ஜாரிசத்தின் வீழ்சியென்பது நாட்டின் வரலாற்றில் ஒரு காலகட்டத்திலிருந்து மற்றொரு காலகட்டத்திற்கு செல்லுகிற நிகழ்வாக அமைந்துள்ளது. புதிய சூழலில் கட்சிக்கு புதிய திசைவழியும், புதிய திட்டமும் வேறுபட்ட நடைமுறை உத்திகளும், வேறுபட்ட முழக்கங்களும் தேவைப்பட்டன. இப்பிரச்சனைகள் அனைத்திற்கும் லெனின் உரிய தீர்வுகளை அளித்தார்.
– சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு
- ஆறுமுக நயினார்
புரட்சிகளின் வரலாறும், புரட்சிக்கான கட்டத்தின்போதே அரசியல், தத்துவார்த்த – நடைமுறை ஞானம் பெற்றிருந்த தலைவர்களின் அளப்பரிய பங்களிப்புகளும் மீண்டும் மீண்டும் படித்துத் தெளிவு பெற வேண்டிய விஷயங்களாக உள்ளன. இது பாரிஸ் கம்யூனில் துவங்கி அனைத்து வெற்றி பெற்ற, தோல்வியுற்ற புரட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும். ‘அக்டோபர் புரட்சி’ காலத்தில் போல்ஷ்விக் கட்சியும், தோழர் லெனின் அவர்களும் புரட்சி இயக்கத்தின் ஓட்டத்தினூடேயே பல அனுபவங்களைப் பெற்றார்கள்; வரலாற்றிலிருந்தும் கற்றுக் கொண்டார்கள். இதுவே அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கு அடிகோலியது.
பல கட்டங்களைக் கடந்து வெற்றி பெற்ற இந்தப் புரட்சியின்போது, அவ்வப்போது – புதிய தந்திரங்களை உருவாக்க வேண்டியிருந்தது. கருத்து வேறுபாடுகளுக்கு நடுவிலும், புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு, சில தத்துவார்த்த-நடைமுறைப் பயிற்சியை தோழர்களுக்கு வழங்குகிற பணியை லெனின் மேற்கொண்டார். 1917 பிப்ரவரி மாதம் ஜார் மன்னனைத் தூக்கியெறிந்த புரட்சிக்கும் 1917 அக்டோபர் புரட்சிக்கும் நடுவில், ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்திருந்தார். பாரிஸ் கம்யூன் அனுபவத்திலிருந்தும், தோற்றுப்போன 1905 ரஷ்யப்புரட்சியின் படிப்பினைகளிலிருந்தும் அவர் கற்றக் கொண்ட விஷயத்தில் பிரதானமானது – இந்த முதலாளித்துவ ஆட்சி அமைப்பு முறை அதன் அரசு கருவிகள் சோசலிசப் புரட்சியை நடத்தவும், சோசலிச நிர்மாணத்துக்கும் உதவி செய்யாது – என்பதுதான். எனவே புரட்சி காலத்தில் ஜார் மன்னனைத் தோற்கடித்து விரட்டி அடித்தால் மட்டும் போதாது. அவர்களது ‘அரசுக்கட்டமைப்பு’ நொறுக்கப்பட வேண்டும் என அவர் கருதினார்.
எனவே, லெனின் நாடு கடந்த தலைமறைவு வாழ்விலிருந்து பிப்ரவரி புரட்சி வென்றவுடன், நாடு திரும்பினார். ஏப்ரல் 3, 1917 ல் அவர் பெட்ரோகிராட் நகருக்கு வந்தவுடன் மிக உணர்ச்சிகரமான – உற்சாகமான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய ராணுவ வாகனத்தின் மீது ஏறி நின்று கொண்டு லெனின் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ‘தொலைதூரத்துக் கடிதங்கள்’ என்ற நூலில், அவர் எண்ணங்களைக் கடிதங்களாக தலைமறைவிலிருந்து அனுப்பியவை தொகுக்கப்பட்டுள்ளது.
அவர் ஆற்றிய உரையும் அவரது கடிதத் தொகுப்புகளும் அவரது சிந்தனை எந்த அளவுக்குத் தெளிவாக இருந்தது என்பதை அடுத்த நாள் எழுதிய அவரது கட்டுரை விளக்குகிறது.
“தற்போதைய புரட்சியும், பாட்டாளி வர்க்க புரட்சியும் ஆகிய இரண்டிலும் நமது கடமைகள்” என்ற தலைப்பில் “பிராவ்தா” இதழில் ஏப்ரல் 4-ம் தேதி 1917 இந்தக்கட்டுரை வெளிவந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க “ஏப்ரல் கருத்தாக்கம்” என இது அழைக்கப்படுகிறது.
இந்த முன்மொழிவு கடுமையான கருத்து வேறுபாடுகள், விமர்சனங்களுக்கு ஆட்பட்டதாக இருந்தது. ஆனால் லெனின் அவர்களது சிந்தனைத்தெளிவும், செயல்படுகிற ஆற்றலும், வேகமும், அணிகளைக் கிளர்ந்தெழுந்து இதன் பின் திரட்டக்கூடிய நுட்பமும், ரஷ்ய வரலாற்றை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது.
புரட்சி இன்னும் முடிந்து விடவில்லை; அதன் முதல் கட்டம்தான் முடிவடைந்துள்ளது. இந்த இடைக்கால மைய அரசு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நலன்களைப் பாதுகாக்கவே பயன்படும். இதைச் செயலழிக்கச் செய்து – சோசலிசப் புரட்சியை நோக்கி நாம் முன்னேற வேண்டும். முடிக்கப்படவேண்டிய ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுகிற காலம் இது. தொழிலாளி வர்ககத்தின் கையில் இன்னும் முழுமையாக ஆட்சியதிகாரம் வந்து விடவில்லை. இது இரட்டைத்தன்மை கொண்ட அரசு அதிகார அமைப்பாக உள்ளது. இதில் மைய இடைக்கால அரசு எந்திரம் புரட்சிக்குத் தடையானது என்று கூறி, “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்கே” என்ற முழக்கத்தை லெனின் முன்மொழிந்தார். ஓர் உயர்ந்த ஜனநாயக அமைப்பு முறையே இன்றைய தேவை. சோவியத்துகள் தொழிலாளர், விவசாயி, போல்ஷ்விக் ஆகியோர்களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட அமைப்பு. அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. எனவே, அவற்றை மக்களுக்குச் சாதகமான, சக்தி மிக்கதாக மாற்றுவதே இந்தக் கோஷத்தின் நோக்கம். மைய அரசு சிறுபான்மை ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரக் கருவியாக இருப்பதை முடக்கி, பெரும்பான்மை தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கருவியாக சோவியத்துக்கள் செயல்படும் என லெனின் விளக்கினார்.
எனவே, பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை உள்ள இடத்தில் சோசலிசப் புரட்சிக்கு முன்னேறும் போது, ஜனநாயகப் புரட்சியின் கட்டத்தை நிறைவு செய்து, அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக மாற்றி அமைப்பது என்பதுதான் ஏப்ரல் சித்தாந்தத்தின் மையக்கருவாக இருந்தது. சோசலிசப் புரட்சி நடந்து – சோசலிச நிர்மாணக் கட்டத்தில் கூட வெகுகாலத்துக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் “புரட்சியின் நோக்கங்களை” நிறைவேற்றுவதற்கு தேவையான அதிகார அமைப்பாக நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. வர்க்கப் பகைமைகள் நீடிக்கும் வரை பெரும்பான்மையின் ஆட்சியதிகாரமாகப் புரியப்படும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கும். வர்க்கப்பகைமைகள் இல்லாத நிலை வரும்போது அடக்குமுறை எந்திரங்களான அரசும், சர்வாதிகாரங்களும் தானாகவே இலைகள் உதிர்வதுபோல , உதிர்ந்து போகும் என்பதையே மார்க்சிய சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.
ரஷ்ய ஜனநாயகப் புரட்சியும், ஏப்ரல் சித்தாந்தமும், அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சியும் – இந்தியாவில் புரட்சியை நடத்த விரும்புகிற நமக்கு ஏராளமான, செழிப்பான பாடங்களை அள்ளி வழங்குகின்றன.
இந்திய ஜனநாயகப் புரட்சியின் கட்டத்தில் உள்ள நாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உயரிய மாண்புகளை சமூகம் முழுவதும் மதிக்கத்தக்கதாக ஆக்குகிற அதேவேளையில், பின்புலத்தில் வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்புகளையும் நடத்த வேண்டியுள்ளது. அரசு, பாராளுமன்றம், சட்டமன்றம், நீதித்துறை, இராணுவம், போலீஸ், அரசுக்கட்டமைப்பு, சமூகக் கலாச்சார மதிப்பீடுகள் ஆகியவற்றில் தலையிட்டு, இணைந்து – அவற்றை முன்னேற்றப் போராடுவது என்பதும் ஜனநாயகக் கட்டத்தின் அவசியமான பகுதியாகும். நீதித்துறையிலும், சட்டங்களிலும், அரசின் கொள்கைகளிலும் சீரிய மாற்றங்களுக்கான போராட்டத்தையும் முனைப்புடன் நடத்த வேண்டும்.
எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்ற அறைகூவலை விடும் போது – லெனின் கூறுகிறார் :
“சோவியத்துகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், ‘தொழிலாளி – விவசாயி‘ வர்க்கங்களிலிருந்து வரும் போர்லஷ்விக்குகள் என்பது மட்டுமல்ல; தவறு செய்தால் திரும்பியழைக்கக் கூடிய மக்கள் அதிகாரம் கொண்ட உயர்ந்தபட்ச ஜனநாயக அமைப்புகளாகவும் அவை விளங்குகின்றன”. இந்தக் குறைந்தபட்ச தேர்தல் சீர்திருத்தத்தை அமல்படுத்தினாலே இந்திய ஜனநாயகத்தில் நாம் பல குதிரை பேரங்களைத் தடுக்க முடியும். அனைவருக்கும் வாக்குரிமை, விகிதாச்சார பிரதிநிதித்துவம் உட்பட இந்தியத் தேர்தல் முறையில் ஏராளமான சீர்திருத்தங்களை சிபிஐ(எம்) முன் மொழிந்துள்ளது. கலை, கலாச்சாரம், கல்வி, சமூகநீதி, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு உட்பட பல துறைகளில் ஜனநாயக விரோத உள்ளடக்கங்களைக் கொண்ட முடிவுகளை அரசு எடுக்கின்றது. இவை அனைத்துக்கும் எதிராக பெரும்பகுதி மக்களைத் திரட்டாமல் ஜனநாயகப் புரட்சியை நாம் வெல்ல முடியாது.
எனவே, காலச்சூழலுக்கேற்ப கோரிக்கைகள், கோஷங்கள், நடைமுறை உத்திகளை உருவாக்குவதும், அதன் அடிப்படையில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதும் ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாக உள்ளது. ஜாதிய, மதவாத, ஊழல் மலிந்த கட்சிகள் தேர்தலில் தீவிரமாகப் போட்டியிடும் போது, கம்யூனிஸ்டுகள் ஆகிய நாம் ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூக நீதிக்காக நிற்கிற அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைப்பது இன்றைய ஜனநாயகப் புரட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற அத்தியாவசிய தேவையாக உள்ளது.