(இந்தியாவின் மதிப்புமிக்க இதழ்களில் ஒன்றான ‘ஃபிரண்ட்லைன்‘ ஆசிரியரும், பெரியாரும் திராவிட இயக்கமும் – புத்தகத்தை எழுதியவருமான இரா.விஜயசங்கர், அவர்களை தனது நெருக்கடியான பணிச் சூழலிடையே நமது கேள்விகளுக்கு பதிலளித்தார்.)
கேள்வி: காலனி ஆதிக்கப் பின்னணியில் இடதுசாரி மற்றும் திராவிட இயக்கங்களின் தோற்றம் எவ்வாறு அமைந்தது? எந்த சமூகப் பொருளாதார பின்னணியில் அதனைப் புரிந்துகொள்ளலாம்?
இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு தேசிய எதிர்ப்புணர்வு வளரத் தொடங்கிய காலத்தில், வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்ட அதே நேரத்தில் ஒன்றுபட்ட போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மக்களைச் சாதிய, மதரீதியாக பிரித்தாளும் கொள்கையையும் கையிலெடுத்தது. இந்திய சமூகத்தை சாதிகளின், மதங்களின் குவியலாகப் பார்த்தது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளிலும் பிராமணர், பிராமணரல்லாதோர், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள், ஐரோப்பியர்கள் என்று பிரித்தது. சமூகத்தில் தங்களின் சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய அறிவு ஏற்பட்டதால் அந்தந்த சாதி மதங்களிலிருந்து மேலெழுந்து வந்த நடுத்தர, உயர் வர்க்கத்தவர் சாதிய, மத ரீதியிலான அணிதிரட்டல் செய்து அரசாங்கத்திடம் சலுகைகளையும் உரிமைகளையும் பெறத் தலைப்பட்டனர். பிரிட்டிஷ் அரசும் சாதி, மத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஏற்கெனவே பல நூற்றாண்டுகளாக இருந்த சாதி, மதப் பாகுபாடுகள் புத்துயிர் பெற்றன.
தேசிய இயக்கத்தை முன்னெடுத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் வர்க்க, சாதியப் பிரச்சினைகளில் பிற்போக்கான நிலை எடுத்ததால் அவர்கள் கட்டமைத்த தேசியம் என்ற கருத்தாக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
முழுமையான ஒரு அமைப்பாக உருவெடுக்காத இடதுசாரி அரசியல் காங்கிரஸ் கட்சியை வியாபாரிகள், தொழிலதிபர்களின் கட்சி என்று விமர்சித்தது. தொழிலாளர் மற்றும் விவசாயிகளைத் தன் பக்கம் இழுக்காமல் தேசியம் பேசுவது முதலாளித்துவ தேசியமாகத்தான் இருக்க முடியும் என்று விமர்சித்தது. சமூகப் பிரச்சினைகளை முன்னெடுத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை வர்ணாசிரம அடிப்படையிலமைந்த பிராமணிய இந்துமதச் சார்பு கொண்டதாக விமர்சித்தனர். வர்ணாசிரம அமைப்பு, குழந்தைத் திருமணம், விதவை மறுமணம் போன்ற பிரச்சினைகளில் பல காங்கிரஸ் தலைவர்களும் வடிகட்டிய பிற்போக்காளர்களாக இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும் அதே இடத்தில் இந்து மகாசபைக் கூட்டங்களும் நடந்திருக்கின்றன.
இந்திய தேசியத்தைப்பற்றிய இந்த இரு பார்வைகளும் இந்துத்வம் ஆட்சியிலிருக்கும் இந்த நேரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த காலகட்டத்தில் ஒப்பீட்டு அளவில் தொழிலாளி வர்க்கம் சிறியதாக இருந்தது. ஆயினும் வலுவான போராட்டங்களை நடத்தியது.
வங்கப் பிரிவினை நடந்த 1905 ஆம் ஆண்டில் திலகர் கைது செய்யப்படுகிறார். அதற்கு எதிராக மும்பை டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர். இதனைக் கேள்விப்படும் லெனின், “இந்தச் சம்பவம் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசத்தைக் காட்டுகிறது” என்கிறார். முதல் முறையாக இந்தியத் தொழிலாளர்கள் அரசியல் கோரிக்கைக்காக எழுவதை பாராட்டுவதுடன் ஆதரவும் தெரிவிக்கிறார்.
ஆனால் இந்திய இடதுசாரி இயக்கம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகே முறையான அமைப்பாக மாறுகிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் அரசிடம் மனு கொடுப்பதும், கோரிக்கை வைப்பதுமாக மட்டுமே அரசியல் நடத்தி வந்த காங்கிரசின் மீது வெறுப்புற்ற ஆயுதமேந்திய இளைஞர் குழுக்கள் உருவாகின. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த புரட்சிகரக் குழுக்களுக்கு 1917ல் நடந்த ரஷ்யப் புரட்சி உந்து சக்தியாக இருந்தது. எம்.என். ராய் போன்ற தலைவர்கள் ரஷ்யாவிற்கும், மத்திய ஆசியாவிற்கும் சென்றனர்.
1920இல் ரஷ்யாவின் தாஷ்கெண்ட் நகரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்ற அமைப்பு உதயமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாகாணத்திலிருந்த சிங்கார வேலர், பம்பாயிலிருந்த டாங்கே, கல்கத்தாவிலிருந்த முசாபர் அகமது போன்றவர்களை ஒன்றிணைத்து கான்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்டது. இது 1925இல்.
இதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (1916) சென்னை மாகாணத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரில் பிரமாணரல்லாதோர் இயக்கம் உருவானது. ‘ஜஸ்டிஸ்’ என்ற அவர்களின் பத்திரிக்கை பின்னாளில் அந்த இயக்கத்தின் அடையாளமாகிறது. நீதிக் கட்சி என்ற பெயர் நிலைத்து விடுகிறது. இதே ஆண்டில்தான் மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும் உருவாகிறது. வைணவ-பிராமணிய மதக்கலாச்சாரத்திற்கு எதிராக சைவத்தை தமிழர்களுக்கேயுரித்தான தனிமதமாகவும், சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழ்மொழியையும் நிறுத்தும் ஒரு நீரோட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் தனித்தமிழ் இயக்கம் வருகிறது.
சமூகநீதி இயக்கமும், தனித்தமிழ் இயக்கமும்தான் பின்னாளில் எழுந்த திராவிடத் தேசியத்தின் இரு முக்கியக் கூறுகளாக இருந்தன. ஒரியலிண்டிசம் எனப்படும் கீழைநாட்டியம் வேதாந்த மரபையும், பிராமணியத்தையும், சமஸ்கிருதத்தையும் முன்னிறுத்தியதிற்கு எதிர்வினையாகவும் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. கால்டுவெல் போன்ற கிறிஸ்துவப் பாதிரியார்கள் தமிழின் தொன்மையையும், தனிச்சிறப்புகளையும் வெளியே கொண்டுவந்து ஆற்றிய பணியானது மொழி உணர்வையும், பெருமிதத்தையும் தமிழர்களிடையே வளர்க்கும் சூழலில்தான் தனித்தமிழ் இயக்கம் வலுப்பெறுகிறது. சமஸ்கிருதத்திற்கு நிகராக நிற்கும் தன்மைவாய்ந்த மொழியாக தமிழை முன்னெடுத்துச் சென்றது தனித்தமிழ் இயக்கம்.
கேள்வி: நீதிக் கட்சிக்கு மக்கள் ஆதரவுத் தளம் எப்படி அமைந்தது? அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்ததை எப்படி புரிந்துகொள்வது?
சென்னை மாகாணத்தின் பிரதான முரண்பாடாக எதனை நீதிக்கட்சி முன்வைத்தது, அதற்கு அது தீர்வென்று எதனைக் கண்டது என்பதைப் புரிந்துகொள்வதில்தான் இந்தக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது.
அது 1916இல் வெளியிட்ட பிராமணரல்லாதோர் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இவை:
- 1892இலிருந்து 1904 வரை நடத்தப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் வெற்றிபெற்ற 16 பேரில் 15 பேர் பிராமணர்கள்; உதவிப் பொறியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 21 பேரில் 17 பேர் பிராமணர்கள்; 140 உதவி கலெக்டர்களில் 77 பேர் பிராமணர்கள்; 128 மாவட்ட முன்சீப்புகளில் 93 பேர் பிராமணர்கள். அரசு வேலைகள் பிராமணர்களின் ஏகபோகமாக இருந்தன.
- சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்த மாணவர்களில் பெரும்பாலோர் பிராமணர்கள்; இளங்கலைப் பட்டம் பெற்ற 650 பேரில் 452 பேர் பிராமணர்கள்.
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலிருக்கும் சென்னை மாகாணப்பிரதிநிதிகள் 15 பேர் பிராமணர்கள்; ஒரே ஒருவர் மட்டுமே பிராமணரல்லாதவர்.
இப்படிப் பல புள்ளி விவரங்களை கொடுக்கும் பிராமணரல்லதார் அறிக்கை
“நினைவிலிருக்கும் காலத்திற்கு முன்பிலிருந்தே இந்த மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நின்ற வர்க்கங்களுக்கும், சமூகக் குழுக்களுக்கும் அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டாமா?…. செட்டியார், கோமட்டிச் செட்டியார், முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமூகத்தினர் விரைவாக முன்னேறிக்கொண்டிருக்கின்றனர். … ஆனால் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையான 40 மில்லியனில் ஒரு மில்லியனே இருக்கும் பிராமண சாதியினரால் மட்டுமே அரசியல் அதிகாரமும், அதிகாரவர்க்க செல்வாக்கும்
நாசூக்காகவும், பலவழிகளிலும் பயன்படுத்தப்படுவதால் இவர்களும் இவர்களின் சகோதர சமூகத்தவரும் செய்வதறியாது பின் தங்கிவிட்டனர்” என்கிற வாதத்தை முன்வைக்கிறது.
1857 ஆம் ஆண்டுக்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கத்தினர். அரசு அதிகாரத்தை விரிவாக்கி, இந்தியமயமாக்கி மையப்படுத்திய போது, அந்த நிர்வாக இயந்திரத்தில் இயல்பாகவே ஆங்கிலம் அறிந்த, படித்த சாதியான பிராமணர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக, ஆனால் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வெள்ளாள சாதிகள் இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியில் பணப்பயிர் ஊக்குவிக்கப்பட்டதால் பிராமணரல்லாத உயர்சாதியினரிடையிலிருந்து நடுத்தர, சிறு முதலாளி வர்க்கம் மேலெழுந்தது. இவர்கள் வரி போன்ற விஷயங்களில் அரசாங்கத்தினை நாடும்போது பிராமணர் ஆதிக்கம் செலுத்தும் நிர்வாக எந்திரத்துடன் முரண்பாடுகள் தோன்றின. அதிலிருந்துதான் பிராமணர் அல்லாதாருக்கும் அரசு எந்திரத்திலும் பிற துறைகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை தோன்றியது. அதிகாரத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இட ஒதுக்கீடு வேண்டும் என்றெழுந்த கோரிக்கையின் முக்கியப் பின்புலம் இதுதான்.
நீதிக் கட்சி ஒரு மக்கள் இயக்கமாக இல்லை. அதுவும் நிலப்பிரபுக்கள் மெர்கண்டைல் கேபிடலிஸ்டுகள் (வர்த்தக முதலாளிகள்) தான் அப்போது நீதிக் கட்சியின் தலைவர்களாக இருந்தனர். பிற்காலத்தில் அண்ணாதுரை அவர்களை பட்டு வேட்டிகளும், ஜரிகை ஜிப்பாக்களும் என்று ஏளனம் செய்ததும் நடந்தது. பிராமணரல்லாதோர் அறிக்கை பிரிட்டிஷ் ஆட்சியின் நிலவரி வசூல் கொடுமைகளால் அடுத்தடுத்து வந்த பஞ்சங்களில் மடிந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத்தொழிலாளரின் துயரங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவே இல்லை. அவர்களும் பிராமணரல்லாதோர்தானே?
ஆட்சியின் மீது வளர்ந்துவந்த எதிர்ப்புகளை சமாளிக்க, 1919 ஆம் ஆண்டுகளில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. நீதிக் கட்சி இதனை ஒரு வாய்ப்பாக கருதியது. நீதிக் கட்சியினர் தேர்தலில் நின்றனர். அந்தத் தேர்தலில் தகுதி அடிப்படையிலான வாக்குரிமைதான் வழங்கப்படுகிறது. சொத்து உள்ளவர்கள், கல்விகற்றவர்கள் என 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர்தான் வாக்களிக்கின்றனர். அதன் முடிவில் நீதிக் கட்சி ஆட்சிக்குவந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசுப் பணிகள் மற்றும் உள்ளாட்சியில் நீதிக் கட்சி பிராமணரல்லாதார் வரவேண்டுமென விரும்பினர். படிப்படியாக ஆட்சியதிகாரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பல சாதிகளுக்கும், இனங்களுக்கும் இடையில் நியாயத்தராசைப் பிடிக்க பிரிட்டிஷ் அரசால் முடியும் என நம்பினர். பிரிட்டிஷ் ஆட்சி அகன்றுவிட்டால் அது உடனடியாக பிராமணர் ஆதிக்கத்திற்குத்தான் வழிவகுக்கும் என்று கருதினர்.
கேள்வி: காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் எவ்வாறு செயல்பட்டது? அதன் மீது மற்ற இயக்கங்கள் கொண்டிருந்த கருத்து என்ன?
காங்கிரசின் தேசியம் என்பது சமூகக் கொடுமைகளுக்கு முடிவுகட்டும், உழைக்கும் வர்க்க நலனைப் பேண முயற்சிக்கும் தேசியமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. அரசியலில் முற்போக்கு, சமூக ரீதியில் பிற்போக்கு என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருந்தனர்..
1921 ஆம் ஆண்டில் காங்கிரசின் அகமதாபாத் மாநாட்டில் எம்.என்.ராய் – அபானி ஆகிய கம்யூனிஸ்டு தலைவர்கள், “காங்கிரஸ் ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக, தேச நலனுக்காக நிற்பதாக சொன்னாலும் அது உண்மையிலேயே நிற்பது வியாபாரிகள் மற்றும் தொழில் உற்பத்தியாளர்களின் பொருளியல் மேம்பாட்டுக்காத்தான் நிற்கிறது. தனக்குப் பின்னால் நாட்டு மக்கள் அணிவகுக்க வேண்டுமென காங்கிரஸ் விரும்பினால் இந்த சிறு வர்க்கத்தினால் வழிநடத்தப்படக் கூடாது. வியாபாரிகள், உற்பத்தியாளர்களின் கண்ணுக்குப் புலனாகாத கைகளால் வழிநடத்தப்படக் கூடாது” என்று விமர்சித்தனர். இது காங்கிரஸ் மீதான கம்யூனிஸ்டுகளின் விமர்சனம்.
பெரியார் உள்ளிட்டவர்கள் காங்கிரசின் உயர்சாதி சமூகத் தன்மையைப் பார்த்தனர்
கேள்வி: பெரியாரும் நீதிக் கட்சியில் இருந்தாரா?
பெரியார், அப்போது நீதிக் கட்சியில் இல்லை. காங்கிரசில் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டு மிகத் தீவிரமாக காதி விற்பனை, கள்ளுண்ணாமை இயக்கம் என்ற வகையில் செயல்பட்டுவந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்தன. காங்கிரஸ் கமிட்டி நடத்தும் சேரன்மாதேவி குருகுலத்தில் எப்படி சமூக வேறுபாடுகள் இருக்க முடியும் என்ற பிரச்சனை எழுகிறது. வைக்கம் போராட்டத்திலும் பெரியார் பங்கெடுக்கிறார். காந்தியை சந்தித்து வர்ணாசிரம தர்மத்தைப் பற்றி கேள்வியெழுப்புகிறார். காந்தி அதுபற்றி கொடுக்கும் விளக்கத்தை பெரியார் ஏற்கவில்லை.
நீதிக்கட்சியும் அரசாங்கப் பதவிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாகவும், பிராமணரல்லாத சமூகங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் பிற கிராமப்புற ஏழைகளின் நலன்களக் கணக்கிலெடுப்பதில்லை என்றும் விமர்சித்தார்.
பின்னர் 1926 ஆம் ஆண்டில் எஸ்.ராமநாதன் தொடங்கிய சுயமரியாதை கழகத்தில் பெரியார் இணைந்தார். கலாச்சார ரீதியிலான பிராமணிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை மற்றும் சமூகநீதியை சுயமரியாதைக் கழகம் வலியுறுத்துகிறது. நீதிக்கட்சி சாதிவாரி இடஒதுக்கீடு பற்றியே பேசியது. அந்த இயக்கத்தில் பிராமணர் அல்லாத உயர் சாதியினர்தான் இருந்தனர். சுய மரியாதை இயக்கம் இந்த எல்லையைக் கடந்து ஏழை விவசாயிகளைப் பற்றியும் பேசியது. வன்னியர்கள், நாடார், அகமுடையார், இசை வேளாளர், பாலிஜா ஆகியவர்களெல்லாம் சுய மரியாதை இயக்கத்தில் திரட்டப்பட்டனர். பிராமணரல்லாதோர் இயக்கத்தின் சமூக அடித்தளத்தை விரிவாக்கியர் பெரியார்.
கேள்வி: இடதுசாரிகளான ம.சிங்காரவேலர் போன்றோருக்கும், பெரியாருக்குமிடையே இருந்த உறவு எத்தகையது?
இந்திய அளவில் எஸ்.ஏ.டாங்கே (மும்பை), முசாபர் அகமது (கல்கத்தா), சவுகத் உஸ்மானி (வாரணாசி), சிங்காரவேலர் (சென்னை) இவர்கள் அனைவரும் ஆங்காங்கு தொழிலாளிவர்க்க இயக்கங்களை கட்டமைத்தனர். சிங்காரவேலர் சமூக நீதி பற்றியும் பேசினார்.
1926 – 27 காலகட்டத்தில் சுய மரியாதை இயக்கத்தினர். சாதிப் பெயர் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை எடுக்கின்றனர்.
1920களில் சென்னை மாகாணத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்து, தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்கிறது.
1920 ஆம் ஆண்டில் 511 ஆக உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 1930 களில் 1661 ஆக உயர்கிறது. இது தொழிலாளிவர்க்க இயக்கத்திற்கான அடிப்படையை உருவாக்குகிறது. 1929 ஆம் ஆண்டு திருப்புமுனையாக அமைந்ததொரு நிகழ்வாக ரயில்வே வேலைநிறுத்தம் அமைகிறது. நாகப்பட்டினத்தில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம் வெடிக்கிறது. சம்பள உயர்வுக் கோரிக்கைக்காகவும், அடுத்து பொன்மலைக்கு பணிமனை மாறுதலினால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்தும் பெரிய போராட்டமாக வெடிக்கிறது. இந்தப் போராட்டத்தில் பெரியார் கைதாகிறார். சிங்காரவேலரும் பெரியாரும் சந்திக்கும் இந்தப் புள்ளிதான், சமூகநீதி இயக்கத்தில் முதல் இடதுசாரித் தாக்கமாக அமைந்தது.
சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் கம்யூனிச இயக்கம் பற்றிய புத்தகங்கள் குறைந்த விலையில் வெளியிட்டனர். லெனின், மார்க்ஸ் வாழ்க்கை பற்றிய பிரசுரங்கள் மற்றும் புரட்சி, பகுத்தறிவு, சமதர்மம், வெடிகுண்டு என இதழ்கள் வெளியிடப்பட்டன. இப்படி சோஷலிஸ ஆதரவு நிலைப்பாட்டை பெரியார் மேற்கொள்கிறார்.
குடியரசு பத்திரிக்கையில் லெனினின் வர்க்க மோதல், தனியுடைமை பற்றிய கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகள் வெளியாகின. சிங்காரவேலரின் கட்டுரைகளும் அதில் வந்தன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மொழியாக்கம் செய்யப்பட்டு குடியரசு இதழில் தொடராக வெளியிடப்பட்டது. அதன் முன்னுரை இவ்வாறு கூறுகிறது: “சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியாவை விட இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷ்யாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.
“……….. ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல்சாதியார் – கீழ்ச்சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது” (குடிஅரசு 4.10.1931).
மே தின ஊர்வலங்களை சுய மரியாதை இளஞர் லீக் நடத்தியது. தொழிலாளர்களும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களும் இணைய வேண்டும் என்றார் பெரியார். 1933 ஆம் ஆண்டில் மட்டும் தந்தை பெரியார் 50 மே தின கூட்டங்களில் பேசினார். இந்தக் காலகட்டத்தில்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். அதில் மிக அதிக நாட்கள் செலவிட்டது சோவியத் யூனியனில்தான் – சோவியத் யூனியனின் வளர்ச்சியையும் அங்கு நடக்கும் மாறுதல்களையும் நேரில் பார்த்த அவர் சோஷலிசத்தின்பால் முழுமையாக மீது ஈர்க்கப்படுகிறார். திரும்ப அவர் வந்தபோது பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுகத்தில் செய்த உரையிலேயே ‘புரட்சி ஓங்குக !’ என்றுதான் தனது பேச்சை அமைத்துக் கொள்கிறார். புரட்சிதான் ஒரே வழி. இங்குள்ள சமூக ஏற்றதாழ்வும், வர்க்க ஏற்றதாழ்வும் முடிவுக்கு வர புரட்சியே ஒரு வழி என்கிறார்.
எல்லா மாவட்டங்களுக்கும் சென்று பேசுகிறார். இந்தக் காலகட்டத்தில் கான்பூர் சதி வழக்கில் இணைக்கப்பட்ட சிங்காரவேலருக்கு முதுமையும் நெருங்கிவிடுகிறது. கிராமம் கிராமமாக பெரியார் சென்று சோவியத் அரசு பற்றி பேசிய பின் – புரட்சி வாழ்க என முழக்கமிட்டு, மக்களும் திரும்ப முழக்கமிட்டுள்ளனர். சோவியத் முறையிலான அரசு வேண்டும். வர்க்க சாதி வெறுப்புணர்வும், பாகுபாடுகளும் இருக்கக் கூடாது என்கிறார் பெரியார். சென்னை மாகாணத்தில் 400க்கும் மேற்பட்ட சமதர்ம சங்கங்கள் செயல்பட்டன.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அதற்கு எதிராக குடியரசு பத்திரிக்கையில் தலையங்கம் எழுதுகிறார். இதுவெல்லாம் ஒரு சோசலிசம் வேண்டும். அதன் வழியில் சமதர்மம் வேண்டும். இறுதியில் சுயமரியாதை இயக்கத்தில் சுயமரியாதைக் கட்சி, சமதர்மக் கட்சி என இரு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஈரோட்டுத் திட்டம் பெரியார் வீட்டில்தான் உருவாகிறது.
ஈரோட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- பிரிட்டிஷ் அரசிடமிருந்து முழு விடுதலை
- தேசத்தின் கடன்கள் தள்ளுபடி
- விவசாய நிலங்களும், காடுகளும் தேச உடைமையாகும்; பெரும் நில உடைமையாளர்களுக்கு இழப்பீடு கிடையாது
- ரயில்வே, வங்கிகள், கப்பல் மற்றும் இதர போக்குவரத்துகள் பொதுவுடைமை
- தொழிலாளர், விவசாயிகளின் தனிப்பட்ட கடன்கள் ரத்து
- எல்லா மன்னாரட்சி சமஸ்தானங்களையும் இணைத்து தொழிலாளர்-விவசாயிகள் தலைமையிலான கூட்டமைப்பு உருவாக்கப்படும்.
- தொழிலாளர், விவசாயிகளுக்கு அதிக சம்பளம், கூலி. வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு உதவி; பொது சுகாதார மையங்கள்; இலவச நூலகங்கள்; கலாச்சார மேம்பாட்டு நிலையங்கள்
சமூக நீதி இயக்கமும், சமதர்மக் கொள்கைகளும் இணைந்த இந்தத் தருணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இந்த இரு கூறுகளும் இணைந்த இந்த முற்போக்குத் திட்டம் இன்றும் பொருத்தப்பாடு உடையது என்று நினைக்கிறேன்.
கேள்வி: பெரியாரின் இத்தகைய செயல்பாடுகளை சுயமரியாதை இயக்கத்தின் மற்ற தலைவர்கள் எவ்வாறு பார்த்தார்கள்? பெரியாருக்கு எதிர்ப்பு இருந்ததா?
ராமநாதன் உட்பட பலரும் இதனை எதிர்த்தனர். தமிழர்களின் எழுச்சிதான் நமது நோக்கம், இடதுசாரி பாதை அல்ல நம்முடையது. சுய மரியாதையைப் பாதுகாப்போம் – சமதர்மம் வேண்டாம் என்கிறார். ஆர்.கே.சண்முகம் செட்டி போன்ற நீதிக் கட்சியினரும் எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்புக்கு எதிர்த்தவர்களின் வர்க்க பின்னணிதான் காரணமாக இருக்க முடியும். பிராமணரல்லாதாரின் ஆட்சி ஓரளவு வந்துவிட்டது, சாதிவாரி பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது. என்பதால் இடதுசாரி திசையில் செல்லக் கூடாது என்கின்றனர்.
1933 ஆம் ஆண்டில் அரசு ஏன் தூக்கியெறியப்படவேண்டும் என்று குடியரசு இதழில் தலையங்கம் எழுதப்படுகிறது. இதற்காக ராஜ துரோக வழக்கு தொடுக்கப்படுகிறது. அரசின் தரப்பிலிருந்து முதல் தாக்குதல் இது. பெரியார் சீர்திருத்தவாதியாக இருந்த வரை பொறுத்துக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, அவர் புரட்சிக்காரராக மாறும்போது அடக்குமுறையை ஏவியது.
1934 ஆம் ஆண்டில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன்? என்ற புத்தகத்தை மொழியாக்கம் செய்து வெளியிட்டதற்காக பெரியார், அவருடைய சகோதரர் ஈ.வே.கிருஷ்ணசாமி, , ஜீவா போன்றவர்கள் கைதாகின்றனர். 1933 ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் மத்தியக் குழுவே உருவாகிறது . இடதுசாரி இயக்கம் அப்போதுதான் வலுவடைந்துவருகிறது. தத்துவார்த்தமாகவும், அமைப்பு ரீதியிலும் முதிர்ச்சியடையாத கட்டத்தில்தான் இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உருவாவதும் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குதலுக்கு ஒரு காரணம்.
தேசிய இயக்கத்தில் காந்தியின் வருகைக்குப் பின் பெரிய எழுச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாகத்தான் காங்கிரஸ் வலுவடைகிறது. ஆனால் இதனை ஒரு பிராமணர் எழுச்சியாகவும், அவர்களின் கட்டுப்பாட்டில்தான் எல்லாம் நடக்கிறது என்ற அச்சமும் நீதிக் கட்சி மற்றும் சுயமரியாதை தோழர்களுக்கு ஏற்படுகிறது. பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக ஆவதற்கு முன்பாகவே – 1937 ஆம் ஆண்டில் ஒரு தேர்தல் நடக்கிறது. அதில் நீதிக்கட்சி தோற்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருகிறது. காங்கிரஸ் தலைவரான ராஜாஜி ஒரு பிராமணர். பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்தையே பிடித்துவிட்டார்கள் என்பதும் பெரியார் தீவிரமாக நீதிக்கட்சியுடன் சமூக நீதி பிரச்சாரத்தில் இறங்கிட ஒரு காரணமாகும்.
கேள்வி: பெரியாரின் மீது அப்போதைய கம்யூனிஸ்டுகளின் விமர்சனங்கள் எவ்வாறு அமைந்தன?
தமிழக கம்யூனிஸ்ட்கள் 1952 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆவணத்தில் பெரியார் “ஏகாதிபத்தியத்தின் தாசானுதாசர், பிரிட்டிஷ் சேவகர்” என்றதுடன் “வர்ணாசிரம இனவெறிக் கொள்கையை” முன்வைப்பவர் என்று கடுமையாக விமர்சிக்கின்றனர்.. அதிலேயே சுய விமர்சனமாக “தேசிய இனப்பிரச்சனை பற்றி ஒரு தெளிவான பார்வை இல்லாததால் கம்யூனிஸ்டு இயக்கம் வளர முடியவில்லை” எனவும் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பார்வையின் குறைபாடுகள் இப்போது நமக்குத் தெளிவாகவே தெரிகின்றன. ஆனால், ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு இதனை ஒரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறார்.
“ஒரு விடுதலைப்போராட்டக்காரர், தீவிர தேசியவாதி என்கிற முறையில், நான் சாதிய, மதரீதியிலான அரசியலுக்கு எதிராக இருந்தேன். ஒரு சமூக சீர்திருத்தவாதி என்கிற முறையில் கூட, சாதி மத ரீதியான வேற்றுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே என் நிலை. ஆயினும், நாம் எந்த இறுதி இலக்கினை நோக்கிச் செல்பவர்களாக இருந்தாலும், சாதி மத ரீதியிலான வேறுபாடுகள் இல்லையென்று ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது. கீழ்நிலையிலிருக்கும் சாதிகளின் மேம்பாட்டுக்காகவும், உயர்சாதிகளின் சமூக, குடும்பத்திற்குள்ளும் கூட சீர்திருத்தம் செய்யவும் போராடும் அமைப்புகள் மீது எனக்கு அனுதாபம் இருந்தது. இதில் சில சாதி சார்ந்த அமைப்புகள். அரசியல் ஜனநாயகத்திற்கான இயக்கத்தை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு சமூகநீதி வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இணைத்துச் செயல்பட முனைந்தபோது இந்த அனுதாபம் அதிகரித்தது”
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர்சாதிக்காரர்களின் அதிகாரப் பிடிக்குள் இருந்த அரசாங்க எந்திரத்திற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட ஈழவர்களைத் திரட்ட சி. கேசவன் முற்பட்டபோது, பெரும்பாலான தேசியவாதிகள் அவரது இயக்கத்தை சாதிய, மதவாத இயக்கமென்றும், தேசவிரோதமானது என்றும் நிராகரித்தனர் என்றும் ஈ.எம்.எஸ் எழுதுகிறார். அவர் நடத்திய வாராந்திரப் பத்திரிக்கை கேசவனின் இயகக்கத்துக்கு முழு ஆதரவளித்தது என்றும் எழுதுகிறார்.
இதே போல் கொச்சி சமஸ்தானத்தில் எழுந்த ஜனநாயக இயக்கமும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கைக்காகவும் போராடியது என்கிறார். “அப்போது கேரளத்தில் இருந்த நிலையில் ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சி உயர்சாதி இந்து ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்ததாகவே இருந்தது என்பதை நான் மலையாளத்தில் எழுதிய பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்,” என்று சுட்டிக்காட்டுகிறார் ஈ.எம்.எஸ்.
சாதியப் பாகுபாடும், ஒடுக்குமுறையும் ஆழமாக வேரோடிப்போயிருக்கும் ஒரு சமுதாயத்தில், பலமொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் சமூக அளவில் சமத்துவம், இடஒதுக்கீடு, மொழிக்கு உரிய அந்தஸ்து போன்ற கோரிக்கைகளின் ஜனநாயகத்தன்மையை புறக்கணித்து விட்டு ஒரு வலுவான முற்போக்கு இயக்கத்தைக் கட்டமுடியாது என்பதே இதிலிருந்து தெளிவாகிறது.
கேள்வி: இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் வந்த திமுகவும், அதிமுகவும் அதன் நோக்கங்களுக்கு நியாயமாக உள்ளனரா?
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அரசாங்கம் விரிவடைந்த போது சமூக நீதிக் கொள்கைக்கான தேவையும், வேலைவாய்ப்புகளில், கல்வியில், அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைமையும் ஏற்பட்டது. விடுதலைக்குப்பின் நாட்டைக் கட்டியமைக்கும் பணிக்காக ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறை இந்தத் தளத்தை மேலும் விரிவாக்கியது. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கை முழுவீச்சில் 25 ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்ட தற்காலத்தில் சந்தை முதன்மையாக்கப்பட்டு அரசாங்கம் சுருங்குகிறது. பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. திராவிட இயக்கத்திற்கும், சமூக நீதிக்கு எழுந்துள்ள மிகப்பெரிய ஆபத்து இதுதான். தனியார்மயம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் இடஒதுக்கீடு, சமூகநீதி போன்ற கோரிக்கைகளின் நிலை என்ன?
சமூக நீதிக் கொள்கையை மறு வரையறை செய்ய வேண்டாமா? சமூகநீதிக்கான போராட்டம், தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக மறு உருவம் பெற வேண்டாமா? இதில் திராவிடக் கட்சிகளின் நிலை என்ன என்று அவர்கள் மறு சிந்தனை செய்ய வேண்டாமா?
கல்வித்துறையிலும் இதே நிலைதான். திராவிடக் கட்சிகள் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் தமிழகத்தில்தான் எத்தனை சுயநிதிக் கல்லூரிகள்? இதில் பெரும்பாலானவை திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப் படுகின்றன. சீட்டுகளை விற்பது; அதிக பணம் கொடுப்போருக்கு கல்வி கொடுப்பதுதான் சமூக நீதியா?.
திராவிட கழகத்திலிருந்து பிரிந்து அண்ணாதுரை தலைமையில் திமுக உருவானபோதே பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து திமுக விலகிச் சென்றது. பெரியார் திராவிட இயக்கம் சமூக தளத்திலேயே செயல்பட வேண்டுமென்று கருதினார். ஆனால் அண்ணாவின் தலைமையில் அரசியல் தளத்திற்கு அவ்வியக்கத்தின் ஒரு பிரிவு அடியெடுத்து வைத்தபோது நாத்திகம் என்ற கொள்கையிலிருந்து ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இது நாடு விடுதலை பெற்று ஒரு புதிய அரசியல் சூழலில் நடக்கிறது. நாத்திகத்தை வைத்துக் கொண்டு இந்தியச் சூழலில் அரசியல் நடத்துவதின் சிக்கலை அண்ணா புரிந்து வைத்திருந்தார்.
1962இல் அண்ணாதுரை திராவிட நாடு கோரிக்கையையும் கைவிடுகிறார். இப்படி அண்ணாவின் காலத்திலேயே தேசிய அரசியல் சூழலுக்கேற்றவாறு திராவிட அரசியலை தகவைமைத்துக் கொள்ளும் போக்கு தொடங்கிவிட்டது.
1980களில் காங்கிரசின் அரசியல் வீழ்ச்சிக்குப் பின், அதற்கு அகில இந்திய அளவில் மாற்றாக ஒரே கட்சி எழாத சூழலில் மத்தியில் கூட்டணி ஆட்சி முறை பலம் பெற்றது. மாநில சுயாட்சி, பிரதேச உரிமைகள் என்று பேசி வந்த திராவிடக் கட்சிகளுக்கு மத்திய ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்ற நிலைமை வந்தபோது அந்தக் கொள்கைகளும் நீர்த்துப்போனது. எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியே வந்து அதிமுகவை தோற்றுவித்த பிறகு அவருடைய அரசியல் திராவிடம் என்பதைவிட அதிகம் தேசியம் சார்ந்ததாகவே இருந்தது. 1980ல் இந்திரா காந்தி தலைமையிலான மைய அரசியலில் முதன் முதலாக அதிமுக அமைச்சர்கள் இடம்பெற்றனர்.
1972இல் திராவிட அரசியலில் ஏற்பட்ட பிளவு தனிநபர் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர கொள்கைரீதியானதாக இல்லை. கொள்கை அடிப்படையிலான அரசியல் மாறி தனிநபர் சார்ந்த அரசியல் முன்னுக்கு வந்த போது இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் மைய அரசில் பங்குபெறுவது ஒரு பெரும் குறிக்கோளானாது. இதன் தொடர்ச்சியாகவே பிஜேபி அரசிலும் அவை பங்குபெறும் நிலைக்குச் சென்றன.
பிஜேபி என்கிற மதவாதக் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தியதிலும், அதனை ஓரளவு மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்சியாக மாற்றியதிலும் இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் பங்குண்டு.
திராவிடக் கட்சிகள் மதவெறி எதிர்ப்பு போன்ற விசயங்களில் சமீபத்தில் நடைபெற்ற பல பிரச்சனைகளில் அறிக்கை என்ற அளவோடு நிற்கின்றனர். அவர்களின் திராவிடக் கொள்கை நீர்த்துப் போனதைத்தான் இது காட்டுகிறது. அதே சமயம், திராவிடர் கழகம் இவ்விஷயத்தில் செயல்பட்டிருக்கிறது.
எந்த மதத்தினால் ஆசிர்வதிக்கப்பட்ட வர்ணாசிரம தர்மத்திற்கும், சாதிய அமைப்புக்கும் எதிராக பெரியார் போராடினாரோ, அந்த மதத்தின் பெயரால் இன்று ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கும் பிஜேபியின் முந்தைய ஆட்சியில் முழுவதுமாகப் பங்கேற்றது மட்டுமின்றி, குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் வன்முறை நடந்த பின்னரும் அதில் தொடர்ந்தது திராவிட முன்னேற்றக் கழகம். பகுத்தறிவுக்கெதிராக பாடத்திட்டத்தில் சோதிடம் சேர்க்கப்பட்டதும், வரலாறு மாற்றி எழுதப்பட்டதும் இந்த ஆட்சிக்காலத்தில்தான். இது திராவிடக் கொள்கையின் அடிப்படைக்கு முரணானதில்லையா? ’நல்லவர், வல்லவர்” என்று திரு கருணாநிதி அவர்களால் புகழப்பட்ட வாஜ்பாயி ஆட்சி செய்த அதே காலகட்டத்தில்தான் புதிய பொருளாதாரக் கொள்கை முழு வீச்சில் முன்னேறியது. சமூகநீதிக்கும், பகுத்தறிவுக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரான
பகுத்தறிவுக்கு எதிரான – இதையெல்லாம் சகித்துக் கொண்டு யாருடைய நலனுக்காக மத்திய ஆட்சியில் இருந்தார்கள்?
கேள்வி: எத்தகையதொரு செயல்பாடு அவசியமென்று கருதுகிறீர்கள்?
இந்தியச் சூழலில், பொருளாதார நீதி இல்லாமல் சமூக நீதி முழுமை பெறாது.
வர்க்கப் போராட்டமும். சமூக நீதிப் போராட்டமும் தனித்தனியானவையாக இருக்கமுடியாது.. நம் அனுபவம் என்னவென்றால் வர்க்கத்தை பேசியவர்கள் சாதியத்திற்கு எதிராக போராடியுள்ளனர். ஆனால் அது கோட்பாட்டு வடிவம் பெறவில்லை.. ஆனால், சமூகப் பிரச்சனை பேசுகிறவர்கள் வர்க்கப் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்க்கிறார்கள். சாதி, வர்க்கம் இடையிலான தொடர்பு பற்றி தெளிவான வரையறை இல்லாமல் போனது இடதுசாரிகளின் நெருக்கடிக்கு ஒரு காரணமாக இருந்தது. வர்க்க அரசியலுக்குள் வந்து விட்டால் தானாகவே சாதிய உணர்வு மறைந்து விடும் அல்லது புரட்சிக்குப் பின் அழிந்துவிடும் என்கிற எந்திரரீதியான புரிதலும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
உழைக்கும் வர்க்கத்தினர்தான் ஒடுக்கப்பட்ட சாதியாகவும் உள்ளனர். வரலாற்றுரீதியாக மூலதனச் சேர்க்கையில் முன் நின்ற சாதிகள்தாம் ஆளும் வர்க்கமாக உருவெடுத்திருக்கின்றனர். சாதீயம் – சாதி என்கிற பிரச்சனையே மிக நெருக்கமாக நிலவுடைமையுடன் இணைந்தது. நிலவுடைமையில் தலையிடாமல் சாதி கட்டமைப்பை உடைக்க முடியாது. அதே நேரத்தில் சாதிய சிந்தனைகளுக்கு எதிராகப் போராடாமல் நிலவுடைமையை உடைக்க முடியாது.
திராவிட இயக்கம் பிராமணர்களுக்கு எதிராக – பிராமணரல்லாதாரை நிறுத்திய போதிலும், பிராமணரல்லாதாரிடையே இருந்த சாதிய, வர்க்க முரண்பாடுகளைத் தீர்க்க முடியவில்லை.. பிராமணரல்லாத நடு சாதிகளின் ஜனநாயாக அபிலாஷைகளை முன்னெடுத்த திராவிட இயக்கம், அதற்கு அடுத்த நிலைக்குச் சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் சார்ந்த இயக்கமாகப் பரிணமிக்க முடியவில்லை. இதனைத்தான், திராவிட இயக்கத்தின் தீர்க்கப்படாத முரண்பாடுகள் என்று இலங்கைச் சிந்தனையாளர் சிவத்தம்பி கூறுவார். இதனால்தான் திராவிட ஆட்சிக் காலத்திலேயே, தலித் இயக்கங்கள் முன்னுக்கு வந்தன.
இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் மிக அதிகமாகப் பலனடைந்தவர்கள் மேல் சாதியினரும், உயர் நடுத்தர வர்க்கத்தினரும்தான். பொருளாதார ரீதியாக முன்னெபோதுமில்லாத அளவிற்கு இன்று வளம் பெற்றுள்ள இந்தப் பிரிவினருக்கு, அரசியல் அதிகாரம் முழுமையாகக் கையில் கிடைக்காமல் இருந்தது. பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் சமூக நீதிப் போராட்டங்களின் விளைவாக அரசியலில் வலுவான சக்திகளாக இருப்பது இதற்கு ஒரு காரணம். அதே நேரத்தில், வர்க்க ரீதியான போராட்டங்களும் இந்த ஆதிக்க சக்திகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இதனால்தான் இச்சக்திகளின் மொத்தப் பிரதிநிதியான பிஜேபி ஆட்சியில் அமர்ந்தவுடன் சமூக நீதி இயக்கங்களும், வர்க்கம் சார்ந்த இயக்கங்களூம் இதுவரை போராடிப் பெற்ற உரிமைகளின் மீது தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிபோக்கினை பிரபாத் பட்னாயக் போன்ற பொருளாதார நிபுணர்கள் மேல்தட்டு மக்களின் எதிர்ப்புரட்சி என்கின்றனர்.
இந்த எதிர்ப்புரட்சியை முறியடிப்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.
சுயமரியாதை, சமதர்மம் என்னும் முழக்கம் இன்று இன்னும் வலுப்பெற்று இருக்கிறது. சுயமரியாதை, சமதர்மம், சமூக நீதி போன்ற கருத்தாக்கங்களை இந்த காலகட்டத்தின் எதார்த்தங்களுக்கு ஏற்ற வகையில் மறு வரையறை செய்யாமல், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் இயக்கத்தினைப் பற்றி மறு சிந்தனை இல்லாமல் முன்னேற முடியாது.
Leave a Reply