மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


“ஆசியாவின் அச்சாணி” – நிலோத்பல் பாசு


தமிழில்: கி.ரமேஷ்

இன்றைய உலக மயச் சூழல் உருவாக்கும் புதிய நிலமை   உலக அரசியலில் புதிய அணுகு முறைகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது நலனைப் பாதுகாத்துக் கொண்டே பிற நாடுகளோடு ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு கிடைக்காது என்பது நன்றாகவே தெரிகிறது, அண்டை நாடுகளோடு பேசி தீர்வு தேடுகிற மார்க்சிய வழியே சரியானது என்பதை, அனுபவம் உணர்த்துகிறது,

சமீப காலமாக ஆசிய கண்டத்தில் பதட்ட நிலைமை உருவாவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன, சீனாவின் ஆதிக்க அணுகு முறை என்று மேலை நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்த பதட்ட நிலைமையை பற்றி தமிழ் மார்க் சிஸ்ட் இதழுக்காக பிரசாந்த் ராதாகிருஷ்ணன் கேட்ட கேள்விகளுக்கு தோழர் நிலோத்பல் பாசு விளக்கம் தருகிறார், உலக அரசியலை புரிவதற்கு இந்த விளக்கம் நமக்கு உதவுகிறது,   உலகம் மாறுகிறது; ஆனால் ஏகாதிபத்திய வாதிகளின் பிடிவாதம் ஏன் தொடர்கிறது என்பதை அவரது விளக்கம்தெளிவுபடுத்துகிறது, இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள்   ராணுவ கூட்டுக்களின் மூலம் உலக நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த இடைவிடாது முயற்சிப்பவர்கள் என்பதை வரலாறு காட்டுகிறது, 65 ஆண்டுகளுக்கு முன்னால்  நாட்டோ, சென்ட்டோ, சீட்டோ என்று  ராணுவக் கூட்டை  உருவாக்க அமெரிக்க அரசு  முனைந்தது, அன்றைய தேதிகளில் சோவியத் மற்றும் கூட்டுச்சேரா நாடுகளின் இயக்கம் ஏகாதிபத்திய வாதிகளின் முயற்சியை உலக மக்களின் ஆதரவை திரட்டி தடுத்துவிட்டன. உலகமே ஏகாதிபத்தியவாதிகளின் படைத் தளங்களாவும், போர்க்களங்களாகவும் ஆவதிலிருந்து தப்பியது. மிஞ்சியது நாட்டோ ராணுவ கூட்டு மட்டுமே. இன்று   கிழக்காசிய நாடுகள் 33 உள்ளன.  இப்பகுதியில் நாடுகளிடையே ஒத்துழைப்பு நிலவினால்அமெரிக்க ஆதிக்கத்தை,  அதாவது டாலர் ஆதிக்கத்தை,  கேள்வி குறியாக்கி விடும் என்று   அமெரிக்கா அஞ்சுகிறது.    பதட்ட நிலமையை உருவாக்க அமெரிக்க அரசு முயற்சிக்கிறது, புதிய உலக மய சூழலுக்கு சற்றும் பொறுத்தமற்ற முதலாளித்துவம் உள் முரண்பாட்டால் ஆக்க சக்தியை இழந்து வருவதை அமெரிக்க அரசு பார்க்க மறுக்கிறது,  

இன்று பஞ்ச சீல கொள்கையை பின்பற்றும் சீனாவை   எதிரியாக பார்க்கிறது, அதனை சுற்றி வளைக்க இந்த ஆசிய மைய கோட்பாட் டை ஒபாமா அரசு உருவாக்குகிறது, அதாவது சீட் டோ ராணுவ அமைப்பை புதுமை நிலைமைக்கேற்ப நிறுவ முயற்சிக்கிறது,

இந்திய – சீன  உறவு இதில் கேள்விக்குறியாக இருக்கிறது. நமது மக்களின் பொருளாதார வாழ்வில் முன்னேற்றம் காண  சுயசார்பு தன்மையை அடைய இப்பகுதியில்  அமைதியான சூழல் அவசியம்.  நமது அணுகு முறை இந்த வட்டாரத்தில் அமைதியை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டுமே தவிர  அமெரிக்காவின் ஆசைகளை   அடைய ஒரு கருவியாக இருக்க கூடாது. பஞ்ச சீலக்கொள்கையை  உதாசீனப்படுத்தும் மோடி அரசின் வெளிநாட்டுக் கொள்கை இவ்வட்டாரத்தில் அமைதியை நாடுகிற பார் வையோடு இல்லை. அதனை இந்த நேர்காணல் நமக்கு புரியவைக்கிறது. சீனா தவறு செய்தால் விமர்சிப்பது வேறு. அமெரிக்காவோடு   இணைந்து ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதுவேறு. இதனைப் புரிய இப்பதில்கள் உதவுகின்றன.

அமெரிக்காவின்ஆசியாவின் அச்சாணிஎன்ற புவியியல் உத்தி உருவாக்கப்பட்டு சுமார் நான்காண்டுகள் கடந்து விட்டன. இந்த மாற்றத்தின் முக்கியமான நோக்கங்கள் என்ன? இந்தக் கொள்கையின் குணாம்சங்கள் எவை?

அமெரிக்காவின் ‘ஆசியாவின் அச்சாணி’ என்ற புவியியல் உத்தி சில புதிய, உலகளாவிய நிதர்சனங்களால் தூண்டப்பட்டது. அவை பொருளாதாரம், நிதி அரசியல் ஆகியவையாகும். இந்த நூற்றாண்டு பிறந்தபோது, புஷ் அதிபராக இருந்த முதல் கட்டத்தில் அமெரிக்காவின் கொள்கை உருவாக்கத்தின் மூலவர்களாக இருந்தவர்கள் புதிய பழமைவாதிகள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அவர்கள் ஆவணப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய ஒரு தேசியப் பாதுகாப்பு உத்தியை உருவாக்கினர். அதனை புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம் – PROJECT FOR THE NEW AMERICAN CENTURY (PNAC) என்றழைத்தனர். அந்த சமயத்தில் அமெரிக்கா, தான் மட்டுமே ஒரே வல்லரசு என்பதை உறுதிப்படுத்தி, ஒருதுருவ உலகை உருவாக்கும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டிருந்தது என்பதே அதன் அடிப்படைப் பொருள். உலக ஆதாரங்களின் மீது மேலாதிக்கம் பெறுவது, குறிப்பாக எரிபொருள் மற்றும் ஹைட்ரோகார்பன் ஆதாரங்களின்மீது மேலாதிக்கம் பெறுவதன் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. பனிப்போர் முடிந்து, இருதுருவ உலகம் மறைந்தது, பலதுருவ உலகு உருவாவதே இயற்கையான விளைவாக இருந்திருக்க முடியும்; ஆனால் ஒருதுருவ உலகை உருவாக்கும் நோக்கமே இந்த மூர்க்கமான கொள்கையை உருவாக்கியது. சோவியத் யூனியனும், சோஷலிச முகாமும் இல்லாமல் போய்விட்டதால், உள்நாட்டு மக்களின் கருத்தை ஒன்றுதிரட்ட ‘மற்றொன்றை’க் கண்டு பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனென்றால் ஏற்கனவே ‘அமைதி ஈவு’ அல்லது அது இல்லாதிருப்பது பற்றிய முணுமுணுப்புகள் எழத் தொடங்கி விட்டன. காரணம் அதுதான் பனிப்போரின்போது நிரந்தரமாக விலகியிருந்தது. 9/11 தாக்குதல் கடவுள் கொடுத்த வரமாகி விட்டது. அமெரிக்காவின் ‘தேசியப் பாதுகாப்பு நிலை’யின் அடிப்படைக் கொள்கை பொதுக்கருத்தின் பலவீனமான பகுதியாகக் காணப்பட்டது. எனவே ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுப்பு அதைத் தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து, அணு ஆயுதம் வைத்திருப்பதாக ஒரு காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, ஈராக் மீதான படையெடுப்பு தொடங்கப்பட்டது. இவையனைத்தும் உலகளாவிய புவியியல் அரசியல் உத்தியின் வழியிலேயே செய்யப்பட்டன.

ஆனால் இந்த இரண்டு நடவடிக்கைகளாலும் முதலில் கூறப்பட்ட நோக்கங்களான மேலாதிக்கம், நிலைத் தன்மை ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மேலும் நீண்ட இராணுவ நடவடிக்கைகள் நிதியாரங்கள் கரைய வழிவகுத்ததுடன், அமெரிக்கப் பொருளாதாரத்தை மோசமாக பாதித்தன. ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட பல பொருளாதார நிபுணர்கள் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்கு இதையே பெரிய காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர். இராணுவ, கேந்திர உத்திகள் நிறைவேறாமல் போகவே, அமெரிக்கா இந்த இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபாட்டைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தக் காலகட்டத்தில்தான் சீனப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியும், வலுவும் பெற்று ஆசியப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக வளர்வதற்கு இட்டுச் சென்றது. உலகப்பொருளாதாரத்தில் ஆசியா-பசிபிக் பிரதேசம் வேகமாக வளரும் பிரதேசமாக உருவாகி விட்டது. அதே சமயம், நிதிக் கரைவும் அதைத் தொடர்ந்த உலகப் பொருளாதாரச் சரிவும் முழு உலகையே பாதித்தன. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் இதில் மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

அமெரிக்கா இந்தப் பகுதிக்குப் புதிய, அழுத்தம் கொடுக்கும் கவனத்தைச் செலுத்துவதற்கான குறிப்பான பின்னணி இதுவேயாகும்.

இந்தப்பகுதியில் அமெரிக்காவின் இராணுவத்தின் இருப்பை அதிக அளவில் உயர்த்த இந்தக் கொள்கை விரும்புகிறது. விரைவில் அமெரிக்க ஆயுதப் படையின் 60% இங்கு நிறுத்தப்படலாம். தெற்கு, கிழக்காசியாவின் மீதான பாதுகாப்பில் இது எந்த விளைவை ஏற்படுத்தக் கூடும்?

தற்கால உலகப் பொருளாதாரத்தில் மிகவும் வேகமான பிரதேசமாகவும், வளர்ச்சியின் முகமாகவும் உள்ள ஆசியா-பசிபிக் பிரதேசத்தின் தலையாய முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்டதால், அமெரிக்கா தன் இருப்பை உணர வைப்பதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் மூலம் அது இந்தப் பொருளாதாரச் செயல்பாட்டிலிருந்து தனது சொந்த வழிகளில் பலனடைய முயல்கிறது. ஆனால் அதே சமயத்தில் அதன் சிந்தனைச் சிற்பிகள் இந்தப் பணியில் பெரும் சவால்கள் காத்திருப்பதை உணர்கின்றனர். இதில் முன்னணியில் இருப்பது இந்த வளர்ச்சிப் போக்கில் சீனாவின் பங்கு. அது இந்தப் பிரதேசத்தில் அனைத்து நாடுகளுடனும் பெரும் வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. கேந்திரமான பாதுகாப்பு உத்திகளைப் பொறுத்தவரை, சீனா எல்லை மீறுவதில்லை என்பதுடன் அதன் உயர்தன்னாட்சி அதிகாரத்தையும், சுயாட்சிஉரிமையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏற்பத் தனது திறனை வளர்த்துக் கொண்டு விட்டது. இராணுவச் செலவிலும், இராணுவத் தளங்களைப் பராமரிப்பதிலும் அது இன்னும் அமெரிக்காவை விட மிகவும் பின் தங்கியுள்ளது. அதன் காரணம் வெளிப்படையானது. அமெரிக்காவைப் போலன்றி, அது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள இராணுவ வாய்ப்புக்களை முதன்மையாகக் கொள்ளவில்லை. சீனா தனது வர்த்தக, பொருளாதார உறவுகளை வளர்ப்பதையே தனது முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. எனினும், எந்தப் பிரதேச சக்திகளாலும், குறிப்பாக இப்பிரதேசத்தில் அமெரிக்காவின் கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியாவாலும் கூட, தீவீரமாகச் சவால் விடப்படுவதை அதன் திறன் வாய்ப்பற்றதாக்கி விடுகிறது.

எனவே அமெரிக்கா சமீபத்தில் உருவாக்கி வரும் உத்தி இரண்டு வகையானது. முதலாவது, சீனாவைத் தூண்டி விட நேரடியாக முஷ்டியை மடக்குவது. இப்பிரதேசத்தில் அதன் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும், வரம்பு கட்டவும் ஏராளமான தவறான செய்திகளைக் கட்டவிழ்த்து விடுவது. இரண்டாவது, உறவுகள், கூட்டணிகள், இராணுவத் தளங்களை உருவாக்குவது. இந்தப் பின்னணியில்தான், சீனாவை இளைய கூட்டாளியாக்குவதில் இந்தியாவின் ஆதரவைப் பெற, அமெரிக்காவின் முன்மொழிவைப் பார்க்க வேண்டும்.

இந்த பிரதேச உத்தியை அடையும் நோக்கத்தில், தெற்கு சீனக்கடலில் சீனாவுக்கு இப்பிரதேசத்தின் சில நாடுகளுடன் இருக்கும் எல்லைப் பிரச்சனையை அடையாளம் கண்டுள்ளது. இன்றைய உலகில், இத்தகைய முரண்பாடுகளை இராணுவ மோதல் மூலம் தீர்ப்பது அசாத்தியமானது. ஆனால் தானாகவே நியமித்துக் கொண்ட பாதுகாவலராக, அமெரிக்கா இந்த நாடுகளை சீனாவை எதிர்க்கத் தூண்டுகிறது. சீனா இந்த முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தனது விருப்பத்தை வெளிப்படுத்திடும்போது, அமெரிக்கா பிடிவாதமாக இந்த வேறுபாடுகளை பிரதேச மோதலாக அதிகரிக்க முயல்கிறது. அவர்களது தேசிய நலனை உத்தரவாதப்படுத்த அவற்றுக்குத் தமது இராணுவ வலிமையை அளிக்க முன்வருகிறது.

இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள, தென்சீனக்கடலில் அமெரிக்காவின் பங்கை சற்று நெருக்கமாகப் பார்ப்பது உபயோகமாக இருக்கும்.

சீனா பற்றிய அமெரிக்காவின் அதிகாரபூர்வ சிந்தனையின் மீதான புதிரான உட்பார்வை தென்சீனக்கடலில் மிதக்கும் பிரும்மாண்டமான விமானந்தாங்கிக் கப்பல் யுஎஸ்.எஸ். தொயோடர் ரூஸ்வெல்டுக்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் பயணம் மேற்கொண்டதன் ஒரு விளைவு. அங்கு வைத்து சீனா உரிமை கொண்டாடும் கடல் எல்லைக்குள் சீனாவை ஒரு மோதலை உருவாக்கும் ஊடுருவலுக்கெதிராகத் தூண்டி விட முயலுமாறு ஏவுகணை அழிப்பான் யு.எஸ்.எஸ். லாசனுக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது கார்ட்டர் ஆசியாவில் இருந்தார். உலகம் தழுவிய அளவில் அவரது நாட்டின் இராணுவம் இருப்பதையும், அதன் சக்தியை வெளிக்காட்டும் வகையிலும், அதன் பிரும்மாண்டமான தாக்கு கப்பலின் தளத்தில் வைத்து ஒரு பத்திரிகை சந்திப்பை நடத்தி, தம் நாட்டின் ஆதிக்க சக்தியை அழுத்தமாகப் பதிவு செய்ய முடிவு செய்தார்.

தென்சீனக் கடலில் அதிகரிக்கும் புதிய பதற்றத்தை இவ்வளவு சக்தியுடன் வாஷிங்டன் வளர்த்தெடுப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏனென்றால், அதிபர் ஜிங் பிங் தெளிவாகவே கூறினார், “தென்சீனக் கடலின்மேல் பயணிப்பதும், பறப்பதும் ஒருபோதும் தடுக்கப்படவில்லை, இனியும் தடுக்கப்படாது.” “சீனாவுக்கு அந்தக் கடலின் மீது தடையின்றிப் பயணிக்க வேறு எந்த நாட்டையும் விட வழி தேவை” என்று அவர் வலியுறுத்திக் கூறினார். எந்த ஒரு நாட்டின் ஒரே ஒரு வர்த்தகக் கப்பல் கூட தென்சீனக் கடலில் பயணிக்கும் போது சீனாவால் தடுக்கப்படவில்லை. மிகவும் முக்கியத்துவமுடைய எண்ணெய்க் கப்பல்கள் உட்பட ஏராளமான எண்ணிக்கையிலான கப்பல்கள் சீனத் துறைமுகங்கள் வழியாகப் பயணிக்கின்றன. அவற்றில் ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா ஆகியவற்றுக்கு சீனா கச்சாப் பொருட்களையும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் ஏற்றுமதி செய்கிறது. தன்னுடைய சொந்த வர்த்தக நீர்வழிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுப்பது சீன மக்கள் குடியரசுக்குப் பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

எனினும், கார்ட்டர், “அங்கு சீனாவின் நடத்தை குறித்து ஏராளமான கவலை உள்ளது.” தென்சீனக் கடலுக்கு கார்ட்டர் பயணம் மேற்கொண்டதன் காரணம் குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் பதிலளித்தார், “சிறப்பான வழியில் இன்று அதைக் குறித்துக் குறிப்பிட வேண்டுமென்றால், அது இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால்தான். அந்தப் பதற்றம் தென்சீனக் கடலில் நில அமைப்புகளால் பெரும்பாலும் எழுந்துள்ள முரண்பாடுகளால் எழுந்துள்ளது. இதில் பெரும்பாலான செயல்பாடுகள் சீனாவால் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டவை.”

கார்ட்டர் மேலும் கூறினார், “இப்பிரதேசத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட அமெரிக்க இராணுவம் 70 ஆண்டுகளாக உதவியுள்ளது.” முதல் அமெரிக்கத் துருப்புக்கள் வியட்னாம் மீது போர்தொடுக்க 1950களின் மத்தியில் அனுப்பப்பட்டது என்பதையும், 1959ல் அமெரிக்க இராணுவத்தின் முதல் இரண்டு வீரர்கள் (பின்னர் இது 58,220 ஆக உயர்ந்தது) இந்தப் பேரழிவில் மரணமடைந்தனர் என்பதையும் அவர் மறந்து விட்டார். அதேபோல் அவரது தேர்ந்தெடுத்த ஞாபகசக்தியானது 1964லிலிருந்து, 1973க்கிடையில் நடந்த வெறுப்பூட்டும் மோதலையும் மறந்து விட்டது. அப்போது லாவோசின் மீது நடத்தப்பட்ட 5,80,000 குண்டு வீச்சுக்களில் இருபது லட்சம் டன்களுக்கும் அதிகமாக வெடிகுண்டுகளை வீசியது. இது ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு விமானம் முழுவதுமான குண்டுகளை வீசுவதற்கு இணையானது. இது வரலாற்றிலேயே சராசரியாக அதிக குண்டு வீச்சுக்கு ஆளான நாடாக லாவோசை ஆக்கிவிட்டது.

’அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை’ குறித்த கார்ட்டரின் புரிதல் நிதர்சனத்துடன் ஒத்துப் போகாத ஒன்று. இது தென்சீனக் கடலில் பயணிப்பதில் சுதந்திரம் பற்றி அவரது ஆரவாரப் பேச்சைப் போன்றதேயாகும். ஆசியாவில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதற்கு அமெரிக்கா 70 ஆண்டுகள் உதவியது என்ற அவரது கூற்று குப்பைக்கு ஈடானது. அதை அவர் கூறும்போது, இவ்வளவு சோகாமான ஆண்டுகளில் ஈவிரக்கமின்றி வாஷிங்டன் குண்டு வீசிய நாடுகளிலிருந்து சில மைல்களே தள்ளி நிறுத்தப்பட்டிருந்த ஒரு அணுஆயுதக் கப்பலிலிருந்து பேசினார் என்பதே முரண்பாடு. அந்த நாடுகள் வியட்னாம், லாவோஸ் மற்றும் கம்போடியா.

வாஷிங்டனின் உலகளாவிய மோதல் அணுகுமுறையை அதிபர் ஒபாமா இப்படிக் கூறித் தொடங்கி வைத்தார்: “நிச்சயமாக சீனா பெரிதும், வலுமிக்கதும் ஆகும்”. “அதன் கோரிக்கைகளில் சில நியாயமாகவும் இருக்கலாம் . . . . ஆனால் அவர்கள் அதனை தமது முஷ்டியை வீசி மக்களைத் தமது வழியிலிருந்து தள்ளுவதன் மூலம் செய்ய முயலக் கூடாது.”

தென்சீனக் கடலில் சீனா தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் அங்குதான் ஒரே ஒரு நோக்கத்துடன் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களும், விமானம் தாங்கிக் கப்பலும் நிறுத்தப்பட்டிருந்தன – அந்த ஒரே ஒரு நோக்கம், சீனாவைத் தூண்டி விடுவது. இந்த விஷயங்களுக்கு புதிதாக வாஷிங்டனுக்கும், மணிலாவுக்கும் இடையில் ஏற்பட்ட “உயர் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்” உதவவில்லை. அந்த ஒப்பந்தம், “பிரதேசத்துக்குள் அமெரிக்கா தன்னுடைய சொந்த வலுவை வெளிக்காட்டுவதில் அதிக ஸ்திரத்தன்மையும், திறனும் பெற அதற்கு உதவும்” என்ற அதிபர் அக்வினோவின் கருத்துக்கு உதவிகரமாக இல்லை. இந்த ஒப்பந்தம் இப்பிரதேசத்துக்குள் ஸ்திரத்தன்மையையும், சீரமைவையும், பதற்றத்தைத் தணிப்பதாகவும் ஆக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியில் உதவும் என்ற அவரது கருத்துக்கும் உதவிகரமாக இல்லை.

மறுபுறம் சீனா மறைமுகமாகக் கூறியது – “தென்சீனக் கடல் பிரச்சனையில் விளையாடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும், தென்சீனக்கடலில் பதற்றத்தை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும், தென்சீனக்கடலில் முரண்பாடுகளைச் சிக்கலாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” 2014 மே மாதத்தில் அவர் தாமே விடுத்திருந்த பிரகடனத்தின் மீது கூட கவனம் செலுத்தினார், அதில் அவர், “நமது அமெரிக்க செனட்டில் கடல் பழக்கத்துக்கான சட்டம் அங்கீகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த நாம் மறுத்துள்ள போது, தென்சீனக் கடலில் பிரச்சனைகளைத் தீர்க்க நாம் முயற்சிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

எனவே அமெரிக்காவின் ஆக்ரோஷமான நிலைபாடு இப்பிரதேசம் முழுமையையும் முரண்பாடுகள், மோதல்களால் நிரப்பிடும் திறன் கொண்டது, அதன் உலகளாவிய புவியியல் அரசியல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, அமைதியையும், சாந்தியையும் குலைக்கும் திறன் பெற்றது என்பது மிகவும் தெளிவானது. தனது சொந்த தேசிய நலனுக்காக இந்த முரண்பாடு வளர்ப்பில் இந்தியா எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது என்று கூறுவது மெய்யாக இருக்கும்.

டிரான்ஸ் பசிபிக் கூட்டணி மூலம் அமெரிக்கா இந்தப் பிரதேசத்தில் ஒரு வர்த்தக, பொருளாதாரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சீனாவே ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என்ற தனது பொருளாதாரக் கொள்கையிலிருந்து விலகும் சூழலில் இதை நாம் எப்படிப் பார்ப்பது?

அமெரிக்க உத்தியின் இரண்டாவது அம்சம் தனது பொருளாதார நலனை டிரான்ஸ் பசிபிக் கூட்டணி மூலம் வளர்ப்பது. டிரான்ஸ் பசிபிக் கூட்டணி என்றால் என்ன? அதற்கான சிறு விடை: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, புரூனே, தருசலாம், சிலி, மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்னாம், கனடா, மெக்சிகோ, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பிரம்மாண்டமான வர்த்தக ஒப்பந்தம். இந்த நாடுகளிடம் 2012 புள்ளிவிவரத்தின்படி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியாக அமெரிக்க டாலர் மதிப்பில் 28,136 பில்லியன் உள்ளது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40%.

உண்மையில் இந்த கூட்டணி என்றால் என்னவென்பது யாருக்கும் தெரியாது. இந்தக் கூட்டணி ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை யாரும் படிக்க அனுமதிக்கப்படவில்லை. அதிலிருக்கும் புதிய சட்ட, திட்டங்கள் நிச்சயமாக பலரின் வாழ்க்கையை பாதிக்கும் என்றபோதும் கூட அதைப் படிக்க அனுமதிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் பத்தாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தாலும், சமீபத்தில்தான் இந்த ஒப்பந்தத்தில் பொதுநலன் மேலெழுந்தது.

ஏன் இவ்வளவு மறைமுகம்? பங்கேற்கும் மற்ற அரசாங்கங்களைப் போலவே ஒபாமா நிர்வாகமும் இந்த ஒப்பந்த வரைவை பூட்டியே வைத்திருந்தது. ஆனால் “அனுமதிக்கப்பட்ட ஆலோசகர்கள்” இதற்குத் தமது ஆலோசனைகளை வழங்க முடிந்தது. கார்ப்பரேட் தரகர்களின் மாற்றுப் பெயர்தான் இது. ஆக, இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை பல்வகை தகவல் வழிகளும் ஊகம் செய்வதற்கு இது இயல்பாகவே இட்டுச் சென்றது.

ஆனால் விக்கிலீக்ஸ் உதவியுடன் ஒப்பந்தத்தின் சில பகுதிகள் இணையதளத்தில் வெளியாகின. வெளியான இரண்டு அத்தியாயங்கள் அறிவுசார் சொத்துரிமையையும், சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளையும் பற்றியவை. அவை வெளிப்படுத்தும் விஷயங்கள் பல; இணையதள தனியுரிமை கூறுவது உட்பட, தொழிற்சங்கங்களும், சூழலியலாளர்களும் கவலையடைந்துள்ளனர். இந்தக் கவலைகள் பெரும்பாலும் அது தொழிலாளர் உரிமைகள், மருந்து விலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தினசரி கவலைகள் மீது அது ஏற்படுத்தக்கூடிய மோசமான பாதிப்புகள் பற்றியவை. ஆனால் இந்தக் கவலைகளில், முதன்மையாகத் தெரிவது, அவற்றை தற்போதைய, எதிர்கால தேசியச் சட்டங்களின் வரம்பிலிருந்து வெளியே கொண்டு வருவதாகும்.

முக்கிய ஊடகங்கள் கூட இதில் எச்சரிக்கையடைந்துள்ளதானது, அவை இவ்வாறு மொட்டையாகக் கூறுவதிலிருந்து தெரிகிறது :”இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் மிக இரகசியமாக நடப்பதிலிருந்து, இறுதியாக இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கும் என்பதை நம்மால் கூற முடியாது. அது புஷ் கால ஒப்பந்தத்தை விட மிகவும் முன்னேறியவையாக இருக்கலாம்.”(நியூ வீக்)

சீனாவின் புதிய உத்தி மாற்றமானது ஒரு புறம் உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஊசலாட்டத்தாலும், மறு புறம் வளர்ந்து வரும் உள்நாட்டு அசமத்துவத்தாலும் தூண்டப்பட்டதாகும். சீன அரசு தமது தேசத்தின் நலன் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கும் உரிமையை யாரும் குறை கூற முடியாது; அது மேற்கத்தியப் பார்வையாளர்களின் மறைமுகமான விமர்சனமாகத் தோன்றுகிறது. 2008க்குப் பிந்தைய உலக நிதி தேய்மானம் (Financial meltdown),அதைத் தொடர்ந்த பொருளாதாரச் சரிவு ஆகிய சூழலில் உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவது என்னவோ சீனாவின் கடமை என்பது போல் விரிவான வார்த்தைகளில் உலக நிதியம் ஐ.எம்.எஃப் தனது ஆவணம் ஒன்றில் எழுதி வைத்திருந்தது.

சீனா ஒட்டுமொத்தமாக கூட்டாண்மைகள், ஒப்பந்தங்களை தனது சொந்தத் திறன்களுக்காக சில பெரிய முயற்சிகளை எடுத்துள்ள அதே நேரத்தில், இத்தகைய ஏற்பாடுகளில் கூட்டாளிகளுடன் பரஸ்பர லாபம் பெறுமாறு எடுத்துள்ளது. இவற்றைத் தவிர, சீனா அமெரிக்காவால்(முன்பு நிதியம்-வங்கியின் மேலாதிக்கம்) வழிநடத்தப்படும் உலகப் பொருளாதாரக் கட்டுமானத்திடமிருந்து சுயாட்சியை உறுதிப்படுத்த நிதிச் செயல்பாடுகளை இணைக்கும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது. மேலும் சீனர்கள் தமது பெரிய வர்த்தகக் கூட்டாளிகளுடனான பணப் பரிவர்த்தனைகளை டாலரிடமிருந்து விடுவிக்கப் புதிய வழிமுறைகளை உருவாக்குவது போல் தெரிகிறது. ஏனென்றால் பரிவர்த்தனை பணமாக டாலர் இருப்பதானது பெரிய அளவில் ஒருதலைப்பட்சமானதாகவும், தீர்மானமான தாக்கம் செலுத்துவதாகவும் உள்ளது. ஏராளமான ஆதாரங்களைக் கொண்ட ஐரோப்பிய-ஆசியப் பிரதேசத்தை ஒன்றிணைக்க சீனா ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த கட்டமைப்புத் திட்டத்தையும் கொண்டுள்ளது. இவையெல்லாம் எதிர்காலத்தில் எப்படி செயல்படப்போகின்றன என்ற நிதர்சனத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்பிரதேசத்தில் சீனாவுக்கு தற்போது இருக்கக்கூடிய வர்த்தகப் பொருளாதார உறவுகள் பெரும்பாலும் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இருப்பதால், இந்த வளர்ச்சிப் போக்குகளால் அது வெகுவாக பாதிக்கப்படும். இந்த டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தத்தின் வடிவம் முக்கியமாக அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு இலாபமளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது தெளிவு. எனவே இந்த ஒப்பந்தத்தின் கீழுள்ள நாடுகளின் மக்கள் அதன் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (SCO), பிரிக்ஸ், யூராசிய நில பாலத் திட்டம் ஒரே இணைப்பு, ஒரே சாலைத் திட்ட முன்மொழிவு, ஆசியக் கட்டுமான முதலீட்டு வங்கி (AIIB), புதிய வளர்ச்சி வங்கி போன்ற பல பிரதேச முன்முயற்சிகளின் அச்சாணியாக சீனா எழுச்சி பெறும் வேளையில் இந்த அச்சாணியும் எழுகிறது. இவையெல்லாம் அதனால் எப்படி பாதிக்கப்படும்?

இந்த முன்முயற்சிகளெல்லாம் சீனாவால் எடுக்கப்படுகின்றன என்பது உண்மையே. அவற்றின் விளைவுகளை மொத்தமாகப் புரிந்து கொள்ளும் வழிமுறை, இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவற்றில் ரஷ்யா நெருக்கமான, பெரிய கூட்டாளி என்பதாகும். இந்த முக்கியமான, ஆதிக்கம் மிக்க நாடுகளின் நெருக்கம் முறையே அவற்றின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கைகளால் தூண்டப்படுகிறது. அமெரிக்கா ஒருதுருவ உலகை நோக்கி நகர்த்திச் செல்ல முயற்சிக்கிறது அதை அடையாளப்படுத்தும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளுக்கு வெளியே இருக்கும் பதற்றத்தை இந்த முயற்சிகள் காட்டுகின்றன. முக்கியமாக, இந்தப் பெரும்பாலான திட்டங்களில், பரஸ்பர நலன்கள் இருக்கின்றன. உதாரணமாக, SCO எரிசக்தி ஆதாரங்களைப் பெற்று உபயோகிப்பதன் மீது கவனம் செலுத்துவதாகும்; சீனா மிகப்பெரும் வாடிக்கையாளர்களில் ஒன்று, ரஷ்யா முன்னாள் ஆசிய சோவியத் குடியரசுகளுடன் சேர்ந்து எண்ணெய், எரிவாயு உற்பத்தி நாடுகளில் பெரியது. பிரிக்ஸ் கண்டங்களிடையே வளர்ந்து வரும் பெரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கிறது. அந்நாடுகளுக்கு குறைந்தபட்சம் ஒரு பிரதேசப் பங்கையாவது வகிக்கும் இலட்சியங்கள் உண்டு. தேசியத் தேவைகளுக்கேற்ப நிதியாதாரங்கள் கிடைக்க வேண்டும், அதுவும் அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்தியக் கூட்டாளிகளின் நலனைப் பிரதிபலிக்கும் நிதியம்-வங்கி ஆகியவை திணிக்கும் வரைமுறைகளின்றி இருக்க வேண்டுமென்ற வகையில் இந்த வங்கிகளின் முதன்மையான வடிவமைக்கப்பட்டன. அது அமெரிக்கக் கூட்டாளிகள் உட்பட பெருமளவு ஆதரவை ஈர்த்துள்ளது. அதுவும் வல்லரசானது தனது விருப்பமின்மையை அவ்வளவாக மறைக்காமல் வெளிப்படுத்தியபோது இது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சாலை – ஒரு பகுதி என்பது யூரேசியாவை ஒன்றிணைக்கும் ஒரு உட்கட்டமைப்பை உருவாக்கும் தொலைநோக்கைக் கொண்டது. உலக நில, ஜனத்தொகையின் பெரும் பகுதியைக் கொண்டிருக்கும் யூராசியாவுக்கு நிச்சயமாக ஆக்கபூர்வமான பொருளாதாரச் செயல்பாட்டைத் பொருண்மையாகத் தூண்டிவிட்டு, வலுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

கடந்த காலத்துக்கு மாறாக, சமீப காலத்தில் பல்துருவம் வளர்ச்சியடைவதற்கான அடையாளங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதை நாம் பார்த்தோம். இந்த வளர்ச்சிக்கு சீனாவின் பொருளாதாரம் முன்னேற்றமடைவது மிகவும் முக்கியமானது. அமெரிக்காவால் தலைமை தாங்கப்படும் தற்கால உலக முதலாளித்துவத்தின் பலவீனங்களை வெளிக் கொண்டு வருவதற்கு இது உதவியுள்ளது. வரும் எதிர்காலத்தில் இந்தப் போக்கு மேலும் வலுவடையும் போல் தோன்றுகிறது.

சீனாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் உத்தியில் இந்தியா அதிகமாக முக்கியப் பங்காற்றத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயின் பயணம் இந்தப் போக்க்கை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவும் பிரிக்ஸின் முன்முயற்சிகளில் பங்குபெறும் பின்னணியில் நாம் இதை எப்படிப் பார்க்க வேண்டும்?

நாம் ஏற்கனவே அமெரிக்காவின் உத்தியை, குறிப்பாக சீனாவைப் பொறுத்தவரை அதன் உத்தியை விரிவாக விவாதித்துள்ளோம். சீனாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அது இந்தியாவை ஜப்பானுடனும், ஆஸ்திரேலியாவுடனும் முடிச்சுப் போட தெளிவாகவே விரும்புகிறது. இந்த உத்தி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்கச் சார்பாக மாறுவதால் வலுப்பெற்றுள்ளது. நரேந்திர மோடியின் அரசு இதை மேலும் தெளிவாகவே பிரகடனப்படுத்தியுள்ளது. அதேபோல் ஜப்பானில் ஷின்ஸோ அபேயின் தலைமை, ஜப்பானின் முந்தைய பசிபிக் அரசியலமைப்பைக் கைவிட்டு அதன் கொள்கை அணுகுமுறையில் ஒரு வலதுசாரித் திருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த இரு முன்முயற்சிகளின் நோக்கங்கள் முரண்பட்டவை; அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வெளியே சுதந்திரமான இடத்தைப் பெறுவதற்காக பிரிக்ஸ் கூட்டணியில் இருப்பது. இயல்பாகவே இதற்கு பிரிக்ஸ் நடைமுறையில் இந்தியாவின் பங்குக்கு ஊறு விளைவிக்கும் திறன் உண்டு.

தென்சீனக்கடல் விஷயத்தில் அதிகமாகத் தலையிடும் அணுகுமுறையையும், மலபார் இராணுவப் பயிற்சியின் பரப்பெல்லையை அதிகரித்திடுவதிலும் இந்தியா ஈடுபட்டதைக் கடந்த ஆண்டு பார்த்தோம். பெரும் அமெரிக்க ஏகாதிபத்திய உத்தியின் பகுதியாக இவை எப்படி இடம் பெறுகின்றன?

நாம் தென்சீனக் கடல் விஷயத்தைச் சற்று விரிவாகவே விவாதித்துள்ளோம். குறிப்பிடத்தக்க வகையில் மலபார் இராணுவப் பயிற்சியானது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளை முதன்முறையாக ஈடுபடுத்தியது. ஆசியா-பசிபிக் பிரதேசத்தில் மேலாதிக்கம் பெற வேண்டுமென்ற அமெரிக்காவின் புவியியல் பிரதேச உத்தித் திட்டத்துடன் இது தெளிவாகப் பொருந்துகிறது.

தென்சீனக்கடல் பிரச்சனை சீனாவுக்கும், வியட்னாமுக்கும் இடையில் கூட சில ஒப்புதலின்மைகளை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவும், அவற்றின் பரந்த உறவுகளை சரி செய்யவும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அவற்றின் இடத்தைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டு நாடுகளும் எடுக்கும் நடவடிக்கைகள் யாவை?

இது மிகவும் உண்மை; ஆனால் இது நடப்பது இதுவே முதன்முறையல்ல. கடந்த காலத்தில் கம்போடியாவுக்கும், வியட்னாமுக்குமிடையிலான எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கும் வியட்னாமுக்கும் வேறுபாடுகள் இருந்தன. நல்ல வேளையாகப் பின்னர் அந்தப் பிரச்சனை எந்தக் கசப்பையும் விடாமல் சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. இரண்டு தீபகற்பக் கூட்டங்களான பராசெல், ஸ்பார்ட்லி தீவுகள் ஆகியவற்றின் மீதான உரிமை குறித்து இம்முறை வேறுபாடு எழுந்துள்ளது. சீனாவைக் கட்டுப்படுத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக தென்சீனக் கடல் பிரச்சனையில் அமெரிக்கா ஊக்கத்துடன் தலையிடுவது மிகவும் கவலைக்குரிய உண்மை.

எல்லைப் பிரச்சனைகள் அவற்றை ஊதிப் பெரிதாக்குவதன் மூலம் தீர்க்கப்பட முடியாதென்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். நேரடி இராணுவ மோதல் இருக்கவே கூடாது. அவை பரஸ்பரப் பேச்சுவார்த்தைகள், சில விட்டுக் கொடுத்தல்கள் மூலமாகவே கடந்த காலத்தில் தீர்க்கப்பட்டன; தீர்க்கப்படுகின்றன. சீனா வியட்னாமுடன் பரஸ்பரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது; ஆனால் வியட்னாம் முரண்பாட்டில் இருக்கும் மற்ற பகுதியினரையும் ஈடுபடுத்தி பன்முகப் பேச்சுவார்த்தையைத் தேர்வு செய்கிறது. தனது தலையீட்டின் வரம்பைக் கட்டுப்படுத்தும் பரஸ்பரப் பேச்சுவார்த்தை ஏற்பாட்டை அமெரிக்கா விரும்பாது என்பது தெளிவு. நல்லவேளையாக வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டு அரசுகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசு, கட்சி இரண்டிலும் உயர்மட்ட அளவில் நட்புறவுடனே இருக்கின்றன. இயல்பாகவே பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்ப்பதையே நாம் விரும்புவோம். இதைத் தாண்டி, நாம் நட்பையும், ஒருமைப்பாட்டையும் கொண்டுள்ள இரண்டு தோழமைக் கட்சிகள் ஈடுபட்டுள்ள ஒரு விஷயத்தில் நாம் கருத்து கூறுவது நியாயமாக இருக்காது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: