மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


புதிய பொருளாதாரக் கொள்கை, சோவியத் செய்த முயற்சியும், இன்றைய உலகமய தாக்குதலும் ….


(1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றபின் புதிய பொருளாதாரக் கொள்கை முன்வைக்கப்பட்டு அது தொடர்யது பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தப் பட்டுவருகிறது. அதனை நாம் எதிர்க்கும்போது 1921 இல் லெனின் சோவியத் யூனியனில் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைக்கவில்லையா? என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்கின்றனர். அதனை விளக்கும் முயற்சிதான் இயதக் கட்டுரை)

மனித குல வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை 1917இல் அன்றைய ருஷ்யாவில் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்த சுரண்டல் வர்க்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப் புதிய அரசை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக எதிர்ப்புரட்சி சக்திகளை கட்டவிழ்த்து விட்டன. இந்த முயற்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட 14 முதலாளித்துவ நாடுகள் நிதியுதவி செய்தன.

கிட்டத்தட்ட 1917 நவம்பர் முதல் 1921 வரை நடைபெற்ற இந்த ‘வெள்ளைப் போர்’ புதிய அரசின் கவனத்தை திசைதிருப்பி அதன் முயற்சிகள் அனைத்தையும் முடக்கியது. வெள்ளைப் போரின் விளைவாக மட்டுமின்றி பருவ நிலை காரணமாகவும் 1920ஆம் ஆண்டில் மிக மோசமான உற்பத்திச் சரிவை ருஷ்யா எதிர்கொண்டது. உணவு உற்பத்தி மிக மோசமாக சரிந்தது. நாடு முழுவதும் கடுமையான பஞ்சம் நிலவியது. நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் விவசாயிகளாக இருந்த போதிலும் உணவு உற்பத்தி குறைந்ததன் விளைவாக நகர்ப்புறங்களில் வசித்தவர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் கிராமங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு கைவினைப் பொருட்களை விற்பவர்களாக மாறினர். உள்நாட்டுப் போரின் தேவைகளுக்காக அரசு மேற்கொண்ட கட்டாய உணவு தானிய கொள்முதல் முயற்சி மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. நாட்டில் இருந்த அராஜக வாதிகள், முதலாளித்துவ அடிவருடிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணி இந்தப் பஞ்சத்தையும் மக்களின் அதிருப்தியையும் பயன்படுத்தி நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கியது.

இத்தகையதொரு பின்னணியில்தான் லெனின் நாட்டுப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், பஞ்சத்திற்குக் காரணமான உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காணவும், புதிய தொழில்நுட்பங்களை தொழில் உற்பத்தியில் அறிமுகப்படுத்தவும் 1921ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தார். அனைத்தையும் பொதுமயமாக்குவது என்ற கட்சியின் கொள்கையை சற்றே நிறுத்திவிட்டு, புதிய அரசின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமான அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட முயற்சியே இந்தக் கொள்கையாகும். லெனினின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், “பின்னாளில் இரண்டுகால் பாய்ச்சலில் நாடு முன்னேறுவதற்கு உதவும் வகையில் இப்போது ஓர் அடி பின்னே வைத்திருக்கிறோம்!”.
முக்கிய அம்சங்கள்

1.பொதுத் துறையோடு கூடவே தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிப்பது. அரசு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு கலப்புப் பொருளாதாரப் போக்கை பின்பற்றுவது.

2. அனைத்துத் தொழில்களையும் பொது உடமை ஆக்குவது என்ற நிலைபாட்டிலிருந்து சற்றே விலகி தொழில்துறையின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிப்பது.

3. இத்தகைய நிலைபாடு மாற்றத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் அந்நிய மூலதனத்தை தொழில், வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது. இந்த அந்நிய முதலீடு என்பதை அந்நிய செலாவணி அல்லது நாட்டின் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்வது என்ற வகையில் ஏற்றுக் கொள்வது. உதாரணமாக மின் உற்பத்தித் திட்டங்கள்.

4. இந்தப் புதிய கொள்கையின் கீழ் தனியார் நிலங்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிப்பது. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உற்பத்தியான உணவு தானியங்களை பொதுச் சந்தையில் சுதந்திரமாக விற்பனை செய்து கொள்ள அனுமதிப்பது.

5. இத்தகைய விவசாயிகள் மீது வரி விதிப்பு. முதலில் உணவுப் பொருள் கையிருப்பை அதிகரிக்க, இந்த வரியானது உணவு தானியங்களாக வசூலிக்கப்பட்டது. நிலைமை ஓரளவு சரியானதும் இந்த வரி 1924இல் இருந்து பணமாகவே வசூலிக்கப்பட்டது. இத்தகைய ஊக்க நடவடிக்கைகள் மூலம் விவசாய உற்பத்தியானது 40% அதிகரித்தது என்பதும், 1921-22இல் நிலவிய பஞ்சத்தை வென்றெடுக்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. இந்தப் புதிய கொள்கையின் கீழ் தொழிலாளர்கள் குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. உற்பத்திச் செலவை குறைப்பதற்கான ஆலோசனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதன் விளைவாக தொழிலாளர்களின் உற்பத்திக்கான முயற்சிகள் இரு மடங்காகப் பெருகின. தொழிலாளர் சங்கங்கள் இதர பொதுமக்களின் அமைப்புகளைப் போலவே சுயேச்சையாக செயல்படத் துவங்கின.

7. இந்தப் புதிய கொள்கையானது சிறப்பான தகுதி படைத்தவர்கள் அரசுப் பதவிகளை பெற வழிவகுத்தது. பொறியாளர்கள், தனித்திறன் படைத்தோர், உற்பத்திச் செலவை கணக்கிடும் ஆய்வாளர்கள் ( காஸ்ட் அக்கவுண்டிங்) போன்ற திறமைசாலிகள் நேரடியாக அரசில் பங்குபெற முடிந்தது. அதைப் போலவே கருவிகளை வாங்குவது; செயல் நடைமுறைகளில் திறமையை வளர்ப்பது; ரயில்வே கட்டுமானப் பணிகள்; தொழிற்சாலை நிர்வாகம் போன்ற துறைகளுக்கு நிபுணர்களை கவர்ந்திழுக்க தனியார் முன்முயற்சி ஊக்குவிக்கப்பட்டது. நகர்ப்புறங்களில் அதிகபட்சம் 20 தொழிலாளர்களை இவர்கள் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் கிராமப்புற கைவினைஞர்கள் பங்கேற்கவும், அவர்கள் தங்களது உற்பத்தியை தனியார் சந்தையில் விற்கவும் அனுமதிக்கப்பட்டது.

மறுபுறத்தில் லெனினின் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை மறுதலித்து, ட்ராட்ஸ்கி சோஷலிஸத்தை தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று குரலெழுப்பினார். அப்போது லெனினுக்கு ஆதரவாக நின்ற ஸ்டாலின்தான் லெனின் மறைவிற்குப் பிறகு 1928ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை முன்வைத்து இக்கொள்கையை மாற்றி அமைத்தார்.

லெனினின் இந்தக் கொள்கைக்குப் பின்னால் இருந்த உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பது, வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற்று தொழில்துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்ற நோக்கம் லெனின்1924இல் மறைவதற்கு முன்பாகவே மிக விரைவிலேயே நிறைவேறியது. அதையடுத்தே, ஐந்தாண்டு திட்டம் என்ற மத்தியப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் மூலம் ஸ்டாலின் நாட்டின் விவசாய, தொழில் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டினார். 1929ஆம் ஆண்டில் முதலாளித்துவ உலகம் முழுவதும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தபோது (Great Depression) சோவியத் நாட்டின் உற்பத்தி அனைத்து வகையிலும் இந்த முதலாளித்துவ நாடுகளை விஞ்சியதாக இருந்தது என்பதை கீழ்கண்ட அட்டவணையின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

தொழில் உற்பத்தி (1929 முதல் 1933 வரை சதவீதத்தில்)

நாடுகள் 1929 1930 1931 1932 1933
அமெரிக்கா 100 80.7 63.1 59.3 64.9
பிரிட்டன் 100 92.4 83.8 83.8 86.3
ஜெர்மனி 100 88.3 73.7 59.8 66.8
ஃப்ரான்ஸ் 100 100.7 89.2 99.3 77.4
சோ.யூனியன் 100 129.2 161.9 184.7 201.5

(ஜே.வி. ஸ்டாலின் தொகுப்பு நூல்கள்தொகுதி 13 – பக். 293)

எனவே, ருஷ்யப் புரட்சிக்குப் பின் 1921இல் லெனின் முன்வைத்த புதிய பொருளாதாரக் கொள்கை என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் எடுக்கப்பட்ட ஒரு நடைமுறைத் தந்திரமே ஆகும். இக்கொள்கையின் நோக்கமும் வெற்றிகரமாகவே நிறைவேறியது. தனியார் முயற்சிகளை ஊக்குவித்த இந்தப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்திய தொழிலாளி வர்க்கத்திற்கோ, சோவியத்துகளுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, உற்பத்தி அதிகரித்து, பொருளாதாரம் நிலைபெற்று, புரட்சியின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லவே இக்கொள்கை உதவியது. மேலும் புதிதாகப் பெற்ற இந்த வளமையின் விளைவாக இதுவரை உலகில் வேறெங்கும் கண்டிராத, கேட்டிராத வகையில் வேலையின்மை அகன்றதோடு, பல புதிய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைக் கண்டு அதிர்ந்து போன முதலாளி வர்க்கம் இதுவரை சிந்தித்துப் பார்த்திராத வகையில் தனது ஆதிக்கத்தில் உள்ள நாடுகளில் அதே போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

இவ்வாறு நிலைபெற்ற சோஷலிஸ சோவியத் யூனியனை நிலைகுலைக்க முதலாளித்துவத்தின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை செய்துகொண்டேதான் இருந்தன. அதற்கெதிராக நாஜிஸத்தையும் பாசிஸத்தையும் ‘கொம்பு சீவி’ விடுவதிலிருந்து துவங்கி, ‘பனிப்போர்’ வரையில் சோஷலிஸ ஆட்சியை சீர்குலைக்க ஏகாதிபத்தியம் அனைத்து வகையான தந்திரங்களையும் கையாண்டது. இறுதியில் வெற்றியும் பெற்றது.

எனினும் முதலாளித்துவ அமைப்பு என்ற ஒன்று இருக்கும் வரையிலும் அதை குழிதோண்டிப் புதைக்கவே பிறந்த பாட்டாளி வர்க்கம் என்ற ஒன்றும் இருக்கும் என்பதும் தவிர்க்க முடியாததோர் உண்மைதான். இப்பூவுலகில் இதுவரையில் பிறந்த தத்துவ ஞானிகளின் வரிசையில் முதல் இடம் மார்க்ஸுக்கே உரியது என்று முதலாளித்துவ உலகின் கருத்துக் கணிப்பே உறுதி செய்துள்ள நிலையில், மார்க்ஸையும் அவரது எழுத்துக்களையும் மீண்டும் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இன்று முதலாளித்துவமும் அதன் உச்ச நிலையான ஏகாதிபத்தியமும் ஆளாகியுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் ஏகாதிபத்தியம் தனது பிடிப்பை வளரும் நாடுகளின் மீது வலுப்படுத்த சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி, சர்வதேச வர்த்தக அமைப்பு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. நிதி மூலதனம் ‘நாடு’ என்ற எல்லையைக் கடந்து எங்கு வேண்டுமானாலும் புகுந்து தன் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு இந்த அமைப்புகளே வழியமைத்துத் தருகின்றன. உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் என்ற நிதிமூலதனத்தின் ‘அகோரப் பசி’க்குத் தீனியாக வளரும் நாடுகளை அவை தயார்படுத்தி வருகின்றன.

அந்த நிதி மூலதனத்தின் முன்னால் போடப்பட்டுள்ள இலையில் ஒரு அயிட்டமாகத்தான் இன்று இந்தியா உருமாறியிருக்கிறது. இந்தியா இவ்வாறு உருமாறிய கதை ஒரு தனிக்கதை. இங்கு அது தேவையற்றது.

இவ்வாறு நிதிமூலதனம் உலக வங்கி போன்ற நிதியமைப்புகளின் மூலம் இந்தியாவின் மீது சுமத்திய உலக மயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் என்ற நிபந்தனைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றவே உலக வங்கியின் முன்னாள் ஊழியரும் அந்நாள் நிதியமைச்சருமான மன்மோகன் சிங் 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இப்போது அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

உலகமயமாக்கல்:

1) நாட்டின் தொழில் நடவடிக்கைகளில் அந்நிய முதலீடு என்பது (அதுவரை இருந்து வந்த 49% க்கு பதிலாக) 100% வரை என்ற வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

2) இந்திய நிறுவனங்களில் பன்னாட்டு நிதிநிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (இது உண்மையில் பெயரளவிற்குத்தான்!) முதலீடு செய்ய அனுமதி.

தாராளமயமாக்கல்:

1) (அதுவரையில் நடைமுறையில் இருந்து வந்த பெர்மிட் ராஜ் தூக்கியெறியப்பட்டு) ஆறு தொழில்களைத் தவிர அனைத்து விதமான தொழில்களையும் துவங்க பரிபூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

2) அதைப் போலவே நான்கு குறிப்பிட்ட தொழில்களில் மட்டுமே பொதுத்துறையின் பங்கு இருக்கும். மற்ற அனைத்துத் தொழில்களும் தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டன.

3) ஏற்றுமதியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழில்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்பட்டன. இதில் மக்களின் அன்றாட நுகர்வுப் பொருட்களும் அடங்கும்.

4) (மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான பொருட்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக) உலகத்தின் மூலை முடுக்கிலிருந்தும் என்ணற்ற பொருட்கள் இந்திய சந்தையை நிரப்ப வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையாக மாற்றப்பட்டது.

தனியார் மயமாக்கல்:

1) ஏற்கனவே ஆறு தொழில்களில் மட்டுமே ஈடுபட முடியும் என்ற வகையில் பொதுத்துறையை குறுக்கிய பிறகும், பொதுத்துறையில் அரசின் பங்கை தனியார் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பொதுத்துறையின் பங்குகள் படிப்படியாக விற்கப்பட்டன.

2) பொதுத்துறைக்கு இதுவரை அளித்து வந்த அரசு உதவி படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் அவை மெதுவாக மூச்சை விட்டு விடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

3) அரசின் இத்தகைய மாற்றாந்தாய் போக்கின் விளைவாக நலிந்து கொண்டு வரும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் வேலைகள் துவங்கின. அதுவும் அடிமாட்டு விலைக்கு.

ஆக, 1991இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை என்பது இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கோ, பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ அறிவிக்கப்பட்ட ஒன்றல்ல; அது உலக நிதி மூலதனத்திற்கு இந்திய சந்தையை விரியத் திறந்து விடவும், இந்திய பெருமுதலாளிகள் உலக முதலாளிகளாக வளர்ச்சி பெறவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே ஆகும். இந்த புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறையில் இருந்துவரும் கடந்த 24 ஆண்டுகால அனுபவம் நமக்கு எதைக் காட்டுகிறது? சற்றே வரிசைப்படுத்திப் பார்ப்போம்.

1) இதுவரையில் கேந்திரமான தொழில்கள் என்று கருதப்பட்டு வந்த தொழில்கள் அனைத்துமே (ராணுவத்திற்கான தளவாடங்கள் உட்பட) தனியாரின் கைகளில் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

2) ஏற்றுமதிக்கு ஊக்கமளிப்பது என்ற பெயரில் அத்தியாவசிய உணவு மற்றும் நுகர்வுப் பொருட்கள் அனைத்துமே சர்வதேச வணிகச் சந்தையுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக உணவுதானிய உற்பத்தி என்பது குறைந்து பணப்பயிர் உற்பத்திக்கே முன்னுரிமை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

3) இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நீர் வள, நில வள ஆதாரங்கள் படிப்படியாக தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக நிலக்கரி, கனிமங்கள், எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவை தனியாரால் முற்றிலுமாக சுரண்டப்பட்டு வருவதோடு சுற்றுச் சூழலையும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது.

4) தாராள மயமாக்கல் என்ற பெயரில் நுகர்வுக் கலாச்சாரம் வேரூன்றி நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு காலியாகி வருகிறது. உள்நாட்டுத் தொழில்நுட்ப ஆராய்ச்சியும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

5) தனியார் மயமாக்கலின் ஒரு பகுதியாக இதுவரை அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பெற்று வந்த சலுகைகளை முனை மழுங்கச் செய்யும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்கள் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருகின்றன.

6) இதுவரையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி விவசாயம் என்ற நிலை தலைகீழாக மாறியுள்ளதோடு, தொழில் உற்பத்தியும் குறைந்துள்ளது. அதற்கு மாறாக, அதில் உழைப்பவர்களுக்கு எவ்வித சமூகப் பாதுகாப்பும் தராத சேவைப் பிரிவுகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.

7) பாரம்பரிய விவசாயம் அழிந்த நிலையில் உழைப்பாளிகள் வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கி நகர்வதும், நகர்மயமாதலும் பல்வேறு புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.

8) உழைப்பை மட்டுமே நம்பியுள்ள மக்கள் நாளுக்கு நாள் வறியவர்களாக மாறிவரும் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, 1991க்கும் முன்பு ஏகபோக முதலாளிகளாக இருந்தவர்களின் சொத்தின் மதிப்பு பல நூறு மடங்கு அதிகரித்துள்ளதோடு, அவர்கள் பன்னாட்டு முதலாளிகளாகவும் உருமாறியுள்ளனர்.

9) நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. ஒரு நாளைக்கு ரூ 20/- மட்டுமே செலவு செய்யத் திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை இன்று சமூகத்தில் பெரும்பகுதியாக மாறியுள்ளது என்பதை அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.

எனவே முதலில் குறிப்பிட்டது போல, 1921இல் லெனின் ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே தனியாருக்கு ஊக்கமளித்து, சோஷலிஸ அரசை பாதுகாத்தார் எனில், 1991இல் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிதிமூலதன ஆதிக்கம் என்பது, தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்ற பெயரில், நாட்டின் பெரும்பகுதி மக்களை இந்த 25 ஆண்டு காலத்தில் ஓட்டாண்டிகளாக மாற்றி, இந்தியாவின் அனைத்து ஆதாரங்களையும் சுரண்டி, முதலாளிகளை கொழுக்க மட்டுமே வைத்துள்ளது என்பதை நாம் அன்றாட அனுபவத்தில் கண்டு வருகிறோம்.

இதில் எது சிறந்தது? சமூக நோக்கம் கொண்டது? என்பதை அறிவுபூர்வமாக சிந்திக்கும் அனைவருமே புரிந்து கொள்வார்கள் என்பது உறுதி.

 

 



One response to “புதிய பொருளாதாரக் கொள்கை, சோவியத் செய்த முயற்சியும், இன்றைய உலகமய தாக்குதலும் ….”

  1. […] ரஷ்யாவின் சூழலுக்கு முன் மொழிந்த புதிய பொருளாதாரக் கொள்கை குறித்த அவரது மேற்கோள்கள் சில […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: