மார்க்சிய செவ்வியல் நூல் அறிமுகம் 10:
“ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” – லெனின்
-என்.குணசேகரன்
கம்யூனிஸ்ட் இயக்கம் புரட்சி இலட்சியத்தைக் கொண்டது. ‘புரட்சி’ என்ற சொல் மிக உயர்ந்த பொருள் கொண்டது. அது மாற்றத்தைக் குறிக்கும்; சாதாரண மாற்றத்தை அல்ல. புதிய குணம், புதிய பண்புகள் கொண்ட சமூக மாற்றம். காலாவதியாகிப் போன ஒரு சமூகத்திலிருந்து, முற்றிலும் புதிய முற்போக்கான சமூகத்தைப் படைப்பது புரட்சி.
வரலாறு முதலாளித்துவத்தை பொருத்தமற்ற அமைப்பாக மாற்றி வருகிறது. எதிர்கால வரவாக சோசலிசப் புரட்சி, வரலாற்றின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கம் புரட்சியை நிகழ்த்தி, சோசலிசத்தை கொண்டு வரும்.
புரட்சி பற்றி வந்த நூல்களிலியே இன்றும் நீடித்த நிலைத்த புகழ் கொண்ட நூல், லெனின் எழுதிய “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூல்.
லெனின் 1905-ஆம் ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் இந்நூலை எழுதினார். ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி அமைப்பான ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு வெளியிட்டது. ரஷ்யாவிற்கு இந்நூல் விநியோகிக்கப்பட்டு, புரட்சி வேட்கையை புயலாகத் தூண்டியது.
இந்நூலின் புரட்சி தாக்கத்தை தடுத்து நிறுத்த அன்றைய ஜாராட்சி முயன்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர நீதிமன்றம் ”அந்த நூலை அழித்தொழியுங்கள்” என கட்டளையிட்டது. ஆனால் அந்நூலின் வீச்சினை கட்டுப்படுத்த முடியவில்லை.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ‘உத்திகள்’
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் “உத்தி” என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் ‘Tactics’ என்றழைக்கப்படும். அந்த சொல், ஒரு முக்கியமான கருத்தாக்கம். சாதாரணமாக பயன்படுத்தும்போது அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தையோ, இலக்கையோ, அடைவதற்கு, மிகவும் கவனமாக ஒரு செயலைத் திட்டமிடுவது அல்லது ஒரு அணுகுமுறையை உருவாக்குவது ‘உத்தி’ எனப்படும். இந்த சொல் பயன்பாடு போர் நடத்தும் முறைகள் தொடர்பாக உருவானது. எதிரிகளைத் தாக்குவதற்கு பதுங்கு வழிமுறைகள் அல்லது நேரடி தாக்குதல் போன்ற வழிகளில் அணிவகுத்து முன்னேறுவதற்கு திட்டம் உருவாக்குவது ‘உத்திகள்’ எனப்படும். இது ஒரு கலையாகவும், அறிவியலாகவும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு வகை உத்திகள் உண்டு. ஒன்று தொலைநோக்கு உத்தி, மற்றொன்று தற்போதைய நடைமுறை உத்தி. ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, நாட்டில் நிலவும் அன்றைய சூழலில், அடைய வேண்டிய இலட்சியத்தை வரையறுப்பது, தொலைநோக்கு உத்தி, இதனை கம்யூனிஸ்ட் கட்சி தனது ‘திட்டம்’ எனப்படும் ஆவணத்தில் விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் செல்ல வேண்டிய தொலைநோக்கு இலக்காக, ஒரு மக்கள் ஜனநாயக அரசு அமைத்திட வேண்டுமென்று கூறப்படுகிறது. இது சோசலிச அரசு அமைக்கும் உயரிய இலட்சியத்தை அடைவதற்கான தொலைநோக்கு உத்தியாக கருதப்படுகிறது.
தற்போதைய நடைமுறை உத்தி எனப்படுவது அப்போது நாட்டில் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப சில இலக்குகளை நிச்சயித்து, அவற்றை அடைவதற்கு பாடுபடுவது என்பதாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் சர்வாதிகார அரசு இருந்தால், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அப்போதைய நடைமுறை இலக்கு சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக இருக்கும் அதுவே, சோசலிசம் நோக்கிய தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். நடைமுறை உத்திகள் அவ்வப்போது நிலைமைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறும். தொலைநோக்கு உத்தி, நிர்ணயித்த இலக்கினை அடையும் வரை நீடித்திருக்கும். ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் அன்று புரட்சி அரசை ஏற்படுத்துவதற்கான தீவிரமான விவாதம் நடந்தது. கட்சிக்குள் போல்ஷ்விக் (பெரும்பான்மை) மென்ஷ்விக் (சிறுபான்மை) என்ற இரண்டு குழுக்கள் இந்த விஷயத்தில் கருத்து ரீதியாக மோதிக் கொண்டன. புரட்சி இலட்சியத்தை அடைய ஒரே கட்சிக்குள் இரண்டு விதமான உத்திகள் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு உத்திகளை விளக்கி, போஷ்விக்குகளின் உத்தி எவ்வாறு சரியானது என்பதனை இந்த நூலில் லெனின் நிறுவுகிறார்.
நூல் உருவான சூழல்:
பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்த கட்சி, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி. அதன் முதல் அமைப்பு மாநாடு 1898ஆம் ஆண்டு நடைபெற்றது. 1903-ஆம் ஆண்டு இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிலேயே போல்ஷ்விக், மென்ஷ்விக் என்ற இரு பிரிவுகளாக கட்சி பிளவுபட்டது. ஆனால் தனி கட்சிகளாக உருவாகவில்லை.
1905 -ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு நடைபெற்றது. அந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தான் ஜார் ஆட்சிக்கு எதிரான ஒரு புரட்சி வெடித்தது. அது கொடூரமாக ஓடுக்கப்பட்டது. என்றாலும் ஜாராட்சி சில ஜனநாயக அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. 1906-ஆம் ஆண்டு ‘டூமா’ என்றழைக்கப்பட்ட குறைந்த அதிகார வரம்பு கொண்ட ரஷ்ய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.
இவ்வாறான, புதிய நிலைமைகள் ஏற்பட்டுள்ள சூழலில், மூன்றாவது மாநாடு கூடியது. மென்ஷ்விக்குகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென லெனின் அவர்களை அழைத்தார். ஆனால் அவர்கள் தனியாக ஒரு மாநாடு கூட்டினர். இரண்டு மாநாடுகள், இரண்டு பார்வைகள் என்றவாறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த இரண்டு மாநாடுகளில் இரண்டு விதமான உத்திகள் உருவாக்கப்பட்டன.
மாநாடு முடிந்தவுடன், போல்ஷ்விக்குகள் உருவாக்கிய உத்தியை விளக்கிடவும் மென்ஷ்விக்குகளின் உத்தியை விமர்சித்தும் லெனின் “இரண்டு உத்திகள்..” நூலை எழுதினார். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் போல்ஷ்விக்குகள் சரியான உத்தியை உருவாக்கினர். ஆனால் மென்ஷ்விக்குகள் இதில் ஊசலாட்டத்துடன் இருந்தது மட்டுமல்ல, புரட்சியில் முதலாளித்துவம் மேலாதிக்கம் பெறவும், அவர்களின் பின்னால்வால் பிடிக்கும் வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் செயல்பட வேண்டுமென்றும் மென்ஷ்விக்குகள் கருதினர். இந்த வர்க்க சமரசத்தை லெனின் அம்பலப்படுத்தினார்.
நூலின் விவாதப் பொருள்:
அன்றைய ரஷ்யாவில், புரட்சி வரவிருக்கும் சூழலில், புரட்சியை சாதிப்பதற்கு, முக்கியமான சில நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியிருந்தது. அந்தப் பிரச்சனைகளை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.
* ஜார் ஆட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதந்தாங்கிய எழுச்சியை ஏற்படுத்துவது.
* தற்காலிக புரட்சி அரசாங்கத்தை அமைப்பது.
* சமூக ஜனநாயக கட்சி தற்காலிக அரசாங்கத்தில் பங்கேற்பது .
* விவசாயிகள் குறித்த அணுகுமுறையை தீர்மானிப்பது.
*முதலாளித்துவ வர்க்கம் பற்றிய அணுகுமுறை
இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் உருவாக்கப்பட்ட தீர்மானங்களில் போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக்கு வேறுபட்ட பார்வைகள் இருந்தன. இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் மென்ஷ்விக்குகளின் சந்தர்ப்பவாத போக்குகள் வெளிப்பட்டன. லெனின் அந்தப் போக்குகளை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் புரட்சியின் தன்மை
அன்றைய ரஷ்ய சூழலில் நிகழுவிருக்கும் புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்பதில் கட்சியின் இரு பிரிவினருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. லெனினும் தனது நூலில் அன்றிருந்த முதலாளித்துவ வளர்ச்சியில் சாத்தியமான புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிதான் என்றும், அந்த எல்லையை உடனடியாக தாவி அடுத்த கட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பதையும் எழுதியிருந்தார்.
எனவே, ஜார் ஆட்சியை வீழ்த்தி, ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்துவது உடனடி கடமையாக அன்று இருந்தது. ஜார் ஆட்சியின் ஏதேச்சதிகார முறையிலிருந்து, ஓரளவு ஜனநாயகச் சூழல் நிலவும் கட்டத்திற்கு ரஷ்யா செல்ல வேண்டும்.
ஆனால் இந்தப் புரட்சி முதலாளிகள் உள்ளிட்ட மேல்தட்டு வர்க்கங்களின் புரட்சி அல்ல. அது மக்களின் புரட்சி. தொழிலாளிகள், விவசாயிகள் உள்ளிட்ட வெகுமக்கள் நடத்தும் புரட்சி.
இந்தப் புரட்சியின் விளைவாக அமையும் ஜனநாயக குடியரசின் முக்கியத்துவத்தை லெனின் வலியுறுத்தினார்.
“ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. சோசலிசத்தை நோக்கி நெருங்க வேண்டுமென்றால், தற்போதைய நிலையில், முழுமையான அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஜனநாயக குடியரசை அமைப்பதைத் தவிர வேறு எதுவும் வழியில்லை”
எனவே, முதலாளிகளும், உழைக்கும் வர்க்கங்களும், ஜனநாயக குடியரசை உருவாக்க வேண்டும் என்பது கட்சியின் உத்தியாக அன்று இருந்தது.
இந்தப் புரட்சிகர மாற்றத்தில் பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?
மென்ஷ்விக்குகள் துரோகம்:
புரட்சியில் பாட்டாளி வர்க்கம் ஆற்ற வேண்டிய பங்கு பற்றிய பிரச்சனையில் மென்ஷ்விக்குகளும் போல்ஷ்விக்குகளும் எதிர் எதிரான நிலை எடுத்தனர்.
எதிர்வரும் ரஷ்யப் புரட்சி முதலாளித்துவ, மேல்தட்டு புரட்சியாக இருப்பதால், ‘பாட்டாளி வர்க்கம் பெரிய பங்கினை ஆற்ற வேண்டியதில்லை; இந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் தர வேண்டியதில்லை; புரட்சியிலிருந்து பாட்டபாளி வர்க்கம் தள்ளியே நிற்க வேண்டும்’ என்றெல்லாம் மென்ஷ்விக்குகள் வாதிட்டனர்.
இக்கருத்துக்களும், மென்ஷ்விக்குகள் நிலையும் பாட்டாளி வர்க்கத்துக்கு பெரும் துரோகம் இழைப்பதாக லெனின் விமர்சித்தார்.
லெனின் எழுதினார்.
“முதலாளித்துவப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கம் தனித்து நிற்கக் கூடாது என்று மார்க்சியம் போதிக்கிறது; அந்தப் புரட்சியை அலட்சியப்படுத்தக்கூடாது; புரட்சியின் தலைமை முதலாளிகளிடம் செல்ல பாட்டாளி வர்க்கம் அனுமதிக்கக்கூடாது; மாறாக, அந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் முழுச் சக்தியுடன் பங்கேற்க வேண்டும். பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அமைய தளர்வில்லாமல் உறுதியாகப் போராட வேண்டும். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவப் புரட்சியில் பங்கேற்று, அதன் தலைமையை தானே மேற்கொண்டு, புரட்சியை வெற்றிக்கு கொண்டுவர வேண்டுமென்று லெனின் வாதிட்டார். ஏனென்றால், அந்த வெற்றிதான் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசம் வருவதற்கான வழியைத் திறந்துவிடும்.
வெற்றி பெறும் புரட்சி, இரண்டு விதமான நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்று கருதினார் லெனின்.
1) ஜாராட்சியை வீழ்த்துவதில் புரட்சி உறுதியான வெற்றியை சாதிக்கும்; ஒரு ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்திடும்.
இந்த நிலைமை ஏற்படாமல் போனால், வேறு ஒரு சூழல் உருவாகக்கூடும்.
2)புரட்சி சக்திகள் போதுமான அளவிற்கு திரண்டு நிற்க முடியாமல் போகலாம். அந்த நிலைமையில், முதலாளிகள், மக்கள் நலனை காவு கொடுத்து, ஜார் மன்னனுடன் ஒரு பேரம் நடத்தி, ஒப்பந்தம் செய்துகொள்ளக் கூடும்; அரைகுறையான ஒரு அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்படலாம். அல்லது ஒரு அரசியலமைப்பு சட்டம் போன்ற ஒரு சட்ட ஏற்பாட்டைக் கொண்டு வரலாம்” இந்த இரண்டு வாய்ப்புக்களை லெனின் கணித்தார். இந்த இரண்டில் பாட்டாளி வர்க்க நலனுக்கு உகந்தது எது? முதலில் சொல்லப்பட்ட ஜாராட்சியை உறுதியாக வீழ்ச்சி அடையச் செய்து முழுவெற்றி பெறுவதுதான். இது நடைபெற வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சிக்கு தலைமையேற்க வேண்டும். முதலாளி வர்க்கத்துக்கு பின்னால், வால் பிடித்து அணிவகுக்கும் வர்க்கமாக இருக்கக்கூடாது. புரட்சிப் போரில் முதலாளிகளுக்குப்பின் நிற்கும் துணைப்படையாக, கூலிப்படையாக பாட்டாளி வர்க்கம் இருக்கக்கூடாது. மக்கள் புரட்சியின் தலைவனாக உயர்ந்து, புரட்சியில் தலைமைப் பாத்திரத்தை பாட்டாளி வர்க்கம் ஆற்ற வேண்டும் என்றார் லெனின். இதனையே கட்சியின் மூன்றாவது மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்தியது.
லெனினது இந்தப் பார்வை புரட்சி வரலாற்றில் ஒரு மகத்தான பங்களிப்பு. பிரெஞ்சுப் புரட்சி உள்ளிட்ட கடந்த காலப் புரட்சிகளில், பாட்ட்hளி வர்க்கம் புரட்சியில் கலந்து கொண்டு, முக்கிய பங்கினை ஆற்றினாலும், முதலாளி வர்க்கத்துக்கு தலைமைப் பாத்திரத்தை விட்டுக்கொடுத்து வந்துள்ளது. மாறாக, ரஷ்யப் புரட்சிதான் பாட்டாளி வர்க்கத் தலைமை என்ற மகத்தான கோட்பாட்டை முன்னிறுத்தி வெற்றி பெற்றது.
புரட்சியின் கூட்டாளிகள் யார்?
முதலாளிகளுக்கு வழிவிட்டு மற்ற குழுக்களும், இதர வர்க்கங்களும், கண்ணை மூடிக்கொண்டு முதலாளிகள் பின்னால் அணி வகுக்க வேண்டுமென்பது மென்ஷ்விக்குகளின் பார்வை. பாட்டாளி வர்க்கமோ, விவசாயப் பிரிவுகளோ, இதர குழுக்களோ, புரட்சியில் முக்கிய இடத்தைப் பிடித்தால், ‘முதலாளிகள் மிரட்சி அடைந்து பின்வாங்கி விடுவார்கள், அதிலும் ஆயுதந்தாங்கிய எழுச்சி நடைபெற்றால், முதலாளிகள் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல தயக்கம் காட்டுவார்கள்’ என்ற பாணியில் மென்ஷ்விக்குகள் வாதிட்டனர்.
இந்தக் கருத்தை லெனின் ஏற்கவில்லை. அவர்களது நலன்களை காத்திட முதலாளிகள் புரட்சியை முன்கொண்டு செல்வார்கள்; நிச்சயமாக முதலாளிகள் முக்கியப் பங்காற்றும் புரட்சிதான், தற்போதைய ரஷ்ய கட்டமைப்பில் சாத்தியம் என்பதை போல்ஷ்விக்கும் அங்கீகரித்தனர்.
ஆனால், ஜாராட்சியை வீழ்த்த விரும்பும் அனைத்து சக்திகனையும் திரட்டி புரட்சியை நிகழ்த்தி, முன்னேறினால்தான் அடுத்த கட்டமான சோசலிசத்தை நோக்கிச் செல்ல முடியும் என்பதில் லெனினும், போல்ஷ்விக்குகளும் உறுதியாக இருந்தனர்.
ரஷ்யப் புரட்சியை நிகழ்த்த விரும்பும் சக்திகள் எவை என்பதையும், அவற்றை பாட்டாளி வர்க்கம் திரட்டிட வேண்டுமென்றும் லெனின் தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார். முதலில் எதிரிகள் யார் என்பதை அறிய வேண்டும்.
* சர்வாதிகாரம் ஆதிக்கம் செலுத்தும் ஜார் அரசு.
* அந்த அரசின் பக்கபலமாக இருக்கும் நீதிமன்றம்.
* காவல் துறை.
* அரசின் அதிகார வர்க்கம்
* அரசின் இராணுவம்.
* ஒரு பகுதி மேல்தட்டு வசதி படைத்த கூட்டம்
‘இந்த எதிரி வரிசை இருந்தபோதிலும், மக்களின் புரட்சி ஆவேசம் அதிகரிக்கும்போது, ராணுவத் துருப்புக்களின் ஜார் ஆட்சி மீதான விசுவாசம் தடுமாறும்; அதிகார வர்க்கமும் ஊசலாடும்’ என்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.
முதலாளிகள் சுதந்திரத்தைப் பற்றி பேசுவதோடு, மக்களுக்கு ஆதரவாகவும், புரட்சிக்கு ஆதரவாகவும் கூட பேசி வந்தனர். ஆனால் மார்க்சிஸ்ட்கள் முதலாளிகளின் இந்தப் பேச்சுக்களின் பின்னணியாக இருக்கும் அவர்களது வர்க்க சுயநலன்களை உணர வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார்.
புரட்சிக்கான முக்கியமான பிரிவாக விவசாயிகள் உள்ளனர். பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய கூட்டாளியாக அவர்கள் விளங்குகின்றனர்.
விவசாயிகள் என்று பேசும் போது அன்றைய ரஷ்யாவில் இருந்த நிலவுடைமையில் சிறிதளவு நிலம் வைத்திருப்போரும், நிலமில்லாமல் பண்ணையடிமைத்தனத்தில், நிலப்பிரபுக்ககளின் அடிமைகள் போன்று வாழும் விவசாயிகள் அடங்குவர். இந்தப் பிரிவினருக்கு புரடசியில் ஊசலாட்டம் வர வாய்ப்புண்டு. எனினும் முதலாளிகளின் ஊசலாட்டத்தோடு இதனை ஒப்பிட முடியாது.
விவசாயிகள் நிலங்கள் பெருமளவுக்கு நிலப்பிரபுக்களின் கையில் குவிந்திருப்பதை விரும்பவில்லை. நிலவுடைமையை, தனி உடைமையாக உள்ள விவசாயப் பண்ணைகளையும் தகர்த்து, அந்த சொத்துக்களை தங்களது உடைமையாக மாற்றவே விரும்புகின்றனர். அவர்களை பாட்டாளி வர்க்கம் வர்க்கக் கட்சிக்கு ஆதரவாக அணி திரட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களது வர்க்கக் கட்சியான போல்ஷ்விக் கட்சி, நிலவுடைமை யைத் தகர்க்கும் செயல்திட்டம் கொண்டது.
ஏற்கெனவே விவசாயிகள் போரட்டக்களத்தில் உள்ளனர். 1900 லிருந்து 1904 வரை 670 விவசாயிகள் எழுச்சிப் போரட்டங்கள் நடந்தள்ளன அனைத்துவிதமான பண்ணையடிமைத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கத் தயராக இருக்கும் விவசாயிகளிடம் புரட்சி மட்டுமே இதை சாதிக்கும் என்று பாட்டாளி வர்க்கம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்க அது வழிவகை செய்திடும்.
இந்த விவாதத்தின் வழியாக புரட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பிரிவினைத் திரட்டி பாட்டாளி வர்க்க மேலாண்மையை நிறுவுவது என்ற மார்க்சியக் கோட்பாட்டை லெனின் உருவாக்கி மார்க்சியத்திற்கு தத்துவப் பங்களிப்பு செய்துள்ளார். இது போன்ற புதிய தத்துவப் பங்களிப்புக்கள் இந்நூலில் உண்டு.
தற்காலிக அரசு
அந்த தற்காலிக அரசும், அரசில் கட்சி பங்கேற்பது குறித்தும் லெனின் விரிவாக எழுதியுள்ளார் ஜாராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு அமையும் தாற்காலிக அரசு, என்ன செய்ய வேண்டுமென்பதை லெனின் வரையறுத்துள்ளார்.
* அரசியல் அமைப்பு சட்ட அவை ஒன்று அமைக்கப்பட வேண்டும்
* சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
* ஏற்கெனவே சமூக ஜனநாயக கட்சி முன்வைத்துள்ள 8 மணி நேர வேலை உள்ளிட்ட குறைந்தபட்சத் திட்டதை அமலாக்க வேண்டும்.
இதுபோன்று ஜாராட்சி வீழ்ச்சிக்குப் பிறகு வரும் அரசின் தன்மை, இலக்குகள் குறித்து லெனின் அழுத்தமாக முன்வைத்தார். ஆனால் மென்ஷ்விக்குகள் வெறும் பாரளுமன்றம் இருந்தால் போதும்; அதில் நமது கோரிக்கைகளை பேச வாய்ப்பளித்தால் போதும் என்ற நிலைபாட்டில் இருந்தனர். இந்தப் போக்கினை லெனின் வன்மையாக கண்டித்தார்.
தற்காலிக அரசு அமையும் சூழலும், அந்த அரசின் உள்ளடக்கமும் சமூக ஜனநாயக கட்சி அந்த அரசில் பங்கேற்க வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தின. இதனையும் லெனின் துல்லியமாக விவரிக்கின்றார். ஆனால் மென்ஷ்விக்குகள் இதனை எதிர்த்தனர். முதலாளிகள் ஆட்சியில் இருந்து அவர்களை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டுமென்று அவர்கள் வாதிட்டனர். இது அவர்களது துரோகத்தை வெளிப்படுத்தியது.
* * * * * *
ரஷ்ய வரலாற்றில் லெனினது நூல் முக்கிய பங்காற்றியது. 1905க்குப் பிறகு ரஷ்யாவில் பல மாற்றங்கள் நடந்தன. போல்ஷ்விக்குகள் அவ்வப்போது தங்களது உத்தியை மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப செழுமைப்படுத்தி வந்துள்ளனர்.
நவம்பர் புரட்சி வரலாற்றை பயிலுகிறபோது, லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தொலைநோக்கு, நடைமுறை உத்திகளை எவ்வாறு உருவாக்கி, அமலாக்கினார்கள் என்பது மிக முக்கியமாக கற்றிட வேண்டிய பகுதி இதில் ஆழமான அறிவு பெறுவது இந்தியப் புரட்சிக்கும் உதவிடும்.