு மற்றும் மதச்சார்பின்மை கருத்துக்களையும், கலாச்சார படைப்புகளையும் கொண்டு செல்ல பரந்த கலாச்சார மேடைகளை உருவாக்குவது
 • சுகாதார மையங்கள், கல்வி மையங்கள், வாசிப்பு மன்றங்கள், நிவாரண பணிகள் போன்ற சமூக நல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது
 • மக்களுக்கான அறிவியலையும், கலை இலக்கிய நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவது

இக்கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற:

 • கட்சி உறுப்பினர்களின் தரத்தைக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் பெருமளவு மேம்படுத்துவது:
 • கட்சி உறுப்பினர் சேர்ப்பை உறுதியற்ற, தளர்வான தன்மையில் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பது; மக்களுக்கான போராட்டங்களில் துடிப்புடன் இறங்குபவர்களை அடையாளம் கண்டு, துணை குழுக்கள் மூலம் அவர்களைக் கட்சிக்குள் கொண்டு வருவது; கட்சி அமைப்புச் சட்டம் கூறியுள்ள 5 அம்ச அளவுகோலின் அடிப்படையில் உறுப்பினர்களைப் புதுப்பிப்பது
 • துணை குழுக்களை முறையாக செயல்படுத்துவது; அவர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாகத் தயாராகும் விதத்தில் மார்க்சீய லெனினீயத்தை போதிப்பது
 • வர்க்க வெகு ஜன அமைப்புகளில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபடுவதை உறுதி செய்வது
 • கமிட்டிகளில், குறிப்பாக உயர்நிலை கமிட்டிகளில் வர்க்க மற்றும் சமூக சேர்க்கையை மேம்படுத்துவது
 • அடுத்த 3 ஆண்டுகளில் கட்சியில் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தை எட்டக் கூடிய விதத்தில் அதிகரிப்பதை உறுதி செய்வது
 • இளைஞர்களை ஈர்க்கக் கூடிய விதத்தில் கட்சியின் நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் தகவமைத்து, கட்சியில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதை உறுதி செய்வது
 • முறையான ஊழியர் கொள்கையை உருவாக்கி, இளம் தோழர்களை அடையாளம் கண்டு பொறுப்புகளுக்கு உயர்த்துவது ; தோழர்கள் குறித்த மதிப்பீட்டைக் கூட்டாக உருவாக்கி அதன் அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்வது
 • புரட்சிகர மாற்றத்துக்காக தியாக சமர் புரிந்து, சித்தாந்த பிடிப்பின் அடையாளமாகத் திகழும் விதத்தில் முழு நேர ஊழியர்களை வளர்ப்பது
 • முழுநேர ஊழியர்களுக்கு முறையான ஊதிய விகிதத்தை உறுதி செய்வது; மாதம் தோறும் அதை வழங்குவது
 • நிர்ணயிக்கப் பட்டுள்ள லெவி தொகை அளிக்கப்படுவதைக் கறாராக அமல்படுத்துவது
 • கட்சிக்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்ய பிரதான நிதி ஆதாரமாக முறையான வெகுஜன வசூலை நடத்துவது; கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் வரவு செலவு கணக்கினை அனைத்து மட்டங்களிலும் சீராகப் பராமரிப்பது

 

 • துடிப்பான ஜனநாயக மத்தியத்துவத்தை உறுதி செய்வது:
 • கிளைகள் முறையாகக் கூடி, செயல்படுவதை உறுதி செய்வது; கிளை செயலாளர்களை வளர்த்தெடுப்பதும், பயிற்றுவிப்பதும் இதற்குத் தேவை. மக்களுடன் உயிரோட்டமான தொடர்புகளைப் பராமரிக்க கிளைகளின் திறமையான செயல்பாடு மிகவும் அவசியம்.
 • அனைத்து மட்டக் கட்சி கமிட்டிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது
 • கூட்டு செயல்பாடு தனி நபர் பொறுப்பு முறையான கண்காணிப்பு என்ற ஸ்தாபன கோட்பாட்டை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கறாராக அமல்படுத்துவது; தனி நபர் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்ட விதம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்வது
 • விமர்சனம் சுய விமர்சனம் என்ற ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துவது
 • கீழ்மட்ட கமிட்டிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து வரும் கருத்துக்களைத் தலைமை கவனித்து, காதுகொடுத்துக் கேட்டு உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்துவது
 • பிரதேசவாதம், அகநிலைவாதம், தாராளவாதம், குழுவாதம் போன்ற தவறான போக்குகளை எதிர்ப்பது; நாடாளுமன்றவாதத் திரிபுகளை எதிர்த்துப் போரிடுவது
 • வருடாந்திர உறுப்பினர் பதிவு புதுப்பிப்புடன் சேர்த்து நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்துவது, அதனைப் பரிசீலனைக்கு உட்படுத்துவது

 

 • சக்திவாய்ந்த வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது:
 • வெகுஜன அமைப்புகளின் பலத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவது
 • ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மத்தியக் குழு ஆவணங்களைக் கறாராக அமல்படுத்துவதன் மூலம், வெகுஜன அமைப்புகளின் சுயேச்சையான, ஜனநாயக செயல்பாட்டை மேலும் பலப்படுத்துவது
 • வெகுஜன அமைப்புகளின் அகில இந்திய மையங்களை வலுப்படுத்துவது
 • வெகுஜன அமைப்புகளின் கிளைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் கவனம் செலுத்துவது
 • வெகுஜன அமைப்புகளுக்கான சப் கமிட்டி/பிராக்‌ஷன்களை அமைக்காத மாநிலங்கள் அதனை உடனடியாக செய்வது
 • அரங்கில் கட்சி கட்டும் கவனத்துடன் சப் கமிட்டி, பிராக்‌ஷன் கமிட்டிகளின் பொருத்தமான, சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்துவது

 

 • சமூக பிரச்னைகளை எடுப்பது:
 • பாலின ஒடுக்குமுறைக்கும், தலித், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மதவழி சிறுபான்மையினர் மீதான பாகுபாடுகளுக்கும் எதிரான போராட்டங்களை, ஒட்டுமொத்தக் கட்சியும் உறுதியாக நடத்துவது
 • தலித், பழங்குடியினர், மதவழி சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை எடுப்பதற்காக நாம் உருவாக்கியிருக்கும் அமைப்புகள், மேடைகளின் செயல்திறனை மேம்படுத்துவது
 • இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைத் தாங்கி நிற்கிற இரண்டு கால்களைப் போன்ற பொருளாதார சுரண்டல்-சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையில் எடுப்பது

 

 • நமது செல்வாக்கை விரிவுபடுத்துவது:
 • பலவீனமான மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கட்சி ஸ்தாபனத்தையும், இயக்கங்களையும் பலப்படுத்துவது
 • ஏற்கனவே நாம் நிகழ்த்தி வரும் கலாச்சார நடவடிக்கைகளை வலுப்படுத்தி, புதிய பகுதிகளில் கலை குழுக்களை உருவாக்கி பண்பாட்டுத்துறையில் தலையீடுகளை அதிகரிப்பது
 • முன்னுரிமை மாநிலங்கள் பட்டியலைத் திருத்தி அமைப்பது; ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னுரிமை பகுதிகள், முன்னுரிமை அமைப்புகளை வரையறை செய்து, அவற்றின் வளர்ச்சிக்கு முறையான கவனம் செலுத்துவது
 • உள்ளூர் மக்களை பாதிக்கும் பிரச்னைகளின் மீது தொடர்ந்த விடாப்பிடியான ஸ்தல போராட்டங்களைக் கட்டி அமைக்க ஏற்ற விதத்தில் ஸ்தல கட்சி கமிட்டிகளின் ஆற்றலை மேம்படுத்துவது
 • நாடாளுமன்றம் மற்றும் இதர தேர்ந்தெடுக்கப் படும் பொறுப்புகள் உள்ள அமைப்புகளில் செயல்படும் கட்சி கமிட்டிகளை வலுப்படுத்துவது; அத்தகைய அமைப்புகளில், களத்தில் நடக்கும் போராட்டங்களைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் திறமையான தலையீடுகள் நடப்பதை உறுதிப்படுத்துவது
 • கட்சி வகுப்புகளை சீராக நடத்துவது; மையப்படுத்தப் பட்ட பாடத்திட்டத்தையும், அத்துடன் அவசியமான சுய கல்விக்கான பட்டியலையும் உருவாக்குவது
 • கட்சி பத்திரிகைகள், வெளியீடுகளைப் பெருமளவு செம்மைப் படுத்துவது; வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் மேம்படுத்துவது
 • கட்சியின் நிலைபாடுகளையும், கண்ணோட்டத்தையும், கருத்துக்களையும் கூடுதலான மக்கள் பகுதியினரிடம் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த கருவியான சமூக ஊடகத்தின் மீது முறையான கவனம் செலுத்தி அத்தளத்தில் தலையீடுகளை உருவாக்குவது

எனவே அவசியம் கீழ்க்கண்டவற்றை நாம் செய்ய வேண்டும்:

 • பிரம்மாண்டமான, வீரியம்மிக்க வர்க்க, வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடும் சக்தியைப் பெறுவதற்கு மக்களுடனான நமது இணைப்பை பலப்படுத்துவது
 • இந்த உயிரோட்டமான இணைப்பை நிறுவிட, கட்சியின் மாஸ் லைனை உருவாக்கித் திறமையாக செயல்படுத்துவது
 • சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் அனைத்து கிராமப்புற மக்கள் பகுதியினரின் போராட்ட ஒற்றுமையையும் கட்டி, ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியான விவசாய புரட்சியை முன்னேற்றும் பணியில் கவனத்தைக் குவிப்பது
 • தொழிலாளி விவசாயி கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவது
 • பிரதானமாக, கீழ்க்கண்டவற்றின் மீது கவனம் செலுத்திட வேண்டும்:
 • இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டவும், கட்சியின் செல்வாக்கை விஸ்தரிக்கவும் பொருளாதார, சமூகப்பிரச்னைகளில் வர்க்க வெகுஜன போராட்டங்களைக் கட்டமைப்பது
 • மாஸ் லைனைக் கடைப்பிடித்து மக்களுடன் உயிரோட்டமான தொடர்பினை நிறுவுவது
 • உயர்ந்த தரத்துடன் கூடிய உறுப்பினர்கள் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதற்காக ஸ்தாபனத்தை செம்மைப்படுத்துவது
 • கட்சியின் பால் இளைஞர்களை ஈர்த்திட சிறப்பு முயற்சிகளை செய்வது
 • வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்த்து தத்துவார்த்த போராட்டம் நடத்துவது

கட்சியின் அகில இந்திய மையம் துவங்கி இக்கடமைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்யப் பட வேண்டும். மாநிலக் குழுக்களும் குறிப்பிட்ட காலத்தில் இக்கடமைகளை நிறைவேற்ற ஸ்தூலமாகத் திட்டமிட்டு, ஒரு வருட காலத்தில் பரிசீலிக்க வேண்டும்.

சிபிஐ(எம்) – இந்திய மக்களின் புரட்சிகர கட்சி

கட்சி உருவகப்படுத்தும் காட்சி உயிர் பெற, நமது ஸ்தாபன செயல் திறன்களைப் மிகப் பெருமளவு வலுப்படுத்திக் கொள்வது தேவைப்படுகிறது.

ஒரு புரட்சிகர கட்சி என்ற முறையில், இந்திய விடுதலைக்கான, சோஷலிச மாற்றுக்கான கட்சியின் பெருமை மிகு போராட்ட மரபின் வாரிசுகளாக விளங்குகிறோம். சர்வ தேச, உள்நாட்டு புரட்சிகர இயக்கத்தின் தத்துவார்த்த, ஸ்தாபன திரிபுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற பாரம்பர்யத்தையும் சுவீகரித்துள்ளோம்.

மார்க்சீய லெனினீய புரட்சிகர உள்ளடக்கத்தைப் பற்றி நின்று, அனைத்து மார்க்சீய விரோத தத்துவங்களையும், கம்யூனிச இயக்கத்துக்குள் எழுந்த இடது அதிதீவிரவாதம், வலது திருத்தல்வாதத்தினையும் எதிர்த்துப் போராடி, தாம் வழி நடத்தும் மக்கள் போராட்டங்களின் பலத்தின் அடிப்படையில் இந்தியாவில் வலுவான கம்யூனிச சக்தியாக சிபிஐ(எம்) முன்னெழுந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் அரும்பெரும் தியாகம், அர்ப்பணிப்பின் மூலமாகவே இது சாத்தியமாகியிருக்கிறது.

சுரண்டுகிற ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, சுரண்டப்படும் அனைத்து வர்க்கங்களை சேர்ந்த மக்கள் திரள் கிளர்ந்தெழாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, மாற்றம் குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இறுதியில் சீர்தூக்கிப் பார்த்தால், மக்கள் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். புரட்சிகர வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்களின் பேரெழுச்சியின் முன்னணி படையாக, புரட்சிகர கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முன்னெழ வேண்டும். இது நமது வரலாற்றுப் பொறுப்பு.

இப்பொறுப்பை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேறும் உறுதியை, இந்த பிளீனத்தில் இரண்டு மடங்காக்குவோம்.

அகில இந்திய வெகுஜன தளத்துடன் வலுவான சிபிஐ(எம்) உருவாவதை நோக்கி முன்னேறுவோம்

மாஸ் லைனைப் பின்பற்றும் புரட்சிகர கட்சியாக இயங்குவதை நோக்கி முன்னேறுவோம்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: