மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


காஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் … தீர்வு என்ன?


– அன்வர் உசேன்

காஷ்மீர் மாநிலம் மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சியையும் இராணுவ நடவடிக்கைகளையும் சந்தித்து வருகிறது.  வன்முறைகள் முடிவில்லாமல் தொடர்கின்றன. இதற்கு உடனடி காரணம் என்ன? புர்ஹான் வானி எனும் இசபுல் முகாஜிதின் அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி என்கவுண்டரில் கொல்லப்பட்டது உடனடி காரணம் ஆகும். புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்திற்கு இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாரை சாரையாக வந்தனர். ஒரு தீவிரவாதிக்கு ஏன் இவ்வளவு ஆதரவு? காஷ்மீர் மக்கள் அனைவருமே தீவிரவாதம் பக்கம் சாய்ந்துவிட்டனரா? இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே ஓரே தீர்வா? காஷ்மீர் நிகழ்வுகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமா அல்லது ஒரு அரசியல் சமூக பிரச்சனையா? இவையெல்லாம் எழும் சில கேள்விகள்!

(இந்தக் கட்டுரை எழுதப்பட்ட) சூலை 25 வரை 50 பேர் இறந்துள்ளனர். இதில் இருவர் காவலர்கள். சுமார் 5500 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 2259 பேர் குடிமக்கள். கொடூரமான பெல்லெட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (13 லட்சம் குண்டுகள் பயன்படுத்த்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் காயல்லட்டோரில் 14 சதவீதம் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளாகு)  காஷ்மீர் மக்கள் 117 பேர் தமது பார்வையை இழந்துள்ளனர். இதில் சிறு குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோரும் அடங்குவர். வன்முறை எவ்வளவு பரவலாக இருந்துள்ளது என்பதை இந்த விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இப்போதைய சூழலை புரிந்து கொள்ள காஷ்மீரின் வரலாற்றை சிறிது திரும்பி பார்க்க வேண்டியுள்ளது.

காஷ்மீர் வரலாறு ஒரு கழுகுப்பார்வை

கி.மு. 3ம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியால் ஸ்ரீநகர் உருவாக்கப்பட்டது. அசோகருக்கு பின்னர் ஜலோகா எனும் மன்னன் ஆண்டான். இக்காலத்தில் புத்தமதம் பரவலாக பின்பற்றப்பட்டது. கி.பி.210 வரை இருந்த குஷாணர்கள் ஆட்சி காலத்தில் புத்த மதம் மேலும் வேரூன்றியது. 6வது நூற்றாண்டில் ஹீனர்கள் காஷ்மீரை தமது பிடிக்குள் கொண்டுவந்தனர். கி.பி. 627ல் துர்பலா வர்தனா எனும் மன்னன் இப்பகுதியை தனது திருமண சீதனமாக பெற்றான். இந்த மன்னன் காலத்தில் பல இந்து கோவில்கள் கட்டப்பட்டன. 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காஷ்மீருக்கு இந்து மதத்தை பரவலாக்கிட வருகை புரிந்தார். 14ம் நூற்றாண்டில் ஷா மிர்சா எனும் இசுலாமிய மன்னன் காஷ்மீரின் ஒரு பகுதியை கைப்பற்றினான். கி.பி. 1546ல் அக்பர் பேரரசர் காஷ்மீரை முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆட்சியின் பொழுது இசுலாம் வலுவாக காஷ்மீரில் காலூன்றியது.

1751ல் ஆஃப்கன் அரசர்களின் பிடியில் காஷ்மீர் சென்றது. பின்னர் 1789ல் சீக்கியர்கள் காஷ்மீரை கைப்பற்றினர். 1846 போரில் சீக்கியர்களை பிரிட்டஷ் படை வென்றது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் பொழுது பிரிட்டஷார் 75 இலட்சம் ரூபாயை கோரினர். இந்த பெரும் தொகையை தர இயலாத சீக்கிய மன்னன் காஷ்மீரை பிரிட்டஷாருக்கு கொடுத்தான். காஷ்மீரை நிர்வகிப்பதில் பல இன்னல்கள் ஏற்பட்டதால் பிரிட்டஷார் இப்பகுதியை டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங் எனும் மன்னனிடம் 100 இலட்சம் ரூபாய்க்கு விற்றனர். அப்பொழுது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி குலாப்சிங் பிரிட்டஷாருக்கு வரிகளை கட்டிவிட்டு காஷ்மீருக்கு மன்னனாக தொடர்ந்தான். குலாப்சிங் வழியில் இரண்பீர்சிங் (1857-85) , பிரதாப்சிங் (1885-1925) மற்றும் ஹரிசிங் (1925-47) ஆகியோர் காஷ்மீரை ஆண்டனர். பிரிட்டஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் காஷ்மீர் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பின்னணி

ஹரிசிங் காஷ்மீரை ஆண்ட காலத்தில் நிலப்பிரபுத்துவ ஆட்சி முறை நிலவியது என்பதை கூறத்தேவையில்லை. இதனால் மக்கள் கடுமையான அடக்கு முறைக்கு ஆளாயினர். மிகப்பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் நிலமற்றவர்களாக இருந்தனர். நிலம் ஒரு சிலரின் பிடியில் குவியலாக இருந்தது. வாழ்வாதரம் பறிக்கப்பட்ட மக்கள் மன்னரின் ஆட்சிக்கு எதிராக

போராட தள்ளப்பட்டனர். மக்களின் இயக்கங்களுக்கு வடிவம் தந்து தலைமை தாங்கியது “அனைத்து ஜம்மு- காஷ்மீர் முஸ்லிம் மாநாடு” எனும் அமைப்பு ஆகும். இதன் தலைவர் ஷேக் அப்துல்லா. 1930 மற்றும் 1940களில் பல போராட்டங்கள் மன்னர் ஆட்சிக்கு எதிராக நடைபெற்றன. இப்போராட்டங்களை அடக்கிட ஹரிசிங் படைகளை ஏவினார். எனினும் போராட்டங்கள் ஓயவில்லை.

ஷேக் அப்துல்லாவின் அமைப்பில் “முஸ்லிம்” எனும் பெயர் இருந்தாலும் பல இந்துக்களும் சீக்கியர்களும் கூட இந்த அமைப்பின் தலைமையில் இருந்தனர். எனினும், நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அமைப்பின் பெயர் 1939ல் “ஜம்மு காஷ்மீர் மாநாடு” என மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றம் இரகசிய வாக்கெடுப்பு முறையில் (17 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும்) தீர்மானிக்கப்பட்டது என்பது சுவையான தகவல். இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கைகள் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், நிலமற்ற காஷ்மீர் மக்களுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

இவை இரண்டுமே தனக்கு வேட்டு வைக்கும் கோரிக்கைகள் என்பதால் மன்னர் ஹரிசிங் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நிலஉடமையாளர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்தனர். அவர்கள் தமது வர்க்க நலன்களை பாதுகாக்க மன்னரை ஆதரித்தனர். இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் காஷ்மீர் உள்பிரச்சனையை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக சித்தரித்தனர். இந்த அமைப்புகள் மன்னரின் அடக்குமுறைகளை ஆதரித்தன. தமது ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள மன்னர் ஹரிசிங் இந்த சூழ்ச்சிக்கு பலியானார். எனினும் நிலமற்ற ஏழை இந்துக்களும், மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என ஜனநாயக எண்ணம் கொண்ட படித்த ஏராளமான இந்துக்களும் “ஜம்மு காஷ்மீர் மாநாடு” பக்கம் நின்றனர்.

1946ல் காஷ்மீர் மக்கள் “காஷ்மீரைவிட்டு வெளியேறு” என மன்னருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இந்த போராட்டங்கள் ஷேக் அப்துல்லாவை காஷ்மீர் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக உருவாக்கியது. இப்போராட்டத்தை எதிர்கொள்ள மன்னர் முற்றிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நம்பினார். போராடும் காஷ்மீர் மக்களை எதிர்கொள்ள ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு அரசு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்கிறார் துர்காதாஸ் எனும் ஆய்வாளர். (New Lights on Kashmir p:133).

1947 ஆகஸ்டில் இந்தியா விடுதலை அடைந்தபொழுது காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டார். காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் எனவும் கூறிவிட்டார். மன்னரின் இந்த நிலையை இந்து அமைப்புகள் ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் காஷ்மீர் மக்கள் மத அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை. உண்மையில் காஷ்மீர் மக்களின் போராட்டத்தை ஜின்னா உட்பட முஸ்லீக் கட்சியினர் ஆதரிக்கவில்லை. “காஷ்மீரை விட்டு வெளியேறு” எனும் போராட்டம் சில ரவுடிகளால் வழிநடத்தப்படுகிறது என்று வர்ணித்தார் ஜின்னா.(Kashmir towards Insurgency by Balraj Puri; page: 10).

இந்த நிலையில் 1947ம் ஆண்டு அக்டோபர் 22 அன்று பாகிஸ்தானின் ஆதரவுடன் சில பழங்குடியினர் காஷ்மீரில் புகுந்தனர். சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஸ்ரீநகரை நோக்கி முன்னேறிய வண்ணம் இருந்தனர். மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய அரசாங்கம் ஷேக் அப்துல்லாவுடன் பேசியது. இதன் அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது எனவும், ஆக்கிரமிப்பாளர்களை விரட்டிட இந்தியா இராணுவ உதவி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு முடிந்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் பேசித்தீர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

1947ம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய இராணுவம் காஷ்மீர் சென்றது. இந்திய இராணுவமும் காஷ்மீர் மக்களும் சேர்ந்து பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஆக்கிரமிப்பாளர்களின் முன்னேற்றத்தை தடுத்து திருப்பி விரட்டினர். எனினும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் ஒரு  பகுதியை மீட்க முடியவில்லை. மீட்கப்படாத காஷ்மீரின் இந்த பகுதியே “ஆசாத் காஷ்மீர்” அதாவது சுதந்தர காஷ்மீர் என்று பாகிஸ்தானால் அழைக்கப்படுகிறது. எனினும் ஐ.நா. உட்பட உலக நாடுகள் இப்பகுதியை “பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் பகுதி” என்றே குறிப்பிடுகின்றனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியை திரும்பப்பெற இந்தியா ஐ.நா. சபையில் பிரச்சனை எழுப்பியது. கீழ்கண்ட முடிவுகள் ஐ.நா.சபையில் எடுக்கப்பட்டன:

 • இந்திய காஷ்மீர் பகுதியிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறுவது
 • பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியிலிருந்து பாகிஸ்தான் இராணுவம் வெளியேறுவது.
 • ஐ.நா சபையின் மேற்பார்வையில் காஷ்மீர் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவது.
 • மக்களின் தீர்ப்பு அடிப்படையில் காஷ்மீர் பிரதேசம் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாக இருப்பதா என்பது முடிவு செய்யப்படும்.

பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைவதையே ஆதரிப்பர் எனும் நம்பிக்கை இந்தியாவுக்கு இருந்தது. ஏனெனில் ஷேக் அப்துல்லாவும் காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர். எனினும் பல்வேறு காரணங்களால் இந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை. பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீரில் அந்நாட்டின் இராணுவம் தொடர்ந்து இருப்பதால் இந்த வாக்கெடுப்பு சாத்தியமில்லை என இந்தியா நிலைபாடு எடுத்தது. எனினும் ஐ.நா.சபையில் அமெரிக்கா உட்பட முதலாளித்துவ நாடுகள் வாக்கெடுப்பு குறித்து தீர்மானம் கொண்டுவருவதும், இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் ரஷ்யா வீட்டோ தீர்மானம் பயன்படுத்தி தடுப்பதும் பலமுறை நடந்தது.

அரசியல் சட்டம் 370வது பிரிவு:

இந்தியாவுடன் காஷ்மீர் இணைவது குறித்து மன்னர் ஹரிசிங் மற்றும் இந்திய அரசாங்கம் இடையே (ஷேக் அப்துல்லா ஒப்புதலுடன்) ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இராணுவம், வெளி நாட்டு கொள்கை, தகவல் தொடர்பு ஆகிய மூன்று மட்டுமே மத்திய அரசாங்கம் வசம் இருக்கும். மற்ற அனைத்திலும் மாநில அரசாங்கம்தான் முடிவு எடுக்கும் என்பது  ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்திட ஏதுவாக ஷேக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் சட்டம் குறித்த விவாதம் அப்பொழுது நடைபெற்று வந்தது. 1949ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி காஷ்மீர் தலைவர்கள் ஷேக் அப்துல்லா, அப்சல் பெய்க், சையத் மசூதி, மோதிராம் பக்டா ஆகிய காஷ்மீர் தலைவர்கள் இந்திய அரசியல் நிர்ணய சபையில் இணைந்தனர். அரசியல் சட்டம் பிரிவு 370 குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் அடிப்படையில் 370வது பிரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியல் சட்டம் 370வது பிரிவு காஷ்மீர் மாநிலத்திற்கு சில விசேட சலுகைகளை அளித்தது. அவை யாவை?

 • இந்திய ஒன்றியத்திற்குள் ஜம்மு காஷ்மீர் தனது சொந்த அரசியல் சட்டத்தை இயற்றிக்கொள்வது.
 • ஜம்மு காஷ்மீரில் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரம் இராணுவம், அயல்துறை, தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே அமலாகும்.
 • இந்திய அரசாங்கம் வேறு ஏதாவது அதிகாரத்தை செலுத்தலாம். அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கத்தின் இடைக்கால ஒப்புதலும், பின்னர் மாநில அரசியல் நிர்ணய சபையின் இறுதி ஒப்புதலும் தேவை.
 • 370வது பிரிவை ஜனாதிபதி திருத்தவோ அல்லது முற்றிலும் நீக்கவோ செய்யலாம். ஆனால் அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை தேவை.

காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிர்ணய சட்டசபையை அமைப்பதற்கு ஏதுவாக 1951ம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது. இந்திய காஷ்மீர் பகுதியில் மட்டுமே இத்தேர்தல் நடைபெற்றதால் ஐ.நா.சபை இதனை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. 75 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஷேக் அப்துல்லாவின் கட்சி வென்றது. இதில் 73 இடங்களில் ஷேக் அப்துல்லாவின் கட்சியினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதே மாதத்தில் மன்னர் பொறுப்பில் இருந்த கரன்சிங் (ஹரிசிங்கின் புதல்வர்) மாநில அரசியல் நிர்ணய சபையை கூட்டிட அறிவிப்பு வெளியிட்டார்.

ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதமராக இரண்டு ஆண்டுகள்தான் இருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு ஆண்டுகளில் 370வது பிரிவு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி சில மிகப்பெரிய சாதனைகளை அப்துல்லா அரசாங்கம் அமல்படுத்தியது.

அவை:

 • சுமார் 4 இலட்சம் ஏக்கர் நிலம் நில உடமையாளர்களிடமிருந்து எவ்வித இழப்பீடுமின்றி பறிக்கப்பட்டு நிலமில்லாத ஏழைகளுக்கு அளிக்கப்பட்டது.
 • குத்தகை விவசாயிகள் தாம் உழும் நிலத்திலிருந்து வெளியேற்றப்டுவது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டது.
 • ஒரு ஏழை தான் வாங்கிய கடனில் ஒன்றரை மடங்கு திருப்பி தந்திருந்தால் அக்கடன் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டது.
 • வசதி படைத்த நில உடமையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் இந்துக்கள் கணிசமாக வாழும் ஜம்மு பகுதிக்கும், பவுத்தர்கள் அதிகமாக வாழும் லடாக் பகுதிக்கும் சுயாட்சி உரிமை வழங்கப்பட்டது.

இவை காஷ்மீர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. காஷ்மீர் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் கூட, குறிப்பாக அடித்தட்டு இந்துக்கள் பயன் பெற்றனர். எனினும் இச்சட்டங்களை எதிர்த்து சங்பரிவார அமைப்பான ஜம்மு பிரஜா பரிஷாத் கலகத்தில் ஈடுபட்டது. நிலச்சீர்திருத்த சட்டங்களை மன்னரின் வாரிசு கரண்சிங் மட்டுமல்லாது சர்தார் பட்டேல் கூட எதிர்த்தனர். ஜம்மு பிரஜா பரிஷாத் “ஒரே தேசம் ஒரே சட்டம்” எனும் முழக்கத்தை முன்வைத்து 370வது பிரிவை நீக்க வேண்டும் எனவும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. இதன் பின்னணியில் ஷேக் அப்துல்லா பேசியதாக சில உரைகளை காரணம் காட்டி 1953ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து 1964ம் ஆண்டு விடுதலை ஆனார். ஆனால் மீண்டும் 1965ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1975ம் ஆண்டுதான் விடுதலை செய்யப்பட்டார்.

371வது பிரிவும் கரைந்து போன 370வது பிரிவும்

ஷேக் அப்துல்லா சிறையில் இருந்த காலத்தில் காஷ்மீரில் மிகப்பெரிய பாதகமான மாற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. குறிப்பாக 370வது பிரிவு உட்பட காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புதைக்கப்பட்டன. 370வது பிரிவை நீர்த்து போகவைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவையெல்லாம் செய்யப்பட்டன. காஷ்மீர் மக்களிடமிருந்து இந்திய அரசாங்கம் அந்நியப்படுவதற்கான ஆரம்பம் உருவானது. பின்னாட்களில் இந்த இடைவெளி அதிகமாகியது.

ஆரம்பத்தில் இருந்த 370வது பிரிவு இன்று இல்லை. பெரும்பான்மையான உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. கீழ்கண்ட விவரங்கள் இதனை தெளிவாக்கும்:

 • காஷ்மீருக்கு தனி ஜானாதிபதி, தனி பிரதமர், தனி கொடி என்பது நீக்கப்பட்டது.
 • மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள 97 பிரிவுகளில் 94 பிரிவுகள்
 • மத்திய மாநில அரசாங்கங்களின் கூட்டு பட்டியலில் உள்ள 47 பிரிவுகளில் 26 பிரிவுகள்
 • அரசியல் சட்டத்தின் 395 பிரிவுகளில் 260 பிரிவுகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே 370வது பிரிவு கணிசமான அளவிற்கு நீர்த்து போய்விட்டது. மீதமுள்ளவற்றையும் நீக்க வேண்டும் என்பதையே சங்பரிவாரம் உட்பட பல அமைப்புகள் கோருகின்றன.

370வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமே தரப்பட்ட நியாயமற்ற சலுகை என பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது போன்ற சலுகை வேறு சில மாநிலங்களுக்கும் தரப்பட்டுள்ளன. குறிப்பாக 371வது பிரிவின் கீழ் சில மாநிலங்களுக்கு விசேட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:

 • 371- குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவிற்கு மட்டும் பொருந்தும்
 • 371A- நாகாலாந்திற்கு மட்டும் பொருந்தும்.
 • 371B- அசாமிற்கு மட்டும் பொருந்தும்
 • 371C- மணிப்பூருக்கு மட்டும் பொருந்தும்
 • 371D மற்றும் E ஆந்திராவிற்கு மட்டும் பொருந்தும்
 • 371F – சிக்கிமிற்கு மட்டும் பொருந்தும்
 • 371G- மிசோராமுக்கு மட்டும் பொருந்தும்
 • 371H- அருணாசல பிரதேசத்திற்கு மட்டும் பொருந்தும்
 • 371I- கோவாவிற்கு மட்டும் பொருந்தும்

இப்பகுதி மக்களின் நன்மைக்கும் அவர்களது தனிப்பட்ட கலாச்சாரம் பாதுகாக்கப்படவும் இத்தகைய விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. காஷ்மீருக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது போல தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது உண்மை அல்ல.

ஆசாத் காஷ்மீர் நிலை

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆசாத் காஷ்மீரின் நிலை எப்படி உள்ளது?

சுமார் 43.61 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஆசாத் காஷ்மீர் சீனா, ரஷ்யா  ஆகிய நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 இந்திய காஷ்மீர் பகுதிக்கு அளித்த பல வாக்குறுதிகள் பறிக்கப்பட்டுவிட்டன. ஆனால் அதே போன்ற வாக்குறுதிகளில் சில ஆசாத் காஷ்மீரில் நடைமுறையில் உள்ளன என்பது ஆச்சர்யமான ஒன்று! ஆசாத் காஷ்மீருக்கு தனி சட்டம்; தனி ஜனாதிபதி; தனி பிரதமர்; தனி கொடி ஆகியவை உண்டு. ஆசாத் காஷ்மீருக்கு என தனி உச்சநீதிமன்றம் உண்டு. மேலும் ஆசாத் காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு எவரும் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரம் இராணுவம், தகவல் வசதிகள், வெளியுறவு பிரச்சனைகள், நாணயம் வெளியிடுதல், தபால்தலை வெளியிடுதல் ஆகியவை மட்டுமே ஆசாத் காஷ்மீருக்கு பொருந்தும். மற்ற பிரச்சனைகளில் ஆசாத் காஷ்மீர்தான் அதிகாரம் படைத்தது. ஆசாத் காஷ்மீரின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்தகைய சுயாட்சி முறைகளை பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதிப்பதற்கு இந்திய பகுதியில் வாழும் காஷ்மீரி மக்களிடையே அரசாங்கத்திற்கு எதிரான உணர்வை உருவாக்குவது கூட காரணமாக இருக்கலாம்.

இவையெல்லாம் இருந்தாலும் பாகிஸ்தான் மைய அரசாங்கம் தனது அதிகாரத்தை ஆசாத் காஷ்மீரில் நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. ஆசாத் காஷ்மீருக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தனது அதிகாரத்தை அரசாங்கம் செலுத்துகிறது. இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரமும் தொடர்ந்து செய்யப்படுகிறது. இந்திய காஷ்மீர் பகுதியில் 1951ம் ஆண்டே வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் நடந்தது. ஆனால் ஆசாத் காஷ்மீரில் 1970ல்தான் தேர்தல்கள் நடந்தன. பெரும்பாலும் பாகிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள கட்சிதான் ஆசாத் காஷ்மீரில் வெற்றி பெறுகிறது.  முடிவுகள் அவ்வாறு உருவாக்கப்படுகின்றன என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசியல் ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் ஆசாத் காஷ்மீரின் முக்கியத்துவத்தை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. ஆசாத் காஷ்மீரை தனது விருப்பத்திற்கேற்ப செயல்பட அனுமதிப்பதில் உள்ள ஆபத்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு, குறிப்பாக இராணுவத்திற்கு நன்றாக தெரியும். எனவே ஆசாத் காஷ்மீர் மக்கள் தம் விருப்பத்திற்கேற்ப சுயாட்சி நடத்த இயலாது என்பதே தற்சமயம் நிலவும் சூழல்!

இசுலாமிய சுஃபி பிரிவின் பின்னடைவும் அடிப்படைவாதம் தோன்றலும்.

1953ல் கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லா தமிழகத்தில் கொடைக்கானலில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964ல் விடுதலை செய்யப்பட்டாலும் மீண்டும் 1965ல் கைது செய்யப்பட்டு 1975ல்தான் விடுதலை செய்யப்பட்டார். 1975ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷேக் அப்துல்லாவிற்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இரு அம்சங்கள் முக்கியமாக இடம் பெற்றன. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்பது நிரந்தரமானது என்பதை ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொண்டார். 1953க்கு பிறகு 370வது பிரிவில் கொண்டுவந்த மாற்றங்களை மறுஆய்வுக்கு உட்படுத்திட இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டார்.

ஷேக் சிறையில் இருந்தபொழுது அவரது தேசிய மாநாடு இயக்கம் தடைசெய்யப்பட்டு கலைக்கப்பட்டது. எனவே காங்கிரஸ் ஆதரவுடன் ஷேக் முதல்வர் ஆனார். விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்பது எழுதப்படாத முடிவு. எனினும் வழக்கம் போல காங்கிரஸ் காலை வாரியது. ஷேக்கிற்கு கொடுத்த ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற்றுக்கொண்டது. ஷேக் பதவி இழந்தார். எனினும் 1977ல் நடந்த தேர்தலில் மீண்டும் வென்று முதல்வர் ஆனார். 1982ல் அவர் இறக்கும் வரை முதல்வராக இருந்தார்.

ஷேக் அப்துல்லா நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டது என்பது காஷ்மீர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தங்களுக்கு அளிக்கப்பட்ட வாகுறுதிகளுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என அவர்கள் கருதினர். ஷேக்கின் மறைவுக்கு பிறகு நடந்த நிகழ்வுகள் இந்த அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தியது. சுயாட்சி முறையை முற்றிலும் குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற கோட்பாடை உடைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காஷ்மீரை தனது அரசியல் பிடியில் கொண்டுவர முனைப்புடன் செயல் பட்டது. இதற்காக பல நீசத்தனமான அரசியல் முயற்சிகள் செய்யப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரூக் அப்துல்லாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் பரூக் அதுல்லாவை பணியவைத்து கூட்டணி ஆட்சி உருவாக்கப்பட்டது. அதுவும் பின்னர் கவிழ்க்கப்பட்டது. 1990 முதல் 1996 வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியாவின் வேறு எந்த மாநிலமும் இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல் இருந்தது இல்லை. இந்த அரசியல் நிகழ்வுகள் காஷ்மீர் மக்களிடம் கோபத்தையும் விரக்தியையும் விளைவித்தன.

மறுபுறத்தில் காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. தொழில் வளர்ச்சி அனேகமாக இல்லை. விவசாயமும் வளர்ச்சி காணவில்லை. சுற்றுலா மட்டுமே காஷ்மீரின் வாழ்வாதாராமாக ஆனது. தேசத்தின் இதர பகுதிகளைப் போலவே காஷ்மீரிலும் வேலையின்மை இளைஞர்களிடையே அதிருப்தியை தோற்றுவித்தது. 1980களின் இறுதியில் ஆப்கனில் இருந்து சோவியத் படைகள் வெளியேறின. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானில் உருவாக்கிய தலிபான் எனும் இரத்தக்காட்டேரி தனது இரத்தவெறிக்கு புகலிடம் தேடியது. காஷ்மீரும் ஒரு புகலிடமாக ஆனது.

காஷ்மீர் மக்களின் கலாச்சாரம் “காஷ்மீரியத்” எனப்படும் விசேட பண்பு கொண்டதாகும். காஷ்மீர் மக்கள் இசுலாமில் சுஃபி பிரிவை தமது வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டவர்கள். சுஃபி பிரிவு பரந்த அணுகுமுறை கொண்டது. அனைத்து மதங்களையும் சமமாக பாவித்து அரவணைப்பு தன்மையுடன் இயங்கும் குணம் கொண்டது. அதனால்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1990க்கு முன்பு வரை மதக்கலவரம் என்பது அறவே கிடையாது. 1947ல் தேசமே மதக்கலவரத்தில் பற்றி எரிந்தது. ஜம்மு பகுதியில் கூட மதக்கலவரங்கள் நடந்தன. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மதக்கலவரம் நடக்கவில்லை.

தமது சுஃபி கலாச்சாரம் காரணமாகவே காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய மறுத்தனர். தமது கலாச்சார அடையாளத்தை பாதுகாத்திடவே அவர்கள் 370வது பிரிவு எனும் பாதுகாப்பு வளையத்தை கோரினர். ஆனால் 1990களில் காஷ்மீர் மண்ணில் கற்பனை செய்ய முடியாத பல சமூக கொடுமைகள் நிகழத் தொடங்கின. தீவிரவாதம் தலை தூக்கியது. இந்து பெண்கள் பொட்டு வைக்ககூடாது என தீவிரவாதிகள் பகிரங்கமாக கட்டளை இட்டனர். வரலாற்றில் முதல் முறையாக காஷ்மீர் பள்ளதாக்கில் மதக்கலவரங்கள் தோன்றின. பல காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் உயிருக்கு பயந்து உடமைகளை இழந்து ஜம்முவில் அடைக்கலம் புகுந்தனர். சங்பரிவாரம் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திட தீவீர முயற்சிகளை செய்தது. மறுபுறத்தில் பாகிஸ்தான் இதை தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக கருதியது. ஆப்கனில் இருந்து திரும்பிய பல தீவீரவாதிகள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர்.

மாபெரும் சுஃபி கலாச்சாரத்தில் இருந்த காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினர் குறிப்பாக இளைஞர்கள் தீவிரவாதம் பக்கம் தமது கவனத்தை திருப்பினர். இது காஷ்மீருக்கு மிகப்பெரிய துன்பங்களை விளைவித்தது. ஆனால் இது காஷ்மீருக்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. காஷ்மீர் சர்வதேச பிரச்சனையாக மாறியது. சர்வதேச அளவில் இப்பிரச்சனையை சந்திக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டது. பாகிஸ்தான் வேண்டாம் என இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர் மக்கள் இந்தியாவிடமிருந்து அந்நியப்பட ஆரம்பித்தனர்.  மத்திய அரசாங்கத்தின் சுயநலமிக்க அரசியல் அணுகுமுறைதான் இதற்கு காரணம். தீவீரவாதத்தை ஒடுக்க இராணுவம் தனது நடவடிக்கைகளை அபரிமிதமாக அதிகரித்தது. இராணுவ நடவடிக்கைகள் குடிமக்களின் உரிமை மீறல்களுக்கு வித்திட்டது.

காஷ்மீர் பிரச்சனையை இராணுவம் மூலம் மட்டுமே தீர்க்க முடியாது. அடிப்படையில் அது அரசியல் பிரச்சனை. காஷ்மீர் மக்களின் இதயங்களை வென்றெடுக்க வேண்டிய பிரச்சனை. மத்தியில் இருந்த அரசாங்கம் இதனை உணரவேயில்லை. வன்முறை மற்றும் தீவீரவாத செயல்கள் சில ஆண்டுகள் தொடர்ந்தன. பிறகு தீவீரவாதத்திற்கு காஷ்மீர் மக்களிடையே ஆதரவு குறையத் தொடங்கியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி காஷ்மீர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரியது. இதனை பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின. இதன் விளைவாக மன்மோகன்சிங் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. திலிப் பட்கோங்கர், இராதா குமார், அன்சாரி ஆகியோர் இதில் இடம் பெற்றனர். இரண்டு ஆண்டுகள் காஷ்மீரில் உள்ள பல்வேறு குழுக்களுடன் பேசிய பிறகு 2012ல் இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதில் கீழ்கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன:

 • 1953க்கு முன்பு இருந்த சூழல் மீண்டும் உருவாக்கும் எவ்வித முயற்சியும் நிராகரிக்கப்பட வேண்டும்.(அதாவது காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்பதில் மறுபரீசீலனை இல்லை.)
 • 370வது சட்டப்பிரிவு ஒரு விசேட பிரிவாக கருதப்பட வேண்டும்.
 • காஷ்மீருக்கு அதிகபட்ச சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும்.
 • காஷ்மீர் அரசு அதிகாரிகளில் அந்த மாநிலத்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
 • மாநிலத்திற்குள் நிதி ஆதாரத்துடன் கூடிய பிரதேச சுயாட்சி கவுன்சில்கள் உருவாக்கப்பட வேண்டும்.
 • எல்லைக்கு இருபுறமும் உள்ள காஷ்மீர் மக்களிடையே உறவை வளர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
 • காஷ்மீர் குறித்த இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்.

வழக்கம் போலவே இந்த அறிக்கையும் மத்திய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. இந்த அணுகுமுறை காஷ்மீர் மக்களிடையே மேலும் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது.

மோடி அரசாங்கத்தின் கீழ் காஷ்மீர்

காஷ்மீர் மக்களிடையே மனக்குமுறல்களும் அதிருப்தி மேகங்களும் அதிகமாகிக் கொண்டிருந்த பொழுதுதான் 2014 தேர்தல்கள் நடைபெற்றன. மோடி பிரதமராக பதவியேற்றார். இதனால் ஊக்கம் அடைந்த சங் பரிவாரத்தினர் நாடு முழுதும் சிறுபான்மை மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்தனர். சிறுபான்மை மக்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டது. இயற்கையிலேயே காஷ்மீரிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியது.

சங் பரிவாரம் மேலும் அழுத்தமாக 370வது பிரிவை நீக்க வேண்டும் என குரல் கொடுத்தன. மோடி அரசாங்கம் காஷ்மீர் பிரச்சனையை கையாண்டவிதம் அது தனது சிறுபான்மை மக்களுக்கு எதிரான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறதோ எனும் ஐயத்தை உருவாக்கியது. காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்தன. அத்துமீறல்களும் ஆழமாகின. இராணுவத்தால் இளைஞர்கள் தாக்கப்படுவதும் அவமானப்படுவதும் நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக மாறியது.

காஷ்மீரில் முஃப்தியின் தலைமையிலான PDP கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்தது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை மக்களிடையே உண்டாக்கியது. ஷேக் அப்துல்லாவிற்கு பிறகு காஷ்மீர் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தலைவர் முஃப்தி முகம்மது சையத். ஆனால் அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் எண்ணிக்கையில் மிகச்சிறியது. அவரது மகளும் அரசியல் வாரிசுமான மெகபூபாவிற்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்தது.  PDP கட்சியில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை தொடரக்கூடாது எனும் கருத்து ஆழமாக ஒலித்தது. எனினும் பதவி ஆசை வென்றது. கூட்டணி தொடர்கிறது. ஆனால் காஷ்மீர் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே இது அதிருப்தியை அதிகரித்தது.

இந்த நிலையில்தான் மோடி அரசாங்கம் எடுத்த சில நவடிக்கைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது. அவை என்ன என்பதை பத்திரிக்கையாளர் சீமா முஸ்தபா பட்டியலிடுகிறார்:

 1. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான தனி வீடுகள்.
 2. இராணுவத்தினருக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கில் தனி வீடுகள்.
 3. 370வது பிரிவு மீது தொடரும் தாக்குதல்
 4. AFPSA எனும் இராணுவ சட்டம் தொடர்வது
 5. வெளி மாநிலங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுதல்
 6. சமூக ஊடகங்களில் காஷ்மீர் மக்களுக்கு எதிராக விஷம் கக்குதல்
 7. ஜம்மு காஷ்மீரில் அமைதி உருவாக்கிட பாகிஸ்தானுடன் நடத்த வேண்டிய பேச்சு வார்த்தை சீர்குலைவு.

இத்தகைய நிகழ்வுகள் காஷ்மீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரில் மட்டும் 10 இலட்சம் இராணுவத்தினர் உள்ளனர் எனில் நிலைமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். புர்ஹான் வானி எனும் இளைஞன் ஏன் தீவீரவாதியாக  மாறினான் என்பது கவனிக்கத்தக்கது. 15 வயது நிரம்பிய புர்ஹான் ஒரு நாள் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது இராணுவத்தினரால் விசாரணை என்ற பெயரில் அவமானத்திற்கு ஆளானான். அடுத்த நாள் அவன் ஹிசபுல் முகாதீனில் இணந்தான். அவனது

மூத்த சகோதரனும் ஹிசபுல் அமைப்பின் உறுப்பினராக இருந்து இராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

புர்ஹானின் மரணத்தை கேள்விப்பட்ட அவனது தந்தை “அவன் தியாகியாகி விட்டான்” என்று கூறினார். மேலும் ‘காஷ்மீருக்காக எனது மூன்றாவது மகனையும் தியாகம் செய்ய தயார்” எனவும் கூறினார். “உயிருடன் இருக்கும் புர்ஹான் வானியைவிட கல்லறையில் இருக்கும் புர்ஹான் வானி ஆயிரக்கணக்கான இளைஞர்களை இராணுவத்திற்கு எதிராக வீதிகளில் போராட வைக்கும் வல்லமை படைத்தவனாக மாறிவிட்டான்” என்று கூறினார் உமர் அப்துல்லா.

ஆனந்த்நாக் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் நதீம் ரஷீத் குறிப்பிடுகிறார் ‘ நாங்கள் ஓய்வு எடுத்து 10 நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஏராளமான இளைஞர்கள் கொண்டு வரப்படுகின்றனர். அனைவரும் இடுப்புக்கு மேலேதான் சுடப்பட்டிருக்கின்றனர். பலரும் பார்வையை இழந்துள்ளனர்.” ஒரு இளைஞரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டை காட்டி அவர் மேலும் கூறுகிறார்: “இவை இரப்பர் குண்டுகள் அல்ல. AK 47 துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டுகள். பாதுகாப்பு படையினர் இந்த இளைஞர்களை விரட்டுவதற்கு சுடவில்லை. கொல்வதற்கு சுட்டுள்ளனர்.”

இன்னொரு மருத்துவரான இம்தியாஸ் அகமது கூறுகிறார் :

“பாதுகாப்பு படையினர் எங்களது அவசர சிகிச்சை பிரிவில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இங்குள்ள புகையை போக்கிட நாங்கள் எங்களது பிரிவை 3 மணி நேரம் மூட வேண்டியதாயிற்று.” மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பலரும் வழியில் பாதுகாப்பு படையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி தங்களை தாக்கியதாக குற்றம் சாட்டினர்.

இவையெல்லாம் காஷ்மீரில் நிலவும் சூழலை தெளிவாக படம்பிடித்து காட்டுகிறன. “2008, 2009, 2010ம் ஆண்டுகளிலும் எதிர்ப்புகள் நடந்துள்ளன. ஆனால் தற்பொழுது நடக்கும் எதிர்ப்புகள் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் தீவிரமாக உள்ளன” என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் 4வது  முறையாக காஷ்மீரில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் தோழர் யுசூப் தாரிகாமி.

காஷ்மீர் மக்கள் மேலும் மேலும் அந்நியப்படுவது நல்லதல்ல. குறிப்பாக ஒரு பகுதி இளைஞர்கள் தீவிரவாதிகளை களநாயகர்களாக முன்நிறுத்துவது ஆபத்தான ஒன்று. நீண்ட நாட்களுக்கு பிறகு பேரணிகளில் பாகிஸ்தான் கொடி இடம் பிடிக்கிறது. அதைவிட ஆபத்தான ஒன்று தீவீரவாத அமைப்பான ஐ.எஸ். இயக்கத்தின் கொடி இடம் பிடிப்பது ஆகும்.

காஷ்மீர் மக்களிடம் ஏன் இந்த கோபம்?

தோழர் தாரிகாமி குறிப்பிடுகிறார்:

“1990களில்தான் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மத்தியில் ஆண்ட அரசாங்கங்கள் என்ன செய்தன?

நரசிம்மராவ் சில முயற்சிகளை எடுத்தார். வாஜ்பாய் “மனித நேயத்திற்கு உட்பட்டு அனைத்து தீர்வுகளும் எடுக்கப்படும்” என்றார்.  மன்மோகன்சிங் காலத்தில் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. கமிட்டிகள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் தரப்பட்டன. ஆனால் அனைத்தும் ஏட்டளவில் இருந்தன தவிர எதுவுமே அமலாக்கப்படவில்லை. “

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு பிரச்சனை இன்னும் மோசமாகியுள்ளது. இந்தியா மதச்சார்பின்மையை தேர்ந்தெடுத்ததால்தான் காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்தனர். இன்று மதச்சார்பின்மையே ஆபத்தில் சிக்கியுள்ளது. இவையெல்லாம் காஷ்மீர் மக்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது. மோடி காஷ்மீர் மக்களை எதிரிகளாக பார்க்கிறார். காஷ்மீருக்கு ஒரே தீர்வு மேலும் மேலும் இராணுவத்தை அனுப்புவதுதான் என மத்திய அரசாங்கம் எண்ணுகிறது.”

“புர்ஹான் வானியின் மரணம் எனும் ஒருதனிப்பட்ட நிகழ்வின் விளைவாக இந்த எதிர்ப்புகள் உருவாகவில்லை.  நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் அரசியல், சமூக, சட்டம் மற்றும் மனித உரிமை அத்துமீறல் பிரச்சனைகளின் வெளிப்பாடுதான் இன்றைய எதிர்ப்புகள்.”

தாரிகாமி மேலும் கூறுகிறார்:

“அனைத்து காஷ்மீர் மக்களும் தீவிரவாதிகள் அல்ல. அரசாங்கம் காஷ்மீர் மக்களுடன் பேசவேண்டும். தீர்வு காணவேண்டும். மாறாக காஷ்மீர் மக்களை இந்திய அரசாங்கம் பயமுறுத்திக்கொண்டே இருந்தால் தற்சமயம் சிறிய அளவில் உள்ள தீவீரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில்தான் அது முடியும்.”

காஷ்மீர் பிரச்சனை இந்திய மக்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குவது குறித்து தாரிகாமி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் இந்தியாவின் ஏனைய பகுதி மக்கள் அறியவில்லை. ஊடகங்கள் இதனை திட்டமிட்டு மறைக்கின்றன. தேசியவெறியை கிளப்பி காஷ்மீர் மக்களை எதிரிகளாக சித்தரிக்கும் பிம்பத்தைதான் ஊடகங்கள் மக்கள் முன் நிறுத்துகின்றனர்..”

1990ல் நடந்த வன்முறையில் அயல்நாட்டு தீவீரவாதிகளின் பங்கு இருந்தது. ஆனால் தற்பொழுது நடக்கும் எதிர்ப்பு இயக்கங்களிலும் வன்முறைகளிலும் காஷ்மீர் மண்ணின் இளைஞர்களின் பங்குதான் உள்ளது. அவர்கள் அனைவரும் தீவீரவாதிகள் அல்ல. தமது எதிர்காலம் பொய்த்து போனதாலும் தங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு உதாசீனப்படுத்தப்படுவதாலும் உண்டான கோபத்தின் காரணமாக வழிதவறும் இளைஞர்கள். இந்திய தேசம் இவர்களை அரவணைத்து நல்வழிபடுத்தப்போகிறதா அல்லது தீவீரவாதம் பக்கம் தள்ளிவிடப்போகிறதா என்பதே இன்றுள்ள மிகப்பெரிய கேள்வி.

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன?

கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்:

 • காஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
 • இராணுவத்தை எல்லை ஊடுருவலை தடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 • AFPSA போன்ற சட்டங்கள் உடனடியாக தளர்த்தப்பட வேண்டும். படிப்படியாக விலக்கப்பட வேண்டும்.
 • இராணுவ அத்துமீறல்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும்.
 • அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீர்த்து போகச்செய்த தவறான நடவடிக்கைகள் திரும்பபெற வேண்டும்.
 • இந்திய ஒன்றியத்தின் கீழ் காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் பிரிவு 370 அடிப்படையில் நியாயமான சுயாட்சி உரிமை அளிக்கப்பட வேண்டும்.
 • காஷ்மீர் பிரச்சனை குறித்து அம்மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களிடமும் பேச வேண்டும்.
 • காஷ்மீர் பண்டிட்டுகள் நியாயமான அடிப்படையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தமது பழைய இருப்பிடங்களுக்கு திரும்புவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
 • ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பிரதேசங்களுக்கு பிரதேச சுயாட்சி முறை உருவாக்கப்பட வேண்டும்.
 • காஷ்மீரில் வேலைவய்ப்புகளை உருவாக்கிட தொழில், விவசாயம் மற்றும் அனைத்துமுக வளர்ச்சிக்கு உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
 • எல்லையின் இரு பகுதிகளில் உள்ள காஷ்மீர் மக்களிடையே தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். அதற்கு போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டும். இதற்காக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனை வெறும் பூகோள அல்லது எல்லைப் பிரச்சனை மட்டுமல்ல. இந்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய சுயாட்சி முறைக்கும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் காஷ்மீர் ஒரு அக்னிப் பரீட்சை என்றால் மிகை அல்ல. இந்த அக்னிப் பரீட்சையில் தேறுவது என்பது காஷ்மீர் பிரச்சனையை அந்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுமுகமாக தீர்ப்பதில் உள்ளது. அதே சமயத்தில் காஷ்மீர் பிரச்சனையின் அனைத்து அம்சங்களையும் இந்தியாவில் உள்ள ஏனைய பகுதிகளில் உள்ள மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியம் ஆகும். இத்தகைய முயற்சிகள் இல்லையெனில் மோடி அரசாங்கமும், சங் பரிவாரமும், சில ஊடகங்களும் முன்வைக்கும் தேசிய வெறிக்கும் காஷ்மீர் மக்கள் அனைவரும் தேச விரோதிகள் என சித்தரிக்கும் சூழ்ச்சிகளுக்கும் மக்கள் பலியாகும் ஆபத்து உள்ளது.

இக்கட்டுரைக்கான ஆதாரங்கள்:

 1. காஷ்மீர் பற்றி மார்க்சிஸ்ட் கட்சி 2010ம் ஆண்டு இயற்றிய தீர்மானம்.
 2. ராம் புணியானி இந்து நாழிதழில் எழுதிய கட்டுரை
 3. ஏ. ஜி.நூரானியின் ஃபிரண்ட்லைன் கட்டுரை
 4. யூசுப் தாரிகாமியின் தி வயர் இதழில் வெளியிடப்பட்ட பேட்டி
 5. தோழர் சுர்ஜித் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் எழுதிய கட்டுரைகள்
 6. காஷ்மீர் சுதந்திர போராட்ட வரலாறு/ பிரபீர் கோஷ்.
 7. தொடரும் காஷ்மீர் யுத்தம்/கி. இலக்குவன்.


One response to “காஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் … தீர்வு என்ன?”

 1. […] Read also: காஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணு… […]

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: