- நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மக்களின் சமூக, கலாச்சார வாழ்க்கையில் “சகிப்பின்மையை” வெளிப்படுத்துவதாக நாட்டில் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. அறிவுத்தளத்திலும், மற்ற வகைகளிலும் நடைபெறும் இந்த எதிர்ப்பை அருண் ஜேட்லி உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறுகிறார். களத்தில் இருக்கும் நிதர்சன நிலையின்படி இதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
நமது நாட்டிலோ, சமூகத்திலோ “சகிப்பின்மை” என்பது தெரியாத விஷயம் ஒன்றுமல்ல. சமூக சகிப்பின்மை மற்றும் தீண்டாமை குறித்து நமக்கு மிக நீண்ட வரலாறு உண்டு; ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளின் தேவைகள், கோரிக்கைகள் மீது காட்டப்படும் சகிப்பின்மையும் மிகவும் பொதுவானதேயாகும்; மத சகிப்பின்மை, மதவெறி, வகுப்பிவாதம் ஆகியவையும் அனைவரும் அறிந்த அம்சங்களேயாகும்.
சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் என்னவென்றால், குறிப்பாக 1990க்குப் பிறகு, இந்து ராஷ்டிரத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை உருவாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்பையுடைய ஒரு அரசியல் கட்சி வலுப்பெற்று வருவதுடன், பல மாநிலங்களில் மட்டுமின்றி, மையத்திலும் அதிகாரத்துக்கு வந்துள்ளது என்பதாகும். இந்த நிலையில் ஜனநாயக, அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற சிந்தனைகள் சில குழுக்களாலும், தனிநபர்களாலும், அமைப்புக்களாலும் தாக்குதலுக்குள்ளாகின்றன. அவை முன்பை விட வலுப்பெற்றுள்ளதுடன், மத்திய, மாநில அரசுகளின் ஆதரவையும், பாதுகாப்பையும் பெற்று வருகின்றனர். இக்காலகட்டத்தில் சிறுபான்மை அடிப்படைவாதமும் வளர்ந்துள்ளது என்பதும் உண்மையே. இந்த அனைத்து வளர்ச்சிப் போக்குகளாலும், காரணமுள்ள விவாதங்கள், பகுத்தறிவுச் சிந்தனை, அறிவியல் ஆய்வு, கலை, இலக்கியத்தில் சுதந்திரமான வெளிப்பாடு ஆகியவற்றுக்கு கிடைக்கும் வெளி குறைந்துள்ளது. இதனால்தான் ஏராளமான எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகள், கலாச்சாரப் பணியாளர்கள், செயல்வீரர்கள், ஏன் புகழ்பெற்ற நீதிமான்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் சிறுபான்மை உரிமைகளை வெளிப்படுத்துவதன் மீது அரசு ஆதரவுடன் நடத்தப்படும் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளனர். பாஜகவின் தலைவர்கள், ஆதரவாளர்களிடையே தீவீரமான அறிவுக் குறைபாடு உள்ளது எனும்போது, இந்தத் தாக்குதல்களுக்கெதிராக முன்னெப்போதுமில்லாத எதிர்ப்புக்களை எதிர்த்துத் தாக்குதல் தொடுப்பதில் பாஜகவின் மிகவும் அறிவாளி செய்தித் தொடர்பாளராகக் கருதப்படும் அருண் ஜெட்லி முன்னிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது இயல்பானதேயாகும். அவர் எதிர்ப்புக்கள் ‘உற்பத்தி’ செய்யப்பட்டவை என்று குணாம்சப்படுத்துவதும் அவசியமானதே. ஏனென்றால் பாஜக (அது பகுதியாக இருக்கும் சங் பரிவாரம்)எந்த வகையான சுதந்திரமான விவாதத்துக்கோ, கருத்துப் பரிமாற்றத்துக்கோ, பேச்சுவார்த்தைக்கோ தயாராக இல்லை. சமூக வளர்ச்சி குறித்த அதன் ஒட்டுமொத்த தத்துவமும் பகுத்தறிவற்ற, அறிவியல்பூர்வமற்ற, ஜனநாயகமற்ற புரிதலின் அடிப்படையிலேயே உள்ளது என்பதால் அதனால் எந்த வகையான விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் தத்துவத்தின் எந்த ஒரு அம்சத்தின் மீதும் கூறப்படும் சிறு விமர்சனமும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கும் ஆபத்தை உண்டாக்கி விடும்.
- மத தேசியவாதம் ஃபாசிசமாக இல்லாவிட்டாலும், அதன் அடிப்படையிலான வகுப்புவாதத்துக்கு ஃபாசிச குணாம்சம் உண்டு. அது இந்திய நிலைமைக்கு எவ்வாறு தொடர்புடையது? நமது நாட்டின் பன்முகத் தன்மையை இந்தப் பின்னணியில் எப்படி எதிர்த்துப் போராடுவது?
இன்று இந்திய அரசை ஃபாசிச அரசு என்று சொல்ல முடியாது. தேர்தல்கள் நடக்கின்றன, ஆளும் கட்சிகள் தேர்தலில் தோற்கின்றன; மாற்றுக் கருத்து, எதிர்ப்பு, விவாதத்துக்கான இடம் இன்னும் இருக்கிறது. ஜனநாயகத்தயும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கும் போராட்டம் தொடர முடியும், அதை வலுப்படுத்தும் முயற்சிகளும் செய்ய முடியும். அதே சமயத்தில், ஒரு அரசியல் கட்சி இந்திய நாட்டின் இயல்பையே மாற்ற உறுதிப்பாடு கொண்டிருக்கும் நிலையின் உள்ளார்ந்த ஆபத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டும். புதிய தாராளமய அரசே ஜனநாயக விரோதமானது என்பதைப் புரிந்து கொள்வதும் அவசியம். கார்ப்பரேட் துறையின் வலிமை பெருமளவுக்கு அதிகரித்திருப்பதும், சர்வதேச அளவில் ஏகாதிக்பத்தியத்துக்கு ஆதரவாக சாய்ந்திருப்பதும் ஜனநாயக விரோத, ஃபாசிச சக்திகளுக்கு உதவக்கூடிய வளர்ச்சிப் போக்குகள்.
- ’மதச்சார்பின்மை’ என்பது மிகவும் அதிகமாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சொல் என்று ராஜ்நாத் சிங் கூறுகிறார். அவரது காவிப் பின்னணியை நாம் அறிந்துள்ள வேளையில், இதற்கு உண்மையான, உள்ளார்ந்த பொருளை நாம் கூறி எதிர்க்க வேண்டியுள்ளது. நாம் அதை எப்படிச் செய்வது என்பதை விளக்கவும்.
உள்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங், ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நமது அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்ப்பது குறித்து விமர்சித்தார். இந்தியாவின் மதமே மதச்சார்பற்றது என்பதால் அதனைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் மேலும் கூறினார். இந்த விஷயத்தைத்த்டான் புரிந்து கொள்ள வேண்டும். மதச்சார்பற்ற இந்தியாவுக்கு எப்படி ஒரு மதம் இருக்க முடியும், உள்துறை அமைச்சர் குறிப்பிடும் இந்தியாவின் மதம் எது? அவர் இந்து மதத்தைத் தான் குறிப்பிடுகிறார் என்பது வெளிப்படை. அவரது நோக்கங்கள் தெளிவாகி விட்டன. உண்மை என்னவென்றால் மதச்சார்பற்ற இந்தியா இந்து நாடாக இருக்க முடியாது, இந்து இந்தியா மதச்சார்பற்றதாக இருக்க முடியாது. மதச்சார்பின்மை என்றால் அரசையும், மதத்தையும் பிரிப்பது என்று பொருள். மதச்சார்பின்மை என்றால் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது என்ற சங் பரிவாரத்தின் ஆபத்தான பிரச்சாரத்தை திறனுடன் எதிர்கொள்வது நமக்கு முக்கியம். அது நமது சமூகத்தில் ஆழமாகப் புதைந்துள்ளது. எந்த சமூகம் முன்னேறிச் செல்வதற்கும் மதச்சார்பின்மை அவசியம். மதச்சார்பற்ற தத்துவம், நிறுவனங்கள், கோட்பாடுகளை வலுப்படுத்துவது என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது, பொது வெளியிலிருந்து மத நம்பிக்கைகளையும், மதத்தையும் அகற்றுவது என்பதாகும். நமது நாட்டில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்ல, பல்வேறு சாதிகள், பிரதேசங்கள், கலாச்சாரங்கள், மொழிகள்…. என பல்வேறு வகை மக்கள் வசிக்கின்றனர். அனைவரின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கும், அவர்கள் அனைவரும் நாட்டின் ஜனநாயக வாழ்க்கையிலும், அதன் முன்னேற்றத்திலும் பங்கு பெறுவதற்கும் மதச்சார்பின்மை அவசியம். தம்மை மதத்தின் பெயரால் அடையாளப்படுத்திக் கொள்ளும் நாடுகள்தான் மிகவும் சகிப்புத்தன்மையற்றவையாகவும், பின் தங்கியும் உள்ளன என்ற உண்மையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
4) மோடி அரசு அமைந்ததிலிருந்து தலித்துக்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி நடந்துள்ளன. அதனுடன் மக்களை சாதி, மத அடையாளங்களைக் கொண்டு பிளக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாம் எவ்வாறு ஒரு வலுவான சமூக இயக்கத்தைக் கட்டியமைக்க முடியும்?
இந்தத் தாக்குதல்களும், மக்களைப் பிளக்கும் முயற்சிகளும் மோடி அரசு அமைந்த பிறகுதான் தொடங்கின என்பது நிச்சயமாக உண்மையல்ல. முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகளின் தலைமையிலான முந்தைய அரசுகள்கூட இதேபோன்ற தாக்குதல்களை இந்தப் பிரிவினர் மீது கட்டவிழ்த்து விட்டதுடன் பிரிவினையையும் தூண்டின. வேறுபாடு என்னவென்றால் ஆளும் பாஜக சார்ந்துள்ள சங் பரிவாரத்தின் தத்துவம் உள்ளார்ந்த முறையில் ஆண்கள், பெண்களிடையே அசமத்துவத்தையும், பல்வேறு சாதிகள், சிறுபான்மை மக்களிடையே அசமத்துவத்தையும் நம்புவதாகும் என்பதுதான். பெண்களின் வீட்டு வேலை, ஆண்-பெண்ணிடையே அசமத்துவம், சிறுபான்மையினருக்கு இரண்டாம் தர குடியுரிமையே தரப்பட வேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தத்துவ ஆசிரியர்களான கோல்வால்கர், ஹெட்கேவார் போன்றோரும் மோகன் பாக்வத், நரேந்திரமோடி உள்ளிட்டோரும் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளனர். மோடி உண்மையில் சுகாதாரப் பணியாளர்கள் தமது பணியிலிருந்து ஒரு ‘ஆன்மீகத் திருப்தியைப்” பெறுகிறார்கள் என்று கூறி அவர்களது தகுதியை ஏற்றினார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவரான கோல்வால்கர், அது இந்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே சட்டபூர்வ ஆவணமாகிய மனுஸ்மிருதியை அச்சட்டம் ஒரு இடத்தில் கூடக் குறிப்பிடவில்லை என்று கூறி அதை விமர்சித்தார். மனுஸ்மிருதி பெண்கள், பழங்குடியினர், தலித்துக்களின் தாழ்ந்த தகுதி குறித்து மிகவும் அதிர்ச்சியளிக்கும் கருத்துக்களைக் கூறியுள்ளது என்பது நன்கறியப்பட்ட விஷயம். அவர்களது தத்துவத்தால்தான் தலித்துக்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்மீது சங் பரிவாரத்துடன் இணைந்த அமைப்புக்களும், அரசுகளும் தமது தாக்குதல்களை தீவீரப்படுத்தியுள்ளன. புதிய தாராளவாத சீர்திருத்தங்களுக்கும், கார்ப்பரேட் துறைக்கும், நமது பொருளாதாரத்தில் ஏகாதிபத்தியக் குறுக்கீட்டுக்கும் ஆதரவான பாஜகவின் உறுதிப்பாடும் கூட பழங்குடியினர் மீதான அதன் தாக்குதல்கள் வேகப்படுவதற்கு உதவியுள்ளன என்பதைக் காண வேண்டும். அதிகமான இடப்பெயர்வு, மிகவும் மோசமான கூலியுடன் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் சுரண்டப்படும் தலித்துக்கள், சூப்பர் இலாபங்களை உறுதிப்படுத்த மிக அதிகமாக சுரண்டப்படும் பெண்கள், முறைசாராத் துறையின் முக்கியமான பகுதிகளில் பணிபுரியும் சிறுபான்மையினர் மீது இத்தாக்குதல்கள் வேகப்பட்டுள்ளன.
5) இந்து அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்க்கிறது. இதனை அரசியல், தத்துவார்த்த, அமைப்பு ரீதியாக எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. இந்து அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுபோல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வலுவாக எதிர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இடதுசாரிகள் மீது வைக்கப்படுகிறது. உங்கள் விளக்கம்?
80% இந்துக்கள் இருக்கும் ஒரு நாட்டில், இந்து ராஷ்டிரத்தைத் தமது தத்துவமாகக் கொண்டு வழிநடக்கும் ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் ஒரு நாட்டில், ஒவ்வொரு நிலையிலும் இந்துத்துவ தத்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பங்கு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சவுதி அரேபியா போன்ற அதன் கூட்டளிகளுடன் அதன் தொடர்புகள் ஆகியவற்றையும் புரிந்து கொண்டு, விளக்கி எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. ஆனால் நாம் இந்துத்துவம், பெரும்பான்மை வகுப்புவாதத்துக்கெதிரான போராட்டத்தில் தற்காப்பு நிலைக்கு இறங்க முடியாது. சிறுபான்மை உரிமைகள், உயிர்கள், வாழ்க்கை நிலைகள் தாக்கப்படும்போது நாம் தற்காப்பு நடவடிக்கையை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்க முடியாது.
Leave a Reply