மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …


தமிழில்: இரா.சிந்தன்

மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு எத்தகையது?

மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு, மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு பற்றி விவாதித்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமல்லாது, அரசுக்கும் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளன, என்று கட்சி வரையறுத்துள்ளது.

மாநிலக் கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்கிறோம். அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர தயங்குவதில்லையே?

தற்போது அரங்கேற்றப்படும் புதிய தாராளவாத சீர்திருத்தங்கள் மற்றும் உலகமயமாக்கல் நிகழ்ச்சிநிரலில் பிரதேச முதலாளிகளும் இந்திய பெரு முதலாளிகளோடு தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றனர். மாநிலத்தில் உள்ள முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கட்சிகள் மேற்சொன்ன வர்க்கத் தன்மையை பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாகவே அந்தக் கட்சிகள் காங்கிரசுக்கும். பாஜகவுக்கும் இடையில் ஊச்லாடுகின்றன. இந்த ஊசலாட்டத்தின் காரணமாக, மதச்சார்பின்மை மீது தீவிரமான பிடிப்புடன் அவர்கள் நடந்துகொள்வதில்லை. அவர்களின் தனிப்பட்ட சுயநலன்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இத்தகைய கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கட்சி என்ன அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்?

இந்தக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகள் பின்பற்றும் அனைத்து மக்கள் விரோதக் கொள்கைகளையும் கட்சி எதிர்த்துப் போராட வேண்டும். மாநிலக் கட்சிகளுடனான உறவு, பிரச்சனைகளின் அடிப்படையில் இருக்கலாம். இணைந்து இயக்கங்களை நடத்தலாம். உதாரணமாக, சகிப்புத்தன்மை, மதவாத எதிர்ப்பு போன்றவைகளில் பொது மேடைகளில் ஒன்றாக நிற்கலாம். ஆனால் அவர்களின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை, புதிய தாராளவாத அடிப்படையிலானவை. அவற்றை எதிர்க்க வேண்டும்.

21வது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய நடைமுறை உத்தி தொடர்பான தீர்மானம், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்று சொல்கிறது. இதனை எந்தப் பொருளில் புரிந்துகொள்ளலாம்?

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், வர்க்கப் போராட்டத்துடன் பிரிக்கமுடியாதவகையில் பிணைந்தவை என்ற நம்முடைய நிலைப்பாட்டை 21 வது அகில இந்திய மாநாடு மீண்டும் வரையறுத்துள்ளது. இந்திய சூழலில், பொருளாதாரச் சுரண்டலோடு இணைந்து சமூக ஒடுக்குமுறையும் நிலவிவருகிறது. அந்த ஒடுக்குமுறைகள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலானவை. அத்துடன் பழங்குடி மக்கள் மீதான சுரண்டலும், பாலின அடிப்படையிலான சுரண்டலும், மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் நிகழ்கின்றன.

இந்த நான்கு தளங்களிலும் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அதாவது தலித் மக்களின் நல்வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும், சாதி ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும். அதே போல் பழங்குடி மக்களை பாதுகாக்க வேண்டும். மதவழி சிறுபான்மையோரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். இதன் மூலமாகவே, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளைப் பாதுகாக்க இயலும். இந்த நான்கிலும் கட்சி முன்பைக்காட்டிலும் கூடுதலான ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

பொருளாதாரச் சுரண்டல்களை எதிர்த்தபடியே, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவது என இரண்டு கால்களையும் ஊன்றிச் செயல்படுவதுதான் இந்திய மக்களிடையே வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க ஒரே வழியென்று நாம் கூறுகிறோம். இதற்காக, மேற்சொன்ன பிரச்சனைகளில் கட்சி அமைப்புகள் பொது மேடைகளை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எவ்வாறு அணுகுவது?

இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பொருத்தமட்டில் சமத்துவம் நிலை ஏற்படுத்தவும், சமூக நீதிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் முழக்கங்களை நாம் ஆதரிக்கிறோம்.தலித் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைக்கப்படும் மேடைகளைப் போன்றல்ல பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளுக்காக பொது மேடைகளை ஏற்படுத்துவது. இது இன்னும் சிக்கலானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தன்மைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறுபடுகிறது. பிற்பட்டோர் பிரச்சனைகளுக்காக கட்சி தொடர்ந்து போராட வேண்டும். இவ்வாறு செய்வதன் நோக்கம், அந்த மக்களை ஜனநாயக இயக்கத்திற்குள் திரட்டி பொதுவான வர்க்க நீரோட்டத்தில் இணைப்பதாகும். நம்முடைய நோக்கம், தலித்துகளுக்காக தலித்துகள் பிற்படுத்தப்பட்டோருக்காக பிற்படுத்தப்பட்டோர் போராட வேண்டும் என்பதல்ல. வலுவான உழைக்கும் மக்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

சாதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் உள்ளனவே?

சாதி அடிப்படையிலான கட்சிகள் அடையாளங்களை முன்னிருத்தி அந்த அரசியலை வளர்ப்பார்கள். இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த அடையாளங்களைக் கொண்ட மக்களை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பது குறித்து விவாதித்துள்ளோம். கட்சியின் 15 வது மாநாடு முதல், நாம் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே உருவாகும் எழுச்சியை பகுத்துப் பார்க்கும்போது, அதில் சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்ற நேர்மறையான அம்சம் காணப்படுகிறது. அந்த உணர்வு  இன்னும் வளரும்போது வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும். அதே சமயம், அடையாளங்களை முன்னிருத்தும் தலைவர்கள் குறிப்பாக சாதி அடையாளங்களை முன்னிருத்தும் சில தலைவர்கள் இந்த நேர்மறை அம்சத்தை பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களை அந்த குறிப்பிட்ட சாதி வரம்புக்குள் நிறுத்திவிடுகிறார்கள். அது எதிர்மறை அம்சமாகும். நேர்மறை அம்சத்தை ஆதரித்து வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில், எதிர்மறை அம்சத்தை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும்.

அப்படியானால், நாமும் சாதி அடையாளத்தின் அடிப்படையில் அவர்களைத் திரட்ட வேண்டுமா?

இல்லை. நாம் ஒரு பொது மேடையை அமைத்து போராடும் இடத்தில் கூட, நம்முடைய நோக்கம் அந்த மக்களை வர்க்கப் போராட்டத்தில் இணைப்பதாகத்தான் இருக்கும். தனிப்பட்ட அடையாளத்தை மையப்படுத்திய, அடையாளம் மட்டுமே சார்ந்த இயக்கமாக நாம் கட்டுவதில்லை. அதுதான் நமக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம்.

பிற்படுத்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளோடு கைகோர்க்க வாய்ப்புள்ளதா?

அது பிரச்சனைகளைப் பொருத்தது. மக்களுக்கும், நாட்டுக்கும் நலன்தருமென்றால், அவற்றிற்காக கைகோர்ப்போம். ஆனால், அப்போதும் நம்முடைய முயற்சிகள், அடையாள அடிப்படையிலான அணிதிரட்டலை வலுப்படுத்துவதாக இருக்காது. மாறாக, அந்த மக்களை வர்க்கப் போராட்ட நீரோட்டத்திற்கு இழுத்துவருவதாகவே அமைந்திடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s