மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வாலிபர் மாணவரிடையே இடதுசாரி திரட்டல் …


ரஷ்யாவில் புரட்சி நடந்த போது, இந்தியாவில் அதைக் கொண்டாடியவர்கள், அன்றைய இளம் தலைவர்களான, மகாகவி பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி, திரு.வி. கல்யாண சுந்தரம், ஈ.வெ. ராமசாமியாக இருந்த பெரியார், நேரு, ரவீந்திரநாத் தாகூர், லெனின் பிறந்த நாளன்று வாழ்த்துச் செய்தியை சிறையில் இருந்து அனுப்பிய பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள், ஆகியோர் ஆவர். சமூக மாற்றம் இளைஞர்களை ஈர்க்கும் முழக்கமாக இருந்தது. கனவுக்கான தூண்டுதலைத் தந்தது. கம்யூனிஸ்ட்டுகளைக் கடந்த காந்தமாக புரட்சியும், சமூக மாற்றமும் இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகும் இந்த ஈர்ப்பு நீடித்தது. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுகளை சந்தித்த போதும், சோசலிசத்தின் மீதான ஈர்ப்பு குறையவில்லை.

அத்தகைய சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் எழுச்சிமிக்க பங்களிப்பைச் செய்தவர்கள் இளைஞர்கள், என வரலாறு கூறுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையை 1948ல் எழுதி வெளியிட்ட போது, மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோருக்கு வயது, 30 மற்றும் 28 கியூபாவின் மான்கடாப் படைத்தளத்தில், படிஸ்ட்டா அரசு மீது, புரட்சிக்குழு தாக்குதல் நடத்திய போது, ஃபிடலின் வயது 26, கியூப புரட்சிக்கு பங்களிப்பு செய்த சேகுவேராவும் அதே வயதினைத் தான் கொண்டிருந்தார். இது லெனின், மாவோ, ஹோசிமின் போன புரட்சியாளர்களுக்கும், இ.எம். எஸ், சுர்ஜித், ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் மீது விமர்சிக்கிற அறிவு வலிமையையும், உறுதியான போராட்ட குணத்தையும், கொண்டிருந்ததோடு, மக்களை சமூக மாற்றத்திற்காக, அணி திரட்டும் அமைப்பு ரீதியான கூட்டு முயற்சியையும் கொண்டிருந்தனர்.

இந்த மூன்றும் இன்று நவீன தாராளமய காலத்தில், கடுமையான சவாலாக மாறியுள்ளது. முதலாளித்துவத்தின் எல்லையற்ற விஸ்தரிப்புக்கு தடையாக இருந்த, முன்மாதிரி சமூக அமைப்பாக விளங்கிய சோசலிசம் பின்னடைவைச் சந்தித்தது, இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. முதலாளித்துவத்தின் இந்த வளர்ச்சி, இளைஞர்களை நுகர்வோராகவும், ஒருமுகப் படுத்தப்பட்ட பண்பாட்டு செயல்களுக்கான கூட்டமாகவும் மாற்றி வருகிறது. அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவை வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் அதை விமர்சனப் பூர்வமாக அணுகும் குணம் இளைஞர்களிடம் மழுங்கடிக்கப் பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட் ), இதை சரியாகவே உணர்ந்துள்ளது. அண்மையில் கொல்கத்தாவில் நடந்த பிளீன அறிக்கையில், இளைஞர்கள் குறித்து பின் வருமாறு குறிப்பிடுகிறது. ” கட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள், இளைஞர்களின் பிரச்சனைகள், உள்ளக்குமுறல்களைத் தொடுகிற வகையில் அமைய வேண்டும். சோசலிசத்தின் பாலான தத்துவ ஈர்ப்பு இழந்திருப்பதும் ஒரு பகுதி காரணம். இந்த இடைவெளியால், வகுப்புவாதத் தாக்கம், அடையாள அரசியல் மற்றும் அரசியலற்ற தன்மை ஆகியவற்றிற்கு இளைஞர்கள் ஆட்பட்டுள்ளனர்”.

தமிழகத்தில் நெல்லையில் நட்ந்த பிளீன அறிக்கையும், “இளைஞர்கள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு இயக்கமும், துடிப்புமிக்கதாக இருக்க முடியாது. துடிப்பும், போர்குணமும் கொண்ட இளைஞர்களை கட்சிக்குள் அழைத்து வர, சிறப்புத் திட்டமிடல் செய்ய, அறைகூவியுள்ளது”.

இந்த குறிப்பான உணர்த்துதலை, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயல் மூலம் மாற்றியமைக்கும் முயற்சியாக, தமிழகத்தில் எதிர்வரும் காலங்களில், வாலிபர் மற்றும் மாணவர் அமைப்புகளில் கவனம் செலுத்துவது என முடிவெடுத்துள்ளதுடன், அதற்கான செயல் திட்டத்தையும் தயாரித்துள்ளது. கட்சிக்குள் புதிய இளைஞர்களை ஈர்ப்பது, அரசியல் மற்றும் தத்துவார்த்த சூழலுடன் இணைந்ததாகும். இன்று இடதுசாரிகளுக்கு எதிராக உள்ள சூழலை மாற்றுவதற்கான, போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தியாக வேண்டும். மார்க்ஸ் சொன்னது போல் சூழலை நமக்கு சாதகமாக மாற்றியாக வேண்டும்.

புறச்சூழல் சாதகமாக உள்ளது:

முதலாளித்துவம், வறுமையை, வேலையின்மையை, கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வணிகமயமாதை வேகப்படுத்தி வருகிறது. மூலதனத்தின் எல்லையற்ற செயல்பாடு, உழைப்புச் சுரண்டலைத் தீவிரப் படுத்தி உள்ளது. ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், உழைப்பு சுரண்டல் தீவிரமாகியுள்ளது. இன்றைக்கும் சோசலிசமே இத்தகைய சமூகக் கொடுமைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும்.

 

உண்மையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் முதலாளித்துவம் சந்தித்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. வேலையின்மை பெருமளவு அதிகரித்துள்ளது. வேலையில் இருக்கும் உழைக்கும் மக்களின் வருமானம் கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப் படாமல் இருக்கிறது. 25 வயதுக்கு உட்பட்டோரின் வேலையின்மை, 25 சதம் 40 சதம் என ஐரோப்பிய நாடுகளின் நிலை உள்ளது.

இந்தியாவிலும் வேலையின்மை அளவு கடந்த காலத்தை விட உயர்ந்துள்ளது. அதோடு, வேலையில் இருப்போரின் ( under employment ) நிலை மிக மோசமாக மாறியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், இன்றைய பாஜக ஆட்சி காலத்திலும், வளர்ச்சிக்கான அஸ்த்திவாரமாக குறிப்பிடப்படும், அந்நிய நேரடி முதலீடு கடந்த 15 ஆண்டுகளில், இந்தியாவின் வேலையின்மையைக் குறைக்கவில்லை. சுய தொழில், வேளாண்மை ஆகிய துறைகளில் இளைஞர்கள் நம்பிக்கையோடு ஈடுபடவில்லை. ஈடுபடும் சிலரும் கடன் தொல்லையில் இருந்து மீள முடியா துயரத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை, 55 லட்சத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து, 90 லட்சத்தை எட்டியுள்ளது. மருத்துவம், பொறியியல், தகவல் தொழில் நுட்பம் போன்ற உயர் கல்வி பெற்றவர்களும் கூட வேலை வாய்ப்பு அலுவகத்தில் காத்திருக்கும் அவலம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் அளித்து வரும், வேலையில்லாக் கால நிவாரணம், போன்ற சமூகப் பாதுகாப்பு இந்தியாவில் இல்லை.

தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அதன் துவக்க காலத்தில் நடத்திய போராட்டம் காரணமாக, அன்றைய அதிமுக அரசு, குறைந்த பட்சத் தொகையை வழங்கியது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, 1994 ம் ஆண்டில் சொற்ப நிவாரணக் தொகையையும் நிறுத்தியது. டி.ஒய்.எப்.ஐ யின் தொடர் போராட்டம் காரணமாக, 2006 ம் ஆண்டில் திமுக ஆட்சி, 12 ஆண்டுகள் கழித்து, சற்று கூடுதலான நிவாரண தொகையை வழங்க சம்மதித்தது. 10 ஆண்டுகள் கடந்த பிறகும் தொகையும், நிவாரணம் பெறுவோரின் எண்ணிக்கையும் உயரவில்லை.

கல்வி குறித்த பிரச்சனைகள்:

மார்க்சிஸ்ட் கட்சி கல்வி குறித்தும், தனது அக்கறையை, வெளிப்படுத்தி வருகிறது. நவீன தாரளமயக் கொள்கை அமலாக்கத்தின் தொடர்ச்சியாக, டபுள்யு. டி. ஓ ( உலக வர்த்தக அமைப்பு ) கல்வியை வர்த்தக பரிவர்த்தனைப் பட்டியலுக்குள் எடுத்து வர வேண்டும், என இந்தியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்நிய பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவது குறித்து தொடர் முயற்சி மேற்கொள்கிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகம் மிகப்பெரிய வர்த்தக மையங்களாக மாறியுள்ளது. கல்வி நிறுவன அதிபர்கள் தமிழகத்தில், கடந்த 25 ஆண்டுகளில், அரசியல் செல்வாக்குள்ள பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

தமிழகம் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கையில் அகில இந்திய சராசரியை விட உயர்வாக உள்ளது. குறிப்பாக மாணவிகள் எண்ணிக்கை, கல்லூரி கல்வி பெறுவதில், மாணவர்களை விடவும் கூடுதல் ஆகும். இது கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்தாலும், சமூக செயல்பாட்டில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தக் கூடியதாக இல்லை. தமிழகம் நீண்ட நாள்களாக பெண்ணுரிமைப் போரட்டத்தில் முன்னணியில் இருந்தாலும், நிலபிரபுத்துவ சிந்தனையுடனேயே, படித்த பெண்கள் அணுகப் படுகின்றனர்.

அரசு மாணவர் விடுதிகளை மிக மோசமான பராமரிப்பதற்கான செலவு தொகை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகையில் துளி அளவு கூட இல்லை.. இளம் தலைமுறையினரை வளர்ப்பதற்கான, சமூக அக்கறையுடன் அரசு மாணவர்களைக் கருதவில்லை. மாறாக சில விடுதிகளில், மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஆதரிக்கிறது.

சமூக நீதிக்கான போராட்டம்:

 

தமிழ்நாடு, சுயமரியாதை, சமூக நீதி, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. நவீன தாரளமயக் கொள்கை அமலாக்கத்திற்குப் பின் இவை கேள்விக்கு உள்ளாகி, பின்னோக்கி செல்வதாக மாறியுள்ளது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் இந்த பின்னோக்கிய பயணத்திற்கு பாதை அமைத்துள்ளன.

புதிய ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. 1990 களுக்கு முன் புதிய நடுத்தர வர்க்கமாக மாறிய குடும்பங்களின் எண்ணிக்கையும், நவதாராளமய கொள்கை அமலாக்கத்திற்குப் பிந்தைய எண்ணிக்கை உயர்வும், பெரிய மாற்றத்தை சந்திக்கவில்லை. 1990 களுக்குப்பின், ஏற்கனவே பலனடைந்த நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கமாக மாறியுள்ளனர். இவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் நுகர்வோராக மாறியுள்ளனர். இதை பிளீன அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது. சமூக நீதிக்கான வடிகாலாக இருந்த அரசு கல்வி நிறுவனங்கள் பின்தங்கியது மற்றும் அரசுத் துறை, பொதுத்துறை வேலை வாய்ப்பு குறைப்பு ஆகியவையே,புதிய நடுத்தர வர்க்கம் வளராமைக்கு காரணம்.

ஒருபக்கம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ப, தன் சேவையை விரிவாக்கவில்லை. மறுபக்கம் இந்த நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப் படவில்லை. இது பல கோடி எண்ணிக்கையிலான, முதல் தலைமுறை குடும்ப இளைஞர்களுக்கு கதவு திறக்கும் வாய்ப்பை, அடைக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் 92 அரசாணை மூலம், தலித் மாணவர்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பை, மாநில அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பலனடைந்தவர்கள் குறித்த விவரங்கள் குறைவாகவே உள்ளன. இதில் முறைகேடுகளும் உள்ளன. அரசு முயற்சி எடுத்தால், கூடுதல் கல்வி நிலையங்களைத் தேவைக்கு ஏற்ப உருவாக்க முடியும்.

பண்பாட்டு தாக்குதல்கள்:

பண்பாட்டு ரீதியில் இளைஞர்களையும், மாணவர்களையும் ஒழுங்கமைவு செய்வதும் இக்காலத்தில் அதிகரித்துள்ளது. நவதாராளமயக் கொள்கைகள், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல், “முதலாளித்துவம் மனிதர்களுக்கான பொருள்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, பொருள்களுக்கான மனிதர்களையும் உற்பத்தி செய்கிறது”. 1980 களில் சமஸ்கிருதமயமாக்கல் என்ற மேல்நிலை ஆக்கத்தை நோக்கி, நடுத்தர வர்க்கம் ஒழுங்கமைவு செய்யப்பட்டது. 1990 களுக்குப் பின் வெஸ்ட்டர்னைசேஷன் என்ற மேற்கத்திய மயமாக்களுக்கு ஏற்ப ஒழுங்கமைவு செய்யப் படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நடைபெறுகிற செயலாகும்.

இருந்தாலும், கிராமம் மற்றும் சிறு நகரங்களில் தீவிரமாக சாதிய பிடிமானம் வளர்க்கப் பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை முன்நிறுத்துவது, பெருமையாகக் கருதப்படுகிறது. இளைஞர்கள் ஆணவக் கொலை குற்றங்களுக்கும், சாதிய மோதல்களுக்கான ஆயுதங்களாகவும் நீடிப்பது தொடர்கிறது. இத்தகைய சாதிய தூய்மை குறித்த உணர்வுகளை இந்துத்துவா உருவாக்கி வளர்க்கிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் இந்துத்துவா அமைப்புகளின் வளர்ச்சிக்கு, இந்த பிற்போக்கு சிந்தனைகள் துணை செய்கின்றன.

இளம் பெண்கள் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. மத நடவடிக்கைகளே, சமூகத்தின் பொது வெளியை ஆக்கிரமிக்க தகுந்ததாக, நிலை நிறுத்தப் படுகிறது. இந்துத்துவாவும், சாதிய அமைப்புகளும் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகிற நிலையில், பெண்களை முன்னிறுத்தி, மேற்குறிப்பிட்ட செயல்களைச் செய்வது, தகர்க்கப் படவேண்டியதாகும்.

மற்றொரு புறம் இளம்பெண்கள் மீதான தாக்குதல்களும் இக்காலத்தில் அதிகரித்துள்ளது. தனியார் மெட் ரிக்குலேசன் பள்ளிகள் துவங்கி, காதலிக்க மறுத்தால் கொலை செய்யப்படுவது, காட்சி ஊடகங்கள் கட்டமைத்த, பாலின அசமத்துவம், என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சிறுபான்மை சமூகத்தவர், சாதியாக ஒடுக்கப் பட்ட மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டத்தை, தனித்து முன்னெடுக்கிற அடையாள அரசியல் போக்கையும், நவதாராளமயக் கொள்கை கட்டமைத்துள்ளது. ஒடுக்கு முறைக்கு எதிரான ஒன்று பட்ட போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு அதிகரித்துள்ளது.

விளையாட்டும், கலை விழாக்களும் கூட ஒழுங்கமைவு செய்யப் பட்டுள்ளது. விதி முறைகள் கொண்ட விளையாட்டுக்களும், ஸ்பான்சர் இல்லாத போட்டிகள் இல்லை, என்ற நிலையும் உருவாகியுள்ளது. உடல் தகுதி வாய்ந்த, பயிற்சி அளித்தால், சிறந்த வீரராக வாய்ப்புள்ளோர் நிராகரிக்கப் படுகின்றனர். அரசியல் தலைவர்கள் ஆங்காங்கு, விளையாட்டுக் கழகத் தலைவர்களாக மாறும் போக்கு இக்காலத்தில் வளர்ந்துள்ளது.

இரவு பாடசாலைகள் மாணவர்களிடயே மிக சிறந்த பண்பாட்டுத் தாக்கத்தை உருவாக்கக் கூடியது. பள்ளி, கல்வி நிலையம், நண்பர்கள் கற்றுத்தராத ஒற்றுமையை, கூட்டு உழைப்பை, பாலினபாகுபாடு இன்மையை, இன்னும் பல நல்லவற்றை விதைப்பதற்கான களமாக இரவுப்பாட சாலைகளை, கட்சி அணிகள் புரிந்து அமலாக்க வேண்டியுள்ளது. மதத்தை மையப் படுத்தும் பொதுவெளிக்கு மாற்றாக, இரவு பாடசாலைகளையும், கலைவிழாக்களையும் கொண்டாட வேண்டியுள்ளது.

மொத்தத்தில் பண்பாடு குறித்து சமூகம் எதிரும் புதிருமாக உள்ளது. நிலப்பிரபுத்துவத்திடம் முதலாளித்துவம் செய்து கொண்டுள்ள சமரசம், இந்த குழப்பத்திற்கு வழிவகை செய்கிறது.

எனவே இத்தகைய சூழலைப் பயன்படுத்த வேண்டிய தேவை, மார்க்சிஸ்ட் கட்சிக்கு முன் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, ஆளும் கட்சிகள் மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் அருவருப்பையும், முகச் சுழிப்பையும் மட்டுமே உருவாக்கியுள்ளது. மாற்று அரசியல் குறித்த தேவையை உணரவில்லை. உணரச்செய்வது அவசியம், அதற்கான தத்துவார்த்த போராட்டம், நெடியதாகக் கூட இருக்கலாம். ஆனால் சலிப்பின்றி தொடர வேண்டிய போராட்டம் ஆகும்.

கருத்தியல் தளத்தில் முன்னேற்றம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமீபத்திய மத்தியக் குழு அறிக்கை, சர்வதேச சூழல் குறித்தும், வலதுசாரி கட்சிகளை ஆளும் கட்சிகளாகத் தேர்ந்தெடுப்பது குறித்தும் விவாதித்துள்ளது. வர்க்க பலாபலன் எனக் குறிப்பிடும், உழைக்கும் மக்கள் ஆளும் வர்க்கத் தத்துவத்திற்கு மாற்றான, இடதுசாரி சக்திகளுடன் அணி திரள இயலாமை குறித்தும், விவாதித்து உள்ளது.

முதலில் குறிப்பிட்ட புறச்சூழலை இன்றைய இளைஞர், மாணவர் அமைப்புகள் மற்றும் கட்சி பயன்படுத்தி முன்னேற, பின்னர் குறிப்பிட்ட சவால்கள் தடையாக உள்ளன. தொடர்ந்து சவால்களை முறியடிப்பதற்கான போராட்டம், தொய்வின்றி நடைபெறாத காரணத்தால், கட்சிக்குள் இளைஞர்கள் வருகை அதிகரிக்கவில்லை. தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்பட வலுவான தத்துவார்த்த பிடிமானம், தேவை. இளைஞர் மற்றும் மாணவர்களிடம் இந்த தாக்கத்தை உருவாக்குவது எளிது. மாணவர் அரங்கில், இன்று பல்கலை மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்கள் அதிகமாகப் பணியாற்றுகின்றனர். இவர்களிடம் மாற்று சமூகத்திற்கான, தத்துவார்த்த உணர்வை மேம் படுத்த முடியும்.

இன்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொதுத் தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரம் மனிதர்கள் மிகக் கொடுரமான உழைப்பு முறைக்கு உள்படுத்தப் படுகின்றனர். சுரண்டல் மற்றும் பணிச்சுமையை மறக்கடிக்க, நுகர்வு மனப்பான்மை திட்டமிட்டு வளர்க்கப் படுகிறது. அனைத்து தொழில் நுட்பங்களையும் கற்றுத் தேர வேண்டும் என்ற மன்ப்பாங்கு வளர்க்கப் படுகிறது. இது குறித்தும், விமர்சன விழிப்புணர்வு குறித்தும் கட்சி, இளைஞர்களிடம் விவாதிக்க வேண்டியுள்ளது.

வளர்ச்சி குறித்து முதலாளித்துவம் உருவாக்கியுள்ள மாயையை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கழிப்பறை இல்லாத வீட்டு உரிமையாளர் குற்றவாளி ஆக்கப் படுகிறார். இன்றைய ஆளும் வர்க்கம் மனிதர்களைக் குற்றவாளிகளாக்கி, தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுகிறது. இதில் இளைஞர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வளர்ச்சி குறித்த புரிதல் வளர்த்தெடுக்கப் பட வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிரான, கம்யூனிஸ இயக்கம் நிலபிரபுத்துவ சிந்தனையில் இருக்க முடியாது. கம்யூனிஸ்ட் ஊழியர்கள் அடுத்த கட்ட சமூக வளர்ச்சி குறித்து சிந்திப்பதும், செயலாற்றுவதும் அவசியம். மாணவர், வாலிபர் இயக்கங்களில் அத்தகைய செயலாக்கத்திற்கு, உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் திட்டத்தில் 6 வது அத்தியாயமான மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும் பகுதி, இது போன்றவற்றை விவாதிக்கிறது. வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்குவது, வேறுபாடுகள் இன்றி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை, சம வேலைக்கு சம ஊதியம், வருமானத்தின் ஏற்றத் தாழ்வு படிப்படியாக குறைப்பது, என முன்வைக்கப் பட்டுள்ளது. இவை இளைஞர்களாக உள்ள கட்சி அணிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப் பட வேண்டியவை.

கல்வி குறித்து கட்சித்திட்டம் கூறியவை இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரச்சாரமாக மாற்றப் பட வேண்டியுள்ளது. “அனைத்து நிலைகளிலும் விரிவான மற்றும் அறிவியல் பூர்வ கல்வி கிடைத்திட பொதுக்கல்வி நிறுவன முறை வளர்க்கப் படும். மேல்நிலைக் கல்வி வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப் படும். கல்வியில் மதசார்பற்ற தன்மை உத்திரவாதப் படுத்தப் படும். உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி நவீனப் படுத்தப் பட்டு மேம்படுத்தப் படும். விளையாட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் விரிவான விளையாட்டுக் கொள்கை நிறைவேற்றப் படும்”. இது வாலிபர் – மாணவர் அமைப்பின் தலைமை மூலம் குறிப்பிடப் படுதல் வேண்டும்.

லெனின் புரட்சிக்குப் பின் இளைஞர்கழக மாநாட்டில் பேசும் போது, “கம்யூனிஸ்ட் இளைஞர்கள் என்பதை மெய்ப்பிக்க விரும்பினால், நாம் எதைக் கற்பிக்க வேண்டும்?, எதைக்கற்க வேண்டும்? என்பதை அவர்களுடன் விவாதிக்க வேண்டும். நாம் தொடங்கியதை, நிறைவேற்றும் வல்லவர்கள் ஆவதற்கு அவர்களை எப்படிப் பயிற்றுவிக்க முடியும்?, என தொடர்ந்து உரையாடவும், களத்தில் இருந்து கற்றும் கொள்வதும் தேவையாக உள்ளது”, எனக் குறிப்பிட்டது, நாமும் கவனிக்கத் தக்கது.

ஊழியர்களில் இருந்து மக்கள் இயக்கம்:

முதலாளித்துவ நிலபிரபுத்துவ கட்சிகளிடம் இருந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஊழியர் கொள்கையில் வேறுபடுகிறது. ஊழியர்கள் கட்சிப் பணியில் பிரதான பங்களிப்பவர்களாக உள்ளனர். கம்யூனிஸ்ட் அறிக்கை, முதலாளித்துவம் குறித்து விவாதிக்கையில், ” 1. உற்பத்தியை புரட்சிகரமாக மாற்றிக் கொண்டே இருப்பது, 2. சமூக நிலைமைகளைக் குலைத்து கொண்டே இருப்பது, 3. எப்போதும் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை”, எனக் குறிப்பிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் இதை புரிந்து செயலாற்ற வேண்டியுள்ளது. மேற்குறிப்பிட்ட மதிப்பீடுகள் இன்றைய இந்திய அரசியல் களத்தில் பொருந்துவதாக உள்ளது.

ரஷ்யாவில் புரட்சியை நடத்திய போல்ஷ்விக் கட்சி, “நமது கட்சியின் தலைவர்கள் அடிக்கடி போதுமான ஆட்கள் இல்லை என முறையிடுகிறார்கள். அவர்களிடம் போரட்டத்திற்கும், பிரச்சாரத்திற்கும், பத்திரிக்கைக்கும், தொழிற்சங்கம், இளைஞர் இயக்கம், பெண்கள் அமைப்பு ஆகியவற்றில் பணிபுரிய ஊழியர்கள் இல்லை”, என்று விவாதித்துள்ளது. லெனின் இந்த விவாதத்திற்கு விளக்கம் அளிக்கையில், ” நம்மிடம் ஊழியர்கள் இல்லை. ஆனால் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். விரிவான அமைப்பை உருவாக்கி சிறந்த முறையில் ஊக்கப்படுத்தி, எல்லாப்பகுதியினருக்கும் வேலை அளிக்க கூடிய அமைப்பாளர் இல்லை. வேலைகள் பகிர்ந்தளிக்கப் படுவது மிக அவசியம்”, என வலியுறுத்துகிறார்.

தமிழகத்திலும், இந்திய அளவிலும் கூட, மார்க்ஸிஸ்ட் கட்சி ஊழியர்களைப் போராட்ட களத்திலேயே கண்டறிந்துள்ளது. மாணவர் – வாலிபர் இயக்கங்கள் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போதும் அதற்கான வாய்ப்பு உள்ள காரணத்தால் தான், மார்க்சிஸ்ட் கட்சி இக்காலத்தில், மாணவர் – வாலிபர் அமைப்புகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. போராட்டங்களில் இருந்து ஊழியர்களையும், அவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் போராட்டங்களையும், போராட்டங்களில் இருந்து மக்கள் செல்வாக்கையும் வளர்த்திட மார்க்ஸிஸ்ட் கட்சி முயற்சிக்கிறது. இந்த முன்னுரிமைக் களம் அதற்கு உரம் சேர்க்கும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: