சித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் …


வரலாற்றாய்வாளர் பேராசிரியர் மணிக்குமாருடன் நேர்காணல்…

  • பேராசிரியர் பொன்ராஜ்

அண்ணா ஒரு நாள் இந்தியாவிற்கு தேவைப்படுவார் என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது திராவிட இயக்கங்கள் பற்றிய பரவலான நிர்ணயிப்புகள் சரிதானா?

அத்தகைய கருத்துக்களின் சாராம்சம் இதுதான் தமிழ்ச் சமூகத்தின் சமகால அபிலாஷைகளும், கலாச்சாரமும் திராவிட இயக்கங்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. தத்துவம் அல்ல!

சித்தாந்த ரீதியாக பிரச்சனைகளை அணுகும் போது பல நேரங்களில் மக்களிடமிருந்து அந்நியப் படக் கூடும். இதை அண்ணாதுரை மட்டுமின்றி அவரது தம்பிமார்களும் தெரிந்திருந்தனர். டெல்லி ஏகாதிபத்தியம் என மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்த அண்ணா ஆரம்பத்தில் கோரியது தனித்தமிழ்நாடு ஆனால் 1962 தேர்தலில் திமுக சட்டமன்றத்தில் ஐம்பது இடங்களைக் கைப்பற்றிய பின்னணியில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டதாக 1963ல் அறிவித்தார். இருப்பினும் வடக்கு வளர் கிறது தெற்கு தேய்கிறது என ஆதாரங்களுடன் பேசி வந்த அண்ணாவால் மாநில சுயாட்சி பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே மாநிலங் களுக்கு கூடுதலான அதிகாரங்கள் பற்றி பேசினார். ஆனால் இன்றைக்கு அதுவும் கிடையாது.

“தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வாக்காளர் களுக்கு பரிசு கொடுக்கிறது. பணம் கொடுக்கிறது” என அன்று அண்ணா குற்றம் சாட்டினார். ஆனால் இன்று திருமங்கலம் பார்முலா, ஸ்ரீரங்கம் பார்முலா என்று பணம் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது. “ஜாதி ஒழிப்பு” பேசிய திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வில் சாதியை அடிப்படையாக் கொள்வதை பார்க்க முடிகிறது. தீண்டாமை ஒழிப்பு அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. இத்தகைய சீரழிவுகளுக்குத் தலைவர்கள் பொறுப் பாக உள்ளபோது அண்ணா மீண்டும் வந்தால், அவரும் தம்பிமார்கள் போல் மாறுவார். மக்களிடையே சித்தாந்த பிரச்சாரம் மேற்கொள்ளாமல், கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பது நிதர்சனம்.

மேலும் ஆரியர் என்ற சொல் மொழியைக் குறிக்கிறது, இனத்தை அல்ல என ரோமிலா தாப்பர் போன்ற வரலாற்றறிஞர்கள் ஆய்வு அடிப்படையில் முடிவுக்கு வந்த பிறகு, ஆரியர் மொழியில் திராவிடக் கலாச்சாரத்தின் தாக்கம் பற்றியும் வேத இலக்கியத்திலும், புராண பாரம் பரியங்களிலும் ஆரியரல்லாத பிராமணர்களின் பெயர்கள் பல இருப்பதையும், சில பிராமணர் கள் தசா (னயளலர டிச னயளய) வகுப்பிலிருந்து தோன்றிய தற்கான ஆதாரங்கள் இருப்பதையும் வரலாற்று அறிஞர் டி.டி. கோசாம்பி சுட்டிக் காட்டிய நிலையில் இனக்கலப்படம் ஏற்பட்ட பிறகே சாதி தோன்றியது எனக் கருதிய அம்பேத்கர் எழுப்பிய, “வங்காளத்தில் உள்ள பிராமணனுக்கும் தமிழகத்தில் உள்ள பிராமணனுக்கும் பறையனுக்கும் உள்ள இனவேறுபாடு தான் என்ன? பஞ்சாபில் தீண்டத்தகாத சாமர் சாதியினருக்கும் தமிழகத்தில் உள்ள தீண்டத்தகாத பறையருக்கும் இடையே என்ன இன ஒற்றுமை இருக்க முடியும்?”போன்ற கேள்விகளுக்குப் பகுத்தறிவு அடிப்படையிலோ, அல்லது அறிவியல் ரீதியாகவோ பதில் சொல்ல முடியாத போதாமையை திராவிட அரசியல் சித்தாந்தவாதிகள் அடைந்துள்ளனர்.

1967 ல் தமிழ்ச்சமூகம் திராவிட இயக் கத்திடம் வைத்த நம்பிக்கை உடனடி தேவையை ஒட்டியதுதானா?
1967 தேர்தலில் மக்கள் திமுகவிற்கு வாக் களித்தது, பல்வேறு காரணங்களால் ஆகும். 1949- ல் திராவிடமுன்னேற்றக் கழகம் தொடங் கப்பட்டபோது திராவிடர்கழகம் உடைந்தது. அப்போது 75 சதவீதமானவர்களை திமுகவிற்கு இழுத்துச் சென்றவர் அண்ணா. கழக உறுப் பினர்கள் ஏறத்தாழ அனைவருமே அண்ணா விற்கு இளையவர்கள். நாற்பது வயதிற்கு உட் பட்டவர்கள். பட்டதாரிகளும், மாணவர் களும் அதிக எண்ணிக்கையில் அண்ணாவின் பேச்சாற்றலா லும் தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டவர்கள். மொழி அடிப்படையில் தனி நாடு கோரிக்கையை அயர்லாந்தில் எழுப்பிப் போராடிய சின்பெய்ன் இயக்கம் பற்றியும் அதன் தலைவர் டிவேலரா பற்றியும் தனது தம்பிமார்களுக்கு கற்றுக் கொடுத் தார், அண்ணா. பிரிட்டன் அரசியல் கோட் பாட்டாளர் ஹரால்ட் லாஸ்கி (ழயசடிடன டுயளமi), இத்தாலி நாட்டு பொருளாதார மேதை அக்கிலெ லொரியா (ஹஉhடைடந டுடிசயை) போன்றோரை மேற்கோள் காட்டி அவரால் விவாதம் செய்ய முடிந்தது. சினிமா, நாடகம், கலை என அனைத் துத்துறைகளிலும் திமுக தனது கொள்கைளைப் பரப்பியது. எம்.ஜி.ஆரின் பிரபல் திரைப்பட பாடல்கள், சினிமா மூலம் அவர் விடுத்த செய்தி கள் அதே நேரத்தில் காமராஜர் கட்சிப் பணிக்கு சென்ற பின் முதலைமைச்சர் பொறுப்பேற்ற பக்தவத்சலத்தின் தவறான அணுகுமுறைகள், இந்தித் திணிப்புக்கு எதிரான கோபம், கடுமை யான வறட்சி, உணவுப் பொருள் தட்டுப்பாடு, தொழில் வளர்ச்சி இல்லாததால் படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை போன்ற சூழல்கள் திமுக ஆட்சிக்கு வர சாதகமாக அமைந் தன. தேர்தல் முறையில் வெற்றிக்கு அவசியமான பரந்த கூட்டணியும் உதவியாக அமைந்தது.

திராவிட கருத்துநிலையில் முன்வைக்கப் பட்ட சமூக, அரசியல், பண்பாடுக் கூறுகள் பற்றி. இன்று அவற்றின் நிலை பற்றி?
பெரியார் தலைமையிலான திராவிட கழகம், பிராமணீயத்தை மதத்தை நிராகரிக்கக் கோரியது. அதிலிருந்து தோன்றிய அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று கடவுள் மறுப்பைக் கைவிட்டு, தமிழ் மொழி பேசுகின்ற, தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகிற அனைவரும் திராவிடரே என்ற விளக்கத்தின் மூலம் அரசியலில் இறங்கியது. அதே நேரத்தில் மத மூட நம்பிக்கைகள், சாதியப் பாகுபாடுகள் போன்ற சமூக அவலங்களை கடுமையாகத் தாக்கி பகுத்தறிவு வாதத்தை தமிழ் சமூகத்தில் பரப்பிட உதவினார் அண்ணா. பண்பாட்டுத் தளத்தில் சமஸ்கிருதத்தின், பின்னாளில் இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் தி.மு.க தீவிர கவனம் செலுத்தியது.

அரசியலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்ட காங்கிரஸ் கட்சியால் அரசியல்ரீதியாக திரட்டப்படாத பகுதியினரை தி.மு.க அணி திரட்டியது. நிலமுடையவர்கள் அல்லது சொத் துரிமையாளர்கள், குறீப்பாக இடைசாதிப் பிரிவினர் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்காத சூழலில் அப்பகுதி யினரை அணிதிரட்டுவதில் தி.மு.க அக்கரை காட்டியது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஆதரவாக நில உச்ச வரம்புச் சட்டம், வங்கி தேசிய மயமாக்கம் மற்றும் சாலை போக்கு வரத்து அரசுடைமையாக்கும் திட்டம் போன்ற கோரிக்கைகள், மற்றும் நெசவாளர்களுக்கு ஆதர வாக திமுகவினரை கைத்தறி ஆடை அணியச் செய்தது ஆகியவை தி.மு.கவை அப்பிரிவினரி டையே நெருக்கமடையச் செய்தது.

தமிழ் மொழி பயிற்று மொழி, அரசு அலுவலங்களில் முற்றிலும் தமிழ், மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டல் போன்றவை மக்களால் வரவேற்கப் பட்டன், ஆனால் ஆட்சியில் 1967ல் பொறுப் பேற்ற பிறகு நில உச்ச வரம்புச்சட்டத்தால் பலன் பெற வேண்டியவர்கள் பயன் அடையாத போது, வர்க்கரீதியான பிரச்சனைகளை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை (குறிப்பாக முழுமையான நில சீர்திருத்தம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம்) தி.மு.க நிராகரிக்க தயங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உச்ச வரம்பு மிச்சவரம்பாகியது என தி மு க. கேலி செய்தது. ஆனால் அதன் ஆட்சியிலும் அண்ணாதிமுக ஆட்சியி லும் நிகழ்ந்த நில மறுவிநியோகம் மிகச்சொற்பமே.

1977ல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தபின் எம்.ஜி.ஆர் திராவிட இயக்க சித்தாந்தங்களை எல்லாம் பற்றி அவரிடம் கேட்ட போது அது பற்றி ஆசிரியர்களும் வல்லு நர்களும் தான் முடிவு எடுப்பர் என்றார். அதே சமயம் மக்கள் செல்வாக்கு பெற ஜனரஞ்சகமான திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். இன்று திமுகவும், அதிமுகவும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த நிலையில் போட்டி போட்டுக் கொண்டு பல இலவசத்திட்டங்களை இன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு செயல் படுத்தியுள்ளனர். திராவிடக் கட்சிகளுக்கு பக்க பலமாக இருந்த, இருந்து வரும், சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர், இன்றைய கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதர வான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் போதும், அணி சேராத அல்லது அணிதிரட்டப்படாத தொழி லாளர்கள் பாதுகாப்பற்ற பணி மற்றும் நிரந்தர மற்ற வருமானம் என்ற நிலையில் திக்கற்று இருக்கும் போதும், ஒரு மாற்று சித்திரம் அல்லது பொருளாதாரக் கொள்கை திமுக-அதிமுகவிடம் இல்லை.

திராவிட அடையாளம் தமிழ் அடை யாளம் தானா? தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தைத் தாண்டி நிற்கிறதா?
பெரியார் திராவிட நாடு குறித்து பேசிய போது அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலயாளம் பேசுவோரை உள்ளடக்கியிருந்தது. 1956ல் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, திராவிட நாடு கருத்துக்கு இதர தென் இந்திய மாநிலங்களில் ஆதரவு இல்லாததால் தனித் திராவிட நாடு கேட்ட பெரியார் தனித் தமிழ்நாடு பற்றி பேசத் தொடங்கினார். தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய், எனவே தமிழ்தான் திரா விடம், திராவிடம் தான் தமிழ் என வாதிடப் பட்டது. திராவிட அடையாளம் இவ்வாறாக தமிழ் அடையாள மாயிற்று.

தமிழ் தேசியத்தை வரையறுத்தவர் மறைமலை அடிகள். அவர் சாதி மேலாண்மை பற்றி ஏதும் கூறாது, வேளாளர்களை மையப்படுத்திய தமிழ் கலாச்சரத்தை உயர்வானதாகக் கருதினார். வேளாளர்கள் எட்டியிருந்த கலாச்சார உச்சத்தை பிராமணரைத்தவிர அனைத்து தமிழ் சாதியினரும் எட்டமுடியும் என்றும், வேற்றுமை பாராது அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக வாழ முடியும் என்றும் கூறினார். மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு, இந்தித்திணிப்பு முயற்சி, தொழில் வளர்ச்சியில் தமிழகம் புறக்கணிக்கப் பட்ட நிலை ஆகியவை தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெறச் செய்தன.

1950, 1960களில் சாதிக்கு அப்பால் ஒற்றுமை யைக் கட்ட தமிழ்தேசியம் பயன்பட்டது. பிரா மணரல்லாதோர் இயக்கத்தில் பலன் அடைந் தவர்கள், உயர்சாதி இந்துக்களான வேளாளர், முதலியார், செட்டியார், நாயக்கர், ரெட்டியார் போன்றவர்களே. அப்போது பலனைடயாத இடைச்சாதியினராகிய கவுண்டர், முக்குலத் தோர், கோனார், வன்னியர் போன் றோர். திமுகவின் பால் ஈர்க்கப்பட்டனர். இருப்பினும் பெரியார் அப்போது அரசியல் வாழ்வை அனுபவிக்க நினைத்த திராவிடர் கழகத்தினரை காமராசர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலேயே சேருமாறு வேண்டினார். தமிழ் தேசியத்தை அண்ணா கைவிடுவதற்கு இதுமட்டுமின்றி மத்திய அரசின் எச்சரிக்கையும் ஒரு காரணமாகும். பிரிவினை வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீர்மானித்த பின்னணியிலும், ஐம்பது சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறக்கூடிய நிலைக்கு கட்சி வளர்ந்து விட்ட சூழலிலும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார். இதனால் தமிழ் தேசியம் நீர்த்துப்போயிற்று.

தமிழ் அடையாளம், சாதி ஆகிய காரணிகள் வர்க்க உணர்வை சிதைக்கின்றனவா?

வர்க்க ஒற்றுமைக்கு முரணாக முன்வைக்கப் படும் பொழுது அவ்வாறு தமிழ் அடையாளம் வர்க்க உணர்வை சிதைக்கிறது. தமிழ் அடை யாளம் சாதி, மதம் போன்ற இதர அடையாளங்களைப் போல ஆக்கப்படும் அபாயம் உள்ளது. வர்க்கப் பார்வை திட்டமிட்டுத்தான் வளர்த் தெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு, அப்பட்டமாக சாதி – வர்க்க தொடர்பு வெளிப்பட்ட தஞ்சாவூரில் தான் வர்க்க போராட்டம் சாத்தியமாயிருக்கிறது. இதர இடங்களில் குறிப்பாக இராமநாதபுரத்தில் சாதி வர்க்க உறவுகள் வெளிப்படையாக தெரியாத நிலையில் முரண்பாடுகளும், சுரண்டல்களும் சாதிய மோதல்களாகவே வெடித்துள்ளன. தஞ்சாகூரில் குத்தகை விவசாயிகளையும் கூலி விவசாயிகளையும் ஒரே பதாகையின் கீழ் போராட வைக்க முடிந்த போது, இராமநாதபுரத் தில் அது முடியாது போயிற்று. வர்க்க ஒற்றுமை மேல்மட்டத்தில், செல்வந்தர்கள் மத்தியில் சாத்தியமாகிறது. ஆனால் பாட்டாளி மக்களி டையே காணப்படும் சாதிப்பற்று வர்க்க உணர்வு வளரத்தடையாய் இருக்கிறது. மேட்டுக்குடி மக்களும் அரசியல்வாதிகளும் திட்டமிட்டு சாதிப்பற்றை ஊட்டி வளர்க்கின்றன்ர். வெகுசனங் களை அரசியல் படுத்துவதன் மூலமே அவர் களை வர்க்க போராட்டத்திற்கு தயாரிக்கமுடியம்.

பெரியாரின் திராவிட இயக்கம் அண்ணாவின் திமுக ஒன்றுபடும் புள்ளி எது? எதில் வேறுபடுகின்றன?

ஒன்றுபடுவது பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத இந்தி எதிர்ப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பிரச்சனைகளில். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் எனச் சொல்லி சமாளித்து விட்டார். அதுபோல் பொரியார் காலத்திலும், நீதிக்கட்சி காலத்திலும் சூத்திரன் என்ற சொல் ஒர் அவச் சொல்லாகக் கருதப்பட்டது. ஆனால் காங்கிரஸ்காரர்கள் நான்காம் தரக் கட்சி என திமுகவை தாக்கிப் பேசிய போது ஆம் நான்காம் மக்கள் ( சூத்திரர்) கட்சிதான் என தனது பெருமிதத்தை வெளிப் படுத்தி பிராமணரால்லா தோரில் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெற்றவர் கலைஞர். பெரியார் பிராமணரல்லா தோரில் உயர்சாதியினரை தாக்க முயலவில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்ட இடைச்சாதி மக்கள் நலனுக்கு எதிராக சுரண்டும் கொள்கையைக் கடைபிடித்த நிலக்கிழார்களையும், பெரும் வணிகர்களையும் கண்டிக்க, ஆட்சிக்கு வரும் முன் அண்ணாவும் கலைஞரும் கண்டித்தனர். பெரியார் முன்வைத்த சுயமரியாதை, பெண் விடுதலை போன்ற முழக்கங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வளர்த்தெடுக்கப்படவில்லை. திமுக அதில் அக்கறை செலுத்தவில்லை.

திமுக தலைவர்கள் பக்தி இயக்கத் திற்கு மாறாக சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியத்தை முன்னிறுத்தியது பற்றி சொல்லுங்கள்.

அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்து பக்தி இலக்கியத்திலிருந்து எடுத் தாளப்பட்டது தான். திருமூலர் திருமந்திரத்தில் கூறும் கருத்து இது. பிராமணர் மற்றும் அவர் களது மதத்திற்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய சித்தர் பாடல்கள் பிராமண எதிர்ப்புக்கும், சமஸ்கிருத்ததிற்கு மாற்றாக தமிழ் மொழியை வளர்க்கவும் பயன்படுத்தப்பட்டவை தான். சைவசித்தாந்தவாதிகள் சித்தர்களை இடைக் கால இந்து மதத்தின் எதிரிகளாய்ப் பார்த்தனர். ஒருவேளை அதனால் பக்தி இலக்கியங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருந்திருக் கலாம். சிலப்பதிகாரம், மன்னனின் நீதிமாண்பு கண்ணகியின் கற்பு போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தும் இலக்கியமாகப் பார்க்கப் பட்டது. அது போல் தமிழனின் வீரத்தையும் காதலையும் போற்றும் மேட்டுக்குடி நாகரீகம் சங்க இலக்கியங்களில் சித்தரிக்கபபட்டிருந்ததால் அவற்றை சிலப்பதிகாரத்தோடு மிக அதிகமாக பேச்சிலும் எழுத்திலும் கையாண்டவர் கலைஞர் கருணாநிதிதான்.

திராவிட அரசியல் ஏன் தாழ்த்தப் பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக, குறிப்பாக தீண்டாமைக்கு எதிராக பெரிதாக இயக்கம் காணவில்லை?

திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை பெறமுடியவில்லை. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த ஒராண்டிற்குள் அக்கட்சியுடனான உறவை எம்.சி..ராஜா முறித்துக் கொள்ள நேர்ந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை முன்னிறுத்தி இந்து மதசடங்கு களையும், சாஸ்திரங்களையும் தாக்கிய அளவிற்கு தீண்டாமைக்கு எதிராகப் போராடவில்லை. தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரங்கள் நடத்திய காந்தியின் ஹரிஜன சேவா சங்கமும், காங்கிரஸ் வாதிகளும் இயற்றப்பட்ட சட்டங்களை அமுல் படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. தனித்திரா விட நாடு பேசிய பெரியார் அதில் முஸ்லீம் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இடம் பெறுவர் என்று கூறீயது. இவ்விரு பிரிவினரையும் சமமாகக் கருதவில்லை என அறிய வைக்கிறது. நீதிக்கட்சி யில் பிராமணரல்லாத உயர் சாதியினர் இடம் பெற்றிருந்தார்கள் என்றால், சுயமரியாதை இயக்கத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இடைசாதியினரே அதிக எண்ணிக்கை இருந்தனர்.

தீண்டாமைக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உண்மையில் முதலில் போராடியவர்கள், இயக்கம் நடத்திய வர்கள் கிறிஸ்துவ பாதிரிமார்களே. இது இன்று மறைக்கப்படும் வரலாறு. (பின்னர், பொதுவுடைமை இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க பெரும் போராட்டங்களை நடத்தியது என்பது வலுவாகப் பேசப்படவேண்டிய விஷயம்) தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், நாடார்கள் உட்பட, தங்கள் எதிர்ப்பை மதமாற்றத் தின் மூலமே வெளிப்படுத்தினர். திராவிட அரசியல் தலித் விடுதலைக்கு உதவவில்லை.

எதனால் இடைநிலை சாதியினருக் கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையி லுள்ள முரண்பாட்டை திராவிட இயக்க அரசியலால் தீர்க்க முடியவில்லை?
ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் 1948ல் கொண்டுவரப்பட்டாலும் இரண்டு அரசியல் சட்ட திருத்தங்களுக்குப்பிறகு ( முதல் மற்றும் நான்காவது) 1955ல் தான் அமுலுக்கு வந்தது. அதே போன்று நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே, நிலம் பெருமளவில் கைமாறியிருந்தது. இதில் பயனடைந்தவர்கள் அதுவரை நில உடைமையாளார்களாக அறியப் படாத பெரும்பாலும் சிறு மற்றும் குத்தகை விவசாயிகளாக இருந்த இடைசாதியினர். நிலம் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, குறிப்பாக தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, இவர் களில் ஒருபகுதியான பணக்கார விவசாயிகளும் முதலாளித்வ விவசாயிகளும் அரசியல் அதிகாரத் தையும் பெற முடிந்தது.

நிலப்பிரபுக்களுடன் சமரசமும் செய்து கொள்ளப்பட்டது. பெரும் பாலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளராக இருந்த தலித்துகளுக் கும் பெரு நில உடமையாளர் களுக்கும் வர்க்க முரண்பாடுகள் காரணமாக மோதல்கள் வெடித் தன. ஆனால் அத்தகைய மோதல்கள் தஞ்சாகூர் உட்பட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்ககப்பட்டது. நில உரிமையா ளராய் மாறியிருந்த இடைச்சாதி செல்வந்தர் களுக்கு ஆதரவாக அரசு செயல் பட்டதால் தலித்துகளிடம் இருந்து ஆட்சி நடத்திய அரசியல் கட்சிகள் அந்நியமாயின. மேலும் தீவிர நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தலித்துக்களை பொருளாதார ரீதியாக வல்ல மைப்படுத்தியிருந்தால் முரண் பாட்டை களைந்து மோதல்களைத் தவிர்த்திருக் கலாம். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந் திருந்த காங்கிரஸ் கட்சியும் திராவிடகட்சிகளும் அதைச் செய்ய வில்லை. இதன் காரணமாக, தலித் மீதான ஒடுக்கு முறை நீடிக்கிறது.

திமுக முன் வைத்த மாநில சுயாட்சி இன்று அழுத்தமாகத் தேவைப்படுகிறது. ஆனால் திராவிடகட்சிகளின் நிலைப் பாட்டில் முந்திய அழுத்தம் இல்லையே.

உண்மைதான், என்றும் இல்லாத அளவிற்கு மைய அரசின் ஆதிக்கம் எல்லா துறைகளிலும் பெருகிவிட்ட நிலையில் மாநில சுய ஆட்சிக்கான தேவை இன்று அதிகரித்திருக்கிறது. அன்று காங் கிரஸ் கட்சி ஏறத்தாழ அனைத்து மாநிலங் களிலும் ஆட்சி செய்த நிலையில் காங்கிரஸ் அல்லாத பிராந்திய கட்சிகள், குறிப்பாக தி.மு.க, மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களை வேண்டின. ஆனால் இன்று மத்தியில் ஆளும் கட்சி, காங் கிரஸ் ஆக இருந்தாலும் சரி, பா.ஜ.க ஆக இருந் தாலும் சரி, காங்கிரஸ் அல்லாத பிராந்திய கட்சி களுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி நடத்த வேண்டியிருக்கிறது. அதிகாரத்தில் பங்குவகிப்ப தன் காரணமாக மாநிலத்தில் அரசாளும் கட்சி கள் மத்திய அரசு இலாக்காக்களைப் பங்கு போட்டுக் கொள்வதில் காட்டக் கூடிய அக்கறையை மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும் போது காட்டுவது கிடையாது. இதனால் பாதிக்கப் படுவது பொதுமக்களே.
சமீபத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு நாடு தழுவிய நுழைவுத்தேர்வு நடத் தும் உரிமையை மைய அரசு எடுத்துக் கொண்ட தன் விளைவாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆனால் இது ஒரு மாநில அரசின் உரிமைப் பிரச்சனையாக ஆட்சி செய்யும் அ.இ.அ, தி.மு.க அரசு கருதவில்லை. தனிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் தற்போது ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க ஆட்சியில் மேலும் பல மாநில அதிகாரங்கள் பறி போகும் நிலையில் மீண்டும் இக் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.

இந்துத்வா வாதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் செயல்பட தொடங்கி யுள்ள நிகழ்காலச் சூழலில் அரசியல் அதிகாரம் பெறும் நோக்குடன் செயல் படும் மதவாதசக்திகளை எதிர்ப்பதில் திராவிடக்கட்சிகளுக்குப் பங்கேதும் இருக்குமா?

இன்று பிரதான திராவிட கட்சிகளாகக் கருதப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முதல் தேமுதிக வரை ஆகியவை அரசியல் அதிகாரம் பெற இந்துத்வா மதவாத சக்திகளுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்த நிலையில் இக்கட்சிகள் இந்துத்வா கொள்கையைப் பின்பற்றும் அரசையோ அல்லது அதற்கு பின் பலமாக இருக்கும் மதவாத சக்திகளையோ எதிர்ப்பதில் முக்கிய பங்கேற்பு அளிக்க வாய்ப்பு உண்டு என உறுதியாகச் கூற முடியாது. ஆனால் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலொ அல்லது இந்திதிணிப்பு முயற்ச் சியை மேற்கொண்டாலொ, தங்களது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நிச்சயம் இந்த்துவா அரசை எதிர்த்து போராடுவர். ஆனால் ஒரு பிரச்சனை என்னவெனில் 1950,1960 களில் திமுக அணிகளிடம் காணப்பட்ட போர்க்குணம் தற்போது கிடையாது.

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிதான் இடது சாரி இயக்கம் வளர தடையாக இருந்ததா? இன்னும் இருக்கிறதா?
முதல் கட்டத்தில் இடது சாரி இயக்கம் வளர காங்கிரஸ் பெருந்தடையாய் இருந்த்து. இராஜாஜி தனது முதல் எதிரி கம்யூனிஸ்ட் என அறிவித் திருந்தார். “நான் ஏன் கம்யூனிஸ்ட்டுகளை வெறுக்கிறேன்” என்ற புத்தகத்தை அவர் ஆங்கிலத் தில் எழுதியிருந்தார். அதன்பின் காமராஜர் காலத்திலும் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ந்தது. முதுகுளத்தூர் கலவரத்தின் போது தலித்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காமராஜர் தலைமையிலான காங்கிரஸ், தஞ்சா கூரில் கம்யூனிஸ்ட்களின் தலைமை யிலான விவசாய தொழிலாளி தலித் போராடிய போது அவர்கள் மீது காவல்துறை அராஜகத்தை கட்ட விழ்த்து விட்டது. கம்யூனிஸ்ட்கள் மீது ஏவிய அடக்குமுறையை காங்கரஸ்காரர்கள் திமுக வினர் மீது கையாளவில்லை. எனவே எந்த ஆளும் வர்க்க அரசியல் கட்சியாக இருந்தாலும் வர்க்க ரீதியான போராட்டங்களை ஒடுக்குவதில் முனைப்பு காட்டுகின்றனர். இதனால் இடது சாரி இயக்கத் தில் இணைய அஞ்சக்கூடிய மனநிலை தமிழக மக்களிடம் இல்லாமல் இல்லை. அடக்கு முறையை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட தோழர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலமே இடது சாரி இயக்கத்தை வலுவடையச் செய்ய முடியும்.

இன்று சித்தாந்தரீதியாக அரசியல் ரீதியாகவும் திராவிட கட்சிகளுக்கும் இந்துவா சக்திகளுக்கும் மாற்றாகவும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இடது சாரி இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?
காங்கிரஸ் இம்மாநிலத்தில் ஒர் வலுவான அரசியல் சக்தியாக இல்லாததால் அக்கட்சியை நீங்கள் குறிப்பிடவில்லை எனக் கருதுகிறேன். இன்றைய உலகமயமாதல் சூழலில் காலம் சென்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியது போல் முதலாளிவர்க்கத் திடம் முதலாளித்துவக் கொள்கை யையும், பாட்டாளி வர்க்கத்திடம் சோசலிச கொள்கையையும் என இரண்டையும் பேசிய காங்கிரஸ் தலைமைக்கு கொள்கைப்பிடிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றே காங்கிரஸ் கட்சியினரை காங்கிரஸ் அங்கி அணிந்த மதவாதிகள் என நேரு குறிப்பிட்டுருந் தார். பா.ஜ.க.வை பொருத்தமட்டில் வெறும் மதவாதக் கட்சி அல்லது இந்துத்வா கட்சி எனபது மட்டும் அல்ல. நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி வரும் பா ஜ க. மேட்டுக்குடி மக்கள் மற்றும் நகர்புற நடுத்தர வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்களது நலன்களைப் பாதுகாப்பதிலும் திட்டமிட்டு செயல்படும் கட்சி கிராமப்புற ஏழை, எளியவர், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாட்டில் சிறிதும் அக்கரை இல்லாத கட்சி.
மக்களை வேற்றுமைப்படுத்தும் இந்துத்வா தேசியத்தை முன்னிறுத்தி, மக்களை ஒற்றுமைப் படுத்தும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் மீது அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து விட்டு ஜனநாயகக் கலாச்சாரத்தை அழிக்க முயலும் கட்சி.

இடது சாரி இயக்கங்களையும், இடது சாரி மாணவர் இயக்கங்களையும் ஒடுக்கி வருகிற அதே நேரத்தில், ஆர். எஸ்.எஸ், பஜ்ரங்தல், எ.பி.வி.பி போன்ற தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பினரை அராஜக நடவடிக்கைகளில் அத்து மீறி நடந்து கொள்ள அனுமதிக்கிறது. பாஜ.க வினரின் அரசியலாக்கப்பட்ட இந்து மதவெறியை நாடெங்கிலும் தூண்டி, சிறுபான் மையினரின் மனதில் அச்சத்தையும், பாதுகாப் பற்ற உணர்வையும் உருவாக்கி அவர்களை பொதுத் தளத்திற்குப் போராடவராமல் செய்கிறது. நேர்மையுடன் சிறுபான்மையினர் நலனுக்குப் போராட இடது சாரிகளைத்தவிர வேறு யார் உள்ளனர்? பா.ஜ.க வில் தலித் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாற்பது. அவர்களில் ஒருவர்கூட குஜராத்தில் உனா சம்பவத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட போதோ, தயாசங்கர் சிங் ( மத்திய பிரதேசம்) மாயாவதியை இழிவாகப் பேசிய போதோ, ரோ`ஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட போதோ எவ்வித எதிர்ப்புக் குரலையும் எழுப்பவில்லை. தலித்- இடது சாரி கட்சிகளின் ஒற்றுமை இன்றைய காலத்தின் கட்டாயம். அதறகான முன் முயச்சிகளை இடது சாரிகள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
அ.இ.அ.தி.மு.க, தி.மு.க போன்ற திராவிட அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியை தக்கவைப்பதே பிரதான நோக்கமாயிருக்கிறது. இளைஞர்களும், கீழ்நிலை நடுத்தரவகுப்பினரும் இவ்விரு கட்சி களையும் ஊழல் கட்சிகளாகக் கருதுகின்னர். இலவசங்கள், வெகுமதிகள் மூலமே இவ்விரு கட்சிகளும் வாக்குப் பெற முயல்கின்றன. சென்ற தேர்தலில் இன்னும் ஒரு நூறு கோடி செல வழித்திருந்தால் அ.இ.தி.மு.க வை வீழ்த்தியிருக்க முடியும் என்பது தான் தி.மு.க தலைமைக்கு நெருங்கிய வட்டத்தில் பேசப்பட்ட செய்தி. இடது சாரி கட்சிகள் கடந்த காலங்களில் இவ்விரு திராவிட அரசியல் கட்சிகளை மாறி மாறி ஆதரித்து வந்ததால் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க மாற்று அணி விரும்புவோர் தயங்குகின்றனர்.
சென்ற தடவை யாருடைய தலைமையில் கூட்டணி அமைந்திருந்தது. அவர்களது குறைந்த பட்ச செயல் திட்டம் என்ன என்பதெல்லாம் மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை. எனவே தேர்தல் முடிவு ஏமாற்றத்தைத்தந்தது. எதிர்காலத்தில் பவுலொ பிரயர் கூறியது போல் மக்களுக்காக ஆயிரம் நடவடிக்கைகளில் இறங்கி யிருந்தாலும், மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து போராடும் மனிதாபிமானி களாய் இடது சாரிகள் தொடந்து தங்களது இலட்சிய பயணத்தில் உண்மையாக மக்கள் நலன் கருதும், சமூக அவலங்களை அகற்றப் போராட விரும்பும் கட்சிகளுடன் மட்டுமே இணைந்து அரசியல் தளத்தில் செயல் பட வேண்டும்.செயல் படுவார்கள் என நம்புகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s