ஜனகராஜன்
சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தமிழகத்தில் 7 கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் சென்னை மட்டும் அதிகம் பேசப்படுவதற்கு இங்குள்ள மக்கள் தொகையும், ஊடகங்களும் ஒரு காரணமாகும். சென்னைக்கு வெள்ளம் ஒரு புதிய நிகழ்வா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். 2005 ஆம் ஆண்டில் ஒரு வெள்ளம் வந்தது, அதன் பின்னர் 2007 இல் சிறு அளவிலான வெள்ளம் வந்தது. 2005 ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது பத்திரிக்கைகளில் சுமார் 1.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வந்தன. அதில் மிகக் கொடுமையானதொரு தலைப்பு, இரவெல்லாம் நிவாரணப் பொருளுக்காக வரிசையில் நின்றவர்களில் 40 பேர் நெரிசலில் மரணமடைந்த செய்தியைச் சொன்னது.
1976 ஆம் ஆண்டில் சென்னையில் பெரிய வெள்ளம் வந்திருக்கிறது பின் 1985, 1996 மற்றும் 2005 எனத் தொடர்ந்து தற்போது 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை ஒவ்வொரு எட்டு முதல் 9 ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளத்தை சந்தித்துத்தான் வந்திருக்கிறது. அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம்? நகரத்தைக் கட்டமைக்கும்போது, நலத்திட்டங்களை செயலாக்கும்போது அவற்றை முறையாகச் செய்கிறோமா? விஞ்ஞான அடிப்படையில் செய்கிறோமா? அல்லது முறை தவறிச் செய்கிறோமா? என்பதுதான் கேள்வி. 2005 ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தை எதிர்பார்த்தாவது முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். 2005 ஆம் ஆண்டில், ஒரே வருடத்தில் தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணமும், வெள்ள நிவாரணமும் கோரியிருக்கிறது. மேலும் ஒரே வருடத்தில் வறட்சி, வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இடர்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. இப்போதும் கூட, வெள்ளம் பற்றிய விவாதங்கள் அடங்கிவிட்டன. அடுத்த வெள்ளத்தின்போது இது மீண்டும் தொடங்கும். ஆனால் அடுத்துவரும் வெள்ளம் மிகக் கடுமையானதாக இருக்குமென பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதீத மழையா?:
இந்தியா மற்றும் தெற்காசியா முழுவதிலும் தென்மேற்கு பருவமழைதான் பிரதானமானது. தமிழகத்திலோ தென்மேற்கு பருவத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை எல்லையில் மட்டும்தான் மழை பொழியும். வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்தில் அதிக மழை கொடுக்கிறது. தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்யும். ஆனால் வடகிழக்குப் பருவமழை சில நாட்களில் கொட்டித் தீர்த்துவிடும். தென் மேற்குப் பருவமழை ஒரு ஜென்டில்மேன் என்றால், வடகிழக்குப் பருவமழையை ஒரு முரட்டு ஆசாமியென்று கூறலாம். ஏனென்றால் வடகிழக்குப் பருவ மழை எப்போதும் புயலோடு கூடத்தான் பெய்யும்.
இது நமக்குத் தெரியாததல்ல. எப்போதுமே காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத்தான் மழை வரும். அக்டோபர் 20 முதல் டிசம்பர் வரை மழைக் காலம் என்றாலும் அது சில குறிப்பிட்ட நாட்களில் பெய்து முடித்துவிடும்.வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயல்களை ஆய்வு செய்தால் இதனை அறியலாம். தமிழகத்தின் சராசரி மழை அளவான 970 – 960 செ.மீ., உடன் ஒப்பிடும்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் மழை சராசரி கூடுதலாகும். மிகச் சில ஆண்டுகளில் மட்டுமே மழைப்பொழிவு குறைவாக இருந்துள்ளது. (பார்க்க அட்டவணை). கடந்த 1918 ஆம் ஆண்டில் பெய்த மழையை விட இப்போது அதிகம் பெய்துள்ளது என்றபோதிலும் அப்போதிருந்ததை விடவும் நல்ல தொழில்நுட்பங்கள், அறிவியல் முன்னேற்றம் நம்மிடம் உள்ளன. இது நல்ல மழைப் பொழிவுதான். இந்த வளத்தை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் இது பேரிடராகிவிட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கொடுத்த அறிக்கையில் துல்லியமான’ வானிலை விபரம் இல்லை என்றார். வானிலை முன்னறிவிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்காது. இந்தமுறை ரமணன் ‘அதி கனமழை’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார். உடனே அந்த வார்த்தைக்கு பொருள் என்னவென்று தேடினேன். பிபிசி வானிலை அறிக்கையிலும், அமெரிக்காவி NOAA இணையத்தளத்திலும், உலக வானிலை நிறுவன அறிக்கையிலும் மேகங்கள் சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் குவிந்துவருவதைக் காட்டின. ஒரு சாதாரணக் குடிமகனுக்கு இதனை அறியமுடியும்போது, அரசும் அதிகாரிகளும் தேடியிருக்க வேண்டும். மத்திய புவி அறிவியல் துறையின் அறிக்கை அதைச் சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ‘மனிதத் தவறுகளால்’ வந்த இழப்புதான் என்கின்றனர், இதனை ஒரு பேரிடராகச் சொல்ல முடியாது, தவிர்த்திருக்க முடியும், சரியாக அறிக்கைகளை கவனிக்காமல் தவறவிட்டுள்ளதைச் சொல்லியுள்ளனர்.
இரட்டை இழப்பு:
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொழியும் மழைப் பொழிவு முழுவதும் கடலில் சென்று கலப்பதில்லை. இந்த மூன்று மாவட்டங்களில், பதிவேடுகளின்படி சுமார் 3600 ஏரிகளும், உபரிநீர்க் கால்வாய்களும் உள்ளன. அவையெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு, பராமரிப்பில்லாத நிலையில் வைத்திருப்பதன் மூலம் தண்ணீரை சேகரிக்கவும் முடியாமல், பெருவெள்ளத்தையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள வடிகால் அமைப்பு தனித்துவமானதாகும். பல பெருநகரங்களுக்கும் இல்லாத இயற்கையான வடிகால் ஏற்பாட்டை பெற்றுள்ளோம். வடக்குப் பகுதியில் கொசஸ்தலை ஆறு காவேரிப்பாக்கம் குளத்தில் தொடங்கி, ஆரணியாற்றில் இணைந்து எண்ணூரில் கடலில் கலக்கிறது. மத்தியச் சென்னையில் அமைந்துள்ள கூவம், திருவள்ளூர் பருத்திப்பட்டு பகுதியில் தொடங்கி 25 – 30 குளங்களை நிரப்பி பின் கடலில் கலக்கிறது. தெற்கு பகுதியில் மணிமங்கத்தில் தொடங்கும் அடையாறு 30 -40 ஏரிகளை நிரப்பி கடலில் கலக்கிறது. இன்னும் தெற்கே பாலாறு அமைந்துள்ளது. இந்த ஆறுகளை இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் ஆந்திராவில் இருந்து சிதம்பரம் வரை செல்கிறது. இவையல்லாமல் 12 நல்லாக்கள் உள்ளன (ஓட்டேறி, மாம்பலம், விருகம்பாக்கம், வேளச்சேரி, வில்லிவாக்கம், கொரட்டூர்). ஆனால், இவை எல்லாமே ஆக்கிரமிப்பில் உள்ளன.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலமான பள்ளிக்கரணை சதுப்புநிலம் அழிக்கப்பட்டுள்ளது. அதில்தான் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்துள்ளோம். சதுப்பு நிலம் ஒரு முக்கியமான வெள்ள வடிகால் நிலமாகும். 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்த அந்த நிலம் தற்போது 500 ஏக்கர் மட்டுமே உள்ளது. மத்திய கைலாஷ் தொடங்கி, சத்தியபாமா யுனிவர்சிட்டி வரை கட்டடங்கள் எழுந்துள்ளன. சதுப்பு நிலங்கள் இயற்கையாக உருகின்றவை, வெள்ள நீர் பல நூறாண்டுகள் தேங்கி அதன் மூலம்தான் சதுப்பு நிலம் உருவாகிறது. இயற்கையின் செல்வத்தை ஆக்கிரமித்து அழித்துள்ளோம்.
பருவநிலை மாற்றத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றத்தை காரணமாகப் பேசுவதும் மிகவும் மென்மையான அணுகுமுறையாகும். ஒரு சம்பவத்திற்கு ஒரு காரணம்தான் என்று நேரடியாக பொருத்தமுடியாது. ஆனால் பருவநிலை மாற்றம் உள்ளிட்டு நமக்கு பல்வேறு தகவல்கள் தெரியும். ஆனால் ஏன் எச்சரிக்கையாக இல்லை? இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை நம்மிடம் இருக்கும்போது நமது அரசுகள் பருவநிலை மாற்றத்தையும் கணக்கிட்டு திட்டமிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் அதீத மழை வந்துள்ளது. எதிர்காலத்தில் அடிக்கடி இப்படி மழை வரலாம். முன் எச்சரிக்கையோடு இருக்க இதுவெல்லாம் தடை அல்ல.
மூன்று வகையான ஆக்கிரமிப்புகள்:
நீர்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை சட்டத்தின் ஆக்கிரமிப்புகள், சட்டப்படியான ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என மூன்றாகப் பார்க்கிறேன். அரசே செய்கிற ஆக்கிரமிப்புகள் முதல் வகையில் அடங்கும், அரசு அனுமதியோடு கட்டப்பட்ட தனியார் கட்டிடங்கள் இரண்டாவது வகையிலும், ஏழை மக்களின் குடியேற்றங்கள் மூன்றாவது வகையிலும் அடங்கும்.
ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஏழைகள் – எப்படி உருவாகிறார்கள்? என்று பார்த்தால், கிராமப்புற விவசாய நெருக்கடி காரணமாக – இடம்பெயர்ந்து நகரத்தை தேடிவரும் மக்கள்தான் இதுபோன்ற குடியேற்றங்களில் தங்குகின்றனர். ஒரு தனிநபர் வசிப்பிடம் (per-capita living space) 5 முதல் 10 சதுர அடி வரைதான் இத்தகைய ஆக்கிரமிப்புகளில் உள்ளன. அரசு, ஆக்கிரமிப்பை அகற்றுவதென்றாலே இவர்கள் மீதுதான் கைவைக்கிறது. மிக மோசமான வகையில் இடம்பெயர்க்கின்றனர். ஆனால் இந்த மக்கள்தான் நகரம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கின்றனர். பொருளாதார இயக்கத்திற்கான உழைப்பைக் கொடுக்கின்றனர். அவர்களின் உழைப்பு அனைத்தையும் பெற்றுக்கொண்டு, மிச்சம் மீதியிருப்பதையே அவர்களுக்கு கொடுக்கிறோம். நெருக்கடியின் அதிர்வுகளை ஏற்கும் அதிர்வுதாங்கிகளாகவே அவர்கள் செயல்படுகின்றனர். அரசியல் பொருளாதாரப் பார்வையில் நாம் அப்படித்தான் விளக்க முடியும்.
ஆற்றின் போக்கு:
அடையாறு ஆற்றின் போக்கு பற்றி ஆய்வு செய்யும்போது மற்றொரு தகவல் தெரியவந்தது. இயற்கையான புவியீர்ப்புச் சரிவிலிருந்து அடையாறு மாறியுள்ளது. மணி மங்கலத்திலிருந்து விமான நிலையம் புவியீர்ப்பின் போக்கில் செல்லும் ஆற்றுச் சரிவு விமான நிலையத்தின் அருகில் 5 முதல் ஆறு மீட்டர் உயர்கிறது. (அட்டவணை) பல இடங்களில் இந்தச் சரிவு மாற்றப்பட்டிருப்பது, வெள்ள நீர் போக்கை மாற்றிடும். ஆக்கிரமிப்பை அகற்றுவது மட்டுமல்லாமல், புவீயீர்ப்புச் சரிவையும் சரிப்படுத்த வேண்டும்.
மனிதப் பிழையே:
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியானது. ஆனால், டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் அடையாற்றில் சென்ற நீரின் அளவு 1 லட்சத்து 6 ஆயிரம் கன அடியாகும். இஸ்ரோவுக்கு உட்பட்ட NRSC அமைப்பின் அறிக்கை இந்தக் கணக்கீட்டை வெளியிட்டுள்ளது. அப்போது கூவத்தில் 98 ஆயிரம் கன அடி நீர் சென்றுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டது 30 ஆயிரம் கன அடிதான் ஆனால் மற்ற பல ஏரிகளும் தூர்வாரப்படாமல், நிரம்பி வழிந்தன. அந்த நீரும் அடையாறு ஆற்றில் ஓடியது. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் எப்படி செயல்படவேண்டுமென அரசு பார்க்கவில்லை. compendium of rules பின்பற்றியதாக சொல்வது சரியான விளக்கமாகாது. இனியாவது, நெருக்கடி சூழலில் என்ன செய்வதென்ற வழிமுறைகளை உருவாக்கி பின்பற்ற வேண்டும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெருமழையினால் ஏற்பட்ட அழிவைத் தவிர்ப்பதற்கான பல சாத்தியக் கூறுகள் இருந்தும் தவறவிட்டுவிட்டது. 2004 – 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளமும், சுனாமியும் ஏற்படுத்திய பெரும் பாதிப்பைச் சந்தித்தும் கூட எந்தவிதமான முன்னேற்பாடுகளும், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளும் செய்யத் தவறிவிட்டோம். ஒரு வெட்கக்கேடான விசயம் என்னவென்றால் அந்த ஆண்டில் தமிழக அரசு வறட்சி நிவாரணமும் கோரியது, வெள்ள நிவாரணமும் கோரியது. தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் வெள்ள பாதிப்புகளினால் நாம் கற்றுக் கொண்ட பாடம் ஏதுமில்லை. அரசு மற்றும் அரசு யந்திரத்தின் கவனக் குறைவால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதோடு 600க்கும் அதிகமான உயிரிழப்புகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
நீர் நிலைகளை மீட்போம்:
கடந்த 50 வருடங்களாக நீர் நிலைகள் சீரமைப்பிற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய மாநில அரசுகள் செலவு செய்துள்ளன. ஆனால் ஆறுகளின் தரமோ, நாளுக்கு நாள் மிக மோசமாக மாசடைந்துவருகின்றன. மேலும் ஆறுகள், ஏரி குளங்கள் போன்றவை மிக அதிகமான ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளன. நாம் நினைத்தபடி இங்கு உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆறுகளையோ, ஏரிகளையோ உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவு செய்தாலும் இன்று சென்னையின் மாசடைந்து பழுதாகியுள்ள கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு, பாலாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களை உருவாக்கிட முடியாது. ஆறுகளும், ஏரிகளும் உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும். நீர்வழித் தடங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு சிறுநீரகம் போல, சென்னைப் பெருநகரத்திற்கு வெள்ள நீர் வடிகாலும், நீர்வழித் தடங்களும் ஒரு முக்கியமான உயிர்நாடியாகும்.
நமக்குப் பல சட்டங்கள் இருந்தும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் இருந்தும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளும், வெள்ள வடிகால் நிலங்களும் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்படவில்லை. ஆறுகளைச் சுத்தப்படுத்துவதற்காக செலவு செய்ததாகக் காட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்தியாவின் ஜிடிபி கணக்கில் சேர்ந்ததே ஒழிய, ஆறுகளின் நிலைமை மாறவில்லை. இப்படிப்பட்ட பெருநகரின் அடிப்படைகளை மீட்டெடுப்பதற்கு பதிலாக நமது மத்திய அரசு ‘ஸ்மார்ட் சிட்டி’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. இதனை வேறுவிதமாக ஆங்கிலத்தில் கூறுவதென்றால் “Keeping the head clean but bottom dirty”
என்ன செய்யலாம்?
உடனடியாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஊடே செல்லும் ஆறுகளான கொசஸ்தலை, கூவம், அடையாறு மற்றும் பாலாறு ஆகியவற்றை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். பக்கிங்காம் கால்வாயை தமிழகத்தின் மிக முக்கியமான நீர்வழித்தடமாக அறிவித்து மீட்டெடுக்க வேண்டும். மேலும், இந்த ஆறுகளின் வெள்ளச் சமவெளி நிலங்களையும் (flood plain) நல்ல முறையில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 3600 ஏரிகளையும் உடனடியாக மீட்டெடுத்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். ஏரிகள் மட்டுமின்றி ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், ஏரிகளின் வரத்துக் கால்வாய் மற்றும் உபரிக் கால்வாய்களையும் நீர்ப்பரப்புப் பகுதிகளையும் நல்ல முறையில் செப்பனிட்டு பராமரிக்க வேண்டும். தற்சமயம் இவை அனைத்தும் மிக மோசமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. இவை அனைத்தையும் மீட்டால் சுமார் 50 முதல் 60 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கலாம். அதே சமயம் வெள்ளத்தால் ஏற்படுகிற பெரும் இழப்புகளையும் தடுக்க முடியும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒருங்கிணைந்த பெரிய நீர்த்தேக்கியாக அறிவிக்க வேண்டும் (integrated mega watershed). ஏனெனில் இந்த மூன்று மாவட்டங்களில் மழையளவு நீர்ப்பரப்பு, நீர்ப்பிடிப்பு, வடிகால் இவை அனைத்தும் ஒருங்கிணைந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பட்டியலிட வேண்டும். மக்கள்தொகை அடர்த்தியை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக வட மற்றும் தென் சென்னைப் பகுதிகளிடையே ஒரு சமத்துவமற்ற நிலைமை நிலவுவதை மாற்றியமைக்க வேண்டும். இன்றைய உலகமயமான போட்டிகள் நிறைந்த உலகில் அரசுக்கும் தனியார் சந்தைக்கும் இடையே நிலவும் எழுதப்படாத பாசமிகு பந்தமே – சென்னை போன்ற பெருநகரத்தின் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள், கவனம் செலுத்தப்படவேண்டிய பகுதிகள் எவை என்பதை தீர்மானிக்கச் செய்கின்றது. குடிசைவாழ் மக்கள் நகரத்தின் எழிலைக் கெடுப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். எனவேதான் சுகாதாரமற்ற நிலையில், ஆற்றங்கரைகளில் குடியிருக்கும் குடிசைவாழ் மக்களை வெளியேற்றி 20 – 30 கி.மீ தூரத்தில் குடியமர்த்தும் இந்தச் செயல் குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கிறது. அதற்கு மாறாக, குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி, வாழ்நிலை மாறாமல், நகரத்திற்கு உள்ளேயே அவர்களை மறுகுடியமர்த்த வேண்டும். ஒட்டுமொத்தமாகக் கூறினால் நமக்குத் தேவை சாதாரண வளர்ச்சி அல்ல – நீடித்த, பாகுபாடற்ற, சூழலியல் பாதுகாக்கப்பட்ட வளர்ச்சி. எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடிய தரமான கட்டமைப்பு வசதிகள் போன்றவைகளாகும். இவை அனைத்தையும் இன்றைய ஜனநாயகப் பங்காற்றிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், அரசு இயந்திரங்களும், தொண்டு நிறுவனங்களும், வெகுஜன இயக்கங்களும் உணர்ந்து தங்களது சீரிய பணிகளை ஆற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.
Leave a Reply