இந்திய அரசியல் சாசனமும், இந்துத்வ கடப்பாரைகளும் …


அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்திலும் அதற்கு முன்பும் பின்பும் சமூக வெளியிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவாரக்கூட்டம் தங்களது விஷக் கருத்துக்களை பச்சையாகவும் நாசூக்காகவும் வெளியிட்டனர். மதசார்பின்மை என்ற சொல்லே தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் அவர்களை பாராட்டுவதாகக் கூறிக்கொண்டே அரசியல் சாசனத்தின் முற்போக்கான கூறுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்தே இத்தாக்குதல் நிகழ்ந்து வருகிறது. அரசியல் சாசனத்தில் இடம் பெறுகின்ற மதசார்பின்மை, சோசலிசம், பெடரலிசம் (சம்ஷ்டித்தன்மை) போன்ற சொற்களே சங்க பரிவாரத்திற்கு ஒவ்வாமை தரும் என்பது தெளிவு. அரசியல் சாசனம் முன்வைக்கும் சமூக நீதி கோட்பாடுகளும் அதனை ஒட்டிய இட ஒதுக்கீடு அம்சங்களும் சங்க பரிவாரத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து எதிர்க்கப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனத்திற்கும் அரசியல் அமைப்பிற்கும் சங்க பரிவாரம் முன்வைக்கும் சவாலை நாம் புரிந்து கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது அல்ல நமது நிலைபாடு. நமது கண்ணோட்டத்தில் இருந்து அதன் சில  ஊனங்களைக் காண முடியும். சாசனத்தில் உள்ள பல மக்கள் நலன் சார்ந்த அம்சங்கள், “அரசு கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகள்” என்ற தலைப்பைக் கொண்ட சாசனத்தின் நான்காம் பிரிவில் உள்ளன. எடுத்துக்காட்டாக, இப்பிரிவில்,ஷரத்து 38(2)இல் வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு அரசு முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது. ஷரத்து 39 (இ) ‘பொது நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் உற்பத்திக்கருவிகளும் சொத்தும் (சிலரிடம்) குவிவது நிகழாமல் பொருளாதார அமைப்பு செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசு தனது கொள்கைகளை அமைத்துக்கொள்ளும்’ என்று பொருள்படும் கருத்தை முன்வைக்கிறது. இதுபோல், தொழிலாளர் உரிமைகள், ஊதியம், கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான உரிமைகள் ஆக்கிய பல அமசங்களில் மக்கள் நலன் காக்கும் வகையில் செயல்படவேண்டும் என்று அரசை அரசியல் சாசனத்தின் இப்பிரிவு பணிக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவெனில், ஷரத்து 37 இப்பிரிவில் உள்ள எந்த நலனையும் பெற நீதிமன்றங்களை மக்கள் அணுக முடியாது என்றும் கூறுகிறது. இப்பிரிவில் முன்வைக்கப்படும் கொள்கைகள் நாட்டின் அரசாட்சியின் அடிப்படை என்றும் இக்கொள்கைகளின் வழி சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை என்றும் சாசனம் கூறினாலும் நடைமுறையில் இது மக்களின் உரிமைகளை நிலைநாட்ட பயன்படவில்லை. அரசியல் சாசனம் முதலாளித்தவ நிலப்ரபுத்வ சுரண்டலை எதிர்க்கவில்லை. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மாநிலங்களுக்குப் போதிய அதிகாரங்களை தரவில்லை. சாசனத்தில் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறை உள்ளிட்டு பல அம்சங்களில் மக்கள் நலன் சார்ந்த மாற்றங்களை கொண்டு வரவேண்டிய சவால் நம்முன் உள்ளது..

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்திய அரசியல் சாசனம் நீண்ட காலம் மக்கள் போராடி பெற்ற சில பல உரிமைகளை அங்கீகரித்துள்ளது. மதசார்பின்மையை ஏற்றுக்கொண்டுள்ளது. பொதுவாழ்வில் மதம் புகக் கூடாது என்ற கோட்பாட்டை, அரசு செயல்பாட்டில் மதத்தலையீடு கூடாது என்ற கோட்பாட்டை சாசனம் வலியுறுத்துகிறது    நமது நாட்டு அரசியல் சாசனம் குறிப்பிடத்தக்க அளவில் ஜனநாயகத்தை சாத்தியமாக்கியுள்ளது. சொத்து, கல்வி உள்ளிட்ட எந்த அடிப்படையையும் திணிக்காமல், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற நவீன உலகின் முக்கிய கோட்பாட்டை அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ளது. மத சார்பின்மைக்காகவும் வயதுவந்தோர் வாகுரிமைக்காகவும் வளர்ந்த முதலாளித்தவ நாடுகளில் நெடிய போராட்டம் தேவைப்பட்டது. நமது நாட்டில் விடுதலை இயக்கத்தின் விளைவாக, இடதுசாரி மற்றும் இதர முற்போக்கு இயக்கங்களின் விளைவாக, நவீன கால அரசியல் நெறிமுறைகளின்  பல நல்ல அம்சங்களை நமது அரசியல் சாசனம் தன்னகத்தே கொண்டுள்ளது . இன்று நமது அரசியல் சாசனத்தின் இத்தகைய கூறுகளும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பும் நடப்பில் உள்ள மக்கள் உரிமைகளும் நவீன தாராளமயத்தின் காரணமாகவும், சங்கபரிவாரின் நாசகார தன்மை காரணமாகவும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் வேட்பாளராக நிற்பதற்கு கல்வித்தகுதியை நிர்ணயித்துள்ளது பா.ஜ.க. ஆட்சியால் ஹரியானாவில் அண்மையில்   நிறைவேற்றப்பட்ட சட்டம். துரதிர்ஷ்டமாக, உச்ச நீதிமன்றமும் இதனை அங்கீகரித்துள்ளது. மக்களுக்கு கல்வி அளிக்க வக்கில்லாத அரசு, இவ்வாறு அரசால் வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பறிக்கின்ற கொடுமை நிகழ்ந்துள்ளது. இது முதன் முறையல்ல. ராஜஸ்தானிலும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்கின்ற சட்டங்கள் பா.ஜ.க. மாநில அரசால் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் – குறிப்பாக, பெண்கள், தலித்துகள், பழங்குடி மக்களின் – உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. முன்பு வாஜ்பாய் தலைமையிலான என் டி ஏ அரசு இந்திய அரசியல் சாசனத்தை மறு ஆய்வு செய்து மாற்றங்களைப் பரிந்துரைக்கப் பணித்ததும் இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, இப்பொழுதுள்ள பாராளுமன்ற ஆட்சிமுறைக்குப் பதிலாக, கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி பதவியை உருவாக்கி, அதற்கு நேரடி தேர்தல் நடத்துவது என்ற ஜனாதிபதி பாணியிலான ஆட்சிமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.  மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையை தாராளமய கொள்கைகளை விரும்பும் ஏகபோக முதலாளிகளும் ஆதரிக்கின்றனர். இத்தகைய ஆட்சி அமைப்பும் அதனையொட்டிய தேர்தல் முறையும் கொள்கை அரசியலை பின்னுக்குத்தள்ளி ஒரு தனிநபரை முன்வைக்கும் அரசியலுக்கு சாதகமாக இருக்கும். ஊடகங்களை தம் கையில் வைத்துள்ள ஆளும் வர்க்கங்களுக்கு, இத்தகைய ஆட்சி மற்றும் தேர்தல் முறை மக்களின் எதிர்ப்பு வலுவான வடிவம் பெறாமல் தடுக்க உதவும்.

இவ்வாறு, சங்கபரிவார் முகாமில் இருந்தும், தாராளமய கொள்கைகள் பின் நிற்கும்  பெருமுதலாளிகளிடம் இருந்தும் இந்திய அரசியல் சாசனத்தின்  முற்போக்குக் கூறுகளுக்கு பெரும் ஆபத்து  நேரிடும் அபாயம் உள்ளது. இவற்றை முறியடிக்க நாம் களம் இறங்க வேண்டியுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s