தொகுப்பு: வி.பா.கணேசன்
1921 காலகட்டத்தில் லெனின் ரஷ்யாவின் சூழலுக்கு முன் மொழிந்த புதிய பொருளாதாரக் கொள்கை குறித்த அவரது மேற்கோள்கள் சில பின்வருமாறு:
1. துவக்க காலத்தில் சோவியத் அரசை வளர்த்தெடுக்கும் பணியின் முதல் கட்டத்தை அப்போதுதான் முடித்திருந்த தருணத்தில், ஏகாதிபத்திய யுத்தத்திலிருந்து அப்போதுதான் வெளிப்பட்டிருந்த தருணத்தில், பொருளாதார வளர்ச்சித் துறையில் நமது கடமைகள் குறித்து நாம் சொல்லியதெல்லாம் 1918ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து துவங்கி 1920 வரையிலான காலப்பகுதியின் நமது நடவடிக்கைகளை விட மிகுந்த எச்சரிக்கை மிகுந்ததாகவும், அக்கம்பக்கம் பார்த்து பேசுவதாகவுமே இருந்தன.
2. 1921ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் பொருளாதாரத் துறையில் நாம் அடைந்த மிக மோசமான தோல்வி என்பது கோல்சாக், டெனிக்கின் அல்லது மில்சுட்ஸ்கி ஆகியோரிடம் நாம் அடைந்த தோல்விகளை விட மிக மோசமானதாகும். இந்தத் தோல்வி குறிப்பிடத்தக்கது மட்டுமின்றி, அபாயகரமானதும் கூட. கீழ்மட்டத்திலிருந்து நமது பொருளாதாரக் கொள்கையின் மேல்மட்ட நிர்வாகிகள் தனிமைப்பட்டுப் போனதில் இது வெளிப்பட்டது மட்டுமின்றி நமது கட்சித் திட்டம் மிக உயிரோட்டமானதும் அவசரமானதும் என்று கருதுகின்ற உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதில் அவர்களது தோல்வியிலும் அது வெளிப்பட்டது.
3. இப்போதைய யுத்தத்தில் பொதிந்துள்ள விஷயம் என்னவென்றால் இதில் யார் வெற்றி பெறுவார்கள்? இந்தச் சூழ்நிலையை யார் முதலில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்? என்பதுதான். ஒரு கதவை மட்டுமல்ல; பல கதவுகளையும் நாம் திறந்து வைத்துக் கொண்டு வரவேற்கின்ற முதலாளிகளா? ( இன்னும் நம்முடைய உதவியில்லாமலே, நாம் அப்படியே இருந்தாலும் கூட நமது கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் வழியாகவும் அவர்கள் வரக் கூடும்!) அல்லது பாட்டாளி வர்க்க அரசு அதிகாரமா? பொருளாதார ரீதியாக அது எதை நம்பியிருக்க வேண்டும்?
4. பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கிய பிரிவும் தனிப்பட்ட ஊக்கம் என்ற குறிக்கோளின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும். அங்கு கூட்டு விவாதம் இருக்க வேண்டும்; ஆனால் பொறுப்பு என்பது தனிநபரைச் சார்ந்தது. இந்தக் குறிக்கோளை நம்மால் அமல்படுத்த இயலாத ஒவ்வொரு நடவடிக்கையிலுமே நாம் துன்பப்பட நேர்கிறது. மிகக் கூர்மையாகவும் தெள்ளத் தெளிவான முறையிலும் இந்த வேறுபாட்டை நம் மனதில் பதிக்க வேண்டும் என்றே புதிய பொருளாதாரக் கொள்கை கோருகிறது.
5. எனவே புதிய பொருளாதாரக் கொள்கை என்பது அதற்கே உரிய கல்வி புகட்டும் அம்சத்தைக் கொண்டதாக அமைகிறது என்றும் நான் கூறுகிறேன். இங்கே நீங்கள் கல்வியை கற்பிப்பதற்கான முறைகளைப் பற்றி விவாதிக்கிறீர்கள். அரைகுறை அறிவாளிக்கு இங்கே இடமில்லை என்ற அளவிற்கும் நீங்கள் செல்ல வேண்டும். கம்யூனிஸம் இருக்குமிடத்தில் கல்வி கற்பிக்கும் முறைகள் மிக மென்மையாகவே இருக்கும். ஆனால் இப்போதோ கல்வி என்பது மிகக் கடுமையானதாகவே இருக்க வேண்டும்! இல்லையெனில், நாம் மூழ்கி போக வேண்டியிருக்கும்.
6. அனைவரும் களத்தில் இறங்குங்கள்! உங்கள் பக்கத்திலேயே முதலாளிகள் இருப்பார்கள்; அந்நிய முதலாளிகள் இருப்பார்கள்; சலுகை பெற்றவர்களும் குத்தகைதாரர்களும் உங்களுக்கு மிக அருகிலேயே இருப்பார்கள். உங்களிடமிருந்து அவர்கள் லாபத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்வார்கள்; அது பல நூறு சதவீதமாகக் கூட இருக்கலாம்! அவர்கள் உங்கள் பக்கத்திலேயே இருந்து கொண்டு தங்களை செழுமைப்படுத்திக் கொள்வார்கள். அப்படியே ஆகட்டும். இதற்கிடையே பொருளாதாரத்தை எப்படி நடத்துவது என்ற வித்தையை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால்தான் ஒரு கம்யூனிஸ குடியரசை உங்களால் வளர்த்தெடுக்க முடியும்.
7. இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதுமே நம்மை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அவ்வாறு வளரும்போதே, முதலாளித்துவ உலகமானது தனது படைகள் அனைத்தையும் நமக்கு எதிராகத் திருப்புகிறது. நிலைமை இப்படித்தான் உள்ளது. எனவேதான் இந்தப் போராட்டத்தில் நாம் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.
8. தொழில் துறையானது விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசு வர்த்தகத்தை நடத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் தங்களது தேவைகளை வர்த்தகத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். பணிபுரியும் ஒவ்வொருவருமே தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் இந்த அரசை வலுப்படுத்துவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பெரும் தொழில் துறையை நம்மால் உருவாக்க முடியும்.
(அக்டோபர் 17, 1921 அன்று அரசியல் கல்வித் துறைகளின் இரண்டாவது அகில ருஷ்ய காங்கிரஸில் லெனின் புதிய பொருளாதாரக் கொள்கை குறித்து முன்வைத்த அறிக்கையிலிருந்து சில மேற்கோள்கள். லெனின், நூல்கள், தொகுதி 33. ஆதாரம்: லெனின் இண்டெர்நெட் ஆர்க்கிவ்.)
Leave a Reply