– ஜி.செல்வா
ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும்.
இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது.
உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி, வெண்ணெய் வாங்கிக் கொண்டு அலுவலகத்திற்கு செல்லாமல் ஒரு பெரிய வீட்டின் ஐந்தாவது மாடியில் உள்ள தனது சிறிய வீட்டுக்கு செல்கிறார்.
அந்த வீட்டுக்குள்ளே அப்போது என்ன நடந்து கெண்டிருந்தது. அறையின் மூலையில் ஒரு மேஜை அருகே உட்கார்ந்து அரசும் புரட்சியும் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தார் லெனின்.
நிற்க…
அரசும் புரட்சியும் லெனினது படைப்புகளில் மிக அடிப்படையான ஒன்றாக கருதப்படும் நூல். ரஷ்ய புரட்சிக்கு முன்னால் தலைமறைவு காலத்தின்போது எழுதப்பட்டது. 1917 ஆகஸ்ட் மாதத்தில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டு, 1918 டிசம்பர் 17-ல் இரண்டாம் பதிப்பு வெளியிடும்பேது அது ஒரு சிறு பகுதியை மட்டும் சேர்த்து வெளியிட்டார் லெனின்.
இந்நூல் முற்றுப்பெறாத படைப்பு.
1905ஆம் ஆண்டு மற்றும் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை தொகுத்து இறுதியாக ஒரு அத்தியாயத்தை எழுதுவதாக லெனின் திட்டமிட்டிருந்தார். ஆனால், எழுத்தில் கொண்டுவர இயலவில்லை. காரணத்தை அவரே தெரிவிக்கிறார். 1917 அக்டோபர் புரட்சியின் தறுவாயில் அரசியல் நெருக்கடி குறுக்கிட்டுவிட்டது, இது போன்ற குறுக்கீடு
வரவேற்கத்தக்கதே!
புரட்சியின் அனுபவத்தை எழுதுவதைக் காட்டிலும் நேரில் வாழ்ந்து காண்பது மேலும் இனிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.
புரட்சி, புரட்சி, புரட்சி இதையே மையமாகக் கொண்டு இலக்காகக்கெண்டு முழு நேரமாக சிந்தித்து, செயல்பட்டு வாழ்ந்த போராளிகளுக்கு உண்மையில் இதைவிட ஆனந்தம் என்னதான் இருக்கமுடியும். எதற்காக எழுதினார் லெனின்
பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி ரஷ்ய தேசம் வீறுநடை போட்டு சென்று கெண்டிருந்த காலக்கட்டம். ஜார் மன்னன் விரட்டப்பட்டு, தற்காலிக அரசாங்கம் சோசலிஸ்டுகள், காடெட்டுகள் உள்ளிட்டு மார்க்சிய பெயரிலான குழுக்கள் அதிகாரத்தில் பங்கெடுத்திருந்தனர். பதவிக்கு வந்தவுடன் இவர்கள் அடித்த அந்தர் பல்டிகளை லெனின் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார்.
மார்க்சியத்தின் மிக முக்கியமான கருத்துகளை திரித்துக் கூற முயன்றனர். அதில் ஒன்று அரசு குறித்த மார்க்சிய பார்வை. எனவேதான், இந்நூலின் முன்னுரையின் முதல் வரியிலேயே, அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும், நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது எனக் குறிப்பிட்டு உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி முற்றி வருவது தெளிவாகத் தெரிகிறது.
அரசின்பால் இதற்குள்ள உறவு பற்றி பிரச்சனை நடைமுறை முக்கியத்துவமுடையதாகி விடுகிறது என்கிறார். மேலும், அரசு குறித்து சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்
வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று… ஆகவே, அரசின்பால் சோசலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள உறவு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனையாகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்கிறார்.
பெரும்பாலான லெனினது நூல்களைப் போல் அரசும் புரட்சியும் தனது எதிராளிகளுக்கு அதாவது மார்க்சிய தத்துவத்தின் எதிராளிகளுக்கு விளக்கமளிக்கவும், அதன்வழி போல்ஷ்விக் கட்சி ஊழியர்களை தத்துவார்த்த ரீதியாக
வளர்த்தெடுக்கவுமே எழுதியுள்ளார். இந்த நூலானது, அரசு குறித்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியேரின் கருத்துகளை எடுத்துரைப்பதாகவே அமைந்துள்ளது. இதன் காரணமாக லெனின் சொன்னது போல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் நீண்ட மேற்கோள்கள் புத்தகம் எங்கும் விரவியிருப்பதை காணலாம்.
மார்க்சியப் பார்வையில் அரசு வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவே அரசு. எங்கே எப்போது எந்த அளவிற்கு வர்க்கப் பகைமைகள் புறநிலை காரணங்களால் இணக்கம் காண முடியாதவை
ஆகின்றனவோ அங்கே அப்போது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையாக கூறுகையில், அரசு ஒன்று இருப்பதானது, வர்க்கப் பகைமைகளை இணக்கம் காண முடியாததன் இருத்தலை நிரூபிக்கிறது என அரசு குறித்து
லெனின் வரையறுக்கிறார்.
எங்கெல்சின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்றான குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலிருந்தே பெரும்பாலான மேற்கோள்களை எடுத்துக்காட்டி லெனின் முதல் அத்தியாயம் முழுவதையும் எழுதியுள்ளார். ஏங்கெல்ஸ் நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பெரும்
பிழைகளுடன் இருப்பதால் ஜெர்மன் மூலத்திலிருந்தே மேற்கோள்களை மொழிபெயர்த்துள்ளதாக லெனின் தெரிவிக்கிறார்.
லெனின் அரசின் தோற்றம் குறித்து இவ்வளவு அக்கறையோடு வெளிப்படுத்துவவற்கு காரணம் என்ன?
அன்றைக்கு அவர் முன்னால் இருந்த கடமையானது, ரஷ்ய பாட்டாளி வர்க்க சோசலிசப்புரட்சி. அதை நிறைவேற்றுவதற்கான சூழல்கள்பொருந்தியிருந்தன. ஆனால், தத்துவார்த்த தளத்தில் இதற்கு இடையூறு மிக நாசூக்காக மேற்கொள்ளப்பட்டது. இந்த இடையூறுகளை
அம்பலப்படுத்துவதும், அப்போதைய சோசலிசப் புரட்சிக்கு அரசு அதிகாரத்தை அழித்தொழிப்பதும் பிரதான விசயமாக முன்னிருந்தது.
எனவே, அரசும் புரட்சியும் நூலில் இந்த கருத்துகளை மையமாகக் கொண்டே லெனின் தனது எழுத்துகளை வார்த்தெடுத்தார். இதற்கு வரலாற்று காரணங்களும் உண்டு.
லெனின் தன் சமகாலத்தில் பல நாடுகளில் அதிகாரத்திலிருந்த முதலாளித்துவ வர்க்கங்கள் தொழிலாளி வர்க்க இயக்க்ததை பிளவுபடுத்த எடுத்த முயற்சிகளை கண்கூடாகப் பார்த்தார்.
பாட்டாளி வர்க்கப் புரட்சியை திசைதிருப்பும் பொருட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு சிறு சலுகைகள் வழங்குவது, பிற்போக்கு முதலாளித் துவ அரசாங்கங்களில் சோசலிஸ்டு கட்சிகளின் சீர்திருத்தவாத தலைவர்களுக்கு பதவிகள் தருவது போன்றவை. 1892-ல் ஆங்கில நாடாளுமன்றத்திலும், 1899 பிரெஞ்சு அரசாங்கத்திலும் சோசலிஸ்டுகள் அதிகாரத்தில் பங்கு கொண்டனர்.
பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் சோசலிஸ்ட் தலை வர் மில்லிரான் பங்கு பெற்றதானது, பிரான்சில் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு மாபெரும் தீங்கு விளைவித்தது. இதை லெனின் கடுமையாக கண்டித்தார். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இத்தாலியிலும், சோசலிஸ்ட் கட்சியினர் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.
முதல் உலகப் போரின்பேது பல நாடுகளிலிருந்து சோசலிசம் பேசும் கட்சிகள், அதன் தலைவர்கள், தத்தம் நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவியில் பங்கேற்று, அவர்களது கொள்கைக்கு ஆதரவாக பேசவும் ஆரம்பித்தனர். இவ்வாறு பேசுபவர்களில் மிக முக்கிய மானவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த காவுட்ஸ்கி (1854-1938). இவர் இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக இருந்தவர். மார்க்சியவாதியாக இருந்து மார்க்சின்ப டைப்புகளை மொழிபெயர்த்தவர். ஆனால், பிறகு மார்க்சியத் துக்கு விரோதமாக செயல்பட ஆரம்பித்தார்.
மார்க்சியத்தை கொச்சைப்படுத்தினார். குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயக முறையின் மூலமே தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு சாத்தியம் உண்டு என பேசினார். இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மிக உக்கிரமான போராட்டத்தை லெனின் நடத்தினார்.
ஜனநாயக குடியரசானது முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகுமென நாம் அதனை ஆதரிக்கிறோம். ஆனால், மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலும்கூட கூலியடிமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறது. மேலும், ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கான தனிவகை சக்தியே. எனவே, எந்தவொரு அரசும் சுதந்திரமானது
அல்ல; மக்கள் அரசும் அல்ல. மார்க்சும் ஏங்கெல்சும் 1870ஆம் ஆண்டுகளில் தமது கட்சித் தோழர்களுக்கு இதைத் திரும்பத் திரும்ப விளக்கக் கூறினார்கள் என லெனின் காவுட்ஸ்கிவாதங்களுக்கு பதிலடி கெடுத்தார்.
மார்க்ஸ் கருத்தோட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கு மார்க்சிய தத்துவமானது நடைமுறைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டியாகும். அப்படியெனில் அத்தத்துவ வளர்ச்சிப் போக்குக்கும் நடை முறை அனுபவத்தின் வாயிலாகவே செழுமைப் பட்டிருக்கும் அல்லவா. அரசு குறித்த கருத் தோட்டத்திற்கும் இதுவே அடிப்படை.
லெனின் இந்த வளர்ச்சிப் போக்கை, மிகச் சிரத்தையுடன் எடுத்துச் செல்லும் பாங்கே மிக அற்புதமாக அமைந்துள்ளது. மார்க்சின் நூல்கள் அதிலும் முதிர்ச்சியுற்ற மார்க்சியத்தின் முதலாவது நூல்களான மெய்யறிவின் வறுமை, கம்யூனிஸ்ட் அறிக்கை இதைத் தொடர்ந்து லூயி போனப்பர்த்தின் பதினெட்டாம் புரூமேர் நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டு மார்க்சியத்தின் அரசு குறித்த பார்வையை வளர்ச் சியை விவரிக்கிறார் லெனின். வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும், அரசு மறைந்து விடுமென பொதுவான விளக்கத்தை மெய்யறிவின் வறுமை நூலில் சொன்ன மார்க்ஸ், அடுத்த சில மாதங்கள் கழித்து ஏங்கெல்சுடன் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் இன்னும் துல்லியமாய் பேசுகிறார்.
பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும். உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின்கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும். இங்கு அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய்
ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம் என்பது வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சி பாத்திரம் குறித்த மார்க்சிய போதனை என்கிறார் லெனின். அப்படியெனில் முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல்,
தகர்த்தெறியாமல் இத்தகைய ஒழுங்கமைப்புகளை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? இதற்கான கருத்துகளை, விடைகளை மார்க்ஸ் 1848-51ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டு புரட்சி வரலாற்றிலிருந்து பெறப்பட்ட படிப்
பினைகள் வாயிலாக லூயி போனபர்த்தின் பதினெட்டாம் புரூமேர் நூலில் கூறுகிறார். அதன் சாராம்சத்தை லெனின், அரசை வர்க்க ஆதிக்கத்துக்கான உறுப்பாக கருத வேண்டும். பாட்டாளிவர்க்கம் முதலாளி அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல், அரசியல் அதிகாரத்தைப் பெறாமல் ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கமாய் மாற்றாமல் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது. முந்திய புரட்சிகள் எல்லாம் அரசுப் பொறியவையைச் செம்மை செய்தன. ஆனால், இந்தப் பொறியமைவை தகர்த்து நொறுக்க வேண்டும் என்கிறார்.
இங்கு ஒரு கேள்வி இயல்பாக எழக்கூடும். பிரெஞ்சு நாட்டின் வரலாற்றை மட்டுமே மையமாகக் கெர்ணடு ஒரு பொதுவான முடிவுக்கு வர முடியுமா? அதுவும் 1848-51க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகள் பிரெஞ்சு வரலாற்றை விரிவான அரங்கில் கையாள்வது சரியா? இதற்கு விடையாய் இந்நூலில் ஏங்கெல்ஸ் பதினெட் டாம் புரூமேர் நூலுக்கு எழுதிய முன்னுரையை லெனின் குறிப்பிட்டுள்ளார். படித்து, இன்புற்று, கிளர்ச்சியடைய வேண்டிய எழுத்துக்கள் அவை. பாரிஸ் கம்யூனும் மார்க்சும் 1871ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் நாள் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கம்யூனை பிரகடனம் செய்தது. பாரிஸ் தொழிலாளர்கள் ஒரு சாதகமில்லாத சூழ்நிலையில் பக்குவமில்லாத நடவடிக்கையை எடுத்துவிடுவார்கள் என மார்க்ஸ் முதலில் பயந்தார். எனினும் புரட்சி வெடித்தவுடன் கம்யூனர்டுகளுடைய வீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் ஈடுபாட்டையும் வெகுவாகப் பாராட்டி, போற்றிப் புகழ்ந்தார்.
கம்யூனின் செயல்பாட்டில் நடவடிக்கைகளின் மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அது வரலாற்றிலேயே முதல் தடவையாக பூர்ஷ்வா வர்க்கத்தினுடைய ராணுவ – அதிகார வர்க்க அரசாங்க எந்திரத்தை தகர்த்து எறிவதற்கு முதலாவது நடைமுறை முயற்சி எடுக்கப்பட்டதில் அடங்கியிருக்கிறது. அந்த நடவடிக்கை சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு ஒரு அவசியமான நிபந்தனையாகும் என்றார் மார்க்ஸ்.
நூற்றுக்கணக்கான வேலைத் திட்டங்கள், வாதங்களை காட்டிலும் மிக முக்கியமானதாக பாரிஸ் கம்யூனின் அனுபவத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார் இந்த புரட்சி இயக்கத்திலிருந்து அனுபவங்களையும், படிப்பினைகளையும் பெற்று தமது தத்துவப் பார்வையை மறுபரிசீலன செய்து பார்க்க முயன்றார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் திருத்தத்தினை மேற்கெண்டார்.
பாரிஸ் கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள ஒரு அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது செந்த நோக்கத் திற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியது அதாவது, அதிகார வர்க்க – ராணுவ அரசுப் பொறியமைவை அழித்தொழிப்பது மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றின் முன் நிபந்தனையாகும் என்கிறார் மார்க்ஸ்.
இங்கு மக்கள் புரட்சி என்று மார்க்ஸ் சொல்வதற்கு காரணம் உண்டு. அன்று 1871-ல் ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கம் எங்கும் பெரும்பான்மையிராக இல்லை. பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் இவ்விரு வர்க்கங்கள் தான் அன்று மக்கள் என்போர். அதிகார வர்க்க – ராணுவ அரசுப் பொறியமைவு இந்த இரண்டு வர்க்கங்களையும் ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டி வருகிறது என்பதால் இயல்பாக ஒன்றிணைக்கப் படுகின்றன.
இவ்வாறு மார்க்சால் முன்வைக்கப்பட்டு லெனினால் வளர்த்தெடுக்கப்பட்ட தொழிலாளி – விவசாயி கூட்டணி என்னும் கருத்து ரஷ்யப் புரட்சியின்போதும் வெற்றிகரமான சோசலிச நிர்மாணத்தின் போதும் எதார்த்த நிலைக்கு மாற்றப்பட்டது. சோசலிசப் புரட்சியில் விவசாயிகளின் தீர்மானமான பங்கைப் பற்றி நரேத்னிக்குகள் மற்றும் சோசலிஸ்டு புரட்சி கட்சியினரின் தவறான தத்துவங்களையும் விவசாயிகள் புரட்சி கரமான வாய்ப்புகளை இயல்புகளை மறுத்த மென்ஷ்விக்குகளின் தவறான கருத்தோட்டங்க ளையும் உடைத்தெறிந்தார் லெனின்.
கம்யூனது அனுபவத்தை ஏங்கெல்ஸ் தொடர்ந்து பலமுறை பல்வேறு தத்துவார்த்த விவாதங்களில் பகுத்து ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இதன் காரணமாகவே இந்நூலில் ஏங்கெல்ஸ் கூறிய படைப்புகளின் சாராம்சத்தை தனி அத்தியாயமாகவே லெனின் தொகுத்து கொடுத்துள்ளார். அதில் ஒன்று குடியிருப்பு பிரச்சனை பற்றி ஏங்கெல்ஸ் 1872-ல் தனது நூலில் எடுத்துரைத்தது.
பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன் குடியிருப்பு பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணும்? இது முதலாளித்துவ ஆட்சியதிகாரத்திலிருந்து எப்படி வேறுபட்டிருக்கும்? என்பதை பாரிஸ் கம்யூன் அனுபவத்திலிருந்து ஏங்கெல்ஸ் ஆராய்கிறார்.
சோசலிசம், கம்யூனிசம் ஆகிய இரண்டு கட்டங்களில் அரசு புரட்சி குறித்து எவ்வளவு தெளிவான தீர்க் கமான பார்வையேடு செயல்பட வேண்டுமென் பதை மார்க்சிய மூலவர்களின் எழுத்துகளும் சிந்தனைகளும் இங்கு நமக்கு
புரியவைக்கப்படுகின்றன. அரசு உலர்ந்து உதிர்ந்து விழும் என்ற ஏங்கெல்சின் சொற்றொடர் எவ்வாறெல்லாம் அந்த கருத்தின்
சாராம்சத்தை புரிந்து கெள்ளாமல் திரித்து கூறப்படுகிறது என்பதை லெனின் மிகுந்த கவனத்துடன் எடுத்துரைக்கிறார்.
அரசு எப்போது மறையும், வர்க்கங்களற்ற சமுதாயம் எந்த கட்டத்தில் உருவாகும் என்பதை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துகளின் வழிநின்று எடுத்துரைக்கிறார்.
முதலாளித்துவ ஜனநாயகத் தின் பலவீனங்களை கிழி கிழி என்று கிழித்துத் தொங்கப் போட்டுவிட்டு அதைவிட மேலான ஜனநாயகம், வாழ்க்கை முறை, சோசலிசத்திலும், கம்யூனிச சமூகத்திலும் எப்படி இருக்கும் என் பதை வெளிப்படுத்துகிறார். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது மிக சிலருக்கு, அதாவது செல்வந்தருக்கான ஜனநாயகம் தான். வாக்குரிமை, பிரதிநிதித்துவ சபையில் பங்கேற்பு, கூட்டம் கூடும் உரிமைகள் போன்றவை முதலாளித்துவ சமூகத்தில் இருந்தபோதிலும் இதன் மீது ஏழ மக்களுக்கு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு விதிக் கப்படும் கட்டுப்பாடுகளும் விலங்குகளும் விலக்கல்களும் ஏராளம் ஏராளம். இது ஜனநாயகத்தில் நேரடியாக பங்கு கொள்வதிலிருந்து ஒதுக்கி வெளியே தள்ளுவதற்கு சமமாகும்.
கம்யூனிச சமுதாயத்தில்தான் முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு முதலாளிகள் மறைந்துபோய் வர்க்கங்கள் இல்லாமல் போய்விடும். …அப்பொழுதுதான் முழு நிறைவான ஜனநாயகம் விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகும். அப்போது அரசு உலர்ந்து உதிரத் தொடங்கும் என்கிறார் லெனின். இந்த கம்யூனிச சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து கம்யூனிசத்தின் முதற் கட்டத் தில் அதாவது சோசலிசத்தில் முதலாளித்துவ உரிமை அதன் முழு அளவிலும் ஒழிக்கப்படுவதில்லை. பகுதி அளவுக்கே. இதுகாறும் உருப்பெற்றுள்ள பொருளாதார புரட்சிக்கு ஏற்ற அளவுக்கே அதாவது உற்பத்தி சாதனங்களை பொறுத்தமட்டிலுமே ஒழிக்கப்படுகிறது. முதலாளித்துவ உரிமை இவற்றை தனிநபருடைய தனி உரிமையாய் அங்கீகரிக்கிறது. சோசலிசம் இவற்றை பொதுவுடைமையாய் மாற்றுகிறது. அந்த அளவுக்கு – அந்த அளவுக்கு – மட்டுமே முதலாளித்துவ உரிமை மறைகிறது. இதற்கு அடுத்த உயர் கட்டமான கம்யூனிச சமுதாயத்தில்தான் அரசு பூர்ணமாய் உலர்ந்து உதிர பாதை திறக்கப்பட்டுவிடும். இப்படியாய் அரசின் தோற்றம் முதற்கொண்டு அதன் மறைவு வரை மார்க்சிய பார்வையை லெனின் அரசும் புரட்சியும் நூலில் எடுத்துரைக்கிறார்.
நிறைவாக
அரசு, புரட்சி இன்று இந்திய சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கருத்துகள். அரசு குறித்தும் அரசாங்கத்தின் நிர்ணயிப்புகள் சம்பந்தமாகவும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடைபெற்ற தத்துவார்த்த விவாதங்களும், மோதல்களும், பிளவுகளும் கற்றுணர வேண்டிய மிக முக்கியமான பாடங்கள். இந்திய அரசு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்ணயிப்பும், இந்திய புரட்சியின் கட்டம் குறித்த நிலைபாடுகளும் உள்வாங்கிக் கொண்டு செயலாற்றுவது மிக முக்கியமானது.
அவ்வாறு செயல்படும்போது இயக்கவியல் வரலாற்று பொருள் முதல்வாதப் பாதையில் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுப் போக்குகளை எவ்வாறு ஆராய்வது, கம்யூனிச இயக்கத்திற்குள் எப்படியெல்லாம் தவறான கருத்துகள் உருவெடுக்கும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் மார்க்சிய செவ்விலக்கிய நூல்களிலிருந்து அறிய முடியும். எவ்வளவுதான் நூல்கள்வழி கற்றறிந்தாலும் இன்று எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளேடு உரசிப்
பார்த்து தத்துவப் பார்வையை வளர்த்தெடுத்து செயல்படுவதுதான் சிறந்தது. இதைத்தான் லெனினது அரசும் புரட்சியும் சுட்டிக்காட்டுகிறது.
Leave a Reply