மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு செயல்படுவது?


(அடையாள அரசியலும், வகுப்புவாதமும் தலைதூக்கியுள்ள சூழலில் அதனை எதிர்கொண்டு முறியடிப்பது நமது முதற்கடமையாகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்வது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு விவாதித்தது. மாநாட்டு அறிக்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம் ஆசிரியர் குழு)

இந்திய அரசியலில் பெரும் ஆபத்துக்குரிய அரசியல் அம்சங்கள் அதிகரித்துவருவது குறித்து இம்மாநாடு மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. இடதுசாரி சிந்தனையுள்ள வாலிபர் அமைப்பு, சமூக மாற்றம் என்பதைத் தன் அரசியல் நோக்கமாக முன்வைத்துச் செயல்படுகையில், அதன் முன்னுள்ள பெரும் சவால்களில் முதன்மையாய் இருப்பது இன்றைய
அடையாள அரசியலின் ஆபத்துகள் தான். எனவே, அது குறித்தான விவாதத்திற்காக மூன்று பிரிவுகளாக  பிரித்துக்கொள்வோம்.

1.        அடையாள அரசியலின் ஆபத்துகளை, தேசம் முதல் உள்ளூர் வரை என முழு விபரங்களையும் கொண்டு அதன் ஆழ, அகலங்களோடு முழுமையாய் ஆராய்வது.

2.       எதிர்ப்பது என்று மட்டுமில்லாது, மாற்றையும் முன்வைக்க வேண்டியுள்ளதால், மாற்றுக்கான திட்டம் எவ்வாறு தயாரிப்பது என விவாதிப்பது.

3.       மேற்கண்ட இரண்டு அம்சங்களையும் அமைப்பின் அனைத்து மட்டத்திற்கும்  முழுமையாய்க் கொண்டு சென்று, செயலில் தீவிரம் காட்டுவது.

மக்களை தங்களது சாதி, மதம் குறித்த அடையாளங்களோடு திரட்டியும், இனவெறியைத் தூண்டியும் அரசியல் செய்யும் ஆபத்து  கடந்த சில ஆண்டுகளாய்த்தான் அதிகரித்துவருகிறதுசமூக சீர்திருத்த இயக்கங்கள், விடுதலைப் போராட்டங்களால் இந்திய சமுகம் அடைந்துள்ள முற்போக்கு மாற்றங்கள் அனைத்தையும் ஒரு சேர பின்னுக்குத்தள்ளும், இந்த அரசியல் சூழல் பின்வரும் ஆபத்துகளையும் கொண்டுள்ளது.

நவீனக் கல்வி பெற்ற சமூகமானது, பழமைவாதம் மற்றும் குறுகிய அணுகு முறைகளிலிருந்து படிப்படியாய் முன்னேறி சில முற்போக்குக் கருத்துகளுடன் மாற்றமடையும் என்ற உலக அனுபவம் இந்தியாவில் இப்போது ஆபத்தாகி வருகிறது. படித்தவர்கள் சமூக வலைத்தளங்களிலேயே வக்கிரமாய் அடையாள அரசியல் பேசும் சூழலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

நகர வாழ்வுச் சூழலும் மற்றும் தொழிற்சாலை, அலுவலகம் போன்ற பணிச் சூழலில் ஒரே இடத்தில்  பல சமூகத்தினர் பணியாற்றுகையில் அவர்களிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து தொழிலாளர்  என்கிற ஒற்றுமை உருவாகும். அது முற்போக்குக் கருத்துகளை அவர்களிடையே ஏற்படுத்தும் என்ற உலகளாவிய வரலாற்று உண்மையும் இப்போது இந்தியாவில் சவாலுக்குள்ளாகிறது. அதாவது, ஊதியம்
போன்ற கோரிக்கைகளுக்காக ஒன்று சேர்ந்தாலும், சாதி, மத, இன வெறி அடிப்படையிலான அரசியலும் அவர்களிடையே முன்னுக்கு வந்துள்ளது என்பது பெரும் ஆபத்தாகும்.

சாதி, மதம் ஆகியன பண்பாட்டின் பெருமையெனவும், ஒவ்வொருவரின் பிறப்பின் அடிப்படையிலான பண்பாட்டுக்கூறெனவும் புரிந்துகொள்ள வைக்கப்பட்டிருப்பதுதான் இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றொரு சாதிக்குக் கீழ்தான் தன் சாதி இருக்கிறது என்பதையும், தனக்கும் கீழே ஒரு சாதி இருக்கிறது என்பதையும் எவ்விதக் கேள்வியும், தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு பின்பற்றும் வாழ்க்கைமுறையே இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது. பிறப்பின் அடிப்படையிலான இந்த அடையாளமே ஒருவனின் பெரும் அடையாளமாக, அவனுள் உணர்வுப்பூர்வமாய் கட்டமைக்கப்படுகிறது. மதம் இதற்கான ஒப்புதலை ஒவ்வொருவனுக்குள்ளும் கடவுளின் பெயரில், மிக இயல்பாக உருவாக்கிவிடுகிறது. நாம் இந்த சாதி, மத அடையாளத்தோடுதான் பிறந்திருக்கிறோம் என்ற ஒப்புதலை அவனிடமிருந்து பெற்று, அவன் மீது நிகழ்த்தப்படும் இந்த ஒடுக்குமுறைதான் அடையாள அரசியலுக்கான துவக்கப்புள்ளியாகும்.

வசிக்கும் இடம், உறவுமுறை, திருமண முறை, சாமி கும்பிடும் சம்பிரதாயங்கள், குலக்கோவில், உணவுமுறை, தொழில், ஊர் நிர்வாக உரிமை, கோவிலுக்குள் நுழையும் உரிமை, அதை நிர்வாகம் செய்யும் உரிமை, கல்வி பெறும் உரிமை, ஊரில் வாழ்வதற்கான உரிமை, சொத்துரிமை, உடை, பேச்சு வழக்கு என எதுவெல்லாம் பண்பாட்டின் பெருமையெனவும், பண்பாடு எனவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதோ, எதுவெல்லாம் வாழ்வு முறையாக இந்திய சமூகத்தில் உணரப்பட்டிருக்கிறதோ அதுவெல்லாம் சாதி, மதம் ஆகியவற்றின் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. ஆம். இந்த உண்மையை புறந்தள்ளிவிட்டு, நாம் அரசியலும் செய்யமுடியாது.

ஆக, அடையாள அரசியலின் அடிப்படை  மத நம்பிக்கை மற்றும் சாதி ஒற்றுமை என்ற இரு பெரும் வாதங்கள் தான் என்றபோதிலும், உள்ளூர் சூழலில் தான் இந்த இரண்டும் அரசியல் அணிதிரட்டலுக்கான சாத்தியமாய் மாற்றப்படுகிறது என்பதையும்  நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, உள்ளூர் அளவில் செயல்படுவது மற்றும் பண்பாட்டு ரீதியாக செயல்படுவது என்ற இரண்டையும் தான் நாம் இதற்கான தீர்வாகவும் கருதவேண்டியுள்ளது. இதிலிருந்து செயலுக்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அது முழுக்கவும் உள்ளூர் சமூகத்தில் பண்பாட்டு ரீதியானதாக இருந்திட வேண்டும்.

அதாவது, சாதி, மதம் ஆகியன ஏன் உருவாக்கப்பட்டன, எப்படி உருவாக்கப்பட்டன என்ற புரிதல் நமக்கு இருப்பது அடையாள அரசியலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைக்கு அடிப்படைத் தேவையாகும். அந்த சாதிக்காரனுக்கு சொத்து இருக்கக்கூடாது, அவனுக்கு படிப்பு கூடாது என்று சொல்லப்படும் நேரத்தில் ( காலனிகள் மீதான தாக்குதலின் நோக்கம் இதுதானே) ஒரே சாதிக்குள் ஒருவர் சொத்துள்ளவராகவும், இன்னொருவர் சொத்தே இல்லாமலும், ஒருவர் முதலாளியாகவும், ஒருவர் தொழிலாளியாகவும், சிலர் கல்வி கிடைக்காமலும் ஏன் இருக்கின்றனர் என்ற சமூக முரண்பாட்டை நாம் முன்வைக்க வேண்டுமெனில், நமக்கு அதற்கான கல்வி தேவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

விவாதத்தின் மையப்பகுதிக்கு வருவதற்காக மேலும் ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

சாதிய ஒடுக்குமுறையும், மதத்திரட்டலும் இப்போது இணைந்துதான் அரசியலாக முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாமறிவோம். அப்படியான ஒரு ஊரை எடுத்துக்கொள்வோம். அங்கு நமது அரசியல் பணியென்ன?

உரிமையை நிலைநாட்டு என்று அரசிடம் கோரிக்கை வைப்பது ஒருபுறம் எனில், மறுபுறத்தில் அந்த மக்களையும் ஒன்று சேர்த்துத் திரட்ட வேண்டும் அல்லவா, அதுதானே தீர்வு. அதுதானே சமூக மாற்றத்திற்கான அரசியல் பணி. அதை எவ்வாறு செய்வது? இது எளிதல்ல எனினும், உள்ளூர் மட்ட அளவிலான திட்டம் நமது கிளைகளில் இருக்குமெனில் இது சாத்தியம்தான் என்பதையே நாம் அரசியல்ரீதியான இலக்காக புரிந்துகொண்டு நம்பிக்கையுடன் முன்செல்ல வேண்டும்.

பண்பாட்டு இளைஞர் அமைப்பாக நாம் மாறவேண்டிய தேவை இங்குதான் முக்கியம் கொள்கிறது. எந்தவொரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும், அதற்குள் முரண்பாடுகள் இருப்பதை நாம் அறிவோம். அவைகளை முன்வைக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருக்கும் அதே நேரத்தில் ஒரே சாதிக்குள் பல முரண்பாடுகள் இருப்பதையும் நாம் முன்னர் பார்த்தோம்.

மேலும், ஆன்மிகம், மதவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் கூறி, ஆன்மிகம் என்பது அன்பு சார்ந்தது என விவேகானந்தர், வள்ளலார் போன்றோரைக் கூறிப் பேசிட வேண்டும். மதவெறி என்பது மசூதியை இடித்தது. ஆனால், இப்போது அது மதப்பயங்கரவாதம் எனும் பாசிசமாக மாறி, மனிதர்களை சுட்டுக்கொல்கிறது, குழந்தைகளை எரித்துக்கொல்கிறது, பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்கிறது எனவே இது மத உணர்வு அல்ல என்று பேசிட வேண்டியிருக்கிறது. ஆக, பொதுவாய் மதவெறி வேண்டாம் என்றோ அல்லது பாஜக வை தனிமைப்படுத்துவோம் என்றோ சொல்லாமல், குறிப்பாய் அதனுள் இருக்கும் அரசியலைப் பேச வேண்டும்.

எனவே, தோழர்களே நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. பண்பாட்டு நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒரு பேச்சளவிலான செயல் மட்டும் அல்ல. தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம் என பேச்சு வடிவில் மட்டும் முடிந்துவிடும் அரசியல் செயல் அல்ல. மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்த சாதி, மதக் கூறுகளை ஒவ்வொன்றாய்
அடையாளம் கண்டு அவற்றை அப்புறப்படுத்த மாற்றுப்பண்பாட்டை முன்வைக்கும் சமூக மாற்றத்துக்கான  மாபெரும் அரசியல் பணியாகும் அது. இந்த மாற்றுப்பண்பாட்டை முன்வைக்காத வரை சமூக மாற்றத்திற்கான நமது அரசியல் பயணம் துவங்கப்படுவதற்குக்கூட சாத்தியமல்ல.

எனவே, அரசியல் நடவடிக்கை என்றாலே பண்பாட்டு நடவடிக்கை என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பாஜக, பாமக, இந்து அமைப்புகள், இஸ்லாம், கிறித்தவ அமைப்புகள், சாதியமைப்புகள், இனவெறி அமைப்புகள் என இன்றைய அரசியலின் முக்கிய ஆபத்துகள் அனைத்துமே சாதி, மதம், இனம் என மையமாய் வைத்து அரசியல் செய்கையில், நாமும் பண்பாட்டுத் தளத்தில் செயல்படவேண்டும் அல்லவா. ஆனால்நாம்  பேச்சுவடிவம் மற்றும் அடையாள பூர்வமான எதிர்ப்பு நடவடிக்கை என்று மட்டுமே சுருங்கிப்போனால், அது நோக்கத்தை அடைவதற்கான அரசியல் பணியாக இருக்காது என்பதை சுயவிமர்சனமாக பார்க்கவேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு மாட்டுக்கறி அரசியலை எடுத்துக்கொள்வோம். மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்ற பாசிச பாஜகவின் பிராமணிய அரசியலைஇப்போது தேசம் முழுவதும் எல்லா விதங்களிலும் செய்துவருகிறார்கள். அவர்களின் இந்த  பாசிசச் செயலை சற்று கூர்நோக்கி ஆராய்ந்தால், பல தளங்களில் இந்த ஒரு செயலை மட்டும் எடுத்துச்செல்வது புலப்படும். இதை மட்டுமல்ல, எந்த ஒரு செயலையும் ஒரு முனையில் மட்டுமில்லாது, அதன் எல்லா முனைகளிலும் தீவிரமாய் கொண்டு செல்வது என்பதே அவர்களின் அடிப்படைச் செயல்பாடாகும். ஆனால், நாம் அப்படிச்செய்கிறோமா?

இஸ்லாம் மக்கள் இந்துமக்களின் ஆன்மிக உயர்வுகளை சீர்குலைக்கிறார்கள் எனப்பேசுவது.

இந்துமதத்தில் மாடானது எந்த உயர்வான புனித அந்தஸ்தை வகிக்கிறது என இந்து மக்களிடம் ஆன்மிகமாய் பேசுவது. பசு மாட்டின் உடலில் அனைத்துத் தெய்வங்களின் அம்சமும் உள்ளதாய் சமீபத்தில் அதிகரித்துவரும் பிரச்சாரம் இதற்கான உதாரணம்.

பசு மாட்டின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களில் என்னென்ன மருத்துவ மற்றும் ஆரோக்கிய குணங்கள் உள்ளன என பிரச்சாரம் செய்வது.

மாட்டுக்கறியை சாப்பிடுவோர்களை கொலையும் செய்யத்தயங்க மாட்டோம் என சொல்கிறது.

அரசின் மூலமாக பசுவதை தடைச்சட்டம் கொண்டுவருவது

என இப்படி பல தளங்களில் மாட்டுக்கறி மீதான அரசியலைக் கொண்டு செல்கிறார்கள். இச்சூழ்நிலையில், மாட்டுக்கறித்திருவிழா என்று நாம் ஒரு நிகழ்ச்சியை துவங்குகிறோம். அதில் சில பிரசுரங்களையும் வெளியிடுகிறோம். என்ன நோக்கத்தில் இதைத் திட்டமிடுகிறோம்?

நமது தோழர்களுக்கு மாட்டுக்கறி முக்கியத்துவத்தைச் சொல்லி, அதைச் சாப்பிடும் வாய்ப்பிற்காக நடத்துகிறோமா?

பாஜகவை எதிர்ப்பதற்காக அடையாளப்பூர்வமாய் நடத்துகிறோமா?

அல்லது மாட்டுக்கறி சாப்பிடும் உரிமையை நிலைநாட்டுவது பாஜகவின் பிராமணிய அரசியல் நோக்கத்தை மாட்டுக்கறி சாப்பிடும் மக்களிடையே எடுத்துச்செல்வது என்பதோடு, இன்று மாட்டுக்கறியில் துவங்கி நாளை ஆடு, கோழி சாப்பிடக்கூடாது என்பது வரை செல்வார்கள் என்று சொல்லி அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்று திரட்டப்போகிறோமா?

இதில் எது நமது நோக்கம்? நோக்கத்திற்கேற்ப செயல்பட்டுள்ளோமா இல்லையா என்பது சுய விமர்சனமாக ஆலோசிக்கப்பட வேண்டும்.

நமது நிகழ்ச்சியின் நோக்கம் எது?

வாய்ப்பிற்கேற்ப துண்டுப்பிரசுரம் என நினைத்து ஆயிரம் வெளியிடுகிறோம். சில நேரங்களிலாவது இலட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை வெளியிட வேண்டும் எனத் திட்டமிடுகிறோமா? அல்லது நாம் சேர்த்த உறுப்பினர் எண்ணிக்கை அளவிற்காவது வெளியிட வேண்டாமா?

பாஜகவின் அரசியல் நோக்கம் மற்றும் நாம் ஏன் எதிர்க்கிறோம் என இரண்டு அரசியலையும் மேற்கண்ட அனைத்து அம்சங்களோடும், கிளை வரையான நமது ஊழியர்களிடையே வலுவாய் எடுத்துச்செல்கிறோமா?

ஒவ்வொரு கிளையும் இதில் தொடர் பிரச்சாரமாக, தொடர் நடவடிக்கையாக என்னென்ன செய்யவேண்டும் எனத்திட்டமிடுகிறோமா?

ஒரு நிகழ்ச்சி நடத்தினால் போதாதா என்று சிலர் கேட்கக்கூடும். பாஜக ஒரே அம்சத்தோடு, ஒரே சம்பவத்தோடு முடித்துவிடுகிறார்களா என்ன? ஒரு அரசியல் பொருளை எடுத்துக்கொண்டால், அதை அடைவது வரை, அனைத்து முனைகளிலும் தொடர்ச்சியாக எடுத்துச்செல்வது என்பது தானே, அவர்களின் பாசிச நோக்கம்அப்படியெனில், நாம் மட்டும் ஒரு நிகழ்ச்சியோடு நிறுத்திக்கொள்வோம் என்றால் அது எப்படி சரியான
அரசியலாக இருக்கமுடியும்?

ஆக, மதம், உணவு,வாழ்க்கை முறைகள், வரலாறு எனப்பேசி செயல்பட வேண்டியிருக்கிறது அல்லவா, இதைத்தான் பண்பாட்டு நடவடிக்கை என்கிறோம். மாட்டுக்கறித்திருவிழா என்பது ஒரு பண்பாட்டு நடவடிக்கை. இப்படிப் பல வடிவங்களில் கிளை வரை பண்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துச்செல்லவேண்டும். ஆடு, கோழி வெட்டிப்பலி கொடுத்துக் கும்பிடும் கோவில் விழாக்கள் நடந்துகொண்டே தானிருக்கின்றன. அத்தளம் வரை நமது பண்பாட்டு நடவடிக்கைகள் தொடரவேண்டும். அதாவது, மக்களின் வாழ்வுமுறை யோடு இணைந்ததாக, அவர்களின் உணர்வுகளைத் தொடுவதாக நமது பண்பாட்டு நடவடிக்கைகள் இருந்திடவேண்டும்.

இப்போது, இந்த விவாதத்தின் அடுத்த பகுதிக்குச் செல்வோம்.

இப்போதைய மதவாத அடையாள அரசியலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

இந்துத்துவா சக்தி, இந்துத்துவா ஆட்சியைக்கொண்டு வரத்துடிக்கும் கட்சி, இந்து உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் கட்சி என்ற வார்த்தைகளைக் கொண்டுதான் பாஜக வை பெரும்பாலான நேரங்களில் விமர்சனம் செய்கிறோம் பொதுமக்களிடையே. ஆனால், இந்துத்துவா கட்சி என்ற வார்த்தை பாஜகவுக்கு சாதகமான அரசியல் வார்த்தை என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது, நாங்கள் இந்துத்துவா அரசியல் தான் செய்கிறோம் என்பதே பாஜகவினரின் வெளிப்படையான பேச்சும், செயல்பாடுமாய் இருக்கையில் நாமும் அதையே பேசுவது எப்படிப்பொருத்தமாய் இருக்கும்?

மேலும், பாஜகவும் இந்துமக்கள் அனைவருக்குமான கட்சி அல்லவே. உயர்சாதி ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான பிராமணிய அரசியல்தானே அவர்களின் இலக்கு. குறிப்பிட்ட மதம் அல்லது இனத்தின் ஆட்சி என்ற கருத்தை முன்வைத்து செய்யப்படும் வன்முறை அடிப்படையிலான வெறுப்பு அரசியல் என்பது பாசிச அரசியல்தானேஅப்படியிருக்கையில் எந்த வார்த்தை கொண்டு அவர்களை விமர்சனம் செய்கையில், மக்களிடையே அவர்களை அம்பலப்படுத்த இயலும்? உயர்சாதி (பிராமணிய) ஆதிக்கத்தைக்கொண்டு வரத்துடிக்கும் பாசிச சக்தி பாஜக அல்லது இந்துத்துவா சக்தி பாஜக, என இரண்டில் எது பொருத்தமானது?

ஆம் தோழர்களே, பாசிச பாஜக என்று சொல்வதே பொருத்தம். இந்துத்துவா சக்தி என்று சொல்கையில் இந்துத்துவா என்றாலே என்ன என்று தெரியாத மக்கள் இந்துக்களுக்கான கட்சி என்று தானே புரிந்துகொள்வார்கள்.

இந்து என்ற வார்த்தை எப்போது உருவானது? இந்து என்பவன் யார்?

இந்து மதக் கட்டமைப்பு என்ன?

சாதி ஏன், எவ்வாறு உருவாக்கப்பட்டதுஅடிமைத்தனத்தை, ஒடுக்குமுறையை அவ்வந்த சமூகம் எப்படி ஏற்றுக்கொண்டது? அவர்களின் ஒப்புதலை எப்படிப்பெற முடிந்தது?

பெண்கள் குறித்த மதப்பார்வையென்ன? இக்காலத்துக்கு அது பொருந்துமா?

பாலின சமத்துவத்தை மதம் ஏற்றுக்கொள்ளுமா? பாலின சமத்துவம் ஏற்படும் வரை பெண்களைப் பாதுகாப்போம் எனும் மதவாத,சாதிய சக்திகளின் வார்த்தை ஒரு ஜம்பமே. பெண்களைப் பாதுகாப்பது என்பதே ஒரு பெண்ணடிமைத்தனக் கோட்பாடுதான்.

காதல் திருமணத்தின் முற்போக்கு அம்சங்கள். எது காதல்? ஏன் காதல் அவசியம்? ஒழிக்க முடியுமா காதலை?

மூடநம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்சாதி ஆதிக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பிணைப்பு

சுயமரியாதைத் திருமண ஆதரவு நிகழ்ச்சிகள். நமது தோழர்களின் அத்தகைய திருமணங்களை நமது மேடைகளில் நடத்துவது.

இந்து மத ஆட்சி என்பது சைவ ஆட்சியா, வைணவ ஆட்சியா? எப்போதேனும் இந்தியாவில் இந்து ஆட்சி இருந்ததா?

இடஒதுக்கீடு ஏன் அவசியம்? அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலைவரும் வரை ஏன் சாத்தியம்? இதை  பிராமணியம் ஏற்குமா?

இப்படி இன்னும் நிறைய உள்ளன தோழர்களே. எனவே, மதவாதத்துக்கு எதிராகப் போராடுவோம் என்று நாம் கோசமிடுகிறோமே, எப்படிப் போராடப்போகிறோம்அதற்கான வழிமுறையாக என்ன வைத்துள்ளோம்? ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் மட்டும் போதுமா? மேற்கண்ட விடயங்கள் குறித்து பேசாமல் சாத்தியமா என்றும் விவாதியுங்கள்.

மேலும், சிறுபான்மை மக்களிடையே சிறு சிறு குழுக்களாலும், சில அரசியல் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படும் மதவாத அரசியல் இன்னும் பெரிய ஆபத்தாகும். சிறுபான்மை மக்களை மத அடிப்படையில் உணர்வேற்றித் திரட்டத் தூண்டிவிடும் உள்நோக்கம் கொண்டதே பெரும்பான்மை மதவாதத்தின் ஒவ்வொரு செயலும், சொல்லும். ஏனெனில், சிறுபான்மை மக்கள் மதரீதியாக ஒன்று சேர்கையில், அதைக்காட்டித்தானே பெரும்பான்மை மக்களை வன்முறைக்குத் தூண்டும் செயலை பெரும்பான்மை மதவாதத்தால் செய்யமுடியும். சங் பரிவாரத்தின் இந்த உள்நோக்கத்துக்கு சிறுபான்மை மக்களைக் காவுகொடுக்கும் வேலையைத்தான் இன்றைய பல சிறுபான்மைக் குழுக்கள் தங்களை அறியாமலேயே செய்துவருகின்றன.

இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகளாய் சித்தரிப்பதும், தாடி வைத்துக்கொள்வதே ஒரு மதவெறி நடவடிக்கைதான் எனச் சொல்வதும் சமீபத்தில் அதிகரிக்கின்றன. இத்தகைய திட்டமிட்ட சித்தரிப்புகள் சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறையன்றி வேறில்லை. எனவே, சிறுபான்மை அமைப்புகளின் முயற்சிகளை இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். எனினும், இந்த அணிதிரட்டல் மத நல்லிணக்கத்தை மையமாய் வைத்து, அனைத்துத் தரப்போடும் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்.

எந்தவொரு மத அணிதிரட்டலும் நிச்சயம் அதற்கான விளைவைத்தான் தரும். சிறுபான்மை மக்கள் தங்களது உரிமையை காத்துக்கொள்வதற்காக ஒன்று சேர்வதை மதத்திரட்டல் என ஒரு போதும் சொல்லமுடியாது. ஆனால், இந்த அணிதிரட்டல் எப்படியானதாக இருக்கவேண்டும்? மதரீதியாக மட்டுமே இந்த அணிதிரட்டல் இருக்குமெனில், அது பெரும்பான்மை மதவாதத்துக்கு கிடைக்கும் அரசியல் தீனியல்லவா?

சிறுபான்மை மக்களிடையே முற்போக்கு கருத்துடைய, மத நல்லிணக்கக் கொள்கையுடைய பலர் உள்ளனர். சில குழுக்களும் இருக்கின்றன. எனவே, சிறுபான்மை மக்களை பொதுநீரோட்டத்தில் இணைக்கும் அரசியலே பாசிசத்துக்கு எதிரான அரசியலாக இருக்கமுடியும்இந்த அவசியத்தையும், இச்சூழலையும் நாம் அம்மக்களிடையே பேசிட வேண்டும்.

இவ்விடத்தில் மதம் குறித்த மற்றுமோர் விவாதம் முக்கியம் பெறுகிறது.

கடவுளை நம்பும் ஒவ்வொருவரும் பிறப்பு முதலே மதம் சார்ந்தவராகத்தான் இருக்கிறார். பெயர் சூட்டுவது முதல் திருமணம், மரணம் வரை ஒவ்வொருவரும் தனது மத அடையாளத்துடன் தான் அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுநிகழ்ச்சிகளாக நடத்துகிறார்கள்எனவே, நாத்திகர்களைத்தவிர எந்தவொருவரையும் மதச்சார்பற்றவராக நாம் கருதமுடியாது. ஆனால், அரசும், சமூகமும் அப்படியல்ல.

ஒருவர் தன் மதம் சார்ந்து நிகழ்த்தும் எல்லா நிகழ்வுகளுக்கும் மற்ற மதங்களைச் சார்ந்தவரையும் அழைக்கிறார். அவர்களும் நட்பு முறையில் கலந்துகொள்கிறார்கள். எனவே, சமூகம் மதச்சார்பற்று இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதை உத்தரவாதப்படுத்துவது, அதாவது அனைத்து மதங்களையும் அங்கீகரித்து ஒவ்வொரு மதத்திற்கும் உரிய உரிமைகளைத்தரும் வகையில் சமூகம் செயல்படுமாறு சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் உறுதி செய்வதுதான் அரசின் நோக்கமாகும்.

ஆக, மதச்சார்பின்மை என்ற வார்த்தை அரசை விமர்சிக்கப் பயன்படும் சட்டரீதியான ஒரு அரசியல் வார்த்தையாகும். சமூகம் மதச்சார்பற்று இருந்தாலும், ஒவ்வொருவரும் சொந்த வாழ்வில் மதச்சார்புடன் தான் இருப்பார்கள் என்ற இந்திய சமூகச்சூழலை நாம் புரிந்துகொள்வது அவசியம். இதைத்தான் சங்பரிவாரம் தனக்கு சாதகமாய் பயன்படுத்தப் பார்க்கிறதுஎனவே, பொதுமக்களிடையே பேசுகையில், மதச்சார்பற்ற நமது சமூக அமைப்பை பாதுகாக்க வேண்டுமெனில், மதங்களுக்கிடையே மதநல்லிணக்கம் தேவை என்ற அரசியலை முன்னெடுக்கவேண்டும். நம்மிடம் காலங்காலமாக உள்ள மதநல்லிணக்க உணர்வை  கெடுப்பதே பாஜகவின் அரசியல் என்பதை எளிமையாய் மக்களிடத்தில் எடுத்துச் செல்லவேண்டும்.

மேலும், கோவில்கள் என்பவை மதவெறி நிகழ்ச்சி நிரலுக்கான இடமாக இப்போது மாற்றப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மீதான நம்பிக்கைதான் கோவிலுக்கு ஒருவரை வரச்செய்கிறதேயொழிய, மத உணர்வல்ல என்பதுதான் நமது கடந்த கால பாரம்பரியமாகும். அவரவர் மதவழிபாடு அவரவர் உரிமை என்றுள்ள நாட்டில், மதவழிபாட்டு இடத்தை மதவெறியேற்றும் இடமாக மாற்றும் அரசியலை நாம் நிச்சயம் எதிர்தாக வேண்டும்.

எனவே, கோவில்களில் நாம் கவனம் கொள்ள வேண்டும். ஆன்மிகப் பரப்புதலோ, வழிபாடு போற்றுதலோ நமது செயல்களில் நிச்சயம் இருக்கப் போவதில்லை. இருக்கவும் கூடாது. ஏனெனில் எந்தவொரு அமைப்பும் அதை மேற்கொள்ளக்கூடாது என்பதே நமதுநிலை.

எனவே, நாம் மதநல்லிணக்க கலாச்சாரத்தை முன்னெடுக்கும் இடமாக கோவில், சர்ச், மசூதி விழாக்களில் தலையிடலாம். விவேகானந்தர், வள்ளலார், அய்யா வைகுண்டசாமி படங்களைப் போட்டு நீர்மோர் மையம் திறந்து மனிதநேய பிரச்சாரம் செய்யலாம். வேளாங்கன்னி, பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை காலங்களிலும் திட்டமிடலாம்.

ஆக, மதவாதம், சாதியம், பாலின சமத்துவம் ஆகிய மூன்றும் ஒரே தளத்தில், ஆனால் பல முனைகளில் ஒன்று சேர்ந்தும், தனித்தனியாகவும் நடைபெற வேண்டிய ஒரே நோக்கம்கொண்ட பண்பாட்டு நடவடிக்கையாகும். இந்திய சமூகத்தின் பண்பாடு என்று புரிந்துகொள்ளப்பட்ட கூட்டுக்குடும்பம், பெண்களை மதிப்பது, விரதம், மாதவிலக்கு, சாதித்தீட்டு, தாலி என்று எல்லாவிதமான பண்பாட்டு வார்த்தைகளையும் மாற்றுப்பண்பாட்டுப் பார்வையோடு நாம் அணுகிச்செய்யும் அரசியலை விவாதிக்க வேண்டியுள்ளது.

இனவாதத்துக்கு எதிரான போராட்டம்  என்பதும் பண்பாட்டு அடிப்படையிலான மாற்று நடவடிக்கை கொண்டதோர் அரசியல்தான். தமிழ் பண்பாடு என்று முன்வைக்கப்படுவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. பழங்கால மரபு என்று சொல்லப்படும் எல்லாவற்றையும் புறந்தள்ளவும் முடியாது. எது காலத்திற்கான தேவை, எதை மாற்றத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

தமிழன் என்ற அடையாளத்துடன் தமிழக அரசியலில் வேறுபாடின்றி அனைவரும் இணைவது என்று ஒருபோதும் யாரும் முன்வைக்கப் போவதில்லை. அப்படியிருக்கையில், தமிழீழத்துக்காக இணைவோம் என்பது மட்டும் எப்படிப் பொருத்தமானதாக இருக்கமுடியும்? சில இடதுசாரி அமைப்புகளும் இதில் இணைந்து நிற்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். தேசிய இனம் குறித்த பார்வை இதில் முக்கியமாகிறது. சிலர் இந்தியா என்ற நாட்டையே ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு இனத்துக்கு ஒரு நாடு என்ற வாதமே இதில் பிரதானமாகிறது.

முல்லைப்பெரியாறு, காவேரி, பாலாறு போன்ற நதிநீர் மற்றும் அணைப்பிரச்னைகளும் இங்கு இனப்பிரச்னையாகவே சில அமைப்புகளால் முன்வைக்கப்படுகின்றன. இது பிரச்னையை சிக்கலாக்கவே உதவிசெய்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடமுடியுமெனில், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தெலுங்கர்கள் மற்றும் கேரளாவில் மலையாளிகள் ஒன்று சேர்ந்து போராடுவதும் சாத்தியம்தானே? இது எப்படிப் பிரச்னையை தீர்க்க உதவும்? பிரச்னையை இனப்பிரச்னையாக்கி பகைமூட்டவே இத்தகைய ஆத்திரமூட்டல்கள் உதவும்.

மீத்தேன் வாயுப் பிரச்னையைக் கூட சில அமைப்புகள் இனப்பிரச்னை என்றுதான் பேசிக் கொண்டி ருக்கின்றனர் இப்போது. சுற்றுச்சூழல் பிரச்னைகள் எது வந்தாலும் இவர்கள் சொல்லும் வாக்கியம், தமிழன் என்ன இளிச்சவாயனா, இந்தியா நமக்குத் துரோகம் செய்கிறது என்பதுதான். தமிழகத்தில் மீத்தேன் எடுப்பது சூழலியல் பிரச்னை எனில், கர்நாடகத்தில் எடுத்தால் மட்டும் சூழலியலுக்கு நன்மை சேர்க்குமா என்ன? மீத்தேன் வாயுவை எதிர்க்கிறார்களா அல்லது தமிழகத்தில் எடுக்கக்கூடாது என்று எதிர்க்கிறார்களா? எது சரியான சூழலியல் பார்வையாக இருக்கமுடியும்? தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களுக்கெல்லாம் இந்திய அரசு நன்மை செய்துகொண்டிருக்கிறதா என்ன? அப்படியெனில், இந்திய அரசின் பொருளாதரக்கொள்கை, சூழலியல் கொள்கை குறித்து இந்த அமைப்புகளின் பார்வையென்ன?

சூழலியலுக்கான போராட்டம் என்பது உலகமயமாக்கலுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாகும். ஆனால், அது தனித்த தன்மையுடன் நடக்கவேண்டிய ஒரு முக்கியப் போராட்டமாகும். ஆறு பாதுகாப்பு, நீர் சேகரிப்பு, இயற்கை நேசம், காட்டுயிர் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு என ஒரு பண்பாட்டு அரசியல் இதற்குள்ளும் இருக்கிறது. விவசாயம், உணவுப்பொருள்கள், குடிநீர் என இதன் மீதான அரசியல் தான் உலகமயமாக்கலின் மைய அரசியலாகும். எனவே, சரியான சூழலியல் பார்வை மற்றும் போராட்ட வழிமுறை என இரண்டும் மாற்றுப்பண்பாடு குறித்த நமது அடிப்படைப் புரிதல்களின் ஒருபகுதியாய் வலுவாய் இருக்கவேண்டும். இல்லையெனில், விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையோ அல்லது குடிநீர் உரிமைக்கான போராட்டத்தையோ கூட நம்மால் தீவிரமாய் நடத்த இயலாது.

ஆக, மூன்று அடிப்படைப் புரிதல்களை நாம் வலுவாக கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

எது இனப்பிரச்னை, எது சூழலியல் பிரச்னை, தமிழ் தேசியம் என்பது என்ன என்ற அடிப்படைப்புரிதலை கிளைகள் வரை மிகத்தெளிவுடன் கொண்டு செல்வது.

இது குறித்து எழும் உடனடிப்பிரச்னைகளில் நமது பார்வை, அணுகுமுறை, நிலைபாட்டை சற்றும் தாமதிக்காமல் கிளை வரை உடனடியாக எடுத்துச்செல்வது.

நமது நிலைபாட்டை வைத்து வெளிப்படையாய் உடனடிச் செயலைத் திட்டமிடுவது.

மேலும், தமிழ் மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் நாம் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என்றாலும், பொதுத்தளத்தில் அதைத் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. தாய்மொழி வழிக்கல்வி, தமிழ் கலைகளை
முன்னெடுப்பது, தமிழர் உணவுப்பாரம்பரியம் என பொங்கல் விழாக்களில் கொண்டு செல்லவேண்டும். பொங்கல் விழாவை தமிழர் பண்பாட்டுத்திருவிழாவாக தமிழகமெங்கும் இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்.

தொகுப்பாய், ஒரு அடிப்படை அம்சத்தை இவ்விடத்தில் சுட்டுவது பொருத்தமாக இருக்கும். எனது சாதி கீழ்சாதிதான், நான் அவனை விட சாதியில் உயர்ந்தவன் என்பதால் என்முன் அவன் நிமிர்ந்துகூட நிற்கக்கூடாது, நான் ஏழைதான், எங்களுக்கெல்லாம் சொத்தே கிடையாதுங்க, நாங்க அடிமைங்கதான், ஒரு பொண்ணு ஆணுக்கு சமமா பேசக்கூடாதுங்க, பொண்டாட்டின்னா புருசனுக்கு அடிமைப்பட்ட மாதிரி இருக்கணும், பசுமாடு புனிதமானது என்பதெல்லாம் பண்பாடு என்ற பெயரில் மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு, மக்களின் ஒப்புதலோடு நடைமுறைப்படுத்தப்படும் கருத்தாக்கங்கள் ஆகும்.

அதே நேரத்தில், இந்துக்களின் பெரும்பகுதியினர் அசைவப்பிரியர்கள், குடும்ப வருமானத்துக்குத் தேவையெனில் பெண்கள் வெளியூருக்கும் வேலைக்குச் செல்கின்றனர், இட ஒதுக்கீட்டிற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டவன்  என்று  சான்றிதழ் பெறுகின்றனர்  ஆண்ட  பரம்பரையினர் என்று சொல்லிக்கொள்வோர்,
சாதித் தொழிலை விட்டுவிட்டு மாறிச்செல்கின்றனர் சாதிப்பாரம்பரிய பாதுகாவலர்கள் இப்படியான முரண்பாடு
களால் நிறைந்திருக்கிறது இந்தியச் சமூகம். மாறிவரும் இச்சூழல்களும் பண்பாட்டு மாற்றங்களே. ஆனால், மக்கள் தங்களது தேவைக்காக  ஏற்றுக்கொள்ளும் இத்தகைய மாற்றங்களை பண்பாட்டு மாற்றங்களாக இன்னும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. பொதுப்புத்தியை மாற்றியமைக்கவேண்டிய தேவையை இதிலிருந்துதான் நாம் சொல்கிறோம். எனவே தான், சாதி, மதம், இனவெறி, பெண்ணடிமைத் தனம், சூழல் சீர்கேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை, மாற்றை முன்வைக்கும் பண்பாட்டுப் போராட்டம் என்கிறோம்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: