கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலில் ஒரு பெரும் மாற்றம் துவங்கியது. இந்தியாவின் விடுதலைக்குப்பின் மூன்று பொது தேர்தல்களில் (1952, 1957, 1962) மக்களவையிலும், 1957 கேரளா நீங்கலாக அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால், 1967 தேர்தல்களில் மக்களவையில் குறைந்த அளவு பெரும்பான்மை பெற்று அக்கட்சி ஆட்சி அமைத்த போதிலும், எட்டு மாநில சட்டப்பேரவைகளில் அது பெரும்பான்மை பெறமுடியவில்லை. அந்த எட்டில் ஒரு மாநிலம் தமிழ் நாடு. இங்கு காங்கிரசுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின், கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக வும் 1972இல் தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு உருவான அண்ணா தி.மு.க வும் மாறி மாறி தமிழ் நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்து வந்துள்ளன. இந்த ஐம்பது ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சிகள் அமலாக்கி வந்த அரசியல் பொருளாதாரத்தின் தன்மை பற்றி சுருக்கமாக பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
1950 – 1967 காலம்
ஐந்தாண்டு திட்டங்களும் பொதுத்துறை முதலீடுகளும், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி என்ற அணுகுமுறையும், ஓரளவிற்கு அமலாக்கப்பட்ட நிலச்சீர்த்திருத்தங்களும் அகில இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்திய காலம் 1950 –1967 காலம். தமிழகத்திலும் இக்காலத்தில் பல பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் அனந்தன் நம்பியார் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத கனமின் நிறுவனம் ஆகியவற்றை தமிழகத்தில் அமைப்பதில் முக்கிய பங்காற்றினார். இக்காலத்தில் பல பல்நோக்கு பாசனத்திட்டங்களும், அவற்றின் மூலம் நீர்மின் உற்பத்தியும் நிகழ்ந்தது. ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு, நில உச்சவரம்பு ஆகியவை தொடர்பான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் எல்லாம் உழைப்பாளி நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கமும் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியும் பல இயக்கங்களை நடத்தின. இக்காலத்தில் பொதுவாக முற்போக்கு பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டே, தமிழ் மொழி, இனம், பண்பாடு போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தி.மு.க வளர்ந்தது. நாடு முழுவதும் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கடும் கோபம் நிலவியது. மொழி, தேசிய இனம், மாநில உரிமைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் காங்கிரசின் ஜனநாயக விரோத போக்கும் காங்கிரசுக்கு எதிராக மக்களை திருப்பியது. இந்தச் சூழலில் காங்கிரசுக்கு எதிரான வலுவான தேர்தல் வியூகம் தி. மு. க. தலைமையில் அமைந்தது. சட்டப்பேரவையில் தி.மு.க பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அது அச்சமயம் சில மக்கள் நல அறிவிப்புகளையும் செய்தது. ஒரு படி அரிசி ஒரு ரூபாய் விலையில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் வழங்குவதாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்பை அமலாக்க எந்த முயற்சியும் எடுக்காத பின்னணியில், அக்கட்சியை விமர்சித்துவந்த தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்ற பிறகு நிலச்சீர்திருத்தம் தொடர்பாக சட்டங்களையும் போட்டது. பொதுத்துறையை ஆதரிப்பதாக கூறியது. காங்கிரஸ் கொள்கைகளை எதிர்ப்பதாகவும் மாநில சுயாட்சிக்குப் பாடுபடுவதாகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டது.
அடுத்த ஐம்பது ஆண்டுகளில்
காங்கிரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த தி.மு.க. 1971ஆம் ஆண்டே மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசுடன் அணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர உதவியது. மாநிலத்தில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்தியில் காங்கிரஸ் அமலாக்கிய கொள்கைகளை மாநிலத்தில் தி.மு.க. பின்பற்றியது. நெருக்கடி நிலை (1975-1977) காலத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த அண்ணா திமுகவும் காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியது. 1991இல் இருந்து நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டுவரும் சம காலத்திலும் தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே இக்கொள்கைகளைத்தான் கமா, முற்றுப்புள்ளி என எதையும் மாற்றாமல் அமலாக்கி வருகின்றன. இந்த பின்புலத்தில் தமிழகத்தில் திமுக – அதிமுக ஆட்சிகாலங்களில் பொருளாதார வளர்ச்சியின் தன்மைகளும், கல்வி, மக்கள் உடல்நலம் போன்ற மனித வளத்துறைகளில் வளர்ச்சியும் எவ்வாறு இருந்தன என்பதைப் பார்ப்போம்.
நிலம்
2011 மக்கள் தொகை கணக்கு தமிழகத்தில் நகரமயமானது பிற மாநிலங்களை விட வேகமாக நிகழ்ந்தாலும், பாதிக்கும் சற்று அதிகமான மக்கள் தொகை கிராமங்களில்தான் உள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும் அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் என்ன சாதித்தனர்? பொது உடமை இயக்கங்களின் இடைவிடாத போராட்டங்களால் ஜமீன் ஒழிப்பும், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பும் ஓரளவு சாத்தியமானது. ஆனால் உச்ச வரம்பு என்பது, காங்கிரசை திமுக கேலி செய்தது போலவே, திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் “மிச்ச வரம்பாகவே” தொடர்கிறது. 1984 பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும் அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. அதன்பின் நில உச்சவரம்பு சட்டங்களின் அமலாக்கம் மேலும் பலவீனமாகத்தான் இருந்து வந்துள்ளது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்ரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62 இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82 இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர் நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு 1,90, 723 ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது. இதன் பொருள் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே நில உச்சவரம்பு சட்டத்தை அமலாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான். இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர் திருத்தங்கள் (Operation Barga) மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம் ஏழைகள் இந்த நடவடிக்கைகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமே பயனடைந்துள்ளனர்.
பொதுவாக, நில உடமை ஒரு சிலரிடம் குவிந்து இருந்தால், பலர் அந்த உடமையாளர்களிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்வது வழக்கம். அந்த வகையில், சாகுபடிநிலங்களின் விநியோகம் உடமை விநியோகம் அளவிற்கு குவிந்திருக்காது. எனினும் தமிழகத்தில் இந்த வகை விநியோகமும் குவிந்ததாகவே உள்ளது. 2010-11 இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா போல் தமிழகத்தில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.
வளர்ச்சி
அகில இந்திய அளவில் தேச உற்பத்தி மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் 1950 முதல் 1966 வரையிலான காலத்தில் அதிகரித்துவந்தது. அக்காலகட்டத்தில் தமிழக மாநில உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இதை விட குறைவாக இருந்தது. 1967 இல் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. 1970-71 முதல் 1982-83 வரையிலான காலத்திலும் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. 1980-81 முதல் 1990-91 காலத்தில் இந்திய வளர்ச்சி விகிதம் 5.47 % இருந்த பொழுது தமிழக வளர்ச்சி விகிதம் அதைவிட சற்றுக் குறைவாக 5.38 % ஆக இருந்தது. 1990-91 முதல் 1998-99 வரையிலான காலத்தில் இது 6.02 % ஐ எட்டியது. அப்பொழுதும் இந்திய வளர்ச்சி விகிதம் 6.50% என்ற அளவில் சற்று அதிகமாக இருந்தது. ஆனால் தமிழக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980களில் துவங்கி கணிசமாக குறைந்தது. இதனால் தமிழக தனிநபர் உற்பத்தி மதிப்பு இவ்விரு காலகட்டங்களில் ஆண்டுக்கு முறையே 3.87 % மற்றும் 4.78 % என அதிகரித்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) தமிழக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டு சராசரி கணக்கில் கிட்டத்தட்ட 9.7% ஆனது. பதினொன்றாவது திட்ட காலத்தில் (2007-12) இது 7.7 % ஆக குறைந்தது. பொதுவாக, தி மு க., அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் தேச உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகத்தான் இருந்துள்ளது. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வேகமாகக் குறைந்ததால் தனிநபர் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது.
துறை வாரியாக பார்த்தால், 1967 க்கு முன்பும் அதன் பின்பும் முதல் நிலை துறை வளர்ச்சி (இதில் பயிர் சாகுபடி,கால்நடை பராமரிப்பு, மீன்பிடி தொழில் மற்றும் வனம் ஆகியவை அடங்கும்) என்பது மந்தமாகவே உள்ளது. சராசரியாக 1 இல் இருந்து 1.5% ஐ தாண்டவில்லை. தொழில் வளர்ச்சியை பொறுத்தவரையில், 1960 முதல் 1970 வரையிலான பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் மாநில நிகர உற்பத்தி மதிப்பில் (Net State Domestic Product or NSDP) ஆலைத்துறையின் பங்கு மிக வேகமாக ஆண்டுக்கு 7.41 % என்ற அளவில் அதிகரித்தது. ஆனால், 1970-71 இல் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வேகம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது. 1980 களில் தமிழக தொழில் வளர்ச்சி மீட்சி அடைந்து ஆண்டுக்கு 4.6 % என்ற வேகத்தில் அதிகரித்தது. ஆனால் தாராளமயக் கொள்கைகள்அமலாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் (1991–2001) தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும் ஆலை உற்பத்தி வளர்ச்சியும் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட குறைவாக இருந்தன. குறிப்பாக சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் சிறு-குறு தொழில்களுக்கான (ஏற்கெனவே இருந்த) சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும், வங்கிக் கடன் வசதி குறுக்கப்பட்டதும் சிறு-குறு தொழில்களை பாதித்தது. இதனால் வேலை வாய்ப்புகளும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழக ஆலை உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தில் 1990 களில் ஏற்பட்ட சரிவு 2003 வரை தொடர்ந்தது. பின்னர் ஓரளவு மீட்சி ஏற்பட்டது. 2004-05 தொழில் உற்பத்தி குறியீடு 100 என்று வைத்துக்கொண்டால், 2013-14 இல் இது 161.6 ஆக உயர்ந்தது. இதுவும் பிரமாதமான வளர்ச்சி விகிதம் என்று சொல்ல முடியாது. அண்மை மூன்று ஆண்டுகளில் (2011-14) முறையே 4%, 1% மற்றும் 4.3% என்ற அளவில் ஆலை உற்பத்தி வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்துள்ளது.
இதன் பொருள் என்னவெனில் அகில இந்திய நிலைமை போலவே, தமிழகத்திலும் பொருள் உற்பத்திசார் துறைகளின் வளர்ச்சி குறைவாகவும் மூன்றாம் நிலை துறை வளர்ச்சியே அதிகமாகவும் இருந்துள்ளது.
இவ்வாறு அரசு புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், 1967 முதல் 1980 வரை தமிழக வளர்ச்சி விகிதம் அகில இந்திய வளர்ச்சி வேகமான 3.5% என்ற அளவை விட சற்று குறைவாக இருந்தது. 1980களில் தாராளமய காலத்தில் –இந்தியாவிலும் தமிழகத்திலும் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது. அதன்பின், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் – தாராளமய காலத்தில் – தமிழக பெருளாதார வளர்ச்சி, அகில இந்திய அளவை விட சற்று குறைவாக இருந்தாலும், பொதுவாக வேகமாகவே இருந்துள்ளது எனலாம். ஆனால் இதை வைத்து தமிழக வளர்ச்சி பாராட்டுக்குரியது என்ற முடிவுக்கு செல்ல இயலாது. வளர்ச்சியின் துறைவாரி தன்மை, அதன் பலன்கள் யாரை சென்று அடைந்துள்ளன ஆகிய விஷயங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். வேறு வகையில் சொன்னால், தமிழக பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும். இதுவரை நாம் அளித்துள்ள விவரங்களில் இருந்து அகில இந்திய அளவில் பின்பற்றப்பட்ட தாராளமய கொள்கைகள்தான் தமிழகத்திலும் அமலாகியுள்ளன என்பது தெளிவாகிறது.
வேளாண் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை
முதலில் நாம் கவனிக்க வேண்டியது, திராவிட கட்சிகளின் முதல் பதினைந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட மாற்றம் எத்தகையது என்பதாகும். 1961-62 இல் பிரதான உழைப்பாளிகளை (main workers) எடுத்துக்கொண்டால், விவசாயத்தில் இவர்களின் பங்கு 73.6 %. இது 1981-82இல் 78.3% ஆக அதிகரித்தது. அதே சமயம், இந்த உழைப்புப் படையின் கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. சாகுபடியாளர்கள் பங்கு 51.8 % இல் இருந்து 38.4 % ஆகக் குறைந்தது. மறுபுறம், விவசாயத் தொழிலாளர்களின் பங்கு மிக வேகமாக 21.1% இல் இருந்து 39.9% ஆக அதிகரித்தது. அதாவது, கிராமப்புறங்களில் சிறு-குறு விவசாயிகளும் சுயமாக உற்பத்தி செய்து வந்த கைவினைஞர்களும் நிலங்களையும் தொழில் வாய்ப்புகளையும் இழந்து தொழிலாளிகளாக மாறினர். இக்காலத்தில் விவசாயக் கூலி விகிதமும் சரிந்தது. நிலச்சீர்திருத்தம் நடக்காமலேயே, விவசாயத்தில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள் ஆளுமையில் முதலாளித்துவ வளர்ச்சி நிகழ்ந்தது. கீழவெண்மணி கொடுமையில் தி.மு.க எடுத்த நிலைப்பாடு அந்த அரசு யார் பக்கம் நின்றது? என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 1967இல் காங்கிரசை எதிர்த்தவர்கள் அடுத்த நாலாவது ஆண்டில் அவர்களுடன் சேர்ந்ததும் இந்த முதலாளித்துவ வர்க்க சார்பின் வெளிப்பாடுதான். 1980களுக்குப் பின்பும் நில விநியோகம் பெரும் நிலக்குவியலை தகர்க்காத ஒன்றாகவே உள்ள நிலையில், தமிழக வேளாண் வளர்ச்சியின் பயன்கள் பெரும்பாலும் ஒரு சிறிய பகுதியாக உள்ள நிலப்பிரபுக்கள் மற்றும் பெரு முதலாளித்துவ விவசாயிகள் பக்கமே சென்றுள்ளது.
1980களில் பசுமை புரட்சி விரிவாக சென்றதால், இந்தியா முழுவதிலும் நிகழ்ந்தது போலவே தமிழக வேளாண் துறையிலும் மகசூல் மற்றும் உற்பத்தியளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த போக்கு 1990களின் நடுப்பகுதி வரை நீடித்தது. அதன் பின்பு தாராளமய கொள்கைகளின் விளைவாக தமிழகத்திலும் வேளாண்துறையில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. 2000-01 ஆண்டிற்குப் பிறகு தமிழக வேளாண்மையில் பெரும்பாலும் தேக்கமே நிலவுகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நெல் மகசூலில் பெரும் உயர்வு ஏற்படவில்லை. மற்ற பயிர்களின் நிலைமையும் கிட்டத்தட்ட இதேதான். ஒரு சில பகுதிகளில் பெரும் மூலதனம் செலுத்தி நவீன முறைகளை முழுமையாகவும் இடையூறு இன்றியும் பின்பற்றும் முதலாளித்தவ நிலப்பிரபுக்களும் பெரு முதலாளித்துவ விவசாயிகளும் மகசூலில் முன்னேற்றம் கண்டு தங்கள் உபரிகளை பெருக்கி, மேலும் நிலம் உள்ளிட்ட உற்பத்திசார் சொத்துக்களை தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் தமிழக கிராமப்புற உழைப்புப் படையில் விவசாயிகள் 20% என்றும் விவசாயத் தொழிலாளர்கள் 44.5% என்றும் 2011 சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த இருபது சதவீத விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சிறு-குறு விவசாயிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களில் 70%க்கும் மேலானவர்கள் நிலம் அற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை
தொழில் வளர்ச்சியில் பல்வேறு காலங்களில் இருந்த வளர்ச்சி ஏற்றத் தாழ்வுகளை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977 இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திலோ இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது! அண்மையில் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ் நாடு பட்ஜெட் உரையில் இம் முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது! ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு. ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் அக்கறை காட்டவில்லை என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவம்.
மத்திய மாநில உறவுகள்
1967க்கு முன் மாநில சுயாட்சிக்கு உரக்கக் குரல் கொடுத்துவந்த திராவிட கட்சிகள் படிப்படியாக அந்த நிலைபாட்டை கைவிட்டு வந்துள்ளனர். 1971 இல் காங்கிரசுடன் கூட்டு என்பதில் தொடங்கி, இரு தேசிய அளவிலான முதலளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் இவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக மாநில அளவிலான முதலாளிகளின் பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட இக்கட்சிகள் ஜனநாயகத்தன்மையை படிப்படியாக இழந்து தாராளமய கொள்கைகளை கிட்டத்தட்ட முழுமையாக ஏற்பவர்களாக இன்று மாறியுள்ளன. மத்திய அரசு மாநில அரசை கலைப்பதை ஒருகாலத்தில் எதிர்த்த இக்கட்சிகள் பின்னர் எதிராளி மாநில ஆட்சி பொறுப்பில் இருந்தால் அந்த அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று கோருகிற அளவிற்கு சென்றுள்ளனர். பிரிவினை முழக்கத்தை கைவிடுவது என்ற சரியான முடிவை முன்பு எடுத்த இக்கட்சிகள் இப்பொழுது மறுமுனைக்குச்சென்று மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகளை களத்திற்கு வந்து எதிர்ப்பதையும் கைவிட்டு விட்டனர். ஓரிரு அறிக்கைகள் விடுவது என்ற அளவோடு நின்று விடுவதையும் நாம் பார்க்கிறோம்.
கல்வி மற்றும் உடல் நலம்
மத்திய அரசு பின்பற்றும் தாராளமய கொள்கைகளை வரி பிசகாமல் பின்பற்றும் இக்கட்சிகள் அனைத்து பொருளாதார கொள்கைகளையுமே முதலீடுகளை ஈர்ப்பது என்ற கோணத்தில் அணுகுவது வியப்பல்ல. இதன் விளைவுதான் வேலை வாய்ப்புகளைப் பெருக்காத வளர்ச்சியும் சுருங்கி வரும் அரசின் வரி வருமானமும். இதன் தொடர்ச்சியாகத்தான் கல்வி, உடல் நலம் ஆகிய துறைகளில் தனியார்மயத்திற்கு பச்சைக் கொடி காட்டுவதும், மறுபுறம் தேர்தல்களில் வெற்றி என்பதை மனதில் கொண்டு சில வறுமை எதிர்ப்பு திட்டங்கள் மற்றும் சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்வதும் என இரண்டு வகையில் இவ்வரசுகள் செயல்பட முனைகின்றன.
கல்வியிலும் உடல்நலத்திலும் தமிழகத்தின் குறியீடுகள் வேறு பல மாநிலங்களை விட சிறப்பாக உள்ளன என்பது உண்மைதான். இதில் சமூக நீதி கொள்கைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதும் உண்மை. அதே சமயம், தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980களில் துவங்கி வேகமாக குறைந்ததும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதேபோல் நகரமயம் தமிழகத்தில் ஒரு பெருநகரத்தை மட்டும் சுற்றி அமையாமல் போக்குவரத்து துறைகளிலும் இதர கட்டமைப்பு துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களின் பின்னணியில் பரவலாக நிகழ்ந்ததும் இன்னொரு காரணம். பரவலான நகரமயமும் நகர கிராம பொது போக்குவரத்து வசதிகளும் கல்விக்காக சற்று தொலைவு செல்வதை சாத்தியப்படுத்தின. கிராமப்புறங்களில் மற்றும் அண்டை சிறுநகரப்பகுதிகளில் விவசாயமல்லாத துறைகளில் வேலை தேடும் வாய்ப்புகளையும் வலுப்படுத்தின. எனினும், தாராளமய காலகட்டத்தில் கல்வி, ஆரோக்கியம் இரண்டிலும் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஏழை மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களை சார்ந்தவர்கள் உயர் கல்வியில் நுழைவதும் சரியான மருத்துவ சிகிச்சை பெறுவதும் கடினமாகியுள்ளன. தாராளமயத்தின் விளைவாக கல்வித் தளமானது லாபம் ஈட்டுவதற்கான ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. கல்வி ‘தொழில் முனைவோர்’’ கணிசமான நிலங்களை கையகப்படுத்திக்கொண்டு வரைமுறையற்ற வகையில் கட்டணம் வசூலிப்பது, தரக்கட்டுப்பாட்டு ஏற்பாடு எதுவுமின்றி செயல்படுவது, பெற்றோர் மற்றும் மாணவர்களின் கல்வி வேட்கையையும் நிறுவனத்தின் வசதிகள் மற்றும் தரம் பற்றிய தகவல் அவர்களிடம் இல்லை என்பதையும் பயன்படுத்திக் கொள்வது என்பதே இன்றைய கள நிலைமை . இதனால் நிகழ்ந்துள்ள பல சோக சம்பவங்களை தமிழ்நாட்டு மக்கள் அறிவர்.
கல்வித்துறையில் மாநில அரசு மேற்கொள்ளும் செலவுகள் மாநில நிகர உற்பத்தி மதிப்பின் விகிதமாகவும் மாநில அரசின் மொத்த செலவின் விகிதமாகவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது என்பது நடைமுறையில் இல்லை. மாறாக இவ்விகிதங்கள் சரிந்து வருகின்றன. பள்ளிக்கல்வி உட்பட இன்று தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. தரமான பள்ளிக் கல்வியை அனைத்து பள்ளிக்குச் செல்லும் வயதுகளில் உள்ள குழந்தைகளுக்கும் அளிப்பது என்பது அரசின் கொள்கையாக இல்லை. அதற்கான தேவையான ஒதுக்கீட்டை மேற்கொள்ள இரு கட்சி அரசுகளும் தயாராக இல்லை. இதற்கான வளங்களை வரிகள் மூலமும் மத்திய அரசுடன் போராடியும் பெற்று அனைவர்க்கும் தரமான பத்தாண்டு பள்ளிக்கல்வி என்ற இலக்கை நிறைவேற்றும் முனைப்பு இரு கட்சிகளுக்குமே இல்லை. உயர்கல்வியில் விரிவாக்கம் என்பது கிட்டத்தட்ட முழுமையாக தனியார் லாப வேட்டை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் இடத்தில் புதிய நியமனம் செய்யப்படுவதில்லை. அரசு உதவி பெறும் நிறுவனம் என்றால் காலியாக உள்ள பணி இடத்திற்கு புதிய நியமனம் செய்ய பெரும் தொகை நிறுவனத்திடம் முறைசாரா வகைகளில் கேட்கப்படுகிறது என்று ஏராளமான செய்திகள் வருகின்றன. மாநில நிகர உற்பத்தி மதிப்பில் நான்கு அல்லது ஐந்து சதமானம் என்ற அளவிற்குக் கூட, அரசின் மொத்த செலவில் நான்கில் ஒருபங்கு என்ற அளவிற்குக் கூட கல்விக்கு செலவிட திராவிட கட்சிகளின் அரசுகள் முன்வரவில்லை.
உடல் நலத்திற்கான துறையிலும் இதுவே நிலை. கல்வி துறையைப் போலவே, மக்கள் நல்வாழ்வு துறையிலும் ஆரோக்கியத்திற்கான அரசின் தனிநபர் விகிதச் செலவு (per capita public expenditure on health) தொடர்ந்து தமிழகத்தில் சரிந்து வருகிறது. இதுபோக, இத்துறைகளில் இரு திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் ஆலவிருட்சம் போல் வளர்ந்துள்ள லஞ்ச லாவண்யமும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. உடல் நலத்திற்கான கொள்கையில் நோய் தடுப்பு அணுகுமுறைக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் சிகிச்சைசார் அணுகுமுறை மேலோங்கியுள்ளது என்பதும் தாராளமய கொள்கைகளின் ஒரு தாக்கம்தான். அண்மை காலங்களில் அரசு மருத்துவத்துறை வசதிகளை வலுப்படுத்துவது, விரிவாக்கம் செய்வது என்பதற்குப் பதில் காப்பீட்டு அணுகுமுறையை மத்திய அரசு திணிக்கிறது. கழக ஆட்சிகள் இதனை எதிர்ப்பதில்லை.
ஜனநாயகத்தில் ஊனங்கள்
நிலச்சீர்திருத்தம், உள்ளாட்சி ஜனநாயகம் ஆகிய இரு விசயங்களிலும் சாதனை படைத்துள்ள மாநிலங்கள் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா. தமிழகத்தில் ஐம்பதாண்டு காலம் ஆட்சியில் இருந்துவந்துள்ள தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே இவ்விரு விசயங்களில் எந்த ஈடுபாடும் காட்டவில்லை. மாறாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமும் அலுவலர்களும் நிதியும் வழங்கிட ஒரு துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை. நிலச்சீர்த்திருத்தங்களை அமலாக்க குறிப்பிடும்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னொரு முக்கிய ஜனநாயக ஊனம் தொழில் உறவு சட்டங்களை அமலாக்குவதிலும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதிலும், இந்த அரசுகளுக்கு விருப்பம் இல்லை என்பதாகும்.
சுற்று சூழல்
தாராளமய கொள்கைகளை இக்கட்சிகள் முழுமையாக ஏற்று அமலாக்கி வருவதால், சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் அவர்களது அணுகுமுறை பெரு மூலதனத்தை சார்ந்ததாகவே அமைகிறது. தமிழகத்தின் வளமான மணல் கொள்ளை அடிக்கப்படுவது மாபெரும் ஊழல் மட்டுமல்ல; சுற்றுச் சூழலையும் பாதிக்கும் செயல். அதே போல், அனல் மின் நிலையங்கள், ரசாயன ஆலைகள், உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடர்பான சுற்றுச்சூழல் நெறிமுறைகளை அமலாக்குவதில் இக்கட்சிகளின் அக்கறையும் கவனமும் மிகக் குறைவு.
சமூக பிரச்சினைகள்
சுய மரியாதை இயக்கத்தின் பின்னணி தங்களது பாரம்பரியம் என்று இக்கட்சிகள் சொல்லிக் கொண்டாலும், சாதி ஒழிப்பு, சமூக ஒடுக்கு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்ற விஷயங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இக்கட்சிகள் மற்றும் அரசுகளின் செயல்பாடு மிகவும் பலவீனமானதே. இன்று ஆணவக்கொலைகள் தமிழகத்தில் நிகழ்வதும், அவற்றை இக்கட்சிகள் கண்டிக்க முன்வராததும் இதனை பறை சாற்றுகின்றன. நில உடமை உறவுகளுக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும் உள்ள உறவு பற்றிய பார்வை இக்கட்சிகளுக்கு இல்லை என்பதும் சாதி அமைப்பை கருத்துமுதல்வாத அணுகுமுறையில் இருந்து மட்டுமே இவை காணுகின்றன என்பதும் குறிப்பிடப்படவேண்டிய தத்துவ பலவீனங்கள். சமூக நீதி பிரச்சினைகள், பாலின சமத்துவ பிரச்சினைகள் போன்றவற்றை முழுமையான கோணத்தில் பரிசீலித்து எதிர்கொள்வதற்குப் பதில் இவற்றையும் தாராளமய கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்படுவதையும் சில சமூக நல திட்டங்கள் மூலமாக எதிர்கொள்ளும் அணுகுமுறையே இக்கட்சிகளிடம் உள்ளது என்பதை கடந்த ஐம்பது ஆண்டு வரலாறு காட்டுகிறது.
Leave a Reply