– ஜார்ஜ் டிமிட்ரோவ்
முதல் பகுதியை வாசிக்க <<<<<<
[1882 ஜீன் 18ல் பிறந்த இவர், லெனின் வழியில் தோன்றிய கம்யூனிஸ்ட் தலைவர்; பாசிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகப் போராடியவர். பல்கேரியாவின் தொழிற்சங்கத் தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் விளங்கியவர்.
பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியை அரும்பாடுபட்டு உருவாக்கி அதன் தலைவராக 1946 முதல் 1949 வரை இருந்தவர். 1902ல் புதிதாகத்து வங்கியிருந்த தொழிலாளர் இயக்கத்திலும் சமூக ஜனநாயக கட்சியிலும் இணைந்தார்.
1913லிருந்து 1923 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். 1918ல் முதல் உலகப் போரை அவர் எதிர்த்த காரணத்தால் சிறையில் தள்ளப்பட்டார். 1935 முதல் 1943 வரை மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தை வழிநடத்திச் சென்றவர்.
1944 முதல் 1949 (இறக்கும்) வரை பல்கேரியாவின் பிரதமராக இருந்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு பல்வேறு தலைப்புகளில், குறிப்பாக ஐக்கிய முன்னணி தந்திரம், தொழிற்சங்க இயக்கங்களின் கடமைகள், பாசிசத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் ஒற்றுமை பற்றி எழுதியவர். 1949 ஜீலை2ல் மறைந்தார்.]
——————————————
ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் நமது பிரதான அளவுகோல் ஏதுவாக இருக்க வேண்டும்?
முதலாவதாக, தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்தில் முழு முதல் பற்று கட்சியின் மீது அளவு கடந்த விசுவாசம். வர்க்க விரோதியை எதிர்த்து போரிட்டு, போர்க்களத்தில், சிறைக் கூடங்களில், நீதிமன்றங்களில், சோதனைகளில், தேர்வு கண்டவர்கள்.
இரண்டாவது, மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பு. தோழர்கள் மக்களுடைய நலவுரிமைகளில் முழுமையாக ஈடுபட்டவர்களாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கை நாடித் துடிப்புகளை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். நமது கட்சி ஸ்தாபனங்களின் தலைவர்களின் அந்தஸ்தும் கவுரவமும் எல்லாவற்றிற்கும் முதன்மையாக மக்கள் தாங்களாகவே அவர்களைத் தங்கள் தலைவர்களாகக் கருதுவதன் அடிப்படையில், மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் கட்சித் தலைவர்களின் திறமையை, ஆற்றலை, போராட்டத்தில் அவர்களுடைய உறுதியை, தன்னலமற்ற தியாகத்தைப் பார்த்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதனடிப்படையில் அமைய வேண்டும்.
மூன்றாவதாக, குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒருவர் தனது பொறுப்பு நிலையை சுயேச்சையாகக் கண்டு கொள்ளும் ஆற்றல், முடிவுகளை எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பயப்படாதிருத்தல். பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு பயப்படும் ஒருவர் ஒரு தலைவரல்ல. முன்கையெடுத்து செயலாற்ற முடியாத ஒருவர். “எனக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதைத்தான் செய்வேன்” என்று கூறும் ஒருவர் ஒரு போல்ஷ்விக் அல்ல. தோல்வி ஏற்படும்போது சோர்வு ஏற்பட்டு அறிவிழக்காமலும், வெற்றி ஏற்படும்போது மண்டைக்கணம் ஏற்படாமலும் முடிவுகளை நிறைவேற்றுவதில் தளர்வில்லாத உறுதியைக் காட்டுபவர்தான் ஒரு உண்மையான போல்ஷிவிக் தலைவராவார். ஊழியர்கள் மிகச் சிறந்த முறையில் விருத்தி அடைவதும், வளருவதும் போராட்டங்களில் ஏற்படும் ஸ்தூலமான பிரச்சனைகளை சுயேச்சையாகத் தீர்ப் பதற்கான நிலையில் அவர்களுக்கு இடமளிக்கும் போதும், அவர்களுடைய முடிவுகளுக்கு அவர்கள்தான் முழுப் பொறுப்பு என்று உணரும் போதுதான்.
நான்காவது, கட்டுப்பாடும் வர்க்க விரோதிகளுக்கெதிரான போராட்டத்திலும் போல்ஷிவிக் கொள்கை வழியிலிருந்து எந்த விலகலும் திரிபும் இருந்தாலும் அதைக் கடுமையாக விட்டுக் கொடுக்காமல் எதிர்க்கும் குணத்திலும் போல்ஷிவிக் வார்ப்பட மாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனை நிலைகளின் மீது நாம் அதிகமாக வலியுறுத்த வேண்டும். இவைதான் ஊழியர்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதை நிர்ணயிக்கின்றன. ஏன் என்றால் நடைமுறையில் யாருக்கு அதிகமாகச் சலுகை கொடுக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு தோழர் நல்ல எழுத்தாளராகவோ அல்லது நல்ல பேச்சாளராகவோ இருந்தால் அவருக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் நல்லப்போராட்ட குணம் படைத்தவராகவோ அல்லது செயல்வீரராக இல்லாமலிருந்தாலும் பரவாயில்லை. வெறும் பேச்சுக்கும் எழுத்துக்கும் மட்டும் அதிக சலுகை தரப்படுகிறது. வேறு சில அத்தகைய தோழர்கள் நன்றாக எழுத முடியாமலும் பேச்சாளராகவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஒரு உறுதிமிக்க தோழராகவும் முன்கையெடுத்து எந்த வேலையையும் திறம்பட செய்பவராகவும் மக்களுடன் நெருங்கித் தொடர்பு கொண்டவராகவும் போர்க்களத்திற்கு நேரில் செல்லும் ஆற்றலும் போராட்ட களத்தில் இதரர்களையும் ஈர்த்து தலைமை தாங்கும் ஆற்றல் கொண்டவராகவும் இருக்கலாம். அவர்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படுவதில்லை. வெறும் செக்டேரியன்ளும், குருட்டுத்தனமான கோட்பாட்டுவாதிகளும், வெற்றொழுக்க வாய் வீச்சாளர்களும் குவிந்து உண்மையான வெகுஜன ஊழியர்களும் உண்மையான தொழிற்சங்கத் தலைவர்களும் பின்னுக்குத் தள்ளப்படும் செயல்கள் பலவற்றை நாம் காணவில்லையா?
போல்ஷிவிக் உள்ளுறுதி, புரட்சிகரமான பலம் கொண்ட குணப்பண்பு, அவற்றைச் செயல்படுத்தும் உள வலிமை ஆகியவற்றுடன் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்னும் ஞானத்தையும் நமது தலைமையிலான ஊழியர்கள் ஒன்றிணைக்க வேண்டும்.
ஊழியர்கள் பிரச்சனை பற்றியதன் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம் (ஐ.எல்.டி) தொழிற்சங்க இயக்கத்திலுள்ள ஊழியர்கள் சம்பந்தமாக என்ன செய்ய வேண்டுமென்று பணித்துள்ளது பற்றி இங்கு நான் எடுத்துக்கூற விரும்புகிறேன். அரசியல் கைதிகளுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும், வெளிநாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு அங்குக் குடியேறியுள்ள அரசியல் ஊழியர்கள், அடக்குமுறைகளுக் குள்ளாக்கப்பட்ட புரட்சிக்காரர்கள், பாஸிஸ்டு எதிர்ப்பு வீரர்கள் ஆகியோருக்கு சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு ஸ்தாபனங்கள் அளித்த பொருளாயத, தார்மீக உதவி பலநாடுகளிலுள்ள பல ஆயிரக்கணக்கான அருமையான தொழிலாளி வர்க்கப் போராட்ட வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது அவர்களின் பலத்தையும் போராட்டத் திறனையும் பாதுகாத்திருக்கிறது. சிறை சென்றிருக்கும் எங்களைப் போன்றவர்கள், எங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக நேரடியாக சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் அரிய பணிகளைப் பற்றிய சிறப்பு மிக்க பெரும் அளவிலான முக்கியத்துவத்தைக் கண்டு கொண்டோம்.
இந்த சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம் தனது அரிய பணியின் மூலம் லட்சக்கணக்கான பாட்டாளிகள் மற்றும் விவசாயிகள், படிப்பாளிகளுக்கிடையிலுள்ள புரட்சிகரமான நபர்கள் ஆகியோரின் அபிமானத்தை, பக்தியை, உளம் நிறைந்த நன்றியறிதலை வென்றெடுத்திருக்கிறது.
இன்றைய சூழ்நிலைமைகளில் அதாவது பூர்ஷ்வா பிற்போக்கு சக்திகள் வளர்ந்து கொண்டும், பாஸிஸம் வெறி கொண்டு திரிந்து கொண்டும் வர்க்கப் போராட்டம் மிகவும் கூர்மையடைந்து கொண்டுமிருக்கும் இன்றையச் சூழ்நிலைமைகளில், சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கு மிகப்பெரும் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் முன்பு இப்போதுள்ள முக்கிய கடமை அது எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்களுடைய உண்மையான வெகுஜன ஸ்தாபனமாக ஆக வேண்டு. (குறிப்பாக பாஸிஸ்டு நாடுகளில் அங்குள்ள விசேஷ சூழ்நிலைமைகளுக்குத் தக்கபடி தன்னை அமைத்துக் கொள்ள வேண்டும்) அதாவது அது பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியின் பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் கூட்டணியின் கோடிக்கணக்கான மக்களைத் தழுவியுள்ள அக்கூட்டணிகளின் ஒருவகை “செஞ்சிலுவை சங்கத்தைப்போல்” இருக்க வேண்டும். பாஸிஸத்திற்கெதிரான போர்க்களத்தில் கடுமையான சமரில் ஈடுபட்டுள்ள, சமாதானத்திற்கும் சோசலிசத் திற்கும் போராடிக் கொண்டிருக்கிற உழைக்கும் பெரு மக்களான ராணுவத்தின் ‘செஞ்சிலுவை’ சங்கமாக இருக்க வேண்டும். சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம் வெற்றிகரமாகத் தனது பங்கை செலுத்த வேண்டுமானால் ஆயிரக்கணக்கான தனது சொந்த ஊழியர்களை ஏராளமான தனது சொந்த பொது ஊழியர்களை, சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களை பயிற்றுவிக்க வேண்டும். இந்த மிக முக்கியமான ஸ்தாபனத்தின் அதி முக்கியமான கடமைகளுக்குத் தங்கள் தகுதி திறன் மூலம் பதிலளிக்கும் வகையில் தங்கள் சீரிய கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் பயிற்றுவிக்க வேண்டும்.
இங்கு நான் திட்டவட்டமாக மிகக் கூர்மையாக ஒன்று கூற விரும்புகிறேன். பொதுவாக தொழிலாளர் இயக்கம் என்று எடுத்துக் கொண்டாலே ஒரு அதிகார வர்க்க முறையிலான அணுகுமுறையும், ஆட்களின் பால் ஒரு இதயமற்ற அணுகுமுறையும் மிகவும் கேடுவிளைவிக்கக் கூடியதாகும். இன்னும் சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் பணிகள் துறையில் இத்தகைய அணுகு முறை இருக்குமானால் அது கிரிமினல் செய்கைக்கு அடுத்த தீமை பயப்பதாகும். தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வீரர்கள், பிற்போக்கு சக்திகளின் பாஸிஸத்தின் கீழ் பலியானவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை முகாம்களிலும் கொடுஞ்சிறைக் கோட்டங்களிலும் துன்ப துயரங்களில் வீழ்ந்து கிடக்கும் அந்த அருமைத் தோழர்கள், நாடு கடத்தப்பட்டு பல இடங்களில் வாழ்ந்துவரும் தோழர்களும் அவர்களுடைய குடும்பங்களும் சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனங்களுடையவும் அதன் செயல்வீரர்களுடையவும் மிகுதியான அனுதாபத்தையும் நல்லாதரவையும் பெற வேண்டியவர்களாவர். சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம், பாட்டாளி வர்க்கப் போராட்ட, பாஸிஸ எதிர்ப்புப் போராட்ட இயக்கங்களில் ஈடுபட்டுள்ள போராட்ட வீர்களுக்கு உதவுவதில் குறிப்பாகத் தொழிலாளர் இயக்கத்திலுள்ள ஊழியர்களை வாழ்வளவிலும் தார்மீக அளவிலும் சேமித்துப் பாதுகாப்பதில் இன்னும் அதிகமாக கவனம் எடுத்து ஆதரவளித்துத் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டும். கம்யூனிஸ்டுகளும், புரட்சிகரமான தொழிலாளர்களும் சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றக் கூடியவர்கள் அந்த சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனங்களின் பங்கையும், கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தொழிலாளி வர்க்கத்திற்கும் கம்யூனிஸ்டு அகிலத்திற்கும் முன்பாக ஒவ்வொரு படியிலும் தங்கள் அளப்பரிய பொறுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
தோழர்களே! நீங்கள் ஏற்கனவே நன்கு அறிவீர்கள் ஊழியர்கள், தங்கள் சிறந்த பயிற்சியை போராட்டங்களில் செயல் வளர்ச்சிப் போக்கில், தாங்க முடியாத பல கஷ்டங்கள் தொல்லகளைத் தாங்குவதில் பல சோதனைகளிலிருந்து மீள்வதில் இன்னும் சாதகமும், பாதகமும் நிறைந்த செயலாட்சி உதாரணங் களிலிருந்தும் மிகச் சிறந்த பயிற்சியை பெறுகிறார்கள். வேலை நிறுத்தங்களில் ஆர்ப்பாட்டங்களில் சிறைக் கூடங்களில், நீதி மன்றங்களில் காட்டப்பட்ட வீரமிக்க செயலாட்சிகள் பற்றி நூற்றுக்கணக்கான வீர சாகஸத்தின் எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மிடைய நெஞ்சுறுதியின்மை, கோழைத்தனம், இன்னும் ஓடுகாலித்தனம் ஆகியவற்றிற்கும் கூட பல உதாரணங்கள் உள்ளன. இந்த உதாரணங்களை நல்லவற்றையும் கெட்டவற்றையும் இரண்டையும் அடிக்கடி மறந்து விடுகிறோம் இந்த உதாரணங்களினால் கிடைக்கும் அணுகூலங்களை நாம் மக்களுக்குக் கற்று கொடுப்பதில்லை. நாம் அவர்களுக்கு எந்த உதாரணங்கள் புத்துணர்ச்சி ஊட்டுகின்றன. எவற்றை நிராகரிக்க வேண்டும் என்பதைக் காட்ட வேண்டும். வர்க்க மோதல்களின் போது போலீஸ் விசாரணை நேரத்தில், சிறைக் கூடங்களில், சித்திரவதைக் கூடங்களில், நீதிமன்றங்கள் முதலியவற்றில் நமது தோழர்கள் மற்றும் போர்க்குண மிக்க தீவிரத் தொழிலாளர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் சேகரித்து ஆராய்ந்து அறிய வேண்டும். சிறந்த உதாரணங்களை வெளியே அறிவித்து பிரபலப்படுத்த வேண்டும். அவை முன்னு தாரணங்களாக விவரித்துக் கூற வேண்டும். அசிங்கமான வற்றை போல்ஷிவிக் அல்லாதனவற்றை பண்பு கெட்ட செயல்களை யெல்லாம் ஒதுக்க வேண்டும். ரீச்ஸ்டாக் தீ வைப்பு வழக்கு விசாரணையிலிருந்து நம்முடைய அரும் தோழர்கள் பலர் பூர்ஷ்வா கோர்ட்டுகளிலும், பாஸிஸ்டு கோர்ட்டுகளிலும் கொடுத்த வாக்குமூல அறிக்கைகள், போல்ஷிவிக்குகள் நீதிமன்றங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு தெளிவான ஞானம் எண்ணற்ற நமது ஊழியர்களிடையே வளர்ந்து கொண்டு இருப்பதைக் காட்டுகிறது.
ஆனால் உங்களில், இந்தக் காங்கிரஸில் பிரதிநிதிகளாக வந்துள்ள உங்களில் எத்தனை பேருக்கு ருமேனிய ரயில்வே தொழிலாளர் மீதுள்ள வழக்கு விசாரணை பற்றிய விவரங்கள் தெரியும். பியதே ஸூல்ஸே மீதான வழக்கு விவரங்கள் தெரியும். பியதே ஸூல்ஸே ஜெர்மனி பாஸிஸ்டுகளால் கொல்லப்பட்டார். வீரம் மிக்க ஜப்பானியத் தோழர் இட்சிகாவா மீது வழக்கு விசாரணை பல்கேரிய புரட்சிகரமான படை வீரர்கள் மீதான வழக்கு விசாரணை, இம்மாதிரி இன்னும் பல வழக்கு விசாரணைகள், அவற்றில் மிகச் சிறந்த அளவில் பாட்டாளி வர்க்க வீரம் வெளிப்படுத்தப்பட்ட சீரிய உதாரணங்கள் ஏராளம் உள்ளன. அது எத்தனை பேருக்குத் தெரியும்?
பாட்டாளி வர்க்கம் வீரம் பற்றிய இத்தகைய சிறப்பு தகுதி பெற்ற எடுத்துக்காட்டுகளை விரிவாகப் பிரபலப்படுத்த வேண்டும். நம்முடைய அணிகளிலும் தொழிலாளி வர்க்க அணிகளிலும் வெளிப்படுகின்ற கோழைத்தனம், பண்புக் கேடு எல்லா வகையான இழுக்கு, அழுக்குகளுக்கு மாற்றாக, நமது தோழர்களின் செயற்கறிய வீர சாகஸங்களை விரிவாக மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த உதாரணங்களை தொழிலாளர் இயக்கத்தில் ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கு மிக விரிவாகப் பயன்படுத்த வேண்டும்.
தோழர்களே! நமது கட்சித் தலைவர்கள் நமக்குப் போதுமான ஆட்கள் இல்லை. கிளர்ச்சிப் பிரச்சார வேலைகளுக்கு, பத்திரிகை களுக்கு, தொழிற்சங்கங்களுக்கு, இளைஞர்கள், மாதர்கள் இடையில் வேலை செய்வதற்குப் போதுமான ஆட்கள் இல்லை என்று அடிக்கடி புகார் சொல்கிறார்கள். போதுமான ஆட்கள் உள்ளது. நமக்கு ஆட்கள் இல்லை அவ்வளவுதான். ஆனால் இதற்கு லெனினுடைய பழைய ஆனால் என்றென்றும் புத்தம் புதிதாய் ஒளிபெற்று பிரகாசிக்கும் கீழ்க்கண்ட வார்த்தைகள் மூலம் பதில் கூற விரும்புகிறேன்.
“போதுமான ஆட்கள் இல்லை – இருப்பினும் ஏராளமான ஆட்களும் இருக்கிறார்கள். ஏராளமான எண்ணிக்கையில் ஆட்கள் இருக்கிறார்கள். ஏன் என்றால் தொழிலாளி வர்க்கம் சமுதாயத்தின் பலவேறுபட்ட பிரிவினர்களும் ஆண்டுதோறும் அவர்களுடைய அணிகளிலிருந்து ஏராளமான எண்ணிக்கையில் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்த விரும்பும் அதிருப்தி அடைந்த ஆட்கள் வெளியே வந்து கொண்டே இருக்கிறார்கள்… அதே சமயத்தில் நமக்கு ஆட்கள் இல்லை. ஏன் என்றால் நமக்குத் திறமையான ஸ்தாபன அமைப்பாளர்கள், விரிவான, அதே சமயத்தில் ஒரே மாதிரியான, இசைவான வேலையை எல்லா சக்திகளுக்கும் மிகவும் சர்வ சாதாரண முக்கியமற்ற சாதாரண மானவர்கள் உள்பட அனைவருக்கும் வேலை கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்வதற்குத் திறமை படைத்தவர்கள் நம்மிடம் இல்லை. (இனி செய்யவேண்டியது என்ன?)
லெனினுடைய இந்த வார்த்தைகளை நம்முடைய கட்சிகள் முழுமையாகக் கிரகிக்க வேண்டும். தங்களுடைய அன்றாட வேலைக்கு அவற்றை வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும். ஏராளமான பேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நம்முடைய ஸ்தாபனங்களில் இருப்பவர்களின் வேலை நிறுத்தங்களில் ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களின் பல்வேறு வெகுஜன ஸ்தாபனங்களில், ஐக்கிய முன்னணி நிறுவனங்களில் நாம் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுடைய வேலையின் போது, போராட்டத்தின்போது, அத்துடக் சேர்ந்து அவர்கள் வளருவதற்கு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் தொழிலாளி வர்க்க லட்சியத்திற்கு உண்மையில் பயனுள்ள வகையில் சரியான நிலையில் வைக்கப்பட வேண்டும்.
தோழர்களே, கம்யூனிஸ்டுகளாகிய நாம் செயல் வீரர்கள், நமது பிரச்சனை முதலாளித்துவத்தின் தாக்குதல்களை எதிர்த்து பாஸிஸத்தை எதிர்த்து, ஏகாதிபத்திய யுத்த பயமுறுத்தலை எதிர்த்து நடத்த வேண்டிய நடைமுறைப் போராட்டம் பற்றிய முதலாளித் துவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டம் பற்றிய பிரச்சனை யாகும். துல்லியமாக இந்த நடைமுறைக் கடமையின் காரணமாகத் தான் கம்யூனிஸ்டு ஊழியர்கள் புரட்சிகரமான தத்துவத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஏன் என்றால் தத்துவம் நடைமுறை வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சரியான திசைவழியைக் கண்டுபிடிக்கும் சக்தியையும் லட்சிய நோக்கில் தெளிவும், வேலையில் உறுதிப்பாடும் லட்சியத்தின் வெற்றியில் நம்பிக்கையும் அளிக்கிறது.
ஆனால் உண்மையான புரட்சிகரமான தத்துவம் பலவகையான வலுவிழந்த ஆண்மையற்ற தத்துவ முறைகளுக்கு மொட்டையாக மேற்கோள்களைக் கொண்ட வறட்டு விளையாட்டு களுக்கு முற்றிலும் விரோதமானவை. “நமது தத்துவம் ஒரு வறட்டுத்தனமான கோட்பாடல்ல. ஆனால் அது நமது செயலுக்கு வழிகாட்டியாகும்”. லெனின் இவ்வாறு கூறுவது வழக்கம். இத்தகைய ஒரு தத்துவம் தான் நமது ஊழியர்களுக்குத் தேவை. அது அவர்களுக்கு மிகவும் அவசியமான தேவையாகும். உணவும் காற்றும் தண்ணீரும் எவ்வளவு அவசியமாகத் தேவைப்படுகிறதோ அவ்வளவு அவசியமாக இந்தத் தத்துவம் நமது ஊழியர்களுக்குத் தேவைப்படுகிறது.
யாராவது உண்மையில், உயிரற்ற வறட்டுத்தனமான வெட்டிக் காய்ந்துபோன திட்டங்களை, தீமை நிறைந்த புத்தகப் பூச்சிகளின் வாசகங்களைத் தவிர்க்க விரும்புகிறார்களோ, அவர்கள் மக்களுடன் நின்று அவர்களுக்குத் தலைமை தாங்கி நடத்தப்படும் நடைமுறை செயலூக்கமிக்க போராட்டங்கள், மார்கஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் வல்லமை மிக்க, செழுமையான வளம் நிறைந்த சகலசக்தியும் வாய்ந்த போதனைகளில் முழு தேர்ச்சி பெறுவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்வது ஆகிய இருவழிகளிலும் செக்கச் செவேரென்று சூடாக்கப்பட்ட இரும்பு சூட்டுக்கோல் கொண்டு அந்தத் தீய திட்டங்களைப் பொசுக்க வேண்டும்.
தொடரும் …