பகுத்தறிவு, சுயமரியாதை, இனமானம். இம்மூன்று முழக்கங்களை வைத்தே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவான தி.மு.கவும், அதிலிருந்து வெளியேறிய அ.இ.அ.தி.மு.க., வும் மேலே குறிப்பிட்ட பெரியார் வகுத்த சுய மரியாதை இயக்க அடிப்படைகளிலிருந்து விலகி, இன்று சீரழிந்து நிற்பதைக் காண்கிறோம், பெரியாரின் திராவிடர் இயக்க புகழை, தர அடையாளமாக (brand name) வைத்திருக்கும், இவ்விரு கட்சிகளின் அரசியல் கலாச்சாரத்தை எதிர்க்க ஏராளமான திராவிட இயக்கங்கள் முளைத்த வண்ணம் உள்ளன, இவர்களில் சிலர், அவர்களோடு போட்டி போடுபவர் களாகவும் உள்ளனர்.
இந்த இரு கட்சிகளும் பெரியார் வகுத்த பகுத்தறிவு இனமானம், சுயமரியாதை கோட்பாடுகளை சீரழிக்க முடிந்தது எப்படி என்பதனை வரலாற்றுரீதியாக பார்க்க இக்கட்டுரை முயற்சிக்கிறது. பகுத்தறிவு சித்தாந்தத்தின் நிறை குறைகளை அலசுவது இங்கே நமது நோக்கமல்ல, தி.மு.க.,வும், அ.இ.அ.தி.மு.க.,.,வும் பகுத்தறிவு சித்தாந்தத்தை சீரழித்த நடைமுறைகளை அலசுவதே இக்கட்டுரையின் நோக்க மாகும்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ?
மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. .
மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். .
மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.
மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும்.
.உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். .
ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். (’குடிஅரசு’ – 06.12.1947)
பெரியார் திராவிட இயக்கம் பற்றி கூறியது
பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது ஆகும். நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்னும் பட்சத்தில் ஒப்புக் கொள்ளுங்கள்,.
ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை சட்டப் பூர்வமாகத் தடுக்க வேண்டும்.
ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை, அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பதாகும்.
ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.
கணவன் மனைவி என்பது கிடையாது, ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான் உண்மை.
நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும் (பெரியார் சிந்தனைகள் விக்கி லீக் மேற்கோள்)
மேலே கண்டபெரியாரின் கோட்பாடுகள் பெரியார் காலத்தில் நடை முறையில் பிராமண எதிர்ப்பாக ஆவதற்கு பல காரணங்கள் இருந்தன, அரசாங்க அமைப்பில் பிராமண ஆதிக்கம் இருந்தது. அதனை எதிர்ப்பது என்பது அவர் வாழ்ந்த காலத்தின் கட்டாயமாகும், அவருக்கு முன்னரே பாரதியார் இதனை தொடங்கிவைத்தார், அவரால் இயக்கமாக ஆக்க முடியவில்லை பெரியார் இயக்கமாக்கினார், இந்த பிராமண எதிர்ப்பின் சராம்சத்தை புரிய வேண்டுமானால் அன்று பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய அரசாங்க அதிகார வர்க்க அமைப்பை பற்றியும் ஆதிகால பிராமணர், சிரமணர் சித்தாந்த போராட்ட வரலாற்றையும் பரிசீலிப்பது அவசியம்.
பகுத்தறிவு இயக்கம்
வரலாற்றை ஆய்வு செய்தால் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்திற்கு முன்னரே சாதி மத மறுப்பு இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் திராவிட நாடு என கருதப்பட்ட மெட்ராஸ் ராஜதானியில் ,முளைவிட்டிருந் ததை அறியலாம்.
1878-1888 வரை சென்னை லவுகீக சங்கம் என்ற அமைப்பு இயங்கியது, தத்துவ விவேசனி என்ற தமிழ் இதழும் தி.திங்கர் (The Thinker) என்ற ஆங்கில இதழும் அந்த அமைப்பின் சார்பில் மத மறுப்பு கருத்துக்களை பரப்பின. (ஆதாரம் இந்து பத்திரிகை, நவம்பர் 8 2012)
இந்தியாவின் வட பகுதியில் ஜோதிபாபுலே, அம்பேத்கர் ஆகியோர் போராடினர். ஜாட்பட் தோடக் மண்டல் போன்ற சாதி மறுப்பு இயக்கமும் தலை தூக்கி இருந்தது, சில மத சீர்திருத்த வாதிகளும் சாதி ஏற்றத் தாழ்விற்கு எதிராக உபதேசம் செய்தனர்,
சாதி மத மறுப்பு இயக்கத்தை வித்திட முனைந்தவர்களில் பெரும்பாலானோர், ஆங்கில கல்வி, பிரெஞ்சு புரட்சி, பின்னர் சோவியத் புரட்சி இவைகளில் ஏதாவது ஒன்றினால் ஆர்வம் தூண்டப்பட்டு செயல்பட்டவர்களே. அந்த அமைப்புகளில் பல பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆதிக்கக் கனலெறியில் கருகின; அல்லது சனாதன வாதிகளின் சதிகளால் புதைந்தன.
அறிவியலடிப்படையில் இயங்கும் கம்யூனிஸ்ட்டுகள் தலை மறைவாக செயல்பட தள்ளப்பட்டனர், இதே நெருக்கடி பெரியாருக்கும் இருந்தது என்பதை மறந்து விடலாகாது
இருந்தாலும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மட்டுமே காலத்தை வென்று நிற்க முடிந்தது, அன்று அவர் கையாண்ட யுக்திகளே அந்த இயக்கத்தை கருகவிடாமல் காப்பாற்றியது, தந்தை பெரியாரின் பலம் அவரது இலக்கான பகுத்தறிவை பரப்ப காட்டிய உறுதி,நேர்மை, கபடமற்ற நடைமுறை ஆகும்.
அந்த வைக்கம் வீரர் காங்கிரசிலிருந்து விலகி சனாதன தர்மங்களை பேணிய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த ஜஸ்டிஸ் கட்சியில் சேர முடிவெடுத்தார், மெட்ராஸ் ராஜதானியின் நிர்வாக கவுன்சிலில் சர், சி ,பி ராமசாமி ஐயரை சட்ட உறுப்பினராக பிரிட்டிஷ் அரசு நியமித்தது, அதனை கண்டித்து இவர் கொண்டு வந்த தீர்மானத்தை ஜஸ்டிஸ்கட்சி நிராகரிக்கவே, அதில் சேராமல் ராமநாதன் என்பவர் துவங்கிய பிராமண எதிர்ப்பு சுயமரியாதை இயக்கத்தை பெரியார் கையிலெடுத்தார். சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகிய இருவரும் பங்களிக்க சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவையும் சோசலிசத்தையும் இணைக்கும் இயக்கமாக மலரத் தொடங்கியது, பிரிட்டிஷ் அரசு இதனை மோப்பம் பிடித்ததால், பகுத்தறிவு இயக்கம் முடங்காமல் இருக்க வேறு மாற்று இல்லாத நிலையில் ஜஸ்டிஸ் கட்சியில் இணைந்து ஒரு கட்டத்தில் சமூக சீர்திருத்த இயக்கமாக திராவிட கழகத்தை தோற்றுவித்தார்,
சுயமரியாதை உணர்வும் பகுத்தறிவும் பரவ அவர் கையாண்ட யுக்திகள், சிலருக்கு சந்தர்ப்ப வாதமாக தோன்றலாம், ஆனால் சூறைக் காற்று சூழலில் பகுத்தறிவு சுடர் அணையாமல் பாதுகாத்த பெருமை அவரையே சாரும். அவரது பிராமண எதிர்ப்பு என்பது சராம்சத்தில் சாதிப்பாகுபாட்டை அகற்றுவதாகும், ,
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் வெவ்வேறு பாணியில் பகுத்தறிவு சித்தாந்தத்தை சீரழித்த நடைமுறையை அடுத்து பார்க்கலாம்
பகுத் தறிவும்,தி.மு.க., – அ.தி.மு.க., நடைமுறையும்
இவ்விரு கட்சிகளும் பெரியாரின் சுயமாறியாதை இயக்கத்தின் இலக்கை மறந்துவிட்டனர் அரசியல் செல்வாக்கை தலைவர்களின் வறட்டு கவுரவ சண்டைகளுக்கு ஆயுதமாக்கிவிட்டனர். நில பிரபுக்கள் மற்றும் மன்னர்கள் கால பழமைவாத சடங்குகளையும், நெறி முறைகளையும், வாரிசு உரிமைகோட்பாட்டையும் புதிதாக புனைந்து தனி நபர் துதியை பேணுபவர்களாகி விட்டனர், அ.இ.அ.தி.மு.க பெரியாரின் பகுத்தறிவை திராவிட இந்துத்வாக சீரழித்துவிட்டது; சலுகைகள் மூலம் விசுவாசிகளை மண்சோறு திண்ணவைத்து விட்டது.
பெரியார் சாதி உணர்விற்கு எதிராக இனமான கோட்பாட்டை முன் மொழிந்தார். ஆனால் தி.மு.க., அதை இன ஆணவமாகவும், சாதி ஆணவமாகவும் மாற்றிவிட்டது. அ.தி.மு.க., சாதி அரசியலைப் பேணுவதில் கவணமாக இருக்கிறது. பெரியார் காலத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் விஷயத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. இன்று இரு கட்சிகளின் ஆட்சி காலத்தில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டதோடு ஆணவக்கொலைகள் நடக்குமிடமாகவும் மாறிவிட்டது, இரு கட்சிகளும் அரசு அதிகாரத்தை ஆதிகால மன்னர்களைப் போல் கையாள்வதில், நிபுணர்களாகி விட்டனர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற அவைகளை மன்னர்கள் காலத்து தர்பார் போல் நடத்துவதில் வல்லவர்களாக ஆகிவிட்டனர், அரசியலை சொத்து குவிக்கும் தொழிலாக மாற்றிவிட்டனர்.
சீரழிவின் துவக்கம்
பகுத்தறிவு கருத்துக்களை சினிமா மூலம் பரப்பிய தி.மு.க.,வினர் ஆட்சியில் அமர்ந்த 4வது ஆண்டிலேயே அதாவது.1971க்குப்பிறகு அதன் நடவடிக்கைகள் திசை மாறின. நடந்தது என்ன? அரசு எந்திரத்தை பெரியார் காட்டும் வழியில் இவர்களால் மாற்றி அமைக்க இயலவில்லை. மாறாக அரசு எந்திரம் அவர்களை மாற்றிவிட்டது ,
அரண்மனை வாழ்வு, தோரணை, அந்நிய – இந்திய பெரு முதலாளிகளின் நெருக்கம் , அரசியல் நிர்ணய சட்டம் வழங்கி இருக்கும் வரம்பற்ற அதிகாரம் ஆகியவை மக்கள் நலனை மறந்து அடக்கி ஆள கற்றுக் கொடுத்து விட்டது, நவீன பணபிரபுக்களின் அதிகார அமைப்பிற்கு தேவை ராஜ விசுவாசம்போல் தனி நபர் மீது கொள்ளும் விசுவாசமாகும். சுயமரியாதை உணர்வு வளரும் நவீன சமூகத்தில் இது அரசியல் முரண்பாட்டை உருவாக்குவதை காண்கிறோம். திராவிட இயக்கம் பல பிரிவுகளாக ஆனதற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று,
1967க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் தோழமை பூர்வமான விமர்சனங்கள், கவன ஈர்ப்பு இயக்கங்கள் தொழிலாளி விவசாயி போராட்டங்கள் எதுவும் இக்கட்சிகளின் சீரழிவுப்போக்கினை தடுக்க இயலவில்லை. பெரியார் நம் சமூகத்தைப் பற்றி கூறியது இந்த இரண்டு கட்சிகளுக்கும் நன்றாகவேபொருந்திவிட்டது,
. நம்முடைய சமுதாயம் குரங்குப்பிடிச் சமுதாயம்; உலகம் முக்காலே அரைக்கால்வாசி முன்னேற்றம் அடைந்த பிறகும், இது முன்னோர் சொன்னபடி நீண்ட நாளாக நடந்து வந்த பழக்கம் என்று கூறி, முதுகுப் பக்கம் பார்த்துக்கொண்டு பிடிவாதமாக நடந்து, இன்னும் காட்டு மிரண்டித் தன்மையிலேயே இருக்கிறது என்றார். ( பெரியார் சிந்தனைகள் விக்கி மேற்கோள்கள்)
இது அவ்வளவாக நமக்கு பொருந்துமா என்பது கேள்விக்குறியே. ஆனால் இந்த இருகட்சிகளும் முதுகுப் பக்கம் பார்த்துக்கொண்டு பிடிவாதமாக நடக்கிறது என்பதை உறுதியாக கூறலாம், விடுதலைக்குப் பிறகும் பழமையை பேணுகிற பிரிட்டிஷ் அரசாங்க அமைப்பு மாறாத நிலையில் இந்த இரு கட்சிகளும் அதிகார போதையில் சீரழிந்தன; பெரியார் கூறியதுபோல் முதுகுப் பக்கம் பார்த்துக் கொண்டு பிடிவாதமாக நடந்து பழமையை பேணுகின்றன.
.கல்வி, மக்களின் ஆரோக்கியம் ,எல்லாவற்றிற்கும் மேலாக கவுரவமான வேலை வாய்ப்புக்கள் இவைகளை கவனியாமல் நீள் துயில் கொண்டன; சொத்து குவிப்பில் கவனம்செலுத்தின.
ஆதி கால பிராமணிய சித்தாந்தம் உருவாக்கிய ஏற்றத் தாழ்வை அகற்றப் பிறந்த திராவிட இயக்கம் இந்த இரு கட்சிகளால் சாதிய ஏற்றத் தாழ்வை பேணுகிற இயக்கமாக ஆகிவிட்டது. பணப்பிரபுக்களை பேணுகிற கட்சிகளாக இவை மாறிவிட்டன.
ஆதிகால இந்திய மண்
ஆதி காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வு, வேதம், ஆதிக்கம், அடிமைத்தளை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அரசமைப்பு முறை இருந்தது. பிராமண சித்தாந்த அடிப்படையில் உருவான இந்த அரசாங்க அமைப்பு வேத மறுப்பு சித்தாந்த வாதிகளாக எழுந்த சிரமணர்களை வேட்டையாடியது. வேதமறுப்பு அல்லது யாகம், பலி இவைகளை எதிர்க்கும் கருத்துக்கள் மற்றும் அறிவியலை உருவாக்கும் தத்துவசர்ச்சைகள் அனைத்தும் ராஜதுரோகமாக கருதப்பட்டன,
அரசின் அதிகார அமைப்பிற்கு மனு சாஸ்திரமும், கவுடில்லியரின் அர்த்த சாஸ்திரமும் அடிப்படைகளானது , சூத்திரர்களின் உழைப்பில் வாழும் நிலப்பிரபுக்களின் பாதுகாவலனாக அரசன் இருந்தான். தத்துவங்கள் மதங்களுக்கு சேவை செய்ய தள்ளப்பட்டதால் தத்துவ சர்ச்சை அறிவியலை வளர்க்க உதவுவது தடைபட்டது. மக்களின் அனுபவத்தால் வளர்ந்த தொழில் நுட்பங்களும் வேத மந்திரங்களின் விளைவு என சித்தரித்தனர். தாதுவிலிருந்து உலோகங்களை பிரிப்பது கூட வேத மந்திரத்தின் ஆற்றல் என்ற மூடநம்பிக்கை பண்பாட்டின் பகுதியானது. அரசுகள் மாறினாலும் அறிவியல் வளர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தாய் மண்ணையும், மக்களையும் நேசிப்பதைவிட ராஜவிசுவாசம் புனிதமானது என்பதை மக்கள் மனதில் இருத்த சடங்குகளும், சம்பிரதாயங்களும், நெறிமுறைகளும் மனுதர்ம கோட்பாட்டின்படி உருவாக்கப்பட்டன,
பின்னர் , மொகலாயர்களும் அரசாங்க நெறி முறைகளை அதே பாணியில் சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினர் மக்களை ராஜவிசுவாசத்தோடு இருத்தி வைக்க, பட்டங்கள், பவிசுகள், சலுகைகள், உருவாக்கப்பட்டன, இதன் மூலம் பொது மக்களை ஆட்டு மந்தையாக கருதி நிர்வகிக்க ஏதுவானது,
1857க்குபின்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1857- 58 சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு தங்களது நிர்வாக முறையில் மாற்றம் கொண்டுவர இந்திய அரசாங்க சட்டம் என்ற தலைப்பில் ஒரு சட்டமியற்றினர். அன்றைய விக்டோரியா மஹாராணியின் மீது இந்திய மக்களை விசுவாசமாக இருக்கவைக்கும் நோக்குடன் அந்த சட்டம் இயற்றப்பட்டது, மனு சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் சொல்லும் அதிகார கோட்பாட்டின் அடிப்படையில் நெறி முறைகளை அந்த சட்டத்தின் விதிகளாக்கினர்.
உழைப்பாளி மக்களும் மற்றும் ராணுவமும் எசமான விசுவாசத்தோடும் பணிவோடும் நீடிக்க, பரிசுகளும், தவறினால் தண்டனைகளும், சல்யூட் அல்லது, சலாம் அல்லது நமஸ்காரம் செய்யும் முறைகளும், தவறினால் தண்டனைகளும் அந்த 1858 இந்திய அரசாங்க சட்டம் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடைமுறைக்கு கொண்டுவந்தனர். குழந்தை பருவத்திலேயே ராஜவிசுவாச சிந்தனையை உருவாக்க பள்ளிகளிலும் பொது நிகழ்வு முடிவிலும் பாட ராஜகீதம் உருவாக்கினர், பாட மறுத்தாலோ, அவமதித்தாலோ தண்டனை வழங்க விதிகள் உருவாயின. அதிகாரம் படைத்த சில பதவிகள் பரம்பரை உரிமை ஆகின. டல்கவுசி பறித்த தத்தெடுக்கும் உரிமையை மீண்டும் மன்னர்களும் நவாபுகளும் பெற்றனர். பிரிட்டிஷ் அரசு வரி வசூலை மன்னர்கள் சமஸ்தானங்கள் மூலம் உத்தரவாதப்படுத்த அவர்களை அங்கீகரித்து தர்பார் மூலம் கவுரவித்தனர். மறுபுறம் அவர்ளை கண்காணிக்க அதிகார வர்க்க அமைப்பை உருவாக்கினர். இதனால் மக்களை ஆட்டு மந்தைகளாக கருதி நடத்த உள்ளூர் துறைகளும் உருவாகினர். நவீன நாட்டுப் பற்று உணர்வை மழுங்கடிக்கும் ராஜவிசுவாசத்தை அல்லது எசமான விசுவாச பண்பை பிரதிபலிக்கிற சடங்குகள் சம்பிரதாயங்கள் இவைளையும் திணித்தனர். இந்திய பாரம்பரியம் என்று மொகலாயர்கள் காலத்து தர்பார் சடங்குளையும் பழங்கால மன்னர்கள் காலத்து சோசியம் கூறும் பிராமணர்களை நிர்வாக ஆலோசகனாக நியமிக்கும் நடைமுறையையும் அவர்களது நடை உடை பாவனைகளையும் புனைந்து திணித்தனர். மனு சாஸ்திரத்தையும், அர்த்த சாஸ்திரம், பகவத் கீதை ஆகிய ஆவணங்ளை தூசி தட்டி படித்து வேதங்ளை நம்பிய மன்னர்கள் காலத்து நடைமுறைகளையும் அதிகார அமைப்பின் நடைமுறை ஆக்கினர், இதன் விளைவாக ஒரு முரண்பாடு உருவானது, வெள்ளை நிர்வாகிகள் முன்பாக முழங்காலிட்டு நிற்பது மட்டுமல்ல; ஒரு குட்டி ஜமீந்தார் மற்றும் குறுநில மன்னர்கள் மற்றும் வர்த்தகர்கள், வட்டிக்கு விடும் உரிமைபெற்ற சாதியினர் ஆகியோர் ஒரு பிராமண தாசில்தார் முன் மண்டியிடாமல் ஆடம்பரமாக வாழ முடியாது என்ற நிலை இருந்தது,
சுருக்கமாக 1858ம் வருட இந்திய அரசாங்க சட்டம் வல்லமை மிக்க அதிகார வர்க்க அமைப்பை உருவாக்கியது, அதில் பிராமண ஆதிக்கம் மேலோங்கியிருந்தது, இந்தியாவைப் பொறுத்த வரை விடுதலை உணர்வின் பகுதியாக பிராமண ஆதிக்க எதிர்ப்புணர்வையும் நாம் பார்க்கவேண்டும், இன்று நிலமை வேறு. அது சாதிகளை திரட்டும் வாக்கு வங்கி அரசியலாக திரிந்து கிடக்கிறது. அதற்கு பாதுகாவலாக இருகட்சிகளும் உள்ளன,
பெரியாரின் பங்களிப்பு
இங்கே ஒருசெய்தியை பதிவுசெய்வது அவசியம், இந்த கட்டுரை எழுதுபவர் 35 வருடங்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த புதிதில் மாநில செயலார் , ஏ. பாலசுப்பிரமணியம் அவர்களோடு ஒரு முறை கலந்துரையாட நேர்ந்தபொழுது தி.மு.க., போன்ற கட்சிகள் இன, சாதி உணர்வுகளை முறுக்கி குளிர்காய முடிவதற்கு காரணம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை நட்டாற்றிலே விட்டது தான் என்று கூறிவிட்டேன், ஏ. பி. அவர்கள் கோபத்தோடு உனக்கென்ன தெரியும்? அவரது சொல்லும் செயலும்தான் மூட நம்பிக்கைகளால் மூடப்பட்ட மக்களின் மனக் கதவுகளை நன்றின் பால் உய்க்கும் அறிவால் திறந்திட ஏதுவானது. அன்றைய சூழலில் பகுத்தறிவு இயக்கத்தை தொடர அவர் கையாண்ட உக்திகளே சரியானது என்று அவர் விளக்கினார்,
வரலாற்றை ஆய்வு செய்தால் வேந்தர்களும் வேதாந்திகளும் இணைந்து தொடுத்த தாக்குதலால் வரலாற்று தொடர்பற்று அவிந்து போன அறிவுச் சுடரை ஏற்றிட அவரது பங்களிப்பு மகத்தானது என்பது தெரியும். அதன் வேரைத் தேட அறிவுலகத்தை தூண்டினார். விடுதலைக்குப் பிறகும் ராமர் பட எரிப்பு, பிள்ளையார் உடைப்பு போன்ற வம்படி முத்திரை குத்தி அவதூறு செய்யப்பட்ட இயக்கங்கள் மூலம் அறிவுலகத்தை சித்தாந்தப் போரில் ஈடுபடவைத்தார். இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் ஆகியவைகளை மத சார்பற்ற ஆய்விற்கு உட்படுத்த அறிவுலகம் அவரால் ஊக்கம் பெற்றது. பழைய சமூக உறவுகளை அவதானிக்க உதவும் தடையங்களாகின ,
எனவே பெரியாரை மக்களும் பங்குபெறும் வகையில் பகுத்தறிவு மூலம் சித்தாந்த போரை நடத்த கற்றுக் கொடுத்த ஆசான் என்றே வரலாறு கூறும், அவரது திராவிட நாடு, தமிழ் நாடு திராவிட இன கருத்துக்கள் இவைகளை வைத்தும் அவரது வாரிசுகள் என்று சொல்லுபவர்களின் நடைமுறையை வைத்தும், பகுத்தறிவு இயக்கத்திற்கு அவரது மகத்தான பங்களிப்பை எடை போடக் கூடாது என் பதை ஏ. பி. விளக்கிய பிறகே எனக்கு புரிந்தது,
பெரியாரும் மார்க்சிசமும்
சித்தாந்த போர் இல்லாமல் போனால் ஒரு சமூகம் நாற்றமும், சேறும், பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய் நோய்க்களமாகி அழியும் என்கிறது மார்க்சிசம்,
இந்தியாவில் மக்களும் பங்குபெறுகிற முறையில் சித்தாந்த போரை நடத்திட காரல் மார்க்ஸ்சிடம் மட்டுமல்ல; இந்தியாவின் தத்துவ போரின் வரலாற்று தொடர்ச்சியை தொடர பெரியாரிடமிருந்து காப்பி அடிக்காமல் கற்றுக்கொள்வது அவசியம், (யாரையும் காப்பி அடிக்க கூடாது என்பது மார்க்சிச- லெனினிச நடைமுறை) எனவே, சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கத்தை காலத்திற்கேற்ப செம்மையாக்கி பேணுவது மார்க்சிஸ்டுகளின் கடமையாகும், ஹெகலின் எழுத்துக்களும், கற்பனா வாத சோசலிச எழுத்துக்களும் மார்க்சையும் எங்கெல்சையும் இயக்க இயல்பொருள் முதல் வாதத்தையும் விஞ்ஞானசோசலிசத்தையும் உருவாக்கிட எழுச்சியூட்டியது போல் பெரியாரின் எழுத்துக்கள் நமக்கு உதவும்,
தி.மு.க.,, அதி.மு.க., வாக்கு வங்கிஅரசியல்
அரசியலதிகாரம் கையிலிருந்தால் மாறுபடுபவர்களை ராஜ துரோகி என குற்றம் சாட்டி வேட்டையாடலாம் என்பது மன்னராட்சி கால அரசியலாகும். அதிகாரம் கையில் வந்தவுடன் அந்த யுக்தியை இன்று பின்பற்ற முயல்வது அழிவைப் பெற வாக்களிப்பதாகும்
17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பிரிட்டன் நாட்டு தத்துவமேதை பிரான்சிஸ் பேக்கன், கருத்துப்படி ராஜதுரோகம் (செடிசன்) இரண்டு வகைப்படும்,
சொல்லொணா வறுமை சொல்லொணா குமுறல் மக்களை மன்னருக்கு எதிராக நிறுத்தும்; அல்லது மன்னர் தான் நம்புகிற மத ஆசாரத்தை திணிக்க முயற்சிக்கிற பொழுதும் ராஜவிசுவாசம் ஆபத்தை வரவழைப்பதாகும் என்று சுட்டிக்காட்டியிருந்தார், , ஆனால் அந்த பகுத்தறிவு மேதை இன்னொரு முக்கிய அம்சத்தை பார்க்க தவறிவிட்டார்,.,
வாழ்க்கை மேம்பாட்டிற்கான மக்களின் போராட்டமே, அரசியலின் போக்கையும், அரசியலதிகாரம் யார் கையில் இருக்கவேண்டும் என்பதையும் எல்லா காலத்திலும் தீர்மானிக்கிறது,
வரம்பற்ற அதிகாரம் இருக்கிறது என்று மன்னர்களோ அல்லது அரசியல் மாவீரர்களோ ஆட்டம் போடும் மாய வாழ்வு ஒரு கட்டத்தில் சோக முடிவாகிவிடுகிறது,,
அரசியலில் அசகாய சூர்களாக கருதி நடந்த நெப்போலியன்கள் பற்றி காரல் மார்க்ஸ் குறிப்பிட்டது தி.மு.க.,, அஇதி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் தலைமை பீடங்களுக்கும் நன்றாகவே பொருந்துகிறது எனலாம், முதலாம் நெப்போலியனின் அரசியல் சாகசம் பிரிட்டிஷ் அரசரின் கூட்டணி படையெடுப்பால் சோக(டிரஜெடி) முடிவானது, இறுதியில் பிரிட்டனில் தஞ்சம் புகுந்து வாழ நேர்ந்த மூன்றாம் நெப்போலியனின் அரசியல் சாகசம் கேலி கூத்து( காமெடி) ஆனது என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார். இன்று நாம் காண்பதென்ன?
இந்த இரு கட்சிகளில் ஒன்றின் தலைமைக்கு வம்சா வழி பாத்தியதை கொண்டாடுவோர் மோதுகிற காட்சியை காண்கிறோம், இன்னொன்றிற்கு தத்தெடுத்த அடிமை வம்சத்தினர் பாத்தியதை கொண்டாடுவோர் இடையே நடக்கும் மோதல்களை படிக்கிறோம், இவைகள் பற்றிய தகவல்களை வம்பானந்தரும், கழுகாரும் கழுவி ஊத்துவதையும் நாம் அறிவோம். வழி தவறிய இக் கட்சிகளின் எதிர்காலம் டிராஜடியா, காமெடியா அல்லது டிராஜோகாமெடியா என்பதை வரும் காலம் தீர்மானிக்கும்,
அதேவேளையில் பெரியார் வித்திட்ட பகுத்தறிவு, சுய மரியாதை உணர்வுகள் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் (அதாவது வர்க்கப்போராட்டத்தின்) விளைவாக உயிர்த் தெழும். அல்லது அதற்கான போராட்டம் தொடரும்.
Leave a Reply