பொ.இராஜமாணிக்கம்.
பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான தற்போதைய மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையையை வடிவமைப்பதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. ஃபிப்ரவரி 2016 வாக்கில் இதன் வரைவு அறிக்கை தாக்கல் ஆகும் என மனித வள மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி அறிவித்து உள்ளார். இதற்காக ஒரு குழு முன்னாள் மத்திய கேபினட் செயலர் திரு டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு விட்டது. குழுவினரை பல்வேறு அமைப்புகள் நேரிடையாகச் சென்று தங்களது கருத்துக்களைத் தற்போதும் தெரிவித்து வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கை உருவாக்குவதில் ஒரு புதிய அணுகு முறையைக் கைக் கொண்டுள்ளோம் என மத்திய அரசு தம்பட்டம் அடித்தது. அதாவது ”கீழிருந்து மேல்” திட்டமிடல் என்ற ஒரு புதிய அணுகு முறை தான் அதுவாம். உண்மையில் ”கீழிருந்து மேல்” திட்டமிடல் பாரட்டக்கூடிய ஒரு முறை தான் என்றாலும் இந்த அரசு நடத்திய முறை என்பது ஒரு கேலிக் கூத்தாகத்தான் இருந்தது.
இதற்கு அவர்கள் வைத்த பெயரளவு ஆலோசனைக் கேட்புகள் Grass root level Consultations. முதலில் ஆன் லைன் மூலமாக கருத்துக் கேட்பு. அதன் பின்னர் சுமார் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் கிராமங்கள், முப்பதாயிரம் ஒன்றியங்கள், அறுநூறு மாவட்டங்கள் முப்பது மாநிலங்கள் ஆகிய மையங்களில் கருத்துக்கேட்பும் அதன் பின்னர் ஏழு மண்டலங்களில் தொகுப்பும் அதைத் தொடர்ந்து மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆலோசனையும் செய்யப் பட்டது. பின்னர் ஒரு செயல்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டு அதன் முன் ஒரு தொகுக்கப்பட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அனைத்தையும் தொகுத்து ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு Central Advisory Board on Education (CABE) முன் வைத்து விவாதித்து நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப் படும் என அறிவித்து உள்ளது.
ஆனால் நடந்தது என்ன? இறுதிக் கெடு கொடுத்த நாளில் பத்து சதவீதக் கருத்துக்கள் கூட வரவில்லை. பல மாநிலங்கள் இந்த முறையில் எந்தவிதமான கூட்டமும் நடத்தியதாகத் தகவல் இல்லை. பேருக்கு ஒன்று இரண்டு நடத்தி இருக்கின்றன. பல மாநில அரசாங்கங்கள் தங்களது நிலையைத் இன்னும் தெரிவிக்கவேயில்லை. எனவே கருத்துக் கேட்பு என்ற துவக்க நிலை மாபெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல்.
மேலும் கருத்துக் கேட்புக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளும் அதன் பின்னர் வடிவமைக்கப்பட்ட கேள்விகளும் கீழிருந்து மேல் என்ற சுதந்திரமான கோட்பாட்டினைச் சிதைத்து தங்களுக்கு வேண்டிய சாதகமான பதிலை சாதுரியமாகப் பெறுவதற்கான சதி வலையைத்தான் இந்தக் கருத்துக் கேட்பில் பின்னியுள்ளனர். நோம் சாம்ஸ்கி கூறுவது போல் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை ஒப்புதல் பெறுவதற்கு (Manufacturing Consent) நடத்தப்பட்ட மாபெரும் நாடகம் தான் இந்தக் கருத்துக் கேட்பு என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. உண்மையிலேயே இந்த கருத்துக் கேட்பு நடந்திருந்தால் 12 லட்சம் கருத்துக்கள் குவிந்திருக்கும். இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற இமாலயப் பணியும் முன் இருந்திருக்கும். இது வரை எது நடந்ததோ அது நன்றாக நடைபெறவில்லை….இனி மேல் நடக்கப்போவதும் நன்றாக இருக்காது எந்பது தெளிவாகி விட்டது.
ஆனால் இந்தக் கருத்துக் கேட்புக்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளும் கேள்விகளும் திருவாளர் மோடி அவர்களின் அரசாங்கத்தின் உண்மையான முகததை நமக்குக் காட்டி நம்மை உஷார்ப்படுத்தியுள்ளது. ஆரம்பக்கல்வியில் பதிமூன்று தலைப்புகளிலும் உயர்கல்வியில் இருபது தலைப்புகளிலும் ஓரிரு பக்கங்கள் ஒவ்வொன்றிற்குக் குறிப்புகளும் சுமார் ஐந்து கேள்விகளுக்குக் குறையாமலும் இருபது கேள்விகளுக்கு மிகாமலும் ”ஆம் / இல்லை” வகையில் இருந்து ”மல்டிபிள் சாய்ஸ்” கேள்விகள் என திட்டமிட்டு தனக்கு வேண்டிய பதிலை மட்டும் பெறுவதற்காகான் சாதுரியத்தைக் கையாண்டுள்ளது.
கள அளவு ஆலோசனைக் கேட்புக்கு பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்கும் கொடுக்கப்பட்டு தலைப்புகளை உற்றுநோக்கினால் கல்வி பற்றிய நோக்கங்களோ (Objectives), வரலாற்று ரீதியான பார்வையோ (Historical) , அதன் ஆய்வுகள் எதையும் கணக்கில் கொண்டு தயாரித்ததாகத் தெரியவில்லை. எந்தவிதமான புள்ளி விபரங்களோ (Statistical) அதன் ஆய்வு முடிவுகளோ (Analytical) எடுத்துக் கொள்ளப்படவில்லை.
குறிப்பாக பள்ளிக் கல்வியில் காலனி ஆதிக்கத்தின் காலத்தில் இருந்த மெக்காலே கல்விக்கொள்கை, விடுதலை பெற்ற பின் உருவாக்கபப்ட்ட 1966-68ல் கோத்தாரிக் கமிசன் கல்விக் கொள்கை, 1986ல் ராஜீவ் காந்தியால் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ ஷிக்சா அபியான், மத்திய சிக்ஷா அபியான் போன்றவற்றினால் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து எதுவும் இதில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் விஷமத்தனமான கேள்விகளால் சர்வ ஷிக்ஷா அபியான், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின், முக்கிய கோட்பாடுகளை விலக்கிக் கொள்ளும் முடிவுகளை மக்களிடம் திணிக்கிறது. (எ.கா) பள்ளிக் கல்வியில் தாய்மொழி வழிக் கல்வி, நடுநிலைக் கல்வி வரை கட்டாயத் தேர்ச்சி, சிறுபான்மையினருக்கு கல்வி உரிமைச்சட்டத்தால் கொடுக்கப்பட்ட உரிமைகள் ஆகியனவற்றை விலக்கிக் கொள்ளும் சூட்சுமம் கொண்ட கேள்விகள் இதில் இடம் பெற்றுள்ளன.
அதேபோல உயர்கல்வியில் டாக்டர் 1948-49 இராதாகிருஷ்ணன் கமிஷன், 1952 முதலியார் கமிட்டி, பிர்லா – அம்பானி அறிக்கை, சாம்பிட்ரோடாவின் அறிக்கை (National Knowledge Commission), யஷ்பால் கமிட்டியின் அறிக்கை (National commission of higher education and Researcher), மற்றும் ரூசா (RUSA) ஆகிய எதனையும் கணக்கில் கொள்ளவில்லை. இது தவிர உயர் கல்வியில் The Educational Tribunal Bill, The Prohibition of unfair practices in Technical Education, Medical Education Institutions and University Bill, The National Accreditation Regulatory Authority for Higher Education Institution Bill-2010, The National Academic Depository Bill, The Universities for Research and Innovation Bill, The Foreign Education bill என பல்வகையான சட்ட வரைவுகள் இடதுசாரிகளின் எதிர்ப்பால் கிடப்பில் உள்ளதும் குறிப்பிடப்படவில்லை. அது குறித்து கவலையும் கொள்ளவில்லை. இடதுசாரிகள் மேற்படி மசோதாக்களை எதிர்ப்பது கல்வி வனிகமாவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது, என்பதை விளக்கத் தேவையில்லை.
கருத்துக் கேட்பில் ஒளிந்திருக்கும் அபாயங்கள்:
திறன் என்ற கல்வித் தரம் (Quality Measurement ) : தற்போதைய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் தரம் வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் எந்தவிதமான மாற்றம் தேவை என்பதில் தெளிவு இல்லை எனபதுடன், அது தவறுதலாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்தத் தவ்று 1990 களில் இருந்தே இருக்கிறது. அதாவது குறைந்தபட்ச அடைவுகள் (MLL) என்ற கொள்கை. குறைந்தபட்ச அடைவுகள் மட்டுமே தரமான கல்வி என்று நாம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலயில் திறன் மட்டுமே தரமான கல்வி என இக் கொள்கை பிரேரித்து, அதற்கு என்னென்ன செய்யலாம் என கேள்விகளை வடிவமைத்து இருக்கிறது. தரம் இல்லாமைக்கு ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்கிறது.
அளவுநிர்ணயித்தல் ( Quantification), ஒரே சீராக்குதல் ( Uniformity): மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிய வருகிறது. அனைத்து மட்டங்களிலும் ( நகரம், கிராமம், மலைப் பகுதி, கடலோரம்) ஒரே மாதிரியான அளவுகளைப் பெற நினைத்தல் என்பது பல்வேறு பன்முக இயற்கை, சமுதாயம், கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில் இது கேலிக்கூத்தாக உள்ளது.
மையப்படுத்துதல் ( Centralization) : விரிவான முறையில் கல்ந்தாலோசித்தல் என்று சொல்லிவிட்டு கல்வியை ஒருமுகப்படுத்தி மையப்படுத்துதல் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. 20 சதவீத மாற்றமே மாநில அரசுகள் செய்துகொள்ள முடியும் எனக்கூறி இருக்கிறது. எடுத்துக்காட்டாக மையப் பல்கலைக் கழகங்கள் அடை காக்கும் ( Incubation) நிறுவனங்களாக மாற்றப்படுதல். கல்லூரி, பல்கலை ஆசிரியர்களை தேசிய அளவில் தேர்ந்தெடுத்தல், பொதுப் பாடத்திட்டம், மைய தர மதிப்பீடு, மைய நிர்வாகம் என உயர்கல்வியில் மையப்படுத்துதல் என்பதே பெரும்பான்மையான பரிந்துரையாக உள்ளது. இதற்கு ஏற்றவாறு கேள்விகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
நிர்வாகமயமாக்குதல்: எல்லா மட்டங்களிலும் கல்வித் திறன் மேம்பட நிர்வாகம் சிறப்பானதாக இருந்தால் தான் முடியும் என்ற கருத்து மேலோங்கி ஒலிக்கிறது. ஆசிரியர், மாணவர்களின் நிர்வாகக் கண்காணிப்பு குறித்து அதிகம் கூறப்படுகிறது. பள்ளிக் கல்வியில் பணி உயர்வு அவர்களின் செயல்திறன் சார்ந்ததாக இருக்கலாம் என்ற கேள்வியையும் (பள்ளிக் கல்வி-பக்கம் 11)
உயர்கல்வியின் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களே காரணம் என்றும் அதே நேரத்தில் தரம் இன்மைக்கு தனியார் கல்லூரிகளின் பெருக்கம் தான் காரணம் என்றும் 9சதவீத கல்லூரிகளே தர நிர்ணயத்தில் உயர்மதிப்பீடு பெற்றுள்ளன என்றும் குறிப்பிடுகின்றது இருந்தாலும் உயர்கல்வியில் தனியார்மயத்தையே வலியுறுத்துகிறது. ஆசிரியர்களின் வேலை சிறப்பாக இல்லையென்றால் அவர்களை வேலை நீக்கம் செய்யலாமா, கல்வியில்லாத துறைகளுக்கு மாற்றலாமா போன்ற கேள்விகளை முன் வைக்கிறது (உயர் கல்வி-பக்கம் 6).அதே போல் திறமையான ஆசிரியர்களைக் கண்டறிய காண்ட்ராக்ட் முறையைக் கைகொள்ளலாமா அல்லது மைப்படுத்தப்பட்ட ஆசிரியர் தொகுப்பு உருவாக்கி அதிலிருந்து ஆசிரியர்களை அனுப்பலாமா? எனக் கேள்விகளை முன் வைக்கிறது.
சர்வதேச மயமாக்கல் (Internationalization): பள்ளிக் கல்வி முதல் (பள்ளிக் கல்வி- பக்கம்-4) உயர்கல்வி வரை சர்வதேசத் தரம் என்றும், உலகப் பாடத்திட்டம் (Global Syllabus) என உளறி உள்ளது. அந்நியப் பல்கலைக் கழகங்களுக்கு திறந்து விடும் நோக்கம் பளிச்செனத் தெரிகிறது (உயர் கல்வி-பக்கம் 47) இதற்கு சர்வதேச அளவில் தரம் நிர்ணயத்திற்குப் பரிந்துரைக்கிறது.
தொழில்மயக் கல்வி (Vocationalisation):
கல்வி என்பது அறிவை விருத்தி செய்யும் கருவியாகும். தொழில் கல்வி எனபது ஒரு வேலையைச் செய்வதற்கான அறிவியலையும் திறனையும் பெறுவது என்பது போய் வேலைக்கான திறனைப் பெறுவதே கல்வியின் நோக்கமாக உள்ளது (பள்ளிக் கல்வி–பக்கம் 8) வேலை, வேலைச் சந்தை எனச் சுற்றிச் சுற்றிப் பேசி எட்டாம் வகுப்பில் இருந்து தொழில்மயக் கல்வியைத் துவக்க உள்ளது. தற்போது வேலை வாய்ப்புகள் (Feasible Employment), வேலைக்கேற்ற திறன் (Employability) என்று எல்லோரும் விரும்பும் பொதுப் புத்தியைப் பயன்படுத்தி இந்த சூழ்ச்சியைச் செய்துள்ளது.
இதனால் பெரும் பகுதியினர் எட்டாம் வகுப்புடன் தண்டவாளம் மாறி செல்ல உள்ளனர். தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அறிவுப் பிரிவினர் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் என இரு சாதியினர் உருவாக உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் அறிவு சாதியினராகவும் பெரும் பகுதியினர் தொழிற் கல்வி கற்ற கூலி வேலைக் காரர்களாக மாற உள்ளனர்.
உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிகைக்கு ஏற்றவாறு கல்லூரிகள் அதிகரிக்கப்படாமல் தொழிற்கல்விமயமாதல் என்ற அடிப்படையில் கலை, அறிவியல் கல்லூரிகள் சமுதாயக் கல்லூரிகளாக மாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுடன் இணைந்து தொழிற்சாலைகளுக்குரிய பயன்பாட்டு மையமாக மாற்றப்படவேண்டும். இந்தப் பரிந்துரை என்பது தொழிற்சாலைக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு அதன் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் தனியாருக்குப் பயனளிக்கும் வகையில் அறிவும் தனியார்மயமாகும் பாதையில் செல்கிறது.
தகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழிக் கல்வி ( Information, Communication, Technology) : கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பேசாமலும் அது கல்விக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என பரிந்துரைக்காமலும் கல்வியை தகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழி கொடுக்க முனைவதே இந்த கொள்கையின் பரிந்துரையாக உள்ளது (பள்ளிக் கல்வி–பக்கம் 6) அதாவது ஆன் லைன் படிப்பு, திறந்த வெளிப் பல்கலைப் படிப்பு எனப் பரிந்துரை செய்கிறது. ஆனால் பள்ளிக் கல்வியில் இந்த தகவல் தொழில்நுட்பக் கல்வி போதிய திறன்களை வளர்க்கவில்லை என PISA ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சந்தைமயமாக்கல் ( Market oriented) : அறிவு என்பது சந்தைக்கானதாகக் கருதப்படுகிறது. அறிவியல், கணிதம் பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் (பள்ளிக் கல்வி–பக்கம் 6) கொடுக்கிறது. அது அறிவியலுக்கானதாக இல்லாமல் வணிகத்திற்கானதாக மாறும் வாய்ப்புள்ளது எனவே கல்வியை சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது. அதன் பின்னர் வணிகம், கன்சல்டன்சி போன்ற கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பேட்டண்ட் பெறுதல் போன்ற அறிவைத் தனியுடமை ஆக்கும் முயற்சிக்கு வழி வகுக்கிறது. சமூக அறிவியல் புறந்தள்ளப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளது.
மூன்று “P”க்கள்-”PPP” ( Public Private Partnership): உயர்கல்விக்கு ஜிடிபியில் ஒரு சதவீதம் முதல் 1.5 சதவீதம் உயர்த்தபப்டும் என்பதைத் தவிர நிதி ஒதுக்கீடு பற்றி எந்தவிதமான பரிந்துரைகளும் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி முதல் (பள்ளிக் கல்வி– பக்கம் 6) உயர் கல்வி வரை மூன்று “P”க்கள் வர இருக்கிறது.
”PPP” மூலம் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மீது பணத்தை போட விரும்பாத போது அவை தொழில் நிறுவன வணிகக் கல்வி நிறுவனங்களாக ( Entrepreneurial Business School) மாற்றப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தனியாருக்கு அனைத்து வகையிலும் அவுட் சோர்சிங் செய்யப் பரிந்துரைக்கிறது. தனியார் பங்களிப்பு போதிய பயன் தரவில்லை எனக் கூறும் இந்தக் கொள்கைக்குறிப்பு இதை விலக்கிக் கொள்ளாமல் எப்படி இதனை மேலும் தனியார் மயமாக்கலாம் என்ற வகையில் விவாததிற்கு விட்டுள்ளது. உயர்கல்வியில் சேர்ககை 21.5 விகிதமே உள்ளது. இதை அதிகரிக்க தனியார் பங்களிப்புக்கு திசைகாட்டுகிறது.
சமூக நீதி (Social Justice) இல்லாமை:
எந்த இடத்திலும் சமூக நீதி என்ற வார்த்தையே இல்லை. ஆனால் கல்வியில் விடுபடுபவர்களை தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள், சிறப்புக் கவனம் பெற வேண்டியவர்கள் ஆகியோர்களை Gaps என்ற வகையில் குறிப்பிடுகிறது. இவர்களுக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என கேள்விகளை முன் வைக்கிறது. அதில் ஒரு கேள்வி: கல்வி உரிமைச் சட்டம் மைனாரிட்டி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதால் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் என்னென்ன என உள் குத்து விட்டிருக்கிறது. (பள்ளிக் கல்வி–பக்கம் 21) Inclusion என்ற பெயரில் தகுதி அடிப்படையில் வர இயலாதவர்களை உள்ளிழுத்துக் கொள்வது அரசின் பெருந்தன்மை என்று குறிப்பிடுகிறது. சமூக நீதி என்ற கடமை கைவிடப்படுகிறது. கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதும் மறுக்கப்படுகிறது. கற்பவர்கள் பயனாளிகள் என்ற கண்ணோட்டம் உருவாக்கப்படுகிறது. தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள் ஆகியோருக்கான சமூக நீதி இதில் இல்லை. பெண்கள் கல்வி பெறுவது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதப்பட்டு அதைத் தவிற்பதற்கான ஆலோசனைகளையும் கேட்டுள்ளது. விவசாயம், கைத்தொழில்கள் பற்றிய அக்கறை எங்கும் இல்லை.
நிதி: கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எங்கும் பேசப்படவில்லை. அது மட்டுமல்லாமல் எல்லா மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை (universal scholarship) கொள்கை கைவிடப்படும் என ஆணித்தரமாகக் கூறுகிறது. அதற்குப் பதிலாக மெரிட் ஸ்காலர்ஷிப் வங்கிக் கடன் ஆகியவற்றிற்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.
கலாச்சார ஒருங்கிணைப்பு ( Cultural Integration): கலாச்சார ஒருங்கிணைப்பு என்ற பெயரில் உயர்கல்வியில் ஃபவுண்டேசன் கோர்ஸ் குறித்தும், இண்டாலஜி (Indology) ஆகியன பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக இருக்கலாம் என்ற கேள்விகளை முன் வைத்துள்ளது. மேலும் மொழி மூலமாக ஒருங்கிணைப்பு சாத்தியமா என்பதையும் அனைத்து பல்கலைக் கழ்கங்களும் முக்கிய மொழித் துறை ஆரம்பித்து அதில் அழியும் தறுவாயில் உள்ள மொழிகள் அல்லது மறைந்து போன மொழிகள் குறித்த முக்கிய கவனம் செலுத்தலாமா என்ற கேள்வியையும் போட்டுள்ளதின் உள் நோக்கம் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியாகக் கருத இடம் உள்ளது.(உய்ர்கல்வி-பக்கம் 39)
பள்ளிக் கல்வியில் பல்வேறு கொள்கைகள், அமுலாக்கல், மதிப்பீடுகள் என பல வகையான தரவுகள் உள்ளன..கோத்தாரிக் கமிஷன், ஆச்சார்யா ராமமூர்த்தி அறிக்கை, யஷ்பால் அறிக்கை, 1986 கல்விக் கொள்கை, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி இயக்கம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியன பல படிப்பினைகள் இருந்தும் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதே போல் உயர்கல்வியில் உருப்படியான ஆய்வுகள், அறிக்கைகள் இல்லாவிட்டாலும் யுஜிசி அமைத்தது, யஷ்பால் அறிக்கை, புதிய பொருளாதாரக் கொள்கையில் கல்வி, பிர்லா- அம்பானி அறிக்கை, தேசிய அறிவுக் கமிஷன் (National Knowledge Commission) என சிற்சில அனுபவங்கள் இருந்தும் அவைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் ஏற்கனவே சுமார் 68 சதவீதம் தனியார்மயமாகிவிட்ட உயர்கல்வி மேலும் தனியார்மயமாக்கப்பட்டு வெளிநாட்டினருக்கு திறந்து விடப்படும் அபாயம் உள்ளது.
மேலும் நமது கல்வியில் பலமும் பல்வீனமும் தொடர்ந்து இருந்து வந்து கொண்டே இருக்கிறது. அதனை ஆராய்ந்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை. மக்களில் பலர் குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் நமது கல்வி மீது நம்பிக்கை இல்லாமல் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பது உண்மை. இதைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு இக்கல்விக் கொள்கையைத் தயாரித்து உள்ளது. ஆனால் அதே சமயத்தில் நமது சமூகத்தில் 40% மேல் உள்ள சாதாரண மக்களின் கருத்துக்களைக் கண்டு கொண்டதாக இல்லை. இரு பகுதியினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய கொள்கையை நோக்கிச் செல்ல வேண்டும். குறிப்பாக கல்வி அனைவருக்கும், வனிக நோக்கம் கொண்டதல்ல, என்பதை பளிச்சென சொல்ல வேண்டும்.
நாமும் கல்வியில் மாற்றம் வேண்டுமென விரும்புகிறோம். கல்வியில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் ஆகியனவற்றைக் கணக்கில் கொள்ளாமல் கல்வியினால் வேலைக்கான தகுதி இல்லை( Un skilled) என்றும் கல்வி பெற்று வருபவர்கள் வேலைக்கான திறன் பெறவில்லை ( Employability) என்ற ஒரே கருத்தை மையப்படுத்தி மட்டுமே இக்கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. கல்வி என்பது வேலை சார்ந்தது மட்டுமல்ல அறிவு வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியன சார்ந்தது என்ற உயரிய கண்ணோட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது.
ஆளும் வர்க்கத்தின் கருவியாகக் கல்வி:
ஆளும் வர்க்கத்தின் கோட்பாடுகளே அது உருவாக்கும் கொள்கைகளிலும் திட்டங்களிலும் பிரதிபலிக்கும் என்கிறார் மார்க்ஸ். அது போல காலங்காலமாக உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகளிலும் இது பிரதிபலித்துள்ளது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது மெக்காலே கல்வித் திட்டம் காலனி அரசின் தேவைக்கேற்ற கல்வித்திட்டமாக இருந்தது. உடலால் கறுப்பாகவும் சிந்தனையால் வெள்ளைக்காரனாகவும் உருவாக்கும் கல்வித் திட்டமாக உருவாக்கப்பட்டது.அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு குற்றேவல் புரியும் மனித வளங்களை உருவாக்குவதே அத்ன் முக்கிய நோக்கமாக இருந்தது.
நாடு விடுதலை பெற்றவுடன் பிரதமர் நேரு அவர்களின் அரசாங்கம் விடுதலைப் போராட்ட காலங்களில் ஈடுபட்ட தலைவர்களிடமும் மக்களிடமும் இருந்த வேட்கையைப் புரிந்து கொண்டு பத்தாண்டுக்குள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை கொண்ட கல்வியைத் தீர்மானித்தது. ஆனால் இந்த அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்ட உறுதி இது வரை நிறைவேற்றப்படவில்லை. அது மட்டுமில்லாமல் தற்போதைய கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 0-6 வயது வரை உள்ள குழந்தைகள் கைவிடப்பட்டது கல்வி மேல் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின்மையைக் காட்டுகிறது.
இருப்பினும் விடுதலை பெற்றபின் நீண்ட நாட்களுக்குப்பின்னர் உருவாக்கப்பட்ட கோத்தாரிக் கமிஷனின் கல்விகொள்கை என்பது அருகாமைப்பள்ளி, தாய்மொழி வழிக்கல்வி, பொதுப்பள்ளி ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தியது. மேலும் சுதந்திரம் பெற்ற போது முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலை இல்லாத போது பெருமுதலாளிகள் பம்பாய்த் திட்டம் (Bombay Plan) என்ற பரிந்துரையில் அரசே பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் வேண்டுகோளை ஏற்று அதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கக் கல்வியை விரிவான முறையில் அரசு மட்டுமே தரமுடியும் என்பதால் அரசு முயற்சி செய்தது. அதன் விளைவாகவே தொழிற்பள்ளிகள் ( ITI), பல்தொழில் நுட்பக் கல்லூரிகள் ( Polytechnic Colleges) பொறியியல் கல்லூரிகள், ஐ.ஐ.டி ஆகியவைகளை அரசு முனைந்து உருவாக்கியது.
அதன் பின்னர் உருவாக்கப்பட்ட பிரதமர் ராஜீவ் காந்தியின் 1986 புதிய கல்விக் கொள்கை புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான கல்விக்கொள்கையாக அது உருவாக்கியது. சாதாரண மக்களுக்கு ஒரு கல்வியும் எலைட்டுகளுக்கு (Elites) ஒரு கல்வியும் என்ற அடிப்படையில் நவோதயாப் பள்ளிகளை உருவாக்கியது.
அதன் பின்னர் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாக்கப்படும் இந்த புதியகல்விக் கொள்கை தற்போதைய மத்திய அரசினை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமையேற்று நடத்தும் பிஜேபிக்கு பழமைவாதமும் இந்துத்துவாமுமே அதன் தத்துவமாக இருப்பதால் அதுவே இந்தக் கல்விக்கொள்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனை இயக்கும் கருவியான ஆர் எஸ் எஸ் மேலை நாட்டுச் சிந்தனையில் ஊறிய தேசியவாதம் என்ற கொள்கை கொண்டதால் தற்போதைய ஏகாதிபத்திய தாரளமயக் கொள்கைகளுக்கேற்ப தனது கல்விக் கொள்கையை இந்த அரசு வடிவமைக்க முனைகிறது.
பிரதமர் மோடி அவர்கள் தனது கொள்கைகளாக கூறுகின்ற மேக் இன் இந்தியா (Make in India) , திறன்மிகு இந்தியா (Skilled India), டிஜிடல் இந்தியா ( Digital India) போன்ற கோஷங்களை முன் நிறுத்தி இந்தக் கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனக் கருதப்படுகிறது. கி.பி 2020க்குள் சுமார் 500 மில்லியன் திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவது இதன் நோக்கமாக இருப்பதால் எட்டாம் வகுப்பிற்குப் பின்னர் பெரும் பகுதியினரை தொழிற்கல்வி நோக்கி மடை மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதனால் வழக்கம் போல் பெரும்பாலான பின் தங்கிய, தாழ்த்தப்பட்டோர் உயர்கல்வியில் இருந்து விலக்கப்பட்டு திறன்மிகு சேவைத் தொழிலாளிகளாக, அலையும் காட்சி வெகு தொலைவில் இல்லை. ஆனால் கல்வியில் முற்பட்டோர், உயர்வகுப்பினர் உயர்கல்வி பெறுவதும் அதற்குரிய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளுக்குரிய மனிதவளத்தை அளிப்பதற்கு உரிய திட்டத்தை வகுத்து வருகின்றனர்.
கல்வியில் தரமில்லாததற்கு நிர்வாகக் குறைபாடுகளே காரணம் என்ற ஒற்றை முழக்கமே கேட்கிறது. கல்வியின் நோக்கம் பாடத்திட்டம் கலைத்திட்டம ஆசிரியர் பயிற்சி தேர்வு வழிமுறைகள் குறித்த அக்கறை எங்கும் காணவில்லை. நிர்வாகத்தையும் தரநிர்ணயத்தையும் மேம்படுத்தினால் உலகத்தரத்திற்கு நமது கல்வி முறை உயரும் என்ற கனவு பிரதமர் அவர்களின் Less Govt…More Governance….என்ற முழக்கத்தின் குரலை கல்விக் கொள்கையிலும் காணலாம்.
எதிர் வரும் புதிய கல்விக் கொள்கை சுமார் பதினோரு கோடி பள்ளிக் குழந்தைகள் சுமார் ஆறு கோடி கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாகும். எல்லோருக்கும் இலவச தரமான சமமான கல்வியை உறுதி செய்ய வேண்டும். அறிவியல் மனப்பான்மையையும் ஜனநாயகப் பண்பினையும் வளர்ப்பதன் மூலம் பன்முகக் கலாச்சாரத்தையும் பல்வகை கருத்துக்களையும் புரிந்து கொள்ளும் கற்றலும் வளர அனுமதிக்க கூடியதாக இருக்க வேண்டும். மாநிலத் தேவைகளையும் அதன் உரிமைகளையும் முன்னுரிமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியும் மாணவர் அமைப்பும் இந்த பின்னணியில் இருந்தே மோடி தலைமையிலான பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற இந்த முயற்சியை எதிர்க்கிறது. வளரும் நாடுகளின் மனித வளக் குறியீட்டில் சின்னஞ்சிறு கியூபா, அதிக மக்கள் தொகை கொண்ட சீனா ஆகியவற்றின் செயல்களைக் கவனிப்பதும். இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கை எல்லோருக்குமானதாக அமைய திட்டமிடுவதும் அவசியம். மீண்டும் மீண்டும் காலனியாதிக்க சிந்தனைக்கும், முதலாளித்துவ லாபத்திற்கும் துணைபோவது ஆபத்தானது. இந்த வகையிலேயே இந்துத்துவாவின் கல்வி முழக்கம் உள்ளது என்பதையும் புரிந்து வினையாற்ற வேண்டியுள்ளது.
“….Policy should be Nyaya based rather than Niti based…” Amartya Sen
Based on
Grass root consultation documents of GoI
AIPSN NEP document
Leave a Reply