மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …


 

– இரா.சிந்தன்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீட்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,  விலை ரூ. 300/- 448 பக்கங்கள்.

ஜான் ரீட் ஒரு அமெரிக்கர். பத்திரிக்கையாளர், கவிஞர். அவர் ஒரு கம்யூனிஸ்டும் புரட்சியாளரும் ஆவார். 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற நவம்பர் புரட்சியின் நேரடி சாட்சிகளில் ஒருவராக அவரும் இருந்தார். புரட்சி வெடிப்பின் தருணத்தில் நடந்த சம்பவங்களை உள்வாங்கி, எழுதிய இந்தப் புத்தகம் ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

சோசலிசத்தை நேசித்த தம்பதியர்:

ஜான் ரீட் மற்றும் அவரது மனைவி ப்ரயாண்ட் இருவரும் 1917 ஆம் ஆண்டு ஐரோப்பா வழியாக ரஷ்யாவின் பெத்ரோ கிராடு நகரத்திற்குச் சென்றார்கள். 1918 ஆம் ஆண்டு ஜனவரியில், ப்ரயாண்ட் அமெரிக்காவுக்கு திரும்பிவிட்டார். ரீட் பின்லாந்து வழியாக பயணித்தபோது போதுமான ஆவணங்களின்றி கைதாக நேர்ந்தது. அவரது கையிலிருந்து சேகரிப்புகள் பறிக்கப்பட்டன. அமெரிக்காவுக்கு திரும்பிய ரீடும் அவரது மனைவியும், ரஷ்ய புரட்சி அரசின் மீதான படையெடுப்பை  கண்டித்து தொடர்ந்து எழுதிவந்தனர். ஜான் ரீடின் நடவடிக்கைகளை முடக்குவதை அமெரிக்க அரசு தொடர்ந்து மேற்கொண்டது.

1913 ஆம் ஆண்டிலேயே ‘தி மாசஸ்’ பத்திரிக்கையில் இணைந்த ரீட், 50 கட்டுரைகளை அதில் எழுதியுள்ளார். 1914 ஆம் ஆண்டு ஜெர்மனி – பிரான்ஸ் இடையிலான போர் அறிவிப்பை ஒட்டி அங்கு சென்றவர் ‘இது வணிகர்களின் யுத்தம்’ என்ற கட்டுரையை எழுதினார். ‘தி மாசஸ்’ இதழில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்புக்காகவே ‘ராஜ துரோக’ வழக்கை சந்திக்க நேர்ந்தது. அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளையும், அரசுத் தாக்குதல்களையும் எதிர்கொண்டபடியே அவர் பத்திரிக்கையாளராக செயல்பட்டுவந்தார். நியூயார்க் கம்யூனிஸ்ட் இதழுக்கு ஆசிரியராக செயல்பட்டார். தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ‘கோமிண்டர்ன்’ (கம்யூனிஸ்ட் அகிலம்) பணிகளில் ஈடுபட்டு, 1920 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் இருந்தபோது நோய்த் தாக்குதலுற்றார். அவருக்கு வந்திருப்பது டைபஸ் காய்ச்சல் எனக் கண்டறிந்தும் ரஷ்யா மீதான ‘பொருளாதாரத் தடை’ காரணமாக, உரிய மருந்துகளைப் பெற முடியாமல், அவர் மரணமடைந்தார். போராட்டங்கள் நிறைந்த ரீடின் வாழ்க்கை சோசலிச லட்சியத்தின்மீது கொண்டிருந்த விடாப்பிடியான உறுதியைக் காட்டுகிறது. ரீடின் இறுதி மூச்சுவரை உடனிருந்த அவரின் மனைவி ப்ரயாண்ட் பாரீஸ் நகரத்தில் 1936 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார்.

ஜான் ரீடின் உடல் செஞ்சதுக்கத்தில், கிரெம்ளின் சுவரின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஜான் ரீட் இத்தகைய ‘மாபெரும் சிறப்பைப் பெறும் தகுதிபெற்றவர்’ என்று நெகிழ்ந்து தனது முன்னுரையில் பதிவு செய்கிறார் நதேழ்தா குரூப்ஸ்காயா.

பாராட்டி வரவேற்ற லெனின்:

1917 நவம்பர் மாதத்தின் புரட்சி நாட்கள் உண்மையாகவே உலகைக் குலுக்கின. வலிமை மிக்க பேரரசை வீழ்த்தி, பரந்துபட்ட ரஷ்ய நிலப்பரப்பில் பாட்டாளிகளால் ஆளுகை செலுத்த முடியும் என்பது மானுட வரலாற்றில் முதல் முறையாக நிரூபிக்கப்பட்டது.  ரஷ்ய மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் மூலதனத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டு, சுரண்டலுக்கு ஆட்பட்டு வந்த அனைத்து மக்களுக்கும் இந்தச் செய்தி ஒரு ஈர்ப்பைக் கொடுத்தது. அதனால்தான் லெனின், சோவியத் புரட்சி முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிடுகிறார்.

ஆங்கிலப் பதிப்பிற்கு முன்னுரை எழுதியுள்ள தோழர் லெனின் நடந்த சம்பவங்களை சரியாக புரிந்து கொண்டு  எழுதப்பட்டுள்ளதைப் பாராட்டியதுடன் “பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி, உயிர்க் களையுடன் இது விவரிக்கிறது” என்கிறார். இந்த புத்தகம் லட்சக்கணக்கில் அச்சிட்டு, பல்வேறு மொழிகளில் அனைத்து மக்களையும் அடைய வேண்டுமெனவும் அவர் விரும்பினார்.

மார்ச் முதல் நவம்பர் வரை:

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஒரு நேரடி சாட்சியின் விவரணையாகும். புரட்சிகர நிறுவனங்கள் எவ்வாறு உதயமாகின, அவற்றின் செயல்பாடுகளால் மக்கள்  ஈர்க்கப்பட்டது எவ்வாறு, அரசியல் நிர்ணயசபை கலைக்கப்பட்டு, சோவியத் அரசு அமைந்ததும், முதல் உலக யுத்தத்தில் ரஷ்ய பங்கேற்பை முடிவுக்கு கொண்டுவந்த பிரெஸ்த்-லித்தொவ்ஸ்க் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின் போக்கும், கள விளைவுகளும் இப்புத்தகத்தின் விளக்கப்படுகின்றன. (தொடர்ச்சியாக ஜான் ரீட் எழுதிவந்த மற்றொரு புத்தகம் முழுமையாகும் முன்பே அவர் இறந்துவிட்டார். எனவே அது வெளியாகவில்லை)

உலகை பங்கீடு செய்துகொள்வதற்கான முதல் உலக யுத்தத்தில் ஏகாதிபத்தியங்கள் முனைப்புடன் இருந்தன. இந்த யுத்தங்கள் மக்களுக்கு பேரிழப்பையே ஏற்படுத்தின. 1915 ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவின் உள்நாட்டு  சூழல் மிகக் கடுமையான சிதைவுகளுக்கு உள்ளாகியிருந்தது. ஊழல் மலிந்திருந்தது, பொருளாதாரச் சூழல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.  ஜெர்மனியுடனான போரும், பின்வாங்குதலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. சுமார் 18 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.  10 லட்சம் பேர் காணாமல் போயிருந்தனர். 20 லட்சம் பேர் போர்க் கைதிகளாகினர். சமாதானத்திற்கான வேட்கை மக்களிடையே நிறைந்திருந்தது.

1917 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து (பிப்ரவரி புரட்சி), ஜார் நிக்கோலஸ் 2 ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். இருப்பினும் அதிகாரம் பாட்டாளிவர்க்கத்தின் கைகளுக்கு மாறியிருக்கவில்லை. கெரன்ஸ்கி தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. சொத்துடைமை வர்க்கங்களும் கெரன்ஸ்கியின் அமைச்சரவையையும் சேர்ந்து சோவியத்துகள், ஆலைக் குழுக்களின் அதிகாரங்களை வரம்புக்கு உட்படுத்துவதற்கு முயன்றார்கள். இதனை பாட்டாளிவர்க்கம் தங்கள் அதிகாரத்தை குறுக்கும் முயற்சியாக கண்டுகொண்டது. அத்தகைய முயற்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற அரசியல் உணர்வும், எதிர்ப்பும் அங்கே நிலவியது.

குறிப்புகளும், இணைப்புகளும்:

போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள், நரோத்நிக்குகள், காடெட்டுகள் என அன்று செயல்பட்ட இயக்கங்கள், சோவியத்துகள் (ஆலோசனை சபைகள்), ஆலைக் கமிட்டிகள், டூமாக்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள், தலைமைக் குழுக்கள் மற்றும் பிற அமைப்புகளைக் குறித்த சிறு குறிப்புகளை ஜான் ரீட் வாசகர்களுக்கு முதலில் வழங்கிவிடுகிறார். ரஷ்ய சமுதாயத்தை நேரடியாக கண்ணுற்றிருக்காத எவருக்கும், இந்தப் புத்தகம் புரியாமல் போய் விடக் கூடாது என்ற அக்கறையுடன் அதனைச் செய்திருக்கிறார். ஜான் ரீட் கொண்டிருந்த புரிதல், கம்யூனிஸ்ட் கட்சியுடையதல்ல, ஒரு பார்வையாளராக, நேரடியாகக் கண்டவையும், திரட்டிய ஆவணங்களையும், உரையாடல்கள் வழி அறிந்தவற்றையும் வைத்து அவரே தொகுத்தவையாகும். ஒரு பேரவைக் கூட்டத்தை விளக்கினால், அதில் பங்கேற்பாளர்களிடம் காணப்பட்ட ஈடுபாட்டையும் நமக்கு காட்சிப்படுத்துகிறார். புரட்சிக்கு முன்னதாக நிலவிய விலையேற்ற சுரண்டல், பதுக்கல் நடவடிக்கைகள், டூமாவில் செயல்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை, கட்சிகள் பெற்ற வாக்குகளின் விபரம் போன்ற புள்ளிவிபரங்களும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவையாகும்.

சோவியத்துகளை நேசிக்கும் மக்கள்:

1917 செப்டம்பர் வாக்கில் நிலவிய யதார்த்தத்தைப் படம் பிடிப்பதோடு ’தொடங்குகிறது கதை’. தொழில் நகரங்களிலும், கிராமங்களிலும் ‘நிலங்கள் எல்லாம் விவசாயிகளுக்கே, ஆலைகள் எல்லாம் தொழிலாளர்களுக்கே’ என்ற ஓயாத உரையாடல் நிலவிவருகிறது. போர் அழிவுகள் முடிவுக்கு வரவேண்டும் என்ற முழக்கம் வலுக்கிறது. மிதவாதிகளோ ‘புரட்சிக்கு முடிவுகட்ட’ வேண்டுமென அழைப்பு விடுக்கின்றனர். காத்திருங்கள், டிசம்பர் மாதத்தில் அரசியல் நிர்ணயசபை கூடட்டும் என்ற பதிலை அளிக்கிறார்கள். அத்தகைய காலம்கடத்தலை மக்கள் ஏற்பதாயில்லை. போர் லட்சியங்களை மக்கள் எதிர்க்கிறார்கள். இடைக்கால அரசின் தலைவரான கெரன்ஸ்கியும், மிதவாத சோசலிஸ்டுகளும் சொத்துடைத்த வர்க்கங்களோடு கூட்டணி அரசாங்கம் நிறுவியபோது, மக்கள் அவர்களின் பால் நம்பிக்கை இழந்தனர். அந்தக் கூட்டணி சும்மாயிருக்கவில்லை.  மக்களை அடக்குமுறையின் மூலம் மெளனமாக்குவதில் தெள்ளத் தெளிவாகவே ஈடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் சோவியத் அமைப்புகளில் மென்ஷ்விக்குகளுக்கே செல்வாக்கு இருந்தது.

ஆனால், போல்ஷ்விக்குகள்தான்  “அனைத்து ஆட்சியதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” எனும் கோஷத்தை எழுப்பினார்கள். அந்த முழக்கத்தின் நியாயத்திற்கு சோவியத்துகள் செவிமடுத்தன. சோவியத் அமைப்புகளில் போல்ஷ்விக்குகளின் வலிமை அதிகரிக்கிறது. அவர்களின் முழக்கங்களுக்கு  ஆராவாரமான ஈர்ப்பு இருந்தது. மாறிவரும் நிலைமைகள் பெருமுதலாளிகளுக்கு நன்றாகவே புரிந்தன. ‘ருஷ்ய ராக்பெல்லர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்தெபான் கியோர்கியெவிச் லியனேவ் ‘புரட்சி ஒரு நோய் என்று பேசினார்.  உலக நாடுகளையும் எச்சரித்தார். ரஷ்ய சமுதாயத்தின் தேவையை நிறைவேற்ற வக்கற்ற முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான போராட்டம், ஜீவமரணப் போராட்டமாக நடந்தது.

வாதப் பிரதிவாதங்களின் களமாய் ரஷ்யா:

முதல் அத்தியாயத்தை வாசிக்கும்போதே, இந்த புத்தகம் எந்த விதத்தில் தனித்துவமானது என்பதை நாம் உணரலாம். கருத்தியலாக நடைபெற்ற போராட்டங்கள், கள அளவில் எப்படி வெளிப்பட்டன என்பதை காட்சிப்படுத்திக் காட்டுகிறார் ஜான் ரீட். பாலுக்கும், ரொட்டிக்கும், சர்க்கரைக்கும், புகையிலைக்கும் கடுங்குளிரில் நீள்வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருக்க, அதுகுறித்து எந்தக் கவலைகளும் இல்லாமல், சமூக மேல்தட்டு கவிஞர்களும், இலக்கியவாதிகளும் செயல்பட்டுவருகின்றனர்.

ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் எதற்கு யார் நலனுக்காக என்ற வாதப் பிரதிவாதங்கள் ராணுவத்தினரிடையே  வெளிப்படையாகவே நடக்கின்றன. 548 வது டிவிசனை சேர்ந்த ஒரு படையாள் பேசுகிறார் “நான் போர் புரிவது புரட்சியின் பாதுகாப்புக்காக என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமானால், என்னைப் பலவந்தம் செய்ய மரணதண்டனை தேவையாய் இருக்காது. நானே போய் போர்புரிவேன்.” இரண்டாம் அத்தியாயம் முழுமையும் நிறைந்திருக்கும் இத்தகைய வாதங்களும், எதிர்வாதங்களும் ‘தேசபக்தியின்’ பேரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் மயக்கும் சொற்பொழிவுகளை மக்கள் பிரித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது. போல்ஷிவிக்குகள் மட்டுமல்ல, ஒவ்வொருவருமே தீவிரமாக இயங்குகிறார்கள். சோவியத் ‘ஆலோசனை சபைகளை’ பாதுகாக்க மக்களிடம் உறுதி தென்படுகிறது. இந்த நிலையில் ஒரு ராணுவ அதிகாரி மக்களிடம் பேசுகிறார். “இந்த போல்ஷ்விக் கிளர்ச்சியாளர்கள் வாய்வீச்சுக்காரர்கள்” என்கிறார் அவர். மேலும், “சிறிது காலத்திற்கு நாம் வர்க்கப் போராட்டத்தை மறந்தாக வேண்டும்” என்கிறார்.  “நீங்கள் விரும்புவதெல்லாம் அதுதான்” என்ற எதிர்க் குரல் வலுவாக வந்து விழுகிறது.

இடைக்கால அரசு தனது போர் லட்சியங்களில் மாற்றமில்லை என 1917 ஏப்ரலில் அறிவிக்கிறது. இதற்கு எதிராக கொந்தளிப்பு உருவாகிறது. இதைத் தொடர்ந்து மில்யுக்கோவ் ராஜினாமா செய்கிறார். சில மென்சுவிக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் அரசில் இணைகின்றனர்.

1917 நாடுகடத்தப்பட்டிருந்த லெனின் ரஷ்யாவுக்குத் திரும்புகிறார். தன்னுடைய ஏப்ரல் கருத்தாய்வை உருவாக்குகிறார். அதில் லெனின் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளிகள் கையில் அதிகாரம் சென்றடைந்துள்ளது, இதற்குக் காரணம், ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு குறைவாக இருந்ததுதான். அத்துடன், அமைப்புரீதியாகத் திரள்வதில் பாட்டாளி வர்க்கத்திற்கு இருந்த பலவீனமும் அந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம்புரட்சி இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறிட வேண்டும்…  பாட்டாளி வர்க்கத்திடமும்,விவசாயிகளில் மிகுந்த வறிய நிலையில் உள்ள ஏழை விவசாயிகளிடமும் அதிகாரம் சென்றடைய வேண்டும்.”

எழுச்சிக்கு உத்தரவிட்ட பாட்டாளிகள்:

1917 அக்டோபரில் எழுச்சி குறித்த விவாதத்தில் ஈடுபட்ட போல்ஷ்விக்குகளின் மத்தியக் குழுவில், அறிவுத்துறையினரில் லெனினும், ட்ராட்ஸ்கியும் எழுச்சியை ஆதரிக்கின்றனர். ஆனால் வாக்கெடுப்பில் அந்த தீர்மானம் தோல்வியடைகிறது. ஆத்திரம் தாங்கமாட்டாமல் எழுந்து நின்ற பெத்ரோகிராது தொழிலாளி ஒருவர் நாங்கள் எழுச்சியை ஆதரிக்கிறோம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்என்று ஆத்திரத்துடன் எதிர்வினையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எழுச்சிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

நவம்பர் 3 முதல் நவம்பர் 7 வரை:

நவம்பர் 3 ஆம் தேதியே ஸ்மோல்னியில் நடைபெற்ற படையாட்களின் பொதுக் கூட்டம் ‘பெத்ரோகிராடு சோவியத்தின் கீழ் புரட்சி ராணுவக் கமிட்டி’ அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஆயுதமேந்திய கமிசார்கள் கிரோன்ஸ்வெர்கிஸ் ஆயுதச் சாலையில் இருந்து படைத் தளவாடங்களைக் கைப்பற்றினார்கள். பத்தாயிரம் துப்பாக்கிக் குத்தீட்டிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

நவம்பர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, பெத்ரோகிராடு சோவியத் நடக்கும் என்று  குறிக்கப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் வருகையை ஏற்படுத்தி, அதன் மூலம் அதன் செல்வாக்கை உணர்த்தவே திட்டமிடுகின்றனர். அதே நாளில் சில ’கசாக்குகள்’ (கசாக்குகள் எனப்படுவோர் ரஷ்யாவில் ஊர்க் காவல், எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பிரிவு மக்கள் ஆவர்) சிலுவை ஊர்வலத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய விளைகிறார்கள். அப்படி நடந்தால் அங்கே உள்நாட்டுக் கலக சூழல் எழுந்திருக்கும். சிலுவை ஊர்வலத்தின் இந்த நோக்கத்தை சோவியத்து தன் அறிக்கை வாயிலாக அம்பலப்படுத்துகிறது, வலுவானதொரு எச்சரிக்கையை வெளியிடுகிறார்கள். சிலுவை ஊர்வலத்திற்கான ஏற்பாடு கைவிடப்படுகிறது. முதலாளித்துவ பத்திரிக்கைகளும் அப்போது  சோசலிஸ்டுகளுக்கு எதிரான மனநிலையை கிளறிக் கொண்டே இருந்தார்கள்.

கதவு மூடப்பட்ட ரகசியக் கூட்டத்தில் லெனின் பேசுகிறார் “நவம்பர் 6 ஆம் நாள் மட்டுமீறி  காலத்துக்கு முன்னதான நாளாகும்… நவம்பர் 8 ஆம் நாள் மட்டுமீறி காலங்கடந்ததாகிவிடும் …. நவம்பர் 7 ஆம் நாளன்றே நாம் செயலை மேற்கொண்டாக வேண்டும்… “இதோ இருக்கிறது ஆட்சியதிகாரம் ! என்ன செய்யப் போகிறீர்கள்?”

நவம்பர்  5 ஆம் தேதியிட்ட லண்டன்  டைம்ஸ் இதழ் “போல்ஷ்விசத்துக்கு மருந்து துப்பாக்கிக் குண்டுகள்தான்” என தலையங்கம் எழுதுகிறது. ருஷ்யக் குடியரசு அலுவலகத்தில் இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. நள்ளிரவில் ஒரு நாடகம் நடக்கிறது. இராணுவத் தலைமை அலுவலர் குழுவில் பெத்ரோகிராடு சோவியத்தின் பிரதிநிதியை சேர்த்துக் கொள்ள வாக்களித்தார். ஒரு மணிநேரத்தில் அதனை நிராகரித்தார் யுத்த அமைச்சர் ஜெனரல் மனிக்கோவ்ஸ்கி.

நவம்பர் 6 ஆம் தேதி பெத்ரோகிராது நகரச் சுவர்களில் காணப்பட்ட அறிவிப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது: “குண்டர்களையும், கறுப்பு நூற்றுவர் கிளர்ச்சிக்காரர்களையும் கைது செய்து அருகாமையில் இருக்கும் இராணுவப் பிரிவிலுள்ள சோவியத்துக் கமிசாரிடம் ஒப்படைக்கும்படி நகர மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் … ”

நவம்பர் 7 ஆம் தேதி பெத்ரோகிராடு சோவியத்தின் (ஆலோசனை சபையின்) கட்டுப்பாடு  போல்ஷ்விக்குகளின் கைக்கு வருகிறது. பெத்ரோகிராடுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் அரோராவிலிருந்து குளிர்கால அரண்மனையின் மீதான தாக்குதல் தொடங்குகிறது. 140 பேர் மட்டுமே கொண்ட பெண்களின் ராணுவப் படைப்பிரிவு அரண்மனையைக் கைப்பற்றுகிறது. சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைகின்றனர்.

தனக்கு புரட்சியின் வெற்றிச் செய்தி எவ்வாறு வந்ததென்பதை ஜான் ரீட் குறிப்பிடுகிறார். போல்ஷ்விக்குகள் ஏடாகிய ரபோச்சி பூத் பெரிய அளவு காகிதத்தில், கொட்டை எழுத்துகளில் ஆன தலைப்புகளுடன் வெளியாகியிருக்கிறது. கைப்பற்றப்பட்ட அச்சகமாக ரூஸ்கையா வோல்யாவின் அச்சகத்தில் அது அச்சடிக்கப்பட்டுள்ளது. அதன் தலைப்பு இவ்வாறு கூறியது “அனைத்து ஆட்சியதிகாரமும் தொழிலாளர்கள், படையாட்கள், விவசாயிகளது சோவியத்துக்கே ! சமாதானம்! ரொட்டி! நிலம்!”. ஆட்சியதிகார மாற்றத்தின் பொருள் “நிலப்பிரபுத்துவக் கொடுமை அறவே ஒழிக்கப்படுவதையும், முதலாளிகளுக்கு உடனடியாய்க் கடிவாளமிடப்படுவதையும், நியாயமான சமாதானம் உடனடியாய் முன்மொழியப்படுவதையும்” குறிப்பதாக அதன் தலையங்கம் கூறியது.

புரட்சிக்கு பின்னர் எழுந்த சவால்கள்:

புரட்சிக்குப் பின்னர் உள்நாட்டு யுத்தம், பொய்ப் பிரச்சாரங்கள் என இரண்டு சவால்களை போல்ஷ்விக் புரட்சியாளர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அனைத்து ருஷ்ய  சோவியத் காங்கிரஸ் கசாக்குகளுக்கு விளக்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கை பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில் கொடுக்கிறது. குறிப்பாக கசாக்குகளிடம் உள்ள நிலங்களை புரட்சி அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை மறுத்த அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “தொழிலாளர்கள், படையாட்கள், உணர்வுபடைத்த விவசாயிகளது எல்லா நிறுவனங்களும் எங்களுடைய காங்கிரசில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றன. உழைக்கும் கசாக்குகளையும் இந்தக் காங்கிரஸ் தன் மத்தியில் வந்தமர வேண்டுமென விரும்புகிறது”… “பெரிய கசாக்கு நிலப்பிரபுக்களிடமிருந்து மட்டும்தான் புரட்சியானது நிலத்தைப் பறிமுதல் செய்து மக்களிடம் தரப்போகிறது”

புரட்சியின் காலத்தில் வெளியிடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு துண்டறிக்கையையும், அரசு அறிவிக்கைகளையும் ஜான் ரீட் ஆவணப்படுத்தியுள்ளார். களத்தில் அவற்றின் விளைவுகளை விவரிக்கும்போது பிரச்சாரம் என்றால் என்ன? மக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு எப்படி இருந்தது? ஒரு புரட்சி அரசாங்கம் தன்னை எப்படி தற்காத்துக் கொண்டு முன் சென்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. போல்ஷிவிக்குகள் எவ்வாறு விவாதங்களில் ஈடுபட்டார்கள், விவாதங்களை எப்படி வென்று காட்டினார்கள் என அனைத்தும் நமக்கு புரிய வருகின்றன.

மக்கள் கமிஷார் தலைவராகிறார் லெனின்:

போரிடும் எல்லா நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட பிரகடனம் காங்கிரசின் முன்னால் வைக்கப்படுகிறது. நிலத்தைப் பற்றிய அரசாணை வாசிக்கப்படுகிறது. தோழர் லெனின் தலைமையிலான மக்கள் கமிசார் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தோழர் லெனினை அவைத் தலைவராகக் கொண்ட மக்கள் கமிசாரின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. அத்தனை நிகழ்வுகளும் நம் கண் முன்னே விரிகின்றன. நெருக்கியடித்த கூட்டத்தில் நாமும் ஒருவராய் நின்று அந்த விவாதங்களைக் கேட்பதுபோல் தோன்றுகிறது. அங்கே புரட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமே பேசவில்லை. இடதுசாரி சோசலிஸ்டு புரட்சியாளர் கட்சியின் பிரதிநிதி இவ்வாறு கூறுகிறார் “சோஷலிஸ்டுக் கூட்டின் அரசாங்கத்தையன்றி வேறெந்த அரசாங்கத்தையும் நாங்கள் ஆதரித்து நிற்க இயலாது”

போல்ஷிவிக்குகளின் சார்பில் ட்ராட்ஸ்கி எழுகிறார், “எங்களது கட்சி தனிமைப்பட்டுவிடும் அபாயத்தைப் பற்றிய இந்த வாதங்கள் புதியவை அல்ல” என்று மறுக்கிறார்.  இரத்தம் ஏதும் சிந்தாமலே அரசாங்கத்தை வீழ்த்த முடிந்தது பற்றி பெருமையோடு குறிப்பிடும் அவர் இடைக்கால அரசாங்கமே தனிமைப்பட்டிருந்தது என அறுதியிட்டுக் கூறுகிறார். அந்த மேடையில் ஒரே ஒரு கூட்டு மட்டுமே சாத்தியம்.  அது “தொழிலாளர்கள், படையாட்கள், மிகவும் ஏழ்மைப்பட்ட விவசாயிகளின் கூட்டுதான்” என பிரகடனப்படுத்தப்படுகிறது.

மக்கள் அங்கீகாரத்தை வெல்வதற்கான போராட்டம்:

புதிய மக்கள் கமிசார் அவை வெளியிட்ட முதல் ஆணை அச்சிடப்பட்டு ஆயிரக்கணக்கில் நகரத் தெருக்களில் விநியோகிக்கப்படுகின்றன. ரயில்களின் வழியே எடுத்துச் செல்லப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது அந்த ஆணை.   “அரசியல் நிர்ணயச் சபைத் தேர்தல்கள் நவம்பர் 12 ஆம் தேதி நடக்கவேண்டும்” என்ற உத்தரவைப் பிரகடனம் செய்தது.  விரட்டியடிக்கப்பட்டவர்கள் சும்மாயில்லை, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கான எல்லாப் பணிகளையும் செய்தார்கள். கசாப்புத் துருப்புகளது அரசாங்கத்தின் அதிபர் என்ற பெயரிலும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர் அதிபர் உச்சப்படைத் தலைவர் கெரன்ஸ்கி என்ற பெயரிலும் ஆணைகள் வெளிவந்தன. இவையும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை, விவாதங்களை ரஷ்யா முழுவதும் ஏற்படுத்தின. மரண தண்டனையை ஒழித்துக் கட்டிய தொழிலாளர், விவசாயிகளின் அரசாங்கத்தின் மீது சித்திரவதைப் படுகொலைகள் செய்வதாய் பழிசொல்லப்பட்டது. ஆனால் அவை புளுகுமூட்டைகள் என்பது அம்பலமாகியது.

புரட்சிப் போர்முனை என்ற அத்தியாயம் நவம்பர் 10 ஆம் தேதி நிகழ்வுகளைக் குறிப்பிடுவதுடன் தொடங்குகிறது. நாலாப்புறமும் வதந்தியும், விசாரிப்புகளும் இருக்கின்றன. அதே சமயம் எல்லாம் இயல்பாகவே இயங்கிவருகிறது. பத்திரிக்கைகள் அவரவர் இயக்கங்கள் சார்ந்த செய்திகளையே உண்மையைப் போல் பதிகின்றன. முதலாளித்துவ ஏடுகளைக் காணவில்லை. போல்ஷ்விக்குகளின் இதழான பிராவ்தா சோவியத் குடியரசின் நாடாளுமன்றமாய் அமைந்த இத்ஸேயிகவின் முதல் கூட்ட விபரங்களை வெளியிட்டிருந்தது. பத்திரிக்கைகளுக்கான பொது விதிகள், வீட்டு வாடகை ஒத்திவைப்பு அரசாணை, தொழிலாளர் காவல்துறையை நிறுவுவதற்கான அரசாணைகளுடன் – காலிக் குடித்தனப் பகுதிகளையும் வீடுகளையும் கைப்பற்றுவதற்கான அதிகாரமளித்தல் மற்றும் ரயில் வண்டிகளில் இருந்து அவசரத் தேவைப் பொருட்களை  விநியோகிக்க ஏற்பாடு செய்யும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

ரீட் அடுத்தடுத்து நடந்தவைகளை விவரிக்கிறார். எதிர்ப் புரட்சியாளர்கள் மூர்க்கத்துடன் நடத்தும் தாக்குதலுக்கு எப்படியெல்லாம் சோவியத்துகள் தயாராகின என்பதை விளக்குகிறார். பெத்ரோகிராடு முற்றுகைக்கு உட்பட்டதாக புரட்சி ராணுவக் கமிட்டி அறிவிக்கிறது. எதிர்ப் புரட்சித் தாக்குதல் தொடங்குகிறது. எதிர்ப் புரட்சி சூழலை 8 வது அத்தியாயம் நம் கண் முன் நிறுத்துகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் புரட்சியின் வெற்றி எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை, மோதலின் மத்தியிலிருந்தபடியே விளக்குகிறார் அவர். ஒரு அமெரிக்க பிரதிநிதியாக அடையாள சீட்டோடு பயணிக்கும் ரீட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அனுபவங்களும் நம் கண் முன் எழுகின்றன.  ‘அமெரிக்கா ஏன் புரட்சியைக் குலைக்க நினைக்கிறது?’ என்ற போல்ஷ்விக் வீரனின் ஆதங்கத்தங்கத்தையும் உள்ளிட்டே ரீட் பதிவு செய்திருக்கிறார்.

கண்ணீர் மல்க நிற்கும் கொலந்தாய்:

ஆட்சியதிகாரத்தைக் கைக்கொள்ளும் போல்ஷ்விக்குகள், ருஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனத்தை வெளியிடுகின்றனர். அது மக்களின் சரிசமத்துவம் பற்றியும், தேசியச் சிறுபான்மைகளின் உரிமை குறித்தும் தெளிவாக அறிவிக்கிறது. தோழர் ஸ்டாலினும், லெனினும் அந்த பிரகடனத்தை வெளியிடுகிறார்கள். அமைச்சரவை நியமனம் நடக்கிறது. இன்று முதலாளித்துவ நாடுகளில் காண்பதைப் போல் ஒரு பகட்டான நிகழ்வல்ல அது. ’அலெக்சாந்திரா கொலந்தாய் நவம்பர் 13 ஆம் தேதியன்று பொது நலத்துறை கமிசாராக நியமிக்கப்பட்டார். அமைச்சகத்தின் அலுவலர்களில் 40 பேரைத் தவிர மற்றவர்கள் வேலை நிறுத்தம் செய்து அவரை ‘வரவேற்றார்கள்’. பெரிய நகரங்களைச் சேர்ந்த பஞ்சையர்கள் பட்டினியால் முகம் வாடி வதங்கி நீலம் படர்ந்துவிட்ட நிலையில் அமைச்சரக்க் கட்டிடத்தை சூழ்ந்து நிற்க, கொலந்தாய் கண்களில் நீர்ததும்ப நின்றார். தபால், தந்தி மற்றும் ரயில்வே துறைகளில் ஒத்துழையாமைச் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

அரசு வங்கிகளும் கூட ஒத்துழையாமையில் இறங்கின. போல்ஷ்விக்குகள் வன்முறை புரிவதாய்க் கூறி, வங்கிகளின் கதவுகளைத் தாழிட்டார்கள். மிகத் திறம்பட ஒருங்கிணைக்கப்பட்ட ஒத்துழையாமை அது. அதே சமயத்தில்  சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் போல்ஷ்விக்குகளுக்கு பெரும்பான்மை அளித்தது. முதலில் ஆட்சியதிகாரப் பிரச்சனைக்குத் தீர்வுகண்டவர்கள், நடைமுறை நிர்வாகப் பிரச்சனையில் கவனம் செலுத்தினார்கள். பதுக்கலுக்கு எதிரான சோதனைகள் நடந்தன. நிலக்கரி கைப்பற்றப்பட்டு ஆலைகள் இயங்குவதற்கான முயற்சிகள் தொடங்கின. பொருளாதார வாழ்வு சீர்குலைக்கப்படுவதற்கு எதிராக மக்கள் பெருந்திரளை செயலில் இறக்கினார் லெனின். ஆட்சியதிகாரத்தை மக்கள் தாமே மேற்கொள்ளவும், சொத்துடைத்த வர்க்கங்களின் எதிர்ப்பை தகர்த்திடவும், அரசாங்க நிலையங்களை கைக்குக் கொண்டுவந்துவிடவும் பிரகடனம் அறைகூவி அழைத்தது. “புரட்சிகர ஒழுங்கு, புரட்சிகர கட்டுப்பாடு, கண்டிப்பான கணக்குப் பதிவு முறை, கண்காணிப்பு! வேலை நிறுத்தங்கள் வேண்டாம்! சோம்பித்திரிதல் கூடாது!” போல்ஷ்விக்குகள் மக்களால் ஒரு ஆட்சியதிகாரத்தை நிறுவ முடியும் என்பதை நிலைநாட்டும் அனுபவங்களைப் பெற்றுவந்தார்கள்.

கடைசி அத்தியாயமான ‘விவசாயிகள் காங்கிரஸ்’ என்பதில் லெனின் பேச்சை விவரிக்கிறார் ஜான் ரீட், அவர் சாய்வு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். “அவர் வேண்டாம் ஒழிக” என்ற கூச்சல் கேட்கிறது. ”உங்களுடைய அரசாங்கத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை” என்று  கூச்சலிடுகிறார்கள் விவசாயிகள். லெனின் மிக அமைதியாக, கூட்டத்தை உற்று நோக்கியபடி நிற்கிறார். “மக்கள் கமிசார் அவையின் உறுப்பினனாக இங்கு நான் வரவில்லை” என அறிவிக்கிறார். கூச்சல்  அடங்குகிறது. போல்ஷ்விக் கட்சியின் பிரதிநிதியாகவே தன்னைப் பார்க்குமாறு சொல்கிறார்.  அதே சமயம் மக்கள் கமிசார் போல்ஷ்விக்குகளால் அறிவிக்கப்பட்டதுதான் என்பதை அவர் மறுக்கவில்லை.

தெளிவான, மிக எளிமையான வாதங்களின் மூலம் போல்ஷ்விக் நிலைப்பாட்டை விளக்குகிறார். கடுமையான வாதப் பிரதிவாதங்களின் மூலம் ஒவ்வொரு தீர்மானமும் திருத்தப்பட்டு, ஏற்கப்பட்டு, விவாதங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. நிலப்பிரச்சனை குறித்து, சோவியத் குறித்து, ஆலைகள் குறித்து காங்கிரஸ் விவாதிக்கிறது.

கட்சியின் முக்கியத்துவம்:

இத்தகைய சூழலில் கட்சியின் முக்கியத்துவம் என்ன என்பதை லெனின் குறிப்பிடுகிறார். “சோசலிஸ்டு அரசியல் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகும். மக்கள் பெருந்திரளினரது சராசரிக் கல்வி நிலையின் பற்றாக்குறை தன்னை தடுத்து நிறுத்துவதற்கு கட்சி இடந்தரலாகாது. இதற்கு மாறாக இந்தக் கட்சி சோவியத்துகளை புரட்சிகர முன் முயற்சிக்கான செயல் உறுப்புகளாக பயன்படுத்தி மக்கள் பெருந்திரளினருக்குத் தலைமைதாங்கி அழைத்துச் செல்ல வேண்டும்… ஆனால் தயங்குவோருக்கு தலைமைதாங்கி அழைத்துச் செல்லவேண்டுமென்றால் இடதுசாரி சோசலிஸ்டு புரட்சியாளர்கள் முதலில் தமது தயக்கத்திற்கு முடிவுகட்டிக் கொண்டாக வேண்டும்”

நவம்பர் 29 விவசாயிகளின் சிறப்பு அமர்வு தொடங்கியது. குதூகல மனப்பான்மையும், புன் சிரிப்பும் பளிச்சிட்டதை ரீட் பதிவு செய்கிறார். விவசாயிகளின் சோவியத்துகளுக்கும், படையாட்கள் மற்றும் தொழிலாளர்களது சோவியத்துக்கும் இடையிலான ”வாழ்க்கை ஒப்பந்தம்” பற்றிய அறிக்கையை நந்தன் சோன் என்ற முதியவர் வாசிக்கிறார். அவர் குரல் கரகரக்கிறது, கண்களில் நீர் ததும்புகிறது.

நீங்கள் எத்தனையோ புத்தகங்களை வாசித்திருக்கலாம். ஆனாலும், இந்தப் புத்தகத்தை தவறவிடாதீர்கள். புரட்சியைக் குறித்தும், கட்சி ஸ்தாபனம் குறித்தும் நமக்கு எத்தனையோ நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும் கூட, நம்மால் உணர முடியாததொரு பயணத்தை, புரட்சிக் கொதிகலனில், சமூகத்தின் ஒவ்வொரு துகளும் எப்படி ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் என்ற நேரடி தரிசனத்தை இது கொடுக்கிறது. அரசியல் உணர்வுபெற்ற மக்களும், மக்கள் நலன்களை உள்வாங்கித் தெளிந்த அரசியல் இயக்கமும் எப்படி ஒன்றோடொன்று இயல்பாக, இணங்கிப் பயணிக்க முடியும் என வரலாற்றில் ஒரு மாபெரும் மானுட வெற்றியின் ஊடாக நின்றுகொண்டு நமக்கு விளக்குகிறது.

 



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: