மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பேரிடர் தொடரோட்டம் …


 

பருவகால மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் நோக்கில் கூட்டப்பட்ட முதல் சர்வதேச மாநாடுதான் 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநகரில் கூட்டப்பட்ட ‘ரியோ புவி உச்சி மாநாடு’ (Rio Earth Summit). உச்சி மாநாடு பருவகால மாற்றம் குறித்த ஐ.நா சட்டகத்தை (UNFCC – United Nation Framework on Climate Change) நிறைவேற்றியது. இது வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் இருப்பு மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்படுவதற்கான ஒரு செயல் திட்டத்தை முன்மொழிந்தது. இந்த செயல்திட்டம் 21 மார்ச் 1994 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதில் 195 நாடுகளும் அமைப்புகளும் உறுப்பினர்களாக உள்ளன.

COP 1 முதல் COP 21 வரை

இந்த நாடுகள் மற்றும் அமைப்புகளின் தொகுப்பு ஆண்டுதோறும் கூடுவது வழக்கமாகியது. இந்த வருடாந்திர மாநாடுதான் ‘உறுப்பினர்களின் மாநாடு’ எனப் பொருள்பட ஆங்கிலத்தில் ‘Conference of Parties’ என அழைக்கப்படுகின்றது. இதன் 21 ஆவது அமர்வுதான் சமீபத்தில் (11 டிசம்பர் 2015) பாரிசில் முடிவடைந்த COP 21. இதற்குமுன் COP 20, 19,18 ஆகியவை முறையே பெருவின் லிமா, போலந்தின் வார்ஸா, கத்தாரின் தோஹா ஆகிய இடங்களில் நடந்தன. இந்த மாநாடுகளின் நோக்கம், ரியோ உச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட செயல் திட்டம் எந்தளவு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை மீளாய்வு செய்வதே ஆகும்.

பாரிஸ் – 2015

பெரும்பாலான மாநாடுகள் பன்னாட்டுத் தலைவர்களின் பசப்பலான வாய்ப்பந்தலுக்குப்பின் எந்தவிதமான திட்டவட்டமான முடிவும் எட்டப்படாமல் முடிவுற்றதே வரலாறு. புவிவெப்பமாதலுக்கு இதுவரையில் பெரும் காரணமாய் இருந்தவை மேற்கத்திய நாடுகள்தான்; மேற்கு ஐரோப்பிய வடஅமெரிக்க நாடுகள்தாம் என்பதை அந்நாட்டுத் தலைவர்களும்கூட என்றும் மறுத்ததில்லை. ஆனால் இதனை நிறுத்துவதற்கான முனைப்பு, குறைப்பதற்கான திட்டம் என வரும்பொழுது, எந்தவிதக் குற்ற உணர்வோ அல்லது கூச்ச உணர்வோ இல்லாது தமது பொறுப்பைத் தட்டிக் கழித்தனர். ஜார்ஜ் புஷ் போன்றவர்களிடமிருந்து தன்னலமும், அகங்காரமும் உரத்து ஒலிக்கும் முட்டாள்தனமான சொற்கள் வந்தன என்றால், கிளிண்டன், ஒபாமா போன்றவர்களிடமிருந்து மிகவும் நாசுக்கான, தேனில் ஊறிய சொற்கள் வந்தன. ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான்.

ஆம்; எங்களது வளர்ச்சியும் மேம்பாடும் வாழ்க்கை முறைகளும்தான் இதற்குக் காரணம். ஆனால், நாங்கள் எங்கள் வாழ்க்கைமுறையை (Life Style) மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை. எனவே, புவிப்பந்தைக் காப்பாற்றவேண்டும் என்றால், நீங்கள் வளர்ச்சி, மேம்பாடு என்ற எத்தனத்தில் புவி வெப்பமாதலுக்குக் காரணமாய் ஆகாதீர்கள்’ என்பதுதான் அவர்களது உளப்பாங்காக இருந்து வந்துள்ளது; இன்றும் தொடர்ந்து வருகின்றது.

புவி வெப்பமாதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்று வரும்போது, அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் எடுக்கும் நிலைபாடுகளும் அனுகுமுறைகளும் ‘சூழல் ஏகாதிபத்தியம்’ என இந்திய சூழலியல் நிபுணரான சுனிதி நாராயன் போன்றவர்கள் அழைப்பதற்கிணங்கவே இருக்கின்றது. இதனையெல்லாம் தாண்டி இந்தப் பிரச்சனையின் தீவிரம் காரணமாக சில முடிவுகள் எடுக்கப்பட உலக நாடுகளும் பல்வேறு சூழல் பாதுகாப்பு தன்னார்வல அமைப்புகளும் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக COP 21 – ல் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து கொள்ளுமுன், புவி வெப்பமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்துச் சில அடிப்படைகளை அறிந்து கொள்வது அவசியம்.

புவி வெப்பமாதல்

நம்முடைய சூரியக் குடும்பத்தில் நமது புவிக் கோளத்தில் மட்டுமே உயிர்கள் வாழும் சூழல் உள்ளது. இதற்கு புவிப் பந்தைச் சுற்றிப் போர்வைபோலப் பரவி இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்களே காரணம். அவை இருப்பதால்தான் புவியின் சராசரி வெப்பநிலை வாழத்தகுதி கொண்ட 15 டிகிரி செல்சியசாக உள்ளது; இல்லையென்றால், புவிப் பந்தின் சராசரி வெப்பநிலை -20 டிகிரி செல்சியசளவிற்குச் சென்று புவிப்பந்து வாழத்தகுதியற்றதாக மாறிவிடும். பசுங்குடில் வாயுக்கள், ஊட்டி கோடைக்கானல் மற்றும் குளிர் நிலவும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கண்ணாடிக் குடில்களில் (Glass Houses) கண்ணாடிக் கூரை செய்யும் அதே பணியைச் செய்கின்றன. சாதாரணமாக பூமியை வந்து தாக்கும் சூரியக் கதிர்கள் பெரும்பகுதி நாம் கண்ணால் கானும் ஒளிக் கதிர்களாயும், ஒரு பகுதி கண்ணால் கானவியலாத அகச் சிறப்புக் கதிர்கள் மற்றும் புற ஊதாக் கதிர்களாக இருக்கும். இவ்வாறு வந்தடையும் கதிர்களில் ஒரு பகுதி, பூமியின் பரப்பால் திருப்பி அனுப்பப் படும். இப்படித் திருப்பி அனுப்பப்படும் கதிர்கள் அகச் சிகப்புக் கதிர்களாக அனுப்பப்படும். கண்ணாடிக் குடில்களில், கண்ணாடிக் கூரையை ஊடுருவி வரும் சூரியனின் கதிர்களில் திருப்பி அனுப்பப்படும் அகச் சிகப்புக் கதிர்கள் கண்ணாடிக் கூரையை ஊடுருவ முடியாது. எனவே, அவை கண்ணாடிக் குடிலின் உள்ளே நிலவும் வெப்பநிலையை உயர்த்துகின்றன. இதுதான் புவிப்பந்தைச் சுற்றியுள்ள பசுங்குடில் வாயுக்களாலும் நிகழ்த்தப்படுகின்றது. அதனால்தான் அவற்றுக்கு பசுங்குடில் வாயு என்றும் பெயர்.

தொழில் புரட்சிக்குப் பின்னே

இது பல மில்லியன் ஆண்டுகளாக நடந்துவந்ததுதான். புவியின் எரிமலைச் சீற்றங்கள் காரணமாக வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் சேர ஆரம்பித்தன. பின்னர் உயிர்கள் உருவானபின் விலங்குகளும் தாவரங்களும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை உமிழ்வதும், தாவரங்கள் வளர்ச்சியின் போது பச்சையமாதலுக்கு கார்பன் டை ஆக்ஸைடை உட்கொள்வதுமான ஒரு சகடம் (Cycle) தொடர்ந்து நடந்ததே. ஆனால் தொழிற் புரட்சிக்கு முந்தைய பல மில்லியன் ஆண்டு காலத்தில், வளி மண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு 200 பிபிஎம் (PPM-Part Per Million – அதாவது மொத்த வாயுக்கூறுகள் ஒரு மில்லியன் இருந்தால் அதில் கார்பன் டை ஆக்ஸைடு 200 கூறுகள் இருக்கும். மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட ஏனையவையும் அவற்றுக்குச் சமனான கார்பன் டை ஆக்ஸைடு அளவால் சுட்டப்படும்.) அளவைக் காட்டிலும் குறைவாக ஆனதில்லை; 280 பிபிஎம் அளவிற்கு அதிகமாக ஆனதுமில்லை. எனவே பூமிப் பந்தின் சராசரி வெப்பநிலையும் 10 – 15 டிகிரி செல்சியஸ் என்ற வரையறையைத் தாண்டியதில்லை. ஆனால் 1850 ஆம் ஆண்டிலிருந்து இன்றைக்கு வரையான காலகட்டத்தில் தொழிற்சாலைகளின் பெருக்கம் போக்குவரத்து வளர்ச்சி, விவசாய விரிவாக்கம் மற்றும் அதில் வேதிஉரங்கள் பயன்பாடு, மின்சாரம் மற்றும் ஏனைய ஆற்றல் உற்பத்தி ஆகியவை பல மடங்கு அதிகரித்துள்ளன. இது ஆண்டுதோறும் முன்பு புவிப்பந்து காணாத அளவுகளில் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களை உமிழ்ந்து வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவைத் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் நடுவில் இது 400 பிபிஎம் அளவை எட்டிவிட்டது. இதன் காரணமாக, புவிப் பந்தின் சாராசரி வெப்பநிலை சுமார் 0.8 டெகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மிகச் சிறிய அளவிலான மாற்றம் போலத் தெரிகின்றது. ஆனால் எல்லாம் எல்லாவற்றோடு மிகவும் நுட்பமாக இணைக்கப்பட்டுள்ள புவிப்பந்தின் இயற்கைச் சமன்பாட்டைச் சீர்குலைக்க இந்தச் சின்னஞ்சிறு மாற்றம் போதுமானதாக உள்ளது. எல்லா நிலைமாற்றுப் புள்ளிகளிலும் உருவாகும் சிறிய அளவு மாற்றம் பாய்ச்சலான பண்புமாற்றத்தை உருவாக்குவது நாம் அறிந்ததுதானே.

புவி வெப்பமாதலின் விளைவுகள்

புவிவெப்பமாதலின் விளைவுகள், அமெரிக்க மைய நீரோட்ட அரசியல்வாதிகளால் வெகுகாலம் மறுக்கப்பட்டு வந்ததுதான். ஆனால் இப்போது கிட்டத்தட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துள்ளது. புவி வெப்பமாதல் காரணமாக வளிமண்டலக் காற்று வெப்ப விரிவாக்கம் ஆகின்றது; அது தன்னுள் கொண்டிருக்கும் ஈரப்பதத்தின் அளவு அதிகரித்து விடுகின்றது. எனவே பருவ மழை முந்தைய காலங்களைக் காட்டிலும் அதிகம் பெய்வது சில இடங்களில் நடந்துள்ளது. புயல், சூறாவளி, வெள்ளம், வறட்சி ஆகியவையும் பருவ மழை பொய்த்துப்போய் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதும் மானுடம் காலங்காலமாக கண்டுவரும் இயற்கைப் பேரிடர்தான். ஆனால் இவை முன்பு இல்லாத அளவுகளில், முன்பு இல்லாதவாறு அடிக்கடியும் உலகின் பல பகுதிகளில் நிகழ்வது வாடிக்கையாகி வருகின்றது. சூறாவளி என்றால் என்னெவென்றே தெரியாத பிரேசில் நாட்டில் சூறாவளி, அமெரிக்காவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவுகளில் வறட்சி, வெள்ளம் என பருவநிலை மாறியுள்ளது. துருவப் பகுதிகளிலும் கிரீன்லாந்து போன்ற நிலப்பரப்புகளிலும் பல மில்லியன் ஆண்டுகளாக இருந்துவந்த பனிப்பாறைகள் உருகி அளவு குறைந்துள்ளன. கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது. சிறு தீவுகளும் கடற்கரையை ஒட்டிய நகரங்கள் மீன்பிடி குடியிருப்புகள் நீருக்குள் செல்லும் அபாயம் அதிகரித்து வருகின்றது. விவசாயம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யாது கெடுப்பதும் பெய்யக் கூடாத காலங்களில் பெய்து கெடுப்பதும் அதிகரித்துவருகின்றது. சற்றே குளிர்நிலவும் பகுதிகளில் வாழ்ந்த விலங்குகள் இன்னும் வடக்கே குடியேறும் நகர்வுகள் நடந்துள்ளன. இப்படி இன்னும் முழுமையாய் மதிப்பீட்டிற்குள் வர இயலாத பல பாதகங்கள் நடந்து வருகின்றன.

முடிவற்றப் பேரிடர் ஓட்டம்

மானுட வரலாற்றில் அல்ல; பூமிப் பந்தின் வரலாற்றில் என்றும் காணாத ஒரு பேரபாயம் காத்துநிற்கின்றது. ஆங்கிலத்தில் ரன்அவே காட்டொஸ்ரோப்பி (Runaway Catostrophy) என்று குறிப்பிடுகின்றனர். பூமிப் பந்தின் சராசரி வெப்பநிலை 3.5 அல்லது 4 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டால் அதன்பிறகு எடுக்கும் எந்தவித நடவடிக்கையும் பலன் தராது. உலகிலுள்ள எல்லா அனல் மின்னிலையங்களையும் எல்லா போக்குவரத்து வாகனங்களையும் நிறுத்தி விட்டாலும் புவி மேலும் மேலும் வெப்பமாவதை தடுக்கவியாலாத நிலை ஏற்பட்டுவிடும் என பல வல்லுணர் குழுக்களும் கூறுகின்றனர். ஏனென்றால் புவியின் சராசரி வெப்பநிலை 1850 ஆண்டு நிலவியதைக் காட்டிலும் 3.5 அல்லது 4 டிகிரிக்கு மேல் அதிகமானால் துருவப் பகுதிகளில் உள்ள நிலைத்த பனிப்பாறைகள் உருகத் தொடங்கிவிடும். அவற்றின் கீழே உள்ள பெருமளவிலான மீத்தேன் வாயு வெளியேறத் தொடங்கிவிடும். இன்றைக்கு வளிமண்டலத்தில் சேர்ந்துள்ள பசுங்குடில் வாயுக்களில் கார்பன்டைஆக்ஸைடுதான் பெருமளவு உள்ளது; மீத்தேன் ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் உள்ளது (கார்பன் டை ஆக்ஸைடின் அளவில் 0.45%) ஆனால் மீத்தேன், கார்பன்டைஆக்ஸைடைக் காட்டிலும், சுமார் 25 மடங்கு அதிகமாக புவி வெப்பமாதலை ஏற்படுத்தக் கூடியது. எனவே, பனிப்பாறைகளின் கீழேயுள்ள மீத்தேன் வெளியேற ஆரம்பித்துவிட்டால் பின்னர் புவிவெப்பமாதல் எந்த நடவடிக்கையாலும் கட்டுப்படுத்தமுடியாமல் வரம்புகளின்றி மேலும் மேலும் உயர்வது நடந்தேறும். நமது பரப்பளவில் நான்கில் மூண்று பங்கு நீரால் ஆனதான நமது ‘நீலக் கோளம்’ எனும் பூமிப் பந்து, வாழத் தகுதியற்ற கனல் பந்தாய் மாறிவிடும்.

அழிவின் விளிம்பில் நடக்கும் அரசியல்

வாழ்நாளெல்லாம் அறிவியல்நோக்கிற்காகவும் பகுத்தறிவிற்காகவும் பணியாற்றிய வின்ணீயல் நிபுணரான கார்ல் சேகன், ‘பேரண்டத்தில் விண் திரள்களில், விண்மீன்களில் நடைபெறுவனவற்றை நினைக்கும்போது மானுடரின் சண்டைகள், சர்ச்சைகள், அக்கரைகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிகின்றது’ என்றார். புவிப்பந்தே பேரழிவின் விளிம்பில் நிற்கும்போது அதனை அந்த நிலைக்குத் தள்ளிய அமெரிக்காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் எடுக்கும் நிலைபாடுகள் சற்றும் பகுத்தறிவிற்குப் பொருத்தமற்றதாகவும் கிஞ்சித்தும் மானுட உணர்வற்றதாகவும், பொறுப்பற்றதாகவும் இருக்கின்றன. மறுபுறத்தில் வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளின் தலைமைகள் இந்த ஆதிக்கச் சக்திகளை வழிக்குக் கொண்டுவரும் திறனின்றி கையறுநிலையில் இருக்கின்றன.

1850 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வளிமண்டலத்தில் சேர்ந்த பசுங்குடில் வாயுக்களில் மிகப் பெருமளவு அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தம் ‘வளர்ச்சி’யின் போது உமிழ்ந்தவைதான்.

1890 – 2007 காலப் பகுதியில் வளிமண்டலத்தில் சேர்ந்த பசுங்குடில் வாயுக்களில் வேறு வேறு நாடுகள் உமிழ்ந்தவை எவ்வளவு என பாரிசில் உள்ள ‘சர்வதேச ஆற்றல் முகமை (IEA – International Energy Agency) தனது 2009 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது:

அமெரிக்கா

:

28%

ஐரோப்பிய யூனியன் + OECD கூட்டாளிகள்

:

28%

ரஷ்யா

:

11%

சீனா

:

9%

ஜப்பான்

:

4%

இந்தியா

:

3%

ஏனைய நாடுகள் அனைத்தும் சேர்ந்து

:

18%

இப்போதும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான் ஆண்டுதோறும் இந்தக் கைங்கரியத்தை அதிகமாய்ச் செய்துவருகின்றன. தனிநபர் ஒருவருக்கு வேறுவேறு நாடுகளின் உமிழ்வு பின்வருமாறு உள்ளது:

நாடு

மொத்த உமிழ்வில் பங்கு (%)

தனிநபர் ஒருவருக்கு

டன்கள்

சீனா

:

23.6

5.13

அமெரிக்கா

:

17.9

16.9

இந்தியா

:

5.5

1.37

ரஷ்யா

:

5.3

10.8

ஜப்பான்

:

3.8

8.6

ஜெர்மனி

:

2.6

9.2

இரான்

:

1.8

7.3

கனடா

:

1.8

15.4

கொரியா

:

1.8

10.6

பிரிட்டன் (U.K)

:

1.6

7.5

1850 – 2008 கால கட்டத்தில் வேறு வேறு நாடுகளின் உமிழ்வில் பங்கு மற்றும் தனிநபர் கணக்கு பின்வருமாறு உள்ளது:

நாடு

மொத்த உமிழ்வில் பங்கு (%)

தனிநபர் ஒருவருக்கு

டன்கள்

அமெரிக்கா

:

28.5

1132.7

சீனா

:

9.36

85.4

ரஷ்யா

:

7.95

677.2

ஜெர்மனி

:

6.78

998.9

பிரிட்டன் (U.K)

:

5.73

1127.8

ஜப்பான்

:

3.88

367

ஃபிரான்ஸ்

:

2.73

514.9

இந்தியா

:

2.52

26.7

கனடா

:

2.17

789.2

உக்ரேன்

:

2.13

556.4

ஆக, மக்கள் தொகையைக் கனக்கிலெடுத்துக் கொண்டாலும், வரலாற்று ரீதியாக உமிழ்ந்ததைக் கணக்கில் கொண்டாலும் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளி நாடுகள்தாம், பூமிப்பந்தைப் பேரழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இந்தப் பழியை வளர்ந்து வரும் நாடுகளின் தலையில் குறிப்பாக சீனா, இந்தியா ஆகியவற்றின் மீது சுமத்துவதற்கும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவுமே தொடர்ந்து முயன்றுவந்துள்ளனர். தமது பொருளாதார, சர்வதேச அரசியல் பலம் கொண்டு வளர்ந்து வரும் நாடுகளின் வாயை அடைத்து தமக்கு எதிராக பேசவிடாதும் செய்துள்ளனர். உலக வங்கியின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் (“Energy Use Per Capita”. World Development Indicators. World Bank. Retrieved 2012-12-26.) தனிநபர் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு ஆற்றல் நுகர்வு (மின்சாரத்திற்கு சமன் ஆக) என்பது பின்வருமாறு உள்ளது:

நாடு

:

மின்னாற்றலுக்கு இணையான யூனிட்டுகள்

அமெரிக்கா

:

9539

பிரிட்டன் (U.K)

:

4332

கனடா

:

9825

ஆஸ்திரேலியா

:

7446

சீனா

:

2405

இந்தியா

:

753

நிலைமை இப்படியிருக்க, தன்னுடைய நுகர்வில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாத சீனாவையும், பத்தில் ஒரு பங்கு நுகர்வு கூட இல்லாத இந்தியாவையும் பொறுப்பாளியாக்கி அவற்றின் அனல் மின்நிலையங்கள்தாம் காரணம் என இந்த வெள்ளை ஏகாதிபத்திய நாடுகள் சதிவலை பின்னுகின்றன. நாட்டில் சுமார் 8 கோடி வீடுகளில் (அதாவது சுமார் 40 கோடி மக்கள்) மின்னிணைப்பு இல்லாத இந்தியா தனது வளர்ச்சி மேம்பாடு ஆகியவற்றைக் கைவிட்டு அமெரிக்க ஆங்கில ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து ஊதாரித்தனமான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என்பது இவர்களது மனோபாவமாக, இவர்களது அரசியலின் பின்னணி ஆசையாகவும் உள்ளது.

கடந்த 21 ஆண்டுகளாக எந்தவித நிறுத்தமும் இல்லாது புவிப்பந்தின்மீது மூர்க்கத்தனம்தான் நிகழ்ந்துள்ளது. பேரழிவு குறித்த உச்சி மாநாடு நடந்து 21 ஆண்டுகள் ஆன இந்த இடைப்பட்ட காலத்திலும், பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு பெரும்பாலான நாடுகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு அரசுகளின் பருவநிலை மாற்ற ஆய்வுக்குழு (Intergovernmental Panel for Climate Change – IPCC) வெளியிட்டுள்ள மீளாய்வு அறிக்கை (Assesment Report), .நா சுற்றுச்சூழல் திட்ட நிரலின் உமிழ்வு குறைபாட்டு அறிக்கை (UNEP Emission Gap Report) மற்றும் பல அரசுசாரா சுற்றுச் சூழல் ஆர்வலர் அமைப்புகளும் இதனை உறுதி செய்துள்ளன. இன்றைக்கு உள்ள அளவுகளில் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்து நடந்தால் ஆண்டுதோறும் 2 பிபிஎம் அளவில் வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் அது 480 பிபிஎம் அளவை எட்டிவிடும். அதுதான் பூமிப் பந்தின் பேரழிவிற்கான நிலைமாற்றுப் புள்ளி. அந்த நிலையில் பூமிப்பந்தின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து விடும். பின்னர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் ‘செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுக்கும்’ சடங்குதான்; இறந்த மனிதனின் உடலுக்கு ஆக்ஸிஜன் அல்லது டிரிப்ஸ் ஏற்றும் செயல்தான்.

2011 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த COP 17 இல் 2100 ஆம் ஆண்டில் புவியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைத் தாண்டா வண்ணம் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும். 1.5 டிகிரி செல்சியஸை தாண்டா வன்னம் உமிழ்வைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டிலிருந்து தொடங்க ஏதுவாக 2015 ஆம் ஆண்டிற்குள் உடன்பாடு காணவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. 2 டிகிரி அல்லது 1.5 டிகிரி என்பது 1850 ஆம் ஆண்டு நிலவிய சராசரி வெப்பநிலை என்பதையும், புவிப்பந்து ஏற்கனவே 0.75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வை அடைந்துவிட்டது என்பதையும் கவனத்தில் நிறுத்துவது அவசியம்.

இதன்படி, ஒவ்வொரு நாடும் தான் எந்த அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கவிருக்கின்றன என்பதைத் தமது நாட்டு நிலைமைகளைக் கணக்கில் கொண்டு தீர்மானிக்கும் ‘தேசங்கள் தத்தமளவில் தீர்மானித்த பங்களிப்பு (INDC – Intended Nationally Determined Contribution)’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு நாடும் 1990 ஆம் ஆண்டில் தாம் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் காட்டிலும் 2030 ஆம் ஆண்டிற்குள் எந்த அளவைக் குறைக்க இருக்கின்றன என்பதை உறுதி அளிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு பெருவின் லிமா நகரில் நடந்த COP 20, .நா வின் பருவகால மாற்றத்திற்கான சட்டகத்தின் மாநாட்டு செயலகத்தை (UNFCCC – Secretariate) உறுப்புநாடுகள் அறிவித்துள்ள உமிழ்வுக் குறைப்பு இலக்குகளைக் கணக்கிலெடுத்து 2030 ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும் நிலைமை எப்படி இருக்கும் எனக் கூறுமாறு கேட்டுக் கொண்டது. அதன்படி அந்த அமைப்பும் ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு அரசுகளின் பருவநிலை மாற்ற ஆய்வுக்குழு (Intergovernmental Panel for Climate Change – IPCC) அமைப்பும், .நா சுற்றுச்சூழல் திட்ட நிரலின் உமிழ்வு குறைபாட்டு அறிக்கை (UNEP Emission Gap Report) யும் தமது தொகுப்பாய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி புவியின் சராசரி வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸைத் தாண்டாமல் தடுக்கப்பட வேண்டுமென்றால், புவியின் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் 1000Gt (Gt:மில்லியன்டன்) அளவில் வரம்பிடப்பட வேண்டும். 2014 ஆம் ஆண்டுமட்டுமே 52Gt அளவிற்கு பசுங்குடில் வாயுக்கள் உமிழப்பட்டுள்ளன. இந்த அளவுகளில் தொடர்ந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பசுங்குடில் வாயுக்களே, உமிழ்வு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் எனும் நிலையே உருவாகும்.

நாடுகள் தாமாக அறிவித்துள்ள உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை எல்லாம் அடைந்தாலும், 2030 ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு 748Gt – கார்பண்டை ஆக்ஸைடு சமன் – ஐ அடைந்துவிடும். அதாவது, மொத்த வரம்பில் 75% 2030 ஆம் ஆண்டே அடைந்துவிடும். இந்த வேகத்தில் சென்றால், 2100 ஆம் ஆண்டு புவியின் வெப்பம் 3.5 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக உயர்ந்துவிடும். கடந்த காலத்தில் நாடுகள் அறிவித்த இலக்குகளுக்கும் எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைக் கணக்கில் கொண்டால் புவியின் வெப்பம் 4 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக உயர்ந்துவிடும் பேரபாயம் உள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் நடந்துமுடிந்த COP-21 வெற்று வார்த்தைகளோடுதான் முடிவுற்றுள்ளது என்றே அரசு சாரா சூழலியல் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 32 பக்கங்களும் 140 சரத்துகளும் (Clauses) 29 அம்சங்களும் (Articles) கொண்ட ஒப்பந்தத்தில் யாரையும் கட்டுப் படுத்தும் எந்த சொற்றொடரும் இல்லை. நாடுகளை அவர்களால் இயன்ற உமிழ்வுக் குறைப்பைக் கூறுமாரு கேட்டுக் கொண்டதைத் தவிர வேறு எந்த முடிவும் எட்டப்பட்டத்ற்கான அறிகுறியும் இல்லை. வளரும் நாடுகளின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வளர்ந்தநாடுகள் இணைந்து உருவாக்கும் 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியத்திற்கு யார் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதற்கும் எந்த நெறிமுறையும் வகுக்கப்படவில்லை. ஆனால் ஷரத்து எண் 17 நாடுகள்குறைப்பதாகக் கூறியுள்ள அளவு போதுமானதல்ல என்பதை கவலையோடு(with concern) பதிவு செய்கின்றது! வரலாற்று ரீதியிலான பொறுப்பு’ எனும் பதத்தையே அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் உச்சரிக்க விடாது தடுப்பதில் வெற்றி கண்டுள்ளன. நாடுகளின் உமிழ்வைக் குறைக்கும் கடப்பாடுகொண்ட ஒப்பந்தம் நிறைவேறுவதைத் தடுத்துள்ளன. பெயரளவில் ‘பொதுவான வேறுபட்ட கடப்பாடு’ (Common But Differentiated Responsibilities) என்ற முடிவே எட்டப்பட்டுள்ளது. பட்டுப் போன்ற இந்த மென்மையான சொற்றொடர்களைப் பயன்படுத்தி மேலை நாடுகள் தமது பொறுப்புகளிலிருந்து வழுவித் தப்பியுள்ளனர். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி ஆகியவை அளிக்க வேண்டும் என்ற புரிதலுக்கும் எந்தவிதமான திட்டவட்டமான வரையறுப்பும் செய்யப்படவில்லை. நாசாவின் முன்னால் பருவநிலை நிபுணரும் அமெரிக்க காங்கிரஸில் புவிவெப்பமாதல் குறித்த தனது 1988 ஆம் ஆண்டு வாக்குமூலத்தின்மூலம் அதனை உலகறியச் செய்தவருமான ஜேம்ஸ் ஹான்சென் COP 21 உடன்படிக்கையை ஒரு மோசடி (Fraud) என்று வர்ணித்துள்ளார். அவரைப் போன்றே பல அரசு சாரா நிபுணர்கள், செயல்பாட்டாளர்களும் கருத்துரைத்துள்ளனர்.

மிகப்பெரிய பிரச்சனை இந்தியாவிற்கும் ஏனைய வளரும் நாடுகளுக்குமே உள்ளன. வளர்ச்சியும் மேம்பாடும் இல்லாது, மக்களுக்கு குறைந்த பட்ச நல்வாழ்வை அளிக்க முடியாது எனும் நிலை ஒரு புறமிருக்க, இருக்கக் கூடிய வளி மண்டல இடத்தில் இவற்றின் பங்கு என்ன என்பது ஒரு சிக்கலான கேள்வியாகத் தொடர்கின்றது.

என்ன செய்ய வேண்டும்

சமூக சிந்தனையும் ஜனநாயக எண்ணமும் கொண்ட மக்கள் மத்தியிலேயே பிரச்சனையின் தீவிரம் இன்னமும் புரிந்து கொள்ளப்படாத, உணர்ந்து கொள்ளப்படாத நிலையே இருக்கின்றது. அவர்களிடம் இது பரந்த அளவில் கொண்டு செல்லப்பட்டு விளக்கப்பட வேண்டும்.

 • இது என்றோ எங்கோ நடப்பதற்கு சாத்தியமுள்ள அபாயம் அல்ல. சமீபத்திய சென்னைப் பெருமழை உள்ளிட்ட பல முன்னோட்டங்களும், இது இன்றைய, இப்போதைய நமது வீட்டின் கதவைத் தட்டும் பிரச்சனை என்பதை நாம் எல்லோருமே உணர வேண்டும்.

 • இது ஃபாசிசம் போல, இயற்கைப் பேரிடர் போல சகல பகுதி மக்களையும் பாதிக்கும் பிரச்சனை; ஆனாலும் எல்லாப் பிரச்சனைகளிலும் போல அடித்தட்டு மக்கள்தாம் முதலிலும் மோசமாகவும் பாதிக்கப்பட உள்ளார்கள் என்பதையும் கவனப்படுத்த வேண்டும்.

 • ஏகாதிபத்திய, முதலாளித்துவ ஆதிக்கங்களும் பொருளாதார முறைபாடுகளோடும் கூடியதாக புவிப்பந்து உள்ளவரை, பேரழிவு அபாயத்திலிருந்து விடுதலையில்லை என்பதையும் நாம் எல்லோரும் உணர வேண்டும். முதலாளித்துவத்தின் முடிவற்ற லாபமீட்டல் மூலதனக் குவிப்பு என்பதும் புவிப் பந்தின் வரம்புகளும் முரண்படுபவை என்பதை விளக்க வேண்டும்.

 • அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய நாடுகளும் பொறுப்பேற்கச் செய்யாமல் விடிவில்லை என்பதால், அவற்றுக்கு எதிரான மக்கள் திரளின் ஒற்றுமை இல்லாமல் தீர்வு இல்லை.

 • பரந்துபட்ட மக்களின் ஒற்றுமை, ஒருங்கினைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. எனவே அந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழி சொல்லாமல் புவிப் பந்தின் அழிவுபற்றி மட்டும் பேசுவது அம்மக்களை இந்த ஒருங்கினைப்பிற்குக் கொண்டுவராது என்பதை அக்கறை கொண்ட அனைவருக்கும் உணர்த்துவது அவசியம்.

 • பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரங்களுக்குத் தேவையான வளர்ச்சியும் மேம்பாடுமில்லாமல் அம்மக்களின் பங்கேற்பை உறுதி செய்வது சாத்தியமில்லை. புவிப்பந்து எதிர்நோக்கியுள்ள பேரழிவு குறித்த சிந்தனையில்லாது வளர்ச்சி குறித்து பேசுபவர்கள், வளர்ச்சி மேம்பாடு ஆகியவற்றின் இன்றியமையமையாமை குறித்த சிந்தனையும் போராட்டமும் இல்லாமல் சூழல் குறித்துப் பேசுபவர்கள் என எல்லாவிதமான ஒற்றைக்கண் மந்திரவாதிகளின் தத்துவார்த்த சித்தாந்தங்களுக்கு எதிரான கருத்துப் போராட்டம் மக்களின் நல்வாழ்விற்கான போராட்டத்தின் பகுதி என்பதை உணர்வதும் உணர்த்துவதும் அவசியம்.

 • அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் நமது வரலாற்றுப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

 • படிம எரிபொருட்களான நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடுதான் மிக முக்கியமான பாதிப்பை விளைவிக்கின்றன. எனவே அவற்றின் பயன்பாட்டை மிகவும் கறாரான வரையறுப்புகளுக்கு உட்படுத்துவது அவசியம். தொழில் நுட்பரீதியாக முன்னேறிய நவீனமானதும் உமிழ்வுகள் மிகக் குறைவாக இருப்பதுமான அனல் மின்னிலையங்கள் மூலம் திறன் குறைவான உமிழ்வுகள் அதிகமுள்ள அனல் மின்நிலையங்கள் மாற்றீடு செய்யப்பட வேண்டும்.

 • கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைவான மீளுற்பத்தி மின்னிலையங்களை அதிகரிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு நிர்வாக முறைபாடுகளோடு அணுமின்னிலையங்களின் பங்கில்லாமல் ‘ஆற்றல் தேவைகளை நிறைவு செய்வது; புவி வெப்பமாதலைக் குறைப்பது’ எனும் இரட்டை நோக்கத்தை நிறைவு செய்வது இயலாது என்பதை உணர்வதும் உனர்த்துவதும் அவசியம்.

 • பொதுப் போக்குவரத்து, தொழிற்சாலைகளைப் பரவலாக்குவது, அறிவியல்பூர்வமான வேளண்மை, சூழல்உணர்வுடன் கூடிய வாழ்க்கைமுறைகள், பழக்க வழக்கங்கள், வனப்பாதுகாப்பு என பல முனைகளிலான செயல்பாடும் நடவடிக்கைகளும் அவசியம்.

 • ஜனநாயக பூர்வமான பங்கேற்பு, திட்டமிடல், செயல்பாடு இல்லாமல் ஏதொன்றும் சாத்தியமில்லை என்பதால் சகல நிலைகளிலும் ஜனநாயகத்தை ஆழப்படுத்தல்.

இப்படி முடிவில்லாத பட்டியல் உள்ளது. பரந்துபட்ட பிரச்சாரமும் உணர்வூட்டலுமே முதல் படி. சிறியதும் பெரியதுமாய் ஆயிரம்ஆயிரம் நூல்கள்; சிறியதும்பெரியதுமாய் ஆயிரம்ஆயிரம் கூட்டங்கள்; எளிமையாகவும் ஆழமாகவும் ஆயிரம்ஆயிரம் விளக்கங்கள் எல்லாம் தேவை.

கடக்கவியலாக் கடலும் காடும் மலையும் பாலையும்

கடந்திட வேண்டும் பயணிகளே ஜாக்கிரதை

தள்ளாடுது படகு, கொந்தளிக்குது வெள்ளம், தவறிவிட்டது வழி

அறுந்துவிட்டது பாய், சுக்கான் பிடிக்கத் துணிவுள்ளவர் வாருங்கள்

புயல் கடுமைதான் எனினும்

போய்ச் சேரத்தான் வேண்டும் மறுகரை

கவி நஜ்ருல் இஸ்லாம்One response to “பேரிடர் தொடரோட்டம் …”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: