தோழர்களே!
கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் அதன் பிரிவுகளுக்கும் அடிப்படையான விஷயம் ஒரு சரியான கொள்கை வழியை வகுப்பதாகும் என்பது தெளிவான ஒரு விஷயம். ஆனால் வர்க்கப் போராட்டத்தில் திட்டவட்டமான தலைமைக்கு ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது.
அதற்கு பல நிபந்தனை நிலைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கீழ்க்கண்டவை முக்கிய மானதாகும்.
முதலாவது ஸ்தாபன (கட்சி அமைப்பு) உத்திரவாதங்கள்:
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறையில் செயல்படுத்தப் படுவதற்கும் அதற்குக் குறுக்கே நிற்கும் இடையூறுகளை உறுதியாக நின்று சமாளித்து முன்செல்வதற்கு ஸ்தாபன (கட்சி அமைப்பு) உத்திரவாதம் வேண்டும். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் 12-வது காங்கிரஸில் தோழர் ஸ்டாலின் கட்சியின் கொள்கை வழியைச் செயல் படுத்துவதற்கு அவசியமான நிலைமைகளைப் பற்றிக் கூறியது நமது இந்தக் காங்கிரஸிற்கு முழுவதும் பொருந்தும்.
சிலபேர், ஒரு சரியான கொள்கை வழியை வகுத்துவிட்டால் போதும், எல்லோருடைய கவனத்தையும் கவரும்படி பிரகடனம் செய்து விட்டால் போதும், பொதுவான கருத்துரைகளையும் தீர்மானங்களையும் வரையறுத்து அவற்றை ஏகமனதாக நிறைவேற்றி விட்டால் போதும், வெற்றி தானாகவே வந்து விடும். கிடைத்து விடும் என்று கருதுகிறார்கள். நிச்சயமாக இது தவறானதாகும். இது ஒரு பெரிய பிரமையாகும்.
தோழர் ஸ்டாலின் கூறியதாவது:
“திருத்த முடியாத அதிகார வர்க்கத் தோரணை கொண்டவர்கள் தான் அத்தகைய நிலை கொள்ளுவார்கள். கட்சியின் பொதுக் கொள்கையைப் பற்றி அருமையான தீர்மானங்களும் பிரகடனங்களும் வெறும் ஆரம்பம் மட்டும்தான். காரணம் அவை வெற்றிக்கான விருப்பத்தைத்தான் தெரிவிக்கின்றன. வெற்றியைத் தருவதில்லை. சரியான கொள்கை உருவாக்கப்பட்ட பிறகு வெற்றிக்கான சரியான வழிகள் சுட்டிக் காட்டப்பட்ட பிறகு வெற்றி கிடைப்பது என்பது ஸ்தாபன வேலையைப் பொறுத்தும். கட்சியின் கொள்கை வழியை அமலாக்கு வதற்கான போராட்டத்தை உருவாக்கி அமைப்பதைப் பொறுத்தும் சரியான ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தும் தலைமை அமைப்புகள் முடிவுகளை நிறைவேற்று வதைச் சரியாகக் கண்காணிப்பதைப் பொறுத்துமே இருக்கிறது. இவற்றில் குறைபாடுகள் இருந்தால் சரியாக இல்லாமல் இருந்தால் சரியான கொள்கை வழியில் தீர்மானங்களும் முடிவுகளும் பழுதடையும் அபாயத்தையே தாங்கி நிற்கும். இன்னும் அதிகமாக சொல்லப் போனால் சரியான கொள்கை வகுக்கப்பட்ட பிறகு எல்லாமே ஸ்தாபன வேலையைப் பொறுத்தே இருக்கிறது. அந்த அரசியல் கொள்கை உட்பட அது அமலாக்கப்படுவதும் அதன் வெற்றியும் தோல்வியும் ஸ்தாபன வேலையைப் பொறுத்தே இருக்கிறது.”
இந்த வாசகங்களுக்குமேல் அதிகமாக எதுவும் கூறத் தேவையில்லை. இவை நமது கட்சியின் வேலை முழுவதற்கும் வழிகாட்டும் கோட்பாடுகளாக அமைந்துள்ளன.
மற்றொரு நிபந்தனை நிலை கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் அதன் பிரிவுகளின் தீர்மானங்கள் முடிவுகளை விரிவான மக்கள் பகுதியினர் தங்களுடையத் தீர்மானங்கள் முடிவுகளாக மாற்று வதற்குள்ள திறனாகும். அது இப்போது மிகவும் அவசியமாகும். அதிலும் இப்போது பாட்டாளி வர்க்கத்தின் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அமைக்கும் கடமையை, ஒரு பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியின் மக்களின் பரந்த பகுதியினை ஈர்த்திழுக்கும் கடமையை நாம் எதிர்நோக்கும் இந்தச் சமயத்தில் இது மிகவும் அவசியமாகும். லெனின் அவர்களுடைய அரசியல் மற்றும் உபாயம் குறித்த மேதாவிலாசம் மிகவும் சரியாகவும் மிகவும் தெளிவாகவும் முனைப்பாகவும் மக்களைத் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலமாக கட்சியின் சரியான கொள்கையையும் கோஷங்களையும் புரிந்து கொள்ளச் செய்யும் திறமையில் வெளிப்படுகிறது. போல்ஷிவிஸத்தின் வரலாற்றைச் சற்று ஆராய்ந் தோமானால், புரட்சிகரமான தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் வியூகம் உபாயங்கள் ஆகியவற்றின் மகத்தான அந்தப் பொக்கிஷத்தை ஆராய்ந்தோமானால் மக்களுக்கு தலைமை தாங்கும் முறைகளுக்குப் பதிலாக அந்த இடத்தில் கட்சியைத் தலைமை தாங்கும் முறைகளை போல்ஷிவிக்குகள் ஒருபோதும் கையாண்ட தில்லை என்பதை நாம் காணலாம்.
அக்டோபர் புரட்சி தொடங்கிய பொழுது ரஷ்ய போல்ஷிவிக்குகளின் உபாயங்களில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறார். அப்போது போல்ஷிவிக்குகுள் மக்கள் ‘புரட்சியின் நுழைவாயிலுக்குச் செல்லும் இயல்பான வழிகளையும் திருப்பங்களையும் காண்பதில் திறமை பெற்று இருந்தார்கள் . மக்களே தங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலமே கட்சியின் முழக்கங்களை சரியான தன்மையினை உணர்வதற்கும் அதை சரிபார்ப்பதற்கும் அதை அடையாளம் கண்டு அங்கீகரிப் பதற்கும் மக்களுக்கு போல்ஷிவிக்குகள் உதவி செய்தார்கள். அவர்கள் மக்களின் தலைமைக்கும், கட்சியின் தலைமைக்கும் ஒன்றுக்கொன்று வைத்து குழப்பிக் கொள்ளவில்லை. ஆனால் அவற்றிற்கிடையில் வேறுபாட்டை மிகவும் தெளிவாகக் கண்டார்கள். இதன் மூலம் உபாயங்களை கட்சித் தலைமை பற்றிய ஒரு விஞ்ஞானமாக மட்டுமல்லாமல் கோடானு கோடி உழைக்கும் மக்களின் தலைமை பற்றிய ஒரு விஞ்ஞானமாகவும் ஆக்கியிருந் தார்கள் .
மேலும் மற்றொன்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது நமது முடிவுகளைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் பேசுவதற்கு நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் அம்முடிவுகளை மக்கள் சேமித்து தன்னியலாக்கிக் கொள்ள முடியாது. நாம் எப்போதுமே மக்களுக்குப் பழக்கமான சுலபமாகப் புரிந்து கொள்ளும் உதாரணங்களைச் சொல்லி, எளிய முறையில் திட்டவட்டமாகப் பேசுவதற்கு நன்கு தெரிந்து கொண்டிருக்கிறோம் என்று கூறமுடியாது. குருட்டுத்தனமாக மனப்பாடம் செய்துள்ள வறட்டுத்தனமாக சூத்திரங்களை இன்னும் நம்மால் தவிர்க்க முடியவில்லை. உண்மையில் நம்முடைய அறிவிப்புத்தாள், பத்திரிகைகள், தீர்மானங்கள், விளக்கவுரைகள் முதலியவற்றைப் படித்து பார்த்தோமானால் அதிலுள்ள சொல்நடை மொழிநடை மிகவும் கடினமானதாக இருக்கும். நமது கட்சி ஊழியர்களுக்குக் கூட புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். இன்னும் சாதாரண அணிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சொல்லவேத் தேவையில்லை.
தொழிலாளர்கள், குறிப்பாக பாஸிஸ்டு நாடுகளில் இந்தப் பிரசுரங்களை வினியோகிப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தங்கள் உயிரையே பணயமாக வைத்து அவ்வேலைகளைச் செய்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அவர்கள் செய்யும் மகத்தான தியாகம் வீண்போகாதபடி, அவர்களுக்கு நன்கு புரியக்கூடிய மொழியில் தெளிவாக எழுத வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும்.
இதே விஷயங்கள் நமது வாய்மொழிப் பிரச்சாரத்திற்கும் கிளர்ச்சிக்கும் பொருந்தும். நாம் வெளிப்படையாக மனம் விட்டுக் கூற வேண்டுமானால் நம்முடைய பல தோழர்களைக் காட்டிலும் பாஸிஸ்டுகள் கைத்திறன் மிக்கவர்களாகவும் நெளிவு சுழிவு மிக்கவர்களாகவும் உள்ளார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு தடவை பெர்லின் நகரத்தில் வேலையில்லாதோர் கூட்டம் ஒன்று நடந்தது. அதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அதே காலத்தில்தான் படுமோசமான கொள்ளை லாப மோசடிக்காரர்களான ஸ்கிளாரெக் சகோதரர்கள் மீதான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வழக்கு பல மாதங்களாக நீடித்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு தேசிய சோஷலிஸ்டு பேச்சாளர் ஒருவன் அந்தப் பொதுக் கூட்டத்தில் மிகப் பெரிய வாய்ச்சவடால் அடித்து தனது காரியங்களைச் சாதித்துக் கொள்ள பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசும்போது அந்த ஸ்கிளாரெக் சகோதரர்கள் மீது நடைபெறும் வழக்கைப் பற்றிக் குறிப்பிட்டு அவர்களின் மோசடி லஞ்சம் மற்றும் பல குற்றங்களையெல்லாம் அடுக்கடுக்காய் எடுத்துக்காட்டி வாயளந்து, இந்த வழக்கு பல மாதங்களாக நீடித்து நடத்தப்படுகிறது என்றும் இதற்காக எத்தனை ஆயிரக்கணக்கான மார்க்குகள் ஜெர்மானிய மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது என்று வர்ணித்து கடைசியில் கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்ததற்கிடையில் ஸ்கிளாரெக் சகோதரர்கள் போன்ற கொள்ளைக் கூட்டத்தாரை விசாரணை செய்வதன் பேரால் பணத்தை விரயமாக்குவதற்குப் பதிலாக அவர்களை சுட்டுப் பொசுக்கி விட்டு அந்தப் பணத்தை வேலையின்றித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணமளிக்கலாம் என்று ஆரவாரத்துடன் பேசினார்.
ஒரு கம்யூனிஸ்ட் கூட்டத்தில் எழுந்து தான்பேசுவதற்கு அனுமதி கேட்டார். கூட்டத் தலைவர் முதலில் அனுமதி தர மறுத்தார். ஆனால் கூட்டத்தினர் ஒரு கம்யூனிஸ்டு பேசுவதைக் கேட்க வேண்டும் என்னும் ஆவலில் அவரைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே கூட்டத் தலைவர் அத்தோழரைப் பேச அனுமதித்தார். அவர் பேசுவதற்கு மேடை ஏறியதும் எல்லோரும் ஒரு கம்யூனிஸ்ட் என்ன பேசப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவரும் எழுந்து பேசத் தொடங்கினார். என்ன பேசினார்?
அவர் எழுந்து உரத்த கணீரென்ற குரலில் “தோழர்களே! கம்யூனிஸ்டு அகிலத்தில் விரிவடைந்தக் கூட்டம் இப்போது தான் முடிவடைந்திருக்கிறது. அது தொழிலாளி வர்க்கத்தின் முழு மீட்சிக்கு வழிகாட்டியிருக்கிறது. அது நம் முன்வைக்கும் பிரதான கடமை தோழர்களே! தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பாலான பகுதியினரை நம் பக்கம் கொண்டு வரவேண்டும். வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளர்களை அரசியல்படுத்த வேண்டும் என்று பிளீனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதை இன்னும் மேல் மட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்று பிளீனம் நம்மை அறைகூவி அழைத்திருக்கிறது. இந்த இயக்கத்தை ஒரு மேலான மட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்று பிளீனம் வேண்டிக் கொண்டிருக்கிறது”
இதேபாணியில் அவர் பேசிக் கொண்டே சென்றார். பிளீனத்தினுடைய முடிவுகளை மிகவும் சரியான முறையில் விளக்கிக் கூறி கொண்டிருப்பதாகவே அவர் கருதினார்.
ஆனால் இத்தகைய ஒரு பிரசங்கம், வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளர் கூட்டத்தில் எடுக்குமா? முதலில் அவர்களை அரசியல்படுத்தி, பிறகு அவர்களைப் புரட்சிகரமாக்கி, பிறகு ஒன்று திரட்டி அவர்களுடைய இயக்கத்தை ஒரு உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நாம் உத்தேசித்திருக்கிறோம் என்னும் உண்மை வேலையின்றித் தவிக்கும் அந்த மக்களுக்கு உடனடியான திருப்தியை அளிக்குமா?
நான் அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். பெருத்த ஏமாற்றத்துடன் கூட்டத்துடன் கூடியிருந்தவர்களைக் கவனித்தேன். அங்குக் கூடியிருந்தவர்கள் ஒரு கம்யூனிஸ்டிடமிருந்து வேலையில்லாதோரும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒரு நடைமுறையான கண்கூடான வழியைக் கூறுபவர் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமடைந்து கொட்டாவி விடத் தொடங்கினார்கள். இறுதியில் கூட்டத் தலைவரே தலையிட்டு பேச்சாளரின்பேச்சைக் சுருக்கும்படி நிறுத்தினார். அப்போது கூட்டத்தினர் ஒருவர் கூட ஆட்சேபிக்கவில்லை. அதில் நான் ஆச்சரியப்படவில்லை.
துரதிருஷ்டவசமாக நமது கிளர்ச்சி பிரச்சார வேலையில் இம்மாதிரி பல உதாரணங்கள் இருக்கின்றன. இம்மாதிரி உதாரணங்கள் ஜெர்மனியில் மட்டுமில்லை. இந்தப் பாணியில் பேசுவது என்பது நமது லட்சியத்தைச் செயலாற்றுவதற்கு எதிரான எதிர்விளைவுகளை உண்டாக்கும் பேச்சுக்களாகும். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான கிளர்ச்சி பிரச்சார முறைகளுக்கு ஒரு இறுதியான முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும்.
நான் அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது கூட்டத் தலைவர் தோழர் குஸினன் அவர்கள் கையில் கூட்டத்திலிருந்து தோழர் எனக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அந்தக் கடிதம் ஒரு விசேஷமான கடிதமாகும். அதை நான் படிக்கிறேன் கேளுங்கள்:
“காங்கிரஸில் உங்களுடைய பேச்சில் கீழ்க்கண்ட விஷயங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது கம்யூனிஸ்ட் அகிலத்தில் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முடிவுகள் அனைத்தையும் எழுத்து வடிவத்தில் கொண்டு வந்துவிட வேண்டும். அதனால் அவற்றின் பொருளை பயிற்சி பெற்ற கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல. எந்த ஒரு சாதாரணத் தொழிலாளியும் அவற்றைப் படித்து ஆரம்பப் பயிற்சி கூட தேவையில்லாமல் கம்யூனிஸ்டுகள் என்ன விரும்பினார்கள், கம்யூனிசம் எத்தகைய மகத்தான சேவையைச் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதை மிகவும் பலமாகவே நினைவுபடுத்த வேண்டும். அத்துடன் கம்யூனிசத்திற்கான கிளர்ச்சிப் பிரச்சாரம் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய மொழிநடையில் செய்யப்பட வேண்டும்.”
இந்தக் கடிதத்தை யார் எழுதினார்கள் என்பது தெளிவாக எனக்குத் தெரியாது. ஆனால் இந்தத் தோழர் தன்னுடைய கடிதத்தில் கோடிக்கணக்கான சாதாரணத் தொழிலாளர்களின் விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. நமது தோழர்களில் பலர் நினைக்கிறார்கள், நம்முடைய கிளர்ச்சிப் பிரச்சாரத்தில் நீண்ட கடுமையான உயர்ந்த பண்டித நடையுள்ள வார்த்தைகளையும் வாசகங்களையும் உபயோகித்தால், அடுக்கான அலங்காரச் சொற்களையும் சூத்திரங்களையும் உபயோகித்தால், சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத சொற்களை உபயோகித்தால், அத்தகைய கிளர்ச்சி பிரச்சாரம் தான் தரமானது மேம்பட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். நமது சகாப்தத்தின் ஆகப்பெரிய மகத்தான தலைவரும் தொழிலாளி வர்க்க தத்துவ மேதையுமான லெனின். மிகவும் சர்வ சாதாரணமான மொழியையே, சாதாரண மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயே எப்போதும் பேசினார். எழுதினார் என்பதை மறந்துவிடுகிறோம்.
ஒவ்வொருவரும் இதை ஒரு விதிமுறையாக ஒரு போல்ஷிவிக் விதிமுறையாக ஒரு சர்வசாதாரண ஆரம்ப விதிமுறையாகக் கொள்ள வேண்டும்.
நீங்கள் எழுதும்போதும் பேசும்போதும் சாதாரண அணிகளில் உள்ள தொழிலாளர்களை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய வேண்டுகோளில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். உங்கள் தலைமையை ஏற்று உங்கள் பின் வரத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஊழியர்கள்
தோழர்களே! நமது சிறந்த தீர்மானங்கள் கூட அவற்றைச் செயல்படுத்துவதற்குத் திறமையான ஆட்கள் இல்லையென்றால் பெறும் காகிதக் குப்பைதான் என்றாலும் துரதிருஷ்டவசமாக நமக்கு முன்புள்ள மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான ஊழியர் பிரச்சனை மீது இந்தக் காங்கிரஸ் அநேகமாக எந்த கவனமும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நான் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
கம்யூனிஸ்ட் அகிலத்தில் நிர்வாகக் கமிட்டியின் அறிக்கையின் மீது ஏழு நாட்கள் விவாதம் நடைபெற்றது. பல நாடுகளிலிருந்து பலர் பேசினார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் தான் இந்தப் பிரச்சனையின் மீது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொழிலாளர் இயக்கத்துக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ள இந்தப் பிரச்சனையின் மீது விவாதத்தில் சுட்டிக் காட்டினார்கள். அதுவும் லேசாக போகும் போக்கில் குறிப்பிட்டார்கள். நடைமுறை வேலையில் மக்கள், ஊழியர்கள் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்பதை நமது கட்சிகள் இன்னும் சரியாக உணரவில்லை.
தொடர்ந்து நமது போராட்டங்களில் நாம் நமது நல்ல அருமையான ஊழியர்களை இழந்து வருகிறோம். இந்த நிலைமையில் ஊழியர் பிரச்சனை பற்றி புறக்கணிக்கும் மனப்பான்மை அனுமதிக்க முடியாததாகும். நாம் ஒரு படிப்பாளிக் கூட்டமல்ல. ஆனால் ஒரு போர்க்குணம் மிக்க இயக்கமாகும். நமது இயக்கம் இடைவிடாமல் போர்க்களத்தில் முன்வரிசையில் நின்று கொண்டிருக்கும் இயக்கமாகும். நமது ஆற்றல் மிகுந்த துணிச்சல்மிக்க வர்க்க உணர்வு நிறைந்த நபர்கள் எல்லாம் முன்வரிசையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முன்னணித் தோழர்களைத் தான் எதிரிகள் வேட்டையாடுகிறார்கள். கொலை செய்கிறார்கள். சிறைக்கூடங்களில் சித்தரவதைக் கூடங்களில் தள்ளுகிறார்கள். கொடுந்துன்பம் மிக்க படுமோசமான சித்திர வதைக்கு ஆளாக்குகிறார்கள். குறிப்பாக பாஸிஸ்டு நாடுகளில் இந்த நிலைமை கடுமையாக உள்ளது. இதன் காரணமாய் எண்ணிக்கையில் குறையும் நமது அணிகளை இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்க வேண்டியதும் பல புதிய ஊழியர்களை உருவாக்கி பயிற்சி கொடுக்க வேண்டியதும் ஏற்கனவே உள்ள ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டியதும் இடைவிடாது அவசியமாகிறது.
ஊழியர் பிரச்சனை குறிப்பிடத்தக்க மிகவும் அவசர மானதாகும் என்பதற்கு மீண்டும் ஒரு துணைக் காரணம் நமது செல்வாக்கின் கீழ் வெகுஜன ஐக்கிய முன்னணி இயக்கம் பெருஞ் சிறப்பு மிக்கதாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான புதிய தொழிலாளி வர்க்கம் தீவிரமான போர்க்குணம் மிக்க நபர்களை இயக்கத்தின் முன்னணிக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. மேலும் அவர்கள் இளம் புரட்சிகர முன்னணி வீரர்களாகவும் இப்போதுதான் புரட்சிகர இயக்கத்திற்கு வந்தவர்களாகவும் இதற்கு முன்னர் எப்போதும் அரசியல் இயக்கத்தில் பங்கு கொள்ளாதவர்களாகவும் அந்தப் பெரு வெள்ளம் நமது அணிகளில் வந்து நிறைந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி மேலும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்களும் தீவிர ஊழியர்களும் நம்முடன் சேருகிறார்கள். இந்தப் புதிய ஊழியர்கள்பால் நாம் அதிகமான சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக சட்டவிரோத நிலையிலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளில் இது மிகவும் அவசிய மாகிறது. இது மிகவும் அவசியம். காரணம், தங்களுடைய நடைமுறை வேலையில் இந்த ஊழியர்கள் அவர்களுடைய குறைவான தத்துவப் பயிற்சியின் காரணமாய் அவர்கள் தாங்களே தீர்க்க வேண்டிய மிகவும் சிக்கல் மிக்க அரசியல் பிரச்சனைகளை அடிக்கடி எதிர்நோக்கி சமாளிக்க வேண்டியவர்களாகிறார்கள்.
ஊழியர்கள் சம்பந்தமாக ஒரு சரியான கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்னும் பிரச்சனை நமது கட்சிகளுக்கும் இளம் கம்யூனிஸ்ட் லீகிற்கும் இதர எல்லா வெகுஜன ஸ்தாபனங்களுக்கும் புரட்சிகரமான தொழிலாளர் இயக்கம் முழுவதற்கும் ஒரு கருத்தாழம் மிக்க கவலைமிக்க பிரச்சனையாகும்.
ஊழியர்கள் சம்பந்தமாக ஒரு சரியான கொள்கையில் என்ன அடங்கியிருக்கிறது?
முதலாவதாக, ஒருவர் அவருடைய மக்களை அறிந்து கொள்ளுதல், உண்மையில் நமது கட்சிகளில் ஊழியர்களைப் பற்றி ஒரு முறையான கவனமான ஆய்வு இல்லை. அண்மையில்தான் பிரெஞ்சுக் கம்யூனிஸ்டுக் கட்சி, போலந்து கம்யூனிஸ்ட் கட்சி, கிழக்கில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவை இந்த திசையில் சில வெற்றிகளைக் சாதித்திருக்கிறார்கள். ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சி அதனுடைய தலைமறைவு காலத்திற்கு முன்பு அதன் ஊழியர்களைப் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது. நமது கட்சிகளின் அனுபவம் அவர்களுடைய ஆட்களைப் பற்றி ஆய்ந்தறியத் தொடங்கியவுடன் அதில் கட்சி ஊழியர்கள் அறவே கவனிக்கப்படவில்லை என்னும் உண்மை கண்டுபிடிக்க முடிந்தது என்பதைத் தெளிவாகக் காட்டி யிருக்கிறது. மறுபக்கத்தில் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தீங்கு விளைவிக்கக் கூடிய பல அன்னிய குணம்படைத்த நபர்கள் அக்கட்சிகளிலிருந்து அழிந்தொழியத் தொடங்கினார்கள். பிரான்ஸில் போல்ஷிவிக் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தபோது செலார், பார்பி ஆகியோர் வர்க்க விரோதியின் ஏஜண்டுகள் என்பது தெரிய வந்தது. அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த உதாரணத்தை எடுத்துக்காட்டுவது அதைப் புரிந்து கொள்வதற்குப் போதுமானதாகும். ஹங்கேரியில் ஊழியர்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது, ஆத்திரமூட்டி நாசவேலை செய்வோரும் எதிரி ஏஜண்டுகளும் கூடுகட்டி நின்றனர் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்கள் வேண்டுமென்றே பெரு முயற்சியுடன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாதபடி மறைந்திருந்தனர்.
இரண்டாவது, ஊழியர்களைச் சரியாக உயர்த்துவது, முன்னுக்குக் கொண்டு வருவது என்பது ஏதோ தற்காலிகமாக எப்போதாவது செய்வது அல்ல. அது கட்சியின் முறையான செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். உயர்த்தி முன்னுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கம்யூனிஸ்டு விரிவான மக்கள் பகுதியில் தொடர்பு கொண்டுள்ளவரா இல்லையா என்பதைக் கருதாமல் வெறும் பணிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மட்டுமே வேலை உயர்வு கொடுப்பது நல்லதல்ல. பல்வேறு கட்சி ஊழியர்கள் அவர்கள் குறிப்பிட்ட பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலை அடிப்படையாகக் கொண்டும் வெகுஜனங்களிடம் அவர்களுக்குள்ள செல்வாக்கு பிரபலத்தை அடிப்படையாகக் கொண்டும் வேலை உயர்வு இருக்க வேண்டும். நமது கட்சிகளில் மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ள ஊழியர் உயர்வுகளைப் பற்றிய உதாரணங்கள் நம்மிடையே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஸ்பெயின் நாட்டுப் பெண் கம்யூனிஸ்டு இந்த மாநாட்டின் தலைமைக்குழுவில் அமைந்திருப்பவர் தோழியர் டோலோரெஸ் இரண்டாண்டுகளுக்கு முன்வு இவர் சாதாரண தோழராக அணகளில் இருந்து வேலை செய்து வந்தார். ஆனால் வர்க்க எதிரிகளுடன் ஏற்பட்ட முதல் மோதலிலேயே இவர் ஒரு மிகச்சிறந்த கிளர்ச்சிக்காரர் என்றும், போர்க்குணம் மிக்க வீராங்கனை என்றும் நிரூபணமாயிற்று. அதன் பிறகு அவர் கட்சியின் தலைமை அமைப்பிற்கு உயர்த்தப்பட்டார். அவர் அத்தலைமை அமைப்பின் மிகத் தகுதிவாய்ந்த உறுப்பினர் என்பதை நிரூபித்துவிட்டார்.
வேறு பல நாடுகளிலும் இம்மாதிரியான பல முன்னுதாரணங்களை நான் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் பெரும்பாலான இடங்களில் வேலை உயர்வு முறையாக அல்லாமல், தற்செயலாக இஷ்டத்திற்கு தாறுமாறாய் கொடுக்கப்படுகிறது. அதனால் அவை எப்போதும் சரியாக இருப்பதில்லை துரதிருஷ்ட வசமான நிலைமைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் வெற்றொழுக்க வீரர்கள், வாய்வீச்சுக்காரர்கள், சவடால் வீரர்கள் உண்மையில் நமது லட்சியங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள். அவர்கள் முக்கிய தலைமைப் பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டு விடுகிறார்கள்.
மூன்றாவது, நமது ஆட்களுடைய திறமை அனைத்தையும் சிறந்த முறையில் கட்சிக்கு ஆகச் சாதகமான முறையில் பயன் படுத்துவது. செயலூக்கமுள்ள தனி உறுப்பினர் ஒவ்வொருவரின் மதிப்பு மிக்க திறமைகள் அனைத்தையும் உறுதிப்படுத்தி அதைப் பயன்படுத்துவதற்கு நம்மால் முடிய வேண்டும். சுத்த சுயம்பிரகாசமானவர் இருக்கிறார்களோ அவ்வாறே அவர்களை எடுத்துக்கொண்டு அவர்களுடைய குறைபாடுகளையும் பலவீனங் களையும் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். சிறந்த நேர்மையான கம்யூனிஸ்டுகளைத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்ட உதாரணங்களை நமது கட்சிகளில் நாம் அறிவோம். அவர்களுக்குரிய தகுதியான வேலைகளைக் கொடுத்திருந்தால் அவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்திருப்பார்கள்.
நான்காவது, ஊழியர்களைச் சரியானபடி பகிர்ந்து வேலை கொடுத்தல், முதலாவதாக, இயக்கத்தின் பிரதான இணைப்புக் கண்ணி மக்களுடன் தொடர்புள்ள அடிமட்டத்திலிருந்து தோன்றிய முன்கையெடுத்து உறுதியாகப் பணியாற்றக் கூடிய திறமையான ஆட்களின் கைகளிலே இருக்கின்றன. மிகவும் முக்கியமான மாவட்டங்களில் அத்தகைய செயலூக்கமுள்ள சிறந்த தோழர்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். முதலாளித்துவ நாடுகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊழியர்களை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. அந்த வேலைக்கு பல தடைகளும் கஷ்டங்களும் இருக்கின்றன. போதுமான பணவசதியின்மை, குடும்பப் பிரச்சனைகள் முதலிய தொல்லைகள் உள்ளன. இவற்றைச் சரியானபடி கவனத்தில் எடுத்துக் கொண்டு தீர்க்க வேண்டும். ஆனால் பொதுவாக நாம் இவற்றைச் சரியாகச் செய்யாதபடி முற்றிலும் புறக்கணித்து விடுகிறோம்.
ஐந்தாவது, ஊழியர்களுக்கு முறையாக இடைவிடாமல் உதவி செய்வது, இந்த உதவி என்பது விரிவான குறிப்பு என்னென்ன எவ்வாறு செய்ய வேண்டும் என்று அறிவூட்ட வேண்டும், நட்புணர்வுப் பூர்வமாக அவர்களின் வேலைகளைச் சரிபார்க்க வேண்டும். குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்த வேண்டும். தினசரி வேலைகளில் திட்டவட்டமாக உதவி வழி காட்ட வேண்டும்.
ஆறாவது, ஊழியர்களைப் பேணி காப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையின் தேவை ஏற்படும்போது உடனுக்குடன் கட்சி ஊழியர்களைப் பின்னணிக்கு வாபஸ் செய்து அந்த இடத்தில் வேறு தோழர்களை நிறுத்த வேண்டும். கட்சித் தலைமை குறிப்பாகக் கட்சி சட்டவிரோதமாக்கப் பட்டுள்ள நாடுகளில் கட்சி ஊழியர்களைப் பாதுகாப்பதில் அதிமுக்கிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோர வேண்டும். ஊழியர்களைப் பேணிப் பாதுகாத்தல் என்பதற்கு கட்சியில் மிகவும் திறமைமிக்க ரகசிய ஸ்தாபன (கட்சி அமைப்பு) முறையும் மிகவும் அவசியமான முன் தேவையாகும். நமது சில கட்சிகளில் அவை பெயரளவில், ஸ்தாபன அளவில் ஒழுங்குபடுத்தப்பட்டு, கட்சி விதிகள் ஏட்டளவில் அமைக்கப் பட்டு புனரமைக்கப்பட்டவுடன், எல்லாவிதமான சட்ட விரோதமான நிலைமைகளையும் சமாளிப் பதற்குத் தயாராகிவிட்டது என்றுபல தோழர்கள் கருதுகிறார்கள். கட்சி தலைமறைவான பின்னர் கட்சி புனரமைப்பு வேலையைப் பற்றி முறையாக ஆரம்பிப்பதனால் எதிரியின் நேரடியான பலமான தாக்குதல்களினால் கட்சி அளப்பரிய சேதங்களை எதிர் நோக்கி தியாகங்களைச் செய்ய வேண்டியதிருக்கிறது. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு நிலைமைகளுக்கு மாறும்போது எவ்வளவு நஷ்டங்களைச் சமாளித்து சிரமப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உதாரணம், இன்று சட்டப்பூர்வமாக உள்ள, நாளை சட்டவிரோத நிலை ஏற்படக் கூடும் என்றுள்ள கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.
ஊழியர்கள் பற்றி ஒரு சரியான கொள்கை இருந்தால் தான் நமது கட்சிகள் தங்கள் முன்புள்ள கிடைக்கக் கூடிய சக்திகள் அனைத்தையும் அதிகபட்சமாக வளர்க்கவும், பயன்படுத்தவும் முடியும். வெகுஜன இயக்கம் என்னும், மிகப் பெரிய சேமிப்பிலிருந்து மேலும் மேலும் தேவையான புதிய சிறந்த செயலூக்கமிக்க ஊழியர்களை ஈர்த்து புது பலத்தைப் பெற முடியும்.
(ஊழியர்களை தேர்வு செய்தல், பயிற்றுவித்தல் பற்றிய பகுதியில் அடுத்த பகுதியில் … )
Leave a Reply