மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கேள்வி பதில் – ஏப்ரல் 2016


அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம் ஆகிய நிறுவனங்களின் மாணவர்கள் மீது தாக்குதல் பாஜக, இந்துத்துவா அரசியலின் பாசிச நிகழ்ச்சி நிரலின் ஒன்றா?

நிச்சயமாக ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அறிவுசார் சமூகத்தை, இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன் இணைத்துக் கொண்டு செல்ல பல முயற்சிகளை, பாஜக இந்த இரண்டு ஆண்டுகளில் செய்து வருகிறது. அறிவியல் மாநாடுகளில் அபத்தமாக பேசிய விவரங்களை நாம் அறிவோம். கடந்த 1998 – 2004 கால கட்டத்திலும், இப்போதும் மத்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக தனது அதிகாரத்தை கல்வித் துறையில் நிலை நிறுத்த அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஆராய்ச்சி மையங்களில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்களின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுப்பது. பல்கலைக் கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பு கொண்டவர்களை துணைவேந்தர் உள்ளிட்ட பொறுப்புகளில் நியமனம் செய்வது ஆகியவை உதாரணங்கள் ஆகும். இதை பகிரங்கமாக எதிர்த்து போராடியவர்கள் புணே திரைப்பட கல்லூரி மாணவர்கள். இவர்களுக்கு ஆதரவாக கலைஞர்கள் பலரும் குரல் கொடுத்தனர். தனது முயற்சிக்கு இடையூறாக இருக்கும் ஜனநாயக சக்திகளை அழிக்கும் வேலையிலும் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபடுகின்றனர் என்பதைப் பார்த்தோம்.

அடுத்தது அம்பேத்கார் மாணவர் அமைப்பினரான, ரோகித் வெமுலா உள்ளிட்டோர் மீது, துணை வேந்தரின் நடவடிக்கை, அதற்கு பின்புலமாக இருந்த பண்டாரு தத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோரின் செயல்கள் அப்பட்டமாக வெளி வந்துள்ளன. இந்த கொடுமைக்கு எதிராக போராடிய ஜே என் யூ மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், ஒடுக்குமுறையாக வெளிப்படும்போது, மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு, தேசத் துரோக சாயம் பூசியது. ஆகியவை தன் கை வசம் உள்ள இந்துத்துவா திட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள் என்பதை மறுக்க முடியாது.

பாசிசம் போலியான முழக்கங்களை முன் வைத்து, சிவில் சமூகத்தினை ஏற்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும், என்பதற்கு பல கருத்துக்களை, பல்மிரோ டோக்ளியாட்டி போன்ற அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய வாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று கம்யூனிஸ்ட் அகிலம் கூறியுள்ளது.

தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உணர்வின் வீச்சு மற்றும் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதில் அதனுடைய திறன் ஆகியவற்றை வைத்தே, பாசிசத்திற்கான சாத்தியக் கூறுகள் உருவாகின்றன. இது அன்றைய ஜெர்மனி மற்றும் இத்தாலியில் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான, பூர்ஷ்வா தன்மையிலான தலைமையில் உருவானது, என டோக்ளியாட்டி கூறுகிறார்.

1935ம் ஆண்டு மாஸ்கோவின் லெனின் பள்ளியில், டோக்ளியாட்டி ஆற்றிய தொடர் உரைகளில், கார்ப்பரேட்டிசம் பற்றி கூறுகிறார். கார்ப்பரேட்டிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, குறுகிய தேசிய வெறி கொண்ட சக்திகளின் வர்க்க சர்வாதிகாரத்தை மூடி மறைக்கும், வார்த்தை ஜாலங்களும், வாய்பந்தலும், புதிய முழக்கங்களுமே ஆகும். இப்படி கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டிய தேவை இருப்பதை உணர வேண்டும், என்கிறார்.

இதற்கான உதாரணமாக, ”பாசிச சர்வாதிகாரம் நிலவும் ஜெர்மனி, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளில் ஒரு கார்ப்பரேட்டிவ் அரசு நிறுவப்படுவதற்கான, முயற்சி நடைபெறுகிறது. ஆட்சியைக் கைப்பற்றாத, பாசிச சக்திகள் வளர்ந்து வருகிற நாடுகளின் சித்தாந்த, பிரச்சார அம்சங்களில் ஒன்றாக கார்ப்பரேட்டிவிசம் இருப்பதைக் காணமுடியும்” என டோக்ளியாட்டி கூறியுள்ளார். இது இன்றைய இந்திய ஆட்சி அமைப்பு நிலையில் காண கூடியதாக இருக்கிறது. இந்திய பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதில் அக்கறை காட்டுகிற, அரசு எதிர் கருத்துக்கள், போராட்டங்களுக்கான ஜனநாயகத்தை அழிக்கிறது.

எனவே இதற்கு எதிரான போராட்டத்தை சிவில் சமூகத்துடன், தொழிலாளி வர்க்கமும், அறிவு சார் சமூகமும் இணைந்து போராட வேண்டியுள்ளது. புதிய தேசிய முழக்கங்களின் பெயரில் நடைபெறும் ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த போராட்டம் துவங்கப்பட வேண்டும். பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது சிவில் உரிமைகளை பறிக்கக் கூடியதே. அனைத்துப் பகுதி மக்களின் கண்டனக் குரல்கள், எதிர்ப்பு இயக்கங்கள் அதிகமாக நடந்ததா? குறைவாக நடந்ததா? என்பதை விட கண்டனக் குரல் எழுப்பிய அமைப்புகள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. ஒன்றுபட்ட குரலாக தொழிலாளி வர்க்கம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: