மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்து சட்ட சீர்திருத்தம்: போராட்டமும், படிப்பினைகளும் ! – பிருந்தா காரத்


தமிழில்: கி.ரா.சு.

ஆங்கிலத்தில் வாசிக்க

பகுதி 1

இந்து ஆச்சாரத்துக்கு சவால்

அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சங் பரிவாரத்தின் மூத்த தலைவர்கள் உட்பட பலரும், சுதந்திர இந்தியாவை வடிவமைப்பதில் அம்பேத்கர் வழங்கிய அறிவார்ந்த, பன்முகப் பங்களிப்பின் பாரம்பரியத்தை  பாராளுமன்றத்தில் வேண்டுமென்றே திரித்துக் கூறினர்.

அவற்றில் ஓர் அம்சம், இந்தியாவில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டது, நால்வருண முறையுடன் அதன் தொடர்பு மற்றும் இந்துச் சட்டங்களுக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய உடனடித் தேவைகள் ஆகியவை குறித்த டாக்டர் அம்பேத்கரின் புரிதல் பற்றியதாகும்.  இந்து சட்ட திருத்த மசோதா பற்றிய விவாதத்தின்போது அவர் கூறினார்: “இந்து சமூகம் எதை ஏற்று வரித்துக் கொண்டாலும்,  சூத்திரர்களையும், பெண்களையும் அடிமைப்படுத்தும் அதன் சமூக அமைப்புக்களை (நால்வருணம்) அது ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.  இந்தக் காரணத்துக்காகவே சமூகம் மேலும் முன்னேறிச் செல்வதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் இந்தச் சட்டம் முன்வர வேண்டும்.”

டாக்டர் அம்பேத்கருக்கும், மனுஸ்மிருதிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடாக இது இருக்கும் அதே வேளையில், 1940லிருந்து இந்து சட்ட திருத்த மசோதாக்கள் ஏற்கப்பட்ட ஐம்பதுகளின் இறுதி வரை, தங்களது சொந்தப் பாத்திரம் குறித்து செவிடாக்கிவிடும் அமைதியை சங் பரிவாரத் தலைவர்கள் கடைப்பிடித்து வந்ததுள்ளனர்.  பெண்கள் குறித்த அவர்களது பார்வை மிகக் குறைந்த அளவே மாறியுள்ளதால் மட்டுமல்ல; வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவும் அது அவசியமாகிறது.

அப்போது, நேரு அரசின் சட்ட அமைச்சர் என்ற முறையில், இந்துச் சட்டங்களுக்கு டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்கள் பற்றிய கேள்வியில் கூட ஆர்.எஸ்.எஸ்.சும், அதனுடன் தத்துவார்த்த ரீதியாகப் பின்னிப் பிணைந்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி போன்ற  தலைவர்களும், அந்த சீர்திருத்தங்களை வலுவாக எதிர்த்ததுடன், அம்பேத்கருக்கு எதிராக, நேரடியான, தனிப்பட்ட தாக்குதலை மேற்கொண்டனர்.  அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் மற்றும் மேலும் பலர் உட்பட காங்கிரசின் பல உயர்மட்டத் தலைவர்களின் கூட்டும் அவர்களுக்கு இருந்தது.  அவர்களுக்கு நசிருதீன் அஹமது போன்ற சில முஸ்லீம் அடிப்படைவாதிகளின் ஆதரவும் இருந்தது.  இவர்கள் அனைவருமே இந்த மசோதாவை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்தனர்.  அது இந்து அடிப்படைவாதியோ, முஸ்லீம் அடிப்படைவாதியோ, அவர்களது பிற்போக்குப் பார்வைகளுக்கு பொதுவான அம்சங்கள் உண்டு, அவர்கள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற உண்மையை இது மீண்டும் நிரூபித்தது.

டாக்டர் அம்பேத்கர் “சர்வாதிகாரி” என்றும், ஒரு “நவீன மனு” என்றும் “மூலமும் இல்லாமல், முற்போக்காகவும் இல்லாமல்” இருக்கிறார் என்றும் பழிக்கப்பட்டார். அவர் ஒரு “அம்பாவேதத்தை” உருவாக்குவதாக  கண்டனம் செய்யப்பட்டார்.  அவரது சாதியின் பெயரை வெளிப்படையாகவே குறிப்பிட்டு நினைவூட்டப்பட்டார். பதிலுக்கு அவரோ சிலசமயங்களில் “ஒரு பிராமணன் எப்படி என்னைப் போன்ற தீண்டத்தகாதவனிடம் பொறாமை கொள்ள முடியும்?” என்று கூர்மையாகவோ, “அவர்களெல்லாம் பைத்தியக்காரர்கள்” என்று நகைச்சுவையாகவோ பதிலளித்தார். “நமது பைத்தியக்கார விடுதிகளெல்லாம் நிரம்பியிருப்பதால்தான் அவர்கள் இங்கு இருக்கின்றனர்.” என்று கூட அவர் குறிப்பிட்டார். ஆனால் வெட்கப்படத்தக்க வகையில் அவரது அமைச்சரவை சகாக்கள் கூட அவரைப் பாதுகாக்க உடன் நிற்கவில்லை.  ஒரே ஒருமுறைதான் ஒரு சூடான விவாதத்தின்போது நேரு குறுக்கிட்டுக் கூறினார்: “ஒரு சில மாண்புமிகு உறுப்பினர்களின் மென்மையான தோலைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.நாங்கள் நீண்ட உரைகளையும் வேறுபல விஷயங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.  அவை எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளன.  அது அப்போது மறுக்கப்படாமல் இருந்திருந்தால், டாக்டர் அம்பேத்கருடன் உடன்படாதவர்கள் இப்போது மறுக்கக் கூடாது என்பதும் ஏற்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.”  ஆனால் உண்மை என்னவென்றால் முக்கியத் தாக்குதல் அம்பேத்கர் மீதுதான் இருந்தது, நேரு மீதல்ல.  எனவே பிரதமர் “நாங்கள்” என்று பேசியபோது அது சரியான பிரதிபலிப்பாக இல்லை.

அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பெண்களின் போராட்டங்கள்

இந்து சட்ட மசோதாவுக்கு இட்டுச் சென்ற காலகட்டமானது மகாராஷ்டிராவில் டாக்டர் அம்பேத்கரின் உத்வேகமான தலைமையில் “விரக்தியுற்ற வர்க்கங்கள்”, “தீண்டத்தகாதவர்கள” சேர்ந்த பெண்கள் தமது சாதித் தளைகளை உடைத்துக் கொண்டு உறுதியாக நின்றதைக் கண்டது. 1927 டிசம்பரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகத் மாநாட்டைத் தொடர்ந்து, விரக்தியுற்ற வர்க்கங்களின் பெண்கள் மிகவும் உறுதியாகவும்,  வீரத்துடனும் இருந்தனர்.  பின்பு அவர்கள் சாதி அமைப்பின் கொடூரங்களுக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் குறியீடான மனு நீதிச்சட்டத்தைக் கொளுத்துவதில் டாக்டர் அம்பேத்கரின் அறைகூவலை ஏற்று,  அவருடன் இணைந்து கொண்டனர். இந்த நடவடிக்கையானது பெண்களுக்கெதிரான சாதி அமைப்புக்கெதிராகவும், சாதிய சடங்கு, சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், நடைமுறைகளுக்கு எதிராகவுமான போராட்டத்தில் ஒரு பெரும் அடியை முன்னெடுத்து வைத்தது.

நாட்டின் பிற பகுதிகளிலும் கூட, தனது சத்தியாகிரகங்களில் இணைந்து கொள்ளுமாறு காந்திஜி விடுத்த அறைகூவலை ஏற்று, ஆயிரக்கணக்கான பெண்கள் அரசியல் செயல்பாட்டில்,தெருவில் இறங்கினர்.  பல்வேறு மாநிலங்களில் பெண்களின் அமைப்புகள் அமைக்கப்பட்டன.  அகில இந்திய பெண்கள் காங்கிரஸ் (AIWC) போன்ற சில அமைப்புக்கள்,  இந்தியாவின் சுதந்திரத்துடன் இணைந்த, ஒரு சுதந்திர இந்தியாவில் பெண்களின் சமத்துவத்தைக் கோரிய விஷயங்களில், பிரதானமாக உயர்வர்க்க, உயர்சாதிப் பெண்களால் தலைமை தாங்கப்பட்டன.  எவ்வளவுதான் இத்தகைய பார்வை வரம்புக்குட்பட்டதாக இருப்பினும், புறவயமாக அது பெண்களுக்கெதிரான, பாலின அடிப்படையிலான பாகுபாட்டின் மீது கவனம் செலுத்த உதவியது.  1934ல் AIWC திருமணத்திலும், வாரிசுரிமைச் சட்டத்திலும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை அகற்றக்கூடிய ஒரு இந்துச் சட்டத்தைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் ஏற்பட்ட, போர்க்குணமிக்க, வளர்ந்து வந்த போக்கானது, பல்வேறு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் பெண்கள் தலைமையிலான பெண்கள் சுயபாதுகாப்புக் குழுக்களிலும், மகிளா சங்கங்களிலும், காணப்பட்டது.  பொருளாதார, சமூக ரீதியில் சுரண்டப்பட்ட வர்க்கப் பெண்களிடையே பணிபுரிந்த இந்தத் துணிவுமிக்க முன்னோடிகள், அனைத்து நிலைகளிலும் அப்போது இருந்த நிலைக்குச் சவால் விடுத்தனர். அவர்கள் தமது ஊக்கத்தை லெனினின் கீழ் ஏற்பட்ட மாபெரும் போல்ஷெவிக் புரட்சியிலிருந்து பெற்றனர்.  அந்தப் புரட்சி வெற்றியடைந்த உடனேயே பெண்கள் உரிமைகள் குறித்த, சமத்துவமற்ற அனைத்துச் சட்டங்களையும் ரத்து செய்து விட்டது.  மூத்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களான பி.சுந்தரய்யா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், ஏ.கே.கோபாலன் போன்றோரும் இந்து மரபுக் கோட்பாட்டின் கோட்டை மீது சாதி எதிர்ப்பு இயக்கங்கள் மூலமாகவும், சாதிய நடைமுறைகள், சடங்குகளிலிருந்து பெண்கள் விடுதலை கோரியும் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர்.

1926ல் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இந்த ஜனநாயகப் போராட்டங்கள் எதிலும் செய்வதற்கு ஏதுமில்லை.  மாறாக, ஆர்.எஸ்.எஸ்.சின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.பி.ஹெட்கேவார், இந்துத்வா பழக்கங்களையும், கலாச்சாரங்களையும் கட்டிக்காப்பது இந்துப் பெண் தலைவர்களின் புனிதக் கடமை என்று நம்பினார்.  1936ல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவிகா சமிதியின் நிறுவனக் கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது, “சமிதியின் நோக்கம் பெண்களிடையே இந்துத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது . . . இந்து ராஷ்டிரம் முன்னேறுவதற்கு உதவுவது.  ஒரு சிறந்த இந்துப் பெண் என்பவள் நமது தர்மத்தையும், கலாச்சாரத்தையும், தேசத்தையும் பாதுகாக்க உதவும் சம்ஸ்காரத்தை நிறைவேற்றுபவள் ஆவாள்” என்றார்.

டாக்டர் அம்பேத்கர் சாதி அடிப்படையிலான சம்ஸ்காராக்களுக்குச் சவால் விடுத்து, அவற்றை உடைத்தெறியுமாறு வலியுறுத்தியபோது, ஆர்.எஸ்.எஸ். சாதி அடிப்படையிலான அசமத்துவங்களையும், படிநிலை அமைப்பையும் பாதுகாக்க பெண்களைத் திரட்டிக் கொண்டிருந்தது.

துவக்கக் கட்டம்

1937ல், மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டசபை உறுப்பினரான ஜி.வி.தேஷ்முக், இந்துப் பெண்கள் சொத்துரிமை குறித்த ஒரு மசோதாவை ஃபெடரல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  பின்னால் தேஷ்முக் சட்டம் என்றழைக்கப்பட்ட அது, மகனின் சொத்தில் ஒரு விதவையின் உரிமையோடு நின்றுவிட்டாலும், அதற்கு நீண்டகால விளைவுகள் இருந்தன.  இந்த மசோதாவும், அதைத்தொடர்ந்த விவாதங்களின் வலிமையும், பலவீனங்களும்தான் காலனிய அரசு நான்கு உறுப்பினர் கொண்ட ஒரு குழுவை அமைக்க இட்டுச் சென்றது. அக்குழு அதன் தலைவர் பி.என்.ராவ் பெயரால் அழைக்கப்பட்டது.  1941ல் சமர்ப்பிக்கப்பட்ட முதல் ராவ் கமிட்டி அறிக்கை அனைத்து இந்துச் சட்டங்களையும் முறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியது.  1944ல் இரண்டாவது ராவ் கமிஷன் உண்மையிலேயே ஒரு தொகுப்பு வரைவை உருவாக்குமாறு அமைக்கப்பட்டது.  அது வாரிசுரிமை, திருமணம், விவாகரத்து, பாதுகாவலர், தத்தெடுத்தல் போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அறிக்கையை இறுதிப்படுத்துவதற்கு முன் ராவ் கமிட்டி பெரும்பாலான மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்துச் சட்டச் சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது.  மிகவும் ஆவேசமான பொது விவாதங்கள் நடைபெற்றன.   ஒருபுறம் இந்து மகாசபாவும், இன்னொரு புறம் பெண்கள் அமைப்புக்கள், குழுக்கள், முற்போக்கு சிந்தனையுள்ள தனிநபர்கள் அதில் பங்கேற்றனர்.  “புனிதமானது” என்று கருதப்பட்ட விஷயங்களைப் பற்றி அவை கேள்வி கேட்டதால் அவர்களது மரபுக் கோட்பாட்டின் இதயத்தின் மீதான இடியாக விழுந்தன.  சொத்துரிமை, வாரிசுரிமை போன்றவை சொத்துள்ள வர்க்கப் பெண்களின் முக்கிய ஆர்வத்தைப் பெற்ற அதே வேளையில், பெரும்பகுதி பெண்கள் ஒரு திருமணத்திற்குள் பெண்களின் உரிமைகள், விவாகரத்து உரிமை, பாதுகாப்பு, பராமரிப்பு உரிமை, சாதித் தூய்மை என்று அழைக்கப்பட்டவிஷயங்களின் மீதான தாக்குதல் மற்றும் இதர விஷயங்களின் மீது ஆர்வம் செலுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் எதிர்ப்பு

சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற இந்து மகாசபாவின் தலைவர்கள் மசோதாவுக்கெதிராக ஆர்.எஸ்.எஸ்.சுடன் இணைந்து செயல்பட்டனர்.  அச்சமயத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் சர்சஞ்சாலக்காக இருந்தவர் கோல்வால்கர்.  1950 மார்ச்சில் பஞ்சாப் மாநிலம், நங்கலில் அவர் பத்திரிகைகளுக்குக் கொடுத்த ஒரு பேட்டி அவரது பெயரிலேயே இணையதளங்களில் காணக் கிடைக்கிறது.  அதில் அவர் இந்து சமாஜத்துக்குள் சீர்திருத்தங்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.சின் பிற்போக்குப் பார்வைகளை மிகத் தெளிவாகவே முன்வைத்துள்ளார்.  குழந்தைத் திருமணத்துக்கெதிரான சாரதா சட்டத்தைக் கூட அவர் எதிர்த்தார்.  அந்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லையென்று அவர் அதற்குக் காரணம் கூறினார்.  இத்தகையதொரு வாதத்தை ஒப்புக்கொள்வதானால், பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான தற்போதைய சட்டங்கள் அனைத்துமே ஒழிக்கப்படலாம்.  ஏனென்றால் அவைகளும் கூட சரியான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை.  அது இலாபகரமானதா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் கேட்டார், “அது இலாபமளித்ததா? . . .தேவை எழும்போது பல விஷயங்கள் சமூகத்தில் தோன்றுகின்றன”.  அதைத் தொடர்ந்து அவர் பல திருமணங்கள் செய்வதை நியாயப்படுத்தினார்.  அவர் அதற்கு உதாரணமாக, “நாக்பூரில் நெசவாளர்களுக்கு வேலை செய்யப் பலர் தேவை.  ஆனால் அவர்களுக்குக் கூலிக்கு ஆட்களை அமர்த்த வசதியில்லை.  எனவே அவர்கள் பல திருமணங்கள் செய்வது அவசியமெனக் கருதுகிறார்கள்.”  சீர்திருத்தப்பட்ட இந்துச் சட்டத்தில் ஒரு தார மணத்தை சட்டமாக்குவதை உறுதிப்படுத்த வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் எடுத்த உறுதியான நிலைக்கு இதுதான் அவரது பதில்.

ராவ் கமிட்டி பொதுக் கருத்தறிதலுக்கு எங்கு சென்றாலும் அங்கு சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.  மசோதா எதிர்ப்பாளர்கள் தொடுத்த உடல்ரீதியான தாக்குதல்களும் இதில் அடக்கம்.  கமிட்டியின் முன் தம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பெண் ஆதரவாளர்களை வலதுசாரி சக்திகள் நிந்தித்தன; அவமதித்தன; தாக்குதல் தொடுத்தன.  தெருவில் அவர்கள் மீது காரித் துப்பி, இழிவான பெயர்களால் தூற்றப்பட்டனர்.  எனினும் அவர்கள் கடுமையாக உழைத்தனர்.  பிரபல கம்யூனிஸ்ட் பெண் தலைவர் ரேணு சக்ரவர்த்தி, ‘விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் பெண்கள்; என்ற தமது புத்தகத்தில் இந்து சட்டத் தொகுப்பு மசோதாவுக்கு ஆதரவாக அனைத்து சாதி, இனங்களைச் சேர்ந்த பெண்கள் மரபுவாதிகளுக்கெதிராக நடத்திய போராட்டங்கள் குறித்து ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கியுள்ளார்.

இதுதான் அப்போது இந்து சட்ட சீர்திருத்தங்களுக்காக அந்தத் தருணத்தில் நடைபெற்ற விவாதத்தின் பின்னணி.  1952ல் முதல் பொதுத்தேர்தலுக்கு முன்னால், அரசியலமைப்பு சபை மற்றும் இடைக்கால நாடாளுமன்றத்தில் இந்து சட்டத் தொகுப்பு மசோதா மீதான எரிச்சலான விவாதத்தின்போது பெருமளவு வேறுபட்ட தத்துவங்களுக்கு இடையிலான மோதல்கள் என்பவை உண்மையில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தலைமைப் பாத்திரம் வகித்த, சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து, பாராளுமன்றத்துக்கு வெளியே நடந்த போராட்டங்கள், வளர்ச்சிப் போக்குகளின் எதிரொலியும், பிரதிபலிப்புகளுமேயாகும்.

பகுதி 2

நாடாளுமன்ற விவாதம்

காலநேரம்:

ராவ் கமிட்டி கொடுத்த ஆலோசனைப்படி இந்து சட்டத் தொகுப்பு மசோதா 1947 ஏப்ரலில்,இந்தியப் பிரிவினைக்கு முன்னால், அப்போதைய சட்ட அமைச்சரும், பட்டியலின சாதிகளின் ஒரு உறுப்பினரும், டாக்டர் அம்பேத்கரைப் பின்பற்றியவருமான ஜோகேந்திரநாத் மண்டலால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.  பிரிவினைக்குப் பின்னர் அரசியலமைப்பு சபையின் முன்னால் தாக்கல் செய்வதற்கு ஒரு வருடமானது.  1948 ஏப்ரலில்தான் அங்கு தாக்கல் செய்யப்பட்டது.  நேரு அமைச்சரவையின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் அதைத் தாக்கல் செய்தார்.  பிறகு அவரும் ஒரு உறுப்பினராக இருந்த தேர்வுக் குழுவிற்கு அது அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்வுக் குழுவின் அறிக்கை 1948 ஆகஸ்ட் 12 அன்று டாக்டர் அம்பேத்கரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  ஆகஸ்ட் 31 அன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அவர் அறிக்கையை முன்வைத்தார்.  ஆனால் சீர்திருத்தம் என்ற கோட்பாட்டுக்கே எந்த அளவுக்கு வலுவான எதிர்ப்பு இருந்ததென்றால், அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை கூட அனுமதிக்கப்படவில்லை.  அந்த மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா? கூடாதா? என்பதைப் பற்றி விவாதிப்பதற்கே ஒரு வருடம் முழுதும் பரவலாக ஏழு நாட்கள் ஒதுக்கப்பட்டன, அந்த மசோதாவை விவாதிப்பதற்கு அல்ல.  போராட்டத்துக்கான கோடு மிகத்தெளிவாக வரையப்பட்டு விட்டது.  இந்த விவாதத்துக்கான கோரிக்கை நிறைவேற மேலும் ஒரு வருடமானது, அதாவது 1949, டிசம்பர் 19 அன்றுதான் அனுமதிக்கப்பட்டது.   அடுத்த ஒரு வருடம், 1950 முழுதும் இந்த மசோதா விவாதத்துக்கான நிகழ்ச்சி நிரலிலேயே இல்லை.  அதை எதிர்த்தவர்கள், 1952 மத்தியில் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இடைக்காலப் பாராளுமன்றத்தின் இறுதிக் கூட்டங்கள் முடிவு பெறும் நிலையில், அந்த மசோதாவை வேண்டுமென்றே தாமதப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.

இறுதியாக அது 1951, பிப்ரவரி 5 அன்று நிறைவேற்றத்துக்கான விவாதத்துக்கு வந்தது.  விவாதத்தின்போது, முன்பு இந்த மசோதாவுடன் அரசு இருக்கும் அல்லது விழும் என்று கூறிய பிரதமர் நேரு, வலதுசாரி சனாதனிகளின் தாக்குதலுக்குப் பணிந்து பின்வாங்கி சமரசம் செய்து கொண்டார்.  போதிய கால அவகாசம் இல்லை என்ற பெயரால் டாக்டர் அம்பேத்கரிடம் திருமணம், விவாகரத்து ஆகிய விஷயங்களை கொண்ட பகுதிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறும், வாரிசுரிமை பற்றிய பகுதிகளை விட்டு விடுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

மூன்று விஷயங்கள் தேர்வு

அம்பேத்கருக்கெதிராக இந்துத்துவா

இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர டாக்டர் அம்பேத்கருக்கு வேறு வழியில்லை.  இந்தப் பகுதிகளுக்குள், நீர்த்துப் போன மசோதாவில் கூட அவர் மூன்று முரண்பாடுள்ள பகுதிகளைக் கண்டறிந்தார்.  (1) சட்டப்படி செல்லுபடியாகக்கூடிய ஒரு திருமணத்துக்கு சாதி ஒழிப்பை தேவையானதாக ஆக்குவது (2) ஒரே ஒரு திருமணத்தை முன்மொழிவது (3) ஒரு பெண்ணுக்கு விவாகரத்துக் கோரவும், பராமரிப்பு கோரவும் அனுமதியளிப்பது.

அவர் நினைத்தது சரியே.  இது ஆவேசமான காளையின் கொம்பைச் சீவி விட்டது போல் ஆகி விட்டது.  அது நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல வழிகளில் விவரிக்கப்பட்டது.  ஒரு செல்லுபடியாகக் கூடிய திருமணத்துக்கு சாதியை ஒழிக்க வேண்டுமென்ற நிபந்தனை குறித்த சில கருத்துக்களை உதாரணத்துக்குப் பார்ப்போம்: “அது இந்து சமூகம் முழுமையாக அழிவதற்கு இட்டுச் செல்லும்” (பார்கவா);

”இந்து சமூகம் குழுக்களாகப் (சாதிகளாக) பிரிக்கப்பட்டுள்ளது எந்தக் கெடுநோக்கத்துடனோ, எந்தப் பகுதியையும் துன்புறுத்தவோ அல்ல.  வழிவழியாக வந்துள்ள சம்பிரதாயங்கள் மதிக்கப்படவும், உயர்த்திப் பிடிக்கப்படவும் வேண்டும் (மாளவியா);

தனிநபர், இன ஆரோக்கியம், மகிழ்ச்சிக்காக ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களையும், தூய மனப்போக்குக் கொண்ட நபர்களும் சேர்ந்து உண்ண வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும்”(பட்).

ஒரே மனைவி, ஒரே திருமணம் என்ற விஷயத்தில் தாக்குதலில் முன்னின்றது தற்போது பாஜகவால் ஒரு அடையாளமாக முன்வைக்கப்படும் சியாமா பிரசாத் முகர்ஜி.  அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் வார ஏடான ஆர்கனைசர் எழுதியதையே பெரும்பாலும் திரும்பக் கூறினார். அந்த வார ஏடு டாக்டர்  அம்பேத்கருக்கும், இந்து சட்டத்தொகுப்பு மசோதாவுக்கும் எதிராக கெடுநோக்குடனான பிரச்சாரத்தை மேற்கொண்டது.  ”இந்து சட்டங்களுக்கும், இந்து கலாச்சாரத்துக்கும், இந்து தர்மத்துக்கும் எதிரான ஒரு குரூரமான, அறிவற்ற மசோதா என்பதால் அதை கண்டனம் செய்யுங்கள்”.  “இந்து தத்துவத்துக்கு கலகம் செய்யும் விவாகரத்து உரிமையை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று ஆர்கனைசர் எழுதியது.  முகர்ஜி இவையனைத்தையும் பாராளுமன்றத்தில் மறுபடியும் கூறினார்.  “பெண்களுக்கு விவாகரத்து உரிமையை அளிப்பது ஏற்க இயலாதது” . . .”திருமணத்தின் புனிதமான இயல்பு என்பது லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் ஆழமாக வேர் விட்டுள்ள ஒரு தத்துவம்” .. அது இந்துத் திருமணத்தின் அடிப்படையான, புனிதமான இயல்பு.”  90 சதவிகித சூத்திரர்கள் பெண்களின் விவாகரத்து உரிமையை தமது பழக்கமாகவும், நடைமுறையாகவும் கொண்டிருந்ததை டாக்டர் அம்பேத்கர் சுட்டிக் காட்டினார்.  வேறு வார்த்தைகளில், முகர்ஜி எந்த இந்துக்களைக் குறிப்பிடுகிறார் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டார்.  இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாறு முழுவதும், பிராமணீயக் கோட்பாடுகளும், வழக்கங்களும்தான் நம்பிக்கையாளர்கள் மீது சட்டங்களாகத் திணிக்கப்பட்டன.  இந்த விவாதத்தில் டாக்டர் அம்பேத்கர் இதற்குச் சவால் விட்டார்.  அவர் மேலும், “புனிதத் திருமணம் என்பது சில வார்த்தைகளில் (குறிப்பிட்டால்) ஆணுக்குப் பலதார மணம், மனைவிக்கு அதற்கு ஈடாக அடிமைத்தனம்” என்றும் கூறினார்.  முகர்ஜியிடம் இதற்கெதிராக இந்தப் பலவீனமான பதில்தான் இருந்தது. “யாருடைய முன்னோர் (மேல்சாதியினர்) பண்டைய பாரம்பரியங்களின்படிதான் செய்தார்கள், அவர்கள் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தவரை விட தேசபக்தியில் குறைந்தவர்கள் அல்ல.  அவர்கள் மீது இதைத் திணிக்காதீர்கள்.”

ஒருதார திருமணம் என்பதில் கூட முகர்ஜியின் நிலைபாட்டுக்கு டாக்டர் அம்பேத்கர் சவால் விடுத்தார்.  பலதார மணத்துக்கு ஆதரவாக முகர்ஜி முன்வைத்த விவாதத்தின் வஞ்சகம் என்னவென்றால், “உங்களால் ஒருதார மணத்தை இந்தியாவின் அனைத்துக் குடிமக்களுக்கும் அமல்படுத்த முடியாதென்றால், அதை ஒரே ஒரு பகுதிக்கு மட்டும் அமல்படுத்தாதீர்கள்.”  பம்பாய், பரோடா, மெட்ராஸ், திருவிதாங்கூர் கொச்சின் ஆகிய மாகாணங்கள் கூட இந்துக்களுக்கு ஒருதாரமணத்தைச் சட்டமாக நிறைவேற்றி விட்டன என்பது அவருக்குச் சுட்டிக் காட்டப்பட்டது.  ஆனாலும் அது அந்தக் கோட்பாட்டைக் கட்டாயமற்றதாகவோ அல்லது அனைவருக்கும் பொருந்துவதாகவோ அமல்படுத்த வேண்டுமென்ற திருத்தத்தை வலியுறுத்துவதிலிருந்து முகர்ஜியை அது தடுக்கவில்லை.

அதைவிட மேலாக, சீர்திருத்தத்துக்கு அடிப்படை எதிர்ப்பை இந்துத்துவா வலதுசாரி சக்திகள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுடனேயே முடிச்சுப் போட்டனர்.  முகர்ஜி இந்த விஷயத்தில் முன்னோடி..  இந்தத் திருத்தத்தை வலியுறுத்தும்போது அவர் கூறினார், “நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்று கூறப்படுகிறது.  உண்மையில் நாம் மதச்சார்பின்மை என்று அழைக்கக்கூடிய ஒரு புதிய நோயால் அவதிப்படுகிறோம்.  ஏனென்றால் இந்த அரசு அதை அனைவருக்கும் கட்டாயமாக்க விரும்பவில்லை.”

அனைவருக்கும் சீரான சிவில் ன்சட்டம் குறித்து

பெண்களின் நலனுக்காக அல்லாமல், சிறுபான்மையினரைக் குறிவைத்து அனைவருக்கும் சீரான சிவில் சட்டம் என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் வஞ்சகமான கோரிக்கைக்கெதிராக டாக்டர் அம்பேத்கரின் செம்மையான பதிலை இன்று நன்கு பயன்படுத்த முடியும்.

அவர் கூறினார், “நேற்றுவரை பழங்கால இந்துச் சட்டங்களின் பெரும் பாதுகாவலர்களாகவும், இந்தத் தொகுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பாக இருந்தவர்கள் இன்று திடீரென முன்வந்து ஒரு அகில இந்திய பொது சிவில் சட்டத்தை ஏற்கத் தயாராக இருப்பதைக் கண்டு நான் மிக மிக ஆச்சரியப்படுகிறேன் என்பதை நான் கூற வேண்டும்.  சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லை என்றொரு பழமொழி உண்டு.  நான் ஒவ்வொரு முறை அவைக்கு முன் இந்த மசோதாவைக் கொண்டு வரும்போதும் பாய்ந்த அந்த சிறுத்தைகள் இப்போது திடீரென தமது மனநிலையை மாற்றிக் கொண்டு ஒரு புதிய சட்டத்தை மொத்தமாக ஏற்றுக் கொள்ளுமளவு புரட்சிகரமாக மாறி விட்டனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.”

எவ்வளவு உண்மை.  ஒரு இந்து குடும்பத்தை சீரழிப்பதாகக் கூறி இன்று குடும்ப வன்முறைக்கெதிரான சட்டங்களை ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பது, 498 ஏ பிரிவினைக் கூட நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் “குடும்பத் தலைவி என்ற முதன்மைக் கடமையை” விட்டுச் செல்வதாக எதிர்ப்பது, பாலின ரீதியில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கெதிராக ஆக்ரோஷமான அன்னியப்படுதல் என்பவையெல்லாம் எவ்வளவுதான் அவர்கள் ஒரு சீரான சிவில் சட்டத்துக்காக உரக்கக் கூவினாலும், “சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக் கொள்ளவில்லை.”

அவர் மேலும் தனிச் சட்டங்கள் விஷயத்திலும் தனது வாதத்தை முன்வைத்தார்.  அவை இன்றும் பொருத்தமானவை.

“அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25 உள்ளது.  ஒரு குறிப்பிட்ட மதத்தின் தொழிலுடன் ஒரு தனிநபரின் தனிச் சட்டமும் வருகிறது.  அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லீமிடம் அவர் தனது மதத்தைப் பிரச்சாரம் செய்யவும், கடைப்பிடிக்கவும் சுதந்திரம் உள்ளது என்று அவரிடம் கூறினால், நாம் நடைமுறையில் அவரது தனிச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உரிமையை அவருக்கு அளிக்கிறோம்.  இதன் காரணமாக, அவர்களது சொந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்க ஒரு சமூகத்தை அனுமதிப்பது அல்லது அவர்கள் விரும்பும்படி மாற்ற அனுமதிப்பது, வேறு ஒரு சமூகத்தின் சட்டத்தை வேறு மாதிரியாக நடத்துவது என்பதில் பாகுபாடு எதுவும் இல்லை.”  இந்து சமூகங்களின் அனைத்துப் பகுதியினரும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், ராவ் கமிட்டி அறிக்கையை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வருவதற்கு முன்பு அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

தனிச்சட்டம் சீர்திருத்தம்

பிரிக்கப்படாத இந்தியாவில் 1937ல் சட்டசபையில் ஷரியத் சட்டம் பற்றி ஜின்னா கொண்டு வந்த மசோதாவை அவர் மேற்கோள் காட்டினார்.  அது விரும்பி ஏற்பதல்ல, கட்டாயமானது என்று அவர் கூறினார்.  இவ்வாறு அவர் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் என்று அழைத்துக் கொண்டோரை, தலாக் போன்று பெண்களிடம் மிகவும் பாகுபாடு காட்டிய சட்டங்களை சீர்திருத்த மறுத்தவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அழுத்தமாகக் கூறினார்.  டாக்டர் அம்பேத்கர் கூறினார், “ஒரு சட்டத்தினால் பாதிக்கப்படும் எந்த குறிப்பிட்ட பகுதி மக்களும் நாடாளுமன்றத்தால் ஆலோசிக்கப்பட வேண்டும். தனிச்சட்டத்திலோ, வேறு எந்தச் சட்டத்திலோ தலையிடுவதற்கு இந்த நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லையென்று வாதம் செய்ய எந்த சமூகத்திற்கும் உரிமையில்லை.”

அம்பேத்கரின் பெண் கூட்டாளிகள்

அவரது உறுதியான கூட்டாளிகள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.  அவர்கள் ஒவ்வொருவரும், 1948லிருந்து 1951 வரை பல்வேறு நேரங்களிலும், தருணங்களிலும், நீண்ட விவாதங்களின்போது மதம், பாரம்பரியத்தின் பெயரால் மசோதாவை எதிர்த்தவர்களின் வாதங்களுக்கெதிராக, வலுவாகவும், உணர்ச்சிகரமாவும் பேசினார்கள்.  அவர்களில் சிலரது வார்த்தைகள் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் காதுகளில்  ஒலிக்கின்றன.

மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான திருமதி. ஜெயஸ்ரீ “மதம் ஆபத்திலிருக்கிறது” என்ற சியாமா பிரசாத் முகர்ஜியின் கருத்த்துக்கு கேள்வி கேட்டார், “ஒருவரது சொந்த மனைவியை அடிப்பதுதான் மதம் என்று கருதப்படுகிறதா என்று கேட்க விரும்புகிறேன்.  ஒரு நீதிமன்றத்தில் கற்றறிந்த ஒரு நீதிபதி ஒருவர் தனது மனைவியை அடிப்பது இந்துச் சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.  எனவே இத்தகைய குரூரமான வழக்கங்கள்தான் மதமா என்று நான் கேட்கலாமா?” என கேட்டார். ரேணுகா ரே “பாரம்பரியம்” என்ற வாதங்களுக்கு பதிலாக நக்கலாகச் சொன்னார் “பிராமணீய சமூகத்தின் கொடூரத்தை அடுத்த ஆயிரமாண்டுகளுக்கு வைத்துக் கொள்வோமா” என்று. அன்று சட்டசபையில் வலுவான தலித் பெண்களின் குரல்களில் ஒன்றான தாக்‌ஷாயனி வேலாயுதன் “பட்டியலினப் பெண்களுக்கும் சமமான கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று கோரியபோது, டாக்டர் அம்பேத்கரை வலுவாக ஆதரித்தார்.  பத்மஜா நாயுடு, சுசேதா கிருபளானி, ஹன்சா மேத்தா, அம்மு சுவாமிநாதன், பேகம் அசிசா ரசூல் ஆகியோர் வலுவான குரல் எழுப்பியவர்களில் சிலர்.

நேரு கைவிட்டதும் – ராஜினாமாவும்

விவாதம் மிகவும் நீண்டகால விஷயங்களை வெளியே கொண்டு வந்தாலும், இந்த எதிரிகளின் வாதங்களுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் கடுமையான தர்க்கங்கள் மூலம் பதிலளித்தாலும் கூட, நேரு அரசு பின்வாங்கியது.  குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தாம் அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பிவிடுவேன் என்று வெளிப்படையாகக் கண்டித்ததும், பிரதமர் கூட்டத் தொடரின் இறுதிக் கட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் மற்றும் மசோதா ஆதரவாளர்களின் ராட்சசப் போராட்டத்துக்குப் பிறகு, தனது சட்ட அமைச்சரிடம் மசோதாவைக் கைவிடுமாறு கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் உடனடியாக இதற்குக் கண்டனம் தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.  1951, செப்டம்பர் 27 தேதியிட்ட அவரது ராஜினாமா கடிதம், அவர் அனுபவித்த “பெரும் மனச் சித்ரவதையையும்”, எப்படி ஒட்டுமொத்த நடவடிக்கையும் வஞ்சிக்கப்பட்டது என்பதையும் வெளிப்படுத்துகிறது.  “பிரதமர் எவ்வளவுதான் நாணயமாக இருந்தாலும், இந்துச் சட்டத் தொகுப்பை நிறைவேற்ற அவருக்கு உறுதிப்பாடும், கடும் முயற்சியும் இல்லையென்ற கருத்தே எனக்கு ஏற்பட்டது . . . ஒரு பிரதமருக்கு இந்த அளவுக்கு விசுவாசமாக இல்லாத தலைமைக்கொறடாவையும், ஒரு விசுவாசமில்லாத தலைமைக் கொறடாவிடம் இவ்வளவு விசுவாசமுள்ள பிரதமரையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை . . .” அதன் பிறகு, “இந்து சமூகத்துக்கு ஆன்மாவான, வர்க்கம் – பாலினம் இடையே நிலவும் அசமத்துவத்தைத் தொடாமல் விட்டுவிட்டு, பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து மட்டும் சட்டம் நிறைவேற்றுவது என்பது ஒரு சாணிக் குவியலில் ஒரு மாளிகையைக் கட்டுவதைப் போன்றது ”

அம்பேத்கருக்குப் பெண்கள் பட்டுள்ள கடன்

பெண்களின் சமத்துவம் தொடர்பான ஒரு விஷயத்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்த முதல் அமைச்சர் அவர்.  இன்று வரை உலக அளவில் அது ஒரு சாதனையாகவே நீடிக்கிறது.

இந்தச் சீர்திருத்தங்களைப் பொருத்தவரை, 1954 வரை அவை புதைக்கப்பட்டிருந்தன.  1954 முதல் 1956 வரை திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, குழந்தைப் பாதுகாப்பு, வாரிசுரிமை ஆகியவற்றில் மிகவும் நீர்த்துப் போன மசோதாக்களும், அம்சங்களும் நிறைவேற்றப்பட்டன.  2005ல் இந்து வாரிசுரிமைச்சட்டமானது, பெண்களை சமவுரிமையுள்ள பெற்றோராக அங்கீகரித்து மேலும் திருத்தம் செய்யப்பட்டது.  எனினும் பல சட்டங்களில் இன்னமும் உறுதியற்ற தன்மையே நிலவுகிறது.  டாக்டர் அம்பேத்கர் முன்னெடுத்துச் சென்ற பணி இன்றுவரை முழுமை அடையாமலேதான் உள்ளது.

இந்தியாவிலுள்ள பெண்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளனர்.  ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜக தலைமையிலான அரசும் அரசியலமைப்புச் சட்டத்தை உடைத்து, குடிமக்களின் அடிப்படை உரிமையை நீர்த்துப் போகச் செய்து, தனது இந்து ராஷ்டிரம் என்ற நிகழ்ச்சி நிரலைத் திணிக்க முயன்று கொண்டிருக்கும்போது, இந்து சட்டத் தொகுப்பு மசோதாவின் விவாதத்தின்போது பெற்ற பாடங்கள் நமக்கு உடனடியான தொடர்பை ஏற்படுத்துகின்றன.  டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகளான, “நாட்டில் நிலவும் ஒவ்வொரு சமூக நிறுவனத்தையும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.  அது ஒவ்வொன்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளைத் திருப்தி செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்” என்பது மிகஅவசரமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாக அமைகிறது.  அவரது 125வது பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இந்துத்துவ சக்திகளுக்கெதிரான அவரது பாரம்பரியத்தை வலுப்படுத்தவும், “பெண்களின் அடிமைத்தனத்தை” முடிவுக்குக் கொண்டு வரவும் மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

* * *

 Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: