மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தேசம் என்றால் என்ன? தேசியம் என்றால் என்ன?


அன்வர் உசேன்

இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிலையமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ஹைய்யா குமார் உட்பட சில மாணவர்கள் மீது குற்றவியல் சட்டப்பிரிவு 124ஏ அடிப்படையில் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிகழ்வுகள் ஒரு முக்கியமான கோட்பாடு குறித்து பரவலான விவாதத்தை விளைவித்துள்ளன.

  • தேசத்துரோக குற்றச்சாட்டு எப்படி சுமத்தப்படுகிறது?
  • தேசம் என்பதை எப்படி புரிந்து கொள்வது?
  • தேசியம் என்றால் என்ன?

இவையெல்லாம் இன்று பரவலான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன.

தேசத் துரோகக் குற்றம்காலனி ஆதிக்கத்தின் ஆயுதம்

இந்த தேசத்துரோகச் சட்டம் காலனி ஆட்சியில் 19ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட மீரட்/பெஷாவர்/கான்பூர் சதி வழக்குகள் இச்சட்டத்தின் கீழ்தான் நடத்தப்பட்டன. பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டதும் தூக்கிலிடப்பட்டதும் இச்சட்டத்தின் கீழ்தான்! காந்திஜி, திலகர், நேரு போன்ற தலைவர்கள் மீதும் இச்சட்டம் பாய்ந்துள்ளது.

 

ஒரு முறை பிரிட்டஷ் நீதிபதியிடம் காந்திஜி கூறினார்: “மக்களுக்கு எதிராக செயல்படும் பொழுது அரசின் மீது மக்கள் வெறுப்பு கொள்கின்றனர். இது தேசத்துரோகம் எனில் இக்குற்றம் செய்வது ஒரு குடிமகனின் உயர்ந்தபட்ச கடமையாக மாறிவிடுகிறது. அரசின் மீது பற்று என்பது இயற்கையாக உருவாகவேண்டும்.” நேரு 1951ல் கூறினார்: “தேசத்துரோகம் தொடர்பான  இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 124ஏ மிகவும் ஆட்சேபணைக்குரியது. இதனை எவ்வளவு விரைவில் அகற்றுகிறோமோ அவ்வளவு நல்லது.”

1953ம் ஆண்டு வனவாசி மக்கள் தமக்கு தனிமாநிலம் வேண்டும் என கோரியதற்காக பீகார் அரசாங்கத்தால் தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் இன்று அந்த மாநிலம் ஜார்கண்ட் உண்மையாகியுள்ளது. 1860ம் ஆண்டில் பிரிட்டஷ் ஆட்சியாளர்கள் இச்சட்டத்தை இந்தியாவிற்காக இயற்றினர். பிரிட்டனில் 2010ம் ஆண்டு இச்சட்டம் அகற்றப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவில் இச்சட்டம் இன்னும் நீடிக்கிறது.

இச்சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு. எனினும் இச்சட்டத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்த  முக்கிய காரணம் உள்ளது.  தேசத்துரோகம் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவர முடியாது. சில நாட்கள் சிறைவாசம் நிச்சயம். எனவேதான் ஆட்சியாளர்கள் மாற்றுக்கருத்தை நசுக்கிட இச்சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

தாகூரும் தேசியமும்

தேசம் மற்றும் தேசியம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு மாறிகொண்டே வந்துள்ளது. ஒரு காலத்தில் பூகோளப்பரப்பை இணைப்பது என்பது தேசியமாக கருதப்பட்டது. அதற்காக பல போர்கள் நடந்தன. உயிர் இழப்பு ஏற்பட்டது. அதே நாடு பின்னர் பிரிவதுதான் தேசியம் என கருத்து உருவானது. அதற்கும் போராட்டங்களும் உயிர்ப்பலியும் நடந்தன.

தேசம் அல்லது தேசியம் எனும் கருத்தை தவறானது எனக் கூறிய மகத்தான மனிதர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் இரவீந்தரநாத் தாகூர். உன்னதமான இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் தேசிய கீதத்தை நமக்கு அளித்த அதே தாகூர் அவர்கள்தான் தேசம் எனும் கோட்பாட்டிற்கு வலுவான எதிர்கருத்தை கொண்டிருந்தார்.

தேசம் பற்றிய தனது கருத்தை தாகூர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“நான் இந்த தேசம் அல்லது அந்த தேசத்திற்கு எதிரானவன் என்று கூறவில்லை. தேசம் எனும் கோட்பாடிற்கே நான் எதிரான கருத்தை கொண்டுள்ளேன்” மேற்கத்திய நாடுகளில் தேசியம், ஜப்பானில் தேசியம், இந்தியாவில் தேசியம் எனும் தனது புகழ்பெற்ற மூன்று உரைகளில் இதனை விரிவாக முன்வைக்கிறார் தாகூர். மனித வரலாற்றின் இலக்கு எதுவாக இருக்கக்கூடாது என அவர் பட்டியல் இடும்பொழுது “தீவிரமான சுய தம்பட்டம் கொண்ட தேச வழிபாடு மனித வரலாற்றின் இலக்கு அல்ல” என்கிறார். (தாகூரின் கூற்றுகள் அனைத்தும் English Works of Tagore எனும் சுசிர்குமார் தாஸ் அவர்களின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது)

சமூகத்திற்கும் தேசத்திற்கும் என்ன வேறுபாடு என தாகூர் விவாதிக்கிறார். சமூகத்திற்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை. சமூகத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுக்கு இயற்கையான வரையறை இருக்கும். மனிதன் தனது கருத்துக்களை சுயமாக, சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும். ஆனால் உள்நோக்கத்துடன் இயந்திரகதியாக உருவாக்கப்படும் ஒரு அமைப்புதான் தேசம் என்று கூறுகிறார் தாகூர். தேசத்தின் அடித்தளம் என்ன? பேராசை, சந்தேகம், பொறாமை, அதிகார வெறி இவைதான் தேசத்தின் அடித்தளம் என்பது தாகூர் அவர்களின் கருத்து.

 

சங்பரிவாரத்தின் அகராதியில் தாகூர் கூட தேசவிரோதியாக அறிவிக்கப்பட்டிருப்பார். தாகூர் படைப்புகளின் ஆராய்ச்சியாளர் ரண்பீர் சக்கரவர்த்தி நேரு பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசும் போது கூறினார்: “மரணத்திற்கு பிறகு பத்மஸ்ரீ பட்டங்கள் தருவது போல மரணத்திற்கு பிறகு சிறைவாசம் எனும் வாய்ப்பு இருந்தால் இன்றைய அரசு தாகூருக்கு சிறைவாசம் அளித்திருக்கும்”

 

சமூக வேற்றுமைகள் அகற்றப்படாமல் தேச விடுதலைக்கு பொருள் உள்ளதா?  என தாகூர் கேள்வி எழுப்பினார்: சமூக அடிமைத்தனம் எனும் புதை மணலின் மீது இந்திய விடுதலை எனும் அரசியல் அற்புதத்தை இந்தியா நிகழ்த்த முடியாது என தாகூர் கூறியது எவ்வளவு உன்னதமான கருத்து! தாகூர் இதனை சொல்லி 90 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியாவின் நிலை மாறாமல் உள்ளது என்பதுதான் வேதனை! தேசம் பற்றிய தாகூர் அவர்களின் கருத்தை ஒருவர் ஏற்கலாம்; அல்லது நிராகரிக்கலாம். ஆனால் தேசம் எனும் கோட்பாடு நிரந்தரமாக இருந்தது இல்லை. தேசம் எனும் கோட்பாடை நிராகரித்த உன்னதமான மனிதர்களும்  உண்டு. இந்த பட்டியலில் தாகூர் மட்டுமல்ல; பெர்ட்றண்ட் ரஸ்ஸல், ஜீன் பால் சாட்ரே, பார்தா சட்டர்ஜி ஆகியோரும் உண்டு. “இந்த உலகின் குடிமகன் நான்” என்று காரல் மார்க்ஸ் கூறினார். எந்த ஒரு தேசத்தின் குடிமகனாகவும் தன்னை மார்க்ஸ் குறுக்கிக்கொள்ளவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

 

எனினும் இந்திய தேசம் அல்லது தேசியக் கோட்பாடு என்பது  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறது என இந்துத்துவா தேசியம் கூறுகிறது.

சங்பரிவாரத்தின் தேசியம்:

சங்பரிவாரம் “இந்து ராஷ்ட்ராவை” உருவாக்குவதே தனது இலட்சியம் என்கிறது. அதன் தேசம் அல்லது தேசியம் குறித்த கோட்பாடுக்கு முற்றிலும் அடிப்படை தத்துவம் இந்துத்துவா ஆகும். இந்துத்துவாவின் சித்தாந்தத்தை உருவாக்கிய கோல்வார்க்கர் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசத்தின் கோட்பாடு” எனும் நூலில் கூறுகிறார்:

“இந்த தேசத்தில், இந்துஸ்தானில், இந்து மதத்துடன் இந்து இனம், இந்து கலாச்சாரம், இந்து மொழி (சமஸ்கிருதம் மற்றும் கிளை மொழிகள்) ஆகியவை தேசம் எனும் கோட்பாடை பூர்த்தி செய்கின்றன. இந்துஸ்தானில் இந்து தேசம் இருக்கிறது. இந்து தேசம் தவிர வேறு எந்த தேசமும் இங்கு இருக்கக்கூடாது.” (பக்:99)

 

“இந்துஸ்தானில் வாழும் அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரம் மற்றும் மொழியுடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்து மதத்தை உயர்த்திப்பிடிக்கவும் அதற்கு மரியாதை தரவும் அவர்கள் பழகிக்கொள்ள வேண்டும். இந்து இனத்தின் புகழ் பாடுவதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் அன்னியர்களுக்கு இருக்கக்கூடாது. அவர்கள் தமது தனித்தன்மையை இழந்து இந்து தேசத்துடன் இணைய வேண்டும். அப்படி தமது தனித்தன்மையை இழக்க சம்மதிக்காவிட்டால், அவர்கள் இங்கு தங்கியிருக்க இந்து தேசத்திற்கு முழுமையாக அடிபணிந்து இருக்க வேண்டும். தமக்கென எதையும் கோரக்கூடாது. எந்த சலுகையையும் எதிர்பார்க்கக்கூடாது. குடியுரிமையைக் கூட அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது.” (பக்: 104/105)

இதுதான் சங்பரிவாரத்தின் தேசம் அல்லது தேசியம் பற்றிய கோட்பாடு ஆகும். இந்துக்கள் தவிர வேறு எவருக்கும் உரிமை கிடையாது. இசுலாமியர்கள், கிறித்துவர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பழங்குடி இனமக்கள் அனைவரும் இந்து மதத்துடன் இரண்டற இணைய வேண்டும்; அல்லது குடியுரிமை கூட இல்லாத இரண்டாந்தர குடிமக்களாக இருக்க சம்மதிக்க வேண்டும்.

சங்பரிவாரத்தின் தேசியம் மதச்சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்து மதத்திற்குள்ளேயே நால்வர்ணத்தை சங்பரிவாரம் உயர்த்திப்பிடிக்கிறது. தனது சிந்தனைக் கொத்துக்கள் எனும் ஆவணத்தில் கோல்வார்கர் குறிப்பிடுகிறார்:

“வர்ணங்கள் (சாதிகள்) பழைய காலத்திலும் இருந்தன. கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மகத்தான (இந்து) தேசிய வாழ்வில் சாதிகள் இருந்துவருகின்றன. சமூக இணைப்பிற்கு அவை (சாதிகள்) மிகச்சிறந்த பங்கை ஆற்றுகின்றன.”

விடுதலைக்கு பின்னர் நமது அரசியல் சட்டம் பற்றி விவாதம் நடந்துகொண்டிருந்த பொழுது மனுஸ்மிருதிதான் நமது அரசியல் சட்டமாக இயற்ற வேண்டும் என சங்பரிவாரம் வலியுறுத்தியது. இதனை அம்பேத்காரும் நேருவும் ஏனைய அரசியல் வல்லுனர்களும் நிராகரித்தபொழுது அவர்களை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக விமர்சித்தது. இன்றும் மனுஸ்மிருதிதான் சங்பரிவாரத்தின் கோட்பாடாக உள்ளது. ஆகவே சங்பரிவாரத்தின் தேசியம் என்பது வெறும் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; அது உயர்சாதியத்தை முன்நிறுத்துவதும் ஆகும். எனவே அது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கும் எதிரானது ஆகும்.

இந்த தேசியத்தை அமுலாக்கிட மோடி அரசாங்கத்தின் ஆட்சி ஒரு பொன்னான வாய்ப்பு என சங்பரிவாரம் எண்ணுகிறது. தேசம் மற்றும் தேசிய கோட்பாட்டில் தனது கருத்து திணிப்புக்கு எதிராக உள்ளவர்களை தேசவிரோதிகள் என குற்றம் சுமத்துவது சங்பரிவாரத்தின் பழைய உத்தி. எனினும் மோடி ஆட்சியில் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தேசியம் குறித்த மாற்று கருத்துகளை நசுக்கிட முனைந்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலித் மக்களுக்கான இடஒதுக்கீடுக்கு எதிராக குரல் எழுப்புவதும், உயர் கல்வி நிறுவனங்களில் ஏ.பி.வி.பி. மூலம் கலகம் செய்வதும் இதன் ஒரு பகுதியே! இதனை எதிர்ப்பது அம்பேத்காரிஸ்டாக இருந்தாலும் சரி; இடதுசாரிகளாக இருந்தாலும் சரி; அல்லது பெரியாரிஸ்டுகளாக இருந்தலும் சரி! அவர்களது குரலை நசுக்கிட சங்பரிவாரம் முயல்கிறது. அது சாத்தியம் இல்லையெனில் தேசத்துரோகம் குற்றம் சுமத்தி அவர்களை வேட்டையாடிட முனைகிறது.

உண்மையில் சங்பரிவாரம் மட்டுமல்ல; மதத்தையும் தேசியத்தையும் ஒன்றினைக்கும் எந்த மதவாதமும் தனது குடிமக்களில் ஒரு பகுதியினரை இரண்டாம்தர குடிமக்களாகவே அடிமைப்படுத்திட முயல்கின்றனர். தலிபான். அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.

 

மதத்தை உள்ளடக்கிய தேசம் அல்லது தேசியம் குறித்த சங்பரிவாரத்தின் கோட்பாடு மிகவும் பிற்போக்கானது. அது இந்தியாவை ஒரு நவீன நாடாக உருவாக்கிட எவ்விதத்திலும் பயன்படாது. எனவேதான் அனைத்து முற்போக்காளர்களும் அதனை கடுமையாக எதிர்க்கின்றனர். இக்கோட்பாடு முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று! அதனை எதிர்த்து வலுவான இயக்கம் உருவாக்குவது அவசியம் ஆகும்.

பாதிக் கிணற்றை தாண்ட முயன்ற தேசியம்

இதற்கு மாறான இன்னொரு வகை தேசியம் உள்ளது. இந்தியா ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியோடும் எல்லைகளையும் கொண்டுள்ள தேசம் என்பதை அங்கீகரிக்கும் இந்த தேசியம் தேசத்திற்குள் பல வேற்றுமைகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறது இந்த வேற்றுமைகளின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்பதையும் இந்த தேசியம் கூறுகிறது.

எனினும் இந்த வேற்றுமைகள் ஏன் உருவாகின என்பதைப்பற்றி அதிகமாக இந்த வகையிலான தேசியம் கவலைப்படுவது இல்லை. எனவே இந்த வேற்றுமைகள் அகற்றப்படவேண்டும் என்பதும் இதன் முன்னுரிமையாக இருப்பது இல்லை. நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய சமூகத்தில் இந்த வேறுபாடுகள் ஏன் மறையவில்லை? என்பதைப்பற்றி இந்த தேசியம் அதிகமாக அலட்டிக்கொள்வது இல்லை.

இந்த தேசியவாதத்தின் பிரநிதிகள்தான் விடுதலைக்கு பிறகு பல ஆண்டுகள் அரசு அதிகாரத்தில் இருந்தனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை செழுமைப்படுத்திட வாய்ப்புகளும் தேவையும் வலுவாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர்மறைதான் நிகழ்ந்தது. பல்வேறு தேசிய இனங்கள் இந்தியா எனும் கோட்பாடிற்குள் மனப்பூர்வமாக அங்கம் வகிப்பதை இந்த தேசியம் உத்தரவாதப்படுத்த தவறிவிட்டது. இதற்கு சிறந்த சிறந்த உதாரணம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு எல்லை மாநிலங்கள்.

 

அதிகாரம் மையப்படுத்தப்பட்டது என்பது ஒரு பிரச்சனை. மேலும் பல பிரச்சனைகளும் இருந்தன. சமூகத்தின் வேற்றுமைகளை அங்கீகரிக்கும் இந்த தேசியவாதம் பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை மாற்று கோட்பாடுகளை உருவாக்கவில்லை. சமூகத்தையும் பொருளாதாரத்தையும் தம் ஆளுமையின் கீழ் வைத்திருக்கத் துடிக்கும் ஒரு சிறு பகுதியினரின் பிரதிநிதிகளாக அவர்கள் விளங்கினர். அவர்களின் கொள்ளை இலாபத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக உழைக்கும் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பின்னோக்கி பயணித்தது. இதனால் உருவான பிரச்சனைகள் இந்தியா எனும் கோட்பாடிற்கு பலவீனத்தை உருவாக்கியது.

 

சங்பரிவரத்தின் தேசியத்தோடு ஒப்பிடுகையில் இது முன்னேற்றமானது என தோன்றலாம். உண்மையில் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்று சிந்தனை இல்லாததால் இந்த வகையிலான தேசியம் வாழ்வாதாரத்தை இழக்கும் உழைக்கும் மக்களின் ஒரு பகுதியினரை மதவாதத்தை நோக்கி துரத்தும் விரும்பத்தகாத ஆபத்தையும் விளைவித்தது.

இந்தியா எனும் கோட்பாடின் மீது நம்பிக்கை இழக்கும் தேசியம்

இன்னொரு வகையிலான தேசியக் கோட்பாடு ஒரு சிறு பகுதியினரிடம் உள்ளது. இந்த தேசியம் நாடு சந்திக்கின்ற பல பிரச்சனைகளை அங்கீகரிக்கிறது. சமூகத்தில் மட்டுமல்ல; பொருளாதாரத்திலும் மாற்று சிந்தனைகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது. எனினும் இந்தியா எனும் கோட்பாட்டை நிராகரிப்பதிலும் தவறு இல்லை என இது முன்வைக்கிறது. இந்தியா எனும் கோட்பாட்டில் முழுநம்பிக்கை இந்த தேசியவாதத்திற்கு இல்லை.

 

சுயநிர்ணய உரிமை எனும் கோட்பாட்டை இது வலுவாக ஆதரிக்கிறது. ரஷ்யாவிற்கு பொருந்திய அந்தக் கோட்பாடு மாறுபட்ட சூழலில் இந்தியாவிற்கு பொருந்துமா? என்பதை ஆய்வு செய்ய தவறிவிடுகிறது. “தேசிய இனங்களின் சிறைச்சாலைதான் இந்தியா” என கூறுவது பொருத்தமற்ற வாதம் ஆகும். இந்தியாவில் எந்த ஒரு தேசிய இனமும் மற்ற தேசிய இனங்களை தன் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் சூழல் இல்லை. ஒவ்வொரு தேசிய இனத்திலும் பெரு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் உருவாகியுள்ளனர். டாலர் பில்லியனர்கள் இல்லாத பெரிய தேசிய இனமே நாட்டில் இல்லை. அதேசமயம் ஒவ்வொரு தேசிய இனத்திலும் சுரண்டப்படுகின்ற உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

 

நவீன தாராளமயக் கொள்கைகள் உருவாக்கியுள்ள புதிய சூழலை கணக்கில் எடுத்துக்கொள்ள இந்த தேசியம் தவறுகிறது. தன் ஆளுமைக்கு பயன்படும் எனில் முதலாளித்துவம் புதிய மாநிலங்களை உருவாக்கவோ அல்லது புதிய தேசங்களை உருவாக்கவோ தயங்குவது இல்லை. சுயநிர்ணய கோட்பாடு எவருக்கு பயன்படும் என்பது மிக முக்கியம்.

எனினும் இந்த வகை தேசியம் தான் விரும்பாவிட்டாலும் இந்துத்துவா தேசியத்திற்கு தனது அடக்குமுறையை அல்லது கருத்தை சாதாரண மக்களிடம் வலுவாக்கிட உதவி செய்துவிடுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கூட இதுதான் நடந்தது என செய்திகள் கூறுகின்றன. இந்துத்துவ தேசியத்திற்கும் முற்போக்கு தேசியத்திற்கும் இடையே வலுவான கருத்து மற்றும் களப்போராட்டங்கள் உக்கிரத்துடன் நடக்கும் வேளையில் “தேசிய இனங்களின் சிறைச்சாலைதான் இந்தியா” எனும் சுவரொட்டிகள் முளைக்கின்றன. இக்கருத்தை முன்வைக்கும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், இது எவருக்கு ஆயுதமாக பயன்படும் என்பதை புரிந்துகொள்வது கடினமான ஒன்று அல்ல. இந்தியா எனும் கோட்பாடை நிராகரிக்கும் எந்த ஒரு தேசம் அல்லது தேசியக் கருத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே இன்றைய உண்மை.

முற்போக்கு தேசியம்:

முற்போக்கு தேசியம் மேற்கண்ட தேசம் அல்லது தேசியக் கோட்பாடுகளிலுருந்து மாறுபடுகிறது. முற்போக்கான தேசியம் இந்தியா எனும் கோட்பாட்டை நிராகரிக்கவில்லை. மாறாக அதனை வலுப்படுத்திட முயல்கிறது. அதே சமயம் உலகின் எந்த ஒரு தேசியத்தையும் அது இழிவுபடுத்துவது இல்லை. மிகச்சிறந்த உன்னதமான தேசியம் சர்வதேசியம்தான் என்பதை வலுவாக பதிவு செய்யும் அதே நேரத்தில், தான் வாழும் நாட்டின் தேசியத்தை அது குறைத்து மதிப்பிடுவது இல்லை.

 

முற்போக்கு தேசியம் இந்தியாவின் எல்லைகளை மட்டுமே பார்ப்பது இல்லை. இந்திய மக்களுக்குள் எத்தகைய வேற்றுமைகள் உருவாகியுள்ளன என்பதையும், அவற்றினால் உருவாகும் பிரசனைகளை எப்படி தீர்ப்பது என்பதையும் ஆய்வு செய்கிறது. நாட்டின் சமூக தளம் மற்றும் பொருளாதார தளம் இரண்டிலும் ஏன் வேறுபாடுகள் உருவாகின்றன என்பதையும் அவற்றின் தீர்வுகளையும் இந்த தேசியக் கோட்பாடு முன்வைக்கிறது.

 

சமூக தளத்தில் இந்த முற்போக்கு தேசியம் என்ன கூறுகிறது?

இந்தியா என்பது ஒரே தேசிய இனம் கொண்ட நாடு இல்லை என்பதை முன்வைக்கிறது. இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தில்தான் இந்திய தேசியம் உருவானது. எனவே இந்திய தேசியம் பன்முகத்தன்மை கொண்டது.

ஒவ்வொரு தேசிய இனமும் இவ்வாறு இணைந்ததன் மூலமே இந்தியா எனும் மகத்தான நாடு உருவானது.  இந்தியா முழுமைக்கும் மையப்படுத்தப்பட்ட ஒரு தேசிய இனம் என்பது இல்லை.  ஒவ்வொரு தேசிய இனத்தின் தேவைகளை பொருத்தமான முறையில் தீர்ப்பது அவசியம். நாம் இந்தியா எனும் நாட்டின் ஒரு அங்கமாக இருப்பது தேவைதானா? எனும் எண்ணம் எந்த ஒரு தேசிய இனத்திற்கும் எழாதவாறு அரசியல் ஆட்சி முறை இருப்பது அவசியம்.

 

இப்பொழுது அப்படி உள்ளதா? ஆம் என முழுமையாக கூறமுடியாது.

 

பாகிஸ்தானை உதறிவிட்டு இந்தியாவுடன் இணைந்தனர் காஷ்மீர் மக்கள். அவர்களுக்கு இந்திய தேசியம் சில வாக்குறுதிகளை அளித்தது. அவை நியாயமான வாக்குறுதிகள். ஆனால் நாளடைவில் இவை நீர்த்து போயின. இந்திய தேசத்தின் தவறான அணுகுமுறைகள் இன்று காஷ்மீர் மக்களிடையே பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

 

காஷ்மீர் இந்தியாவுடன் உள்ளது. ஆனால் காஷ்மீரிகள் இந்தியாவுடன் உள்ளனரா? ஆம் என நம்பிக்கையுடன் கூறமுடியாது. பிரிவினைவாதமும் மதவாதமும் அங்கு வலுவாக காலூன்றியுள்ளன.  சகோதரர்களாக இருந்த பண்டிட்டுகளும் காஷ்மீர் இசுலாமியர்களும் எதிரிகளாக மாறும் ஆபத்து தோன்றியுள்ளது. இராணுவத்தின் உதவியுடன்தான் காஷ்மீரின் இணைப்பை பாதுகாக்க முடிகிறது எனும் நிலை வேதனை அளிக்கும் ஒன்று!.

 

இதே நிலைதான் மணிப்பூர், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் உள்ளது. இத்தகைய நிலை ஏன் உண்டானது என்பதை முற்போக்கு தேசியம் கவலையுடன் ஆய்வு செய்கிறது. இந்நிலை மாறிட செயல்படுகிறது.

நாடு விடுதலை அடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் ஏன் சாதியம் அகலவில்லை? சமூக ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களிடையே ஏன் தீவிர முரண்பாடுகள் தோன்றுகின்றன? தலித் மக்கள் ஏன் சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் சுரண்டப்படுவது தொடர்கிறது? ரோஹித் வெமுலா போன்ற தலித் இளைஞர்கள் ஏன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்? இன்னும் மனிதக்கழிவுகளை அகற்றும் 15 இலட்சம் பேர் இருப்பது என்பது நாட்டிற்கு இழுக்கு இல்லையா? இக்கேள்விகளை முற்போக்கு தேசியம் எழுப்பி அதற்கு விடைகாண முயல்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் நிலை ஏன் இன்னும் தாழ்ந்து உள்ளது? பாலின சமத்துவம் ஏன் எட்டாக்கனியாக உள்ளது? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஏன் தொடர்கின்றன? கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் உட்பட சமூகத்தில் பெண்களின் இடத்தை உத்தரவாதப்படுத்துவது எப்படி? இக்கேள்விகளையும் முற்போக்கு தேசியம் எழுப்புகிறது.

பொருளாதார அரங்கில் முற்போக்கு தேசியம் பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது. நாட்டின் ஒரு சிறிய பகுதி எல்லையில்லாது செல்வம் சேர்க்கும் அதே வேளையில், மிகப்பெரும்பான்மையோர் வறுமையில் வாடுகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள தள்ளப்படுகின்றனர். ஆலைகளில் தமது கோரிக்கைகளைக் கேட்டால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். சிறைகளில் தள்ளப்படுகின்றனர். முறைசாரா தொழிலாளர்கள் பணிப்பாதுகாப்பு, ஊதியப்பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு இன்றி இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இன்று நாடு பல இந்தியாக்களாக உள்ளது. செல்வச்செழிப்பில் கொழிக்கும் இந்தியா; செத்து மடியும் கிராமங்களைக் கொண்ட இந்தியா; வேலையின்மையில் வாடும் இந்தியா; சாதியக் கொடுமையில் உழலும் இந்தியா; பாலின சமத்துவம் இன்றி தேங்கிக் கிடக்கும் இந்தியா என பல இந்தியாக்கள் உள்ளன. இவற்றிற்கு சரியான தீர்வு இல்லாமல் இந்திய தேசம் அல்லது தேசியம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் எவ்வித பொருளும் இல்லை.

தேசம் என்பது எல்லைகளைக் கொண்ட வெறும் பூகோளப் பரப்பு அல்ல. பெரிய பெரிய கொடிகளை நட்டுவிட்டால் மட்டுமே தேசியம் கரை புரண்டு ஓடாது. அது இரத்தமும் சதையும் கொண்ட மக்களைக் கொண்டது. அந்த மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன. அப்பிரச்சனைகள் கேள்விகளாக வெளிப்படலாம். அவற்றை கேள்விகளாக கேட்டாலே அது தேசத்துரோகம் எனில் இந்தியா எனும் தேசமோ அல்லது தேசியமோ முன்னேறுவது சாத்தியமே இல்லை. அப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால்தான் தேசமும் தேசியமும் வலுப்படும். அதற்கு முற்போக்கு தேசியம் முயல்கிறது.

அரசு அரசாங்கம்தேசியம்:

எந்த ஒரு தேசியமும் வெற்றிடத்தில் செயல்படுவது இல்லை. குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட அரசியல் பொருளாதார சூழலில்தான் தேசியம் எனும் கருத்தாக்கம் உருவாகிறது. தேசியம் குறித்த பல கோட்பாடுகளிடையே மோதலும் இச்சூழலில்தான் அரங்கேறுகிறது.

அரசு என்பது ஒரு அடக்குமுறை கருவி என்பது அனைவரும் அறிந்த ஒன்று! எதிரி வர்க்கங்களிடம் அரசு அதிகாரம் இருக்கும்பொழுது உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது இல்லை. அதே போல தேசிய இனப் பிரச்சனைகளும் தீர்க்கப்படுவது இல்லை. தமது சுரண்டலுக்கு எத்தகைய தேசியம் தேவையோ அதனையே ஆளும்வர்க்கங்களின் அரசு நிறைவேற்றிட முனைகிறது. தேவை எனில் தேசிய இனங்களிடையே முரண்பாடுகளை விசிறிவிடவும் அரசு தயங்குவது இல்லை.

ஆளும் வர்க்கங்கள் தமது இலாபத்தை உத்தரவாதப்படுத்தும் பொருளாதார கொள்கைகளில் தலையிடுவது போல சமூக பிரச்சனைகளில் தலையிடுவது இல்லை. உதாரணத்திற்கு குஜராத் படுகொலைகளில் எந்த ஒரு முதலாளிகள் அமைப்பும் தமது கருத்தை வெளியிடவில்லை. குஜராத் முதலாளிகள் முற்றிலும் மோடி பக்கம் நின்றனர். அதில் தீவிரமாக செயல்பட்டது கவுதம் அதானி. அதற்கு நன்றிக் கடனாகவே டாலர் பில்லியனராக அதானி இன்று முன்னுக்கு வந்துள்ளார். குஜராத் கலவரம் குறித்து இரத்தன் டாட்டா, இராகுல் பஜாஜ் போன்றோர் சிறு முணுமுணுப்பை வெளியிட்டனர். அதனாலேயே பெரிய முதலாளிகள் குஜராத்தில் பல திட்டங்களை இழந்தனர். இதனைக் கண்டு கிலியுற்ற முதலாளிகள் அமைப்பு மோடியிடம் மன்னிப்பு கேட்டது. மக்கள் செத்து மடிந்தாலும் தமது இலாபம் மட்டுமே இலக்கு என்பதே ஆளும் வர்க்கங்களின் குறிக்கோள்!

அரசாங்கங்கள் மாறினாலும் வர்க்கத்தன்மை மாறுவது இல்லை. பொருளாதாரக் கொள்கைகள் தொடர்கின்றன. ஆனால் மதவாதம் கொண்ட ஒரு அரசாங்கம் அமையுமானல் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்வது மட்டுமல்ல; மதச்சார்பின்மை உட்பட பல கொள்கைகளும் ஆபத்தில் சிக்குகின்றன. இதில் தேசியமும் அடங்கும்.

இன்றைய மோடி அரசாங்கம் இந்துத்துவா தேசியத்தை திணிக்க முனைகிறது. இந்துத்துவா தேசியத்தை ஏற்றுக்கொள்வதில் ஆளும் வர்க்கங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்துத்துவா தேசியம் முரட்டுத்தனமாக “ஒரு தேசம்; ஒரு தத்துவம்” என்பதை அமுல்படுத்த முனைகின்றன. இது தமது கொள்ளைக்கு மிகவும் உகந்தது என ஆளும் வர்க்கங்கள் எண்ணுகின்றன. ஏனெனில் ஒருங்கிணைந்த சந்தை தம் ஆளுமைக்குள் வரும் என அவர்கள் நம்புகின்றனர்.

இன்றைய அரசு மற்றும் அதன் ஒரு பகுதியான அரசாங்கம் இரண்டும் இந்தியாவின் பல்வேறு தேசியப் பிரச்சனைகளை காலில் போட்டு மிதிக்கின்றன. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வும் நேரு பல்கலைக்கழக நிகழ்வும் இதன் வெளிப்பாடுகளே! இவை தொடரவே செய்யும். இதற்கு கடிவாளம் போட ஒரே வழி முற்போக்கு தேசியத்தை, இடதுசாரிகளின் தேசியத்தை உழைக்கும் மக்களின் ஆயுதமாக மாற்றுவதுதான்! முற்போக்கு தேசியம் உழைக்கும் மக்களின் ஆயுதமாக மாறாவிட்டால் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வும், நேரு பல்கலைக்கழக நிகழ்வும் இரண்டு தீவுகளாக மக்களிடமிருந்து தொடர்பற்று தேங்கிவிடும் ஆபத்து உள்ளது.

கண்ஹையா குமாரும் அவரது தோழர்களும் எழுப்பிய முழக்கங்களை ஒரு முறை திருப்பிக்கூறுவது தவறு ஆகாது:

“விடுதலை தேவை!

வறுமையிலிருந்து விடுதலை தேவை!

வேலையின்மையிலிருந்து விடுதலை தேவை!

சாதியத்திலிருந்து விடுதலை தேவை!

பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தேவை!

மதவெறியிலிருந்து விடுதலை தேவை!”

ஆம்! இத்தகைய விடுதலையை முன்வைப்பதுதான் முற்போக்கு தேசியம்! இந்த தேசியத்தை உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட கருத்தாக மாற்றுவதே நம்முன் உள்ள முக்கிய கடமை. ஏனெனில் ஒரு கருத்து உழைக்கும் மக்களின் கருத்தாக மாறினால்தான் அது பவூதிக சக்தியாக மாறுகிறது. அத்தகைய சக்திதான் இந்துத்துவா தேசியத்தை முறியடிக்க முடியும்.

 One response to “தேசம் என்றால் என்ன? தேசியம் என்றால் என்ன?”

  1. ஜெனிஃபர் Avatar
    ஜெனிஃபர்

    டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கருத்துக்களைத் தொடாமலேயே , ஆய்வுக்கு உட்படுத்தலாமேயே இருப்பது முழுமையற்றதாக்குகிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: