– இரா.சிசுபாலன்
மகத்தான நவம்பர் புரட்சி மனிதகுல வரலாற் றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சோசலிசப் புரட்சி இயக்கத்தில் புதிய கட்டம் துவங்கியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் ஜனநாயகப் புரட்சிகள், மகத்தான சீனப்புரட்சி, வியட்நாம், கியூபப்புரட்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப்புரட்சிகள் மகத்தான வெற்றி பெற நவம்பர் புரட்சியே ஆதர்ச மாய் விளங்கியது.
இந்திய விடுதலை இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் நவம்பர் புரட்சி இந்தியப் புரட்சியாளர்கள் மீது புதிய வெளிச் சத்தைப் பாய்ச்சியது. அவர்கள் இந்திய விடுதலையை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமல்லா மல், அது சமூகப் பொருளாதார விடுதலையாக மட்டுமல்லாமல், அது சமூகப் பொருளாதார விடுதலையாகவும் அமையவேண்டும் என்ற புதிய கண்ணோட்டத்தைப் பெற்றனர். தமிழகத்தில் நவம்பர் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரஷ்யப்புரட்சியை யுகப்புரட்சி என வரவேற்ற மகாகவி பாரதி, முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகிற்கொரு புதுமை எனப் பாடி னார். புரட்சி, பொதுவுடைமை ஆகிய கருத்து களைத் தமிழகத்தில் முதன்முதலில் விதைத்தவர் மகாகவியே ஆவார். மேலும், குடிமக்கள் சொன்ன படி குடிவாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி என சோசலிசத்தைப் புரிந்து கொண்டு இந்தியா விலும் அத்தகைய இலட்சியம் ஈடேற வேண்டும் என்றார். சோசலிசம் என மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்குத் தெளி வாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. எனினும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி கவுரவமான வாழ்க்கை நடத்து வதற்கு ஒரே மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொது வுடைமையாக்கி, அதில் சகத் தொழிலாளிகளாகவும், கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்க மாகும் என 1925ம் ஆண்டு The Coming Age என்ற ஆங்கிலக் கட்டுரையில் மகாகவி குறிப் பிட்டார். நவம்பர் புரட்சியைப் பற்றி இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் பாரதியார் முதலில் பாடினார்.
சமரச சன்மார்க்கமே தேச விடுதலையின் சாராம்சம் எனக் குறிப்பிட்ட தியாகி சுப்பிரமணிய சிவா தனது பாரதீய மதத்தின் இலட்சியமாக எல்லோருக்கும் பொதுவான சமரச சன்மார்க்க விடுதலையையே பிரகடனப்படுத்தினார். ஆன்மீக விடுதலை என்பதே தேச விடுதலைதான் என அவர் விளக்கினார். தன் மீதான வழக்குகளில் நீதிமன்றங்களில் அவர் அளித்த வாக்கு மூலங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. எப்பொழுது, எங்கே சுதந்தரம் நசுக்கப்படுகிறதோ, நசுக்கப்பட முயற்சி செய்யப் படுகிறதோ அப்பொழுது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன், எனது எதிர்ப்புக்குரலைக் கிளப்புவதும், சிரமப்பட்டு சுதந்தரம் ஒளிர்விட பாடுபடுவதும் எனது தர்மமாகும். உலகிலே அடிமைப்பட்டுக்கிடக்கும் சகல மக்களுக்கும் நியாயத்தை எடுத்துரைப்பது எனது தர்மமாகும் எனக் குறிப்பிட்டார்.
1919ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சென்னையில் சுப்பிரமணிய சிவா ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வ.உ.சி, ஆங்கி லேயரின் கொடுங்கோன்மை, பலாத்காரம், நீதி யின்மை ஆகியவையே அவர்களுக்கு எதிரான சதி வேலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்றார். 1920 ஜூன் 21ல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரசின் இருபத்தி ஆறாவது மாநில மாநாட்டில் வ.உ.சி இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில் ஒன்று தொழிலா ளர் சங்கங்களைப் பற்றியது. காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் தொழிற் சங்கங்களைத் துவக்க வேண்டுமெனவும், நியாயமான குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமிக்க குடியிருப்பு வசதி, முழுமையான தடையற்ற சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும் எனவும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. மேலும் சென்னை மாநில மேலவைக்குத் தொழிலாளர் களிடமிருந்து போதுமான பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட வழிவகை செய்யப்பட வேண்டு மெனவும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.
1921ம் ஆண்டு மகாத்மா காந்திக்கு பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார். ஊமையராய் உள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கானவர்களின் நல்வாழ்வுக்கு தாங் கள் பாடுபடுவதால் நான் தங்களை ஆதரிக்கிறேன். துர்பாக்கிய நிலையிலுள்ள நமது மக்கள் தற்போ தைய அந்நிய அதிகார வர்க்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் மட்டும் போதாது; நமது சொந்த மக்களின் எதிர்கால அதிகாரவர்க்கத்தை எதிர்த்தும் போராடி முறியடித்தால்தான் சுதந்தர மும், மகிழ்ச்சியும் கிட்டும். நிலமும், ஆலைகளும் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டு நாட்டில் தொழிலாளர் அனைவரின் நன்மைக்காகவும் பயன்படும் கம்யூனிசம் மட்டுமே நமது மக்களுக்கு விடுதலை கிட்டியதற்கான உண்மையான அளவு கோலாக இருக்க முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1922ம் ஆண்டு கயாவில் நடை பெற்ற இந்திய தேசியக்காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர், உலகக் கம்யூனிஸ்டு களின் பிரதிநிதியாகத் தன்னைப் பிரகடனப்படுத் தினார். 1923ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நாட்டிலேயே முதன்முறையாக மே தினக் கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர் சுயராஜ்ஜியம் அமைய வேண்டும் என முழங் கினார். இக்கூட்டத்துக்கு வேலாயுதம் தலைமை தாங்கினார். தியாகி சுப்பிரமணிய சிவா, கிருஷ்ண சாமி சர்மா ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் – விவசாயிகள் கட்சி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது; இந்திய தேசியக் காங்கிரஸ், நாடு என்பதை உடமை வார்க்கத்தின் உரிமையாகவே வரையறுக்கிறது. அவர்களது சுயராஜ்ய திட்டத்தில் தொழிலாளிகளும், ஏழை விவசாயிகளும் செல்வர்களின் நலனுக்குத் தன் னையே தியாகம் செய்து கொள்ள வேண்டும். இன்றைய ஐரோப்பிய எஜமானர்களுக்கு பதிலாக இந்திய அதிகார வர்க்கத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக உள்ளது. முதலாளி களும், ஜமீன்தார்களும் காங்கிரசின் முதுகெலும் பாக உள்ளதால் தொழிலாளர்களுக்குக் காங் கிரஸ் ஒரு நன்மையும் செய்யாது. எனவே தொழி லாளர், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கக் கூடிய, வர்க்க உணர்வு கொண்ட அரசியல் கட்சி தேவைப்படுகிறது எனக் கட்சியின் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தியது. நாட்டின் அர சாட்சி முறை இந்துஸ்தான் பஞ்சாயத்து என்னும் கூட்டாட்சியாக இருக்கும். கிராம மட்டத்தி லிருந்து மத்திய அரசு மட்டம் வரை பஞ்சாயத் துக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மத்திய அரசின் மைய உறுப்பாக அனைத்துப் பஞ்சாயத்துகளின் காங்கிரஸ் அமைந்திருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை மக்கள் திருப்பி அழைத்துக் கொள்ள உரிமை உண்டு என அப்பிரகடனம் மேலும் குறிப்பிட்டது.
இக்கட்சியின் பத்திரிகைகளாக லேபர் -கிசான் கெசட் என்ற ஆங்கில இதழும், தொழிலாளி என்ற தமிழ் இதழும் வெளிவந்தன. இவற்றின் மூலம் கொள்கைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மாமேதை லெனின் மறைந்தபொழுது லேபர் – கிசான் கெசட் தனது அஞ்சலியில் பின்வரு மாறு குறிப்பிட்டது: அரசியல் சிந்தனையிலும், தத்துவத்திலும் லெனின் அவர்கள் தமது சொந்த நாட்டின் செய்த மகத்தான புரட்சி ஒரு வேளை அழிக்கப்படலாம் அல்லது சில சுயநல மனிதர் களால் துடைத்தெறியப்படலாம். ஆனால் அது மீண்டும் மீண்டும் தன்னைப் புனரமைத்துக் கொண்டு உலகை வெல்லும், உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!
தமிழ்த்தென்றல் திரு.வி.க தேசபக்தன் (1917), நவசக்தி (1920) ஆகிய இதழ்களில் பொதுவு டைமைக் கருத்துகளை எழுதிவந்தார். முற்போக் காளராகத் திகழ்ந்த அவர், சன்மார்க்கமும், சமதர்மமும் கலக்க வேண்டும் என வலியுறுத் தினார். நவசக்தி-யின் இலட்சியங்களாகப் பின் வருவனவற்றைப் பட்டியலிட்டுள்ளார் (22.10.1920)
- மக்கள் சுதந்தரத்துக்கு அடிப்படையானது ஜனநாயக முறையாதலால் அதை நாடி உழைத்தல்.
- ஜனநாயக முறைக்கு அடிகோல வேண்டு வது தொழிலாளர் இயக்கமாதலால் அவ்வியக் கத்தை வளர்க்க முயலல்.
- தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த வும், அவர்களது குறைகளை நிவர்த்திக்கவும், அவர்கள் வழி ஆட்சி முறையைத் திருப்பவும், அவர்கட்கெனத் தனியாக உழைக்கவும் தொழிற் கட்சியை ஓம்பவும், விவசாயிகளின் கஷ்டங்களைப் போக்க முயலவும் தொழிற்சாலைகளைப் பெருக்குதல்
- பெண்கள் நலனுக்குப் பாடுபடுதல்.
- தமிழ் மொழியையும், தமிழ்நாட்டுப்பழைய பழக்க வழக்கங்களையும் செப்பஞ்செய்தல்.
- தமிழ்நாட்டில் தோன்றியுள்ள சாதியப்பகை, வகுப்பு துவேசம் முதலியவற்றை ஒழித்துச் சகோதர நேயத்தை வளர்த்தல்.
- தேசத்துக்குத் தீங்கிழைக்கும் கட்சிகளைக் கண்டித்து, அக்கட்சித் தலைவர்களை நேசித்துத் தேச வளர்ச்சியை நாடும் கட்சியில் அவர்களைத் திருப்பமுயலல்.
- இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்திய ராகக் கருதி, அவரை ஒரினமாக்கி, அவர் நலத்துக் காகத் தியாகம் செய்தல்.
சென்னை நகரில் ஆங்கிலேய முதலாளிக்குச் சொந்தமான பக்கிங்காம் கர்னாடிக் பஞ்சாலை யில் தொழிற்சங்கம் துவக்கப்பட்ட அனுபவத்தைத் தனது வாழ்க்கைக் குறிப்பில் திரு.வி.க பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்:
1918ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ஜங்கார மாயம்மாள் பங்களாவில் வெங்கடேச குணாமிர் தவர்ஷினி சபை சார்பில் தொழிலாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கடந்து கூட்டத்தைச் சிறப்பித் தனர். தொழிலாளர் மைதானத்தை நிரப்பினர்; மதில்களை நிரப்பினர், மரங்களையும் நிரப்பினர்… யான் மேல் நாட்டில் தொழிலாளரியக்கம் தோன்றிய வரலாற்றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும், தொழிலாளர் சங்கத்தின் அவசியத் தையும் விளக்கிப்பேசினேன். தொழிலாளர்களிடையே புத்துணர்ச்சி தோன்றித்ததும்பி வழிந்தது.. அன்று போலீஸ் நடவடிக்கை வெறுக்கத் தக்கதாக இருந்தது. தொழிலாளர் பொறுமை காத்தனர்.
1918ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. திரு.வாடியா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திவான் பகதூர் கேசவப் பிள்ளையும், யானும், வேறு சிலரும் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தோழர்கள் இராமாஞ்சலு நாயுடுவும், செல்வபதி செட்டியாரும் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
1943ம் ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தன்று சோவியத் யூனியனுக்கு திரு.வி.க வாழ்த்துச் செய்தி அனுப்பினார்:
கவிஞர்களும், தத்துவஞானிகளும் நீண்டகாலமாகச் சுதந்தரச் சூரியன் என்று பாடியும், பேசியும் வந்தனர். அச்சூரியன் தோன்றி ஏறக்குறைய கால் நூற்றாண்டாகிறது. அச்சூரியன் எது? அதுவே சோவியத் யூனியன். அந்த யூனியனிடத்தில் எனது உள்ளம் தவழ்ந்து ஏறக்குறைய இருபது ஆண்டு களாகின்றன. 1921ம் ஆண்டு சென்னைத் தொழி லாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு முதன்முதல் சோவியத் கதிராகிய லெனின் படம் கிடைத்தது. அன்று முதல் லெனின் கொள்கை களை என்னால் இயன்றவரை பரப்பி வருகிறேன். உலகம் முழுவதும் சோவியத்மயமாக வேண்டு மென்று கனவு காண்பவருள் யானும் ஒருவன். அக்கனவு நினைவாய்ச் செயலாய் முகிழ்க்கும் காலம் அணித்தே நிற்றல் கண்டு மகிழ்வெய்து கிறேன். சோவியத் யூனியனை மூடப்பாசிச மேகங் கள் தவழ்கின்றன. அம்மேகங்கள் ஒழிந்ததும், உல கம் முழுவதும் சதந்தரச் சூரியனால் ஒளி காணும். அப்பொழுது உலகின் பீடைகள் போகும், கவன நீங்கும், எங்கும் பொதுமை தாணடவம் புரியும், அமைதி நிலவும். செஞ்சேனை வெற்றி உண்டாவ தாகுக என அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
1932ம் ஆண்டு தந்தை பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் பயணம் மேற்கொண்டார், அதன் விளைவாக சோசலிசக் கருத்துகள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பயணம் முடித்து வந்து தமிழகத் தில் சோசலிசத்தின் மேன்மையைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவ்வாண்டு டிசம்பரில் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் சுயமரியாதை சமதர்மக்கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சியின் திட்டம் ஈரோடு திட்டம் என்ற அழைக்கப்பட்டது.அத்திட்டத்தின்முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தி யாவைப் பூரண விடுதலை அடையச்செய்வது.
- எல்லா தேசக் கடன்களும் ரத்து.
தொழிற்சாலை, ரயில்வே, வங்கிகள் தேசியமயம்.
விவசாய நிலம், காடுகள்- மக்களின் உரிமை.
விவசாயக் கடன் ரத்து. - சுதேச சமஸ்தானங்களை ஒழித்து இந்தியா வைத் தொழிலாளர் விவசாயிகள் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்.
- ஏழு மணி நேர வேலை நாள் இத்திட்டத்தை விளக்கி தந்தைபெரியார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோர் தமிழகம் முழுவ தும் பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் மேற் கொண்டு வந்தனர்.
1935ம் ஆண்டு மாவீரன் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற நுலை ஜீவா மொழிபெயர்க்க, அதனைக்குடியரசு இதழில் வெளியிட்டதால் ஜீவாவும், தந்தை பெரியாரின் சகோதரரும், விடுதலை இதழ் வெளியீட்டாளரு மான ஈ.வெ.கிருஷ்ணசாமியும், தந்தை பெரியாரும் கைது செய்யப்பட்டனர். குடியரசு (1925), சம தர்மம் (1934), பகுத்தறிவு (1935), புரட்சி (1934) சுநஎடிடவ (1928), விடுதலை (1934), உண்மை (1970) ஆகிய இதழ்களை ஈ.வெ.ரா நடத்தி வந்தார். மக்களிடம் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்து வமும் ஓங்கிவளரவேண்டும் என்ற கருத்தை இவ்விதழ்களில் வெளியிட்டு வந்தார். லெனினும் மதமும், பொதுவுடைமைத் தத்துவங்கள் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.
இந்திய விடுதலைப் போராளிகள் பலர் ரஷ்யா வில் மேதை லெனினை நேரில் சந்தித்து இந்திய விடுதலைப்போராட்ட நிகழ்வுகள் குறித்து விவாதித்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவராவார். 1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்ற தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர் களில் எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
Leave a Reply