விண்ணை முட்டும் கரவொலி
செவிப்பறை கிழியும் கூச்சல்!
கரவொலி – குரல் ஒலியுடன்
எதிரொலியும் இணைந்து கொண்ட அரங்கம்!
பெரும் ஆரவாரங்களுக்கிடையில்
அரங்கின் நடு மேடையிலிருந்து
எரிமலை குழம்புகள் வெளியேறுவதுபோல்,
“நான் மகத்தானவன்
நானே மகத்தானவன்”
என்ற குரல் பீறிட்டு கிளம்பி, அத்தனை சப்தங்களையும் அமைதியாக்கியது.
தனது 22வது வயதில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஃப்ளோரிடா மாநிலம் மியாமி கடற்கரைக்கு வந்து சேர்கிறான் முகமது அலி. மோதப்போவது பிரபலமான சாம்பியன் சன்னி லிஸ்டனுடன் . அவன் சாம்பியன் மட்டுமல்ல. அங்குள்ள உழைப்பாளர்களுக்கு எதிராக கூட்டங்களை கலைக்கவும், போராட்டக்காரர்களை காயப்படுத்தும் பணிகளை செய்யும் பிரபலமான அடியாளாகவும் திகழ்ந்தான். அவன் ஆதரவாளர்கள் கேலி பேசுகின்றனர். முகமது அலியை அவமானப்படுத்துகின்றனர். அவநம்பிக்கையை விதைத்து விரட்டப் பார்க்கிறார்கள். ஆனாலும் அலி அசைந்து கொடுக்கவில்லை.
1964 பிப்ரவரி 25 அன்று போட்டி துவங்கியது. ஒரே சுற்றில் போட்டி முடியும். சன்னி லிஸ்டன் எளிதில் வெல்வான் என நினைத்து அரங்கத்தில் அவனுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தது. முதல் சுற்று கடந்து இரண்டு…மூன்று சுற்றுகள் தொடர கூட்டத்தில் சப்தம் அடங்கி புருவங்கள் விரிந்தன. ஆறாவது சுற்றில் லிஸ்டன் முகமது அலியால் வீழ்த்தப்பட்டான். கூட்டத்தின் விரிந்த புருவங்கள் நிலைத்து சில நிமிடங்கள் நின்றன. நடுவரின் மணியோசை ஒலித்தவுடன் அலியின் வெற்றி அறிவித்த நிலையில், நிசப்தமான அரங்கம் ஆரவார உச்சநிலையை அடைந்தது. இந்த ஆரவாரங்களுக்கிடையே முகமது அலி இருகைகளையும் உயர்த்தி “நானே மகத்தானவன்” என எரிமலைகுழம்பு பீறிட்டு அடித்தது போல் கத்தினான். இந்த வார்த்தைகள் அடுத்த பத்தாண்டுகள் குத்துச்சண்டை உலகை ஆட்சி செய்தது.
உன்னால் முடிந்தால் என்னை பிடி
பட்டாம் பூச்சிபோல் மிதந்து,
தேனி போல் கொட்டுவேன்
உன்னால் முடிந்தால் என்னை பிடி!
என்ற கவிதை வரிகளுடன் வெற்றிப்பயணத்தில் தடம்பதித்தான்.
விடுதலைக் களமான குத்துச் சண்டை
அமெரிக்காவின் ஆரம்பகால குத்துச்சண்டை வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வரப்பட்ட கருப்பின அடிமைகளே. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் தோட்ட முதலாளிகள் மற்றும் பண்ணை முதலாளிகள் தங்களது பொழுதுபோக்கிற்காக கருப்பு அடிமைகளின் கழுத்தில் இரும்புபட்டை கட்டி மோதவிடுவார்கள். அந்த அடிமைகளின் வலியில் இவர்கள் இன்பம் காண்பார்கள். அமெரிக்காவில் அடிமைகளை விடுதலை செய்யும் சட்டம் நிறைவேற்றிய பிறகு பலர் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு பணத்திற்காக நடைபெற்ற போட்டியில் கறுப்பினத்தவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்தக் களத்தையும் கருப்பின மக்கள் தங்களது விடுதலைக் களமாக அமைத்துக் கொண்டனர். முகமது அலியின் முன்னோடிகளின் வரலாறும் இதுவே.
1908ம் ஆண்டு ஜாக் ஜான்சன் (1878-1946) என்ற கருப்பின 20 வயது இளைஞன் டெக்சாஸ் மாநிலத்தில் தொழில்முறை குத்துச்சண்டை களத்திற்கு வருகிறான். 1908ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக “உலக குத்துச்சண்டை வீரன்” என்ற பட்டத்தை டோமி பர்னஸ் என்பவனை வீழ்த்தி வெற்றி பெற்றான். உலக பட்டத்தை பெற்ற முதல் அமெரிக்க கருப்பினத்தவன் இவனே ஆகும். இந்த வெற்றி கருப்பின மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதிகாரம், பணபலம் படைத்த வெள்ளையர்களால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. ஜாக் ஜான்சன் இதற்குமுன் உள்ளூர் அளவில் பல கருப்பு, வெள்ளை நிற வீரர்களை தோற்கடித்துள்ளான். எனினும் ஒரு கருப்பன் “உலக சாம்பியன் பட்டம்” பெற்றதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஒரு வெள்ளையன் மூலம் ஜாக் ஜான்சனை தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்தனர். ஜாக் ஜான்சனுக்கு இன அடிப்படையில் அச்சுறுத்தல் நெருக்கடிகளை கொடுத்தனர். 1909ம் ஆண்டு வெள்ளை நிறத்து பண்ணையாட்களால் தயார் செய்யப்பட்டு மோதவிடப்பட்ட டோனிராஸ் (Donny Ross), அல்கைஃப்மேன் (Alkaifmann), மற்றும் ஸ்டேன்லி கெட்சல் (Stanley Ketsal) ஆகியோரை ஜாக் ஜான்சன் தோற்கடித்தான். வெள்ளை முதலாளிகளால் தயார் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உலக குத்துச்சண்டை வீரர் ஜேம்ஸ் ஜெஃப்ரீசை அழைத்து வந்து மோதவிட்டனர்.
“நான் மீண்டும் சண்டைபோட வருவதற்கு ஒரே
காரணம் வெள்ளை நிறத்தவன் நீக்ரோவைவிட
சிறந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று”
நிறவெறி திமிருடன் ஜேம்ஸ் பேசினான்.
அரங்கம் அதிர வைத்து நாக்-அவுட்:
நிறவெறி பதற்றம் போட்டி நடைபெறும் நெவ்டா பிரதேசத்திலும், ரெனோ நகரிலும் பற்றிக்கொண்டது. அரங்கைச் சுற்றிலும், ஆயுதம், துப்பாக்கி, மது வகைகள் ஆகியவை தடைசெய்யப்பட்டிருந்தன. எனினும் வெள்ளை நிற முதலாளிகள் ஜேம்ஸ் ஜெஃப்ரி மீது பந்தயம் கட்டியிருந்தனர். அரங்கை வெள்ளையர் கூட்டம் ஆக்கிரமித்திருந்தது. பார்வையாளர் கூட்டம் “கருப்பனை சாகடி” என வெறிக் கூச்சலிட்டது. போட்டி ஜீலை 4, 1910 அன்று 20,000 பார்வையாளர்கள் மத்தியில் நடந்தேறியது. கருப்பின ஜாக் ஜான்சன் தனது 15வது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் “ஜேம்ஸ் ஜெஃப்ரியை” நாக்அவுட் முறையில் வீழ்த்தினான். ஜெஃப்ரி தனது குத்துச்சண்டை வரலாற்றில் அதுதான் நாக்அவுட் முறையில் பெற்ற முதல் தோல்வி.
இந்த போட்டி முடிந்தவுடன் ஜூலை 4ஆம் தேதி மாலையே கலவரம் துவங்கியது. ஜாக் ஜான்சன் வெற்றி கருப்பின மக்களை குதூகலிக்க செய்தது. வெறுப்படைந்த வெள்ளை நிறத்தவர் கருப்பர்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். நியூயார்க், பிட்ஸ்பர்க், ஃபிலடெல்பியா, நியு ஆர்லியான்ஸ், அட்லாண்டா, செயின்ட் லூயிஸ் என 25 மாநிலங்களிலும், 50க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கலவரம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பலநூறு பேர்கள் படுகாயமடைந்தனர். இதற்கடுத்து 1960ஆம் ஆண்டுகளுக்கு பிறகுதான் மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் மீண்டும் கருப்பின மக்களின் எழுச்சி ஏற்பட்டது.
ஹிட்லரை வீழ்த்திய ஜோ லூயிஸ்:
மீண்டும் ஒரு கருப்பின வீரன் “ஜோ லூயிஸ்” குத்துச்சண்டை அரங்கை பற்றவைத்தான். 1937 முதல் 1949-ஆம் ஆண்டு வரை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருந்தான். 1934 முதல் 1951 வரை 71 போட்டிகளில் கலந்து கொண்டு 68ல் வெற்றி பெற்றுள்ளான். அவற்றுள் 54 நாக்அவுட் முறை வெற்றியாகும்.
ஜோ லூயிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும்போதும் இனவெறி மோதல் இருக்கக் கூடாது என்பதற்காக அவரது மேலாளர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். வெள்ளை நிறப் பெண்களுடன் புகைப்படம் எடுக்கக் கூடாது, பொழுதுபோக்கு விடுதிக்கு செல்லக்கூடாது, தானாக சென்று யாரிடமும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும் ஜோ லூயிஸ் கலந்து கொண்ட குத்துச்சண்டை அதிக அளவு அரசியல் களமாக மாறியது. அமெரிக்க நாட்டு நிறவெறியை கடந்து ஜெர்மனி வீரர்களுடன் மோதும்போது இனவெறி மேன்மையை நிரூபிக்கும் ஒரு போட்டியாக இனவெறியர் மாற்றினார்கள். கருப்பினத்தவர்கள் மூளைத்திறன், உடல்திறன் குறைந்தவர்கள். சோம்பேறிகள், கட்டுப்பாடற்றவர்கள் என்று ஹிட்லரின் நாஜிகளால் இனவெறி விஞ்ஞான கருத்தாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது.
1935ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் இத்தாலிய உலக சாம்பியன் பிரைமோ கார்னராவுடன் மோதி அவரை தோற்கடித்தான். கார்னரா பெனிட்டோ முசோலினியின் தூதராக கருதப்பட்டான். கருப்பின ஜோ லூயிஸ்-ஐ இத்தாலி ஆக்கிரமித்த எத்தியோப்பிய இனமாக அடையாளப்படுத்தினர். இங்கு அந்த இனத்தூய்மை வாதம் மேலோங்கியது.
ஜெர்மானிய வீரர் மேக்ஸ் ஸ்க்மெல்லிங்கிடம் ஜோ லூயிஸ் 1936-ல் தோற்றுப்போனார். ஹிட்லரும், அவரது கூட்டாளி கோயபல்சும் இந்த வெற்றியை இனவெறி வெற்றியாக பறைசாற்றினர். அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் `இந்த வெற்றி தான் எந்த இனம் சிறந்த மேன்மையான இனம் என்பதை நிரூபித்துள்ளது’ என்று எழுதின.
1938ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் ஜெர்மானிய மேக்ஸ் ஸ்க்மெல்லிங்குடன் மீண்டும் மோதினான். இந்த போட்டியை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வானொலி மூலம் நேரடி ஒலிபரப்பு செய்தது. இந்த போட்டியின் மூலம் வெள்ளை இனமே கருப்பினத்தைவிட மேலானது என்று நிரூபணம் ஆகும் என ஹிட்லரும், வெள்ளை நிற வெறியர்களும் கருதினர். இனப்பெருமையை நிரூபிக்க இது உடல்பலத்தின் மூலமாக நடைபெறும் பொதுவாக்கெடுப்பு என ஹிட்லர் பேசினார். போட்டி துவங்கியது. பெருங்கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது. இதோ… கருப்பின ஜோ லூயிஸ் முதல் சுற்றிலேயே ஜெர்மானிய மேக் ஸ்க்மெல்லிங்கை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தான். உடனே ஹிட்லர் ஜெர்மனி முழுவதும் வானொலி ஒலிபரப்பை நிறுத்தினான். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க கண்டம் கடந்து கருப்பின மக்கள் எழுச்சி கொண்டனர். கருப்பின இளைஞர்கள் நம்பிக்கையோடு ஒன்று சேர்ந்தனர். ஜோ லூயிஸ் எந்த அளவு இளைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருந்தார் என்பதற்கு மற்றொரு சான்று இதோ. அமெரிக்காவின் தெற்குபகுதி மாநிலத்தில் ஒன்று, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு புதிய வடிவத்தை கொண்டு வந்தது. “விஷவாயு”வை செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தது. இறக்கும் போது விஷவாயு கூண்டுக்குள் என்ன நடக்கிறது என அறிய மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. முதன்முதலில் இந்த தண்டணை பெற்று நிறைவேற்றப்பட்டவர் கருப்பின இளைஞர். அவரது மரணக்குரல்
“ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்
ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்”
என்று இருந்ததாக பதியப்பட்டுள்ளது. அந்த அளவு கருப்பின குத்துச்சண்டை வீரர்கள், அம்மக்களுக்கு மீட்பராக, பாதுகாப்பாளராக இருந்துள்ளனர். ஜோ லூயிஸ் 12 ஆண்டுகளில் 25 முறைகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளான்.
கேசியஸ் கிளே பிறந்தார்:
அடுத்த 20 ஆண்டுகளில் குத்துச் சண்டைக் களம் மீண்டும் சமூகப் போராட்டத்தின் உந்து சக்தியாகிறது. அந்த உந்து சக்தியில் முகமது அலி இறந்தார். 1942-ம் ஆண்டு அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லூயிஸ்வில்லி என்ற இடத்தில் முகமது அலி பிறந்தார். அவருக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று அவரது தந்தை பெயர் வைத்தார். முகமது அலியின் தாத்தா ஹெர்மன் அடிமை சட்டத்தை ஒழித்திட பாடுபட்டவரின் நினைவாக தனது மகனுக்கு கேசியஸ் கிளே என்று பெயர் வைத்தார். இப்போது முகமது அலிக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று பெயர் வைக்கப்பட்டது. காலம் அவனுக்கு கேசியஸ் கிளே என்று பெயரிட்டது. சமூகச் சூழல் அவனை முகமது அலியாக மாற்றியது.
கேசியஸ் கிளே 18 வயது நிரம்பிய நேரத்தில் ரோம் நகரில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டியில், குத்துச்சண்டையில் ஐக்கிய அமெரிக்க குடியரசு சார்பில் கலந்து கொண்டு, முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றார். ரோமிலிருந்து உற்சாகத்துடன் திரும்பி வந்தார். தனது கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை கழற்றாமலேயே விமான நிலையத்தில் இறங்கி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
“அமெரிக்காவிற்காக தங்கம் வெல்வதே என் குறிக்கோள்
ரஷ்யனைத் தோற்கடித்தேன்
போலந்துகாரனைத் தோற்கடித்தேன்
அமெரிக்காவிற்காக தங்கப் பதக்கம் வென்றேன்”
நீ பழைய கேசியசை விட சிறந்தவன் என்று கிரேக்கர்கள் கூறினார்கள்.
என அமெரிக்க தேசம் முன் தனது வெற்றியை ஒப்படைத்தார். கருப்பின மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், தேசத்திற்காக பதக்கம் பெற்றாலும் நிறவெறி அவரை நிலைகுலையச் செய்தது. அடுத்த வினாடியே கழுத்தில் தொங்கிய பதக்கத்தை கழற்றி ஓடிக்கொண்டிருந்த ஒஹியோ ஆற்றில் வீசினான்.
முகமது அலி உருவானார்:
தேசத்திற்கான போட்டி என்பதிலிருந்து தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு மாறினான். மறுபுறம் மால்கம் எக்சும், `இஸ்லாமிய தேசம்’ என்ற இஸ்லாமிய மதப்பிரிவும் கேசியஸ் கிளே-வை கவர்ந்தது. அதே நேரத்தில் மால்கம் எக்சையும் கலகக்கார கேசியஸ் கிளே கவர்ந்தார். 1964ம் ஆண்டு மியாமி கடற்கரையில் உலக சாம்பியன் சன்னி லிஸ்டனை தோற்கடித்தவுடன் கேசியஸ் கிளே பெரும் புகழ்பெற்றார். போட்டிக்கு முன் மால்கம் எக்ஸ் கூறினார். “கிளே வெல்வார். நான் பார்த்த சிறந்த கருப்பின வீரர்” என்றார். கிளேயின் பயிற்சியாளர் கேசியஸ் கிளே தலைமுறை வீரர்களை தனது குத்துச்சண்டையால் தரைமட்டமாக்கிவிடுவார் என்றார். கிளாசியஸ் கிளே “நான் மிகவும் வேகமானவன். படுக்கையறை சுவிட்சை தட்டிவிட்டு விளக்கு அணையுமுன் படுக்கையில் இருப்பேன்” என தன்மீதுள்ள அசைக்க முடியா நம்பிக்கையை வெளிப்படுத்தினார். சன்னி லிஸ்டனை சாய்த்த பிறகு, அவரது வெற்றி கொடிகட்டி பறந்தபோது அடுத்த நாள் தான் இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவில் சேர்ந்ததாக அறிவித்தார். எலிசா முகமது இவரது பெயரை “முகமது அலி” என்று மாற்றினார். முகமது அலியின் இந்த செயல் கருப்பின இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியது. வெள்ளை நிறவெறியர்கள் சீறினர். கிறிஸ்துவ மதம் வெள்ளை நிறவெறியை ஊக்குவிக்கும் மதம் என கிளே நம்பினார். எனவே இந்த மாற்றம் தனக்குத் தேவைப்பட்டதாக அறிவித்தார். மதம் சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டியதாக வரலாறு இல்லை என்றாலும், மதத்தை சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்ற நிலைமை இருந்ததாலும் கேசியஸ் கிளே தான் வாழ்ந்த சூழலில் எதிர்ப்பின் அடையாளமாக இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவை பார்த்தார்.
எனினும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பிரபலமான பத்திரிக்கைகள் பெயர் மாற்றத்தை குறிப்பிடாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து கேசியஸ் கிளே என்றுதான் எழுதினார்கள். இது முகமது அலிக்கு கோபத்தை உருவாக்கியது.
1964ம் ஆண்டு முழுவதும் அமெரிக்காவின் கருப்பின மக்கள் சம உரிமைக்காக போராடினார்கள். இதனால் பல ஆயிரம் சிவில் உரிமை போராளிகள் கைதாகினர். அமெரிக்காவின் தெற்கு முதல் வடக்கு வரை இந்த போராட்டம் நடந்தது. வெள்ளை நிறவெறி அமைப்பு குகிளக்ஸ் (KhuKluxKhan) 30 கட்டிடங்களை குண்டுவைத்து தகர்த்தனர். 36 தேவாலயங்களை தீக்கிரையாக்கினர். கருப்பின இளைஞர்களும் வடக்கு பகுதி சேரிகளில் கொதித்தெழுந்தனர். முதன்முதலாக நகர்ப்புற எழுச்சி அமெரிக்காவில் நிகழ்ந்தது.
இந்த பின்னணியில்தான் முகமது அலி என்ற பெயர் மாற்றத்திற்கு பிறகு நடக்கும் ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும், கருப்பின மக்களின் புரட்சி மற்றும் அதை எதிர்ப்பவர்கள் என்ற தளத்திலேயே நடக்க ஆரம்பித்தது. பிளைவுட் பேட்டர்சன் (Plywood Patterson) என்பவர் கருப்பின குத்துச்சண்டை முன்னால் உலக சாம்பியன். இவர் வெள்ளை நிறவெறி விசுவாசத்துடன் முகமது அலியை போட்டிக்கு அழைத்தார். இது”ஒரு கருப்பு முஸ்லீமிடமிருந்து பட்டத்தை வெல்லும் புனிதப்போர். நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் கிளேயுடன் மோதுவது தேசபக்த கடமை. நான் அமெரிக்க கிரீடத்தை மீட்டுக்கொண்டு வருவேன்” என சபதம் எடுத்து, அமெரிக்க கொடியை தனது உடலில் இறுக்கமாக கட்டிக் கொண்டு போட்டிக் களத்திற்கு வந்தார். 1965ம் ஆண்டு நவம்பர் 22 அன்று போட்டி நடைபெற்றது. முகமது அலி தனது ஒன்பதாவது சுற்றிலேயே பிளைவுட் பாட்டர்சனை அடித்து நொறுக்கினார். பேட்டர்சனை கீழே தள்ளி
வா அமெரிக்காவே! வா!
வா வெள்ளை அமெரிக்காவே! வா!
என்று கர்ஜித்தார். பாட்டர்சன் முகமது அலி என்று அழைக்காமல் கிளே என்றே அழைத்து வந்தார். 1967ல் எர்னி டெரல் (Erney Terrel) என்பவருடன் இதே பின்னணியில் போட்டி நடைபெற்றது. அவரும் முகமது அலி என அழைக்கமாட்டேன் கிளே என்று தான் அழைப்பேன் என்றார். அவரையும் போட்டி மேடையிலிருந்து வீழ்த்தி வளையத்துக்கு வெளியே தள்ளி
என் பெயர் என்ன?
என் பெயர் “கிளே” யா?
முட்டாள், என் பெயர் என்ன?
என்று தனது மாற்றத்தை அங்கீகரிக்காததை எதிர்த்து வினையாற்றினார். முகமது அலி குத்துச்சண்டை வளையத்துக்குள் பட்டம் வெல்வதை மட்டுமல்ல கருப்பின மக்களின் சம உரிமைக்கான வெற்றியாகவும் மாற்றினர். நிறவெறி நெருப்பில் நீந்தி கருப்பின மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு வழிவகுத்தார். முகமது அலியின் வெற்றி, கருப்பின மக்கள் பயமின்றி சமஉரிமை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது. முகமது அலியின் போட்டியை கண்ணுற்ற பெரும்பாலான கருப்பின அமெரிக்கர்கள் பயத்தை எளிமையாக வெற்றி கொண்டனர். முகமது அலி அவர் வழியில் மக்களை தைரியப்படுத்தினார் என்று செய்தி தொகுப்பாளர் பிரையன்ட் கம்பள் (Bryant Kumble) நினைவு கூர்ந்தார்.
வியட்நாம் போருக்கு எதிராக:
1966-ம் ஆண்டு அமெரிக்க இராணுவம் முகமது அலியை அழைத்து இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அமெரிக்காவில் இராணுவ சேவை சட்டப்பூர்வமானது. எனவே, படையில் சேர்ந்து வியட்நாம் சென்று சண்டையிட அழைத்தது. அப்போது அதை மறுத்த அவரது வார்த்தை
“எனக்கு வியட்நாமியர்களுடன் எந்த விரோதமும் இல்லை
என்னை நீக்ரோ என்று எந்த வியட்நாமியரும் அழைக்கவில்லை”
என்று பத்திரிக்கையாளர் சூழ, இராணுவத்தினரிடம் தெரிவித்தார். இது இராணுவத்தினருக்கு அதிர்ச்சியூட்டியது. அப்போது அமெரிக்காவில் யுத்த எதிர்ப்பு இயக்கம் நடைபெற்று கொண்டிருந்தது. வியட்நாமிலிருந்து அமெரிக்காவை வெளியேறு இயக்கம் வேகம் பிடித்திருந்த காலம். இந்த இயக்கம் இப்போது முகமது அலியின் இந்த வார்த்தைக்கு பின்னால் அணி வகுத்தது. யுத்த எதிர்ப்பு சமாதான செயற்பாட்டாளர் டானியல் பெரிகன் (Daniel Perrigan) அலியின் இந்த முடிவு வெள்ளையர் மத்தியில் உருவான போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது என்று கூறினார். முகமது அலி மன்னிப்பு கேட்க, கையெழுத்துபோட, பணிந்துவிட வேண்டும் என பலர் கூறினர். ஆளும் நிறுவனங்கள் முகமது அலியை படுமோசமான தேச விரோதியாக சித்தரித்தன. முகமது அலி மண்டியிட மறுத்துவிட்டார்.
“நான் சொல்வதை கேளுங்கள், வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ‘ நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன்’ என்ற பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருப்பேன்” என்று உறுதிபட கூறினார்.
மார்ட்டின் லூதர் கிங்:
அக்காலத்தில் கருப்பின மக்கள் மார்டின் லூதர் கிங் வழி நடத்திய சமஉரிமைக்கான பெரும் போராட்டத்தில் இருந்தனர். சமஉரிமை கோரி நடத்திய மார்டின் லூதர் கிங் போரையும் எதிர்க்க துவங்கினார். “முகமது அலி சொல்வது போல நாம் எல்லாம் கருப்பு, பழுப்பு நிறத்தவர்கள். ஏழைகள். ஒடுக்குமுறை அமைப்பால் வஞ்சிக்கப்பட்டவர்கள்” என்று அறை கூவல் விடுத்தார்.
அலியின் சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் நடைபெற்ற கருப்பின மக்களின் போராட்டத்தின்போது மார்ட்டின் லூதர் கிங்-உடன் அலி கலந்து கொண்டார். அப்போது “உங்களது சுதந்திரம், நீதி, சமத்துவம் கேட்டு நடக்கும் போராட்டத்தில் உங்களோடு நானும் இருக்கிறேன். எனது சொந்த மக்கள், என்னோடு வளர்ந்தவர்கள், என்னோடு படித்தவர்கள், எனது உறவினர்கள் சுதந்திரம், நீதி, குடியிருப்பு சமஉரிமை கேட்பதற்காக, தாக்கப்படுவதை, தெருக்களில் விரட்டப்படுவதை வேடிக்கைப் பார்த்து நான் சும்மா இருக்க முடியாது” என்றார்.
கைதும், விடுதலையும்
1967-ம் ஆண்டு ஜீன் 19-ம் தேதி கீழை நீதிமன்றம் முகமது அலி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. படையில் சேர மறுத்ததற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனை, கடவுச்சீட்டு முடக்கம். அவரது சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 3 1/2 ஆண்டுகள் அவர் குத்துச்சண்டையில் கலந்து கொள்ள முடியவில்லை. முகமது அலி மேல்முறையீடு செய்தார். 1968-ஆம் ஆண்டுகள் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே உரையாற்றி இருக்கிறார். அந்த உரைகளில் இதோ இரத்தின வரிகள்
“நான் வியட்நாமுக்கு செல்லாததால் நிறைய இழந்துவிட்டேன் என்று கூறுபவர்களுக்கு ஒன்று சொல்வேன், எனக்கு மன நிம்மதி உள்ளது. எனது மனசாட்சிக்கு விலங்கு பூட்டப்படவில்லை. நான் தெளிவாக உள்ளேன். மகிழ்ச்சியுடன் தூங்கி எழுகிறேன். எனது முடிவில் நான் பெருமை கொள்கிறேன். என்னை சிறைக்கு அனுப்பினாலும் மகிழ்ச்சியுடன் சிறை செல்வேன்”
என தனது முடிவின் நியாயத்தை தீர்க்கமாக எடுத்துரைத்தார். இக்காலத்தில் முகமது அலியின் பேச்சுக்கள் அமெரிக்க கொள்கைக்கு எதிராகவும், யுத்தத்திற்கு எதிராகவும், இன, நிறவெறிக்கு எதிராகவும் அமைந்திருந்தது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் ஏராளமான இளைஞர்களை அலியின் பேச்சு ஆகர்ஷித்தது.
1970-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்சநீதிமன்றம் கருப்பின மக்கள் நலன், உயர்வுக்காக என காரணம் சொல்லி முகமது அலியை விடுதலை செய்தது. 31/2 ஆண்டுகளுக்கு பிறகு முகமது அலி மீண்டும் குத்துச்சண்டை வளையத்திற்குள் வந்தார். 1971-ம் ஆண்டு மேடிசானில் “நூற்றாண்டின் சண்டை” என்ற பெயரில் நடைபெற்ற போட்டியில் ஜோ-பிரேசியரிடம் தோல்வி அடைந்தார் முகமது அலி. போட்டி கடுமையாக இருந்தது. 15 வது சுற்றில் பிரேசியர் வென்றார். இருவரையும் சிகிச்சைக்கு அனுப்பும் அளவிற்கு காயம் அடைந்தனர். 1973-ம் ஆண்டு கென்னூர்ட்டனிடம் தோற்றார். மீண்டும் அவருடனேயே மோதி பட்டத்தை வென்றார். பிறகு மற்றொரு போட்டியில் தன்னை தோற்கடித்த ஜோ-பிரேசியரை தோற்கடித்து வெற்றி கண்டார் முகமது அலி.
1981-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி, தனது 39-வது வயதில் குத்துச்சண்டை போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் அலி. தனது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் 21 ஆண்டு வாழ்க்கையில் 61 போட்டிகளில் 56-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் தழுவி உள்ளார். இதில் 37 போட்டியில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். அரசு, நிறவெறி என பல்முனை தாக்குதலுக்கு மத்தியில் அலி தனது வெற்றிப் பயணத்தை நடத்தினார்.
சமுதாயத்தில் பிரபலமானவர்கள் அரசின் கொள்கையில் மாறுபடுகிறபோது அதை துணிச்சலாக தடுக்க முன்வருவது இல்லை. வியட்நாம் போரை எதிர்ப்பது என்பது, அங்கு இழைக்கப்படும் ஏகாதிபத்திய அநீதிக்கும், அமெரிக்காவில் நடைபெறும் இனவெறி அநீதிக்கும் உள்ள தொடர்பை முன்னிறுத்தி தன் உணர்விலிருந்து எதிர்க்கவில்லை. ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே எதிர்த்தார். அவரது நடவடிக்கைகள் இன்றும் கற்க வேண்டியவை.
Leave a Reply