மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சுதந்திர இந்தியா: கருத்துருவாக்கங்களின் போராட்டம்!


இந்திய சுதந்திரத்தின் 70 ஆம் ஆண்டினைக் கொண்டாடவுள்ளோம். 1949 நவம்பர் 25ம் நாளில் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலுக்காக இந்திய அரசியல் சாசன சட்ட முன்வரைவினை சமர்ப்பித்துவிட்டு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார்:

“1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளில், நாம் ஒரு முரண்பட்ட வாழ்க்கைக்குள் கால்  எடுத்து வைக்கப் போகிறோம். அரசியலில் நமக்குள் சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக – பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை நிலவும்.

அரசியலில், ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பு என்பதை நாம் அங்கீகரிப்போம். ஆனால் நமது சமூக – பொருளாதார வாழ்க்கையில், சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில்     ஏற்கனவே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு என்ற கோட்பாட்டினை ஏற்க தொடர்ந்து மறுப்போம்.

“எத்தனை காலம் இத்தகைய முரண்பாடுகள் கொண்ட வாழ்க்கையினைத் தொடரப்போகிறோம்? எத்தனை காலம்ந மது சமூக-பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்?

“இந்த முரண்பாட்டினை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அரசியல் நிர்ணய சபை மிகவும் அக்கறையுடன் உருவாக்கியிருக்கும் அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பினை வெடித்துச் சிதறடித்து விடுவார்கள்.”

*
1920களில் சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்த மூன்று விதமான கண்ணோட்டங்கள் தோன்றின. சுதந்திர இந்தியாவைக் கட்டமைப்பது குறித்த முரண்பட்ட அந்தக் கருத்தாக்கங்கள், இன்றும் மோதிக் கொண்டிருக்கின்றன.

ஓர் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்க வேண்டும் என தேசிய விடுதலை இயக்கமான காங்கிரஸ் (முதலாளித்துவ லிபரல் பார்வையிலான) கண்ணோட்டத்தை முன்வைத்தது. அந்தப் பார்வையிலிருந்து ஒரு படி மேம்பட்டு, அரசியல் சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி நபரும் பொருளாதார சுதந்திரத்தை அடைந்திடும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும், சோசலிசத்தின் கீழ் மட்டுமே இது சாத்தியமாகும் என்ற கண்ணோட்டத்தை இடதுசாரிகள்/ கம்யூனிஸ்டுகள் முன்வைத்தனர்.கம்யூனிஸ்டுகள் மீதான பிரிட்டிஷ் அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்தது. சுதந்திரமான முறையில் சதிவழக்குகள் புனையப்பட்டன. புகழ்பெற்ற மீரட், கான்பூர் சதிவழக்குகளில் தமிழகத்தின் சிங்காரவேலர் உள்ளிட்டு கைதாகினர். விசாரணையையே தங்கள் பிரச்சார மேடையாக கம்யூனிஸ்டுகள் மாற்றினார்கள்.

“நீங்கள் நடத்தும் இந்த விசாரணை, உங்கள் நோக்கத்திற்கு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தப்போகிறது.” என்று எச்சரித்தார்கள். காலனிய நாடுகளின் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக  பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் உணர்வுகளையும் தட்டி எழுப்ப முயன்றார்கள்.

“மிகப்பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளும் தொழிலாளர்களும், தங்கள் உற்பத்திப் பண்டங்களின் மீது உரிமை பெற்றுள்ளார்கள்” என்று நீதிமன்றத்தில் முழங்கினார் எஸ்.வி.காட்டே (கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர்)

இதே காலகட்டத்தில், இந்திய மக்களின் மதரீதியான இணைப்புகளின் அடிப்படையிலான கண்ணோட்டங்களும் முன்வைக்கப்பட்டன. அது ஒரு “இஸ்லாமிய நாடு“ என்ற கருத்தை முஸ்லீம் லீக்கும் “இந்து ராஷ்டிரா” என்ற கருத்தை ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பினரும் முன்வைக்கக் கூடிய வகையில் இரட்டைத் தன்மை கொண்டதாக இருந்தது.

தேசப் பிரிவினை என்ற கோரத் தாண்டவத்தின் கோரத்தை அரங்கேற்றிய அந்தமூன்றாவது கண்ணோட்டம் ஏற்படுத்திய வடு இன்றும் தொடர்கிறது.

மூன்றாவது கண்ணோட்டத்தின் முக்கியப் பிரதிநிதியாக உருவாகி எழுந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனக்கென எந்தவொரு பங்கும் கொண்டிருக்கவில்லை. மாறாக, தன் பிறப்பிலிருந்தே ஏகாதிபத்திய ஆதரவு நிலையுடன் செயல்பட்டது. விடுதலைப் போராட்ட காலத்திலான ஆர்.எஸ்.எஸ் ஆவணங்களை ஆய்வு செய்தால் இந்த உண்மை பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அவ்வாறான ஆய்வை மேற்கொண்ட ஒரு பேராசிரியர் கீழ்க்காணும் விபரங்களை திரட்டியுள்ளார்.

  • பிரிட்டிஷ் அரசின் மீதான விமர்சனம் – ஒன்றுமில்லை
  • பிரிட்டிஷ் ஆட்சியை புகழ்ந்து – 16 வாசகங்கள்
  • பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வந்தே மாதரம் பாடிய சம்பவம் – ஒன்றுமில்லை
  • சிறுபான்மையினர் மீதான துவேசம் மற்றும் தாக்குதல் – 74 இடங்கள்
  • விடுதலைப் போராட்டத்தை துவேசம் செய்து – 16 இடங்கள்
  • சுதந்திர போராட்டத்தை வரவேற்று – ஒன்றுமில்லை
  • பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென – ஒன்றுமில்லை
  • ஏதாவதொரு விடுதலை போராட்ட சம்பவத்தை குறிப்பிட்டு – ஒன்றுமில்லை
  • விடுதலைப் போராட்ட தியாகத்தை புகழ்ந்து – ஒன்றுமில்லை
  • தியாகிகளை துவேஷம் செய்து/விமர்சித்து – 10 இடங்கள்
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் – கொடியையும் புகழ்ந்து – ஒன்றுமில்லை
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், கொடியையும் விமர்சித்து – 10 இடங்களில்
  • சுதேசிகளைப் புகழ்ந்து – ஒன்றுமில்லை
  • *

    சுதந்திர இந்தியா வானது ஏகாதிபத்தியத்துடனான தனது இணைப்பை துண்டித்துக் கொண்டும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்தும் அதன் மீது கட்டமைக்கப்பட வேண்டும் என்று இடதுசாரிக் கண்ணோட்டமே தெளிவாக
    வற்புருத்தியது. இந்தக் கண்ணோட்டத்தின் வெற்றி தவறியதானது, இன்று பெரும்பான்மை வகுப்புவாத அரசியல் கட்சியின் தலைமையில், ஒரு வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தும்
    நிலைக்கு இட்டு வந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆட்சியின் கீழ், பகுத்தறிவுக்கு எதிரான தத்துவமே இந்திய வாழ்க்கையின் சமூக-அரசியல்-கலாச்சார அம்சங்கள் அனைத்திலும் பற்றிப் பரப்பப்படுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட தேசிய உணர்வு நிராகரிக்கப் பட்டு, ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியா மாற்றப் படுகிறது. ஏழைகளை மீண்டும் ஏழ்மையில் தள்ளுவதும், செல்வந்தர்களுக்கு செல்வக் குவியலை ஏற்படுத்துவதுமே நடக்கிறது.

 

தோழர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிடுவதைப் போல “பெரும்பான்மையான மக்களை ஒதுக்கி வைக்கும் (Exclusivist) செயல் திட்டமே” இன்று செயலில் இருக்கிறது. “அறிவுசார்நிலைக்கும் அறிவெதிர் நிலைக்குமிடையில் நடக்கும் போராட்டத்தில் அறிவு   வெற்றி பெற்றால் மட்டுமே, இந்தியா என்ற கருத்துருவம் வெற்றி பெறும்.” தற்போது ஏற்பட்டிருக்கும் வலதுசாரி திருப்பத்திற்கு எதிராக மக்கள் எழுச்சியை வலுப்படுத்துவது மெய்யான தேச பக்தர்களின் முன்னுள்ள கடமையாகும். மக்கள் போராட்டங்களின் மூலம் இந்த ஒற்றுமையினை உருவாக்கி, பலப்படுத்தும் கடமையில் அற்பணிப்பு மிக்க செயல்பாடுகள் அதிகரிக்கவேண்டியுள்ளன.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: