– டி.கே.ரங்கராஜன்
தமிழகத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக – அதிமுக கட்சிகளோடு தொகுதி உடன்பாடு கொண்டுவந்த இடதுசாரிகள், இப்போது திமுக – அதிமுகவுக்கு மாற்றான அரசியலை முன்னெடுப்பது எந்த அடிப்படையில்?
முதலாளித்துவக் கட்சிகள் ஒரு தேர்தலுக்குப் பின்னர் அடுத்த தேர்தலின்போதுதான் சந்திக்கவிருக்கும் தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றன. இது திமுக அதிமுக இரண்டிற்குமே பொருந்தும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வர்க்க நலன்களை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறது. தேர்தல் வரும்போது, அந்த காலகட்டத்தில் தன் வர்க்க நலன்களுக்கு ஏற்ற வகையில் உத்திகளை தீர்மானிக்கிறது.
1952 முதல் 1967 வரை 15 ஆண்டுகள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய ஆட்சியிலும் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சி, மக்களிடமிருந்து வேகமாக தனிமைப்பட்டுவந்தது. இந்தக் காலகட்டத்தில், முந்தைய மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் பயனும் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை. இதில் மக்களுக்கு ஏற்பட்ட கடுமையான அதிருப்தியைக் கணக்கில் கொண்டு – தமிழகத்தில் அன்று திமுகவுடன் கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்தியப் பெருமுதலாளிகளின் கட்சியான காங்கிரசை வீழ்த்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாக 1967 தேர்தலை மார்க்சிஸ்ட் கட்சி பார்த்தது. 8 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டதுடன், நாடாளுமன்றத்திலும் அதன் பலம் குறைக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சி ஏற்பட்டது. கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இதே நேரத்தில் இடது முன்னணி மற்றும் இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி உருவானது. எனவே மிகப் பொருத்தமான நேரத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணிகளாக அவை இருந்தன. அதற்குரிய பலனும் கிடைத்தது.
1960 – 1970 காலப்பகுதியில் இந்தியா முழுவதும் நடந்துவந்த ஏராளமான போராட்டங்கள், காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ள உதவிசெய்ததையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும்.
1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி இண்டிகேட் – சிண்டிகேட் என இரண்டாகப் பிளந்தது. மார்க்சிஸ்ட் கட்சி இந்த இரண்டு பிரிவுகளையுமே விமர்சித்தது. இந்திரா காங்கிரஸ் மேற்கொண்ட சாகசங்களான வங்கித்துறையை அரசுடைமையாக்குதல், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளை நன்கு புரிந்துகொண்ட வகையில்தான் இந்த எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. காங்கிரசின் இந்த இரண்டு பிரிவுகளும் பெருமுதலாளித்துவ ஆதரவு கட்சிகளாகவே இருந்தன. அவற்றின் அடிப்படை குணாம்சத்தில் எந்தவித மாறுதலும் இல்லை.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தேர்தலில் இந்திரா காங்கிரசோடு கூட்டு வைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியாகப் போட்டியிட்டதோடு, கொள்கை ரீதியாக திமுகவினுடைய சந்தர்ப்பவாதத்தையும், காங்கிரஸின் இண்டிகேட் – சிண்டிகேட் பிரிவுகளின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தியது.
1971 ஆம் ஆண்டு முதல் 1977 வரையிலான காலப்பகுதிக்கு இடையில் இந்திய அரசியலில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது அவசர நிலைப்பிரகடனம். இது மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளைப் பறித்து, எண்ணற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல; சொந்தக் கட்சியின் தலைவர்களையும் சிறையிலடைத்தது. 1971 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட திமுகவும், இந்தத் தாக்குதலுக்கு ஆளானது; பல இழப்புகளையும் சந்தித்தது.
இந்தக் காலகட்டத்தில் இந்திராவின் அவசரநிலைக்கு எதிராக பல்வேறு கட்சிகள் இணைந்து, ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சியோடு இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அந்த அணியில் திமுகவும் இருந்தது. அதே சமயம், தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, திமுகவின் விவசாயிகள், தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கைகளும் – சர்க்காரியா கமிசன் முன் திமுக நின்றுகொண்டிருந்த பின்னணியில், அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைக் கண்டது.
தேர்தலுக்கு முன் நடக்கக் கூடிய பல்வேறு போராட்டங்களில் முன்னிற்கும் மார்க்சிஸ்ட் கட்சி, தேர்தல் கால தொகுதி உடன்பாடுகள் செய்துகொண்டதும், தனியாகப் போட்டியிட்டதும் நடந்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் – மத்திய அரசு நவீன தாராளமயத்தை ஏற்றுக் கொண்டு அமலாக்கிய சூழலில், அதன் விளைவுகளை கடந்த 25 ஆண்டுகாலமாக அந்தக் கொள்கைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் – மாநில கட்சிகளுடைய போக்குகளைப் பற்றியும் அதனால் கணிக்க முடிந்தது. தேர்தலின் போது திமுக, அதிமுக உடன் கூட்டணி அமைத்த போதிலும், தேர்தலுக்கு முன் அந்தக் கொள்கைகளை எதிர்க்கும் அதிமுகவும், திமுகவும் ஆட்சிக்கு வந்தால் அவற்றை அமலாக்குவதில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த புதிய சூழலில் திமுக மத்திய அரசுடன் இளைய பங்காளியாகச் சேர்ந்ததும், அமைச்சரவையில் அங்கம்பெற்று – புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதுமாக செயல்பட்டுவந்தது.
1990ஆம் ஆண்டுக்கு முன்னால் மாநில பூர்ஷ்வாக்களின் பிரதிநிதியாக இருந்த திமுகவும், அதிமுகவும் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களுடைய நிலையை மாற்றிக்கொண்டன. மாநில பூர்ஷ்வாக்களின் ஒரு பகுதியினர் நவீன தாராளமயத்தைப் பயன்படுத்தி தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தங்கள் மூலதனத்தை விரிவாக்கிட எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக நேரடியாக உதவியது (வாஜ்பாய், மன்மோகன் அரசுகளில் அது தொடர்ந்து அங்கம் வகித்தது) அதிமுகவும் அதைப் போன்றே மத்திய அரசில் பங்கேற்றபோது உதவியது. 1990 ஆம் ஆண்டுக்கு முன் மாநில நலன்களுக்காக போராடிய திமுக, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுவிட்டு – பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவு பெற்ற அரசியல் கட்சிகளாக உள்ள காங்கிரஸ், பாஜக கட்சிகளின் இளைய பங்காளியாக மாறிவிட்டது.
இந்தியா முழுவதுமுள்ள அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், அசாம் கணபரிஷத் போன்ற மாநிலத்தின் கவுரவத்தை முன்வைத்து போராடி முன்னுக்கு வந்த கட்சிகளும் இதே பணியைத்தான் செய்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் 17 வது அகில இந்திய மாநாடு முதல் 21 வது மாநாடு வரை தனது அறிக்கைகளில் இந்த மாநிலக் கட்சிகளின் நிலைபாடு எவ்வாறு மாறியுள்ளது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளன.
“முதலாளித்துவத்தின் விரிவாக்கம் காரணமாக பிரதேச முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்தியக் கட்சிகளின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நிய மூலதனம் குறித்த அவர்களது அணுகுமுறை மாறியுள்ளது; அவர்கள் தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்; ஏனென்றால் பிராந்திய முதலாளித்துவ பகுதியினர் அந்தக் கொள்கைகளில் தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளைக் காண்கின்றனர்.” (அரசியல் தீர்மானம், 17 ஆவது கட்சிக் காங்கிரஸ், 2002)
மாநிலக் கட்சிகளின் மேற்கண்ட மாற்றத்தை மார்க்சிஸ்ட் கட்சி கணக்கிலெடுத்தே அவை குறித்த அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது.
18 வது அகில இந்திய மாநாட்டின் போது, மாநிலக் கட்சிகள் பாஜக அல்லது காங்கிரஸ் அணியுடன் இணைந்து மத்திய ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் சமரசப் போக்கையும், சந்தர்ப்பவாத நிலைகளையும் எடுக்க தயங்கவில்லை. இதனை ஆய்வு செய்த மாநாடு, தாரளமயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் அகில இந்திய முதலாளிகள் மற்றும் பிராந்திய முதலாளிகளுக்கு “இடையிலான முரண்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டது” என்று மதிப்பீடு செய்தது.
“இரண்டு பெருமுதலாளித்துவ கட்சிகளால் இரண்டு கட்சி அல்லது இரண்டு அணி அடிப்படையிலான அரசியலை ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே ஆதரித்து வந்தன.”என்பது கட்சியின் நிர்ணயிப்பு. பாஜக தனது அணிச்சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் விதத்தில் உத்திகளை கடைப்பிடித்தது. எந்த ஆட்சி வந்தாலும் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள இது உதவியாக இருந்தது. அத்தகைய அணிசேர்க்கை உருவாவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கிலேயே நமது செயல்பாடுகள் அமைந்தன. கட்சி மாநாடுகள், தேர்தல் அணிசேர்க்கை மட்டுமல்ல; மக்கள் போராட்டங்களின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டமைத்தல், தேசிய இறையாண்மையையும், மாநிலங்களுடனான உறவுகளை பாதுகாப்பதிலும் முன்னிற்பது போன்றவற்றையும் வலியுறுத்தின.
21 வது மாநாடு இந்த விஷயங்களை மேலும் ஆழமாக ஆராய்ந்து, ஒவ்வொரு கட்சியின் தன்மை குறித்தும் பேசியது. வர்க்க அடிப்படையில் “ஒவ்வொரு பிராந்தியத்தின் முதலாளிகளது விருப்பங்களை மாநிலக் கட்சிகள் பிரதிபலித்தன. புதிய தாராளவாதக் கொள்கைகளின் அமலாக்கத்தை இது பெருமளவில் உறுதி செய்தது.” அதுமட்டுமின்றி அந்தக் கட்சிகள் “பாஜக, காங்கிரஸ் உடனான அணுகுமுறையிலும் ஊசலாட்டம் காட்டின” என்பதையும் அது சுட்டிக்காட்டியது.
இதன் பின்னணியில்தான் 21 வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் உத்தி குறித்த ஆய்வின் முடிவில் “மாநிலங்களில் கட்சியின் நலன்களுக்கும் இடது ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவதற்கும் எங்கெல்லாம் உதவிகரமாக இருக்கின்றதோ அங்கெல்லாம் மத்தியக்குழு வகுத்தளிக்கும் அரசியல் – நடைமுறை உத்தியின் வரையறைக்கு உட்பட்டு பொருத்தமானதொரு தேர்தல் உத்தியுடன் பிராந்தியக் கட்சிகளுடன் உடன்பாட்டிற்கு வரலாம். ஆனால் அது அகில இந்திய அளவில் ஒரு கூட்டணிக்கான முடிவின் அடிப்படையில் திணிக்கப்படக் கூடாது. அத்தகைய ஒரு தேர்தல் புரிந்துணர்வுக்கு செல்லும்போது, 17 ஆவது கட்சிக் காங்கிரசின் ஆய்வு அறிக்கை ஐக்கிய முன்னணி உத்தி குறித்து வரையறுத்துள்ள சரியான அணுகுமுறையை நாம் மனதில் கொள்ள வேண்டும்.”
“அரசியல் சூழலில் துரிதமான மாற்றங்கள் வரக்கூடும். முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையேயும் குறிப்பிட்ட கட்சிக்கு உள்ளேயும் புதிய முரண்பாடுகள் உருவாகக் கூடும். அரசியல் கட்சிகளில் பிளவு மற்றும் இணைப்பு மூலமும் மாற்றங்கள் நிகழலாம். இத்தகைய சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் நெகிழ்வான உத்திகள் உருவாக்கப்பட வேண்டும். கூட்டு இயக்கங்களை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு சமூக இயக்கங்களோடும் மக்கள் திரள் அமைப்புகளோடும் பிரச்சனை அடிப்படையிலான இயக்கங்களுடனும் பொதுவான கூட்டு மேடைகளை நாம் உருவாக்க வேண்டியிருக்கும்.” என்ற முடிவுக்கு வந்தோம்.
மேலும்,”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சுயேச்சையான வலுவை அகில இந்திய அளவில் அதிகரிக்காமல் இடது-ஜனநாயக அணியைக் கட்டும் பணியில் முன்னேறுவது சாத்தியமல்ல” என்று 17வது அகில இந்திய மாநாட்டின் எச்சரிக்கை மீண்டும் மேற்கோள்காட்டப்பட்டது.
பிராந்தியக் கட்சிகளின் பின்னாலிருக்கும் மக்களின் நலன்கள் சமரசம் செய்யப்படுவதால், அவர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகின்றனர். நாம் எடுக்கக் கூடிய நிலைபாடு தாராளமயத்தால் தாக்குதலுக்கு ஆளாக்கப்படும் மக்களை, அதற்கெதிராகத் திரட்டுவதற்கு உதவவேண்டும். கடந்த காலத்தில் மேற்கொண்ட அணுகுமுறைகளில் அது சாத்தியமாகவில்லை. மேலும், அவ்வாறு மக்களைத் திரட்டுவதற்கான ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதும் அதிகரித்தது.
ஆகவே, ஆட்சியதிகாரத்தில் இருந்துகொண்டு, மக்கள் நலன்களைப் புறக்கணித்து, ஊழலில் முற்றிலுமாக முழுகிப்போன திமுக – அதிமுகவை எதிர்ப்பது என்கிற சரியான, அரசியல் ரீதியிலான முடிவுக்கு நாம் வரவேண்டியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. குறைந்தபட்ச செயல்திட்டம் வரையறுக்கப்பட்டது. பின் அது மக்கள் நலக் கூட்டணியாக மாறியது. கடந்த 9 மாதங்களாக தமிழக மக்களின் மத்தியில் இந்த அணி பயணித்து வருகிறது. அதற்கு கிடைத்து வரும் வரவேற்பையும் நம்மால் காண முடிகிறது.
<strong>தமிழக வளர்ச்சியில் பொருளாதார வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்கை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியுமா?
</strong>
நிச்சயம் முடியாது. நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது சமூக சீர்திருத்தம், இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்த கம்யூனல் அரசு ஆணை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1920 முதல் 1936 வரையான காலப்பகுதியில் அரசுத்துறைகளில் நிலவி வந்த பார்ப்பன ஏகபோகம் தகர்க்கப்பட்டது மட்டுமல்ல; முனிசிபல், டிஸ்டிரிக் போர்ட் – போன்றவற்றிற்கான பிரதிநிதித்துவத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு, இதர பகுதி மக்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரம் இருக்கிறதோ, அதற்கு மேல் எந்த மாநில அரசும் செயல்பட முடியாது. திமுக ஆட்சியில் போக்குவரத்தை அரசுடைமையாக்கியது; கிராமப்புற மற்றும் நகரப்புற பொருளாதாரத்தை இணைக்க வழிவகுத்தது. அனைவருக்கும் இலவசக் கல்வி; சீர்திருத்த திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திரா காந்தியின் அவசரகாலத்தை அப்போது ஆட்சியிலிருந்த திமுக எதிர்த்தது மிக முக்கியமாகப் பதிவு செய்யவேண்டிய ஒரு விஷயமாகும். மேற்கண்ட நடவடிக்கைகள் தமிழகத்தின் கணிசமான பிற்படுத்தப்பட்ட பகுதியினர் முன்னேற உதவிசெய்தது. அது மக்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியதும் உண்மை.
Leave a Reply