“அதெல்லாம் இருக்கட்டும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி பற்றி இன்றுவரை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்? …”
“அது சரி …புரட்சிக் கட்சிக்கு தேர்தலில் என்ன வேலை? …”
“ம்ஹுக்கும் … கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் சங்கங்களில் பிற்போக்கானவர்கள் இருக்கிறார்களே?”
“சமரசமில்லாமல் போராட வேண்டாமா?”
போகிற போக்கில், இப்படி ஏராளமான ‘புரட்சிகர‘ கேள்விகள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. இவைகளெல்லாம் இங்கு மட்டும்தான் எழுப்பப்படுகின்றனவா?… உலகெங்கிலும் இப்படி வீராவேசம் பேசுவோரால் நடந்தது என்ன? என்ன செய்துவிட முடியும்? என்பதைத்தான் ‘இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு’ புத்தகத்தில் தோழர் வி.இ.லெனின் விமர்சனப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.
மீண்டும், மீண்டும் நடக்கும்:
உலகமெங்கும் சோசலிசப் புரட்சியை நடத்தி முடிக்க “மாறா உருவகப்பட்ட, யாந்திரீகமாய் சமனமாக்கப்பட்ட“ ஒரு சூத்திரம் கிடையாது. தேசிய வேறுபாடுகளுக்கும், வகை வேறுபாடுகளுக்கும் உட்பட்டுத்தான் நாம் செயல்பட்டாக வேண்டும். ஆனாலும் ரஷ்யப் புரட்சியைப் பற்றி பேசுவது ஏனென்றால், அவர்கள் ஜார் மன்னனை மட்டும் எதிர்க்கவில்லை, மன்னனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஐரோப்பிய மூலதனத்தையும் எதிர்கொண்டார்கள். மூலதனத்தின் துணையோடு செயல்படும் ஆட்சியாளர்களை வீழ்த்தினார்கள். அங்கே நடந்தேறியது, “சர்வதேச அளவில் திரும்பவும் நடைபெறுவது வரலாற்று வழியில் தவிர்க்க இயலாததாகும்“. இந்தப் பொருளில்தான் ரஷ்யாவில் புரட்சிப் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய போல்ஷ்விக்குகளின் அனுபவத்தைப் பேசவும், கற்கவும் செய்கிறோம்.
புரட்சிக்கான தயாரிப்பு:
ஜார் ஆட்சியின் கீழிருந்த ரஷ்யாவில் போல்ஷ்விக் என்கிற சிந்தனை 1903 ஆம் ஆண்டில் முகிழ்த்தது. அதுவரையிலும், அங்கே முற்போக்கு சிந்தனைகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இதிலிருந்து விடுபட பிழையற்ற, முரணில்லாததொரு தத்துவ ஆயுதத்தைத் அவர்கள் தேடிவந்தனர். தேடலின் இறுதியில் அவர்கள் மார்க்சியத்தை அடைந்தார்கள். 1903 முதல் 1905 வரையிலான ‘புரட்சியின் தயாரிப்புக்குரிய காலகட்டத்தில்‘ நாடுகடத்தப்பட்ட அரசியலாளரின் பத்திரிக்கைகளில் அனைத்துவிதமான சிந்தனைப் போக்குகளும் இடம்பெற்றன. ஒவ்வொரு வர்க்கத்தின் நலன்களும் இந்த சிந்தனைப் போக்குகளில் வெளிப்பட்டன. இந்தச் சூழல் சித்தாந்த மோதலுக்கும், அதன் வழியாக செழுமைக்கும் வழிவகுத்தது.
புரட்சியின் ‘ஒத்திகை‘:
1905 ஆம் ஆண்டில் புரட்சியின் ‘ஒத்திகை‘ நடந்திருக்காவிட்டால், 1917 ஆம் ஆண்டில் புரட்சியின் வெற்றி சாத்தியமாகியிருந்திருக்காது‘ என்று லெனின் குறிப்பிடுகிறார். அந்தக் காலகட்டத்தில் ரஷ்யா முழுவதும் வேலைநிறுத்தங்கள் பெருமளவில் நடந்தன. பொருளாதார வேலை நிறுத்தங்கள் அரசியல் வேலை நிறுத்தங்களாகவும், அரசியல் வேலை நிறுத்தங்கள் ஆயுதமேந்திய எழுச்சியாகவும் மாற்றம் பெற்றன. 1907 வரையில் இந்த நிகழ்வுப்போக்குகளின் தன்முனைப்பான வளர்ச்சியில்தான் ‘சோவியத் வடிவம்‘ (அதாவது மக்கள் சபைகள்) உதித்தெழுந்தன. இந்த சோவியத்துகளின் செயல்பாடு உலகெங்குமிருந்த ஜனநாயக அமைப்புகளிலெல்லாம் உயர்ந்ததாகும் என்கிறார் லெனின்.
பிற்போக்கு நாடாளுமன்றங்களில் பங்கெடுத்தல்:
1906 ஆம் ஆண்டில் பிற்போக்கான நாடாளுமன்றத்தை புறக்கணித்த போல்ஷெவிக்குகள், அந்த முடிவு தவறானதென உணர்கின்றனர். பின்னர் 1908 ஆம் ஆண்டில் மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத்தில் பங்கெடுக்க முடிவுசெய்கின்றனர். “வெகுஜன வேலை நிறுத்தங்கள் ஒரு எழுச்சியாக வேகமாய் வளர்ச்சியடையும் சூழல் இல்லாதபோது நாடாளுமன்றம் பகிஷ்கரிக்கப்படுவது பெருந்தவறாகிவிடும்” என்று எச்சரிக்கிறார் லெனின்.
நாடாளுமன்ற முறை வரலாற்றுவழியில் காலாவதியாகிவிட்டபோதும், பிரச்சார பொருளில் இது உண்மைதான் என்கிறபோதும் நடைமுறையில் அதனை வெற்றிகொள்ளும் நிலையை பாட்டாளிவர்க்கம் அடைய இன்னும் நெடுந்தொலைவுள்ளது. வரலாற்று வழியில் முதலாளித்துவமும் காலாவதியாகிவிட்டது. ஆயினும் முதலாளித்துவத்தின் அடிப்படை மீது மிக நீண்ட விடாப்பிடியான போராட்டத்திற்கான அவசியம் முடிந்துவிடவில்லை.
முதலாளித்துவ – ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டு இதுபோன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்படவேண்டியது எப்படி அவசியமென்பதை பிற்பட்ட நிலையில் உள்ள வெகுஜனப் பகுதியோருக்கும் நிரூபித்தபடியே, நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய் கலைக்கப்படுவதற்கு வகை செய்யும் விதத்தில் பயன்படுத்துவதுதான் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை ‘அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்கு‘த் துணை செய்திடும்.
அப்போது, கட்சிக்குள்ளிருந்த ‘இடதுசாரிகள்‘ அந்த முடிவை எதிர்த்தனர். அதற்காக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு ‘குட்டி முதலாளித்துவ புரட்சி‘ (அ) அராஜகவாத மனநிலைக்கு எதிரான போராட்டத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டியிருந்தது. நாடாளுமன்றங்கள் நமக்குக் காலாவதியாகிவிட்டதால் அது வர்க்கத்துக்கும், வெகுஜனங்களுக்கும் காலாவதியாகிவிட்டதாகக் கருதக் கூடாது. ‘இடதுசாரிகளுக்கு‘ ஒரு வர்க்கத்தின் கட்சியாக, வெகுஜனங்களின் கட்சியாக சிந்தனை செய்யத் தெரியவில்லை.
கட்டுப்பாடான கட்சியின் அவசியம்:
எல்லாம் ஏறுமுகமாகவே இருக்கவில்லை. 1907 – 1910 ஆண்டு காலகட்டத்தில் பிற்போக்கு அரசோச்சியது. புரட்சிகரக் கட்சிகள், எதிர்க் கட்சிகள் எல்லாம் நொறுக்கப்பட்டன. “தளர்வு, மனச் சோர்வு, பிளவுகள், பூசல்கள், ஓடுகாலித்தனம், ஆபாசம்” என்று சூழலில் சரிவு ஏற்பட்டதையும், மக்களிடையே “கருத்து முதல்வாதத்தை நோக்கிய சரிவும்” காணப்பட்டது. இதுபோன்ற சூழல்களில் ஒரு கட்சி ஆட்படும்போது வரலாற்றுத்துறை இயக்கவியலிலும், அரசியல் போராட்டங்களைப் புரிந்துகொள்வதிலும், அரசியல் கலையிலும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். “ஒழுங்குடன் தாக்குவதற்கும், ஒழுங்குடன் பின்வாங்குவதற்கும் தெரிந்துகொண்டால் ஒழிய வெற்றிபெற முடியாதென்பதை உணர வேண்டியிருந்தது” என்கிறார் லெனின்.
“பாட்டாளி வர்க்கத்தினுள் குட்டி முதலாளித்துவ உறுதியின்மையையும், ஒற்றுமையின்மையையும், தனி நபர் மனப்பான்மையையும் மாறி மாறி மனவெழுச்சியையும் மனச்சோர்வையும் ஓயாமல் மீண்டும் மீண்டும் தலைதூக்கச் செய்கிறது. இதனை எதிர்த்துச் சமாளிக்கும் பொருட்டு, பாட்டாளி வர்க்கத்தின் ஒழுங்கமைப்புப் பாத்திரம் பிழையின்றியும், பயனுள்ள முறையிலும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்படும் பொருட்டு, பாட்டாளிவர்க்க அரசியல் கட்சியிலும் மிகவும் கண்டிப்பான மத்தியத்துவக் கட்டுப்பாடும் அவசியமாகும்” என்று லெனின் கட்டுப்பாடு மிக்க கட்சியின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
இதற்காக ஒரு திடுக்கிடும் உதாரணத்தையும் அவர் பகிர்கிறார். 1912 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தலைவர்கள் பலரும் தங்களை வெளிப்படுத்தாமலே செயல்பட்டு வந்தனர். அப்போது மலினோவ்ஸ்கி என்ற போலீஸ் கையாள் ஒருவர் கட்சியின் மத்தியக் குழுவில் புகுந்துகொள்கிறார். அமைப்பு செயல்பாட்டை உள்ளிருந்து கண்காணித்து பல முன்னணி தலைவர்களை காட்டிக் கொடுக்கிறார். அவர்களில் பலரும் கைதாகின்றனர், சிலர் கொல்லப்படுகின்றனர். அதே சமயம், கட்சிக் கட்டுப்பாடு காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட பணிகளை செய்து கொடுக்கவும் வேண்டி வருகிறது. இது பலரை கம்யூனிஸத்தின் பால் ஈர்க்க உதவியாக இருந்தது. கட்டுப்பாடான கட்சியின் பலத்தைக் காட்டுவதாக இது அமைந்தது.
புத்தெழுச்சி ஆண்டுகள்:
1910 – 1914 ஆண்டு காலகட்டத்தை புத்தெழுச்சி ஆண்டுகள் என்று லெனின் குறிப்பிட்டாலும், தொடக்கத்தில் அக்காலகட்டத்தில் மிக மந்தமான முன்னேற்றமே இருந்துள்ளது. இதன் காரணமாக 1912 ஆம் ஆண்டு சைபீரிய தங்கச் சுரங்கங்களில் தொழிலாளர்களை சுட்டு வீழ்த்துமளவு ஜார் ஆட்சி அடக்குமுறைகளை ஏவியது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் எழுச்சியடைந்தது.
முதல் ஏகாதிபத்திய உலகப்போர் நடைபெற்ற 1914-1917 காலகட்டங்களில் பிற்போக்கு நாடாளுமன்றத்தில் போல்ஸ்விக்குகள் செயல்பட்டனர். சட்ட விரோதமான வேலைகளைச் செய்வதுடன் “சட்டப்பூர்வமான வாய்ப்புகளைத்” தவறாமல் பயன்படுத்திக் கொள்வதென்ற பிழையற்ற போர்த்தந்திரத்தை பின்பற்றி, மென்சுவிக்குகளை பின் தள்ளியதுடன், ‘சோவியத்துகளின் ஆட்சி‘ (அதாவது மக்கள் சபைகளுக்கே அதிகாரம்) என்ற முழக்கத்தை போல்ஸ்விக்குகள் வளர்த்தெடுத்தார்கள். 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை ருஷ்யாவில் இரண்டாவது புரட்சி நடந்தேறியது. (அந்தக் காலகட்டத்திலும், அதாவது நாடாளுமன்றமே முழுமையாக வீழ்த்தப்படப் போகிறதென்ற நிலையிலும், பிற்போக்கு நாடாளுமன்றங்களில் போல்ஸ்விக்குகள் பங்கெடுத்தனர்)
சமரசங்களுக்கான அளவுகோல் என்ன?
சமரசங்கள் செய்துகொள்வதை லெனின் நிராகரிக்கவில்லை. அதே சமயம், “பொருத்தமான சமரசத்தைத் தேடிப்பிடிப்பது கம்யூனிஸ்டுகளுக்குள்ள கடமையாகும்” என்கிறார். கம்யூனிஸ்டுகளின் போர்த்தந்திரம், வர்க்கங்களின் இடையிலான ஊசலாட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக அமைய வேண்டும்.
பிரிட்டன் இடதுசாரிகளுக்கு அளித்த பதிலில் லெனின் குறிப்பிடுவது மிக முக்கியமானது: முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதிகளின் மீது புனிதமான பாட்டாளிவர்க்கத்தின் வெறுப்புணர்ச்சி – எந்த ஒரு சோசலிச, கம்யூனிச இயக்கத்திற்கும் அதன் வெற்றிக்குமான அடிப்படையாகும். ஆனால் ‘அரசியல் என்பது விஞ்ஞானமும், கலையுமாகும். அது அப்படியே ஆகாயத்திலிருந்து வந்து குதித்துவிடுவதோ, வரப்பிரசாதமாகக் கிடைப்பதோ அல்லவென்பதையும், பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றிபெற விரும்பினால், அது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் சப்பையில்லாத தனது சொந்தப் பாட்டாளி “வர்க்க அரசியல்வாதிகளை” உருவாக்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் செயல்படும் சங்கங்கள் குறித்து:
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பணியாற்றும் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் பிற்போக்கான சில நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, ‘இடதுசாரிகள்’ அதனையொரு மன்னிக்க முடியாத குற்றமாக கருதுகின்றனர். ‘உருவில் கம்யூனிஸ்ட் அல்லாத, நெகிழ்வுள்ள, ஒப்பளவில் மிகவும் விரிவான, சக்தி மிகுந்த‘ பாட்டாளி வர்க்க திரட்டலை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்தனர். அதனை, சிறுகச் சிறுக, பரஸ்பர செயல்பாட்டின் மூலமே முழுமையான புரட்சிகர சிந்தனைக்கு ஆட்படுத்தி வந்தனர். “முன்கூட்டியே, முழு வீச்சுடைய முதிர்ச்சிபெற்ற, கம்யூனிச வருங்கால விளைவுகளை எதிர்பார்ப்பது 4 வயதுக் குழந்தைக்கு உயர் கணிதம் கற்றுத்தரும் முயற்சிக்கு ஒப்பானதே ஆகும்” என்கிறார் லெனின்.
அதே சமயம் வெகுஜனங்களுடைய நிலைமைக்கும், பிற்பட்ட பகுதியின் நிலைக்கும் கம்யூனிஸ்டுகள் சரிந்துவிடக் கூடாது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
முழுமையான வெற்றிக்கு வழிகாட்டும் கையேடு:
கம்யூனிஸ்ட் அகிலத்தில் இரண்டாவது மாநாட்டு பிரதிநிதிகளிடையே விவாதத்தைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட இந்தப் புத்தகம், ஊசலாட்டமில்லாத செயல்பாட்டுக்கு ஒரு கையேடாக விளங்குகிறது. சோவியத் புரட்சியின் போதும், புரட்சிக்குப் பின்னருமான தத்துவார்த்த விவாதங்களில் தன்னை உட்படுத்தி, மார்க்சியத்தை அதன் முழுப் பரிணாமத்தில் வளர்த்தெடுத்த லெனினின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பாகும். இந்தப் புத்தகத்தை எழுதியது மட்டுமின்றி, எழுத்துப் பிழை திருத்தியதிலிருந்து, அச்சுக் கோர்ப்பு வரையில் லெனின் முழுமையாக கவனித்தார்.
“ஒரு வர்க்கம் முழுவதும் உழைப்பாளி மக்களின் விரிவான பகுதிகள் யாவும் மூலதனத்தால் ஒடுக்கப்படுவோர் எல்லோரும் புரட்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையை அடைவதற்கு பிரச்சாரமும், கிளர்ச்சியும் மட்டும் போதாது. வெகுஜனங்கள் தாமே அரசியல் அனுபவம் பெறவேண்டியது அவசியமாகும்.”
“பாட்டாளிவர்க்கத்தாருக்கும் அரைகுறைப் பாட்டாளிவர்க்கத்தாருக்கும் சிறு விவசாயிகளுக்கும் நடுத்தர விவசாயிகளுக்கும் இன்ன பிற பகுதியோருக்கும் இடைப்பட்ட ஏராளமான பல்வேறு வகையோராலும் ‘தூய்மையான‘ பாட்டாளிவர்க்கம் சூழப்பட்டிராவிடில், பாட்டாளிவர்க்கமே கூட அதிக வளர்ச்சி பெற்ற பகுதியாகவும், அவ்வளவாக வளர்ச்சி பெறாத பகுதியாகவும் பிரிக்கப்பட்டிராவிடில், பிரதேசம், தொழில், சில நேரங்களில் மதத்தின் அடிப்படையிலும், பிற வழிகளிலும் அது பிரிக்கப்பட்டிராவிடில் முதலாளித்துவம் முதலாளித்துவமாய் இராது.”
சர்வதேச சக்திகளோடுடனான தொடர்பால் மட்டுமல்லாது (மனிதப்)’பழக்கத்திற்குள்ள பிடிப்பின் வலுவிலும், சிறுவீதப் பொருளுற்பத்திக்குள்ள பலத்திலும்‘ முதலாளித்துவத்தின் வலிமை அடங்கியுள்ளது. இதனை மாற்றிடவும், வெகு மக்களின் சொந்த அனுபவங்களின் வழியாக, மார்க்சியமே ஒரு சரியான சக்தியென்று அடையாளம் காணும் விதத்தில் நிலை நிறுத்திக் கொண்டு செயல்பட, அனுபவங்களின் வழிப்பட்ட வழிகாட்டியாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. நமது முழக்கங்களுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் ஒரு சிறந்த, செயல்திறமுள்ள படையை உருவாக்கிட நம்மைப் பணிக்கிறது.