இக்கட்டுரையின் முந்தைய பகுதி : >>>>>
– பிரசாந்த் ராதாகிருஷ்ணன்
தமிழில்: ரமேஷ்
இணையதள சேவைகளுக்கு வேறு வேறு கட்டணங்கள் நிர்ணயிப்பது குறித்துப் பேசிப் பேசி புழுதி அடங்கிய பல மாதங்களுக்குப் பிறகு, பல்வேறு அரசுத் துறைகளும், அதிகாரிகளும் அதில் தலையிட்டுக் கொண்டிருந்த நிலையில் ட்ராய் மீண்டும் வினோதமான முறையில் அதைப் பற்றி ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது இன்னொரு சுற்று விவாதத்தைக் கிளப்பியது. அது இணையதள சமத்துவத்தைச் சுற்றியுள்ள சில முக்கிய விஷயங்களைத் தெளிவான கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன், மையப்படுத்துதலுக்கெதிரான பரந்த இயக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கவும் செய்தது.
இந்தியாவில் தனது இண்டர்னெட் டாட் ஆர்க் திட்டத்திற்குக் கிடைத்த பதில் வினைகளால் தெளிவாகவே அதிருப்தியடைந்த ஃபேஸ்புக், தனது தலைமைச் செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்க்கை பிரதமர் மோடியை சந்திக்க வைத்து ஆதரவு திரட்டல் பிரச்சாரத்தை ஆவேசத்துடன் கட்டவிழ்த்து விட்டது. மேலும் ஃபேஸ்புக் தனது இண்டர்னெட் டாட் ஆர்க்கின் பெயரை “ஃப்ரீ பேசிக்ஸ்” என்று மாற்றியதுடன் அதில் இணைவதற்கான நிபந்தனைகளை மேலும் தளர்த்தியது. மோடியின் அமெரிக்கப் பயணத்தின் இடையில், அது இந்திய செய்தியாளர்களின் ஒரு பெரிய குழுவை கலிஃபோர்னியாவில், மென்லோ பார்க்கில் இருக்கும் தனது தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களை “ஃப்ரீ பேசிக்ஸை” ஏற்க வைக்க முயன்றது.
இந்தியாவில் இணைய வசதி இல்லாமலிருப்பதற்குத் தீர்வாக “ஃப்ரீ பேசிக்சை” ஃபேஸ்புக் முன்வைத்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சுடன் இணைந்து ஃபேஸ்புக் ஒரு இணையதளத் தொடர்பை முன்மொழிந்தது. அதை உபயோகிப்பவர்கள் அடிப்படை இணையதளத்தை, இலவசமாக குறிப்பிட்ட இணையதளங்களைப் பார்க்க முடியும். இதுவும் பூஜ்ய விலையின் இன்னொரு உதாரணம். அதேசமயம், ட்ராய் நவம்பரில் இன்னொரு ஆலோசனை அறிக்கையை முன்வைத்தது. அது வெவ்வேறு கட்டணங்கள் குறித்து ஆலோசனையைக் கோரியது – வெவ்வேறு சேவைகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் – இதைத்தான் ஃப்ரீ பேசிக்சும், ஏர்டெல் ஜீரோவும் செய்து கொண்டிருந்தன.
இந்தமுறை ஃபேஸ்புக் எந்த வாய்ப்பையும் வாய்ப்புக்கு விட்டுவிடக் கூடாதென்று முடிவெடுத்தது. இரண்டே மாதங்களில், அது சுமார் ரூ.400 கோடிகளை செலவிட்டு விளம்பரம் செய்து, மக்களை ஃப்ரீ பேசிக்சை ஏற்றுக் கொள்ளச் செய்யமுயன்றது. ஃப்ரீ பேசிக்ஸ் எவ்வாறு ஏழை மக்கள் இணையதள வசதியைப் பெற உதவும் என்பதை விளக்கி அனைத்துப் பெரிய செய்தித் தாள்களும் முன்பக்கத்தில் விளம்பரங்களால் நிறைக்கப்பட்டன. இணையதள சமத்துவம் கோரி வாதிட்டவர்களைத் தாக்கி மார்க் சுக்கர்பெர்க் தானே டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையை எழுதினார். ட்ராய் இந்தத் தளத்தைக் குறித்து எந்தக் கேள்வியுமே எழுப்பிடவில்லை என்றபோதிலும், ஏற்கனவே “இணையதளத்தைக் காப்போம்” சந்தித்திருந்த பேஸ்புக், இப்போது தானே முந்திக் கொண்டது. ஃப்ரீ பேசிக்சை ஆதரித்து ட்ராய்க்குக் இமெயில் அனுப்பிட தனது பயனாளிகளைத் தூண்டியது.
ஃபேஸ்புக்கின் பிரச்சாரம் மிகவும் நயவஞ்சகமானது. அவர்களது கோரிக்கையைப் பார்த்த பல பயனாளிகளும் அது இணையதளத்தை இலவசமாக்கும் என்று நினைத்தனர். பின்னர்தான் அவர்கள் தாம் “ஃப்ரீ பேசிக்சை” ஆதரிப்பதைப் புரிந்து கொண்டனர். அமெரிக்காவிலிருந்த ஃபேஸ்புக் பயனாளிகளைக் கூட ஃப்ரீ பேசிக்சை ஆதரித்து ட்ராய்க்கு எழுதுமாறு கேட்டுக் கொண்ட நிகழ்வுகளும் நிகழ்ந்தன. அரை உண்மைகளுடன் கூடிய இந்தப் பிரச்சாரத்தால், அநேகமாக முதன் முறையாக ஒரு நிறுவனம் தனது பயனாளிகளை, அரசின் ஒரு கொள்கை முடிவின் மீது தாக்கம் செலுத்தப் பயன்படுத்தியதைக் கண்டது. ஃபேஸ்புக் இதன் மூலம் 11 மில்லியன் ஆதரவுச் செய்திகளை ட்ராய்க்கு அனுப்பியதாக் கூறிக் கொண்டபோது, ட்ராய் தமக்கு 1.8 மில்லியன் செய்திகள் மட்டுமே வந்ததாகக் கூறியது.
இந்தியாவில் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இணையதள இணைப்பைக் கொண்டு வருவதற்குத் தாம் உறுதி பூண்டுள்ளதாகத் தனது பிரச்சாரத்தில் ஃபேஸ்புக் தன்னைச் சித்தரித்துக் கொண்டது. ஃப்ரீ பேசிக்சை அனுமதித்தால் ஒரு விவசாயியும், ஒரு கிராமப்புறப் பெண்ணும் இளைஞனும் பயனடைவர் என்று அது பேசியது. இணையதள சமத்துவம் குறித்துப் பேசியவர்கள் மேட்டுக்குடிப் பகுதியினர் என்றும் அவர்கள் பெரும்பகுதி மக்கள் இணையதள வசதியைப்பெறுகிறார்களா இல்லையா என்பது குறித்து அவர்கள் கவலைப் படாதவர்கள் என்றும் அது சித்தரித்தது. மார்க் சுக்கர்பர்க் தனது தலையங்கப்பகுதியில் குறிப்பிட்டது போல், “அடிப்படை இணையதள சேவைகளை விமர்சிப்பவர்கள், நாங்கள் செய்வதெல்லாம் மக்களுக்குச் சேவை செய்வது பற்றியதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”. இந்தத் தளத்தில் விளம்பரம் எதுவும் இருக்காது என்பதால் அதற்கு எந்த வருவாயும் இருக்காது என்றும் ஃபேஸ்புக் கூறியது. ஆனால் ஃபேஸ்புக்கில் இணையும் ஒவ்வொருவருவரின் எண்ணிக்கையும், அதற்கு வருவாயைக் கொண்டு வருபவரே என்ற உண்மையை அது மறைத்து விட்டது. அவர்களது சில வாதங்கள் ஒரு தாக்கத்தை உண்டாக்கின என்பதைக் கூறத் தேவையில்லை. இணையத்திலும், சில பெரிய முக்கிய ஊடகங்களும் கூட, “ஆம், ஃப்ரீ பேசிக்ஸ் இணையதள வசதியில் சில தளங்களை மட்டுமே இலவசமாகத் தருகிறது. ஏழைகளுக்கு, ஒன்றுமே இல்லாததற்கு இது மேலானது இல்லையா?” என்று கேட்டனர்.
இந்தச் சமயத்தில் “சமநிலை இணையம்” என்ற முழக்கத்தை ஆதரித்தவர்கள் அணிதிரண்டு விட்டனர். இந்த முறை அவர்களுக்கு ஆதரவாக அதிகம் பேர் திரண்டனர். தீவீரமான இணையதள பிரச்சாரத்துடன் கூட, இந்த பிரச்சனை குறித்து அறிந்தேயிராத நூற்றுக்கணக்கான மாணவர்களிடமும், மக்களிடமும் தொண்டர்கள் மூலமாகப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஃபேஸ்புக்கின் இந்த மறைமுகமான முறைகள் அதற்கு முதலில் ஆதரவளித்தவர்கள் அல்லது அது குறித்து அறியாமல் விலகியிருந்தோரிடம் கூட கம்பெனிக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. ஆலோசனை காலம் முடியும் நிலையில் ஃபேஸ்புக்கின் திசைதிருப்பும் பதில்களுக்காக அதை ட்ராயே கண்டித்தது. ட்ராயின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தனது பயனீட்டாளர்களையே ஃபேஸ்புக் பயன்படுத்தியதை ட்ராய் கண்டித்தது. இறுதியாக, பிப்ரவரியில் ட்ராய் ஃப்ரீ பேசிக்ஸ் போன்ற திட்டங்களுக்கெதிராகவும் எந்த வகையிலும் வெவ்வேறு கட்டணங்கள் என்பதற்கும் எதிராக கடுமையான நிலையெடுத்தது.
மீண்டும் கதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை, ட்ராய் இன்னொரு ஆலோசனைக் குறிப்பில் ஃப்ரீ டேட்டா (இலவச தகவல்கள்) மீது சமநிலை இணையம் பற்றி கருத்துக்களைக் கேட்டது. இந்த விஷயத்தில் ட்ராய் இதுவரை முடிவை அறிவிக்காத நிலையில் இன்னும் அந்த நிகழ்முறை தொடர்கிறது. செல்லுலர் ஆப்பரேட்டர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்திய போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிப்ரவரியில் ட்ராயின் கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய முயன்று கொண்டிருந்த காலமும் அதுதான். போர் இதுவரை முடியவில்லை என்பது தெளிவு.
சமநிலை இணையம் சமத்துவம் குறித்து கடந்த ஆண்டில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்குகளை நாம் எவ்வாறு பார்க்கிறோம்? இந்தியாவில் முதலாளித்துவம் என்ற பரந்த பின்னணியில் இந்த விஷயத்தை ஆய்வு செய்யப் பல கோணங்கள் உள்ளன. முதலாவது டிஜிடல் காலனியாதிக்கம் பற்றிய விஷயம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவிலிருந்து வந்த வர்த்தக நிறுவனங்கள் ஆதாரங்கள், உபரிகளை சுரண்ட வலைப்பின்னல்களை உருவாக்கின. அதுதான் காலனியாதிக்கத்தின் அடிப்படையை உருவாக்கியது. பழைய காலனிகளின் மக்கள் தமது சுதந்திரத்தை வெல்லப் பல பத்தாண்டுகள் போராடிய பிறகும் கூட, இத்தகைய பல நிகழ்வுகள் நடப்பதை மீண்டும் மீண்டும் நாம் பார்த்துள்ளோம். அதில் மிகப்பெரிய உதாரணம் கடந்த பத்தாண்டின் இராக் போர். அங்கு அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை உசுப்பேற்ற சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோஷங்கள் பயன்படுத்தப்பட்டன.
-தொடரும்
Leave a Reply