‘மூலதனம்’, ‘ஏகாதிபத்தியம்’ : சிதைபடும் கோட்பாடுகள்!


[பீப்பிள்ஸ் டெமாக்ரசி (04.09.2016) இதழில் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் Subversion of Concept என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.  – தொகுப்பு  : இ.எம். ஜோசப் ]

பொருளாதாரம் குறித்த விவாதங்களில் பொதுவாக இன்று இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன. ஒன்று, ‘மூலதனத்தின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது. இரண்டு, “ பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.“.

மேற்கண்ட இரண்டு வாதங்களுமே ஏறக்குறைய ஒன்று தான் என்று சிலர் கருதக் கூடும். முதல் வாதத்தினை சற்று மேலும் கூர்படுத்திக் குறிப்பாகக் கூறுவதே,  இரண்டாவது வாதம் எனவும் சிலர் கருதக் கூடும்.  ஆனால், அந்தக் கருத்து தவறானது. இரண்டிற்குமிடையில் பெருத்த வேறுபாடுகள்  உண்டு.

அதே போன்று, “அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), “தீய சாம்ராஜ்யம்” (Evil Empire), “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony) போன்ற சொல்லாடல்களும்,  “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லாடலும்,  உள்ளடக்கத்தில் ஒரே பொருள் கொண்டவை அல்ல. இவை அனைத்தையும் குறித்தும் இங்கு சற்று விரிவாக விவாதிக்கலாம்.

மூலதனமும், முதலாளிகளும்!

சமூக உறவு எனும் வகையில், மூலதனம் சில உள்ளார்ந்த குணப் போக்குகளைக் கொண்டது. இது பல பொருளாதார முகமைகளின் (Economic Agents) செயலாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஒவ்வொரு முகமையும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளின் அடிப்படையிலேயே  இயங்குகிறது.

எடுத்துகாட்டாக, முதலாளிகள் செல்வத்தைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அப்படித்தான் குவிக்க வேண்டும் என்று விரும்பி அவர்கள் செயல்படுகிறார்கள் எனக் கூற முடியாது. முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதி அவர்களை அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கிறது. தாங்கள் நினைத்தவாறெல்லாம் செயல்படும் சுதந்திரம் முதலாளிகளுக்குக் கிடையாது.  அவர்கள், முதலாளித்துவ அமைப்பு எழுதி இயக்கும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமே. அவர்களும் கூட, முதலாளித்துவ அமைப்பிற்குள் அந்நியப்பட்டு நிற்பவர்களேயாவர். எனவே தான், காரல் மார்க்ஸ் முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்”  (Capital Personified) என்று அழைக்கும் நிலைக்குச் சென்றார்.

பன்னாட்டு நிறுவனங்கள்!

பன்னாட்டு கார்ப்பரேஷன்களையும், தனிப்பட்ட முதலாளிகளிடமிருந்து இந்த விஷயத்தில் வேறுபடுத்திப் பார்ப்பதற்கில்லை. அவர்களை முலதனத்துடன் சமப்படுத்தி அழைக்க முடியாவிட்டாலும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளுக்கு உட்பட்ட இவர்களது செயல்பாடுகள், மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகளைத் தீர்மானிக்கும் முகவர்களாக இவர்களை நிலை நிறுத்துகின்றன.   இவர்களை  “முலதன”த்துடன் சமப்படுத்திப் பார்ப்பது, மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகள், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகள், அந்த அமைப்பின் “தன்னெழுச்சித் தன்மை” (Spontaneity) குறித்த மூலதனத்தின் ஒட்டு மொத்த கோட்பாடுகள் என அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, வேறு ஒரு மாறுபட்ட கருத்தியல் தளத்திற்கு இட்டுச் சென்று விடும்.

ஆழமான அரசியல் விளைவுகள்!

இங்கு, கோட்பாட்டுப் பிரச்சினை (Conceptual subject), ஸ்தூலமான பிரச்சினை (Tangible Subject) என்ற இரண்டு அம்சங்கள் விளக்கப்பட வேண்டும். மூலதனம் என்பது கண்ணுக்குப் புலப்படாத பிரச்சினை. இது கோட்பாட்டுப் பிரச்சினை. ஆனால் அந்த மூலதனத்தின் பிரதிநிதிகளாக கண்ணுக்கு புலப்படுபவர்கள் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை. எனவே அவை எல்லாம் ஸ்தூலமான பிரச்சினைகள்.

கருத்தியல் தளத்தில், உருவமற்ற “கோட்பாட்டு பிரச்சினையை” உருவம் கொண்டதொரு “ஸ்தூலமான பிரச்சினையாக” அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேஷன் என்ற தளத்திற்கு மாற்றுவது என்பது, வெறும் தளமாற்றமாக இராது. மாறாக, அது ஆழமான அரசியல் விளைவுகளை உள்ளடக்கியதாகும். மூலதனத்தை குவிமையப்படுத்தல், சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் தொடர்ந்து சரக்குமயமாக்கல், சிறு உற்பத்தியினை அழித்தொழித்தல், ஒரு முனையில் செல்வத்தையும், மறு முனையில் வறுமையினையும் உருவாக்குதல் என  முதலாளித்துவத்திற்கு என்று சில உள்ளார்ந்த குணப்போக்குகள் உள்ளன. இந்தப் போக்குகளை   எல்லாம், ஒரு சமூக அம்சம் என்ற வகையில் கடந்து போக வேண்டும் எனில், முதலாளித்துவத்தை முதலில் தூக்கி எறிந்தாக வேண்டும்.  மூலதனத்தை சமூக இயக்கவியலின் கோட்பாட்டு அடிப்படையிலான  அம்சமாக அங்கீகரிக்கும் பட்சத்தில், மனிதகுல விடுதலைக்கு வழி வகுக்கும் சமூகப் புரட்சி தேவைப்படுகிறது. அத்தகைய புரட்சிக்கான ஒரு செயல் திட்டமும் தேவைப்படுகிறது. பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் தான் முதலாளித்துவத்தின் ‘இயக்கிகள்” (Drivers) அல்லது சமூக இயக்கவியலின் “மையப் பிரச்சினை” எனக் குறுக்கிப் புரிந்து கொண்டோம் என்றால்,  பன்னாட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது, தாஜா செய்வது, சில நற்காரியங்களை செய்ய வைப்பது (“கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு”) போன்றவற்றின் மூலம் இந்த இயக்கவியலின் விளைவுகள் மற்றும் இயங்கு திசைகளை மேம்படுத்தி விட முடியும் என்ற தவறான உணர்வு ஏற்பட்டு விடும். அத்தகைய புரிந்துணர்வு  சமூகப் புரட்சிக்கான செயல் திட்டத்தினைப் பின்னுக்குத் தள்ளி, சீர்திருத்தத்திற்கான செயல் திட்டத்தினை  முன்னுக்குக் கொண்டு வந்து விடும். அத்தகைய திட்டம் ஒரு முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டமாக  (Progressive liberal agenda) மாறி விடும். எனவே, ‘கோட்பாட்டு அம்சம்”, “உருவம் கொண்டதொரு அம்சமாக” மாறுவது என்பது வெறும் கருத்தியல் தளமாற்றம் அல்ல. அது செயல் திட்டத்தின் மாற்றம். சோஷலிச செயல் திட்டத்திலிருந்து, முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டத்திற்கு மாறிச் செல்லும்  நடவடிக்கை அது  என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.

அன்றாடப் பேச்சு வழக்கில்…

நாம் அன்றாடப் பேச்சு வழக்கில், ‘மூலதனம்’ என்ற பதத்தினை பயன்படுத்துவதில்லை. மாறாக, பன்னாட்டுக் கம்பெனிகள், பன்னாட்டு வங்கிகள் என்றும், தனியார் நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது  டாட்டாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள்  என்றும் தான் பேசி வருகிறோம். ஏனெனில், இவர்களுக்கு எதிராகத் தான் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படும் கம்பெனிகள் போன்ற ஸ்தூலமான பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கோட்பாட்டுப் பிரச்சினைகளை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.

நடைமுறையிலும் கூட, தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட அன்றாடப் போராட்டங்களில் கண்ணுக்குப் புலப்படும் நிறுவனங்களுக்கு எதிராகத்  தான் பேசுகிறோமே தவிர, கோட்பாட்டு அடிப்படையில், அதாவது,  முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்” என்று மார்க்ஸ் வர்ணித்ததன் அடிப்படையில், மூலதனத்திற்கு எதிராகப் பேசுவதில்லை. (வர்க்கப் போராட்டம் ஒரு புரட்சிகர நிலையினைத் தொடும் பொழுது தான், அந்த தெளிவான புரிதல் கிட்டும்.)  நாம் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவெனில், கோட்பாடு அடிப்படையிலும், (அம்பானிக்கெதிரான போராட்டங்கள் போன்ற) நடைமுறை வழக்கிலும், நாம் பேசுவதில் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனினும், சித்தாந்த தளத்தில் கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூலமான அடிப்படையினை,  கோட்பாட்டு அடிப்படைக்கு மாற்றாக அமைய அனுமதித்து விடக் கூடாது. 

சித்தாந்த தளத்தில் …  

சில வேளைகளில் சித்தாந்த தளத்தில் அத்தகைய மாற்று என்ற தவறு நிகழ்ந்து விடக் கூடும். அல்லது “கோட்பாட்டு அடிப்படையினை” முறையாக  அங்கீகரித்துக் கொண்டே, ஏறக்குறைய ஸ்தூலமான பிரச்சினைகளிலேயே கால் பதித்து  நிற்பதும் (ஊள்ளடக்கத்தில், இதுவும் சித்தாந்த தளத்தில் உருவாக்கப்படும் மாற்று தான்), அத்தகைய தவறேயாகும். இது இயல்பாகவே, சோஷலிசச் செயல் திட்டத்தை,  முற்போக்கு பெருந்தன்மைத் திட்டமாக உருமாற்றி விடும்.  சோஷலிஸ்ட் அல்லாத முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் (Progressive liberals) உள்ளனர். தங்களது அரசியல் சிந்தனைகளின் படி, அவர்கள் கோட்பாடு ரீதியான பிரச்சினைகளை அங்கீகரிப்பதில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி, “மூலதனத்தின் ஆக்கிரமிப்பு சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.” என்று சொன்னால் அவர்கள் அதை புறந்தள்ளி விடுவார்கள்.  ‘மூலதனம்’ என்ற புதிருக்கு, ‘பிரச்சினை’ (Subject) என்று உருவமும் அந்தஸ்தும் கொடுக்கும் வேலை அது என்று கூறிவிடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிஸ்டைப் பொறுத்த அளவில், சித்தாந்த தளத்தில்,  ‘கோட்பாட்டுப் பிரச்சினைக்கு’ மாற்றாக ‘ஸ்தூலமான பிரச்சினை’யினை முன்வைப்பது என்பது, அவரது சோஷலிச நம்பிக்கையின் ஆணி வேரையே அசைப்பதாகும்.

கூட்டுப் போராட்டங்களில்…

இன்றைய சூழலில், அத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்லெண்ணம் கொண்ட, போர்க்குணம் மிக்க பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் களத்தில் நிற்கும் காலம் இது.  ஆனால், அவர்கள் சோஷலிஸ்டுகள் அல்லர். அவர்களுடைய எதிர் இலக்கெல்லாம் ‘ஸ்தூலமான பிரச்சினைகளே’.   மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளில் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடும் இவர்களோடு ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இடதுசாரிகளுக்கு இன்று உண்டு. அவர்களோடு அத்தகைய போராட்டங்களில் இணைந்து போராடும் போது, சித்தாந்தமும், அத்துடன் அனைத்து ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளும்’ பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் உண்டு. சோசலிச லட்சியங்களில் உறுதியாக இருக்க வேண்டும் எனில், இடதுசாரிகள் இதில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியம் என்ற கோட்பாடு!

கோட்பாடு அடிப்படையில் சீர்குலைவு அச்சத்தில் ஆட்படும் மற்றொரு சொல்லாடல் ‘ஏகாதிபத்தியம்’. வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு இடையிலான பல்வேறு பட்ட உறவுகளின் வலைப்பின்னல் குறித்ததெ ஏகாதிபத்தியம் என்ற சொல்லாடல். இந்த உறவுகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்திக்கின்றன. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் மட்டுமல்லாது, மக்களுடைய போராட்டங்கள் காரணமாகவும் அத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன. ரீகன் நிர்வாகம், புஷ் நிர்வாகம், அல்லது ஒபாமா நிர்வாகம் என்பவை எல்லாம் நாம் ஏகாதிபத்தியம் என்று அழைக்கும் ‘கோட்பாட்டுப் பிரச்சினையின்’  ‘ஸ்தூலமான’ செயல் வடிவங்களே ஆகும்.

ஏகாதிபத்தியம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நடைமுறையில் செயல்படும் இந்த ஸ்தூலமான வடிவங்கள் தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. ‘மூலதனம்’ என்பதற்கு  மாற்றாக எப்படி ‘பன்னாட்டு நிறுவனங்கள்’, ‘பன்னாட்டு வங்கிகள்’  போன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றனவோ, அதே போன்று, ‘ஏகாதிபத்தியம்’ என்பதற்கு மாற்றாக இது போன்ற அரசு நிர்வாகங்களை பார்க்கும் போக்கும்  நிலவுகிறது.

“அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), அல்லது “தீய சாம்ராஜ்யம்” (Evil empire), அல்லது “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony)  அல்லது ஹார்ட் மற்றும் நெக்ரி (Hardt and Negri) தாங்கள் எழுதிய புகழ் பெற்ற நூலுக்கு தலைப்பிட்டதைப் போன்று, “சாம்ராஜ்யம்” (Empire). இவை எல்லாம்  சில சமயங்களில், “ஏகாதிபத்தியம்”  என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள். அரசாட்சி ஏற்பாடுகளைக் குறிப்பிடும் “ஒபாமா நிர்வாகம்” போன்ற பொதுவான சொல்லாடல்கள் போலன்றி, இந்தச் சொல்லாடல்கள் சில குறிப்பிட்ட உறவுநிலைகளைக் குறிப்பவை  எனபது சரியே. எனினும், மூலதனத்தின் உள்ளார்ந்த குணப் போக்குகளுடனான இணைப்பினை இத்தகைய சொல்லாடல்கள் உணர்த்துவதில்லை.  இந்தச் சொல்லாடல்களைப்  பயன்படுத்துவதில் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், ஏகாதிபத்தியம் என்ற சொல்லுக்கு மாற்றாக இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் குறித்த புரிதலையும், அந்தப் புரிதலின் பின்னணியில், மனிதகுல விடுதலைக்கு, முதலாளித்துவத்தைக் கடந்து செல்வது ஒரு முன் நிபந்தனை  என்ற சித்தாந்தப் புரிதலையும் இவ்வகையிலான சொல்லாடல்கள் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, குறிப்பாக உலகின் பல பாகங்களில் அமெரிக்க ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் போராட்டங்களில், நாம் பல ஆர்வமிக்க போராட்டக் குழுக்களுடன் இணைந்து வினையாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அக்குழுவினர் அனைவரும் சோஷலிஸ்டுகள் அல்லர். மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் என்ற இடத்தில் தொடங்கி நாம் சித்தாந்த ரீதியாகப் புரிந்து கொண்டிருக்கும்  “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லுக்கு அவர்களைப் பொறுத்த மட்டில், பொருள் எதுவுமில்லை. இந்தக் கூட்டுப் போராட்ட அனுபவங்களின் பின்னணியில், சோஷலிசம் குறித்த நமது சித்தாந்த நிலையிலிருந்து வழுவி, முற்போக்குப் பெருந்தன்மையாளர்களின்  அறிவுத்தளத்திற்குள் சென்று விழுந்து விடும் அபாயம் உண்டு.

அத்தகைய போராட்டங்கள் தேவைப்படுகின்றன.  இடதுசாரிகள் மட்டும் அல்லாது, முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல வேண்டும் என விரும்பும் அனைவரும் அந்தப் போராட்டங்களில் இணைய வேண்டும் என்பதும் தேவையாகிறது. அத்தகைய தேவைகளை ஒன்றுமில்லை என ஒதுக்கித் தள்ளி விட முடியாது. சில போராட்டங்களில் முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் இடதுசாரிகளை விட கூடுதல் தீவிரம் காட்டுவதுமுண்டு. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அத்தகைய நேரங்களில், இடதுசாரிகள் “கோட்பாட்டுப் பிரச்சினைகள்” அடிப்படையிலான தங்களது சித்தாந்தப் புரிதலை கைவிட்டு விடக் கூடாது என்பதே. .

சரியான புரிதல்!

இந்தப் புரிதலிலிருந்து வழுவுதல் கூடாது என்று சொல்வது, நாம் மார்க்ஸ் மற்றும் லெனின் சிந்தனைகள் குறித்த நமது விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக, அது தான் சரியான புரிதல் என்பதால் தான். “ஸ்தூலமான பிரச்சினைகள்” மீதான போராட்டங்கள் வெற்றி பெற்றாலும் கூட, அவை தற்காலிக வெற்றிகளே என்பதையும், அடுத்த கட்டத்தில் மூலதனத்தின் குணப்போக்குகள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் பார்க்க முடிவதிலிருந்தே   இந்த உண்மையினைப் பரிசோதித்து உணர்ந்து கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தொழிலாளி வர்க்கப் போராட்டங்களின் பின்னணியில், வேலைவாய்ப்புக்களையும், மக்கள் கைகளில் வாங்கும் சக்தியினையும் அதிகரிக்கும் தேவையும் நிர்ப்பந்தமும்,  முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது.  அவ்வகையில், “கிராக்கி நிர்வாகம்’ (Demand management)  என்ற சமூகப் பொறியமைவு ( Social engineering) உத்திகளைக் கையாளுவதற்கு முதலாளித்துவம் நிர்ப்பந்திக்கப் பட்டது. ஜான் மேனார்ட் கீன்ஸ் என்ற பொருளியல் அறிஞர் முன்வைத்த இந்தக் கொள்கை உத்திகள் “முதலாளித்துவத்தின் பொற்கால’த்திற்கு இட்டுச் சென்றன. ஆனால் அதைத் தொடர்ந்து, மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் எழுந்து வந்த நிதி மூலதனம் ( அது மற்றொரு “கோட்பாட்டுப் பிரச்சினை’)  கீன்ஸ் பொருளாதாரத் திட்டங்களை சுருட்டிப் பின்னுக்குத்  தள்ளி விட்டது. அனுபவங்களின் தொடர் பின்னணியில் எழும் அடுத்தடுத்த புரட்சிகரமான போராட்டங்களின் மூலமே, ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கு’ எதிரான  சவால்களை   வெற்றி கொள்ள முடியும். குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கடந்து முன்னேற முடியும். அது வரை, “கோட்பாட்டுப் பிரச்சினை”களின் அடிப்படையிலான சித்தாந்தப் புரிதலில் உறுதியாக நிற்க வேண்டும். எனவே, சோஷலிஸ்டுகள், கோட்பாடுகளின் சிதைவிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருத்தல்  மிகவும் அவசியம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s