மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் …


பகத் சிங்

தமிழில்: ராமன் முள்ளிப்பள்ளம்

(தூக்கிலிடப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் பகத்சிங் சிங் எழுதிய இந்த ஆவணத்தை இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் நகல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. கீழே அதன் சுருக்கம் பிரசுரிக்கப்படுகிறது. – ஆசிரியர் குழு)

02.02.1931

அன்பார்ந்த தோழர்களே,
நமது இயக்கம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.  ஒரு வருட கால தீவிர போராட்டத்தின் பின் சட்டத் திருத்தங்கள் குறித்து சில அறுதியான முன் மொழிகள் வட்ட மேஜை மா நாட்டால் தயாரிக்கப்பட்டுள்ளது; இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்கப்பட்டுள்ளனர் * தற்போதைய சூழலில் தங்கள் இயக்கங்களைத் துறந்துவிட இதை அவர்கள் விரும்புகின்றனர், அவர்கள் இதை ஏற்கின்றனரா அல்லது எதிர்க்கின்றனரா என்பது நமக்கு தேவையற்ற ஒன்று. தற்போதைய இயக்கம் ஒரு வகையிலான சமரசத்தில்தான் முடியும். சமரசம் விரைவாகவோ, தாமதமாகவோ அமலாகும். சமரசம் என்பது பொதுவாக நாம் நினைக்கும் வகையில் வெட்கப்படத்தக்கதோ, கண்டிக்கத்தக்கதோ அல்ல. அரசியல் தந்திரங்களில் இது தவிர்க்கப்பட முடியாத ஒன்று.

கொடுங்கோலன்களை எதிர்க்கும் எந்த ஒரு தேசமும் துவக்கத்தில் தோல்வியை தழுவும்; தனது போராட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் சமரசங்கள் மூலமாக அரைச் சீர்திருத்தங்களை வென்றெடுக்கும. இறுதிக்கட்டத்தில் தேசத்தின் அனைத்து சக்திகளையும். சாதனங்களையும் முழுமையாக திரட்டிய பின்னரே அது கடைசித் தாக்குதலைத் தொடுத்து ஆட்சியாளர்களின் அரசாங்கத்தை தவிடு பொடியாக்க இயலும். அப்போதும் கூட சில தோல்விகள் சமரசத்தை நாடும்படி செய்யும்.
ரஷ்யாவில் நடந்தவற்றை பாருங்கள். 1905 ல் ரஷ்யாவில் ஒரு புரட்சிகர இயக்கம் வெடித்தது. எல்லா தலைவர்களும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர், லெனின் தான் மறைந்திருந்த வெளி நாட்டிலிருந்து திரும்பியிருந்தார். அவரே போராட்டத்தை வழி நடத்திக்கொண்டிருந்தார்.

***
அங்கே டூமா ( பாராளுமன்றம்) அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் டூமாவில் பங்கு வகிப்பதை ஆதரித்தார். இது 1907 நடந்தது. 1906 ல் உரிமைகள் கத்திரிக்கப்பட்ட டூமாவில் பங்கு கொள்வதை எதிர்த்தார். பிற்போக்கு தலை தூக்கியது ; லெனின் சோசலிச கருத்துகளை விவாதிக்க டூமாவின் அரங்கத்தை விரும்பினார்.
1917 புரட்சிக்குப் பின் போல்ஷ்விக்குகள் ப்ரெஸ்ட் லிடொவ்ஸ்க் உடன் பாட்டை கையெழுத்திட உந்தப்பட்டபோது லெனினை தவிர்த்து அனைவரும் அதை எதிர்த்தனர். ஆனால் லெனின் கூறினார், ‘’ அமைதி, மீண்டும் அமைதி எத்தகைய இழப்பு ஏற்படினும் ; ஜெர்மன் போர் பிரபுக்களுக்கு ரஷ்யாவின் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தாலும் கூட அமைதி’’ போல்ஷ்விக் எதிர்ப்பாளர்கள் லெனினது இந்த உடன்பாட்டை கண்டித்தபோது லெனின் கூறினார் போல்ஷ்விக்குகள் ஜெர்மானிய தாக்குதலை எதிர் கொள்ளமுடியாது போல்ஷ்விக் அரசாங்கத்தை முழுமையாக அழித்து கொள்வதை காட்டிலும் இந்த உடன்பாடே மேலானது என்றார்.

நான் சுட்டிக்காட்ட விரும்பியது என்னவென்றால் சமரசம் என்பது போராட்டம் வளர்ச்சியடைகையில் அவ்வப்போது பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு ஆயுதம். ஆனால் நம் முன் எப்போதும் இருக்க வேண்டியது இயக்கம். எந்த குறிக்கோளை சாதிக்கவேண்டி நாம் போராடுகின்றோமோ அது பற்றிய தெளிவு நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். இது நாம் இயக்கத்தின் தோல்விகளையும் வெற்றிகளையும் ஆய்வு செய்ய உதவுகிறது; நாம் எதிர்கால திட்டங்களை எளிதாக வகுக்க உதவுகிறது. திலக் அவர்களின் கொள்கை இலட்சியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது அதாவது அவர் தந்திரம் மிகச் சிறந்தது. உங்கள் எதிரியிடமிருந்து 16 ரூபாய் பெறுவதற்கு நீங்கள் போராடுகின்றீர்கள், உங்களுக்கு கிடைத்தது  ஒரு ரூபாய் மட்டுமே, அதை பெற்றுக்கொள்ளுங்கள், பாக்கிப் பணத்திற்காக போராடுங்கள். நாம் மிதவாதிகளிடம் காண்பது அவர்கள் கருத்து. அவர்கள் ஒரு ரூபாய் பெறுவதற்காக போராட்டத்தை துவக்குகின்றனர் ஆனால் அதையும் அவர்களால் சாதித்து பெற  முடியவில்லை. புரட்சியாளர்கள்  தாங்கள் முழுப் புரட்சிக்காக போராடுகின்றனர் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
அவர்கள் கைகளில் அதிகாரம் அதன் மீது முழு கட்டுப்பாடு.. சமரசத்தின் பால் ஐயம் எழுவதற்கு காரணம் பிற்போக்குவாதிகள் சமரசத்திற்கு பிறகு புரட்சிகர சக்திகளை களைத்து விடுகின்றனர். ஆனால் திறமை மிக்க வீரம் மிக்க புரட்சியாளர்கள் இயக்கத்தை இத்தகைய இடர்களிலிருந்து காக்க முடியும். இத்தகைய தருணங்களில் நாம் மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும், உண்மையான பிரச்னைகளின் குழப்பங்களை தவிர்க்க வேண்டும், குறிப்பாக குறிக்கோளைப் பற்றிய குழப்பம்.. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர்கள் உண்மையான போராட்டத்திற்கு துரோகம் இழைத்து ஏகாதிபத்திய மோசடிப் பேர்வழிகளாக தரம் தாழ்ந்து போயினர். என் கருத்து முலாம் பூசப்பட்ட ஏகாதிபத்திய தொழிலாளர் தலைவர்களை காட்டிலும் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் எவ்வளவோ மேல். அணுகுமுறைத் தந்திரம் பற்றி நாம் லெனின் அவர்களது வாழ்வுக் காலக் கருத்துகளை படிக்க வேண்டும். சமரசம் பற்றிய அவரது ஆணித்தரமான கருத்தை அவரது ‘’ இடதுசாரி கம்யூனிஸம்’’ என்ற கட்டுரையில் பார்க்கலாம்.

தற்போதைய இயக்கம் அதாவது போராட்டம் நிச்சயமாக ஏதேனும் வகையான சமரசத்தில் அல்லது தோல்வியில் முடியும் என்பதையே நான் கூறினேன்.
இதை நான் ஏன் கூறினேன் என்றால் என் கருத்துப்படி உண்மையான புரட்சியாளர்கள் இந்த முகாமினுள் வரவேற்கப்படவில்லை. இந்தப் போராட்டமானது நடுத்தர வர்க்கத்தினர், கடைக்காரர்கள் மற்றும் சில முதலாளிகளை சார்ந்து இருக்கிறது. இந்த இரு வர்க்கத்தினரும் குறிப்பாக கடைசியாக கூறப்பட்ட வர்க்கத்தினர் தங்கள் உடமைகளையும், சொத்துகளையும் இழக்கும் வகையான எந்த போராட்டத்தையும் ஏற்க எப்போது முன் வரமாட்டார்கள். உண்மையான புரட்சிகர சேனை கிராமங்களிலும், தொழிற்சாலைகளிலும் உள்ளது; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். ஆனால் நமது முதலாளித்துவ தலைவர்கள் இவர்களை கையாளும் துணிவை பெற்றவர்கள் அல்ல. தூங்கும் சிங்கத்தை அதன் உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் அது பிறகு நம் தலைவர்கள் அவர்களது குறிக்கோளை அடைந்த பின் அடக்கமுடியாததாக ஆகிவிடும். 1920 ல் அகமதாபாத் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தனது முதல் அனுபவத்திற்கு பிறகு மகாத்மா காந்தி இவ்வாறு அறிவித்தார் ‘’ நாம் தொழிலாளர்களை பயன்படுத்த முடியாது, ஆலைத் தொழிலாளர்களை அரசியலுக்கு பயன்படுத்துவது ஆபத்தானது’’ ( தி டைம்ஸ் மே 1921) அப்போதிலிருந்து அவர்களை அவர் எப்போதும் அணுகத் துணியவில்லை. விவசாயிகளைப் பார்ப்போம். பிரம்மாண்டமான விவசாயி வர்க்கம் அந்நிய ஆதிக்கத்தை மட்டுமல்லாது நிலப்பிரபுத்துவ கட்டுகளையும் தகர்க்க எழுச்சி கொண்டதை கண்டு இவர்கள் அஞ்சியது 1922 பர்தோலி தீர்மானங்களில் அது தெளிவாகத் தெரியும்.

நமது தலைவர்கள் விவசாயிகளுக்கு அடிபணிவதைக்காட்டிலும் ஆங்கிலேயருக்கு சரண் அடைவதை காண முடியும். பண்டிதர் ஜவஹர்லாலை விட்டுவிடுங்கள். தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஸ்தாபனப்படுத்த முயற்சித்த ஏதேனும் ஒரு தலைவரை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா ? இல்லை அத்தகைய அபாயத்தை அவர்கள் எப்போதும் ஏற்கமாட்டார்கள். இங்கேதான் அவர்கள் பலவீனம். ஆகவேதான் நான் கூறுகிறேன் அவர்கள் முழுப்புரட்சியை திட்டமிடவில்லை. பொருளாதார நிர்வாக வற்புறுத்தல்கள் மூலம் மேலும் சில சீர் திருத்தங்களை, சலுகைகளை இந்திய முதலாளிகளுக்கு பெற்றுத்தருவதே அவர்களின் நம்பிக்கை.
புரட்சி ஓங்குக என முழக்கமிடும் இளம் ஊழியர்கள் முறையாக அமைப்புகளில் திரட்டப்பட்டவர்கள் அல்ல, தாங்களாக இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வலுப் பெற்றவர்கள் அல்ல. உண்மை என்னவெனில் பண்டித மோதிலால் நேருவை தவிர்த்து தங்கள் தோள்களில் பொறுப்பை ஏற்கும் துணிவு நமது பெரும் தலைவர்களில் யாருக்கும் இல்லை.. ஆகவேதான் அவ்வப்போது எந்த நிபந்தனையும் இன்றி மகாத்மாவிடம் சரணடைகிறார்கள். வேற்று கருத்து இருந்தும் கூட அவரை எப்போதும் எதிர்ப்பதில்லை, ஏனெனில் மகாத்மாவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் நான் புரட்சி வேண்டும் இளம் ஊழியர்களை எச்சரிக்கிறேன், மோசமான காலம் வரவிருக்கிறது. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இல்லையெனில் குழம்பிப்போவீர்கள் அல்லது மனம் ஒடிந்து போவீர்கள். மாபெரும் காந்தி அவர்களின் இரு போராட்டங்களின் அனுபவத்திற்கு பிறகு தற்போதைய சூழ் நிலை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் ஒரு தெளிவான கருத்து வகுப்பதில் மேலான நிலையில் உள்ளோம்.
மிக மிக எளிதான முறையில் கருத்தை முன் வைக்க என்னை அனுமதியுங்கள். ’புரட்சி ஓங்குக’ (இன்குலாப் ஜிந்தாபாத்) என நீங்கள் முழக்கம் எழுப்புகின்றீர்கள். நீங்கள் உண்மையிலேயே புரட்சியை நாடுகின்றீர்கள் என நினைத்துக்கொள்கிறேன். சட்டசபை குண்டு வழக்கில் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டபடி புரட்சி என்ற பதத்தின் எங்கள் விளக்கம் தற்போதைய சமூக அமைப்பை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு அதன் இடத்தில் ஒரு சோசலிச அமைப்பை நிர்மாணிப்பதே. இதற்காக நமது உடனடி குறிக்கோள் அதிகாரத்தை அடைவதே.
உண்மை என்னவெனில் அரசும் அரசாங்க இயந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் உள்ள ஒரு உபகரணமே அதன் வர்க்க நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும். நாம் அந்த அதிகாரத்தை பறித்து நமது இலட்சியத்திற்காக பயன்படுத்த வேண்டும் அதாவது மார்க்சிய அடிப்படையில் சமூகப் புனர் கட்டுமானம். இதற்காக அரசாங்க இயந்திரத்தை அடக்குவதற்கு நாம் போரிட்டுக்கொண்டிருக்கிறோம். வழி நெடுக நமது சமூக திட்டத்திற்கான சாதக சூழ் நிலையை உருவாக்கும் பொருட்டு மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். இந்த போராட்டங்களில் அவர்களுக்கு பெரிதும் பயிற்சியும் கல்வியும் புகட்ட முடியும்.
இந்த தெளிவிற்கு முன் அதாவது நமது உடனடி மற்றும் இறுதி குறிக்கோள் தெளிவான பின் தற்போதைய சூழ் நிலை பற்றிய ஆய்வை தொடங்குவோம். சூழ் நிலையை ஆய்வு செய்கையில் நாம் எப்போதும் மிகுந்த வெளிப்படையுடனும் கடமையுடனும் செயல்பட வேண்டும்.
***
எந்த ஒரு புரட்சிகர கட்சிக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம் அவசியமாகிறது. புரட்சி என்றால் செயல்பாடு என்பது உங்களுக்கு தெரியும். அதன் பொருள் விழிப்புணர்வுடன், ஸ்தாபன ரீதியாக, ஒழுங்குமுறையுடன் கொண்டுவரப்படும் மாற்றம்; திடீரென, ஏற்படும் ஸ்தாபனமற்ற உணர்ச்சிவசப்பட்ட கலக நொறுங்குதல் அல்ல புரட்சி. ஒரு திட்டத்தை வகுக்க பின் வருபவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
1.இலட்சியம்.
2.எங்கிருந்து தொடங்குவது; தற்போதைய சூழ் நிலை என்ன
3.செயல்முறை அதாவது செயல்முறைகள், செயல் வடிவம்.
இம்மூன்று குறித்து தெளிவான கருத்து இல்லாமல் திட்டம் குறித்து விவாதிக்க முடியாது.
தற்போதைய சூழ் நிலை குறித்து ஓரளவு விவாதித்துள்ளோம். இலட்சியம் குறித்தும் ஓரளவு பேசியுள்ளோம். நாம் விரும்புவது தவிர்க்கப்படமுடியாத அரசியல் புரட்சிக்கு முன்னோடியான சோசலிச புரட்சி. இதுவே நாம் வேண்டுவது. அரசியல் புரட்சி என்றால் அரசு அல்லது அதிகாரம் பிரிட்டிஷார் கைகளிலிருந்து இந்தியர்கள் கைகளுக்கு வருவதல்ல மாறாக யார் நம்முடன் இறுதி இலட்சியம் ஈடேறும் வரை உள்ளனரோ அந்த இந்தியர்களின் கைகளுக்கு குறிப்பாக புரட்சிகர கட்சிக்கு ஏகோபித்த மக்கள் ஆதரவுடன் அதிகாரம் வருவதுதான் புரட்சி. அதன் பிறகு தீவிர முயற்சியுடன் ஒட்டு மொத்த சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் புணர் நிர்மாணம் செய்யத் தொடங்க வேண்டும்.
இத்தகைய புரட்சி உங்களது இல்லையெனில் தயவு கூர்ந்து புரட்சி ஓங்குக என முழங்குவதை நிறுத்துங்கள். புரட்சி என்ற சொல் மிக உன்னதமானது அதை மட்டமானதாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்துவது நம்மால் ஆகாது. ஆனால் நீங்கள் தேசிய புரட்சி என்ற எண்ணம் கொண்டிருந்தால் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் வகையில் இந்திய குடியரசை நிர்மாணிப்பது உங்கள் இலட்சியம் என்றால் இத்தகைய புரட்சியை கொண்டு வர எந்த சக்திகளை நீங்கள் சார்ந்து இருப்பீர்கள் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள். தேசியப் புரட்சியோ அல்லது சோசலிசப் புரட்சியோ எந்த ஒரு புரட்சியை கொண்டு வரவும் நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். இந்த இரண்டு சக்திகளையும் அமைப்பு ரீதியாக திரட்ட காங்கிரஸிற்கு துணிவு கிடையாது. இதை நீங்கள் அவர்கள் இயக்கத்தில் பார்த்திருப்பீர்கள். இந்த சக்திகள் இல்லாமல் அவர்கள் நாதியற்றவர்கள் என்பதை மற்றவர்களை காட்டிலும் அவர்கள் நன்றாக அறிவார்கள். முழு சுதந்திரம் என்ற தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றியபோது அவர்கள் பொருள்படுத்தியது புரட்சி ஆனால் அவர்கள் வேண்டியது புரட்சி அல்ல. இதை அவர்கள் இளைஞர்களின் உந்துதலால் செய்தனர், மேலும் இதை அச்சுறுத்தலாக்கி அவர்களின் ஆசையான டொமினியன் அந்தஸ்தை பெற சாதிக்க விரும்பினர். இதை நீங்கள் சுலபமாக மதிப்பிடலாம் அவர்களுடைய கடைசி 3 மாநாட்டுத் தீர்மானங்களை ஆய்வு செய்தால் அதாவது மெட்ராஸ்;  கல்கத்தா; லாகூர் மாநாடுகள். கல்கத்தா மாநாட்டில் 12 மாதங்களுக்குள் டொமினியன் அந்தஸ்த்திற்காக தீர்மானம் நிறைவேற்றினர் அது தவறினால் முழு சுதந்திரம் வேண்டும் தீர்மானத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்றனர்; ஆனால் டிசம்பர் 31 , 1929 நடு நிசி வரை பரிசுக்காக விசுவாசமாக காத்திருந்தனர். பின்னர் சுதந்திரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான தர்ம சங்கடத்தில் இருப்பதை உணர்ந்தனர்; ஆனால் அது அவர்கள் நோக்கம் அல்ல. இருந்தும் கூட (சமரசத்திற்கான) கதவு திறந்தே உள்ளது என்பதை மகாத்மா ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை. இதுதான் உண்மையான விசுவாசம். துவக்கத்திலேயே அவர்கள் அறிவார்கள் அவர்கள் இயக்கம் சமரசத்தில் மட்டுமே முடியும் என்பதை. இந்த அரை வேக்காட்டுத் தனத்தைத்தான் நாம் வெறுக்கிறோம், போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஏற்படும் சமரசத்தை அல்ல. எப்படியானாலும் நாம் விவாதித்துக் கொண்டிருந்தது புரட்சிக்காக எந்த சக்திகளை சார்ந்திருக்க முடியும் என்பதை குறித்து. ஆனால் நீங்கள் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களது ஆதரவை திரட்டப் போகிறோம் என்று கூறினால் நான் உங்களுக்கு கூறுவேன் நீங்கள் உணர்ச்சி பொங்கும் சொற்களுடன் அவர்களை முட்டாளாக்க முடியாது. எந்த புரட்சிக்கு அவர்கள் சேவையை வேண்டுகின்றீர்களோ அந்த புரட்சியால் அவர்களுக்கு என்ன நன்மை என  அவர்கள் வெளிப்படையாக கேட்பார்கள்; பிரபு ரீடிங் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதற்கும், அல்லது புருஷோத்தம் தாஸ் தாகுர் தாஸ் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் அவர்களை பொறுத்தமட்டில்? பிரபு இர்வின் இடத்திற்கு சர் தேஜ் பஹதூர் சப்ரு வந்தால் அது விவசாயிக்கு என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது. அவர்களுடைய தேச உணர்ச்சிக்கு அழைப்பு விடுவது அர்த்தமற்றது. அவர்களை உங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்த கூடாது. புரட்சி அவர்களுடையது அவர்களின் நன்மைக்காக என்பதை நாணயமாக தீவிரமாக அவர்களுக்கு பொருள்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி; பாட்டாளி வர்க்கத்திற்காக புரட்சி.
உங்களுடைய குறிக்கோளை பற்றிய தெள்ளத்தெளிவான கருத்தை வகுத்தெடுத்த பின் உங்கள் சக்திகளை சரியான தீவிரத்துடன் அத்தகைய ஒரு புரட்சிக்காக அமைப்பு ரீதியாக திரட்ட முடியும். இப்போது நீங்கள் இரண்டு வெவ்வேறான கட்டங்களை கடந்தாக வேண்டும். முதலாவது தயாரிப்பு அடுத்தது செயல்பாடு.

தற்போதைய இயக்கம் முடிந்த பிறகு சில நேர்மையான புரட்சிகர ஊழியர்கள் மத்தியில் வெறுப்பும், தோல்வி மனப்பான்மையும் ஏற்படுவதை காண்பீர்கள். ஆனால் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சிவசப் படுவதை த    ள்ளி வையுங்கள். யதார்த்தத்தை சந்திக்க தயாராகுங்கள். புரட்சி என்பது கடினமான கடமை. புரட்சி எந்த ஒரு மனிதனின் சக்திக்கும் அப்பாற்பட்டது. அதை ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்துவிட முடியாது. அது ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார சூழ் நிலையில் ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ் நிலை தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதுதான் ஒரு ஸ்தாபனப்படுத்தப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும், சக்திகளை ஸ்தாபனப் படுத்துவதும் ஒரு பெரும் கடினமான செயல். அதற்காக புரட்சிகர ஊழியர்கள் பெரும் தியாகங்கள்  மேற்கொள்ள வேண்டும். நான் இதை தெளிவுபடுத்தி கொள்கிறேன், நீங்கள் ஒரு வியாபாரி, அல்லது வசதியில் ஊன்றிப்போனவர்; குடும்பஸ்தர், நீங்கள் நெருப்புடன் விளையாடாதீர்கள். தலைவர் என்ற தகுதியில் உங்களால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மாலை நேரங்களில் வசனங்களை பேசக்கூடிய எண்ணற்ற தலைவர்களை நாம் ஏற்கனவே பெற்றுள்ளோம்.அவர்களால் பயனில்லை. லெனினுக்கு பிடித்தமான சொல்லை பயன்படுத்தி கூற வேண்டுமானால் நமக்கு தொழில் முறை புரட்சியாளர்கள் வேண்டும். புரட்சியை தவிர்த்து வேறு ஆசைகளோ அல்லது வாழ்க்கை தேவைகளோ இல்லாத முழு நேர ஊழியர்கள். இத்தகைய ஊழியர்கள் எந்த அளவு அதிகமாக ஒரு கட்சியில் ஸ்தாபனபடுத்தப்பட்டுள்ளனரோ அந்த அளவு அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகம்.
திட்டமிட்டபடி தொடங்க உங்களுக்கு மிகவும் தேவைப்படுவது மேலே கூறப்பட்டது போன்ற ஊழியர்கள்; தெளிவான கருத்தும், கூர்மதியும்; முன் முயற்சியும் உடனடி தீர்வுகளும்  கொண்டவர்கள். கட்சியில் தீவிர கட்டுப்பாடு இருக்க வேண்டும், அது ஒரு தலை மறைவு கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை மாறாக வெளிப்படையானதாக இருக்க வேண்டும். தன்னார்வத்துடன் சிறைக்கு செல்லும் கொள்கை முற்றிலும் கைவிடப்பட வேண்டும். அத்தகைய கொள்கை பல ஊழியர்களை தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளும். அவர்கள் தீவிர ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.  இத்தகைய ஊழியர்களே அருமையான தலைவர்களை உண்மையான வாய்ப்பிற்காக உருவாக்குவார்கள்.
இளைஞர்கள் இயக்கம் மூலம் சேர்க்கப்படமுடிந்த ஊழியர்களே கட்சிக்கு தேவை. எனவே இளைஞர் இயக்கமே திட்டத்தின் துவக்கமாக இருக்கிறது. இளைஞர் இயக்கம் விவாத வட்டங்களை; வகுப்பு சொற்பொழிவுகளை; துண்டுப்பிரசுரங்களை; புத்தகங்களை; மாத ஏடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் ஊழியர்களை சேர்க்கவும் பயிற்சி கொடுக்கவும் இதுவே சிறந்த முறை.
எந்த இளைஞர்களின் கருத்துகள் முதிர்ச்சியடைந்துள்ளதோ; யார் தங்கள் வாழ்வை புரட்சிக்காக அர்ப்பணிக்க தயாராக உள்ளனரோ அவர்களை இளைஞர் அணியிலிருந்து கட்சிக்கு மாற்ற வேண்டும். கட்சி ஊழியர்கள் இளைஞர் இயக்கத்தை வழி நடத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சியின் முதன்மையான செயல் மக்களிடையே பிரச்சாரம் செய்வதே. இது மிகவும் அத்தியாவசியமானது. கத்தார் கட்சியின் (1914−15) தோல்விக்கு அடிப்படை காரணங்கள் அவர்களின் அறியாமை, மக்களிடம் பாராமுகம்., மக்களின் எதிர்ப்பு. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தீவீர ஆதரவைப் பெற்று அவர்களை ஸ்தாபனப்படுத்துவதும் மிக அவசியமாகிறது.. கட்சியின் பெயர் கம்யூனிஸ்ட் என்றே இருக்க வேண்டும். உறுதியான கட்டுப்பாட்டுடைய ஊழியர்களை கொண்ட இக்கட்சி எல்லா மக்கள் இயக்கங்களையும் நடத்த வேண்டும். இக்கட்சி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகளை ஸ்தாபனபடுத்த வேண்டும், தொழிற்சங்கங்கள் கட்ட வேண்டும்; ஏன் முடிந்தால் காங்கிரஸின் தலைமையை பிடிக்க வேண்டும்; மற்ற ஏராளமான அரசியல் அமைப்புகளை வென்றெடுக்க வேண்டும். அரசியல் விழிப்புணர்வை தேச விழிப்புணர்வாக மட்டுமல்லாது வர்க்க விழிப்புணர்வாக உருவாக்க வேண்டி பெரிய அளவிலான நூல் பதிப்புகளின் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.சோசலிச கொள்கையை பற்றிய விளக்கம் மக்களை அடைய வேண்டும்; அது பரவலாக செல்ல வேண்டும். எழுதப்படுவது எளிமையாகவும் புரியும்படியாகவும் இருக்க வேண்டும்.
***
வெளிப்பார்வைக்கு நான் ஒரு பயங்கரவாதி போல் நடந்து கொண்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. நான் ஒரு புரட்சியாளன், ஒரு நீண்ட கால போராட்டத்தை குறித்து விவாதிக்கும் திடமான கருத்துகள் கொண்ட புரட்சியாளன். என் தோளோடு தோள் நின்ற ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற  நண்பர்கள் சிலர் குற்றம் சாட்டலாம் நான் சிறைப்பொந்தில் தள்ளப்பட்டதால் இப்படி பேசுகிறேன் என. அது உண்மை அல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது கொண்டிருந்த அதே கருத்துகளை, அதே மன உறுதியை, அதே உத்வேகத்தை , அதே துடிப்பை; சொல்லப்போனால் இன்னும் அதிகமாக தீர்மானமாகப் பெற்றுள்ளேன். ஆகவே என் கருத்துகளை படிப்போரை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன். வரிகளுக்கு இடையே படிக்க முயற்சிக்காதீர்கள். எனக்கு உள்ள அனைத்து வலுவுடன் கூறுகிறேன் நான் பயங்கரவாதி அல்ல அப்படி எப்போதும் இருக்கவில்லை. ஒருவேளை துவக்கத்தில் அப்படி இருந்திருக்கலாம். இத்தகைய செயல்களின் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதில் நான் தெளிவுடன் உள்ளேன். ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைகளை மதிப்பிடலாம். நமது எல்லோரின் செயல்பாடுகளும் ஒரு குறிக்கோளை நோக்கியிருந்தது; நம்மை மாபெரும் இயக்கத்தின் இராணுவக் கிளையுடன் அடையாளம் கண்டு கொள்வது.. என்னை யாரேனும் தவறாக புரிந்து கொண்டிருந்தால் அவர்கள் தங்களை திருத்திக் கொள்ளட்டும். குண்டுகளும், துப்பாக்கிகளும் பயனற்றவை என நான் கூறவில்லை மாறாக அவை பயனுள்ளவை. ஆனால் கூற விரும்பியது குண்டுகள் மட்டும் எறிவது பயனற்றது, சில சமயங்களில் ஆபத்தானது கூட..  கட்சியின் ராணுவக்கிளை தன் கட்டுப்பாட்டில் போர் தளவாடங்களை சில நெருக்கடி காலத்திற்காக எப்போதும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அது கட்சியின் அரசியல் செயல்களை ஆதரிக்க வேண்டும். அது தன்னிச்சையாக சுதந்திரமாக செயல் படக்கூடாது அது முடியாது.
மேலே கூறப்பட்ட முறைகளில் கட்சி செயல்பட துவங்க வேண்டும். அவ்வப்போது நடத்தப்படும் கூட்டங்கள்  மாநாடுகள் மூலமாக கட்சி ஊழியர்களுக்கு எல்லாப் பிரச்னை குறித்தும் அறிவும் தெளிவும் புகட்ட வேண்டும்.
இத்தகைய முறைகளில் நீங்கள் துவங்க வேண்டுமானால் நீங்கள் மிகுந்த கண்ணியமுடன் இருக்க வேண்டும். காந்திஜியின் சொர்க்க வாக்குறுதியான ஒரு வருடத்திற்குள் அடையவுள்ள இலட்சிய சுயராஜ்யத்திலிருந்து பத்து வருடங்களில் நம் புரட்சி என்பது போன்ற இளம் பருவ கனவுகளை தூர எறியுங்கள். அதற்கு பொங்கும் உணர்ச்சியும் தேவையில்லை, சாவும் தேவையில்லை, தொடர்ந்து போராடும், அல்லலுறும், தியாக வாழ்க்கை முறை தேவை. முதலில் உங்கள் தனிமனித அபிமானத்தை நசுக்குங்கள். தனிமனித சொகுசு பற்றிய கனாக்களை உதறி வீசுங்கள். பிறகு செயல்பட துவங்குங்கள். அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டும். அதற்கு தேவை வீரம், தளராத தன்மை, மிக உறுதியான தீர்மானம். எத்தகைய இன்னலும் இடர்ப்பாடும் உங்களை சோர்ந்து போக வைக்காது. எந்த ஒரு தோல்வியும், துரோகமும் உங்கள் மனத்தை முறிக்காது. உங்கள் மீது திணிக்கப்பட்ட எந்த ஒரு ஆபத்தும் உங்களுள் உள்ள புரட்சியாளனை ஒழித்துவிட  முடியாது. இன்னல்கள் தியாகங்கள் நிறைந்த சோதனைகள் வழியில் நீங்கள் வெற்றியடைவீர்கள். இத்தகைய தனித்தனி வெற்றிகளே புரட்சியின் செல்வங்கள்.
புரட்சி ஓங்குக
பகத்சிங்



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: