– ஜி.செல்வா
1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலைமறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமை தாங்கி வழிநடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).
“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிச பாதைக்கு அடித்தளமிட்டு, உலகமெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்த பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் “சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு” என்னும் நூல்.
நூல் உருவான பின்னணி
உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலிசப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டுமானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.
மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத்தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர்களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர்களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப்படுத்துவதும்தான் எனக் கருதினார்.
இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937 ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது.
இப்புத்தகம் 1938 செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடராக 50 லட்சம் பிரதிகள் வெளியான ‘பிராவ்தா’ கட்சி நாளிதழில் வெளியிடப்படுகிறது. 1938 அக்டோபர் 1ஆம் தேதி “சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு” என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற்குள் 70,000 நூல்கள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.
1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்தவரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டாலின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.
1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக்களை இக்கட்டுரையில் சுருக்கமாக பார்க்கலாம்.
கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்
புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக்கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர். அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந்ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.
1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப்படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக்கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 காலகட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் “தொழிலாளர் விடுதலைக் குழு” என்ற பெயரில் அமைக்கப்படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதனமும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.
இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் ‘மக்களிடம் செல்வது’. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப்பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித்துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப்புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிசிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.
இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர்காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர் திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட ‘சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி’ என்ற புத்தகம் ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப்படுத்த பணிபுரிந்தது என லெனின் கூறியுள்ளார்.
தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது ‘தொழிலாளர் விடுதலைக் குழு’ என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்காலகட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியை ‘கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில்’ இருந்ததாக லெனின் கூறினார்.
புரட்சிகர தத்துவம் : புரட்சிகர இயக்கம்
புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும், நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படியான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர்களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.
லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மார்ச்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றியடையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவராக ஏற்கச் செய்தன.
1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி (ஸிஷிஞிலிறி) முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண்டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடியவில்லை. இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நரோத்னிக்குள் மற்றும் ‘பொருளாதாரவாதிகள்’ அதாவது பொருளாதார கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும்தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ‘ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி’ நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இன்றைய இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இந்நூல் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.
லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறைவேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சிகரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப் படையாக ஆகும்”. எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.
கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத்தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப்படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சையாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதிகார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின்றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.
புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தியல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களாகப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றியவர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர்கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.
போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். “ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த்தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் “சமூக சீர்திருத்தக் கட்சிகளாக” மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களுடைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளிகளுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட்சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்”.
உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றிருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரணமாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.
இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல்தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத்தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள்” என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. கடைசியாக லெனின் எழுதிய “பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்” என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.
இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்குவதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத்திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
புரட்சி… புரட்சி… புரட்சி…
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?
எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல
முழுச் சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;
முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.
நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி
அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?
இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங்களாக மாறின.
ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப்பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.
இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலாடியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.
புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற்குப் பதில் அதை “சீர்படுத்துவது” எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக்கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சிகரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்குகள்தான் என நிரூபிக்கப்பட்டது.
இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக்கான வேலை செய்வது கடினமான தாகமாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ்விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.
சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமையாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர்வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத்தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோதிகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ்விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக்கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறுதல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.
முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் அதை உணர்ந்தனர். யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். “சமாதானம் நிலவ வேண்டும்” என்ற லட்சியத்துடன், “பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும்” என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் “ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்”. இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருவூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.
ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். “தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலிசம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத்தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத்தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத்திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத்தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு இன்றைக்கு உபயோகமற்ற கருத்து என நிராகரித்தார்”. பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன்படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலிசம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியம் தான்” என்றார்.
இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகியவற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக்குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டுதான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.
விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டாவது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.
இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவுபடுத்தினார்.
முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் வழிகாட்டினார். அது “ஏப்ரல் கொள்கை” என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழிகாட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.
போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. நவம்பர் 7 சோசலிசப் புரட்சி முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக்கியது.
சோசலிசத்தை நோக்கி…
நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டுகோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடுகள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ் பெட்டில்ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமுதாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையிலிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப்புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யா¬விட்டு வெளியேறினர்”.
இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக்களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய “லெனினியத்தின் அடிப்படைகள்” என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.
இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந்தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் ¤படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.
நிறைவாக
“சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.
மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்துக்களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் “மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி” எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.