– தோழர். சீனிவாசராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மத்தியக் குழு உறுப்பினர்
தோழர்களே!
கொல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளீனம், கட்சி அணிகளுக்கு தத்துவார்த்த கல்வி அளிப்பது குறித்து விரிவாக விவாதித்துள்ளது 12 பாராக்களில் கட்சி கல்வி குறித்து பிளீனம் அறிக்கை பேசுகிறது. தத்துவார்த்த கல்வி அளிப்பதன் முக்கியத்துவத்தை அது சுட்டிக்காட்டுகிறது.
கற்பித்தலில் பல்வேறு முறைகள் உள்ளன. நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை. அந்த முறையில் கற்பிப்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரில் தத்துவம் தான் நமது அடிப்படையான ஆயுதம் ஆகும். நமது நாட்டு விடுதலைக்கு பிறகான ஆண்டுகளில் இந்திய ஆளும் வர்க்கத்தில் பலம் கூடிக்கொண்டே வந்திருக்கிறது. அவர்களை எதிர் கொள்ள நமது அரசியல் கல்வி போதுமான அளவு இல்லை. வலுவான தத்துவார்த்த போர் நடத்த நமது அரசியல் கல்வியை பலப்படுத்த வேண்டியள்ளது.
இன்றைக்கு ஆளும் வர்க்கத்தின் பல்வேறு சவால்களை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமான சவால்கள் நான்கு
- உலகமய சூழல்
- பின் நவீனத்துவம் மற்றும் அடையாள அரசியல்
- மதவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள்
- Post Truth-sm
இதில் நான்காவதாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு புதிய வார்த்தை ஆகும். ஆக்ஸ்போர்டு பொருளகராதி (டிக்ஸ்னரி) 2016ஆம் ஆண்டின் சர்வதேச வார்த்தையாக (word of the year 2016) அவ்வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது. அதன் பொருள் ஒரு விஷயத்தில் உள்ள உண்மைகளை மறைத்து உணர்ச்சிகளை முன்வைப்பது. உணர்ச்சி பூர்வமானதாக அவ்விஷயத்தை மாற்றுவது ஆகும். நமது பிரதமர் மோடி இன்றைக்கு அந்த வித்தையை தான் கையாண்டுவருகிறார். உத்திரபிரதேசம் மாநிலம் தாத்ரியில் என்ன நடந்தது என்ற பார்த்தோம். மாட்டுக்கறி வைத்து இருந்ததாகச் சொல்லி அக்லாக் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். முதியவரை அடித்துக் கொன்றது பற்றி அப்போது விவாதம் நடைபெறவில்லை. மாட்டுக்கறி வைத்து இருந்தால் ஒருவரை கொலை செய்யலாம் என்பதாக விவாதம் திசை மாற்றப்பட்டது. மாட்டுக்கறி வைத்து இருப்பது கொலைக்கு ஆளாகும் அளவிற்கான குற்றம் என்பதாக வெகுமக்களின் உளவியலை வடிவமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா மரணமடைந்த போது, அவரது இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்வது குறித்தும், அவரது சாவிற்கான காரணங்கள் குறித்தும் பேசவேண்டிய நேரத்தில், அவர் தலித்தா? இல்லையா? என்று விவாதம் திசைதிருப்பப்பட்டது. ஜவகர்லாஸ் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டபோதும், ஜனநாயக உரிமைகள் குறித்து விவாதிக்க வேண்டிய நேரத்தில் அவர் கைதை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தேசதுரோகிகள், என்று முத்திரை குத்தப்பட்டு விவாதம் மடைமாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டதாக சொல்லப்பட்டது கூட போலியான வீடியோ பதிவு என தெரிய வந்த பிறகும், தேசதுரோகிகள் முத்திரை குத்துவதை அவர்கள் கைவிடவில்லை. இன்றைக்கு முன்வந்துள்ள பணமதிப்பு நீக்க விவகாரம் கூட, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்ப்பவர்கள் எல்லோரும் கருப்பு பணத்திற்கு ஆதரவானவர்கள் என்று பிரதமர் பேசுகிறார்.
உண்மையை மறைத்து அதை திசைதிருப்ப, உணர்ச்சிபூர்வமான விஷயத்தை பயன்படுத்துவதை பாஜகவினரும், சங் பரிவாரங்களும் வழக்கமாக கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தனது தேர்தல் உத்தியாக இதைத்தான் கையாண்டார். ‘Post Truth-sm’ என்ற வார்த்தை 1992 ஆம் ஆண்டே அறியப்பட்டிருந்தாலும் ஆக்ஸ்போர்டு சொல்லகராதி / பொருளகராதி அறிவித்த பின்புதான் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
நாம் நமது தத்துவார்த்தப் போராட்டத்தை இத்தகைய சூழலில்தான் நடத்த வேண்டியுள்ளது. சோவியத் யூனியன் பின்னடைவுக்கு பிறகு. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில், நாம் தாக்குதல் முறையிலிருந்து தடுப்பு முறைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நாம் வலுவான தத்துவார்த்த போராட்டத்தை இன்றைக்கு நடத்த வேண்டியுள்ளது.
உலகமயத்தை நாம் இன்று பரிசீலித்தோம் என்றால், அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அந்தக் கொள்கையை, அதே அமெரிக்காவில் எதிர்த்து பிரச்சாரம் செய்த ட்ரம்ப் தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்கா போட்ட ஒப்பந்தங்களை அவர் விமர்சித்து பிரச்சாரம் செய்தார். மெக்ஸிகோவின் எல்லைகளை மூடுவேன் என்றார். வெளிநாட்டு தொழிலாளர்களால் தான் வேலையில்லா திண்டாட்டம் பெருகியது என்றும் சொன்னார். இதனால் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களே அவருக்கு வாக்களித்துள்ளனர்.
பிரிட்டனில் ப்ரெக்சிட் வாக்கெடுப்பின்போதும் இதுபோலத்தான் நடந்தது. தீவிர வலதுசாரிகள் இடதுசாரித் தோற்றம்காட்டினர், மக்கள் ஆதரித்தனர். ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இன்று இதுதான் நிலை. பணக்கார நாடுகளில் உலகமயம் எதிர்மறை விளைவுகளை உலகமயத்தை எதிர் வலுவான தத்துவார்த்த போராட்டத்தை நாம் நடத்த வேண்டியுள்ளது. இல்லையென்றால் வலதுசாரி சக்திகள் அந்த சூழலை பயன்படுத்திக் கொள்வார்கள். இன்றைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதாரச் சூழலுக்கு மாற்று சோசலிசம் தான் என நாம் தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நமது கொல்கத்தா பிளீனம் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இன்றைய திட்டவட்டமான நிலைமைகளை, திட்டவட்டமாக ஆய்வு செய்திட, ஒரு மார்க்சிஸ்டுக்கு அரசியல், தத்துவார்த்த கல்வி உதவி செய்திடும், கட்சிக்குள் தலைதூக்கும் நாடாளுமன்ற வாதம் போன்ற பலவீனங்களை எதிர்கொள்ளவும் தத்துவார்த்தப் போரினை நாம் நடத்த வேண்டியுள்ளது. அகில இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் தத்துவார்த்த கல்வியளிப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசியல், தத்துவார்த்த கல்வி அளிப்பதில் நாம் எதிர்கொள்ளும் முக்கியமான பலவீனம் என்பது, நமக்கு முன்னுள்ள நடைமுறை வேலைகளைக் கணக்கில் கொண்டு, அரசியல் கல்விக்கான எற்பாட்டைத் தள்ளிப்போடுவது ஆகும். முன்னுக்குள்ள வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, பிறகு பார்க்கலாம் என்று அரசியல் வகுப்புகளுக்கான ஏற்பாட்டை தள்ளிப்போடுவது அல்லது வகுப்புகளுக்கான நாட்களை குறைப்பது நடக்கிறது. இதில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தத்துவார்த்த கல்வியைவிட வேலை முக்கியமா? என்ற நாம் கேட்கும் போதே வேலையா? கல்வியா? என்று இரு கேள்விகள் முன்னுக்கு வரும். இயக்கவியல் அணுகுமுறையில் நாம் பார்த்தோம் என்றால், தத்துவம் இல்லாத நடைமுறை இருட்டறையில் நடப்பது போன்றது. எங்கே செல்கிறீர்கள் என்று தெரியாமலேயே நடந்து கொண்டிருப்பதற்கு சமம்.
தோழர் கிராம்ஸி சொல்வார் ’மார்க்சியம் என்பதே நடைமுறைக்கான தத்துவம்’ என்று. அது வேதாந்தம் போன்றது கிடையாது. ‘உமர் முக்தர்’ என்ற திரைப்படம் பார்த்தேன். அதிலே ஒரு காட்சியில் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த போர் நடந்து கொண்டிருக்கும். போர் நடக்கும் போதே தொழுகைக்கான நேரம் வரும் அவர்கள் நேரம் ஒதுக்கி தொழுவார்கள் அது அவர்கள் நம்பிக்கையோடு தொடர்புடையது என்றாலும் போர்க்காலங்களில் கூட அவர்களால் நேரம் ஒதுக்க முடிகின்றது.
சீனப்புரட்சியின் போது தோழர் மாவோ தலைமையில் நெடும் பயணம் நடந்து கொண்டிருக்கும்போது, அப்பயணத்தின் இடையிடையே அரசியல், தத்துவார்த்த வகுப்புகளை நடத்தினார்கள், ஒரு மாதகால அரசியல் வகுப்பும் கூட நடைபெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோதும் கூட மேதின அணிவகுப்பு நடந்தது, அதில் தோழர் ஸ்டாலின் கலந்து கொண்டு மிகச் சிறந்த உரையை ஆற்றினார். அணிவகுப்பில் கலந்து கொண்டோரை உத்வேகம் அடையச் செய்த உரையாக அது இருந்தது. தோழர் பகத்சிங்கை நமக்கு தெரியும். தூக்கு மேடைக்கு செல்லும் நேரம் வரை அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்தர்.
நமது கட்சி வரலாற்றில் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும், சதி வழக்குகளை நாடு முழுவதும் நமது தோழர்கள் சந்தித்துக் கொண்டிருந்த நேரங்களில் கூட அரசியல் வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. அப்போதெல்லாம் 10 நாட்கள்கூட தொடர் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான டோரிப், நமது தத்துவம் தான் நமக்கு மிகப்பெரிய பலம் அரசியல், தத்துவார்த்த கல்வி பயில்வதை நடைமுறை வேலைகளை முன்னிறுத்தி குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. தத்துவார்த்த பலம் குறைந்தால், நடைமுறை வேலைகளும் குறைந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் வகுப்புகளை திட்டமிடும்போது நாம் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆகும். குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அவர்களிடம் நேரம் கேட்டு பெறுவது, சில சமயம் ஆசிரியர்கள் கிடைக்காமல் வகுப்புகளை தள்ளிப்போடுவதும் கூட நடக்கிறது. சில இடங்களில், சில தலைப்புகளுக்கு அத்தலைப்பில் தேர்ந்த ‘நட்சத்திர ஆசிரியர்கள்’ தான் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தொடர் பயிற்சிதான் நட்சத்திர ஆசிரியர்களை உருவாக்கும், தொடர்ந்து வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தால், எல்லோரும் நட்சத்திர ஆசிரியர் ஆக முடியும். நமது ஒவ்வொரு ஊழியரும் ஆசிரியர் ஆக வேண்டும். ஆசிரியர் பணி என்பது முழுநேர பணி அல்ல, மக்களை நமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக திரட்டுவது தான் ஆசிரியரின் பணி. அப்பணியை செய்ய நமது ஒவ்வொரு ஊழியரும் தயராக வேண்டும். தற்போது ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய, கல்விக்குழு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் பற்றாக்குறை அதிகம் உள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த துவங்கிய பிறகு தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் நடத்தி புதியவர்களுக்கு நாம் பயிற்சி கொடுத்தால், அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக மீண்டும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே வேண்டும் என வலியுறுத்துவது பல இடங்களில் நடக்கிறது.
வகுப்புகளை ஏற்பாடு செய்வதில் நிதி ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. மாநாடுகளை நடத்தும்போது, நாம் நல்ல விளம்பரம் செய்வோம். அதன் மூலம் நிதி பெறுவது எளிதாகும். ஆனால் அரசியல் வகுப்புகளுக்கு அப்படியான ஏற்பாடுகளை செய்யமாட்டோம். அதனால் நிதி பெறுவது சிரமமான விஷயமாக மாறுவதாக தோழர்கள் குறிப்பிடுகின்றனர். கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில். இது பெரிய பிரச்சனையாக உள்ளது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபயண பிரச்சார இயக்கம் ஒன்று நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். அதில் பங்கேற்றவர்களுக்கு உணவு ஏற்பாடு பிரச்சார மையங்களில் உள்ள தோழர்களின் வீடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவைவிட மிகவும் நன்றாக இருந்தது.
சமீபத்தில் டெல்லியில் நமது கட்சியின் மத்தியக்குழு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வீடு, வீடாக வசூல் செய்ய தீர்மானித்தோம். அந்தப்பகுதியில் நாம் இதுவரை வசூல் செய்ததே கிடையாது. ஒரு மதிய நேரம், வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே வசூல் செய்தோம். சுமார் ரூ.10,000 ரூபாய் வசூலித்தோம். மக்களிடம் சென்றால், மக்கள் நமக்கு தர தயராக உள்ளனர். அரசியல் கட்சிகள் நிதி சேகரிப்பு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள். என்றால், அவர்கள் பெரும் கார்ப்பரேட்களிடம் நன்கொடை பெறுவதாக எண்ணுகிறார்கள். நம்மைப் பற்றி அப்படியாரும் எண்ணுவதில்லை. ஆனால் நாம் மக்களிடமே செல்லவில்லையென்றால் நம்மையும் அந்த பட்டியலில் சேர்த்துவிடும் ஆபத்து உள்ளது. எனவே, நமக்கான நிதிக்காக நாம் மக்களிடமே செல்ல வேண்டும். நமக்கு நிதி தர மக்கள் எப்போதுமே தயாராக உள்ளனர்.
அரசியல் வகுப்புகளை ஏற்பாடு செய்யும்போது, கற்றல் – கற்பித்தலுக்கான நல்ல சூழலையும் நாம் அமைத்துத்தர வேண்டியுள்ளது. வகுப்பு நடைபெறக்கூடிய இடம், நல்ல காற்றோட்டமாகவும், கரும்பலகை, ஒலிபெருக்கி, மாணவர்களுக்கான குறிப்பேடுகள் மற்றும் வாய்ப்புகள் இருந்தால் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முயற்சிப்பது (உதாரணமாக பவர்பாயின்ட் மென்பொருள்) என திட்டமிட வேண்டும். இன்றைய தினத்தில் செல்லிடப் பேசி கூட நவீன கற்றல் – கற்பித்தல் உபகரணம் தான். ஒரு பொருளை விளக்கும்போது, காட்சிகளாக காண்பித்து விளக்குவது எளிதில் புரியும்.
அதுபோலவே, நேர மேலாண்மை என்பது முக்கியமானது. நாம் பல்வேறு வேலைகளுக்கு இடையேதான் வகுப்புகளை திட்டமிட வேண்டியுள்ளது. சில போராட்டங்களை நாம் நடத்தும் போது அதில் நிறைய புதியவர்கள் கிடைப்பார்கள், அத்தகைய தருணத்தில் உடனடியாக வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். பிரச்சாரம் – போராட்டம் – ஓய்வு என்று நாம் செய்யப்பட முடியாது. மக்கள் ஓய்வெடுப்பார்கள், போராளிகளுக்கு ஓய்வு கிடையாது. தோழர் மாவோ சொல்வார். இரும்பை உருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு வந்தவுடன் அதை அடித்து தகுந்த கருவிகளாக வடிவமைப்பார்கள், அதுபோல போராட்ட உணர்வில் வந்தப்பட்ட தோழர்களை அப்போதே அரசியல் கல்வி அளித்து வடிவமைக்க வேண்டும்.
இந்த நேரத்தில் இது ஏதோ கல்விக்குழுவிக்கான பிரச்சனை என ஒதுக்கிவிடக் கூடாது. ஒட்டுமொத்த கட்சியும் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். கற்பித்தல் வழிமுறைகளில் இரண்டு உண்டு. ஒன்று முறைசார்ந்த ஏற்பாடு. மற்றொன்று முறைசாரா ஏற்பாடு முறைசார் ஏற்பாடு என்பது வகுப்புகள், வாசிப்பு வட்டம் போன்றவை. முறைசாரா ஏற்பாடு என்பது தோழர்களை தனிப்பட்ட முறையில் எணுகி அவர்களிடம் அரசியல் பேசுவது. இது பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், இந்த முறையின் மூலமே நிறையச் தோழர்கள் கட்சிக்குள் வந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் செய்யப்பட்டு கொண்டிருந்த தோழர் இ.எம்.எஸ்.அவர்களை தொடர்ந்த உரையாடல்கள் மூலமாக தோழர் சுந்தரய்யா அவர்கள் கம்யூனிஸ்ட் ஆக்கினார். தோழர் அமீர் ஹைதர்கான் அவர்கள் சென்னையில் தோழர். சுந்தரய்யாவை இத்தகைய முறையின் மூலமாக கட்சிக்குள் கொண்டு வந்தார்.
விசாகப்பட்டினத்தில் நமது தொழிற்சங்க தலைவர் ஒருவர் சாலையில் நடைப்பயிற்சி செல்லும் போது வழியில் உள்ள ஒரு தொழிலாளியின் வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தினசரி அவருடன் நாட்டுநடப்புகளை பேச துவங்கி, பின் அதிலுள்ள அரசியல் அம்சங்களை விளக்கி சொல்வார். இதன் தொடர்ச்சியாக அத்தொழிலாளி நமது கட்சி உறுப்பினரானார். அதன் அவர் வேறு தொழிலாளியை குறிவைத்து உரையாட துவங்கினார்.
இன்றைக்கு நமது தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்பில் பல்வேறு தலித் அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் உள்ளனர். மிகச் சிறந்த ஊழியர்களாக அவர்களில் உள்ளனர். நாம் அவர்களிடம் உரையாட வேண்டும். தொடர்ந்து விவாதிக்க வேண்டும். அதேபோல, நிறைய இளைஞர்கள் முற்போக்கான பார்வையோடு இருக்கிறார்கள். அவர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பன போன்ற தவறான கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன.
நாம் தொடர்ந்து உரையாடுவதன் மூலம் அதை மாற்ற முடியும். இனைஞர்களை நம் தத்துவம் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முடியும்.
கற்பித்தல் முறை
பொதுவாக வகுப்புகளை எடுக்கும்போது எதிரிலிருக்கும் மாணவர்களுக்கு தகுந்தாற்போல ஆசிரியர்கள் மாறிக்கொள்ள வேண்டும். அங்கன்வாடிக்கு வரும் மழலைகளுக்கு வகுப்பு எடுப்பது போல, ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க மாட்டார்கள். அதுவே உயர்நிலை பள்ளி, கல்லூரி, ஆராய்சி மாணவர்கள் என மாணவர்கள் மாறும் போது வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களும் மாறுவார்கள். நாமும் அதுபோல இருக்க வேண்டியுள்ளது. கட்சிக் கல்வியை பொறுத்தவரை நமது குடும்பங்களிலிருந்துதான் முடிவில் துவங்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களிடம் விவாதிக்க வேண்டும். அவர்களை அரசியல்படுத்த வேண்டும். ஒரு நல்ல மாணவராக உள்ள ஒருவர்தான் நல்ல ஆசிரியர் ஆக முடியும். ஒருவர் சொல்வதை கவனமாக உள்வாங்கி வெளிப்படுத்தும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வகுப்புகள் எடுக்கும்போது, சுற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும், அதை திரும்ப யாராவதற்கு சுற்றுத்தர வேண்டும். அப்படி அவர்களை தயார்செய்ய வேண்டும். தோழர் ஹோபர்மேன் ஒரு புதிய கற்பித்தல் முறையை கையாண்டார். தொழிலாளிகளிடையே உரையாடல்கள் மூலமாக. மூலதனத்தை அவர் கற்பித்தார்.
நாம் வகுப்புகளை எடுக்கும்போது, உரையாடல் முறையை கையாள முயற்சி செய்ய வேண்டும். நாம் விளக்கும் தலைப்பில் குறித்த சரியான உதாரணங்களை அவர்களது வாழ்விலிருந்து எடுத்த தர வேண்டும். அவர்களது சொந்த அனுபவங்களிலிருந்து விஷயத்தை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும். வகுப்பின் மூலம் அரசர்களை ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மேம்படுத்த வேண்டும்.
அகில இந்திய அரசியல் பள்ளிகளில் தற்போது ஒருமுறை கையாளப்படுகின்றது. ஆசரியர் தலைப்பை முதலில் விளக்குவது அதன்பின் குழு விவாதம். அதன்பின் கேள்வி – பதில் பகுதி என வகுப்புகள் அமைக்கப்படுகிறது. வகுப்பு எடுக்கும்போது விடுபட்ட விஷயங்களை கேள்வி – பதில் நேரத்தில் விளக்கிட வாய்ப்புள்ளது.
இன்றைக்கு சில புதிய தலைப்புகளை நாம் வகுப்புகளாக வைக்க வேண்டியுள்ளது. பின்ன நவீனத்துவம், சூழலியல் போன்றவை. அதுபோலவே கட்சி பல வீனமாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய கல்விக் குழுவே பொறுப்பெடுத்து வகுப்புகளை நடத்த வேண்டியுள்ளது.
கேரளாவில் நரந்தர கட்சிப் பள்ளி உள்ளது. கிளை உறுப்பினர்களில் துவங்கி மேல் கமிட்டி வரை தொடர்ச்சியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் வெகுஜன அமைப்புகள் தொடர்ச்சியாக அரசியல் வகுப்புகளை நடத்துகின்றன. தற்போது வாசிப்பு வட்டங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆந்திரா, தெலுங்கானாவில் பல மட்டங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவில் 15 நாட்கள் தொடர் வகுப்புகள் கூட நடத்தப்படுகின்றன. ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது முன்னேற்றம் உள்ளது.
கேரளாவில் வாசிப்பு முகாம்கள் தற்போது நடத்தப்படுகின்றன. அங்கு வகுப்புகள் நடத்தப்பட்ட பிறகு, கலந்து கொண்டவர்களுக்கு 100 கேள்விகள் கொண்ட கேள்வித்தான் வழங்கப்படுகின்றது. அதை அவர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று நிரம்பலாம். அதன் பின் அந்த வினாத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்களும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது.
தற்போது எல்லா மாநிலங்களிலும் வாசிப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். அது அவசியமானது ஆகும். சில புத்தகங்கள் ஆரம்பத்தில் புரியாது. மறுமுறை படிக்கும்போது நமக்கு வசப்பபட ஆரம்பிக்கும் மூலதனம் நூல் துவக்கத்தில் படிக்கும்போது கடினமாக இருந்தது. ஆனால் பலமுறை முயற்சி செய்தேன். மூலதனத்தை கற்காமல் அரசியல் பொருளாதாரம் குறித்தும், இயக்கவியல் குறித்தும் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. அரசியல் கல்வியை பொறுத்தவரையில் சுயகல்வி மிக முக்கியமானது. அதற்கு மாற்று எதுவும் கிடையாது. நடத்தப்படும் அரசியல் வகுப்புகள் அத்தனையும் சுயகல்விக்கான தூண்டுதலே ஆகும்.
நமது பிளீனம் அரசியல் கல்வி குறித்து அளித்துள்ள வழிகாட்டுதல் அடிப்படையில், மத்திய கல்விக்குழு கூட்டம் நடத்தப்பட்டு. ஒரு ஆண்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு என்பது அரசியல் கல்விக்கான மிகச் சிறந்த ஆண்டு ஆகும். எனவே இந்த ஆண்டை மிகச் சிறப்பாக நாம் பயன்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலும், இடைக்கமிட்டிகள், ஸ்தல மட்ட அளவிலும் வாசிப்பு வட்டங்களை உருவாக்க திட்டமிட வேண்டும் அகில இந்திய அளவில் 32 தலைப்புகள் இறுதிப்படுத்தப்பட்டு, அவற்றுக்கான பாடக்குறிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல மாநில அளவிலும் பாடக்குறிப்புகளை தயாரிக்கலாம். மாநிலங்களின் தனித்தன்மைக்கு ஏற்ப பாடத்தலைப்புகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
வகுப்புகளை திட்டமிட்டு, புதிய ஆசிரியர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். வகுப்புகள் முடிந்துபின், வகுப்புகளை பற்றி கருத்து கேட்டு, சரியானவற்றை பலப்படுத்தி, பலவீனங்களை சரிசெய்து சிறப்பான ஆசரியராக நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தத்துத்வார்த்த போரில் நம்மை பலப்படுத்திக் கொள்ள நமது பிளீனம் அளித்துள்ள வழிகாட்டுதல்களோடு, கட்சி கல்வியில் ஒவ்வொரும் முன்னேற வாழ்த்துகிறேன்.
– தமிழில் கே.எஸ்.கனகராஜ்
Leave a Reply